Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

39. ஷேனாவின் முதல் பயிற்சி

வனதேசம்.. 

"சகோதரா, அவன் வருவானா?" ஷேனாவை எதிர்நோக்கி, பத்து நிமிடங்களாக மையாழி மரத்தின் அருகிலேயே காத்துக் கொண்டிருந்த யுவனிடம் சக்தி கேட்க, "பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் சகோதரா. யான் அனுப்பிய அம்மடலை படித்தப்பின்பு அவன் அன்னை எடுத்திருக்கும் முடிவைப் பொறுத்தே அவன் இவ்விடம் வரவலிப்பதும் வராமலிருப்பதும். சிறிது காத்திருப்பது அவசியம், சகோதரா.", கூறிவிட்டு மௌனம் காத்தான் யுவன்.

சில நொடிகள் தான் கடந்திருக்கும், "கோவன்களே! உங்கள் சிஷ்யன் வனதேசதினுள் பாதம் பதித்துவிட்டான். உங்களைத் தேடி வந்துக் கொண்டிருக்கிறான்." மையாழி மரத்தின் குரல் உற்சாகமாக ஒலித்ததில் ஆர்வமாக தங்களின் பார்வையை திக்கெங்கிலும் சுழல விட்டார்கள் அவர்கள் மூவரும். 

"நீங்கள் எப்படி அறிவீர்கள், அவன் வருவதை?", பார்வைத் தன் சீஷ்யனைத் தேடினாலும் சக்தியின் கேள்வி, மையாழி மரத்தை நோக்கி இருக்க, "நான் இவ்விடத்தில் இருந்தாலும் என் வேர்கள், மொத்த ஆதிலோகத்தின் மூன்றில் இரு பங்கினை ஆட்கொண்டிருக்கிறது. என் வேர்கள் படர்ந்திருக்கும் நிலத்தின் மேல்பரப்பில் நடப்பவற்றை, வேரின் வலுவைப் பொறுத்து என்னால் உணர முடியும்" விடை கொடுத்தது மையாழி மரம். அதன் சக்திகளைக் கண்டு மீண்டும் மீண்டும் வியக்கத்தான் செய்தார்கள் கோவன்கள். அதேநேரம், தன் மூன்று குருக்களையும் வெகுநேரம் காக்கவிடாமல் ஒரே நிமிடத்தில் அவர்கள் பார்வைக்கு பிரவேசமளித்தான் ஷேனா.

தூரத்திலிருந்து நடந்துவந்துக் கொண்டிருந்தவன், அவன் தேடிவந்த மூவரை எதிரே கண்டதும் உற்சாகத்துடன், முகம் முழுதும் சிரிப்பாகக் குடுகுடுவென ஓடிவந்து அவர்களின் முன்பாக நிற்க.. அவன் வரவில் ஆனந்தம் கொண்டார்கள் மூவரும். "என்ன, கண்ணா? மூலிகை சேகரிக்க வந்தாயா?" விஷ்ணு கேலியாகக் கேட்டத் தோரணையில், இவ்வளவுநேரம் சிரித்துக் கொண்டிருந்தவன் அவனை முரைக்கத் தொடங்கி விட்டான்.

"நீங்கள் தானே இன்று எனக்குப் பயிற்சியளிப்பதாக அம்மாவிற்கு எழுத்துகள் மூலம் பரிசு அனுப்பினீர்கள். அதனால்தானே நானு-"

"உன் அன்னை அம்மடலைப் படித்தார்களா? படித்தப்பின் என்ன கூறினார்கள்?" ஷேனா பேசி முடிக்கும் முன்பே அவனைக் குறுக்கிட்டான் யுவன். அவனது கேள்வியால் முரைப்பை மறந்த ஷேனா, "ஹான். நான் அம்மா சொல்லித்தான் இன்று பயிற்சிக்கு வந்தேன். உங்கள் மடலைப் படித்தப்பின், நான் உங்களிடம் பயிற்சிக்கு வருவது அம்மாவிற்கு பெரிய பரிசு என்றுச் சொன்னார்கள். அதனால்தான் நானும் அம்மாவிற்கு பரிசு கொடுப்பதற்காக உங்களிடம் வந்துவிட்டேன். இனி தினமும் வருவேன்." யுவனை நோக்கி அவன் உற்சாகமாகக் கூற, சிஷ்யனின் உற்சாகத்தைக் கண்டு வெளியில் மகிழ்ந்தாலும் 'கணவனின் நிலையைக் கூறியும் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையெனில்.. இந்தத் தகவல் அவருக்கு முன்னமே தெரிந்திருக்கக் கூடும். அவர் இன்னுமும் இந்த இருளினுள் சிறைபட்டுக் கிடப்பதற்கு வேறு ஏதேனும்  காரணம்தான் இருக்கக்கூடும்' என உண்மையில் அங்கு நிகழ்ந்ததை அறியாமல் பெறும் சிந்தனையின் உள்ளே மூழ்கினான் யுவன். 

கோவன்களுக்கு ஷிவேதனா குறித்த முழு கதையும் தெரியாது. மையாழியும் முழுமையாக எதையும் சொல்லவில்லை. அவர்கள் அறிந்தவரையில், ஷேனாவின் அன்னையும் தந்தையும் வெவ்வேறு ராஜ்யங்களைச் சேர்ந்தவர்கள். எதனாலோ அவன் தந்தையைக் கொன்றுவிட்ட இருளரசன், இப்போது ஷேனாவின் தந்தையெனக் கூறி அவனை வளர்த்து வருகிறார். அவ்வளவுதான் அவர்களின் யூகம். ஆனால் உண்மையில் அங்கு நடப்பவைகள் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஷேனாவிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளவும் அவர்கள் முனையவில்லை.

தான் அனுப்பிய மடல் குறித்தச் சிந்தனையில் மூழ்கிக் கொண்டிருந்தத் தன் சகோதரனைத் தோள்தொட்டு நிஜத்திற்கு அழைத்துவந்த சக்தி 'என்ன யோசனை?' எனப் பார்வையாலேயே வினவிட, ஒன்றுமில்லையென சிறு தலையசைப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்துவிட்டு ஷேனாவின் முன் அமர்ந்தான் யுவன். சகோதரனின் மனதில் உள்ள அதே குழப்பம் தங்கள் மனதிலும் இருந்தாலும் இப்போது ஷேனாவை கவனிக்க முடிவெடுத்தார்கள் சக்தி மற்றும் விஷ்ணு. 

"ஷேனா, பயிற்சிக்காக அவ்வளவு ஆர்வமாக இருக்கிறாயா நீ? சரி. எனில், இப்போதே துவங்கிவிடலாம் உன் பயிற்சிகளை. ஆயின், பயிற்சிக்குமுன் உனக்கு மரியாதை என்னவென்பதைக் கற்றுத்தர வேண்டும்", கூறிக்கொண்டே நிமிர்ந்த யுவன், தன் சகோதரன்கள் இருவரையும் நோக்க, "மரியாதை தானே? அது எனக்குத் தெரியும். அம்மா சொல்லியிருக்கிறார்." சட்டென வந்த ஷேனாவின் பதிலால் ஈர்க்கப்பட்டான் அவன். "அப்படியா? எங்கே சொல், பார்க்கலாம்.. உன் அம்மா கற்றுத்தந்த மரியாதையை." சிஷ்யனின் பதிலைக் கேட்க மூவரும் ஆர்வமாக அவனை நோக்க.. அவர்களில் ஆர்வத்தை வீணாக்காமல், தன் விரல்களை எண்ணி எண்ணி பதில்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கத் தொடங்கினான் ஷேனா.

"மூத்தோர்களை மதிக்க வேண்டும்.. எவரேனும் உதவி புரிந்தால் நன்றி சொல்லிட வேண்டும்.. நம்மால் எவரேனும் பாதிக்கப்பட்டால் அவருக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்..."

"இவற்றில் எதையுமே நீ எம் முன்னிலையில் செய்ததில்லையடா சிஷ்யா? ஏன்? எம்மைக் கண்டால் மனிதனைப் போல் தெரியவில்லையோ உனக்கு?", ஷேனாவின் எண்ணிக்கையில் குறுக்கிட்ட சக்தி, பட்டெனக் கேட்டுவிட, "நீங்கள்தான் மனிதனே இல்லையே? பிறகு எப்படி மனிதனைப் போல் தெரிவீர்கள்?" கோவன்களுக்குப் பெரும் மூக்குடைப்புப் போல் ஒரு பதிலைக் கொடுத்தான் அவர்களின் சிஷ்யன்.

"என்ன?" ஒரேபோல் விழிவிரித்து அதிர்ச்சிக்குரலை உயர்த்திய மூவரும், பார்வையை பரிமாறிக்கொள்ள, "பிறகு, எவ்வாறு தெரிகிறோம் உன் பார்வையில்?", அவனை உருத்து நோக்கிய யுவன், அடுத்ததாக அவன் கூறிய பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை. "அம்ம்... ம்ம்? பெரிய ரெக்கை வைத்த நெருப்புப் பறவை.", என்றவனை ஒருநொடி ஸ்தம்பித்து பார்த்தவர்கள் மறுநொடியே பலமாக சிரிக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களின் முதல் சந்திப்பில், வானில் பறந்த அனுபவத்தையும் யுவனின் நெருப்பு சக்தியைக் கண்ட அனுபவத்திலும் இப்படி ஒரு பெயரை அவர்களுக்கு சூட்டியிருக்கிறான் இவன்.

தன்முன் பலமாகச் சிரிக்கத் தொடங்கிய மூவரையும் ஷேனா குழப்பத்துடன் நோக்க, "கண்ணா, என்ன கூறினாய்? ஹாஹாஹா.... நெருப்புப் பறவையா? அற்புதம்! அற்புதம்!!" யுவனைத் தன் பார்வையால் தீண்டிய விஷ்ணு, விழுந்து விழுந்து சிரிக்க, "ஆனால் நீ நெருப்புப் பறவை என கூறவேண்டுமானால் இவனை மட்டும்தான் கூற வேண்டும், கண்ணா. எம்மை இதில் இணைக்காதே.", மூத்த சகோதரனைச் சுட்டிக் காட்டியபடி சிரித்தான் சக்தி. 

தன் சிரிப்பை அடக்கிட முயன்றுக் கொண்டிருந்த இருவரையும் முறைத்த நிலையில் நின்றிருந்த யுவனுக்கு ஆதரவாய், அடுத்து ஒரு கேள்வியை கேட்டான் ஷேனா. "அவர் மட்டும்தான் நெருப்புப் பறவையெனில், நீங்கள் இருவரும் என்ன பறவை?" அவர்களின் சிரிப்புக்கு அர்த்தம் புரியாதவன், குழப்பத்துடன் சகஜமாகக் கேட்டக் கேள்வியை படக்கென பிடித்துக்கொண்ட யுவன், "இவன், நீர் பறவை. பிறகு இவன், காற்(று)பறவை." தன்னிரு சகோதரன்களையும் வாரிவிட்டபடி அவர்களைக் கழுத்தோடு சேர்த்தனைத்தான் யுவன்.

சில நொடிகள் கடந்ததும், சிரித்துக்கொண்டே இருந்த சக்தி தன்னை நிதானமாக்கிக் கொண்டு, "எம்மை பறவையென்றே தீர்மானித்து விட்டாயா நீ?", கேட்டுக்கொண்டே எழுந்துநின்று ஷேனாவை தூக்கிக்கொள்ள, "ஹான்! பறவைகளுக்குத் தான் ரெக்கை இருப்பதாக அம்மா சொல்லியிருக்கிறார். எனில், நீங்கள் பறவை தானே?", என அப்பாவியாகச் சொல்பவனைக் கண்டால், இன்னும் இன்னும் இவனை பேசவைத்து விளையாட வேண்டும்போல் தான் தோன்றியது அவர்களுக்கு. ஆனால், அவர்கள்  இங்கு வரவளிப்பது அதற்கில்லையே.

"சரி, அப்படியே வைத்துக்கொள். எனில், உனக்கு மரியாதை என்பது தெரியும், ஆனால் எம்மைக் கண்டால் மனிதனைப்போல் இல்லாததால் எமக்கு மறியாதை கொடுக்கமாட்டாய். அப்படி தானே?" சக்தியிடம் இருந்தவனைத் தன் கரத்திற்கு மாற்றிக்கொண்டே வினவிய யுவனுக்கு, "இல்லை, இல்லை. அப்படியில்லை. இனி, நீங்கள் மூவரும் என் குரு என அம்மா சொன்னார். அம்மாவிற்கு கொடுப்பது போலவே உங்களுக்கும் மரியாதை கொடுக்கவேண்டும் என்றும் சொன்னார். அதனால், நான் மரியாதை கொடுப்பேன்." பணிவுடன் விடைகொடுத்தவனை நோக்கி மென்மையாகப் புன்னகைத்தான் யுவன்.

"பிறகென்ன கூறினார் உன் அம்மா?" நிழல்தேசத்தில் இருப்பினும், மகனை நல்முறையில் வளர்த்து வருகிறார் என ஷிவேதானாவை நினைத்து கர்வம் கொண்டபடி விஷ்ணு அவனை நோக்க.. பாதியில் விட்ட எண்ணிக்கையை மீண்டும் தொடங்கிவிட்டான் அவன். 

"பிறகு.. உங்களையெல்லாம் குருவென அழைக்கச் சொன்னார். பிறகு, நீங்கள் சொல்வதை கவனமாகக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றார். விரைவாக அம்மாவிடம் வந்துவிடவேண்டும் என்று சொன்னார். ஹாம்.. வேறு? அவ்வளவு தான். எனக்கு மற்றவை இப்போதைக்கு நினைவில் இல்லை." தன் நினைவுகளை அதிகம் கிளர முடியாதவன், அவர்கள் மூவரையும் போதும் என்பதுபோல் நோக்கினான். "ஹாஹாஹா. சரி, சரி. உனக்கு இவ்வளவு நினைவில் இருப்பதே அதிகம் தானடா. அவை அனைத்தையும் என்றும் மறவாமல் நினைவில் இருத்திக்கொள். சரியா?" யுவன் அவனைக் கீழே இறக்கிவிட, சரியென வேகமாகத் தலையை ஆட்டினான் ஷேனா. 

"எனில், இப்போது முதல் பயிற்சியைத் தொடங்களாமா?" யுவன் கேட்க,  "ஹான். தொடங்கலாம், தொடங்கலாம். ஆனால், அந்தப் பெரிய வாளை நீங்கள் கொண்டு வரவில்லையே? எப்படி பயிற்சியைத் தொடங்க?"

"ஷேனா, நீ நினைப்பதுபோல் அவ்வாளை சுழற்றிடுவது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு முன்பு நீ சில ஆயத்தப் பயிற்சிகளைச் செய்தாக வேண்டும். அதன் பின்புதான் வாளை ஏந்த உனக்கு அனுமதி." சக்தி, தன் சிஷ்யனுக்குப் பாடமெடுக்க, அதைப் புரிந்துக்கொண்டது போல் தலையை ஆட்டியவன், "ஆயத்தப்பயிற்சி எப்படி செய்யவேண்டும்?" வாளைக் கொடுக்காததால் சோகமாகத் தன் குருக்களை நோக்கினான்.

"இவ்வளவு விரைவாகத் தயாராகி விட்டாயே! ஹம், பரவாயில்லை. உம் ஆர்வத்தை மெச்சுகிறேன் ஷேனா. இப்போது, உன் முதல் பயிற்சி.. மனதினை ஒருநிலைப்படுத்தும் பயிற்சி.", யுவன் கூறியதில், "அவ்வாறெனில்?" நொடி மாறாது வினவியவனுக்கு, "தியானம்.", ஒற்றை வார்த்தையில் விடை கொடுத்தார்கள் மூவரும். அதைக்கேட்டு, அது என்னவெனப் புரியாமல் குழம்பி விழித்தவனைக் கண்டு மெல்லச் சிரித்துக் கொண்டார்கள் கோவன்கள்.

"ஷேனா, இதில் குழம்புவதற்கு எதுவுமில்லை. முதலில் கீழே அமர்ந்துக்கொள்." சக்தி வழிநடத்த.. சரியென சாவகாசமாக காலை நீட்டிக்கொண்டு அமர்ந்துக்கொண்டான் அவன். ஷேனாவின் செயலால் தங்கள் சிஷ்யனை விழித்து நோக்கிய மூவரும் 'என்ன ஒரு அருமையான மாணவன் கிடைத்திருக்கிறான் நமக்கு!' என்பதுபோல் ஒரு பார்வையை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டார்கள். "இவ்வாறு அமரக்கூடாது ஷேனா, உனக்கு நான் காண்பிக்கிறேன். என்னைப்பார். இப்படி.. என்னைப் போன்றுதான் அமர வேண்டும்", என கூறிகொண்டே அழகாக பத்மாசனத்தில் அமர்ந்துக் காட்டிடும் விஷ்ணுவை நன்றாக உற்று நோக்கிய ஷேனா, "எங்கே, இப்போது இதேபோல் நீயும் அமர்ந்துக்காட்டு பார்க்கலாம்?" விஷ்ணு கூறியதுதான் தாமதம், படக்கென தன்னிரு கால்களையும் மடக்கி, சம்மணமிட்டு அமர்ந்துவிட்டான் ஷேனா.

"இப்போது சரியாக அமர்ந்து விட்டேனா?" குருக்களை ஆர்வம் பொங்கும் கண்களால் உற்சாகத்துடன் அவன் நோக்க, "அது- அ...ஆம்! சரி தான். சரிதான், ஷேனா. ஆனால், சிறு திருத்தம். பொறு.. நான் உனக்கு உதவுகிறேன்." ஷேனாவின் அருகில் அமர்ந்த யுவன், அவனது கால்கள் இரண்டையும் ஒன்றின் மீது ஒன்றாக வைக்க ஷேனாவிற்கு உதவினான். ஆனால், அது அசௌகரியமாக இருந்ததால் கால்களை இறக்கிக்கொண்டே இருந்தான் அவன். யுவன், மீண்டும் மீண்டும் அவன் கால்களைச் சரியான முறையில் தூக்கித் தூக்கி வைக்க.. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் கடுப்பாகிய ஷேனா, தன் கால்கள் இரண்டையும் நீட்டிக்கொண்டு முன்புபோலவே அமர்ந்துக்கொண்டு, தனது குருக்கள் மூவரையும் முறைக்க தொடங்கிவிட்டான்.

"அட! என்னானது?" யுவன் புன்னகையுடன் நோக்க, "எனக்கு இது வேண்டாம். என் கால்கள் நோவுகின்றது." சினம் கொண்ட பூனைக்குட்டி போல் பதிலளித்தான் அவன். "அப்படிதான் இருக்கும் ஷேனா. மெல்ல முயற்சித்தால்தான் உன்னால் அதைச் செய்ய இயலும்." சக்தி, அவனை சமாதானப்படுத்தும் வகையில் ஷேனாவின் முதுகைத் தட்டிக்கொடுக்கும் போதே, "மாட்டேன். நான் செய்யமாட்டேன். நீங்கள் சொல்வதுபோல் நான் செய்யமாட்டேன். இனி, உங்களிடம் வரமாட்டேன்." தன் முதுகிலிருந்த சக்தியின் கையை உதறித் தள்ளிவிட்டபடி கூறியவன், படக்கென எழுந்துகொள்ள, "அப்படியெல்லாம் கூறக்கூடாது ஷேனா. இன்று நீ செய்தால்தான் அந்த வாளை உன்-", விஷ்ணு பேசிக் கொண்டிருக்கையிலேயே, பின்னால் திரும்பியும் பாராது ஒரே ஓட்டமாக ஓடியே விட்டான் அவன். முதன்முறை சந்திப்பில் ஓடியது போலவே இப்போதும் ஓடுகிறான் என நின்ற நிலையிலேயே அவனை நோக்கியவர்கள், இன்றும் அவனது வேகத்தைக் கண்டு வியக்கத்தான் செய்தார்கள்.

"இவனென்ன ஓடிவிட்டான்! இப்போது என்ன செய்யலாம்?" ஷேனாவின் செயலால் விழித்துக் கொண்டிருந்த சக்தி, பொதுவாக வினவ, "அவன் மீண்டும் நாளை வருவான். அப்போது கவனித்துக் கொள்ளலாம்." முகத்தில் படர்ந்தப் புன்னகையுடன் பதில் கொடுத்தான் யுவன்.

"அதெவ்வாரு வருவான்? இன்றையப் பயிற்சி பிடிக்காமல்தானே ஓடினான்?" மீண்டும் குழப்பத்திலேயே வினவிய சக்தியிடம், "ஆம், சகோதரா.. பிடிக்காமல்தான் ஓடினான். ஆனால், அவன் இன்று இங்கு வந்ததன் காரணமாக எதைக் கூறினான், நினைவிருக்கிறதா?", விஷ்ணு, ஒரு எதிர்வினாவைக் கேட்க, சகோதரனின் கேள்வியை யோசித்துக் கொண்டு நின்றிருந்த சக்தியின் தோளில் கைபோட்டு அவன் கவனத்தை ஈர்த்தான் யுவன். "அவன் அன்னைக்காகவே வந்திருக்கிறான். நாளையும் அன்னைக்காகவே நிச்சயம் வரவளிப்பான்", இதழோரம் தவழும் புன்னகையுடன் யுவன் கூறியப் பின்பே, ஷேனாவின் அன்னைபாசம் தெளிவாக விளங்கியது சக்திக்கு. "ஓஹ்! அவ்வாறெனில் சரிதான். இனி அவனை பயிற்சிக்கு வரக்கூறி கட்டாயப்படுத்த அவசியமன்று.", பின்னங்கழுத்தை தேய்த்துக்கொண்டே நமட்டு சிரிப்புடன் கூறிய சக்தி, "எனில், இப்பொழுது நம் பணி நிறைவுக் கொண்டதல்லவா? நம்மிடத்திற்குப் புறப்படலாம் தானே?", சகோதரன்கள் இருவரையும் நோக்க. ஆமென தலையசைத்த யுவன் மற்றும் விஷ்ணு, மையாழியிடம் விடைபெற்றுக் கொண்டு பூமிக்கு புறப்பட்டார்கள்.

✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro