51. வனதேசத்தில் ஒரு இரவு!
இதுநாள் வரையிலும் எந்நேரமும் இருளுக்குள் மூழ்கிப்போய் கருங்கும்மென கிடக்கும் நிழல்தேசம், இப்போது அதன் புதிய இளவரசரின் ஆத்மநிறம் கொண்டு பொன்னிற ஒளிக்கதிர்களால் ஜொலிக்கத் தொடங்கியிருந்தது. எங்கு நோக்கினும் லேசான மஞ்சள் கதிர்கள், சுற்றிலும் இருக்கும் இருளை மொத்தமாக அழிக்காவிட்டாலும் ஏதோ ஓரளவிற்கு அக்கம்பக்கம் புலப்படுமாறு, இரவை நெருங்கிடும் அந்தி வேளையில் மென்மையாகப் பரவிக்கொண்டிருந்தது.
இருள்மாளிகையில் ஷேனாவின் பதவியேற்பு விழாவானது நிறைவுபெற்றதும் மக்கள் கூட்டம் யாவும் அவரவர் இருப்பிடம் நோக்கி நகர்ந்திருக்க... விழா நிறைவுபெற்ற அடுத்த கணமே அவ்விடத்தை நீங்கிச் சென்றிருந்தார் இருளரசன். ராஜ கலையுடன், தரையில் தனித்து நிற்கும் ஷேனாவை பூரிப்புடன் நெருங்கிய ஷிவேதனா, ஆசையுடன் அவனை வாரியனைத்து நெட்டி முறித்தவள் கையோடு அவனை அழைத்துக்கொண்டு தங்களின் அறைக்கு சென்று கொண்டிருக்கிறார். அதேநேரம், இத்தனை ஆண்டுகளும் தான் தங்கிவரும் இருள்மாளிகையின் பிரம்மாண்டம் ஒவ்வொன்றையும் இன்றுதான் முதன்முறையாக கண்டு அதிசையித்துக் கொண்டிருக்கிறார் அவர்.
இவ்வளவு நேரமும் ஒரு மாமன்னனாகவே மாறிப்போய் இருந்த ஷேனாவோ, இப்போது முற்றிலும் தலைகீழாகி, ஏதோ சரியில்லாதது போலவே முகத்தை உர்ரென வைத்தவாரு அன்னையை தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்க... அதை கவனித்த ஷிவேதனா சட்டென தன் நடையை நிறுத்தினார். தரையையே வெறித்தபடி நடந்துக் கொண்டிருந்த ஷேனா, அன்னையின் நடை நின்றதை கவனித்துத் தானும் நின்றுவிட.. குழப்பப் பார்வையுடன் தன்னை நோக்கி நிமிர்ந்தவனின் கன்னத்தினை வருடியபடி, "என்ன, ஷேனா? என்ன யோசனை?" மென்மையாக கேட்டார்.
சில நொடிகள் வரை அன்னையை கண்கொட்டாமல் பார்த்தவன், "அம்மா, நான் கொடியவனா?" அவன் பார்வை, அன்னையை நோக்காமல் வேறெங்கோத் திரும்பியிருக்க, "ஹான்? என்-என்ன?" அன்னையின் திக்கலுடன் கூடிய வார்த்தையைக் கேட்டு அவர்புறம் திரும்பியவன், "தந்தை, அப்படிதான் சொன்னார் அம்மா... ... சொல்லுங்கள், நான் அநியாய வழியில்தான் இனி செல்ல வேண்டுமா? இருள் உலகின் இளவரசனாகியதால் என் சுயநலத்திற்காக எதை வேண்டுமாயினும் செய்திட வேண்டுமா? .. .... .... . . ஒளியை எதிர்த்திட வேண்டுமா?" என்றவன் கண்கள் லேசாக கலங்கியது.
"ஷேனா! ஷேனா, ஏன் இப்படியெல்லாம் சொல்கிறாய் நீ? யார் சொன்னது இதையெல்லாம் உனக்கு? ஹான்?" மகனின் விழிநீரைக் கண்டு அவன் அன்னையின் மகிழ்ச்சி கணப்பொழுதில் கரைந்தோடிட... அவன் கண்ணிலிருந்தத் துளிநீர், கன்னத்தில் குதித்தோடிய நொடியில் அன்னையை நிமிர்ந்து நோக்கிய ஷேனா, ராஜ அலங்காரத்தின் பொழுது தன்னுடனான இருளரசனின் உரையாடலை அன்னையிடம் சொல்லத் தொடங்கினான்.
~ ஷேனாவிற்கு இளவரசன் பதவி சூட்டபோகும் விழா குறித்து மக்களுக்கு அறிவிக்குமாறு தன் சேவகர்களான மாய அரக்கர்களிடம் கட்டளையிட்டப்பின், விழாவிற்கு ஷேனாவை தயார் செய்வதற்காக அந்த தங்க அறைக்கு அவனை இழுத்துச் சென்றிருந்த இருளரசன், தங்கநிற பட்டு வஸ்திரங்களையும் தங்க ஆபரணங்களையும் ஷேனாவிற்கு அணிவித்துக்கொண்டே அவனது பாவனைகளை நோட்டமிட்டார்... அப்படியொரு ஆழ்ந்த யோசனை அவன் முகத்தில்.. அதீத பயம்.. படபடப்பு.. அனைத்தும் கலந்திருந்தது ஷேனாவின் அமைதியான முகத்தில்.
"என்னானது ஷே- இளவரசர் ஷேனா?" பழக்கதோஷத்தில் சாதாரணமாகவே அவனை அழைக்க முனைந்து, சட்டென தன்னை திருத்திக் கொண்டவரது வதனத்தில், வெகுநேரத்திற்கு முன்பாக தோன்றியிருந்த திடீர் அச்சத்தின் சாயல் இன்னுமும் லேசாக இழையோடிக் கொண்டிருந்தது.
"தந்- தையே! நீங்கள் ஏன் என்னை.. இப்படி அழைக்கிறீர்கள்?" அத்தனை அமைதி இருந்தது அவனது ஒவ்வொரு சொல்லிலும்.. அவன் கேள்வியால் ஒருநொடி அதிர்ச்சியுடன் அவனை பார்த்தவர் 'இந்த பதவியின் அற்புதத்தை ஷேனா இன்னும் அறியவில்லை' என்பதை புரிந்துக்கொண்டு அவனை நோக்கி நக்கலாக ஒரு புன்னகையை வீசினார் அவர். ஷேனாவின் கவனம் வேறெங்கோ இருந்ததால், இருளரசனின் கேலிப் புன்னகையையெல்லாம் கவனித்திருக்கவில்லை.
"ஹஹா.. என்ன கேள்வியிது இளவரசனே! இனி நீ சாமான்யன் அல்ல. ராஜ பதக்கம் உன்னை தேர்ந்தெடுத்துள்ளது.. இருள் உலக சிம்மாசனம் உன்னை தேர்ந்தெடுத்துள்ளது. சக்திவாய்ந்த இப்பதவிக்காக நான் உனக்கு மரியாதை செய்துதான் ஆகவேண்டும்"
"ராஜ பதக்கமா! எது? இதையா சொல்கிறீர்கள்?" கழுத்திலிருந்த பதக்கத்தை கையில் உயர்த்திக் காட்டிய ஷேனா,"பிறகு, சிம்மாசனத்தின் பசி போக்க எனக்கு பதவியேற்பு விழா நடத்தப்போவதாக சற்றுமுன்பு சொன்னீர்கள் ... ... அது .. .. ........?" வார்த்தை வராமல் இழுக்க,"ஹம்ம்..." அவன் முதுகில் கைவைத்தபடி ஷேனாவின் பக்கத்தில் சென்று நின்றார் இருளரசன்.
"இவை குறித்து நீ எதையுமே அறியாய் போலும். அறிந்திருக்க வாய்ப்பும் இல்லை, இது ரகசியமாக காக்கப்பட்டுவரும் வரலாறு. சரி, கேள். நீ அதை அறிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளாய். ஹம்..பாதாள உலகத்தின் முதல் அரசன், அந்த்காரரூபன் குறித்து அறிவாய் தானே நீ?"
"ஆம், தந்தையே... ஒரு மோசமான கொடுமைக்கார அரசன்!"
"ஹான்? கொடுமைக்காரனா? ஹாஹாஹா... யவரோ உனக்குத் தவறாக கற்பித்துள்ளார்கள் இளவரனே. நீ அறிந்தவை தவறு. தன்னுடைய ஆசையை நிறைவேற்றிட எவ்வித எல்லைக்கும் சென்றிடும் மாவீரர் அவர். எதிர்ப்பவர் எவராயினும் அவர்களை மரணத்தின் வாயிலில் விட்டுவரும் பராக்கிரமசாலி. இப்பதக்கம் அவருடையதே. அவரே இருள் உலக இலக்கியத்தின் சிம்மாசனத்தை உருவாக்கியவர். அதற்கு உணர்வுகள் கொடுத்தவர்."
"உணர்வுகளா? ஆசனத்திற்கா?"
"ஆம்! உனது சிம்மாசனத்திற்கு உணர்வுகள் உண்டு. ஏக்கங்கள் உண்டு. சிந்திக்கும்திறன் உண்டு. அவ்வுணர்வினையே பசியென நான் குறிப்பிட்டேன். அதன் முதல் மற்றும் இறுதி அரசனான அந்த்காரரூபன் மரணத்தின் பின், தனக்கென ஒரு ராஜன் இன்றி இந்த சிம்மாசனம் செய்த ஒரு விபரீத செயலால் அதற்கு வழங்கப்பட்ட சாபம்தான் இத்தனை யுகங்களாக ஒரு ஆட்சியாளன் இன்றி எவரேனும் அமருவதற்காக அது ஏங்கிக் கொண்டிருக்கிறது. பதக்கம் சூடியவரே அதற்கு தகுதி பெற்றவர். இப்போது அந்தத் தகுதி உனக்குக் கிடைத்திருக்கிறது. "
"... ... .. அது என்ன சாபம் தந்தையே... என்ன செய்தது அந்த சிம்மாசனம்..."
"அதைபற்றி பலரும் பலவிதாமாக கூறிடுவதால் உண்மையை எவருமே அறியார்கள், இளவரசனே. ஆனால், சரியான ஆட்சியாளன் இன்றி, யுகயுகங்களாக தனிமையில் தவிக்குமாறுதான் ஏதோ ஒரு சாபம் அது. இத்தனை யுகங்களாக தொடர்ந்த அந்த சாபம், இன்று உன் மூலமாகவே விமோச்சனத்தை அடைந்துள்ளது. வாய்ப்பு கிடைப்பின், அந்த ஆசனமே என்றேனும் உன்னுடன் பேசிடும். அப்பொழுது அதனிடமே காரணத்தை கேட்டறிந்து கொள்."
"ஆனால்- ஆனால், எதற்காக என்னை தேர்ந்தெடுத்தது தந்தையே?"
"அதை நானறியேன். ஒருவேளை, அந்த அரசனின் குணங்களை உன்னில் கண்டிருக்கலாம். அது எதுவாக இருப்பினும் சரி, இனி நீயே இந்நிழல்ராஜ்ய மக்களின் தலைவன். அரசன் அந்த்காரனை போன்றே, வேண்டியதை அடைய எதை வேண்டுமானாலும் செய்யத் துணிய வேண்டும் நீ. உன் பொறுப்புதான் இங்குள்ள ஒவ்வொரு உயிரும். அவர்களின் நிம்மதிக்காக எவரை வேண்டுமானாலும் எதிர்க்கத் துணிய வேண்டும். அதேநேரம், உன் முடிவினை எதிர்ப்பது எவராயினும், அவர் சிரத்தை அறுத்தெறியத் தயங்காதே. நீயே-"
"ஆனால், இதெல்லாம்... தவறில்லையா தந்தையே?" இருளரசரின் வார்த்தையை இடையில் குறுக்கிட்டான் ஷேனா.
"ஹான்! ஹாஹாஹாஹாஹா, தவறா? ஹாஹாஹா.. நீ யாரென்பதை நன்கு நினைவில் நிறுத்திக்கொள் இளவரசனே! தவறென்பது பிரஜைகளுக்கு மட்டுமே உரித்தான சொல். அது, சாமான்ய மக்களின் செயலுக்கு உரித்தான வார்த்தை. நம்மை போன்றோருக்கு அல்ல. நீ ராஜன்! அரியாசனத்தின் ராஜன்! இனி, உன் சொல்தான் இங்கு அனைத்தும். உன் சொல்லே சட்டம். உன் சொல்லே நடைமுறையில் இருக்கவேண்டும். உன் வார்த்தையை மீறிடுவோர் மரணிக்கப்பட வேண்டியவர். இதை மட்டும் மனதில் வைத்துக்கொள்." இருளரசன் சொல்லி முடிக்க... அவர் சொல்லிய வார்த்தை எவையும் ஷேனாவின் மனதிற்கு ஒப்பவில்லை... அவை எவையுமே சரியென படவில்லை அவனுக்கு. ஆனால், தந்தை என்னும் மரியாதைக்காகவும்... தன்னை ஒரு மன்னனாக தேர்ந்தெடுத்து, கழுத்தில் கிடக்கும் பதக்கத்திற்காகவும், 'இப்படி ஒரு கொடியவனின் கொடிய பதவி என்னை நாடி வந்துள்ளது எனில் நானும் ஒரு கொடியவன் தான் போலும். என் குருக்களுக்கு நான் அவமரியாதை செய்துவிட்டேன். அவர்களின் சொல்லை மீறிவிட்டேன். அம்மாவை ஏமாற்றிவிட்டேன்.' என தன்னைத்தானே நொந்துகொள்ளத் தொடங்கிவிட்டான் அவன்.
ஷேனா, என்னதான் தன்னை கொடியவனாக நினைத்துக் கொண்டாலும், இருளரசனின் வார்த்தையை ஏற்று அவர் சொல்லுக்கு தலைபணிந்துச் சென்றாலும், குருக்களாகிய கோவன்களின் சொல்லும் அவர்கள் கற்பித்த பாடமும் மனதில் ஒருபக்கம் இருந்துக் கொண்டேதான் இருந்தது ~
இதையெல்லாம் அன்னையிடம் சொல்லிமுடித்தவன், "அம்மா, இது- இது அந்தக் கொடுமைக்கார அரசனின் பதக்கம். இது ஒரு கொடியவனை தானே தேர்ந்தெடுக்கும்? நான் கொடியவன் இல்லை. எனக்கு அப்படி- அந்த அரசன்போல் இருக்க விருப்பமில்லை. எனக்கு வேண்டாம். இது எனக்கு வேண்டாம், அம்மா." என்றபடியே அவன் பதக்கத்தை கழற்ற முனைய... சட்டென அவன் கரம் பற்றிய ஷிவேதனா, மகனின் செயலை நிராகரிக்கும் ஒரு பார்வையில் அவனை நிமிர்ந்து நோக்கினார். அந்த ஒரு பார்வையில் ஷேனாவின் மனம் உடைந்தது. விழிநீர் வேகமெடுத்து.
"அம்மா.. நீங்களும்?! இப்பதக்கம் என்னை அநியாய வழியில் அழைத்துச் செல்வதை பார்த்து நீங்களும் மகிழ்கிறீர்களா, அம்மா?" இயலாமையுடன் அன்னையை நோக்கிட, ஷிவேதனாவின் முகம் சட்டென வலியில் ஆழ்ந்தது. தன் கரத்தை அவன் கரத்திலிருந்து படக்கென எடுத்துக்கொண்டார்.
"ஷேனா, இல்லை- இல்லை, மகனே! அப்படியில்லை. நீ தீமையின் வழியில் என்றுமே செல்லமாட்டாயடா. நான் எப்படி அதற்காக மகிழ்வேன். ஆனால், இது தவறு, ஷேனா." மென்மையாகக் கூறியவர், பதக்கத்தை பற்றியிருக்கும் அவன் விரல்களை விடுவித்து, "நீயாக தேடிச் சென்றதோ, தானாக தேடி வந்ததோ... உன் பொறுப்பில் இருந்து பின்வாங்குவது ஒரு இளவரசனுக்கு அழகல்ல. என் மகனுக்கும் அழகல்ல" அவன் முகத்தை கையில் ஏந்தினாள் அவள்.
"இங்குப்பார், ஷேனா. நீ என் மகனடா. நான் வளர்த்தப் பிள்ளை. என்றும் தவறான வழியில் செல்லமாட்டான் என் மகன். அந்த நம்பிக்கை எனக்கு இருப்பதால்தான் நான் மகிழ்கிறேன். தீமையின் கடலில் மூழ்கியிருக்கும் இம்மக்களை காக்க, என் மகன் காவலனாய் வருகையில் எனக்கு மகிழ்ச்சிதானே இருக்கும்? எனக்கிருக்கும் நம்பிக்கையை நீயும் உனக்குள் கொண்டுவர வேண்டுமடா." கெஞ்சும் பார்வையில் மகனை நோக்க... இருநொடி உறைந்துப்போய் அன்னையை நோக்கியவன், கண்ணீருடன் அன்னையை அணைத்துக் கொண்டான் அவன். பதிலுக்கு ஷிவேதனாவும் நிம்மதியுடன் மகனை அணைத்துக் கொள்ள, "மன்னித்திடுங்கள் அம்மா. என்னை மன்னியுங்கள். ஏதோ எண்ணத்தில் அப்படிச் சொல்லிவிட்டேன். நீங்கள்- நீங்கள் எனக்கு தீங்கேதும் செய்ய மாட்டீர்கள் என்பதை ஒரு கணம் மறந்துவிட்டேன் அம்மா. மன்னித்திடுங்கள். நான்- என்னை நான் நம்புகிறேன். முழுமையாக நம்புகிறேன். நான் நிச்சயம் தவறானவற்றை செய்யமாட்டேன்." குழந்தையாக அழும் மகனை நிம்மதி பெருமூச்சுடன் தட்டிக் கொடுத்தார் அவன் அன்னை.
"ஷேனா.. உன் பயம் மொத்தமாக நீங்க வேண்டுமெனில், இன்றைய இரவை நீ வனதேசத்தில் கழிக்க வேண்டும். செய்வாயா?" அன்னையின் கேள்வியால் அவளை பிரிந்து நின்றவன், "வனதேசத்திலா? ஏன், அம்மா?" கேள்வியுடன் நோக்கினான்.
"நம் முன்னோர்களின் தூய ஆன்மாக்கள் அனைத்தும் வன தேசத்தில் தான் உள்ளது. ராஜபதவியை ஏற்கும் ஒரு இளவரசனோ இளவரசியோ, தன் வாழ்நாள் முழுவதிலும் நன்மையின் வழியிலேயே செல்லவேண்டும் என ஆசி பெறுவதற்காக, அவர்கள் பதவியேற்ற அன்றைய இரவில் வனதேசம் சென்று முன்னோர்களின் ஆசியை பெறுவது வழக்கம். நீ, இன்றைய இரவை வனதேசத்தில் கழித்தால்.. அவர்கள் ஏதேனும் ஒரு ரூபத்தில் உனக்கு ஆசி வழங்கினால்... எக்காரணத்தை கொண்டும் உன் மனம் தீமையின் வழியில் செல்லாது. அப்படிச் சென்றாலும் முன்னோர்களின் ஆசி உன்னை எப்படியாயினும் ரட்சிக்கும். செய்வாய் தானே?" ஒருகாலத்தில், தான் ரட்சகராஜ்ய இளவரசியாக பதவியேற்ற அந்த நினைவுகளை கொண்டு மகனிடம் சொல்ல, "அம்மா, இதையெல்லாம் கேட்கவேண்டுமா என்ன? நீங்கள் கட்டளையிடுங்கள், நான் நிச்சயமாக செல்கிறேன்." முழு மனதுடன் அதை ஏற்றுக்கொண்டு முகம் நிறைந்த புன்னகையுடன் பதிலளித்தான் அவன்.
அதேநேரம் ரட்சக ராஜ்யத்தில், இன்றைய தினத்திலேயே ராஜ பதவியை ஏற்றுக்கொண்ட இளவரசிகள் இருவரும் முன்னோர்களின் ஆசி பெறுவதற்காக வனதேசம் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் இருவரும் என்னவோ உற்சாகத்தின் உச்சத்தில் இருக்க... அவர்களின் சகோதரன்தான் படபடப்பில் தத்தளித்துக் கொண்டிருந்தான். நினைவு தெரிந்த நாள் முதலாக இவர்கள் இருவரையும் ராஜ்ய எல்லையை தாண்ட அனுமதித்ததில்லை அவன். காரணத்தை கேட்டால் சொல்லமாட்டான்.
"பாப்பா... அம்மூ. பத்ரமா இருக்கணும் சரியா? தெற்கு எல்லைக்கு போய்றக்கூடாது. அந்தப்பக்கம் இருக்கறவங்க நம்மல நட்பா பாக்க மாட்டாங்க.. சோ, ஜாக்கரதைய இருங்க. தெரியாதவங்க யார் வந்தாலும் பேச்சு குடுக்காதீங்க. டக்குனு எனக்கு ஒரு கால் பண்ணுங்க. உடனே நான் வந்துர்றேன். எந்த பிரச்சனைனாலும் ஒடனே எனக்கு சொல்லுங்க. காட்டுக்கு ரொம்ப உள்ளலாம்-"
"அண்ணா...! அண்ணா, அண்ணா... நீ பயப்படுற அளவுக்கு அங்க எதுவுமே நடக்காது'ண்ணா. நாங்க பாத்துக்குறோம். நீ தைரியமா இரு." அபியை சட்டென இடைமறித்த ரக்ஷா, அவனை நிதானமாக்க... வாயை மூடிச் சிரிக்கத் தொடங்கினாள் மாயா.
ஒரு வேகத்தில் வார்த்தைகளை ஓடவிட்டு கொண்டிருந்த அபி, தங்கைகளின் திடீர் குறுக்கீட்டால் திருதிருவென விழிக்க, "மாமா, இப்போ நீ லெஸன் எடுக்கவேண்டியது இவளுங்களுக்கு இல்ல. நேரா வனதேசதுக்கு போய் அங்க யாரெல்லாம் சுத்தீட்டு இருக்காங்களோ அவங்கள கூப்புட்டு, என் தங்கச்சிங்க இங்க வர போறாங்க... ஜாக்கரதையா இருங்கன்னு சொல்லிட்டு வா." சோஃபாவில் சாய்ந்துகொண்டு தன் அபி மாமாவை கலாய்த்தாள் தீரா.
"என் பயம் உங்களுக்கெல்லாம் நக்கலா தெரியுது?" மூவரையும் நோக்கி முறைத்த அபி, பொய்க்கோபத்துடன் வாயிலருகில் சென்று நின்றுக்கொள்ள... அண்ணனை கண்டு சிரித்துக் கொண்ட தங்கைகள் இருவரும் அனைவரிடமும் விடைபெற்று வாயிலருகில் வந்தார்கள்.
அபி முகத்தை திருப்பிக்கொண்டு நிற்க... ஒருவருக்கு ஒருவர் சைகை காட்டிக்கொண்ட இளவரசிகள் இருவரும் ஒரேநொடியில் 'அண்ணா' என பின்னிருந்து அவன் காதில் கத்த.. அப்போதும் சிலைபோலவே நின்றான் அவன்.
"அடேய் அண்ணா... காதுல பஞ்சு வச்சுட்டு நிக்குறிய நீ?" மாயா கத்தியபடி அபியை பிடித்து இழுத்ததும், "ஆமா. எனக்குத் தெரியாதா உங்கள பத்தி." சாதாரணமாகவே தோளை குலுக்கியவன், காதிலிருந்தப் பஞ்சினை எடுத்துவிட்டு மீண்டும் பழைய நிலையிலேயே நின்றுக்கொண்டான்.
"ஹாஹ்! சரி, சரி. நீ சொன்னது எல்லாத்தையும் நியாபகம் வச்சுக்குறோம். தெற்கு எல்லைக்கு போக மாட்டோம்."
"எதாச்சும் பிரச்சன வந்தா, ஒடனே உன்ன கூப்புடுறோம். இப்போவாச்சும் திரும்பே'ண்ணா." மாயாவை தொடர்ந்து அண்ணனுக்கு வாக்குக் கொடுத்த ரக்ஷா, தங்களை வழியனுப்பக் கோரி சிணுங்க... மென் புன்னகையுடன் அவர்களை நோக்கிய அபி, "பாத்து போய்ட்டுவாங்க ரெண்டு பேரும்." இரு கைகளிலும் தன் தங்கைகளை அணைத்துக் கொண்டான்.
"நீ பயப்படாம இரு'ண்ணா"
"நாங்க போயிட்டு வாரோம். டாட்டா." பதிலுக்கு அவனை அணைத்து விடுவித்தவர்கள், புன்னகையுடன் அண்ணனிடம் இருந்து விடைபெற்று வாயிலில் நிற்கும் வீராவின் மீது ஏறி வனதேசம் புறப்பட்டார்கள். இருவரின் உருவம் மறையும்வரை தன்னை நோக்கிக் கையசைக்கும் தங்கைகளுக்கு தானும் கையசைத்துக் கொண்டே அங்கேயே நின்றிருந்தான் அபி.
✨✨✨
இருள்மாளிகையில், தன்னறையில் இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டிருந்த இருளரசனின் நடை சட்டென நின்றது. தன்னை சுற்றிலும் பரவிக்கிடந்த தங்க ஒளியை அவர் நோக்க.. அதன் பிரகாசம் பாதியாகக் குறைந்திருந்தது. "இதன் பொருள்... ஷேனா, மாளிகையில் இல்லை." தனக்குள்ளேயே முணுமுணுத்தவர், வேக எட்டுகளை எடுத்துவைத்து அறையை விட்டு வெளியேறி எங்கோ விரைந்தார்.
"அவன் மாவீரன் மட்டுமல்ல.. ராஜபதக்கம் அவனை தேர்ந்தெடுத்துள்ளது. எனில், அவன் மாயங்களை கொண்டவன். மாயசக்திகளை கையாளும் திறன் கொண்டவன். இருவேறு ராஜ்யங்களின் சக்தி மூலம் பிறந்ததால், அவன் சரீரத்தில் மட்டுமே சக்திகள் இருப்பதாக அல்லாவா அவள் சொல்லியிருந்தாள். ஏமாற்றுக்காரி. மாய வித்தைகளை அவனுக்கு கற்றுக் கொடுக்காமல் இத்தனை காலமும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்" புலம்பிக்கொண்டே வேகவேகமாக நடந்தவர், "ஷிவேதனா!" என்னும் பெருங்குரலோடுச் சென்று நின்றது ஷிவேதனாவின் அறை முன்பாகதான்.
சற்றுமுன்னரே ஷேனாவை வனதேசத்திற்கு வழியனுப்பிவிட்டு அவனது பதக்கம் குறித்தும் ஆத்ம ஒளி குறித்தும் ஏதேனும் ஆராயலாம் என தன் மாயங்களை உபயோகிக்க முனைந்த சமயம், உக்ரத்துடன் அறை வாயிலில் வந்து நின்றார் இருளரசர். அதனை தாண்டி முன்னேறி வர அறைக்குள் இருந்த பிரகாசமான ஒளி அவரை தடுத்தது.
"உன் மகன் மாய சக்திகளை கையாழக் கூடியவன் என்பதை இத்தனை காலமாக ஏன் மறைத்தாய்?"
"என் மகனா? அவன் மாயங்களை உபயோகித்து என்றேனும் பார்த்திருக்கிறீர்களா அரசரே?" இருளரசனின் கோபக்குரலுக்கு பொறுமையாக பதில்கொடுத்தார் ஷிவேதனா.
"மீண்டும் என்னை ஏமாற்ற முயற்சிக்காதே.. மாயங்களால் தேர்ந்தெடுக்கபட்ட நபரை மட்டுமே அரியாசனம் தேர்ந்தெடுக்கும்." இருளரசன் கோபத்தில் கொந்தளிக்க, "ஆம். என் மகன் மாயங்களை உபயோகிக்க கூடியவன் தான்." தான் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த மாபெரும் ரகசியத்தை பட்டென போட்டுடைத்தார் ஷிவேதனா.
வழக்கமாக, ஆதிலோகத்தில் பிறக்கும் குழந்தை, மாய சக்தியுடன் பிறந்துள்ளதா மாயங்களற்று பிறந்துள்ளதா என உலகிற்கு தெரிவிப்பவர் அக்குழந்தையின் அன்னையே. ஒரு தாயால் மட்டுமே அதை உணர முடியம். ஆனால், ஷிவேதனாவோ தன் மகனின் சக்தியை குறித்து இங்கு எவரிடம் சொல்லவில்லை. தான் நம்பி வந்த தன் கணவனுக்கு கூட தெரிவிக்கவில்லை.
அவன் சாதாரண மாயங்களுடன் பிறந்திருந்தால் சரி.. ஆனால், அவரே எதிர்பார்க்காத அளவிற்கு தன் மகனிடம் சக்திகள் இருப்பதை, ஷேனா தன் கருவினுள் இருக்கையிலேயே உணர்ந்துகொண்டார் ஷிவேதனா. இருவேறு ராஜ்ய சக்திகளின் குழந்தை இவ்வளவு ஆற்றல் உடையதாக பிறக்குமென்று அவர் நினைத்திருக்கவில்லை. அவன் பிறந்த பின்னர், ஷிவேதனா நினைத்ததற்கும் மேலாக இருந்தது ஷேனாவின் சக்திகள். அது தவறான வழியில் சென்றுவிடக் கூடாதென பயந்தவர் தன் மகனுக்கே அதுபற்றி தெரியாமல் இத்தனைக் காலமும் மறைத்து வைத்திருந்தவர்.. இன்று சொல்லிவிட்டார், இருளரசனிடம்.
"என் மகன் மாயங்களை கையாழ்பவன் தான். அதற்கென்னவாம் இப்பொழுது?" இருளரசனின் கண்களை நேருக்கு நேராக பார்த்துக்கொண்டே, சீறும் சொற்களால் வினவ, "உடனடியாக அவனுக்கு மாய வித்தைகளை பயிற்றுவிக்க வேண்டும் நீ" பல்லைக் கடித்துக்கொண்டு கட்டளையாக ஷிவேதனாவை நோக்கினார் இருளரசன்.
"அதன் அவசியம் எனக்கில்லை. என் மகனுக்கும் இல்லை." ஷிவேதனா அழுத்தமாக பதில்கொடுக்க, "ஷிவேதனா.." கத்திய இருளரசனை நோக்கி, அமைதியாக இருக்கும்படி விரல் நீட்டி எச்சரித்தாள் ஷிவேதனா .
"இப்படி குரலை உயர்த்துவதற்கெல்லாம் பயப்படுபவள் நானல்ல. அந்த ஷிவேதனா எப்பொழுதோ மறைந்துவிட்டாள். உன் நாடகங்களை நம்பிக்கொண்டிருந்தவள் எப்பொழுதோ மறைந்துவிட்டாள். நீ என் மகனை காயப்படுத்தியதை எல்லாம் நான் அறியவில்லை என நினைத்துக் கொண்டிருக்கிறாயா நீ? அறிவேன்... அனைத்தையும் அறிவேன். இவை அனைத்தையும் பல்லைக் கடித்துக்கொண்டு நான் சகித்துக் கொண்டிருப்பது, என் மகனின் தந்தைக்காக. அவன் உண்மையான தந்தைக்காக. எப்படியோ, உறவுசங்கிலி அவனை காத்துவிட்டது. அது அவனிடம் இருந்திடும் வரையில் உன்னால் அவனை எதுவும் செய்திட முடியாது." அவள் கண்ணில் ஒரு உக்ரம் தெரிய.. சில நிமிடங்களுக்கு இருவரின் மத்தியிலும் மௌனம் மட்டுமே நிலவியது.
ஒரு பெண் தன் கட்டளையை மதிக்கவில்லை என்னும் கோபத்தில் இருந்த இருளரசனின் முகம், மெல்ல மாற்றம்கொள்ள.. எதையோ நினைவு கூர்ந்தவரின் புன்னகை நக்கலாக விரிந்தது. அதைகண்ட ஷிவேதனா குழம்பி விழிக்க, "எனில், சரி. முடிவை உன்னிடமே ஒப்படைக்கிறேன் ஷிவேதனா. ஆனால், என்ன காரணத்திற்காக நீ இங்கே பிணைகைதிபோல் இருக்கிறாய் என்பதை மறக்கவில்லை என நம்புகிறேன். உன் கணவன் இன்னும் என் பிடியில்தான். அதை நினைவில் வைத்து முடிவினை எடு. முடிவினை அறிய நாளை வருகிறேன்." நக்கலுடன் கூறியவர், திமிருடன் அங்கிருந்து நகர்ந்துவிட... அந்நோடியே உடைந்துபோய் தரையில் சரிந்தாள் ஷிவேதனா.
"என்னை மன்னியுங்கள்... இத்தனை காலமும் இந்த இருள், உங்களை தேடிவர என்னை தடுத்தது. இன்று... இன்று, என் மகன்.. நம் மகனாலேயே அதற்கு வழி கிட்டியுள்ளது. இனி, உங்களைத் தேடி நான் வருகிறேன். நீங்கள் எந்த எல்லையில் இருப்பினும் சரி, உங்களைத் தேடி நான் வருகிறேன். உங்களை அடைந்துவிட்டால், இனி இந்த அடிமை வாழ்வும் தேவையில்லை... நம் மகனும் எவன் எவனையோ தந்தையென அழைக்க மாட்டான்" மானசீகமாக தன் கணவனிடம் உரையாடிய ஷிவேதனா, ஒரு தீர்மானத்தோடு அங்கிருந்து எழுந்து அறையின் உள்ளே சென்றாள்.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro