50. இளவரசன்/இளவரசி
ரட்சக ராஜ்யம்.
இன்றைய விடியல் கதிர்கள், புதிதாக பதவியேற்க போகும் இரு இளவரசிகளின் ஆத்ம நிறங்களை கொண்டே ஜொலிக்கத் தொடங்கியிருக்க. ரட்சக ராஜ்யமே மேளதாளம் முழங்க விழாக்கோலம் பூண்டிருந்தது.
வனதேசத்தின் பிரஜைகளாகிய மாயதேவ இன மக்கள், குள்ளமாய இன மக்களும்கூட, பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து நிகழவிருக்கும் இவ்விழாவினை காண, மகாராணியின் விசேஷ அழைப்பின்படி ரட்சகராஜ்யத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
பதவிப்பிரமான விழா நிகழப்போகும் ரத்னமாளிகையை நோக்கி மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியிருக்க... மாளிகையின் உச்சத்தளத்தில் தங்களுக்கென இருக்கும் ராஜ அறைக்குள் அலங்கார வேலையில் அமர்ந்திருந்தார்கள் மாயா மற்றும் ரக்ஷா.
கண்ணை பறிக்கும் அடர்சிவப்பு ரோஜாவாய், காலினை முழுதாக மறைக்கும் ஆடையில் மாயாவும் .. அதேபோல், அமைதியின் ரூபமாகிய வானத்தின் நீலமெடுத்து நெய்த ஆடையில் ரக்ஷாவும்.. பெரிய கண்ணாடியின் முன் அமர்ந்துத் தங்களை தாங்களே அலங்கரித்துக் கொண்டிருக்க... தங்கைகளின் ராஜகலையை காணும் ஆர்வத்தில் உற்சாகமாய் அவ்வறையினுள் நுழைந்தான் அபி.
"பாப்பா... அம்மூ-" உற்சாகமாக உள்ளே வந்தவனுக்கு சட்டெனத் தன்னை நோக்கித் திரும்பிய தங்கைகளின் முகங்களில் போலியாக இழையோடும் புன்னகையைக் கண்டதும் தன் முகத்திலிருந்த புன்னகையை தொலைத்துவிட்டான்.
"என்ன டா? என்னாச்சு ரெண்டுபேருக்கும்?" நொடியில் வருத்தம் சூடிக்கொண்டவனது மெல்லியக் குரலில் கவலை வெளிப்பட.. இருவரையும் நெருங்கினான், அபி.
"ஒன்னுல்ல'ண்ணா." அண்ணனை கண்டதும் எழுந்து நின்ற இரட்டையர்கள் ஒன்றாக மறுக்க, "என்ன மா? அண்ணன்ட்ட சொல்ல மாட்டீங்களா?" என்றவனுக்கு பதிலேதும் கூறிடாமல் அமைதியாக வந்து அவனை அணைத்துக் கொண்டார்கள் இருவரும். மறுவினா ஏதுமின்றித் தன்னிரு கரத்திலும் தங்கைகளை தாங்கியிருந்தவன் மனதில் ஆயிரமாயிரம் காரணங்கள், இருவரின் மௌனத்திற்கும் சோகத்திற்கும் விடையாக ஓடத் தொடங்கியது. பலவற்றை சிந்திக்கத் தொடங்கியிருந்த அபியின் மனம், சட்டென ஒரு விஷயத்தில் தடுமாறி நின்றுவிட... அதுவேதான் தங்கைகளில் சோகத்தின் காரணம் என அபிக்கு விளங்கிவிட்டது. அவன் மனமும் லேசாக பாரமானது. ஆழப் பெருமூச்சுடன், மென்மையாக இருவரின் சிகையையும் வருட தொடங்கினான்.
"சயனா அத்த, கூட இல்லன்னு ஃபீல் பண்ணுறீங்களா டா?"
"போ'ண்ணா. அவ எங்களபத்தி கொஞ்சம்கூட யோசிக்கவே இல்ல."
"ஹும். அந்த மகாராணி பேச்ச கேட்டு எங்கள மொத்தமா மறந்துட்டா. அவ இங்க இல்லன்னு நாங்க ஏன் ஃபீல் பண்ணனும்? அவ தா எங்கள விட்டுட்டு கெளம்பிப் போய்ட்டாளே."
"அவளுக்காகளாம் நாங்க ஒன்னும் ஃபீல் பண்ணல. போ." மாயா, ரக்ஷாவின் அதரங்கள் என்னதான் கோபம் கொண்டாலும் தங்களின் சயனா அத்தை உடன் இல்லாததன் வருத்தம் இளவரசிகள் இருவரின் விழி வழியே துளித்துளியாய் கொட்டியது. அபியால் எதுவும் சொல்லிட முடியவில்லை. அத்தை உட்பட மூவரின் நிலையையும் நினைத்து நீண்ட பெருமூச்சுவிட மட்டும்தான் முடிந்தது.
இவர்களின் கடைசி அத்தை மற்றும் செல்ல அத்தையான சயனா, இப்போது இவர்களுடன் இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன், மகாராணி அழைத்ததாக வீட்டில் சொல்லிவிட்டு வைர மாளிகைக்கு சென்றவர் தான். அவருக்கு பதிலாக வீட்டிற்கு வந்தது மகாராணியின் ஒரு செய்தி மட்டுமே.
முக்கியக் காரியமாக, அவரை ஓரிடத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் ஒருநாள் நிச்சயமாக அவர் வீட்டிற்கு வந்துவிடுவார் எனவும்' மகாராணியே செய்தி அனுப்பியிருந்தார். அன்றுமுதல் அத்தையின் மீதான உரிமை கோபத்தை உரமிட்டு வளர்த்து வருகிறார்கள் இளவரசிகள்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ராஜகலைகள் பயிற்சியில் இருந்தவர்கள் சரியாக சயனா சென்று ஒரு மாதத்திலேயே தங்கள் பயிற்சிகளை முடித்திருக்க.. அன்றுமுதல் தங்களின் இளவரசி பதவியை ஏற்றுக்கொள்ள பல காரணங்களை சொல்லித் தப்பிவந்தாலும், இந்த ஐந்து ஆண்டுகளாக இருவரின் மறுப்புக்கும் ஒரே காரணம் அவர்களின் சயனா அத்தைதான் என்பதை மட்டும் ஒருமுறை கூட வாய்திறந்து சொன்னதில்லை.
"இங்க பாருங்க டா. அத்த, உங்க ரெண்டு பேரையும் இளவரசியா பாக்க தானே ஆச பட்டாங்க? நீங்க ஃபீல் பண்ணாதீங்க. சயனா அத்த திரும்ப நம்ம கிட்டயே வரும்போது நீங்க அவங்க முன்னாடி இளவரசியா போய் நின்னா எவ்ளோ சந்தோஷ படுவாங்க? யோசிச்சு பாருங்க... எத்தனநாள் உங்கக்கூட சண்ட போட்டுருப்பாங்க, சீக்கிரமா எல்லா கலைகளையும் கத்துக்குட்டு இந்த பதவிய ஏத்துக்க சொல்லி. இப்போ நீங்களாவே சமத்தா மாறீட்டீங்கன்னு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷ படுவாங்க. கொஞ்சம் அவங்க நெலமையவும் புரிஞ்சுக்கோங்க டா, மகாராணி பேச்ச மீற முடியுமா? அதா நம்மகிட்ட கூட சொல்லாம கெளம்பீட்டாங்க. அத நெனச்சுலாம் அழக்கூடாது." மென்மையாக சொல்லி, இருவரின் கண்-மை களையாமல் கண்ணீரை துடைத்துவிட, "ஹும். ஒத்துக்குறோம். ஆனா, அவ வந்ததும் நாங்க அவள அடிப்போம். நல்ல்ல்லா அடிப்போம். நீ தடுக்க கூடாது. சரியா'ண்ணா?" தங்களின் விழிநீரை நிறுத்த ஒரு நிபந்தனை போட்டாள் ரக்ஷா.
"ஆமா நாங்க அடிப்போம் அவள." தன் கண்ணீரை துடைத்தபடியே மாயாவும் தங்கையை ஆமோதிக்க, "அஃப்கோர்ஸ்! தடுக்க மாட்டேன். ஆனா, நா தா அண்ணன். சோ நா தா உங்களுக்கு முன்னாடி அத்தைய ஃபர்ஸ்ட்டா அடிப்பேன். டன்-ஆ?" தீவிரமாக தன் முடிவை அபி சொல்ல, "அண்ணா! ஹஹா. சரி ஓகே. நீயே ஃபர்ஸ்ட் அடிச்சுக்கோ. நாங்க அப்பறமா கவனிச்சுக்குறோம் அவள." மாயாவின் பதிலை தொடர்ந்து அங்கு ஒரு லேசான சிரிப்பலை எழுந்தது.
"ஹ்ம்ம். எதையும் யோசிக்காம ரெடி ஆவுங்க. நா போய் மத்த பக்கீஸ் எல்லாத்தையும் பாத்துட்டு வரேன். மொதல்ல தீராவ தேடி புடிக்கணும். நேத்து பூமிக்கு போய்ட்டு, வீட்டுக்கு வரலன்னு மெசேஜ் போட்டதோட சரி, இன்னும் ஆளையே காணோம். சரி, ரெண்டு பேரும் கியூட்டா கெளம்புங்க. நா வரேன்." இருவரின் கன்னத்தையும் தட்டிவிட்டுத் தன் மொபைலை எடுத்தபடி அறையை விட்டு வெளியேறிய அபி, விழா நடக்கும் இடத்தை அடைந்ததும் தீராவிற்கு அழைப்புவிடுத்து மொபைலை காதில் வைக்க. இரண்டே ரிங்கில் எடுத்துவிட்டாள் அவள்.
"ஹலோ, மாமா?"
"எங்க இருக்க நீ?"
"பூமில தான், மாமா. ஏன் கேக்குற?"
"ம்ச். இங்க இருக்க வேண்டிய நேரத்துல அங்க என்ன செய்ற நீ? இவ்ளோ முக்கியமான நாள்ல கூட அங்கதான் டேரா போடுவியா?"
"ஆங்! முக்கியமான நாளா? இன்னைக்கா?"
"இல்லையா பின்ன? அம்முவும் பாப்பாவும் பதவியேற்குறது முக்கியம் இல்லையா உனக்கு? அவங்க பதவியேற்கும்போது அத மிஸ் பண்ண போறியா நீ?"
"என்னது? பதவிப்பிரமாணமா! அவளுங்களுக்கா? என்ட்ட சொல்லவே இல்ல! ஒருநாள் தானே நான் அங்க இல்ல. அதுகுள்ள இவளோ நடந்துருச்சா?"
"ஓஹ்! உனக்கு தெரியாதுல! நா சொல்லவே இல்ல-ல?"
"மாமா... எனக்குத் தெரியாதுன்னு உனக்கு தெரியாது?"
"ஹிஹி. தெரியாதே தீரா மா. சரி, சரி சீக்கிரம் கிளம்பி வா. இல்லனா ஃபங்ஷன் முடிஞ்சு போயிரும்."
"ஹும்.. போ மாமா. எல்லாத்தையும் என்கிட்ட லேட்டாவே சொல்லிட்டு. சரி, நா ஓடனே வரேன். நீ ஃபோன வை." முதலில் கோபத்துடன் கத்தியவள் உடனடியாக சாந்தமாகி, பின் பரபரக்க... சரியென சொல்லிவிட்டு அழைப்பை தூண்டித்தவன், தன் ரோஹினி அத்தையின் மகள்களை விரைவாக கிளப்பிக் கூட்டிவரக் கிளம்பியிருந்தான்.
✨✨✨
கழுத்தில் கிடந்த பதக்கத்தை கண்டு மிரண்டு போயிருந்த ஷேனாவை நோக்கித் தன் வேக எட்டுகளுடன் வந்த இருளரசன், மறுயோசனை ஏதும் இல்லாமல் அவன் கரம்பிடித்து இழுத்துக்கொண்டு, எரியும் சிம்மாசனத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
ஏற்கனவே திக் திக் என இருமடங்காக துடித்துக் கொண்டிருந்த ஷேனாவின் இதயம், இப்போது பல மடங்காகித் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கியது. 'அய்யோ! உன்னை இந்த நெருப்புக்கு இரையாக்கப் போகிறார் உன் தந்தை. முன்பெல்லாம் உன் சக்திகளை மட்டுமே உறிஞ்சிக் கொள்வார். இன்று, உன் உயிரையே உறிஞ்சிடப் போகிறார். உன்னை பலியிட முடிவெடுத்து விட்டார் போலும். அவ்வளவு தான் உன் ஆயுள். அம்மாவை ஒருமுறை பார்த்துவிட்டு வருவதாக உன் இறுதி ஆசையை இப்போதே சொல்லிவிடு.' என அவன் நெஞ்சம் கத்திக் கூப்பாடு போடத் தொடங்கியிருக்க... அதுதான் உண்மை என அவனை நினைக்கச் செய்வது போலவே இருளரசனின் முகத்திலும் எரியும் அந்த அரியாசனத்தில் ஷேனாவை எப்படியாவது அமர்த்திடும் தீர்க்கம் தெரிந்தது.
அதனை உணர்ந்தவனுக்கு படி ஏறி வருவதற்கே கால்கள் உடன் வர மறுக்க... ஆனால், அவனை இழுத்துக்கொண்டு செல்வது இருளரசனாயிற்றே! தப்பி ஓடவும் முடியவில்லை அவனால். இருளரசனுடன் அவன் முன்னேற முன்னேற, சிம்மாசனத்தை சூழ்ந்திருந்த நெருப்புக் கணல்கள் மெல்ல மெல்லக் குறைந்துக் கொண்டே வர... பயத்தில் அதையெல்லாம் கவனிக்கத் தவறியிருந்தான் அவன்.
ஷேனாவின் ஒவ்வொரு முன்னோக்கிய அடிகளுக்கும் சிறிது சிறிதாக குறைந்த அந்த நெருப்பு, அதன் ஒரு அடியில் அவன் வந்து நின்ற நொடி முற்றிலுமாகக் குறைந்து தங்க நிறத்தில் ஜொலிக்கத் தொடங்கிவிட, "இதெப்படி சாத்தியம்?" ஆச்சரியம் நிறைந்த ஷேனாவின் விழிகள், அந்த சிம்மாசனத்தை கண்டு பிரமித்தது.
அவனுக்கு பின்னே நின்ற இருளரசனின் இரு கரங்களும் அவன் தோளைத் தொட்டு அரியாசனம் நோக்கித் திருப்பி, அதில் அவனை அமரச்செய்திட... பொத்தென அதில் அமர்ந்துவிட்ட ஷேனாவின் இரு கரங்களும் அந்த ராஜ சிம்மாசனத்தின் கைப்பிடியில் பதிந்த நேரம், அதிலிருந்து பளிச்சென மேல் நோக்கி பாய்ந்த தங்க நிற ஒளி, கிட்டத்தட்ட மொத்த சாயல் அரசாங்கத்திற்கும் சேர்த்து ஒளியூட்டிடும் அளவிற்கு பிரகாசம் கொண்டிருந்தது.
ஷேனாவை ஆசனத்தில் அமரச்செய்த இருளரசன், வெறுமை குடிகொண்ட அந்த வெற்றுச் சபையை நோக்கித் திரும்பி, "மாய அரக்கர்களே! நிழல்ராஜ்ய பிரஜைகள் யாவருக்கும் செய்தியை தெரிவியுங்கள்! இருள் உலக இலக்கியத்தின் ராஜசிம்மாசனம், அதன் தகுதியுடைய இளவரசனை கண்டறிந்து விட்டது. சிம்மாசனத்தின் நெடுநாள் பசியை போக்கிட இளவரசர் ஷேனாவை இன்றே பதவிப்பிரமாணம் செய்யவுள்ளோம். பதவியேர்ப்பு நிகழ உள்ள இன்றைய ராஜ விழாவில் தவறாது கலந்துக்கொள்ள மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது என தெரிவியுங்கள்." இருளரசன் குரல் அவ்விடமெங்கும் எதிரொலித்துக் கேட்க... யாருமில்லா அந்த இடத்தில் பலர் தடதடவென ஓடும் சத்தம் மட்டுமே ஷேனாவை அடைந்தது. ஆனால், அதையெல்லாம் கவனிக்கும் நிலையிலில்லை அவன். அவனது கவனம் மொத்தமும் நிலைத்து நின்றது என்னவோ, சிம்மாசனத்தின் பசிக்காக தன்னை இளவரசனாக்க போவதாக இருளரசன் குறிப்பிட்டது மட்டும் தான்.
எச்சிலை கூட்டி விழுங்கியவன் 'இது எப்பொழுதடா என்னை விழுங்க வாயை பிளக்கும்' என்பது போல் மிரட்சியுடன், அமர்ந்திருக்க துணிவில்லாமல்... எழுந்து ஓடவும் வழியில்லாமல் இப்படியும் அப்படியும் நெளிந்துக்கொண்டே அமர்ந்திருந்தான். தன் தந்தை எப்போது எழச்சொல்வார் என்னும் எதிர்பார்ப்போடு.
✨✨✨
"கவி... ராவி... இளவரசிகள விட அதிக நேரம் எடுத்து கெளம்புவீங்க போலவே? இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?" வீட்டினுள் நுழையும்போதே இருவரையும் ஏலமெடுத்துக் கொண்டே அபி நுழைய, "மாமா! மாமா நாங்க ரெடி. ஒரு நிமிஷம் நீ மேல போயேன். அக்கா உனக்காக ஒரு செம்ம்ம்ம்ம கிஃப்ட் வச்சிருக்கா." என உற்சாகமாக கூச்சலிட்டபடி தலையில் மலர் சூடி கொண்டே மாடியிலிருந்து கீழிறங்கி வந்தாள் அவள். பச்சைநிறம் உடுத்திய அழகு தேவதையாக ஜொலித்த சங்கவி.
"என்ன கவி? ஏதாச்சும் புதுசா சமைச்சு வச்சுருக்காளா உன் அக்கா?" நக்கலடித்தாலும் அவன் பாதம் மாடியை நோக்கி மெல்லமாக நடக்கத் தொடங்கியிருக்க. "ம்ச். எப்பவும் சாப்புடுறதுலேயே கிஃப்ட்ட எதிர்பார்க்க கூடாது. அதுலாம் கெடையாது இன்னைக்கு. இது, நீ பல வருஷமா வேணும்னு கேக்குற ஒன்னு மாமா" பதில் கொடுத்தபடியே கண்ணாடியருகில் சென்றவள் தன்னை அழகுபார்க்க தொடங்கிவிட்டாள்.
"ம்ம்? பல வருஷமாவா? என்னது பலவருஷமா கேக்குறேன் நான்?" தீவிர யோசனையுடன் சொல்லியபடியே படியில் ஏறத் தொடங்கியிருந்த அபியின் கேள்வியால், சட்டென தன் பார்வையை கண்ணாடியிலிருந்து பிரித்து அவனை நோக்கி முறைத்த சங்கவி, "மேல போனா நீயே பாக்க போற.. அதுக்கு ஏன் இவ்ளோ யோசனை, மாமா? மேல போ மொதல்ல. நான் கெளம்புறேன் மாளிகைக்கு. என் செல்லகுட்டிஸ்க்கு நெறைய மேக்கப் போடனும். அவளுங்களையா கெளம்ப சொன்னா எதையுமே போட்டுக்க மாட்டாளுங்க. ஆமா, என் தங்கச்சி தீராவ வர சொல்லிட்ட தானே?" படபடவென கத்திகொண்டே சங்கவி வாயிலை அடைந்துவிட, "ஹான், ஹான். நீ கெளம்பு. அவ கரெக்ட்டா அங்க நிப்பா" சிரித்துக்கொண்டே அவளுக்கு விடைகொடுத்த அபி, சங்கவி சென்றதும் மாடியை நோக்கிய தன் அடிகளை வேகமாக எடுத்துவைக்கத் தொடங்கினான்.
அவன் என்னதான் சங்கவியிடம் கேலியாக ஆயிரம் விஷயங்களை வினவினாலும், அவன் மனதில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக புதைந்து கிடக்கும் அந்த தீராத ஏக்கம், இன்றளவிலும் தன்னை கோபித்து கொண்டிருக்கும் பிடிவாதக்காரி ராகவியின் காணா முகத்தை காண்பதுதான். அவளின் அழகு முகத்தை கண்டுவிட இன்றாவது வாய்ப்பு கிட்டுமா என்னும் ஆசையுடன் அவன் மேல்நோக்கித் தாவிச் செல்ல... அங்கே, பூட்டியிருக்கும் அறையின் உள்ளே... மையிட்ட கயல்விழிகள் இரண்டும் நிலம் நோக்க... தன்னறையை நெருங்கும் காலடி ஓசையால் சிவந்த கன்னங்கள் மேலும் சிவக்க... செவ்விதழ்களோ படபடப்பில் துடிக்க. கண்ணாடியில் தன் சிவந்து போன அழகு ரூபத்தை கண்டு மேலும் மேலும் சிவந்துக்கொண்டே நின்றிருந்தாள் ராகவி. அவன் வரவை எதிர்நோக்கியவளாய்.
கதவினை நெருங்கிவிட்ட அபி, பலநூறு எதிர்பார்ப்புகளுடன் அதன் கைபிடியை அழுத்த. உள்ளிருபவள் இதயம் சீரற்றுத் துடிக்க. கதவினை மெல்லமாகத் தள்ளிக்கொண்டு உள் நோக்கியவன், வழக்கம்போல் நொந்துவிட்டான், அவளின் திரையிட்ட முகத்தைக் கண்டு. இருப்பினும், மறைந்திருக்கும் அவள் அழகை வர்ணிக்காமல் இருக்க முடியவில்லை அவனுக்கு.
"ராவி. எப்டி டி? எப்டி உன்னால மட்டும் முடியுது?"
"எ- என்ன எப்டி? என்ன முடியுது என்னால." அவள் கேள்வியில் மென்மையான நடையுடன் அவளை நெருங்கியவன், அவளின் இளஞ்சிவப்பு ஆடைக்கு பொறுத்தமாக அவள் மீன் விழிகளுக்கு கீழேமட்டும் மறைத்திருக்கும் அந்த இளமஞ்சள் வஸ்திரத்தின் மீது கோபம் கொண்டபடியே அவள் விழியை நோக்க. கோபம் மொத்தமும் காதலாகி உருகியது அவள் விழி தந்த உஷ்ணத்தால்.
"ம்ச். இப்டி கண்ணாலேயே கொள்ளுற டி என்ன." அபியின் ஒற்றை விரல், அவள் நெற்றியில் படர்ந்து அவளின் மென்மையான கூந்தலை நோக்கி நகர... அவனது தீண்டலுக்கு உருகத் தொடங்கியிருந்தவள் சட்டென அபியின் கரத்தை தட்டிவிட்டாள்.
"ஜித்தூ, இன்னைக்கு என்ன நாள்ன்னு மறந்துப் போச்சா உனக்கு? இப்போ நாம மாளிகைக்கு போகனும். வா." என்றுவிட்டு கதவை நோக்கி நடக்க தொடங்கியவளை கண்டு, சத்தமில்லாமல் பெருமூச்சு விட்ட அபி, "ஓய் ராவி, எங்கடி என் கிஃப்ட்டு. எதோ பலநாள் நா கேக்குற கிஃப்ட் வச்சுருக்கன்னு கவி சொன்னா?" கதவினை திறக்கப் போனவளை நோக்கி அபி கத்த... தப்பிச்செல்ல நினைத்திருந்த ராகவி, ஒரு தீர்மானமாக அவனை நோக்கித் திரும்பி, "கிஃப்ட் தானே," விஷம விழிகளுடன் அபியை நெருங்கினாள்.
அதை கண்டவன், 'கேக்கக் கூடாத எதையோ கேட்டுட்டோமோ?' என ஒருநொடி தயங்கி நிற்க... பட்டென அவன் கரம் பிடித்தவள் தன் கரத்தை அவனுடன் கோர்த்துக் கொண்டு, "ம்ம். இந்தா... என் கை தா உன் கிஃப்ட். நாம ரெண்டு பேரு மட்டும் ஊரு சுத்தனும்ன்னு எவ்ளோநாள் ஆச பட்ட நீ? எல்லாரையும் கழட்டி விட்டுட்டு இன்னைக்கு ஃபுல்லா சுத்தலாம்." புன்னகைக்கும் பார்வையால் அவனை நோக்கினாள் ராகவி.
அந்த ஒற்றை பார்வையும் அவளின் வார்த்தைகளும் போதுமே அவனுக்கு. நீண்டநாள் ஏக்கத்தை மறந்தவன் குதூகலமாக அவள் கரத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான். "ராவி! சூப்பர், ராவி. ஃபர்ஸ்ட் ஃபங்ஷன் போவோம். அதுக்கப்பறம், உன்ன ஒரு ஸ்பெஷல் இடத்துக்கு கூட்டிட்டு போறேன். ஓகே வா?" கரம் கோர்த்தபடி இருவரும் ரத்னமாளிகைக்கு பயணமாகினார்கள்.
✨✨✨
ராஜபதவியே கைக்குக் கிடைப்பினும் இன்னும் அந்த கொடியவனின் சொல்லுக்கு தலையாட்டிடும் தன் மகனின் நிலையை நினைக்க நினைக்க, ஷிவேதனாவின் மனதில் பாரமே குடிகொண்டிருக்க... இருந்தாலும் ஒருவித நிம்மதி அவர் முகத்தில். மகன் சென்ற வாயிலை சுற்றிலும் சூழ்ந்திருக்கும் அந்த அடர்ந்த இருளை பார்த்தபடி, எவ்வித சிந்தனையும் இல்லாமல் சாந்தமாக அமர்ந்திருந்தாள் அவள்.
தன் மகனுக்கு கிடத்திருக்கும் பதக்கத்தை பற்றியும் அதன் சக்திகளை பற்றியும் அவள் நிச்சயம் அறிவாள். இருளரசனே மறுப்பினும் இனி ஷேனாதான் இந்த பரந்து விரிந்த நிழல்தேசத்தின் ராஜன். அது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருப்பினும் தன் மகன், இருள் சக்திகளுக்கு தலைமை வகிக்க போவதனால் அவனது மனமும் இருள் படர்ந்து தீமையின் வழிக்கே சென்றிடுமோ என்னும் பயமும் மறுபுறமாக இருந்துகொண்டே தான் இருந்தது.
இருள்சூழ்ந்த அந்த வாயிலை பார்த்தபடி மகனின் வருங்காலம் குறித்த சிந்தனையில் இருந்த ஷிவேதனாவின் சிந்தையை, சட்டென தன்புறம் ஈர்த்தது அவளை சுற்றிலும் ஏற்பட்ட திடீர் மாற்றம். அவளின் அந்த அறை, எப்போதும் போல் இயற்கையாகவே ஒளி சூழ்ந்துக் கிடக்க... அறையின் வெளியே, ஏதோ ஒன்று வித்தியாசமாகப் படரத் தொடங்கியது. எதேற்சையாகவே தன் பார்வையை வாயிலை நோக்கி வைத்திருந்ததால், நொடிப்பொழுதில் அந்த வித்தியாசம், அவளை நினைவுலகில் இருந்து நிஜ உலகிற்கு இழுத்து வந்துவிட்டது.
"ஒளியா!" வாயிலை சூழ்ந்திருக்கும் இருளை கிழித்து மென்மையாக படர்ந்துக் கொண்டிருந்த தங்கநிற ஒளிக்கீற்றை கண்டு மெல்லிய குரலில் தனக்குள்ளேயே முணுமுணுத்தவள், நெற்றி சுருங்கிட வாயிலை நோக்கியபடி எழுந்து, அந்த வித்தியாசமான ஒளி கீற்றின் அருகே செல்ல... அவள் முன்னேற முன்னேற ஒளியானது அந்தப் பாதை வழியாக வேகமாக முன்னோக்கி பரவிக்கொண்டிருந்தது. அலைபாயும் விழிகளுடன் வாயிலை அடைந்தவள், ஒளி பயணித்துக் கொண்டிருக்கும் திசையெங்கும் தன் பார்வையை செலுத்தினாள். இங்கிருப்பதை காட்டிலும் பிரகாசமான ஒளி, தூரத்தில் இருந்து இப்போது தான் மெல்ல மெல்ல பரவி கொண்டிருக்கிறது.
அதன் காரணம் புரியாவிட்டாலும் அவ்வொளியை கண்ட நொடியில் ஷிவேதனாவினுள் ஒரு புதுவித உற்சாகம். இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக கரிய இருளினுள் மறைந்திருந்த பாதைகள் யாவும் இந்த மெல்லிய ஒளியால் ஓரளவிற்கு தெரிய ஆரம்பித்ததில். ஒருநொடியே அந்த பாதையைப் கண்டு ஸ்தம்பித்து நின்றவர். மறுநொடி, உற்சாகத்துடன் தன் மனம் இழுக்கும் திசையில் விறுவிறுவென முன்னேறத் தொடங்கினார்.
ஓர் ஆர்வம். ஓர் எதிர்பார்ப்பு. மகன் பதவியேற்கும் அழகினை கண்ணார கண்டிடுவோம் என்னும் புதியதொரு நம்பிக்கை பிறந்திட, ஏதோ வழியில் நடந்துக கொண்டிருந்தவள், தெரிந்தோ தெரியாமலோ அந்த ஒளியைதான் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள். இறுதியாக, அவள் சென்று நின்ற இடம், இருளை கிழிக்கும் ஒளியின் பிறப்பிடமாக இருக்கும் அந்த இருள்உலக ராஜ சிம்மாசனம் வீற்றிருக்கும் அறையின் வாயிலில் தான்.
விசாலமாக திறந்த நிலையில் இருக்கும் இரு கதவுகளை வைத்தே அது எந்த அறை என்பதை யூகித்துவிட்ட ஷிவேதனா, ஆர்வமாக முன்னேறி அந்த பிரம்மாண்ட அறைக்குள் தன் பார்வையை செலுத்திட... அடுத்தநொடி, அப்படியே உறைந்து நின்றுவிட்டாள். அவர் கண்களோ, கறுநிற பளிங்கு படிகளின் மேலே இருந்த ராஜ சிம்மாசனத்தில் இருந்து நெருப்பு கணல்கள் போல் வெளிப்பட்டு கொண்டிருக்கும் அந்த தங்க ஒளிக்கீற்றின் மீது அதிர்ச்சியுடன் பதிந்திருக்க... அதன்மீது, ஒன்றும் புரியாமல் அமர்ந்திருக்கும் ஷேனாவை நோக்கி மெல்ல நகர்ந்த விழிகள் இரண்டும் தன்னைதானே நம்பவில்லை. காரணம், அவள் அறிந்தவரையில், ஆதிலோகத்தில் இருக்கும் ஐந்து ராஜ சிம்மாசனங்களும் அதனதன் உரிமையாளர் அமரவிருக்கும் நொடியே அவரின் ஆத்மநிறங்கள் கொண்டு ஒளிரும். அதேநேரம், ஒருவரின் ஆத்மநிறம் என்பது சிவப்பு அல்லது நீலம் அல்லது இரண்டும் கலந்த நிறம் என மூன்று அமைப்புகளில் மட்டுமே தான் இருக்கும். ஆனால் இங்கோ, ஷேனா அமர்ந்திருக்கும் அந்த இருள்உலக ராஜசிம்மாசனத்தில் தங்க நிற ஒளியல்லவா வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
'இது எப்படி சாத்தியம்! தங்க நிறத்தில் ஒருவரின் ஆத்மநிறம் உள்ளதா? நானறிந்த வரையில் அப்படி எதுவும் இல்லையே. நான் அறியாமல்கூட ஏதேனும் இருக்கக்கூடும். ஆனால், இதன்மூலம் ஷேனாவிற்கு ஆபத்தா? இல்லை, இல்லை. அப்படி இருக்காது. ஒருவேளை.. ஹையோ மகாராணி! என் மகன் என்னை பிரிந்துச் சென்றிடுவானா? இருள் அவனை ஆக்கிரமித்து கொள்ளுமா? இவன் ஆத்மநிறத்தின் பொருளென்ன மகாராணி! இப்படியாக ஒரு ஆத்மநிறம் கொண்டு எவரும் பிறந்ததாக நான் கேட்டறிந்ததில்லையே. இது தீமையின் சாயல் அல்லவே?' தனக்குத்தானே துடித்துக்கொண்ட ஷிவேதனாவின் மனம் பலவாறாக சிந்தித்துக் கொண்டிருந்த நொடியில் இருளரசனின் குரல் கர்ஜனையாக அங்கு எதிரொலித்தது. இளவரசன் ஷேனாவின் பதவியேற்பு விழாவினை குறித்துச் சொல்வதற்காக.
'இளவரசன் ஷேனா' என்னும் அச்சொல்லானது இருளரசனின் நாவிலிருந்தே வெளிப்பட்டதை கேட்டநொடியில் அவன் அன்னையின் உள்ளம், மற்ற சிந்தனைகள் அனைத்தையும் நொடியில் மறந்தது. மகிழ்ச்சியின் எல்லையை கடந்து விண்ணுக்கே பறந்து சென்றிடும் அளவிற்கு அத்தனை ஆனந்தம் அவள கண்ணில். அவள் கண்ணீரில்.
ஷிவேதனாவின் பார்வை, மனம் நிறைந்துபோய் தன் மகனை நோக்கிக் கொண்டிருக்க... அங்கு பீதியுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ஷேனாவின் விழிகளோ எதேர்ச்சையாக ஒரு நொடிதான் தன் அம்மாவை சந்தித்தது. அந்த நொடி, அந்த ஒரே நொடியில் அரியாசனத்தின் மீதான அவனது நடுங்கிய பிடி நிலையானது. கம்பீரமானது. அதுவரையில் 'சிம்மாசனம் தன்னை விழுங்கிடுமோ' என்னும் பயத்தில் அரியாசனத்தின் ஓரத்தில் நெளிந்துக்கொண்டு அமர்ந்திருந்தவனின் தோரணை, நெஞ்சை நிமிர்த்தியது. ஷேனாவின் கண்களில் ஒருவித ஆழுமைதிறன் வெளிப்பட... அம்மாவை நோக்கியிருக்கும் விழிகள் இரண்டிலும் புன்னகை விரிய... நம்பிக்கை துளிர்க்க... அன்னையை கண்டு முழுமையாகப் புன்னகைத்தவன் அவள் முகத்தில் இழையோடும் அந்த பரவசத்தின் காரணம், தான் இங்கு அமர்ந்திருப்பதே என்பதை அவள் பார்வையின் வழியே உணர்ந்துகொண்டான். தனக்கென இருக்கும் மொத்த கம்பீரத்தையும் தன் தோரணையில் காட்டி, நேர்கொண்ட பார்வையுடன் நிமிர்ந்து அமர்ந்தான் ஷேனா. அவனுடைய ராஜ அரியாசனத்தில்.
✨✨✨
இளவரசிகளின் அலங்கார வேலைகள் அனைத்தும் முடிந்தபின், சரியான நேரம் வரும் வரையில் அவர்களை அறையிலேயே இருக்கச் சொல்லிவிட்டு கீழ்தளத்தில் கூடியிருக்கும் பொதுஜனங்களுடன் கூடிவிட்டார்கள் சங்கவி மற்றும் தீரா.
"அட போ கவி'க்கா. நா நம்ப மாட்டேன்." எதற்காகவோ தீரா சலித்துக்கொள்ள, "ஏன் டி? நம்பு! நல்லதே நடக்கும். நம்பு." தீர்மானமாக பதில் கொடுத்தாள் சங்கவி.
"நடக்காது, நடக்காது. நீ நெனைக்குற நல்லது, இந்த ஜென்மத்துல நடக்காது."
"வாயக் கழுவு டி பைத்தியமே."
"உம்ம். அப்பவும் நடக்காது."
"அதெல்லாம் நடக்கும் போடி."
"அட நடக்காதுங்குறேன்."
"நடக்கும்குறேன்."
"நடக்க- " சங்கவியுடன் ஏட்டிக்குப் போட்டியாக கூச்சலிட முனைந்த தீராவின் வார்த்தை, பாதியிலேயே தடைப்பட்டு நிற்க... ஏலனமாக தன் கவி அக்காவை ஒரு பார்வை பார்த்தவள், பின்னால் திரும்பிப் பார்க்குமாறு அவளுக்கு கண்ணால் சைகை செய்தாள். சரியாக ரத்னமாளிகையின் வாயிலில், கைக்கோர்த்தபடி நுழைந்தார்கள் அபி மற்றும் ராகவி.
அவ்விருவரையும் பார்த்த நொடி, சங்கவியின் முகம் ஃப்யூஸ் போன பல்ப் ஆகிட... கண்களை குறுக்கி இருவரையும் அவள் முறைத்துக் கொண்டிருக்கும் போதே, "என்ன கவி'க்கா? நா சொன்னது நடந்துருச்சு பாத்தியா?" நக்கலாக சிரித்தபடி அவ்விருவரையும் நோக்கி ஓடிச்சென்றாள் தீரா. மூக்கில் புகை விடாதக் குறையாக புகைந்துக்கொண்டே அவளை பின் தொடர்ந்தாள் சங்கவி.
"மா...மா.." கூவிக்கொண்டே அபியிடம் சென்று தீரா நிற்க, "ஹேய்! சேட்டைக்காரி. ஒரு வழியா வந்து சேந்துட்டியா." ஒரு கரத்தில் ராகவியை பிடித்துக்கொண்டே மறுகரத்தால் தீராவின் தலையில் தட்டியபடி அவளை நோக்கி புன்னகைத்தான் அபி. "ஹிஹி. வந்துட்டேன், வந்துட்டேன்." அவள் பதில் கொடுக்கும்போதே, அமைதியாக கைகளைக் கட்டிகொண்டு புன்னகையுடன் வந்து நின்றாள் சங்கவி.
"சரி, தாரி எங்க? காலையில இருந்து ஆளையே காணோமே?"
"அவ, சத்யா அத்த கூட தா நின்னுட்டு இருந்தா மாமா."
"ஓஹ்! மொதல்ல அம்மா எங்க இருக்காங்க?"
"அத்த.... தெரியல. எங்கயாச்சும் நிப்பாங்க. போ. போய் தேடு, போ." தீரா, அபியை மட்டும் அங்கிருந்துக் கிளப்பிவிட்ட அடுத்தநொடி, ராகவின் கழுத்தை பிடித்திருந்தாள் சங்கவி. "ஏன்டி. உன்கிட்ட நா என்ன சொல்லிட்டு வந்தேன்? ஹான்? இப்படி மறுபடியும் மாஸ்க் போட்டு மூஞ்சிய மூடிக்கிட்டு வந்து நிற்குற? அப்போ... என் மாமா முன்னாடி நீ போகல. அப்படித்தானே?" சங்கவி ஒரு முறைப்புடன் ராகவியை நோக்கிக் கொண்டிருக்க. அதைகண்டு வாயை மூடிச் சிரித்துக் கொண்டிருந்தாள் தீரா.
"அதெல்லாம் இல்லையே. நா போனேனே ஜித்தூ முன்னாடி."
"ஆனா மாஸ்க் போட்டுட்டு. அப்படித்தானே ராவி'க்கா?" சட்டென தீரா கேட்டதில், தங்கைகளை கண்டு திருட்டு விழி விழித்தாள் ராகவி.
"அடச்சீ, அப்டி பாக்காத." அக்காவை நன்றாக முறைத்த சங்கவி, "நாங்களே போயும் மாமாட்ட சொல்லக்கூடாது. நீயா போயும் சொல்லமாட்ட. ஹும். இந்த ஜென்மத்துல நீயும் உன் மூஞ்சிய காட்ட மாட்ட. என் மாமாவும் உன்ன பாக்க மாட்டான். போங்கடி நீங்களும் உங்க கண்ணாமூச்சி விளையாட்டும். இனி என் கிட்ட ஐடியா கேட்டு வந்து நின்னுறாத. அப்பறம் அக்கானும் பாக்காம அடிச்சுற போறேன்." சிலுப்பிகொண்டு அப்புறம் திரும்பி கொண்டாள் அவள்.
"அப்டி சொல்லாத கவி." கெஞ்சலாக தங்கையின் முகத்தை தன்னை நோக்கித் திருப்பியவள், "ஏன்னு தெரியல, கவி மா. என்னால முடியல. ஜித்தூ, என் ரூம் வாசலுக்கு வர்ர வரையும் ஸ்கார்ஃப் போடாம தா இருந்தேன். ஆனா, அவன் கால் சத்தம் பக்கத்துல கேக்கக் கேக்க உள்ளுக்குள்ள பக்கு பக்குங்குது. அதா மறுபடியும் போட்டுகுட்டேன். ஸ்கார்ஃப் இல்லாம அவன நேருக்கு நேரா பாக்கனும்னு நினைக்கும்போதே எனக்கு என்னென்னவோ செய்யுது, கவி. நான் என்ன செய்யட்டும்" அப்பாவியாக கேட்டவளை சங்கவி சலிப்புடன் ஒரு பார்வை பார்க்க, "ஹாஹாஹா. நீ ஒன்னும் செய்யவேணாம். விடு ராவி'க்கா. எது எப்போ நடக்கனுமோ அது கரெக்ட்டாவே நடக்கும். இப்ப வாங்க, எல்லாரும் முன்னாடிப்போய் நிப்போம். அப்போதான் அவளுங்கள கரெக்ட்டா ஃபோகஸ் பண்ண முடியும்." இருவரையும் பிடித்து இழுத்துக்கொண்டு முன்னால் சென்றுவிட்டாள் தீரா.
சிறிதுநேரம் ஒருவரை ஒருவர் கேலி செய்துக்கொண்டும் கோபித்துக்கொண்டும் நேரம் நகர... கண்ணுக்கு புலப்படாத எங்கோ ஒரு உயரத்தில் இருந்து காதை கிழிக்கும் இன்னிசையாய், ஆதிலோகத்தின் மூலை முடுக்கெங்கிலும் ஒலித்தது ராஜ பறையிசை. அதனை தொடர்ந்து குழலோசை இசைக்க... மிருதங்கம், மேளம், மத்தளம் என அனைத்தும் ஒன்றினைந்து ஒரு புதுவித இசைக்கு உருவம் வழங்கத் தொடங்கியிருக்க... அனைத்திலும் தனித்துவமாய், இசைகளின் அரசியாய் ஒலித்தது ராஜ யாழிசை. ஆதிலோகம் மொத்ததிற்கும் சேர்த்தது போல் இசைக்கும் அந்த இசையே அனைவருக்கும் எடுத்துச்சொல்லியது, இது ராஜ பதவியேற்புக்கான நேரம் என்பதை.
ஆதிலோகத்தின் இருதுருவ ராஜ்யங்களிலும் சரிக்கு சமமான மக்கள் கூட்டம். வடக்கே, ரட்சக ராஜ்யத்தின் ரத்னமாளிகையின் ராஜசபையில் நிரம்பியிருந்த மக்களின் விழிகள் ஒவ்வொன்றும் அதீத எதிர்பார்ப்புடன், தரைதளத்தில் இருந்து இரண்டாவது அடுக்கில் இருக்கும் அந்த ஒற்றை அறையின் வைர கதவின்மீது பதிந்திருந்தது. அதேபோல், இங்கிருக்கும் மூன்று ராஜ்ய மக்களுக்குச் சமமான மக்கள்கூட்டம், ஆதிலோகத்தின் தெற்கே, இருள்மாளிகையில் கூடியிருந்தது.
இப்போது, நிழல்தேசம் மொத்தத்திலும் பரவியிருந்தது அந்த தங்கநிற ஒளி. முன்பைவிட இருமடங்காக ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த இருள்உலக சிம்மாசனம். தரையிலிருந்து கருநிற பளிங்கு படிகள், சிம்மாசனத்திற்கு வழிவகுத்திருக்க. ஆசனத்தின் பின்னிருந்து மேல்நோக்கிச் செல்லும் அந்தத் தங்கப் படிகள், நேராகச் சென்று தங்க வாயிலை கொண்ட ஒற்றை அறைக்கு முன்னே நிறைவடைந்திருந்தது. நிழல்தேசத்தின் மொத்த பார்வையும் பதிந்திருந்தது அந்த ஒற்றை தங்க அறையின் மீதுதான்.
யுக யுகங்களாக வெறிச்சோடி கிடந்த தங்களின் இருள்உலக சிம்மாசனத்தில் அமரப்போகும் அரசன் யார்? புதுவிதமான இந்த தங்கநிற ஆத்ம சக்தியின் உரிமையாளன் யார்? வருங்காலத்தின் வழிகாட்டி யார்? என பலரின் பார்வையும் அந்த ஒற்றை கதவின்மீது பதிந்திருந்த நொடி, விசாலமாக திறந்துக்கொண்டது அந்த அறை. மக்களின் பார்வை, எதிர்பார்ப்புடன் ஆவலையும் கலந்து மேலே நோக்க... இருளரசனை தொடர்ந்து அறை வாயிலின் வழியே, ராஜ உடையில் முழுவதும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஷேனா, அந்தத் தங்க படிகளின் வழியே கம்பீர நடையுடன் கீழிறங்கி வந்தான்.
அதேபோல், அந்த வைரக் கதவினை மெல்லமாகத் திறந்துக்கொண்டு, அறையிலிருந்து ரத்னசிம்மாசனத்திற்கு செல்லும் வைர படிகளின் வழியே, இரு ரத்ன ரூபினிகளாய் நடந்து வந்தார்கள் ரட்சக ராஜ்ய இளவரசிகள் இருவரும்.
அவள்களின் நிமிர்ந்த நடையில் கர்வம் பொங்கிய மக்கள் கூட்டம், இளவரசிகள் இருவரையும் வாழ்த்து மழையிலும் உற்சாகக் கூச்சலிலும் திளைக்கச் செய்திட... சிவப்புநிற ராஜபதக்கம் மாயாவின் கழுத்திலும் நீலநிற ராஜபதக்கம் ரக்ஷாவின் கழுத்திலும் பாந்தமாக அசைந்தாடி ஜொலித்துக் கொண்டிருக்க... இருவரும் ஒன்றாக வந்து ரத்ன அரியாசனத்தின் முன் நின்ற நொடி, அவரவர் ஆத்மநிறம் கொண்ட ஒளி, அந்த ஒற்றை சிம்மாசனத்திலிருந்து வெளிப்பட்டு இருவரையும் அதனுள் மூழ்கடித்தது.
மக்கள் கூட்டம் மொத்தமும், அந்த ஆத்மநிற ஒளி மறைவதற்காக காத்திருக்க... தங்க நிற ஒளி ஷேனாவினை விட்டு நீங்கிய நொடி, அவன் கழுத்திலிருந்த ராஜபதக்கம் ஆயிரம் சூரியனாய் ஜொலிக்க... மின்னும் மரகத வாள் ஒன்று புதிதாக அவன் பிடியில் தோன்றியிருந்தது. அதனை கம்பீரமாக கையில் ஏந்தி, ராஜ தோரனையுடன் அனைவரையும் நிமிர்ந்து நோக்கினான் இருள்உலக நாயகன். இளவரசன் ஷேனா.
அவனை சூழ்ந்த தங்க ஒளி மறைந்ததை அடுத்து ராஜ சிம்மாசனத்தில் அவனை அமர்த்திய இருளரசன், மக்களை நோக்கி திரும்பி, "மதியற்ற வானாய் நீண்ட நாள் கலையற்று இருந்த இருள்உலக ராஜ சிம்மாசனம்! இளவரசர் ஷேனாவின் வரவால் இன்று அதன் முழு ஆழுமையை மீண்டும் பெற்றுள்ளது. இனி, நம் நிழல்தேசத்தின் புதிய இளவரசர்... புதிய வழிகாட்டி... இளவரசர் ஷேனாவிற்கு மரியாதை செய்திடுவோம்!" மக்கள் கூட்டத்தை நோக்கி இருளரசனின் கர்ஜனை ஓய்ந்த அதேநொடியில், மக்களின் வாழ்க! வாழ்க! கோஷம் ஷேனாவின் செவியை துளைக்க... அதே நிலையில், தங்களின் இரு வைர வாள்களை கையில் ஏந்தியபடி ரத்னசிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்கள் ரட்சக ராஜ்ய இளவரசிகள் இருவரும்.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro