48. முக்கிய முடிவு.
காலங்கள் வேகமாக நகர்ந்துவிட்டது. குழந்தைகள் எல்லாரும் வளர வளர அபி மிகவும் கண்டிப்புடன் கூடிய குருவாகி விட்டான். தீராவிற்கு மட்டுமல்ல... அவனின் இரு அத்தை மகள்களையும் இரு தங்கைகளையும் ஒரேயொரு குட்டி இம்சையாகிய தாரியையும் சேர்த்தே இப்போதெல்லாம் கட்டுபடுத்தத் தொடங்கிவிட்டான். 'இங்கு செல்லாதே... அங்கு செல்லாதே.. வெளியில் சென்றால் என்னிடம் சொல், நானும் உடன் வருகிறேன்.. பெரியவர்களை உடன் அழைத்துக் கொண்டுதான் எங்கேனும் செல்லவேண்டும்' என பல சட்டங்களை வகுத்துவிட்டான் அவன். ஆனால், அவர்களின் கடிவாளமெல்லாம் சில காலங்களே அபியின் கை வசம் இருந்தது. குழந்தைகள் அனைவரும் வளர வளர அபியை அழகாக மடக்கிவிட்டு ஓட்டம்பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களின் ஓட்டமெல்லாம் நல்லவேளையாக ராஜ்யத்தின் உள்ளேயேதான் இருந்தது. அது ஒன்றே அபிக்கு லேசான திருப்தி.
ரத்னமாளிகையில் அபிக்கான போர் பயிற்சிகள் தொடங்கி சிறப்புடனே நடந்துக் கொண்டிருந்தது. முறையான வரிசையில் ஆய கலைகள் அனைத்தயும் சரியான தெளிவுடன் முழு ஈடுபாடுடன் கற்றுவந்தான் அவன். ஓரிரண்டு ஆண்டுகளிலேயே ராகவி மற்றும் சங்கவியும் போர் பயிற்சிக்கு ஏதுவான வயதினை அடைந்துவிட்டதால் அவர்களும் அபியுடன் இணைந்தே ரத்னமாளிகைக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் இருவருமே மாயங்களால் தேர்ந்தெடுக்கப் படாதவர்கள் என்பதால், மாயக் கலைகளின் பயிற்சிக்கூடத்தின் பக்கம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவ்விடத்திற்கு அடிக்கடி சென்று, தன் இஷ்டம்போல் ஒரு புது வரிசையில் மாயங்களை கற்றுக்கொள்ள தொடங்கியிருந்தது தீராவும் வருங்கால இளவரசிகளான இரட்டை சேட்டைகள், மாயா மற்றும் ரக்ஷாவும் தான். அவ்விருவரும் கூட தீராவை போன்றே நான்கு வயது முதலே மாயங்களுக்கு பழகத் தொடங்கிவிட்டார்கள். இவை எதிலுமே பங்குக் கொள்ளாத தாரி, அனைவரின் செல்ல பிள்ளையாக.. வீட்டின் கடை குட்டியாக.. தீராவின் ஒரே பிரியமான வில்லியாக தன் இஷ்டம் போல் வீட்டிலேயே சுற்றித் திரிவாள்.அதேபோல், ஆண்டுகள் பல ஆயிரங்களைக் கடந்திருந்தாலும் தன் குருக்களுக்கு கொடுத்த வாக்கின்படி ஷேனாவின் பயிற்சிகள் மட்டும் ஒருபோதும் ஓய்ந்ததே கிடையாது. இருளரசன், மீண்டும் பழைய நிலைக்கே மாறியிருந்தாலும் ஷேனாவின் கழுத்தில் கிடக்கும் உறவுசங்கிலியை மீறி அவரால் அவனை எதுவுமே செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார். அதனால், தக்க வாய்ப்பினை எதிர்நோக்கிக் காத்திருக்கத் தொடங்கினார் அவர். இருப்பினும், தனது எடுபிடி வேலைகள் மொத்ததையும் ஷேனாவின் தலையிலேயே கட்டி வைத்திடுவார். மேலும், ஷேனாவின் பயிற்சிகளையும் அவர் கண்காணிக்கத் தொடங்கியிருந்தார். அவனது பலத்தையும் வேகத்தையும் கண்டு இருளரசனே லேசாக நடுங்கிப்போனார் என்றால் அது மிகையாகாது.' எங்கே! அவன் எனக்கே எதிராகத் திரும்பிடுவானோ?' என ஒருமுறை அஞ்சி, அவன் வைத்திருக்கும் கோவன்களின் அந்த தங்க வாளினை திருட முனைந்து, அதனிடம் மின்சாரத் தாக்குதலை பெற்று, ஒருவாரம் வரையில் எழக்கூட முடியாமல் கிடந்தார்.
கோவன்கள், அந்த அற்புத வாளினை ஷேனாவிற்கு பரிசாக கொடுக்கும்போது வந்தவர்கள் தான், அதன்பின் இத்தனை ஆண்டுகளுக்கு பின்பும் அவர்கள் ஆதிலோகத்திற்கு வரவே இல்லை. அவனும் சரி தீராவும் சரி, கோவன்களை காண வெகுவாக ஏங்கினார்கள்.எத்தனைதான் மாயங்களை கற்றுக் கொண்டாலும், முதன் முதலில் கற்றுக்கொண்ட 'மாயவாயில் திறக்கும் மாயம்' மட்டுமே தீராவிற்கு மிக மிக பிடித்தமான ஒன்றாகியிருந்தது. அதன் காரணமாகவே அபிக்கு தெரியாமல் அடிக்கடி பூலோகம் சென்று அவள் வழக்கமாக சுற்றும் வேந்தன்யபுர வனத்தை, கால் போன போக்கில் சுற்றிவரக் கிளம்பிடுவாள். தீரா, பூமிக்கு செல்லும் போதெல்லாம் தன் புதிய சகோதரன்கள் இருந்த அந்த வெறுமையான குடிலுக்கு சென்று, சற்றுநேரம் அங்கேயே அமர்ந்துவிட்டு தான் வருவாள். காலப்போக்கில் குடிலுக்கு பல சேதாரங்கள் ஆகியிருந்தாலும், தன்னால் முடிந்தவரையில் அதனை சீர்படுத்தி வைத்திருந்தாள் அவள். அவ்விடத்தைக் காணாமல் ஆதிலோகத்திற்குத் திரும்பிட மாட்டாள். அவர்களுடன் கழித்த அந்த மூன்று திங்களின் நினைவுகள், தீராவின் மனதைவிட்டு என்றுமே நீங்காமல் இருந்தது.இதுவே சுழற்சியாக நடந்துக் கொண்டிருக்க... ரட்சக ராஜ்யத்தின் பெரும்பாலான மாய கலைஞர்கள், தீராவைத் தொடர்ந்தே பூலோகம் குறித்து நிறைய தகவல்களை அறிந்துக் கொண்டார்கள். அத்துடன் தங்களின் வாழ்வை ஆதிலோகத்தை சுற்றியே நிறுத்திடாமல், மாயவாயில்கள் மூலமாக பூலோகத்தின் எல்லா மூலை முடுக்குகளுக்கும் சென்று, பூமி குறித்தும் அங்கு நிகழும் கலாச்சாரம், மக்களின் வாழ்வியல், போர்கள், உடன்படிக்கைகள், அரசியல் என அனைத்தையும் அங்கு தங்கியே கற்றுக்கொள்ள தொடங்கியிருந்தார்கள். ஆனால், இந்த முறையானது வெகுகாலம் நீடிக்கவில்லை. காரணம், ஒருவர் பூமியிலேயே தங்கிடும் சமயம்தான் வேறு ஒன்றினையும் அறிந்துக்கொள்ள நேர்ந்தது.ஆதிலோகத்தில் வாழ்ந்திடும் காலங்களில் அவர்களின் இளமை காலம், அவர்களின் ஞானத்தை பொறுத்தே அதிகரிக்கும்.. ஆனால், பூமியில் அவர்கள் தங்கியிருக்கும் சமயம், பூலோக வாசிகளைப் போலவே அவர்களின் இளமையும் ஏறிக்கொண்டே தான் சென்றது. இதனாலேயே பெரும்பாலான ஆதிலோக வாசிகள் பூமியில் தங்குவதற்கு பதிலாக தினசரி பூலோக பயணத்திற்கு மாறிவிட்டார்கள். இப்படியே காலங்கள் செல்லச்செல்ல பூமியின் கலாசாரம், மொழி, அறிவியல் என இயற்கைக்கு பாதிப்பில்லாத எல்லாமே ஆதிலோகத்திற்கும் பரவத் தொடங்கிவிட்டது. அன்று, ஒரு பெரும் முடிவினைத் தெரிந்துக் கொள்வதற்காக தன் தங்கைகளின் முன் நின்றிருந்தான் அபிஜித். "அண்ணா..." முகம் தொங்கிய நிலையில் ஒரு சினுங்களுடன் அவ்விருவரும் அபியை அழைக்க, "என்ன மா?" தங்கைகளின் வீணான பிடிவாதத்தை கண்டு தன் சிரிப்பை அடக்கியபடி கேட்டான் அபி.
"வேணாம்'ண்ணா."
"ம்ம், ம்ம், ம்ம்.." மாயாவின் சொல்லுக்கு ஜால்ரா போல பலமாக தலையை அசைத்தபடி 'ம்ம்' கொட்டினாள் ரக்ஷா. அதே மென்சிரிப்புடன் நின்றிருந்தான் அபி.
"ஏன் மா?"
"பிடிக்கல'ண்ணா..."
"அதான், ஏன் பிடிக்கல?"
"அண்ணா... அதான் பிடிக்கலன்னு சொல்லுறேன்ல. அப்புறம் ஏன் பிடிக்கலன்னு கேட்டா... நான் என்ன சொல்லுவேன்? ஹும்" என்னதான் தேடியும் சொல்வதற்கு சரியான சாக்குபோக்கு கிடைக்காத கடுப்பில், மாயா, தன் காலை தரையில் ஓங்கி உதைத்துவிட்டு கட்டிலில் சென்று அமர்ந்துவிட, "அடுத்து நீ என்ன சாக்கு சொல்ல போற?" என்பதுபோல் அபியின் பார்வை ரக்ஷாவை நோக்கித் திரும்பியது.
அண்ணனின் பார்வையை புரிந்துக் கொண்டவள், "ஹான்ன்ன்... ஏன்'ண்ணா எல்லாரும் சேந்து எங்கள டார்ச்சர் பண்ணுறீங்க? இளவரசி பதவிலாம் ரொம்ப பொறுப்புள்ள பதவி. அத கவனிக்கணும்னா ரொம்ப பொறுப்ப்ப்ப்பா இருக்கணும்'ண்ணா. எங்களால அதெல்லாம் முடியாது போ." உடன்பிறப்பை போன்றே சிலிர்த்துக்கொண்டு அவளருகிலேயே சென்று அமர்ந்துவிட்டாள் ரக்ஷா.
ஆண்டுகள் ஆயிரங்களை கடந்திருந்தபோதிலும் சிறுபிள்ளைத்தனம் மாறாமல், அதனை மாற்றிடும் எண்ணமும் இல்லாமல் இருக்கும் தன் குட்டி தங்கைகளை கண்டால் அபிக்கு சிரிக்கத்தான் தோன்றியதே தவிர, அவர்களை தன் முடிவிற்கும் தன் குடும்பத்தாரின் முடிவிற்கும் ரட்சகராஜ்ய மக்கள், மகாராணி என யாரின் முடிவிற்கும் கட்டாயப்படுத்தி இழுக்க மனம் ஒப்பவில்லை.
கட்டிலில் அமர்ந்துகொண்டு கால்களை தொங்கவிட்டபடி இருந்த அவ்விருவரின் முகமும் உஷ்ணத்தில் தகித்துக் கொண்டிருக்க... இருவரின் சிரிப்பில்லா சிடுசிடு முகத்தையும் ஆளுக்கு ஒரு இலக்கின் மீது பதித்து வைத்திருந்தார்கள் இருவரும். தங்கைகளின் செய்கைகளை கண்டு லேசாகச் சிரித்துக்கொண்டே, தன் கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு அவ்விருவரின் முன் சென்று அமைதியாக நின்ற அபி, சிறிதுநேரம் எதுவும் செய்யாமல் அமைதியாகவே அவ்விடத்தில் நின்றுக் கொண்டிருந்தான். நிமிடங்கள் நகர நகர அவன் தங்கைகளின் முகபாவனைகள் லேசாக இளகத் தொடங்கி, கட்டிலில் அமர்ந்த நிலையிலேயே அண்ணனை அணைத்துக் கொண்டார்கள் தங்கைகள் இருவரும். பதிலுக்கு அவர்களை தன் இருகரம் கொண்டு அணைத்துக் கொண்ட அபி, மெல்லமாக அவர்களின் தலையை வருடியபடியே பேசத் தொடங்கினான்.
"நீங்க ரெண்டு பேருமே பயப்புடுறீங்க மா. அவ்வளவு தா விஷயமே. மத்தபடி நீங்க சொல்லுற மாதிரி, புடிக்கல... ராஜ்யத்தை சரியா வழிநடத்த தெரியாது... இன்னும் பயிற்சி எல்லாம் முடிக்கல... அது இதுன்னு நீங்க சொல்லுறது உங்க உண்மையான பிரச்சினையே கெடையாது
இதுல பயப்புடுறதுக்கு ஒண்ணுமே இல்ல மா. அத மொதல்ல புரிஞ்சுக்கோங்க. நீங்க ரெண்டு பேருமே சூப்பர் ஸ்டிராங்.. ரொம்ப ரொம்ப தைரியமானவங்க... எல்லா பிரச்சனையையும் ஈசியா ஃபேஸ் பண்ண தெரிஞ்சவங்க... அப்புறம் என்னமா பயம்?
அண்ணன் இருக்கேன் உங்க கூட. எப்பவுமே இருப்பேன். சரியா?
நல்லா யோசிச்சுட்டு... சீக்கிரமா வைரமாளிகைபோய் மகாராணி கிட்ட 'நாங்க இளவரசி பதவியை ஏத்துக்குறோம்'ன்னு சொல்லிட்டு வாங்க." தங்கைகளிடம் இருந்து மெல்லமாக பிரிந்தவன் அவர்களின் கன்னங்களை மென்மையாக தட்டிவிட்டு, அந்த அறையின் வலதுபுற சுவரில் இருந்த பக்கத்து அறைக்கான கதவு வழியாக தன்னறைக்கே சென்றுவிட்டான். அண்ணன் சென்றதும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்ட சகோதரிகள் இருவரும், மெத்தையில் அமர்ந்திருக்கும் நிலையிலேயே விட்டத்தைப் பார்த்தபடி பொத்தென பின்நோக்கி சரிந்து விட்டார்கள்.
✨✨✨
கால் விரல்களை மறைத்திருக்கும் செம்மாணிக்கம் பதித்த காலணிகளை அணிந்திருக்கும் பொன் பாதங்கள் இரண்டும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்காக மணல் பரப்பப்பட்டிருக்கும் திடலின் எல்லையிலேயே தனது நடையை நிறுத்திக்கொண்டது.
அந்த அழகிய காலணிகளை விட்டு கம்பீரமாக வெளியே எட்டிப்பார்த்த வலது பாதம், சலிக்கபட்ட மெல்லிய மணல் பரப்பை வட்டமாகத் தூவிக் களம் அமைத்திருந்தத் திடலை அழுத்தமாக தீண்டியவாறு உள்ளே நுழைந்த அதேநொடி, அவனது முழங்கால் மடங்கி அவனை தலைபணிய வைக்க... வீரியம்மிக்க வலதுகரம், களத்தை தொட்டு வணங்கியதை அடுத்து மற்றொரு பாதமும் திடலுக்குள் நுழைந்தது.
மின்னும் பொன்வாளினை ஏந்தியிருக்கும் வலிய கரம்! திடகாத்திரமான இளம் கட்டுடல்! நிமிர்ந்த நடையுடன் திடலுக்கு மையம் வரையில் நடந்து வந்தவனை மெல்லிய காற்று மோதிச்செல்ல... கழுத்து வரையில் நீண்டிருந்த அவன் கேசம், மெல்ல அசைந்தாடிட.. கன்னக்குழி விழும் பட்டுமுகத்தில் எப்போதும் மறையாத மெல்லிய புன்னகை கீற்றும் ஈர்க்கும் பார்வையும் என வலுவேரிய தன் கம்பீர உடலை நிமிர்த்தி நின்றான் ஷேனா."இன்று, நீயா இல்லை நானா என பார்த்துவிடலாம். ஹ்ம்ம்.. தயாரா?" குறும்புக் கலந்தக் கம்பீரக் குரலால், அங்கிருந்த வெற்றிடத்தை நோக்கி அவன் சவால் விடுக்க.. அவனது சவாலை அந்த வெற்றிடம் ஏற்றுக்கொண்டது போலும், விழிகள் இரண்டினையும் மென்மையாக மூடிக்கொண்டுத் தன் வாளினை இறுக்கமாக பற்றியபடி, ஒரு குட்டி யுத்தத்திற்கு தயாராகி நின்றான் அவன்.
விழிகள் மூடியிருக்க... கவனம் சூழலோடு பொருந்தியிருக்க... சில கண இடைவெளியில் சற்று வலுவேறிய தென்றல் அவ்வழியே கடந்துச் சென்றது. தென்றலின் தயவால் மரக்கிளைகள் அசைந்தாட.. இலைகள் சலசலக்க... சுற்றியிருக்கும் மரங்களில் இருக்கும் சருகுகள் எல்லாம் நிலம் நோக்கிப் பயணித்த கணம்-தப்பாமல், காற்றை கிழித்துத் தன் வாள்கொண்டு சீறினான் ஷேனா. அவனுக்கு போட்டியாக தென்றலும் சற்று வலுவேறிட... ஷேனாவின் வேகமும் இரட்டிப்பானது.
ஒருசில நொடிகள் கடந்த நிலையில், 'இதற்குமேல் என்னால் முடியாதடா சாமி' என தென்றல்காற்றுத் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு ஓய்ந்த அதேநோடியில், ஆழப் பெருமூச்சுடன் தன் வாளினை கீழிறக்கி இமைபிரித்த ஷேனா, நிலத்தை நோக்கியதுமே அவன் முதத்தில் அப்படியொரு வெற்றிக் களிப்பு. "ஹஹா!யாரிடம் உங்கள் வேகத்தைக் காட்டுகிறீர்கள்? இனி மறந்தும் என்னிடம் மோதத் துணியாதீகள். ஜாக்கிரதை." நக்கலுடன், நிலத்தை நோக்கி இறுதி எச்சரிக்கை விடுத்தவன், பார்வையை நிலத்தின்மீது வைத்தவாரே வாளினை மேலே உயர்த்தி சுழற்றத் தொடங்க.. அவன் பார்வை பதிந்திருந்த நிலமெங்கிலும் சற்றுமுன் விழுந்த சருகுகள். ஆனால், ஒன்றுகூட முழுதாக இல்லை. அனைத்தும் ஷேனாவின் வாளுக்கு இரையாகி துண்டுத்துண்டாக நொறுங்கிக் கிடந்தது. எல்லாம், நேற்று தன் பேச்சை கேட்காமல், பயிற்சி மேற்கொள்ளும் சமயத்தில் தன் மைதானத்தை குப்பை ஆக்கியதற்கான தண்டனைதான்.அவன் தன் வாளினை மேலே உயர்த்தி முழு வேகத்தில் ஒரு சுழற்றுச் சுழற்றித் தன்னை சுற்றிலும் காற்றில் வீசிய நொடி, அவன் வேகத்தின் காரணமாக நிலத்தில் கிடந்த சருகுகள் அனைத்தும் மணல் பரப்பை விட்டு வெளியே சென்று விழுந்தது. அவைகளை கண்டு வெற்றிப் புன்னகை சிந்தியபடி தன் தினசரி பயிற்சியை தொடங்கினான் ஷேனா.
✨✨✨
நொந்து, வெந்து, இப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பள்ளியிலிருந்து தப்பித்து அப்போதே வீட்டினுள் நுழைந்த தீரா, தன் புத்தக பையை சோஃபாவின் ஒரு பக்கமாக வீசிவிட்டு, தான் ஒரு பக்கமாக சரிந்த நொடியில் அடுப்பங்கரையில் இருந்து அவள் சத்யா அத்தையின் குரல் அமோகமாக அவளை ஈர்த்தது.
"அடியேய் மாயா! அர டப்பா சக்கரைய காணோம் டி. அக்காவும் தங்கச்சியுமா சேந்து மொத்தமா தின்னுட்டிங்களா?" சற்றுமுன் சமையலறையிலிருந்து வெளியேறி ஓடிய தன் தவ புதல்விகள் இருவரையும் சத்யபாமா கீழிருந்தபடியே கத்தி அழைக்க, "ம்மா, இல்ல. நாங்க இல்ல... அந்தா... அந்த தீரா தான்." ஏதுமறியா அப்பாவிகளாய் தங்களை பாவித்துக்கொண்டு தன் சகோதரியுடன் மாடியிலிருந்து தவ்வித்தவ்வி இறங்கிவந்தாள் ரக்ஷா.
"உம்ம்ம்! அத்த. இல்ல... நா இல்ல." படக்கென, சோஃபாவிலிருந்து தலையை மட்டும் உயர்த்திய தீரா, சமையலறை வாயிலை நோக்க, "அடிங்... அவபாட்டுக்கு குச்சிமிட்டாய சப்பிகிட்டு இருக்கா. நீங்க ரெண்டுபேரும் தான் இப்போ கிச்சன்ல இருந்து ஓடுனது." சத்யபாமாவின் குரல், மகள்களை மிரட்டிக் கொண்டிருக்கும் போதே தீரா, தன் இரு கரங்களையும் திருப்பித்திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள். தன் அத்தை குறிப்பிட்ட குச்சிமிட்டாய் எங்கே என.
தான் சாப்பிடாத குச்சிமிட்டாயை தேடிக் கொண்டிருப்பவளை கண்டு வாய்மூடி சிரித்தபடியே தரைதளத்தை அடைந்த மாயா, "அம்மா... நல்ல காரியத்துக்கு போகும்போது ஸ்வீட் சாப்டனும்ன்னு நீதானே சொன்ன. அதா சாப்புட்டோம்." குற்றத்தை ஒப்புக்கொண்டு அன்னையிடம் சரணடைந்தவளை தொடர்ந்து, "மம்மி, நாங்க பிரின்சஸ். சும்மா எங்களயே திட்டாத. எவ்ளோ வேல கெடக்கு எங்களுக்கு! தீராவ கொஞ்சம் திட்டு. அவ வெட்டியா பூமி ஸ்கூலுக்கு தானே போய்ட்டு வாரா." சொல்லிக்கொண்டே
வாயிலை நோக்கி நடைபோட்டாள் ரக்ஷா.
"என்னது? பதவியமட்டும் ஏத்துக்க மாட்டாளுங்கலாம். ஆனா பேரு மட்டும் இளவரசி. வாயி.. வாயி... காது வரைக்கும் வாயி. ரெண்டு பேத்துக்கும் சக்கர திங்குற வாயிலையே போடணும். ஏய்! அடியே அருந்த வாலுகளா... எங்கடி ஓடுறீங்க?" இருவரின் தலையிலும் ஒரு அடி போடுவதற்காக வெளியே வந்தவள், வாயிலை நோக்கி ஓடிடும் இருவரையும் நோக்கிக் கத்தினார்."ஹிஹி.. எதிரிகள வேட்டையாட மம்மி. டாட்டா." கோரசாக கூவிவிட்டு, அங்கு ஒரு மேஜையில், மினி ரோபோ பொம்மையை அக்குவேர் ஆணிவேராக பிரித்துப்போட்டு உருட்டிக் கொண்டிருக்கும் அண்ணனுக்கு ஒரு புன்னகையை வழங்கிவிட்டு வீட்டிலிருந்து ஓடிவிட்டார்கள் அவ்விருவரும். தங்கைகளின் சொல்லுக்கான காரணம் புரிந்த அபி, அவர்கள் சென்றத் திசையை நோக்கிப் புன்னகைத்துவிட்டுத் தன் வேலையில் கவனம் பதித்த நேரம், வாயிலை விசித்திரமாக நோக்கியபடியே மகனை நோக்கி வந்த சத்யபாமா, "டேய், அபி! என்னடா சொல்லிட்டு போறாளுங்க உன் தங்கச்சிங்க?" மகள்களின் சொல்லால் குழம்பிப்போய் அபியை கேள்வியாக பார்த்திட, "ஒன்னுமில்ல மா. எல்லாம் நன்மைக்கே! வீட்டுக்கு வந்ததும் அவங்களே சொல்லுவாங்க. வெய்ட், வெய்ட்." தன் பங்கிற்கு அவளை மேலும் குழப்பிவிட்டான் அபி.
"ம்க்கும்.. நீ அவளுங்களுக்கு மேல! போடா." சலித்துக்கொண்டு மீண்டும் கிச்சனுக்குள் நுழைய, "ம்மா... ஸ்வீட் செய், ம்மா. குட் நியூஸ் ஆன் தி வே." நக்கலாக அன்னையை நோக்கிக் கத்தினான் அபி.
"அபி, மாமா. அத்த எனக்கு லாலிபாப் நியாபகப் படுத்தீட்டாங்க. இப்போ நான் பூமிக்கு போய் இருவது லாலிபாப் சாப்ட்டா தான் என்னால இன்னைக்கு வேற வேல பாக்க முடியும். நா கெளம்புறேன் போங்க." இவ்வளவுநேரம் நடந்தக் கூத்தை கண்டும் காணாமல் இருந்த தீரா, தன் மாயவாயிலை திறந்துக்கொண்டு நொடியில் எங்கோ ஓடிவிட்டாள்.
✨✨✨
பலமணி நேரங்களாக உற்சாகம் மாறாமல் தன் பயிற்சியில் மூழ்கியிருந்த ஷேனா, வேகப் பெருமூச்சுகளுடன் கால்நீட்டித் தரையில் அமர்ந்தான். சில நிமிடங்களுக்கு பின் தூசி தட்டிக்கொண்டு எழுந்து நின்றவன், தன் இடையிலிருந்து ஒரு சுருள் காகிதத்தை உருவி எடுத்து அதனை விரித்து, சில நொடிகள் வரையில் பார்வையிட்டப் பின், "ஹம்ம். மூலிகை மலரும் நேரம் தொடங்கிவிட்டதே! இப்போதே புறப்பட்டால்தான் சரியாக இருக்கும்." தனக்குத்தானே கூறிக்கொண்டவன் தனது பயிற்சி உபகரணங்களை எல்லாம் வழக்கமாக மறைத்துவைக்கும் ஒரு பெரிய மர பொந்தினுள் பத்திரப்படுத்திவிட்டு, தனக்கு பிரியமான வாளை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில், கிழக்குத் திசையில் துள்ளியோடத் தொடங்கினான்.
இந்த பல்லாயிரம் ஆண்டுகளில் இருளரசனுக்காக தான் மேற்கொள்ளும் மூலிகை வேட்டையால், எந்தெந்த மூலிகைகள் எங்கெங்குக் கிடைக்கும் என்பதை விரல் நுனியில் அறிந்து வைத்திருந்தான் ஷேனா. குறிப்பாக, மையாழி மரத்திற்கு எப்படி ஆதிலோகத்தின் மூலை முடுக்கெல்லாம் கணக்கச்சிதமாக தெரியுமோ அப்படியே, நிழல்தேசம் மற்றும் வனதேசத்தின் மூலை முடுக்கெல்லாம் ஷேனாவிற்கு அத்துபடி.இப்போது, தான் தேடவேண்டிய மூலிகைகள் இருக்கும் இடத்தை அடைந்துவிட்டவன், பல வண்ண செடிகளுக்கு மத்தியில் எங்கேனும் பச்சை வண்ண செடிகள் எட்டிப் பார்க்கிறதா என நிலத்தை அளந்தவாரே நடந்துக் கொண்டிருக்க... எங்கிருந்துதான் அந்த நினைவு வந்ததோ? தான் முதன்முதலாக மூலிகை தேடுவதற்கு வனதேசம் வந்த சமயம் நிகழ்ந்தவை அனைத்தும் காட்சிப்படமாக அவன் மனக்கண்ணில் ஓடத் தொடங்கியது. அன்றைய தினத்தில் தன் குழந்தைதனத்தையும் தன் குருக்களின் அனுகுமுறையையும் நினைத்துப் பார்த்ததில் இயல்பாகவே அவன் இதழோரம் குறும்புன்னகை ஒன்று பூத்திட.. அதேநேரத்தில் பச்சை வண்ண மூலிகை பார்வையில் தட்டுப்பட்டதும், கீழே குனிந்து ஒரு காலை ஊன்றி
அமர்ந்தான்.
கைகள் மட்டுமே மூலிகைகளை பறித்துக் கொண்டிருந்தது. எண்ணங்கள் அனைத்தும் கடந்த காலத்தில் பயணம் மேற்கொண்டிருந்தது. முதல்முறையாக மூலிகை பறிக்கச்சென்று, கோவன்களின் தயவால் மூலிகைகளே தன்னை தேடிவந்த அனுபவம் நினைவடுக்குகளில் முதன்மையாக மேலெழும்பியது. "இப்போதும் நீங்கள் மூவரும் இங்கு வந்து எனக்கு உதவினால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நீங்கள் ஏன் இத்தனை ஆண்டுகளில் ஒருமுறையேனும் என்னைப் பார்க்க வரவில்லை? மீண்டும் சந்திக்கநேர்ந்தால் நான் நிச்சயம் உங்களிடம் பேசவே மாட்டேன். மூவரின்மீதும் நான் கோபமாக இருக்கிறேன்." தன் குருக்களை வஞ்சித்தவாரே தேவையான மூலிகைகளை பறித்து முடித்தவன், முகத்தை கோபமாக வைத்துகொண்டு, வந்த வழியே நடக்கத் தொடங்கினான்.இதில் கொடுமை என்னவெனில், தன் குருக்கள் மூவரும் ஆதிலோகத்தை சேர்ந்தவர்களே கிடையாது, அவர்கள் பூமியை சேர்ந்தவர்கள் என்னும் விஷயமே அறியாமல்தான் இன்றளவிலும் இருக்கிறான் ஷேனா. சரியாகக் கூறவேண்டுமானால், முதன்முறை கோவன்களை சந்தித்த சமயம், தான் தெரியாத்தனமாக ஒரு ஒளியினுள் நுழைந்து வனதேசத்தின் வேறு இடத்திற்கு வந்து விட்டதாகவே நினைத்திருந்தான். அதற்கு ஏற்றது போல ஷிவேதனாவும் அவனிடம் 'அவர்கள், குள்ள மாய இனத்தை சார்ந்தவர்களாக இருக்கலாம்' எனத் தன் யூகத்தைக் கூறியிருக்க... இன்றுவரையிலும் அதையேதான் நம்பிக்கொண்டிருக்கிறான் அவன்.
இப்போது மூலிகைகளை பறித்துக்கொண்டு, குருக்கள் மீது திடீரென எழுந்த கோபத்துடன் முகத்தை உற்றென வைத்தபடியே நடந்துக் கொண்டிருந்த ஷேனாவின் கவனைத்தை சட்டெனச் சுண்டியிழுத்தது, தூரத்தில் தெரிந்த அந்த நீல நிற ஒளி. "இது?! எங்கோ பார்த்திருக்கிறேனே!" நெற்றிச்சுருங்க அந்த மாயவாயிலை வித்தியாசமாக நோக்கியபடியே அவன் முன்னோக்கி நடந்துக் கொண்டிருக்க.. பளிச்சென மின்னல் வெட்டியது போல் நினைவிற்கு வந்தது அவனது முதல்முறை பூமி பயணம்.
"ஹான்! இது அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லும் வழி! இப்போது நினைவு வந்துவிட்டது. ஆனால்? நான் கோபமாக இருக்கிறேன். ஹும்." கோபமாக கண்களை மூடியவன், முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக்கொள்ள.. அடுத்தநொடியே ஒற்றை விழி திறந்து அந்த மாயவாயிலை நோக்கினான்.
"அம்ம்ம்... நான் கோபமாக இருப்பினும் அவர்களை சந்திக்கலாம் தானே? ஹாஹ்! ஆம். அப்போதுதானே என் கோபம் அவர்களுக்கு தெரியும்." அந்த வாயிலின் வழியாக, குருக்களை காணச் செல்லலாமென முடிவெடுத்தவன், தன் கையிலிருக்கும் மூலிகைகளை பார்க்க, "நேரம் இருக்கிறது? .. .. இருக்கிறது. செல்லலாம்." தோளை குலுக்கிக்கொண்டு ஆர்வமாக அந்த நீலநிற மாய வாயிலினுள் ஓடினான்.
✨✨✨
வைரமாளிகையில் பிரம்மாண்ட ஒளிபந்தாக வீற்றிருக்கும் மகாராணியின் முன்னிலையில், ஆளுக்கொரு திசையில் முகத்தை தூக்கிவைத்த நிலையில் நின்றிருந்தார்கள் மாயா மற்றும் ரக்ஷா.
"ஹம்.. இறுதியாக உங்களுக்கு பொறுப்பு வந்தது போலுமே? இளவரசிகளே!" மகாராணியின் அக்குரல், அடைமொழியை மட்டும் அழுத்திக்கூற... அதனாலேயே இளவரசிகளின் முகம் சுறுசுறுவென சுருங்கியது."பொறுப்பென்பது எந்நாளிலும் எம்முடனே இருக்கும் ஒன்றுதான். நாங்கள் பதவியினை ஏற்க மறுத்தக் காரணத்தை நீங்களே அறிவீர்கள் என்பதை நாங்களும் நன்கறிவோம்" மாயாவின் பதில்குரல், 'வெட்டு ஒன்று துண்டு ரெண்டென' அவ்விடமெங்கிலும் எதிரொலித்தது. அவள் முகமும், கைகளை கட்டி நிற்கும் அவளின் தோரணையும், மகராணியின் முன் பணியவும் செய்யாமல் நேருக்குநேர் பார்க்கவும் செய்யாமல் எங்கோ திரும்பியிருக்கும் அவள் பார்வையும் 'யாருக்கும் அடங்காதவள் இந்த மாயா' என்பதை சொல்லாமல் எடுத்துச்சொல்லியது. அவளை போன்றேதான் நின்றிருந்தாள் ரக்ஷா. ஆனால் அவள் பார்வை, மகாராணியை நேருக்கு நேராக எதிர்கொண்டிருந்தது.
"எனினும், நீங்கள் மறுக்கும் காரணம் இன்னுமும் எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே தானே உள்ளது? இப்போது நீங்கள் இருவரும் பதவியினை ஏற்றுக்கொள்ளக் காரணம்?"
"அதையும் நீங்களே அறிவீர்கள்."
"எம் அண்ணனுக்காக.." இருவரின் பதில்களும் நொடி தப்பாமல் ஒலித்தது. ஆனால், ரக்ஷாவின் குரல், சற்றுப் பணிவாக.. மாயாவின் குரல், சற்றுத் திமிராக.
"ஹாஹாஹா. நிச்சயம் நானிதை அறிவேன், இளவரசிகளே! ஆயின், என்னை மன்னியுங்கள் இருவரும். உங்கள் பதவியேற்பு விழாவிற்கு உங்களது ஆசையை நிறைவேற்றும் நிலையிலில்லை நான். ஆனால், நம்பிக்கை கொள்ளுங்கள். விரைவில் உங்கள் ஆசையை நிறைவேற்றிடுகிறேன். அத்துடன், நாளைய தினமே உங்களின் பதவியேற்பு விழாவினை அறிவிக்கின்றேன்." மகாராணியின் குரல் ஓய்ந்ததும் இருவரும் வைரமாளிகையை விட்டு வெளியேறி நடக்க... எப்போதும் வெண்ணிற ஒளிக்கீற்றினை வெளியிடும் வைரமாளிகையின் வைரம், நொடிப் பொழுதில் நிறம் மாறியது.
புதிய இளவரசிகளாக மாறவிறுக்கும் இருவரும் வைரமாளிகையின் பளிங்குப் படிகளின் வழியே நடந்துவர... அவ்விருவரின் ஆத்மசக்திகளின் நிறங்களைக்கொண்டு, சிவப்பும் நீலமுமாக ஜொலிக்கத் தொடங்கியது உச்சத்திலிருக்கும் வைரம். ஆனால் சற்றே வித்தியாசமாக, அதில் சிவப்பு நிறம்தான் அதிகளவில் தெரிந்தது..
திடீரெனத் தங்களை சுற்றிலும் இருந்த வெண்ணிற ஒளியானது மறைந்து, சிவப்பு-நீல ஒளி சூழ்ந்துக்கொண்டதை கண்டு ரட்சகராஜ்ய மக்கள்கூட்டம் மொத்தமும் தத்தம் இல்லங்களைவிட்டு வெளியேறிவந்து ஆர்வமாக வைரமாளிகையை நோக்கிட.. அனைவரின் யூகத்தின்படியே அவ்வொளி, வைரமாளிகையின் உச்சத்திலிருந்துதான் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் பொருள், இளவரசிகளின் பதவியேர்ப்பு விழா அடுத்தநாளே நடக்கஉள்ளது என்பதே. ஓரிரு நொடிகள் தான், மக்கள் ஒவ்வொருவரின் உற்சாகக் கூக்குரலும் ராஜ்யத்தையே நிறப்பிவிட்டது, நிமிடப் பொழுதில்.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro