Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

46. ஷேனாவின் மனமாற்றம்.

ஆதிலோக விடியல் கதிர்கள் வனதேசமெங்கிலும் நிரம்பிட.. நீண்ட உறக்கத்திலிருந்து எழுந்திருந்த ஷேனா, தன் குருவையே கண்கொட்டாமல் நோக்கிக் கொண்டிருந்தான். நேற்று, தன்னை மரத்தில் கட்டி வைத்திருந்தது மட்டும்தான் அவன் நினைவில் இருந்தது. வேறு எதுவுமே அவன் நினைவிற்கு வரவில்லை. இங்குவந்து எப்படி உறங்கினான் என்பதுக்கூட நினைவில் இல்லை. 

சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் கொட்டக்கொட்ட விழித்தபடி ஓரிரு நிமிடங்களாக யுவனையே நோக்கிக் கொண்டிருந்தவன், குருவிடம் எந்த அசைவும் இல்லாததை உறுதி செய்தப்பின் சத்தமிடாமல் மெல்லமாக எழுந்துநிற்க.. அவனைப் போலவே மெல்லமாகத் தலையை நிமிர்த்தி ஷேனாவை நோக்கினான் யுகி. 

அவன், இவனைத் தீவிரமாக நோக்க.. இவன், அவனைப் பீதியுடன் நோக்க... ஒரு நிமிடம் வரையில் தொடர்ந்த இந்தப் பார்வை யுத்தத்தைத் தொடர்ந்த நிலையிலேயே பின்னோக்கி நகர்ந்த ஷேனா, மையாழி மரத்திலிருக்கும் மலர்க்கொடிகளை உறுவித் தன் குருவின் கரங்களை சேர்த்துக் கட்டத் தொடங்கினான். அவன் செய்திடும் ஒவ்வொரு செயலையும் குறுகுறுவென்றே யுகி நோக்கிக்கொண்டிருக்க.. அவனைத் திருட்டுப் பார்வையில் நோக்கிய வண்ணமேத் தன் குருவின் கரத்தினை எக்கச்சக்க முடிச்சுகளுடன் கட்டிமுடித்த ஷேனா, விட்டால் போதுமெனத் திரும்பியும் பாரமல் ஓடிவிட்டான். அவன் அங்கிருந்து ஓடி மறைந்த அடுத்த நொடியில் கண்களைத் திறந்த யுவன், ஷேனா ஓடிய திசையையும் தன் கரத்தில் இருக்கும் ஏடாகூடமான முடிச்சுகளையும் நோக்கிப் புன்னகைக்க.. அவன் எதிர்பார்த்தபடியே ஒரு மறைவிலிருந்து, அகி மற்றும் விகியுடன் அவ்விடத்தை அடைந்தார்கள் சக்தி மற்றும் விஷ்ணு.

"என்னடா கோலம் இது!" யுவனின் கைக்கட்டினைச் சுட்டிக்காட்டிய விஷ்ணு நக்கலாக வினவிட, "எல்லாம் உன் சிஷ்யனின் செயல்தான்." முகத்தில் மலர்ந்திருந்தப் புன்னகை மாறாமல், தன் கரத்தில் கட்டியிருந்தக் கயிற்றை ஒரே இழுப்பில் அறுத்துவிட்டான் யுவன். "இப்படிக் கயிறுகட்டி விளையாடுவதற்குத்தான் எம் இருவரையும் இங்கு வரவேண்டமென அத்துனைச் சினத்துடன் கிளம்பியதோ?" சக்தி வினவியதற்கு, புன்னகையிலேயே யுவன் மழுப்புவதைக் கண்டு, ஏதோ தீவிரமாக நடந்திருப்பதை உணர்ந்துக் கொண்டார்கள் சக்தி மற்றும் விஷ்ணு.

"சரி, அமருங்கள் இருவரும். இன்று நம் சிஷ்யனுக்கு முக்கியமானப் பயிற்சி இருக்கிறதல்லவா" எதுவுமே நடவாததைப்போல் தன் சகோதரன்கள் இருவரையும் அமரக் கூற, "அவன் மீண்டும் வருவானா?" சந்தேகமாகக் கேட்டுக்கொண்டே அமர்ந்தார்கள் இருவரும்.

"அது சந்தேகம் தான். ஆனால்... ... அவன் வந்துவிட்டால் நான் என் திட்டத்தில் வென்றுவிட்டேன். இனி அவனதுக் குறும்புகளைக் குறைத்துக்கொள்வான்." தீவிர யோசனையுடன் யுவன் கூறியதற்கு, "வரவில்லை எனில்?", சக்தி ஒரு கேள்வியை முன்வைக்க.. பதிலேதும் கூறவில்லை யுவன். மெல்லியப் புன்னகை மட்டுமே அவனிடத்தில். 

✨✨✨


"அம்மா. அம்மா, என்னைப் பாருங்கள் அம்மா. அம்மா, பாருங்கள்." முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருக்கும் அன்னையின் முகத்தைக் காண ஷேனா என்னதான் முயன்றாலும் அது முடியாமல் போய்விட, மீண்டும் அழும் நிலைக்குச் சென்றுவிட்டான் அவன்.

"அம்மா, என்னைப் பாருங்கள்", உள் சென்றக் குரலில் அவன் அழைக்க, "மாட்டேன். நான் உன்மீது கோபமாக இருக்கிறேன், ஷேனா. உன் குருவிடம் எப்படியெல்லாம் பேசுகிறாய் நீ! மூத்தோருக்கு மரியாதையளிக்க வேண்டுமென உனக்குச் சொல்லியிருந்தேனல்லவா? இருந்தும் நீ உன் குருவுக்கு மரியாதை கொடுக்கவே இல்லை." மகனின் கண்ணீரைக் கண்டுக் கரைந்திடாமல், முகத்தைக் கோபமாகவே வைத்திருந்தார் ஷிவேதனா.

யுவனின் யூகத்தின்படியே அங்கு இருள்மாளிகையில் தன் அன்னையின்முன் அழுதுக் கொண்டிருந்தான் ஷேனா. அவன் கணிப்பின்படி, ஷேனா செய்யும் குறும்புகளையெல்லாம் அன்னையிடம் சொல்லியிருக்கமாட்டான். அதனால், முதலில் அவன் சேட்டைகளை அவன் அன்னைக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதற்காக யுவன் செய்ததுதான் இரவு முழுவதும் ஷேனாவை அனுப்பாமல் தன்னுடனே வைத்திருந்தது. அன்னையிடம் சென்றதும் அவ கேட்கும் கேள்விகளுக்கு இவன் பதில் கூறித்தான் ஆகவேண்டும். மேலும், அவன் குணத்தை முழுவதுமாகக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரேநபர் அவனது அன்னைதான். அன்னையின் சொல்லுக்கு மறுபேச்சின்றி தலைபணிவான் இவன். எனவே, தன்னுடைய தண்டனையுடன் சேர்த்து அவன் அன்னையின் கண்டிப்பையும் எதிர்பார்த்தான். அது சரியாகவே நடந்துவிட்டது.

"அவர் என்னைக் கட்டி வைத்திருந்தார் அம்மா." மெல்லியக் குரலில் அழுகையுடன் ஷேனா கூற, "இருக்கட்டுமே.. ஆனால், எதற்காக? எந்த குருவும் காரணமின்றி தண்டிக்க மாட்டார்கள் என்பதை நான் அறிவேன், ஷேனா. நீ என்ன தவறு செய்தாய்? தவறு செய்ததால் தானே உனது குரு உன்னைத் தண்டித்திருக்கிறார்." மகனின் விழியை நேருக்கு நேராக நோக்கியபடி கேட்க... அவன், பதில் கொடுப்பதற்கு பதிலாக அரண்டுப்போய் விசும்பிக் கொண்டிருப்பது பொறுக்காமல் மறுநொடியே கைநீட்டி, மகனை அனைத்துக்கொண்டார் ஷிவேதனா. அன்னையின் தோளில் தஞ்சமடைந்த ஷேனா, இவ்வளவு நேரமும் அடக்கிவைத்திருந்த அழுகையை மொத்தமாக கொட்டியதுடன் சேர்த்து நேற்றைய பொழுது முழுவதிலும், இதுவரையில் தான் செய்ததில் எது எதெல்லாம் தவறென அவனது குரு கூறியிருந்தாரோ, அவை அத்தனையையும் அன்னையிடம் கூறிமுடித்தான். மகன் கூறிய அனைத்தையும் கேட்டு வாயில் கை வைத்துவிட்டார் ஷிவேதனா . 

கலை கற்பித்த குருவையே பல முறை தாக்கியிருக்கிறான்! எதையெல்லாம் தன் மகன் செய்யக் கூடாதென நினைத்திருந்தாரோ அதையே சாதாரணமாக விளையாட்டுப் போக்கில் செய்திருக்கிறான் அவன். 'விளையாட்டாகவே இப்படியெல்லாம் செய்கிறானெனில், வளர்ந்ததும் பிறரைக் காயப்படுத்தச் சற்றும் தயங்கிடமாட்டான். நிழல்தேசத்தின் எண்ணங்கள் அவனைக் கட்டுக்குள் இழுத்துக்கொள்ளும். இதற்காகத் தானே... இந்தச் செயல்களில் என் மகன் ஈடுபடக்கூடாது என்பதற்காகத் தானே அவனுள் இருக்கும் மாயக் கலைகளைக்கூட இன்னுமும் கற்பிக்காமல் உள்ளேன்.' மனவேதனையுடன் ஷிவேதனா தனக்குள்ளேயே புலம்பிக்கொள்ள, "அம்மா! அம்மா, என்னைப் பாருங்கள். உங்களுக்கும் என் மீது கோபமா?", கண்ணீருடன் தன் கன்னம் தொட்ட மகனின் ஸ்பரிசத்தால் நிஜத்திற்கு வந்தார் ஷிவேதனா. 

"நீங்களும் என்னைக் கட்டி வைத்திடுங்கள் அம்மா. ஆனால், என்னைப் பார்க்காமல் திரும்பி இருக்காதீர்கள்." 

"ஷேனா.. நீ செய்த அனைத்துமே தவறு. இனியும் நீ இதையேதான் செய்வாயெனில்.. .. ... எனில்... இனி நீ என்னுடன் பேசாதே." வார்த்தைகள் சொல்வதற்கு என்னவோ எளிதாகத்தான் இருந்தது. ஆனால், அதை கூறிய மாத்திரத்தில் ஷிவேதனாவினுள் ஒரு வலி.

"அம்மா, இல்லை. இனி நான் செய்ய மாட்டேன். அதையெல்லாம் நான் செய்ய மாட்டேன். நீங்கள் குருவின் பேச்சைக் கேட்கச் சொல்லிவிட்டார்கள் தானே. தவறு செய்யக்கூடாது என குரு சொல்லிவிட்டார். நான் இனி தவறு செய்யமாட்டேன், அம்மா." அன்னையை அனைத்தபடியே ஷேனா அழுகையில் கரைய.. அவன் கூறியச சொல்லால், தன் மகன் தவாறான பாதையில் செல்லமாட்டான் என முழுமையாக நம்பி ஆழப் பெருமூச்சுடன் மகனை அனைத்திருந்தார் ஷிவேதனா.

'இருள் என்றும் என் மகனை நெருங்கிடாது. அவன் என்றும் இருளின் மாயைக்குள் விழுந்திடமாட்டான். நான் அனுமதிக்கவும் மாட்டேன்' மனதினுள்ளேயேத் தீர்மானமாகக் கூறிக்கொண்டார் ஷிவேதனா.

✨✨✨


 ஷேனாவும் யுவனும் நேற்றிருந்த அதே ஓடைக் கரையோரத்தில் அமர்ந்து, அவனுக்குக் கொடுத்தப் பயிற்சியைக் குறித்துக் கோவன்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்த சமயம், திடீரென மூவரின் பேச்சும் தடைபட்டது. ஓடையினுள் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த பூனைகள் மூன்றும் தங்களின் தலைவன்களின் குரல்கள் கேட்காமல் போனதால் சட்டென அவர்களை நோக்கித் தலையைத் திருப்பிட.. அவர்களோ, தங்களின் பார்வையை எங்கும் திரும்பிடாமல், கவனத்தை மட்டும் எங்கோ பதித்திருந்தார்கள்.

"ஷேனா, ஏன் மரத்தின் பின்னேயே நிற்கின்றாய். இங்கு வா." சட்டென ஒரு மரத்தை நோக்கிய சக்தி, மென்மையாகக் குரல் கொடுக்க... தயங்கித்தயங்கி தலையை மட்டும் வெளியே நீட்டினான் அவன். "என்ன கண்ணா? ஏன் அங்கேயே நிற்கின்றாய்? என்னிடம் வா." இம்முறைத் தன் சிஷ்யனைக் கைநீட்டி அழைக்க.. யுவனை ஓரக்கண்ணால் நோக்கியபடி அன்னநடை போட்டு சக்தியிடம் வந்து சேர்ந்தான் ஷேனா. 

இவ்வளவு நேரமும் புன்னகைத்துக் கொண்டிருந்த யுவனின் பார்வை, இப்போது, துளைக்கும் பார்வையாகி ஷேனாவை அடைய.. மீண்டும் தன்னைக் கட்டி வைத்து விடுவாரோ என பயந்தவன், சக்தியுடன் ஒன்றிபோய் நின்றான். அவன் பயத்தை உணர்ந்த சக்தி, ஷேனாவைத் தன் தொளோடு அனைத்துக் கொண்டதும், "மன்னித்து விடுங்கள்." அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் கூறிட, சக்தியின் பார்வையோ, தீவிரமாக ஷேனாவை நோக்கிக் கொண்டிருக்கும் யுவனின் திசையில் திரும்பியது. ஷேனாவும் யுவனையேதான் மிரண்டுப்போய் நோக்கிக் கொண்டிருந்தான்.

 தன் சகோதரன் எப்படியும் இன்றைக்குள் இந்த விளையாட்டிற்கு முற்றுபுள்ளி வைக்க மாட்டானென முடிவெடுத்துவிட்ட சக்தி, "ம்ச், கண்ணா.. அவனை விடு. இன்று நம் பயிற்சிக்கு அவனைச் சேர்த்துக்கொள்ள வேண்டாம். நான் ஒருநாள் ஓய்வெடுத்துக் கொண்டதால் இவன் உன்னை எவ்வளவு பயம்புருத்தியிருக்கிறான்! இனி, அவன் வேண்டாம். நாம் இருவரும் மட்டும் பயிற்சி எடுக்கலாம். சரியா? வா, நாம் இங்கிருந்து தூரமாகச் சென்றிடலாம்." ஷேனாவைத் தன் கையில் தூக்கிக்கொண்டு அந்த ஓடையின் கரையோரமாகவே எங்கோ ஒரு பக்கமாக நடக்கத் தொடங்கினான். அவர்கள் இருவரையும் கண்ட யுவனும் விஷ்ணுவும் ஒருவரை ஒருவர் நோக்கிச் சிரித்து கொண்டார்கள்.

வெகுதூரம் வந்தப்பின்பும் ஷேனாவின் முகம் தொங்கிய நிலையிலேயே இருக்க, "என்னானது கண்ணா! ஏன் இப்படி இருக்கிறாய் நீ?" மென்மையாகப் பேச்சுக்கொடுத்தான் சக்தி. சில நொடிகள் மௌனமாகவே இருந்தவன், "வலிக்கிறதா?" சக்தியின் தோளைச் சுற்றிக் கட்டியிருந்தப் பஞ்சுக் கட்டினை வருடியபடியே ஷேனா கேட்க, வருத்தம் உருகிடும் அவன் விழிகளைக் கண்ட சக்தி, "இல்-.. அ!.. ம்ம், லேசாக." குருநகையுடன் தலையசைத்தான். இல்லையென மறுத்திருந்தால் அது அவனது மனநிலையை 'அவருக்குத்தான் வலிக்கவே இல்லையே. எனில், நான் செய்தது தவறில்லை' என நினைத்திடும் அளவிற்குக் கொண்டு செல்லுமோ எனச் சிந்தித்தே, ஆம் என விடைகொடுத்தான் அவன்.

"இந்தாருங்கள். அம்மா கொடுத்த மூலிகை. இதைப் பூசிக்கொண்டால் வலிக்காது" இவ்வளவு நேரமும் தன் கைபிடிக்குள் வைத்திருந்த ஒருபிடி தங்கநிற இலைகளைத் தன் குருவிடம் நீட்ட, "உன் அன்னைக்கு நன்றி கூறினேனெனக் கூறிவிடு" புன்னகையுடன் அதைப் பெற்றுக்கொண்டான் அவன்.

"ஹான்! மறந்துவிட்டேன் பார்! நானும் உனக்காக ஒன்று வைத்திருக்கிறேன்?"

"மூலிகையா? ஆனால், எனக்கு காயமேதும் இல்லையே?"

"ஹஹா! மூலிகையல்ல, கண்ணா. பரிசு! உனக்காக ஒரு பரிசுக் கொண்டுவந்திருக்கிறேன்."

"பரிசா! என்னப் பரிசு?" இவ்வளவு நேரமும் அவன் கண்ணில் தெரிந்த வலி மறைந்து உற்சாகம் பொங்கிட.. தன் சிஷ்யனை நோக்கிக் குறும்பாகச் சிரித்த சக்தி, இருவரும் நடந்துவந்தத் திசையை நோக்கி விசிலடித்தான். சில நொடிகளிலேயே, நிலம் அதிரத் தொடங்கியது. ஷேனா தன் குருவை திகிலுடன் நோக்க, "பயப்படாதே கண்ணா. அங்கே பார்." அவனைத் தரையில் நிற்கவைத்து வழியைச் சுட்டிக்காட்டியதும், ஷேனாவின் பார்வை அவ்விடம் நோக்கித் திரும்பியது. சிம்மயாளியாக உருமாறியிருந்த அகி, ஒரு அடர்நீல துணிக்குள் வைத்திருக்கும் நீளமான எதையோத் தன் வாயால் கவ்வியபடி தூக்கி வர.. அவன் பின்னேயே யுகியும் விகியும் ஓடிவர.. தூரத்தில் நடந்து வந்துக் கொண்டிருந்தார்கள் யுவனும் விஷ்ணுவும்.

நேற்றைய தினமே யுகியின் யாளி ரூபத்தைக் கண்டிருந்ததால், இன்று அவ்வளவாக பயம் இல்லாமல் இருந்தாலும் அந்த பிரம்மாண்ட உருவைக் கண்டு லேசான பயம் இருக்கத்தான் செய்தது ஷேனாவிற்கு. பயத்தில், அவன் கைகள் சக்தியின் காலினை இருக்கமாக அணைத்திருந்தாலும் அவன் கண்கள் இரண்டும் 'என்ன பரிசுக் கிடைக்கப் போகிறது?' என்பதைக் காணுவதற்காக, அகியின் வாயிலிருக்கும் நீளமான சுருக்குப்பை போன்றத் துணியை ஆராய்ந்தபடி ஆர்வத்தில் ஜொலித்துக் கொண்டிருக்க... அகியிடமிருந்து அதை வாங்கிய சக்தி, "ஹாஹ்! வந்துவிட்டது என் குறும்பு சிஷ்யனின் பரிசு!! இங்குப்பார்." உள்ளிருப்பதை வெளியே எடுத்துக் காட்டிய நொடி, "ஆஹ்ஹ்!! பெரிய வாள்!!" கன்னத்தில் கைவைத்து உற்சாகக் கூச்சலிட்டான் ஷேனா.

"ஹான். பெரியவாள் தான். உனக்குத்தான். பிடித்திருக்கிறதா?" பின்னிருந்துக் குரல் கொடுத்தபடியே விஷ்ணு வரவளிக்க, "ஹான்!" குருவை நிமிர்ந்து நோக்கிடாமல், பார்வையைத் தன் புதிய வாளின்மீது வைத்திருந்தவனின் கண்கள் ஆனந்தத்தில் மின்னியது. இத்தனைக்கும், அது விசேஷமான வாளெல்லாம் கிடையாது. பயிற்சிக்காகப் பயன்படுத்திடும் சாதாரண இரும்பு வாள்.

"இது, பயிற்சிக்காக மட்டும்தான், கண்ணா. உன் பயிற்சி முடிவடையவும் இன்னும் அற்புதமான ஒரு பெரிய வாளை உனக்குப் பரிசாகக் கொடுக்கிறேன். சரியா?" ஆர்வத்தில் மேலும் கீழுமாக குதிப்பவனை, சக்தி இன்னும் உற்சாகமூட்டிட, "இன்னொரு வாளா? அற்புதம்! அற்புதம்! எனில், பயிற்சியைத் தொடங்களாமா?" கைக்கு வந்திருக்கும் புதிய வாளினை இப்படியும் அப்படியுமாக ஆட்டியபடியே துள்ளிக் குதித்துக்கொண்டுக் கேட்டான் அவன்.

அங்கே நின்றிருந்த சக்தியும் விஷ்ணுவும் இவனது ஆர்வத்தையும் வேகத்தையும் கண்டு மனமாற மகிழ்ந்தாலும் இப்போது அவர்களின் திட்டம் வேறாகத்தான் இருந்தது. அவ்விருவரும் ஒரு விஷமப் பார்வையை தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள, "ஹான். தொடங்கிடலாம், கண்ணா. இன்றேத் தொடங்கிடலாம் உன் பயிற்சியை." ஷேனாவிற்குப் பின்னிருந்து அவனை நோக்கி விஷ்ணு நகரும்போதே, "ஆனால், அதற்கு முன்-" முன்னிருந்து அவனை நெருங்கிய சக்தி, கணநொடியில் அவனை கரத்தில் உயர்த்தி, "விளையாடலாமா?." விஷமமாகக் கேட்டிட, "ஆஹ்ஹ்ஹ! வேண்டாஆஆஆஆம்ம்ம்ம்ம். ஹாஹாஹா.. வேண்டாம், வேண்டாம்!" பலத்தச் சிரிப்புடன் அவன் மறுக்கும்போதே அருகிலிருந்த ஓடைக்குள், சக்தியால் தூக்கி எறியப்பட்டான் ஷேனா. இது, தினசரி பயிற்சிக்கு முன் இவர்களின் வழக்கமான விளையாட்டுப் பகுதியே.

ஷேனா பொத்தென நீருக்குள் விழுந்த அதேநொடியில் விஷ்ணுவும் நீருக்குள் குதித்து விட... அடுத்தநொடி ஒரு பெரும் நீர்ச்சுழலால் மேலே தூக்கப்பட்டான் ஷேனா. இவை அனைத்தும் கரையில் நிற்கும் தன் குருவின் செயல்தான் என்பதை அறிந்திருந்ததால், எவ்வித பயமும் இல்லாமல் முழு உற்சாகத்துடன் களத்திலிறங்கி நீரில் ஆட்டம்போட்டு விளையாடி கொண்டிருதான் அவன். மெல்லமாக ஷேனாவை அடைந்த விஷ்ணு, "ஷேனா! நம் விளையாட்டில் அவர்களையும் இணைத்துக் கொள்ளலாமா?" கிசுகிசுக்கும் குரலில் ஷேனாவின் காதில் கூறியவன், கரையில் சமத்துக் குட்டிகளாக அமர்ந்திருக்கும் மூன்று பூனைகளையும் சுட்டிக்காட்ட... அதைக்கேட்டு ஒருநொடி ஜொலித்த அவனது முகம் அடுத்தநொடியே வாடியது. "ஆனால், யாரையும் துன்புறுத்தக் கூடாது." தொங்கிய முகத்துடன் ஷேனா சொல்லும்போதே விஷ்ணுவின் பார்வை, சற்றுத் தொலைவில் மரத்தடியில் அமர்ந்திருந்த யுவனை நோக்க.. அவனோ ஏற்கனவே இவர்களை தான் நோக்கி கொண்டிருந்தான். விஷ்ணுவின் முகத்தில் இழையோடிய புன்னகையையும் அதன் காரணத்தையும் யுவனால் தெளிவாக பிரித்தறிய முடிந்தது. சரியாகக் கூறவேண்டுமானால், இதுவும் ஷேனாவிற்கு யுவனால் கொடுக்கப்படும் ஒரு சோதனையே. அதில் இப்போது வென்றுவிட்டான் அவன். இனி அவனது குறும்புத்தனத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்திடலாம் என நம்பிக்கைப் பிறந்தது யுவனுக்கு.

ஷேனாவின் தொங்கிய முகத்தை நிமிர்த்திய விஷ்ணு , "இல்லை, கண்ணா. இது துன்புறுத்துவது கிடையாது. ஒரு நற்காரியத்தைச் செய்ய எவரேனும் மறுக்கும்பட்சத்தில் அவர்களிடம் சிறிதளவு கடினமாக நடந்துக்கொள்வதில் தவறேதும் கிடையாது. நீராடுவது நற்காரியம் தானே?" மெல்லிய புன்னகையுடன் கூறிட, "ஹான்! எனில் இது தவறு கிடையாதா?", குழப்பமாக வினாவினான் ஷேனா. "கிடையாது, கண்ணா. பிறர் செய்யும் தவறைத் திருத்த, சற்றுக் கடுமையாக நடந்துக்கொள்ளலாம். நேற்று உன் குரு செய்ததுபோல்", மென்மையாக பதில் கொடுத்தான் விஷ்ணு.

 சிலநொடிகள் யோசித்த ஷேனா, முகத்தில் தோன்றிய தெளிவுடன், "அப்படியென்றால் சரி. அவர்களையும் விளையாட்டிற்கு அழைத்துக் கொள்ளலாம்." உற்சாகமாக கரைக்குத் தாவியவன் முதலில் அகி மற்றும் விகியை, அவர்கள் சுதாரிக்கும் முன்பாக லபக்கென பிடித்து நீருக்குள் போட.. அவர்கள் இருவரும் அலறியபடி மீண்டும் கரைக்குள் வரும்முன் தத்தம் தலைவன்களால் சிறைபிடிக்கப் பட்டார்கள் இருவரும்.

 இக்காட்சியினை கண்ட யுகி, ஷேனாவின் பிடியிலிருந்து நழுவிக்கொண்டு இங்குமங்குமாக ஓட்டம்பிடிக்க.. பத்துநிமிட ஓடி-பிடித்து விளையாட்டிற்குப் பின்பாக ஷேனாவின் கரத்தில் சிக்கிகொண்டான் யுகி. பின், அன்றைய தினத்தில் மூன்று சிம்ம யாளிகளையும் சுத்தமாக குளிபாட்டியது ஷேனாதான். அவனிடமிருந்து எப்படியாவது ஓடிவிட வழி கிடைக்காதா என யாளிகள் மூன்றும் என்னதான் முயன்றாலும் அதற்கு வாய்ப்பைக் கொடுக்கவே இல்லை கோவன்கள்.

இந்தக் காட்சிகள் அனைத்தையும் ரசித்தபடியே தூரத்திலிருந்துப் பார்த்துக் கொண்டிருந்தான் யுவன். நேற்றையபொழுது நிகழ்வின் தாக்கம் இன்னும் அவனுள் இருக்குமென அன்று முழுவதும் ஒரு ஓரமாக நின்று வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்தான். ஷேனாவும் அவ்வப்பொழுது தன் குருவின் பார்வையில் சிக்கிடும் பொழுதெல்லாம் யுவனை மூக்குமுட்ட முறைக்க மறக்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டுமணி நேரங்களாக தொடர்ந்த அவர்களின் விளையாட்டு, ஒருவழியாக நிறைவு பகுதியை அடைய.. அன்றிலிருந்து தொடங்கியது அவர்களின் இறுதி பயிற்சியாகிய வாள் பயிற்சி.

ஆரம்பம்முதல் கிட்டதட்ட இரண்டு மாதங்களாக ஷேனா ஆர்வமாக இருந்தது அவனுடைய அந்தப் பெரிய வாளினைத் தூக்கிச் சுழற்றுவதற்குத்தான். அன்றைய பொழுது முழுவதும் வாளைத் தூக்கி நிமிர்த்தவே கற்றுக் கொண்டான். அன்றைய நாளின் முடிவில் எப்படியோ முறைத்து முறைத்தே யுவனிடம் மீண்டும் ஒட்டிக்கொண்டான் அவன். தன் குருவை ஒதுங்கி இருந்தே பார்ப்பது அவனுக்கும் பிடிக்கவில்லை. இப்படியே ஒரு வாரம் தொடர்ந்தது அவனது வாள் சுழற்றிடும் பயிற்சி. 

யுவன் மற்றும் சக்தியிடம் வலது-கை வாள் சுழற்சியை கற்றுக் கொண்டவன், விஷ்ணுவிடம், முழுக்க முழுக்க  இடது-கைக்குப் பழகியிருந்தான். இப்போது, ஒரு வாரம் கடந்த நிலையில், பொம்மையை வைத்து விளையாடுவதுபோல் இரு கைகளாலும் வாளைச் சுழற்றத் தொடங்கிவிட்டான். இவ்வளவு வேகமாக அவன் அனைத்தையும் கற்றுக்கொண்டது கோவன்களுக்கு பெரும் ஆச்சரியமே!.

இந்த ஒருவாரம் முழுவதும்,  சிம்மயாளிகள் மூவரும் அவன் கையில் சிக்கிக்கொண்டுப் படாதபாடு பட்டுவிட்டார்கள். காலையில் ஷேனாவிடம் போராட்டம் என்றால், மாலையில் தீராவிடம். இங்குக் காலையில் ஷேனாவிடம் போராடிப் பெற்ற அலுப்பு அனைத்தையும் மாலையில், அவர்களின் முதுகில் ஏறிக் குதித்துக் குதித்தே சரிசெய்து விடுவாள் தீரா. இப்படியே நகர்ந்தது அந்த வாரம். கிட்டத்தட்ட மூன்றாம் மாதத்தை நெருங்கியிருந்தது ஷேனாவின் பயிற்சி. அதே நேரம், எவ்வித தடங்களும் இல்லாமல் நிறைவுக்கட்டத்தை நெருங்கியிருந்தது இருளரசனின் யாகம்

✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro