Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

49. மர்ம உருவம்.

நீண்டகாலம் கடந்து, அந்த பச்சை வண்ண மரங்களின் கூட்டத்தினை கண்ணாரக் காண்கிறான் ஷேனா. அனைத்துமே புதுமை! முன்பிருந்ததுபோல் பாதைகளே கண்ணுக்கு புலப்படவில்லை. காணும் திசையெல்லாம் அடர்ந்த மரங்களே. 

"இதில் நான் எங்கெனச் சென்று அவர்களின் இருப்பிடம் கண்டறிவேன்? ஹம்ம்" நொந்துக்கொண்டு கால்போன போக்கில் சிறிது தூரம்தான் நடந்திருப்பான், கண்முன்னே ஒரு பிரம்மாண்டக் கோட்டை, அவனை வா...  வா... என்றழைத்தது. 'வ்வாஹ்ஹ்! என்ன ஒரு அற்புதமான கோட்டை! அவர்கள் தங்களின் குடிலை மாற்றி, இப்படியொரு கோட்டையினை கட்டிக் கொண்டார்களோ?' என சிந்தை ஒருபுறம் நினைத்துக் கொண்டிருக்க.. மறுபுறம் கால்களோ, அவனை இழுத்துக்கொண்டு கோட்டையினுள் நுழைந்து விட்டது.

காணும் சுவரெல்லாம் வண்ணவண்ண ஓவியங்கள் மட்டுமே தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது அக்கோட்டை முழுவதிலும். அவற்றை ரசிக்கத் தொடங்கியவன், தான் வந்த காரணத்தையே மறந்துப்போய் ரசிக்கத் தொடங்கிவிட்டான். ஓவியங்களையே பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை, சட்டென ஒரு ஓவியத்தின் மீது நிலைகுத்தி நின்றது.

அது, யுத்தக்காட்சிகளை விளக்கிடும் ஓவியம். மரணக் காட்சிகளை விளக்கிடும் ஓவியம். முக்கியமாக, தன் குருக்களின் மரண காட்சிகளை விளக்கிடும் ஓவியம் அது. அதை கண்டநொடி, அவன் கண்கள் கணப்பொழுதில் பனிக்கத் தொடங்கிட, நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ஷேனா, கண்ணிலிருந்து வழியும் கண்ணீருடன் அங்கிருந்து விறுவிறுவென தன் இருப்பிடம் நோக்கி விரைந்தான்.

அந்த ஓவியம் ஏன் இப்படி வரையப் பட்டிருக்கிறது? இது வெறும் ஓவியம்தானே, அதற்கு நான் ஏன் கலங்க வேண்டும்? என் குருக்கள் எங்கும் செல்லவில்லை. அவர்கள் இன்னுமும் உயிருடன்தான் எங்கோ இருக்கிறார்கள் என ஷேனாவின் மனம் ஏறுக்குமாறாக நினைத்துக் கொண்டிருக்க... அந்த நினைவுகளுடன் அவன் ஆதிலோகத்தை அடைந்த சில மணித்துளிகளிலேயே, நேரம் இரவை அடைந்துவிட்டது.

நேராக இருள்மாளிகைக்கே சென்றிருந்த ஷேனா, இருளரசனை சந்தித்து அவரின் மூலிகைகளை அவரிடமே ஒப்படைத்துவிட்டு. இன்றைய இரவை வனதேசத்தில் கழிக்கப்போவதாக அன்னையிடம் சொல்லிவிட்டு உடனடியாக வனதேசம் வந்துவிட்டான். அவனால், தான் கண்ட காட்சியை இன்னுமும் ஜீரணிக்க முடியவில்லை. அவன் கண்டது வெறும் ஓவியமாகவே இருந்தாலும், ஏதோ தன் குருக்களின் மரணம், சற்றுமுன், தன் கண்முன்னேயே நிகழ்ந்தது போன்ற அனுபவத்தை கொடுத்திருந்தது அந்த ஓவியங்கள்.

அந்த ஓவியங்களின் காரணமாக அவன் மனம் பாரமாகவே இருக்க... அன்றைய பௌர்ணமி இரவில், சோகத்தின் முழு ரூபமாக மாறிப்போய், மனம் அழைத்தத் திசையில் சென்றுக் கொண்டிருந்தவன் கண்முன்னே, ஒரு மின்னும் பிரம்மாண்டம்! தகதகவென ஜொலிக்கும் ஒரு ஐம்பதடி வாயிற்கதவானது அவன் கண்முன்னே விசாலமாக தோன்றியிருக்க... அதைக் கண்ட மாத்திரத்தில் தன் சிந்தனைகள் யாவையும் மறந்தான் ஷேனா. தன்னையறியாமலே ரட்சகராஜ்யத்தின் வாயிலை அடைந்துவிட்டவனுக்கு அதைக் கண்டதுமே தன் அம்மா கூறயக் கதைகள் அனைத்தும் நினைவிற்கு வந்தது. அவற்றை வைத்து புரிந்துக்கொண்டான். இது, ரட்சக ராஜ்யத்தின் எல்லைவாயில் என்பதை.

அந்த எல்லை வாயிலை கண்ட நொடி, தான் கண்ட ஓவியங்கள் எல்லாம் மறந்துபோனது ஷேனாவிற்கு. வேறு எதையும் சிந்திக்காமல் ரட்சக ராஜ்யத்தின் உள்ளே தன் முதலடியை பதித்தான் ஷேனா. அதேநேரம், ரட்சக ராஜ்யத்தில், ராஜ்யத்தின் மையத்திலிருக்கும் ஒரு உயர்ந்த கோபுரத்தின் உச்சத்தில் அமர்ந்து வட்டநிலவை ரசித்துக் கொண்டிருந்தாள் மாயா. சாதாரணமாக பௌர்ணமி இரவு என்றாலே மாயாவிற்கு தூக்கம் வராது. ராஜ்யத்தின் மையத்தில் இருக்கும் ஒரு உயர்ந்த கோபுரத்தின் உச்சியில் அமர்ந்து. இரவு முழுவதும் நிலவை ரசித்துவிட்டு. விடியும்பொழுதே உறங்கச் செல்வாள். இதில், இன்றுதான் இளவரசி பதவியை முழுதாக ஏற்றுக் கொண்டிறுக்கிறாள். நாளைய பதவியேர்ப்பு விழாவினை நினைத்தே அவளின் உறக்கம் இன்று பறிபோயிருந்தது. வழக்கம்போல் இன்றும் பௌர்ணமி நிலவை ரசித்தவாறு அந்த கோபுர உச்சியில் அமர்ந்திருந்த மாயா, "முகத்தை மறைத்துக்கொண்டு ஒரு கருப்பு உருவம், சுற்றிச்சுற்றி எச்சரிக்கையுடன் நோக்கியவாறே வருவதை பார்த்துவிட்டாள்.

"இந்த இருட்டுக்குள்ள யாரிது தனியா? அதுவும், கருப்புப் போர்வ போத்தீட்டு?" கறுப்பு நிற ஆடை அணிந்திருந்த ஷேனா, புதிய இடம் என்பதால் முகத்தை மறைத்தபடி நடந்துக் கொண்டிருக்க.. அதில் சந்தேகம் கொண்ட மாயா, அவசர அவசரமாகத் தான் அணிந்திருக்கும் சிவப்பு துப்பட்டாவை வைத்துத் தன் முகத்தை மறைத்தபடி கட்டிக்கொண்டு, தான் மேலே ஏறி வருவதற்காக அங்கிருந்த ஒரு கம்பியில் கட்டிவைத்திருக்கும் கயிற்றை பிடித்து, சத்தமில்லாமல் கீழ்நோக்கித் தாவிக்குதித்தாள்.

மாயா, பாதிக்கும் குறைவான தூரம் சென்றதும் அந்தக் கயிறு மீண்டும் அவளை கோபுரத்தை நோக்கி இழுக்க.. இரு கால்களையும் கோபுர சுவற்றில் அழுத்தி மீண்டும் பின்னோக்கிக் குதித்தாள். அவள், சுவற்றில் கால்பதித்த சத்தம் கீழ் நின்றவனை அடைந்தத்தில், படக்கென அன்னாந்து மேலே பார்த்தவனது கண்ணுக்கு விருந்தாக வெண்ணிற நிலவொளியில் காட்சியளித்தாள், ரெக்கையின்றி பறக்கும் முகத்திரையிட்ட அந்த சிவப்பு தேவதை. ஒரேயொரு நொடிதான் தன்னை மறந்து அவளை ரசித்திருப்பான். மறுநொடியே சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து ஓடத் தொடங்கினான், ஷேனா.

தனது ராஜ்யம் இருக்கும் இருள்சூழ்ந்த கோரக்காட்சிக்கும் இரவில்கூட ஜொலிக்கும் ரட்சக ராஜ்யத்தின் அற்புதக் கட்சிக்கும் வேறுபாடு அறியாதவன் அல்ல அவன். இந்த ராஜ்யத்தில் தன்னை எதிரியாகதான் காண்பார்கள் என்பதை அவன் நொடிப்பொழுதில் யூகித்து ஓடத் தொடங்கினான். மூன்றே தாவில் அந்த முப்பதடி கோபுரத்திலிருந்துக் கீழே குதித்த மாயா, கயிற்றை அப்படியே விட்டுவிட்டு ஷேனாவை துரத்தி ஓடத் தொடங்கினாள். 

தனக்குப் பின்னே தன்னைத் துரத்திக்கொண்டு வருபவளை கண்ட ஷேனா, தன் வேகத்தை அதிகரித்து ஓட... அவன் பின்னேயே ஓடியவள் தன் பாதையை மாற்றி  அருகிலிருந்த குறுக்குப் பாதையின் வழியாக ஓடி, வாயிலை நெருங்கியவன் முன் சரியாக சென்று மூச்சிரைக்க நின்றாள்.

எங்கிருந்தோ திடீரென வந்துத் தன்முன் நின்றவளை கண்டு, சரட்டென தன் பாதங்களை நிலத்தில் தேய்த்து நின்ற ஷேனா, அதிர்ந்துப்போய் அவள் விழிகளை காண... அவளும் தன் கத்திப் பார்வையால் இவனது விழியை கண்டாள்.

ஷேனாவின் கண்ணசைவின்மீதே தன் பார்வையை நிறுத்தியிருந்தவள், எச்சரிக்கையுடன் குனிந்துத் தன் காலில் மறைந்திருக்கும் குறுவாளை கையிலெடுத்து, அவனது முகத்திரையை விலக்கிட முன்னேற... முன்னேறியவள் கரத்தை தற்காப்பிற்காக பற்றியவன், தன் காலை அருகிலிருந்தத் தூணில் அழுத்தி, அவள் தலைக்குமேல் எம்பி, அவளைதாண்டிக் குதித்த நொடியே, அவள் கையிலிருந்தக் குறுவாளை தன் கைக்கு மாற்றியிருந்தான்.

இப்படி, தலைக்குமேல் காற்றில் பறப்பவனை மாயா ஆவெனப் பார்த்திருக்க... சிலநொடிகள் கழித்தே தன்னிலை அடைந்தவள், அங்கே கண்டது... பத்தடி தூரத்தில், வாயிலை கடந்து வனதேசத்தின் வழியாக ஓடிக்கொண்டிருந்த அந்த கருப்பு உருவத்தைதான். அவன் பின்னேயே துரத்தி ஓட முனைந்தவள், வாயிலை தாண்டத் தன் காலை வேகமாக எடுத்துவைக்க முனைய.... ஆனால், அணிச்சையாகவே அவளது பாதங்கள் தடைபட்டு நின்றது. நினைவுத்தெரிந்த நாள்முதல் இதுநாள் வரையில் அவள் தன் ராஜ்யவாயிலை தாண்டியதே இல்லை. இன்று, யாருக்கும் தெரியாமல் எப்படி வேளியே செல்வது? முக்கியாமாக, அண்ணனிடம் சொல்லாமல் எப்படிச் செல்வது என்னும் தயக்கமே மேலோங்கி இருக்க... முதலில் வாயிலைத் தாண்டிச்செல்லத் தயங்கியவள், பின், என்ன ஆனாலும் பரவாயில்லை என அவனை துரத்திக்கொண்டு ஓடினாள். வனதேசத்தில் தொடர்ந்த இந்த ஓட்டம், அங்கு வாழும் இரு இனத்து மக்களின் இருப்பிடத்தையும் தாண்டி நிழல் தேசத்தையே அடைந்திருந்தது. 

தன் ராஜ்யத்தை அடைந்ததில் நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஷேனா, தன்னை துரத்திவருபவள் இன்னுமும் வருகிறாளா என ஒரு புதருக்குள் மறைந்துநின்றுப் பார்க்க... அங்கே, நிழல்தேச வனத்தின் நுழைவுப் பகுதியில், பயங்கரமானத் தோரணையில் அமானுஷ்யமாக இருக்கும் இடத்தைக் கண்டு திக் திக் எனத் துடித்த இதயம் விழுந்துவிடக்கூடாது என, நெஞ்சில் கைவைத்து அரண்டுபோய், வெளிரிய முகத்துடன் நின்றிருந்தாள் அவள். எதிரில் வந்தவனையும் காணவில்லை, இதற்குமேல் செல்லவும் துணிவில்லை. பயந்து போன மாயா, வந்த வேகத்தை காட்டிலும் இருமடங்கு வேகமாக, வந்த வழியே சென்றுவிட்டாள்.

அவள் சென்றதும், அப்பாடா என மரத்திலிருந்து தரைக்குத் தாவிய ஷேனா, "ஷப்பா... யாரிவள்? என்னஒரு வேகம்! ஹஹ்! நூலிழையில் தப்பி-" தன்னந்தனியாகப் புலம்பிக் கொண்டிருந்தவனை, ஜொலிக்கும் தங்கநிற ஒளியானது திடீரென எங்கிருந்தோ வந்துச் சூழத்தொடங்கியது. குழப்பத்துடன் அதைக் கண்டவன், சுதாரிக்கும் முன்பாகவே அந்த ஒளியினுள் மூழ்கடிக்கப்பட்டான்.

இருள். கரிய இருள். வழக்கமாக அவன் பழக்கப்பட்ட அந்த கொடிய இருளை காட்டிலும் பயங்கரமான இருள். விசித்திரமான இருள். ஆனால், அவனது ராஜ்யத்தில் நிலவிடும் அந்த எதிர்மறையான சூழல் இல்லை இதில். ஏதோ ஒரு புத்துணர்வு உள்ளது இந்த இருளில். இதனுள் நுழைந்த நொடியே அவன் உடலெங்கிலும் ஒரு சிலிர்ப்பு. அதேநேரம், இதிலிருந்து கிடைக்கும் ஒரு வித்தியாசமான உணர்வு, இதுவரையிலும் எங்கும் கிடைத்ததில்லை அவனுக்கு. எப்படி உணர்கிறான் என சொல்லமுடியாத ஒரு உணர்வு. உடலுக்குள், மின்னலொன்று வலியில்லாமல் ஊடுருவும் விசித்திர உணர்வு. மூளைக்குள் இடி இடிக்கும் சுகமான ஒரு உணர்வு. செவிப்பறைக்குள் ஓ'வென்னும் ஓலச்சத்தம் இன்னிசையாகி ஒலித்தது அவனுள்.

ஷேனா, தன்னை சுற்றிலும் நடப்பதை பகுத்தறிய முடியாமல் நெஞ்சம் படபடக்க.. விழிகள் மிரண்டிருக்க.. அந்த இருளுக்குள் மூழ்கித் தவித்துக் கொண்டிருந்த நேரம், தங்க நிறத்தில்,  எல்லாத் திசைகளிலும் இருந்து மினிமினுப்பான துகள்கள் கூட்டம் கூட்டமாக பறந்துவந்து அவன் கண்முன்னே ஒரு உருவாய் உருபெறத தொடங்கியது. மெல்ல மெல்ல ஒருங்கிணைந்த தங்கத்துகள்கள் யாவும் ஒரு முழு மனிதனின் உருவை தன்னில் செதுக்கிக்கொண்டு, ஷேனாவின் உயரத்திற்கு நிகராக ஒரு வாலிபனின் உருவ அமைப்பிலேயே வளர்ந்து நிற்க. அந்த உருவத்தை கண்டு ஷேனா வெடவெடத்து நின்றான்.

அது யாரோ எவரோ என பயந்துபோன ஷேனா, தன் ஒவ்வொரு அடிகளையும் பின்னால் நகர்த்த நகர்த்தத் தன் கைகளை கம்பீரமாக வீசிக்கொண்டு, நிமிர்ந்த நடையில் ஷேனாவை நெருங்கியது அவ்வுருவம். அடிமேல் அடிவைத்து அவனை அடைந்துவிட்ட அந்த தங்க-உருவம், அவனின் தலைவழியாக எதையோஅவன் கழுத்தில் அணிவித்து விட... எதுவும் விளங்கிடாமல் பீதியில் பின்னோக்கி நகர்ந்துக் கொண்டிருந்த ஷேனா, அவ்வுருவத்தின் விசித்திர செயலால் குழம்பித் தன் கழுத்தில் கிடப்பது என்னவென குனிந்துக் காண முனைந்தான். 

அந்நொடி... அவனே எதிர்பார்க்காத அந்தநொடியில், சட்டென ஷேனாவை இழுத்துத் தன் தோளோடு அணைத்துக்கொண்டது அவ்வுருவம். இன்னதென்று தெரியாத அந்த மினுமினுக்கும் ஏதோஒன்று, திடீரெனத் தன்னை அதன் பக்கமாக இழுத்ததில் பக்கென்று ஷேனாவின் இதயம் அடைத்துக்கொள்ள... அவன் திடுக்கிட்டு அதனிடமிருந்து விலக முயற்சித்ததில்... அவன் கரம் காற்றில் அலைமோதி அருகிலிருந்தத் தண்ணீர் குவளையை தட்டிவிட்டது. குப்பென்று வியர்த்திருந்த முகத்துடன் தூக்கத்திலிருந்துத் திடுகிட்டு எழுந்தமந்தான் ஷேனா.

"ஷேனா! ஷேனா, என்னானது? என்னை பார், ஷேனா. ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை." தூக்கத்திலிருக்கும் தன் மகனின் வினோத செயலால் மிரண்டுப்போய், கிட்டத்தட்ட பத்து நிமிடங்களாக அவனை எழுப்பும் முயற்சியில் இருந்த ஷிவேதனா.. மகன் விழித்துக்கொண்ட நிம்மதியில், வியர்வை துளிகள் பூத்திருந்த அவன் முகத்தை தன் முந்தானையால் துடைத்துக் கொண்டே, மூச்சிரைக்க அமர்ந்திருக்கும் அவனை அணைத்து கொண்டார்.

"அம்மா- ஒன்றுமில்லை... அது- அது, கனவுதான்." மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக்கொண்டே அன்னையின் அணைப்பில் சிலையென சரணாகியிருந்த ஷேனா, மெல்ல மெல்ல சகஜ நிலைக்குத் திரும்பித் தன்னை சுற்றிலும் ஆராயத் தொடங்கினான். இது, அவன் அறை. அவன் அன்னையுடன் இத்தனை காலமாக வாழ்ந்துவரும் அதே அறை. ஆனால், ஷேனாவிற்கு ஒன்றுமட்டும் விளங்கவில்லை. வனதேசத்தின் வழியாக நடந்துக் கொண்டிருந்தவன், எப்போது? எப்படி? இங்கு இருள்மாளிகைக்கு வந்தான் என யோசித்து யோசித்து அவன் தலை வலிக்கத் தொடங்கியதுதான் மிச்சம். அந்த நினைவுகளே அவனிடம் இல்லை. அவன் வனதேசம் சென்றது, ஒரு கோட்டைக்குள் சென்றது, ரட்சக ராஜ்யம் சென்றது என அனைத்துமே வெறும் கனவோ என்றுக்கூட ஒருநொடி சிந்தித்தான். ஆனால், அடுத்தநொடியே ஷிவேதனா கேட்டக் கேள்வியால் நிகழ்ந்தவை எவையுமே கனவில்லை என்பது அவனுக்கு விளங்கிவிட்டது.

"கனவா? என்னானதடா உனக்கு? நள்ளிரவில் வனதேசத்திலிருந்து வந்ததுமுதல் உன் செயலே சரியில்லை. என்னானது ஷேனா? அம்மாவிடம் சொல். எதன் காரணமாக நேற்றைய தினத்தில் வனதேசத்தில் இரவை கழிக்கப்போவதாக சொன்னாய்? ஏன் மீண்டும் பாதி இரவிலேயே வந்துவிட்டாய்?"

"அம்மா, அது- நான்-"

"ஷேனா, இதென்ன புதிதாக-" சொல்ல நினைத்ததை சொல்ல முடியாமல் திக்கிக் கொண்டிருக்கும் மகனை கவனிக்கவிடாமல், அவன் கழுத்தில் புதிதாக மின்னிய ஒன்று ஷிவேதனாவின் கவனத்தை ஈர்க்க... கேள்வியுடன் அதனை தன் கரம்கொண்டு அவர் சோதித்த நொடியே அது என்னவென விளங்கிவிட்டது அவருக்கு. மறுவார்த்தை வராமல் விக்கித்து நின்றார் அவர்.

அன்னையின் அதிர்ச்சிப்பார்வை தன் கழுத்தில் நிலைக்குத்தி நின்றபின்பே, தன் கழுத்தை குனிந்து நோக்கினான் ஷேனா. ஏற்கனவே தன் கழுத்தில் ஜொலிக்கும் உறவுசங்கிலியை உரசியவாரே, கருகருவென ஒரு வட்ட பதக்கம், தங்க நிறம் கலந்து நடுவில் மண்டை-ஓடு சின்னதுடன், அதன் விழிக்குழியில் இரு வெண்ணிற கண்ணாடி வைரம் பதிக்கபட்டு அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தது. வனதேசத்தில் வைத்து அந்த மினுமினு தங்கநிற மனித-உருவம் ஷேனாவிற்கு அணிவித்துவிட்ட அதே பதக்கம்.

✨✨✨

வழக்கம்போல கருங்கும்மென இருள் சூழ்ந்திருக்கும் இருள்மாளிகையின் தன்னந்தனி நடைபாதை வழியாக எதார்த்தமாக நடந்துக் கொண்டிருந்த இருளரசனின் நடை, சட்டென தடைபட்டு நின்றது. எதையோ உணர்ந்ததில் அவரின் விழியிரண்டும் நொடிப்பொழுதில் விரிந்தது. அவர் முகமெங்கும் மிரட்சியின் சாயல் படர்ந்தது. வெடவெடத்து போன அவரின் உடலெங்கிலும் வியர்வைத் துளிகள் குப்பென பூத்ததுடன் கர்வம்-மாறா அவர் கண்ணில். என்றுமில்லாத அந்த புதிய நடுக்கம். இத்தனைநாள் இல்லாத ஒரு படபடப்பு. சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவருக்கு நினைவு தெரிந்தது முதல் அவரது முகத்தில் இழையோடாத 'பயம்' இன்று அப்பட்டமாக வெளிப்பட்டது அவர் முகத்தில். சீரற்ற அவர் மூச்சில். நடுங்கி நிற்கும் அவர் தோரணையில்.

தன்னை மறந்து, தன் பதவியை மறந்து, யுகயுகங்களாகத் தன்னில் குடிகொண்ட ஆணவம் மறந்து, எவருக்கும் அஞ்சி அடங்கிடாத வீரம் மறந்து நடுக்கதில் நிற்கும் இருளரசனின் இந்நிலைக்குக் காரணம்.. அவர் செவிகள் உணர்ந்த அந்த விசித்திர சத்தம். சரியாக, இருளரசன் நிற்கும் இடத்திலிருந்து வலது புறமாக, அவர் முதுகுக்குப் பின்னே வெகுதூரத்தில் இருக்கும் ஒரு அறையிலிருந்து, ஏதோ ஒன்று கொளுந்துவிட்டு கனன்று எரியும் சத்தம். அவர் முகமே எடுத்துச் சொல்லியது, அந்த சத்தத்தின் பொருளை அவர் அறிவாறென.

அது எங்கிருந்து வருகிறது, எதன் காரணமாக வருகிறது என்னும் உண்மையை அவர் ஏற்கனவே அறிந்திருப்பதன் அடையாளமாக அவரின் படபடக்கும் விழிகள் ஓரிடத்தில் நில்லாமல் சுழன்றது. சட்டென தன் இதயம் அதன் துடிப்பை இரட்டிப்பாக்கியதில், நின்ற நிலையிலேயே அவருக்கு மூச்சிரைக்க ஆரம்பித்திருக்க.. மறுநொடியே பின்னோக்கி திரும்பி, அவரின் செவி உணர்ந்த ஒலி வரும் இடத்தை நோக்கி ஓட்டமெடுக்கத் தொடங்கினார்.

சில பல வளைவுகளை கடந்து ஓடியவர், ஓரிடத்தில் மூச்சிரைக்க நிற்க..  தடக் தடக்'கென வண்டி ஓட்டுவதுபோல் துடித்துக் கொண்டிருந்தது அவரின் இதயம். தன் நெஞ்சில் கைவைத்தபடி, உள்ளே கனன்று எரிந்துக் கொண்டிருக்கும் நெருப்புக்கீற்றின் தங்கஒளி வெளிவரத் துடிக்கும் அந்த கறும் வாயிலை நோக்கியவர், நடுங்கும் நடையுடன் முன்நோக்கி நகர்ந்தார். இருள்மாளிகை உருவான காலம் முதல் திறக்கவே திறக்காததுபோல் இருக்கும் அந்த மேற்கு எல்லை அறையின் வாயிலைத் திறப்பதற்காக, அதனை நோக்கித் தன் கரத்தை உயர்த்ததான் செய்தார்.. அவரின் கை கதவினை தீண்டிடும் முன்பாகவே, புயல்காற்று ஓங்கி அடித்துபோல் ஒரு உணர்வு அவரை பின்னிருந்துத் தாக்கிச்சென்று அக்கதவினை வன்மையாக இடித்திட... படாரென்ற சத்தத்துடன் திறந்துக்கொண்டது அந்த அறை.

அறை வாயிலிலிருந்து ஒரு நீண்ட நெடும் பாதை... பாதையின் இரு ஓரங்களிலும் பிரம்மாண்ட இசை வாத்தியங்கள் புத்தம் புதியது போல், தன்னை மீட்டிட ஆளில்லாத போதிலும் ராஜ கலையுடன் கம்பீரமாக வீற்றிருக்க... பாதையானது, நேராக அறையின் அடுத்த எல்லையில் இருக்கும் படியினை நோக்கிச் சென்றது. கருநிற பளிங்குப் படிகள் முதற்கொண்டு அவ்வறை முழுவதுமே நெருப்பின் ஒளியால் இருள் மறைந்து மின்னிக் கொண்டிருக்க... கீழிருந்து மேலாக சென்றிருந்த கறுப்பு பளிங்கு படிகளில் இறுதி-படி நிறைவடையும் இடத்தில், அக்னி விழுங்கிய அற்புதமாய் தீக்கணல் பறக்க.. பற்றியெரிந்துக் கொண்டிருந்தது அந்த பத்து அடியிலான ராஜசிம்மாசனம். எரியும் அந்த பிரம்மாண்டத்தை, விழி இமைக்காமல் பார்த்தபடி வாயிலிலேயே நின்றிருந்தார் இருளரசன்.

✨✨✨


"ஷேனா, இது எப்படி உன்னிடம் வந்தது? யார் கொடுத்தது?" ஷேனாவின் கழுத்தில் கிடக்கும் அந்த புதிய பதக்கத்தை ஷிவேதனாவின் பார்வை அதிர்ச்சியுடன் பார்த்ததில் ஷேனாவிற்கு லேசான பயம். 'ஏதோ சரியில்லாத ஒன்று தன்னை பிடித்துக் கொண்டதோ? அதனால்தான் அம்மாவின் முகம் இப்படி அதிர்ச்சியுடன் இருக்கிறதோ?' என அவன் மனம் எண்ணம்கொள்ள, "அம்மா.. நி-நினைவில்லை. எனக்கு எதுவுமே நினைவில் இல்லை அம்மா." தனக்குள் ஏதோஒன்று விசித்திரமாக நடந்துக் கொண்டிருப்பதை ஷேனாவால் தெளிவாக உணர முடிந்தது. ஆனால், அதனை வெளிப்படுத்தும் வழியறியாமல் அன்னை மடியில் சாய்ந்தபடி.. வனதேசத்தில் வைத்து ஒரு வினோதக் கரும்புகை தன்னை சூழ்ந்ததுமுதல் தன்னில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தையும் மெல்லியக் குரலில் கூறிமுடித்தான் அவன்.

"அம்மா, இறுதியாக அந்த உருவம் என்னை அதன்புறமாக இழுத்தது மட்டும்தான் நினைவில் உள்ளது. அதன்பின்- அதன்பின், எதுவுமே நினைவில் இல்லை, அம்மா. எனக்கு- எனக்குள் ஏதோ... ஏதோ செய்கிறது- என்னவென விளங்கவில்லை. பயமாக இருக்கிறது, அம்மா. என்னுடனே இருங்கள். என்னை விட்டு செல்லாதீர்கள். என்னை தனித்து விடாதீர்கள்." அவனுள் ஊடுருவிக் கொண்டிருக்கும் அந்த வினோத உணர்வு, இன்னும் இன்னும் அதிகரித்து ஷேனாவை இம்சித்துக் கொண்டிருக்க... மகனின் உணர்வை ஓரளவிற்கு புரிந்துகொண்ட ஷிவேதனாவின் விழி வழியே சிந்தும் கண்ணீரில் ஒரு ஆனந்தம்... ஒரு பயம்... ஒரு நிம்மதி... ஒரு கர்வம்... அனைத்தும். அனைத்தும், கலந்திருந்தது அந்த தாயின் கண்ணீரில்.

மென்மையாக அவன் தலையை கோதியவர், "ஷேனா, பயம் கொள்ளாதே. உனக்கு ஒன்றுமில்லை. இனி நீயே-" அன்னையின் சொல் மென்மையாக தன் செவியினை அடைந்துக் கொண்டிருக்கும்போதே வேறொன்றும் அவன் செவியை அடைய... படக்கென எழுந்தமர்ந்தான் ஷேனா.

மகனிடம் ஏதோ சொல்ல வந்தவர், அவனது திடீர் செயலால் அவனை கேள்வியுடன் நோக்க, "அம்மா, தந்தை அழைக்கிறார். நான் சற்று நேரத்தில் வருகிறேன்." என்றுவிட்டு, வழக்கம்போல கண்ணசைவுக்குள் அறையிலிருந்து ஓடியிருந்தான். என்றும்போல் இன்றும் ஷிவேதனாவால் தன் மகனை தடுக்க முடியவில்லை. இது, தினமும் நிகழ்வதுதான் என்றாலும், இன்று அவரின் மனம் கூடுதலாக பாரம் கொண்டிருந்தது. நிகழவிருக்கும் நற்காரியத்தை தன் கண்ணாரக் காண முடியாதே என்னும் வருத்தமே அதன் காரணம்.

✨✨✨


எரியும் தீஜ்ஜுவாலைகளுக்கு மத்தியில், சிம்ம சொப்பனமாக அந்த பிரம்மாண்ட சிம்மாசனம் மிளிர்ந்துக் கொண்டிருக்க... கறும் பளிங்கு படிகளின் பாதியில் நின்றபடி, அதன்மீது தன் அசையா பார்வையை பதித்திருந்த இருளரசன், ஷேனாவின் வருகையை உணர்ந்தும் கூட பின்னோக்கி திரும்பும் எண்ணம் இல்லாமல் சிலையாக நின்றிருந்தார்.

அவன் வந்துவிட்டான் என்பதை உணர்ந்துக்கொண்டவர், தன் முதுகின் பின்னே நிற்பவனை காணாமலேயே, "ஷேனா, செல். நிழல்தேசம் முழுவதிலும் தேடிச்செல். சென்று, இந்த ராஜ சிம்மாசனத்தில் உள்ளது போன்றே எவர் கழுத்தில் ராஜ பதக்கம் உள்ளதோ அவரை உடனடியாக என்னிடம் அழைத்து வா." படபடப்புடன் கட்டளை பிறப்பிக்க... ஷேனாவின் கண்களோ அந்த சிம்மாசனத்தையும் தன் கழுத்தில் புதிதாகக் கிடக்கும் அந்த பதக்கத்தையும் மாற்றி மாற்றி பயத்துடன் பார்க்கத் தொடங்கியிருந்தது. நெருப்பு விழுங்கிய அந்த ராஜ சிம்மாசனத்திலும், ஷேனாவின் பதக்கத்தில் உள்ளது போன்றே தங்கமும் கருமையும் கலந்து, நடுவில் ஒரு மண்டை ஓடும் அதன் விழிகளாக இரு ஜொலிக்கும் வைரங்களும் பாந்தமாக பொருந்தியிருந்தது.

தான் இத்தனை வேகத்தில் கட்டளை பிறப்பித்த பின்னரும், இம்மியளவும் நகராமல் ஷேனா அங்கேயே நிற்பதை உணர்ந்தவர், "உன்னை செல் என கூறினேன் ஷேனா. என்ன பிரச்சினை உனக்-" கடுப்பேறிய இருளரசன், பின்னோக்கித் திரும்பிக் கத்தியநொடி அவரின் பார்வை ஷேனாவின் கழுத்தில் கிடக்கும் அந்தப் பதக்கத்தை கண்டுகொண்டது.

அந்நொடியே ஷேனாவின் முகத்தில் இரட்டிப்பு அதிர்ச்சிரேகை பரவத்தொடங்கிட... அன்னையின் பார்வையை போலவே இருளரசனின் பார்வையும் தன் கழுத்தின் மீது அதிர்ச்சியுடன் நிலைகுத்தி நின்றதை கவனித்தவனுக்கு பயம் இன்னுமும் அதிகரித்தது. இருளரசனின் பார்வை, அடுத்ததாக தனக்கு என்ன வலியை கொடுக்கப் போகிறதோ என்னும் நடுக்கத்துடன் தன் இரு கரம் கொண்டு அப்பதக்கத்தினை கரங்களில் ஏந்தினான் அவன்.

✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro