Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

33. அபிக்கு வந்த ரகசிய செய்தி.

ஷேனாவை மரத்தடியில் கண்ட கோவன்கள்,  ஒரு ஆர்வத்தில் அவனருகில் செல்ல... ஏற்கனவே பசியினால் துவண்டுபோய், இருளரசன் சொல்லியனுப்பிய மூலிகைகளை பறிப்பதற்காக உச்சி வேளையை எதிர்நோக்கிக் காத்திருந்த ஷேனா, அவர்கள் மூவரையும் அடையாளம் கண்டதும் கோபமாக முறைக்கத் தொடங்கிவிட்டான்.

"மீண்டும் நீங்களா? நேற்று உங்களால்தான் என் தந்தை என்னை கடிந்துக்கொண்டார்.", எனக்கூறி முகத்தைச் சுருக்கியவன் அவர்களை முறைக்க, "எம்மை மன்னித்து விடு கண்ணா. யாம் செய்த தவறை மன்னிப்பாயா?", பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவன் முன் பாதியாக மண்டியிட்ட சக்தி, ஷேனாவை நோக்க... அவனோ வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவனின் துடுக்கான கோபத்தினை கண்ட மெல்லச் சிரித்துக்கொண்ட யுவனுடன், விஷ்ணுவும் ஷேனாவிற்கு நிகராகக் குனிந்து நின்று அவனை சமாதானம் செய்ய முயன்றார்கள்.

"சரி கண்ணா. யாம் என்ன செய்தால் எம்மை மன்னிப்பாய்?", என அவன் முன் முட்டியிட்ட விஷ்ணு, அவனது முகத்தை தன்னை நோக்கி திருப்ப... நீங்காத முறைப்புடன் அவனை சில கணங்கள் நோக்கியவன், "ம்ம்ம்ம்ம்ம்.... நான் காலையில் என் அம்மாவுடன் உணவுண்ணும் முன்பே தந்தை மூலிகைகளை எடுத்துவர வனதேசத்திற்கு அனுப்பிவிட்டார். அதனால் நான் இன்னுமும் உணவுண்ணவில்லை. எனக்கு இப்போது பசிக்கிறது... எனக்கு உடனேயே உணவு கொடுத்தால் உங்களை மன்னிப்பேன்.", எனக்கூறிய ஷேனாவிற்கு, நேற்றைய தினம் தான் அன்னை, இவர்களை மீண்டும் காணும் சமயம் அவர்களின் மீது கல்லை எறிந்ததற்காக மன்னிப்பு கேட்கக் கூறியதும் நினைவில் வந்தது. ஆனால் ஏனோ அன்னையின் கூற்றை கேட்க, இன்று முதன் முதலாக மனம் ஒப்பவில்லை அவனுக்கு. அவர்கள் முன்னிலையில் தன் முகத்தை கோபமாகவே வைத்து கொண்டான். ஆனால் கோவன்களின் மனமோ, 'விளையாட்டுப் பருவத்தில் இருக்கும் சிறுவன், தங்களை மன்னிப்பதற்காக உணவினை வேண்டுகிறானே' என நினைக்கையில் கலங்கியது. 

பலமுறை இப்படி நிகழ்ந்துள்ளதால் ஷேனா அதனை சாதாரணமாகவே கூறியிருந்தாலும் அவன் பேச்சால் மூவரும் உணர்வற்று அவனை நோக்கி கொண்டிருக்க, "உங்களிடம் உணவு இல்லையோ. சரி இருக்கட்டும், என் அம்மாவிடம் சென்றே நான் உண்டு கொள்கிறேன். ஆனால், உங்களை மன்னிக்க மாட்டேன். ஹும்ம்.", எனக் கூறிவிட்டு எழும்போதே மூவரும் சுயநினைவு பெற்று, "யாம் அவ்வாறு கூறவில்லையே கண்ணா. எம்முடன் வா. உமக்கு அறுசுவை விருந்தளிக்கிறோம். அப்போது மன்னிப்பாய் தானே", தாமதிக்காமல் அவனை கையில் தூக்கி கொண்ட யுவன், புன்னகை விரிந்த முகத்துடன் முன்னே நடக்க... அவர்களைத் தொடர்ந்தே நடந்தார்கள் சக்தி மற்றும் விஷ்ணு.

இவர்கள் ஆபத்தானவர்கள் கிடையாது என ஷிவேதனா கூறியதை நினைவில் கொண்ட ஷேனா, இப்போது பயமின்றி யுவனின் கரத்தில் வசதியாக அமர்ந்தவாரே, செல்லும் பாதையை ஆராய்ந்து கொண்டிருந்தான். "நாம் எங்கு செல்கிறோம்? இவ்வழி எனக்குத் தெரியாது. உச்சிவேளை வரும்முன் நான் இங்கே இருக்க வேண்டும். தாமதமாகுமெனில் எனக்கு எதுவும் வேண்டாம். மீண்டும் இவ்விடம் வர எனக்கு வழி தெரியாது.", என கலவராமாய் கூற, யுவனின் பின்னால் நடந்து கொண்டிருந்த விஷ்ணு அவன் தலையை கோதிவிட்டவாறு, "கவலை வேண்டாம் கண்ணா. உச்சிவேளை வரும்முன் உன்னை உன்னிடத்தில் சேர்த்து விடுகிறோம்.", சினேகமாய் புன்னகைத்துக் கொண்டே, அவர்கள் ஆதிலோகத்தின் உள்ளே வந்த அதே மாயவாயிலின் வழியாக பூலோகத்தை அடைந்தார்கள். 

அவனிடம் பேச்சுக் கொடுத்தவாரே நேராக தங்களின் இருப்பிடம் நோக்கி சென்றவர்கள், திடீரென கேட்ட ஒரு பெண்ணின் அபாயக் குரலால் தங்களின் நடைக்குத் தடைவிதித்து அப்படியே நிற்க, எத்திசையில் இருந்து குரல் வருகிறதென கூர்ந்து கவனித்து மறுகணமே அவ்விடம் நோக்கி ஷேனாவுடனே சீறிப்பறந்தார்கள் கோவன்கள் மூவரும். 

அங்கே, ஒரு பெண், கொள்ளையர்கள் மத்தியில் சிக்கிக்கொண்டு பயத்தில் கத்தி கொண்டிருக்க... ஷேனாவை கீழே இறக்கி விட்டவர்கள் தங்களின் கண்ணை மூடி கண்ணை திறந்த நொடியில் அவர்கள் கரங்களில் தோன்றிய உறைவாளை உருவி அக்கொள்ளையர்களை சரமாரியாகத் தாக்க தொடங்கினார்கள். அவர்கள் மூவரும் ஷேனாவை சுற்றி நின்ற நிலையிலேயே  கொள்ளையர்களைத் தாக்கிக் கொண்டிருக்க... மூவருக்கும் இடையில் இருக்கும் இடைவெளியின் வழியாகத் தலையை விட்டு அந்த சண்டையை சுவாரசியமாக ரசித்தான் ஷேனா. அவனின் அந்த பிரமிப்பை கவனிக்கத் தவறவில்லை கோவன்கள். 

மொத்த கொள்ளையர்களையும் சில காயங்களுடன் அங்கேயே கட்டி வைத்துவிட்டு மூவரும் நிமிர... உதட்டினை மடக்கி யுவன் அடித்த விசிலுக்கு பதிலாக, விண்ணிலிருந்து சீறி வந்தது ஒரு வெண்புறா. அதன் காலில், மனித விரல் அளவில் இருக்கும் சிறு குடுவையை உருவி எடுத்தவன், அதனுள் இருந்த துண்டு காகிதத்தில் எதையோ சுருக்கமாக எழுதி மீண்டும் அப்புறாவினை பறக்க விட்டான். பத்தே நிமிடத்தில், வேந்தன்யபுரத்தின் ரகசிய காவல்படை வீரர்கள், தங்களின் இளவரசர் அனுப்பிய செய்திக்கு இணங்க அக்கொள்ளையர்களை சிறைக்கு இழுத்து சென்றார்கள். பின் அந்தப் பெண்மணியை அவரின் இருப்பிடம் வரை பத்திரமாக விட்டு வர சென்றான் சக்தி. 

யுவன் விஷ்ணுவுடன் அவர்களின் இருப்பிடம் வந்த ஷேனா, வெறுமையாக இருந்த ஒரு கூடாரத்தை தான் கண்டான். சூரர்களுக்கு இப்போது பயிற்சி நேரம் என்பதால் பயிற்சியை கவனிக்க வேறெங்கோ சென்றிருந்தார்கள் அவர்கள் அனைவரும். "கண்ணா, சற்று பொறு. எம் தோழர்கள் இவ்விடத்தில் தான் எங்கேனும் இருப்பார்கள். பார்த்துவிட்டு வருகிறேன். அவர்களுக்கும் உன்னை அறிமுகம் செய்திட வேண்டும்.", விஷ்ணுவுடன் யுவனும் வெளியேறி, சுற்றிமுற்றி எவரேனும் தென்படுகின்றனறா என பார்க்க... அவர்கள் பயிற்சிக்காக வெகுதூரம் சென்றுவிட்டார்கள் போலும்.. எவரும் கண்ணில் தென்படவில்லை. சரியென மீண்டும் கூடாரத்திற்கு வந்தவர்கள் அங்கு கண்டது, பெரும் இரும்பு வாள் ஒன்றினைத் தூக்க முடியாமல் தட்டுத்தடுமாறி கீழே இழுத்துப்போட்டு அதை கடினபட்டு பாதியளவு தூக்கிக்கொண்டிருந்த ஷேனாவை தான். 

தன்னிடம் இருக்கும் குட்டி கத்தியையே வாள் என கூறிக் கொண்டிருந்தவன், இப்போது கொள்ளையர்களை பெரிய பெரிய வாள்களைக் கொண்டு தாக்கியவர்களைப் பார்த்து அதிசயித்துப்போய் இருந்தான். அவர்கள் கைகளில் இருந்தது போன்றே இங்கு வாள்களை கண்டதும் அதைச் சுழற்றும் ஆர்வத்தில் கையில் எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தான் அவன். 

அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றவர்கள், "என்னானது கண்ணா? உனக்கு இவ்வாள் வேண்டுமா?", என யுவன் கேட்டதற்கு, "இதுவா? இதை என்னால் தூக்கவே முடியவில்லை. பிறகு, உங்களைப் போல் இதனை உபயோகிக்கவும் எனக்குத் தெரியாதே." அவன் தெளிவாகக் காரணம் கூற, சிரிப்படன் அவன் தலையைத் தட்டிக்கொடுத்தான் யுவன். 

"இதுதான் உன் பிரச்சனையா. அவ்வாரெனில், உன்னால் இதைத் தூக்க இயன்றால்?"

"ஹான்? அதெவ்வாறு முடியும்?"

"உன்னால் இயலும் கண்ணா. முயற்சித்தால் எதையும் சாதிக்கலாம் நீ. யாம் இதனைப் பிரயோகிக்கக் கற்றுக் கொடுத்தால் கற்றுக் கொள்வாயா?" அவன் பதிலை யுவன் ஆர்வமாக எதிர்பார்த்திருக்க, "நிஜமாகவே நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுப்பீர்களா?", கண்களில் ஆர்வம் மின்னக் கேட்டான் ஷேனா.

"நிச்சயமாகக் கற்றுத் தருகிறோம் கண்ணா. அதற்குமுன், தாங்கள் வந்து உணவருந்துங்கள்", அவனைத் தூக்கிக்கொண்டு முன்னே நடந்த விஷ்ணு, ஏற்கனவே சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுகளை அவனுக்கு பரிமாற.. அவனுடன் சேர்ந்து உணவருந்திய இருவரும் அவனுக்கு ஊட்டியும் விட்டார்கள்.

✨✨✨

தர்ம ராஜ்யம். 

"அப்பா, அப்பா, அப்பா... நான் தான் முதலில் தயாராகினேன்.. நான் தான் முதலில் தயாராகினேன்." படியின் வழியே ஓடிவரும் ராகவியை முந்திக்  கொண்டு ஓடிவந்த அபி, எங்கோ தயாராகிக் கூடத்தில் அமர்ந்திருக்கும் சத்யஜித்தின் மடிமீது ஏறிச்சென்று அமர்ந்துக்கொள்ள..., "மாமா.. நான் தான் முதலில் தயாராகி இருப்பேன். வாரியிருந்த என் தலையை கலைத்துவிட்டு, மீண்டும் வாரி விட்டு ஜித்தூ தான் என்னை தாமதம் செய்துவிட்டான்", சினுங்கியபடியே, அபியைத் தொடர்ந்து அவனைப் புகார் சொல்லிக் கொண்டே வந்த ராகவி, இருக்கையில் இருந்து எழுந்து நிற்கும் தன் தந்தையை கண்டதும் கைகள் இரண்டையும் மேலே உயர்த்த.... புன்னகையுடன் தன் மகளை தூக்கி கொண்டார் அரவிந்தன்.

"சரி, யார் முதலில் தயாராகினால் என்ன? எல்லோரும் ஒன்றாகத் தானே ரத்ன மாளிகைக்குச் செல்கிறோம். அதற்கு ஏன் அபியை கோபித்து கொள்கிறாய் ராவி?", தந்தையின் கேள்விக்கு பதிலேதும் கொடுக்காமல் வெடுக்கென முகத்தை மட்டும் திருப்பி கொண்டாள் ராகவி.

"சரி, சரி. நான் ஒப்புக்கொள்கிறேன் மாமா. ராவி தான் முதலில் தயாராகியது. போதுமா? இப்போது திருப்தியா ராவி?", அபி கொடுத்த ஒற்றைக் குரலில் ராகவியின் முகம் ஆயிரம் மலராக மலர... தந்தையர்கள் இருவரும் கலகலவென சிரிப்பதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல், அரவிந்தனின் கரத்திலிருந்து குதித்தவள், ஓடிச்சென்றுத் தன் மாமாவின் மடியிலிருக்கும் அபியின் மடிமீது ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

"ஹாம். இப்போதுதான் நீ நல்ல ஜித்தூ", முகம் நிறைந்துப் புன்னகைத்தவளைக் கண்டு அபியும் புன்னகைக்க, "சரி, நீ ஒப்புக்கொண்டதால் இன்று உன்னையும் வீராவிடம் அழைத்துச் செல்கிறேன். உன்னைத் தாக்கக் கூடாதென நான் சொல்கிறேன் அவனிடம்.", என ராகவி கூறியதில், வீராவைக் காணும் ஆர்வத்தில் உற்சாகம் ஆகிவிட்டான் அபி.

"வீராவை காணச் செல்கிறீர்களா? அவன் எங்களையே அருகில் அனுமதிக்க மாட்டான். தாக்குவான். அபி, நீ மிகவும் சிறுவனடா.", அக்கறையுடன் தன் மகனிடம் சத்யஜித் கூற, "ஹான்! நான் சிறுவனா?", ராகவி, தன் மடியில் அமர்ந்திருப்பதையும் மறந்து, சிலிர்த்துக்கொண்டு தரைக்குத் தாவியவன் தந்தைக்கு முன்பாக விரைப்பாக நின்றான். அவனோடே கீழே இழுக்கபட்ட ராகவி, எப்படியோ அபியை பிடித்து கொண்டே சமாளித்து நின்று கொண்டாள்.

"நான் ரத்னமாளிகையில் பயிற்சிக்குச் செல்லவிருகின்றேன் அப்பா. இன்னும் மூன்று திங்களில் பத்தாம் பிறந்தநாள் எனக்கு. அது நிறைவடைந்த மறுநாள் முதல் நான் சிறுவனல்ல.", மிகத்தீவிரமாக தந்தைக்கு பாடமெடுக்க, "ஹாஹாஹா. என்னைப் போன்றே என் மகன். நான் கூறிய அதே சொற்கள்", தன் சிறுவயது நியாபகத்திற்குத் திரும்பியிருந்தவர் மகனின் தலையைக் கலைத்து விட்டார். 

"எனில், நான் எப்போது பயிற்சிக்குச் செல்வேன்?", சிணுங்கியபடியே, ராகவி சென்று அவளின் தந்தை முன்னால் நிற்க, "இன்னும் இரண்டு ஆண்டுகள் கடந்த பின் உனக்கும் பத்து வயது ஆகிடும் மகளே. அதன் பின்னர் நீயும் உனக்குப் பிடித்தவற்றைக் கற்றுக்கொள்ளலாம்.", புன்னகையுடன் மகளுக்கு பதில் கொடுத்தார் அரவிந்தன்.

"ஹான்! சரி அப்பா. எனில், நான் அவற்றை இரு ஆண்டுகளுக்குப் பின் பார்த்துக் கொள்கிறேன். இப்போது வாருங்கள் ரதனமாளிகை செல்லலாம். வீரா காத்துக் கொண்டிருப்பான். வாருங்கள், வாருங்கள். வா, ஜித்தூ. தீரா.. கவி... எங்கிருக்கிறீர்கள் இருவரும்?" பரபரப்புடன் அனைவரையும் கிளப்பிக்கொண்டு ராகவி வாயிலுக்கு வந்த நொடி, "ஐயோ! ராவி, நான் வீராவிற்காக வைத்திருந்த பரிசை எடுக்க மறந்தே போய்விட்டேன். நீ அனைவருடனும் செல். நான் எடுத்துக்கொண்டு வருகிறேன்", படபடப்பாகக் கூறிக்கொண்டே மாடியை நோக்கி அபி ஓட, "உஃப்ப்.. நீ எப்போதும் இப்படியேதான் செய்கிறாய் ஜித்தூ. ஹ்ம்ம். விரைந்து வா", அபி பறந்த திசையை நோக்கி கத்தியவள், "மாமா.. அப்பா.. அவன் இன்றைக்குள் மீண்டும் வர மாட்டான். வாருங்கள், நாம் செல்லலாம். தாமதம் ஆகிறது", முகத்தை சுருக்கி வேகமூச்சுகளை விட்டாள். 

அவள் சொல்வது முற்றிலும் உண்மையே. எதையாவது மறந்து வைத்தால், அதை எங்கே வைத்தான் என்பதை சுத்தமாக மறந்திடுவான் அபி. ராகவியின் சொல்லை உணர்ந்துக்கொண்ட சத்யஜித் மற்றும் அரவிந்தன், சிரிப்புடன் அவளை சமாதானம் செய்துவிட்டு, வாயிலில் விளையாடி கொண்டிருந்த சங்கவி மற்றும் தீராவை அழைத்துக் கொண்டு ரத்னமாளிகையை நோக்கி புறப்பட்டார்கள். அனைவரும் புறப்பட்டபின் ஆர அமர கால் மணி நேரம் கடந்த பின்னர், வீராவுக்காகத் தான் செய்து வைத்திருந்த அழகிய நீல நிற கடிவாளத்தை தேடிப்பிடித்து எடுத்துக் கொண்டு மாளிகைக்கு புறப்பட்டான் அபி.

"அம்மா... நானும் ரத்ன மாளிகைக்குச் சென்று வருகிறேன். என் தங்கைகளை பத்திரமாக கவனித்துக் கொள்ளுங்கள்." என அன்னைக்கு குரல் கொடுத்தபடி வாயிலை நெருங்கிய நேரம், அபியின் முன்பு தடையாக வந்து நின்றது வெண்ணிற ஒளிபந்து ஒன்று. வெண்ணிற மாயங்கள் என்றாலே அது மகாராணியின் மாயம்தான் என்பதை அறிந்திருந்தவன், இத்தகைய ஒளி பந்து ஏதேனும் ரகசிய தகவல்களை அனுப்புவதற்காக மட்டுமே உபயோகிக்கும் மாயம் என்பதையும் அறிந்து வைத்திருக்க... மகாராணியிடம் இருந்து தனக்கு என்ன ரகசிய செய்தி வந்துள்ளது?" என வியப்பில் அந்த ஒளி பந்தையே விழி விரித்து நோக்கி நின்றான் அபிஜித்.

✨✨✨


"இன்னும் எவ்வளவு தாமதம் செய்வீர்கள்? உச்சிவேளை நெருங்குகிறது. நான் மூலிகைகள் சேகரிக்கச் செல்லவேண்டும். என் தந்தை என்னை கடிந்துக்கொள்ளப் போகிறார்", உணவுண்ணும் வரையில் இல்லாத பதட்டம், பசியாறிய பின் இப்போது ஷேனாவைத் தொற்றிக்கொள்ள.. அந்தக் குடிலின் மையத்தில் நின்றுக் குதியோகுதியென குதித்துக் கொண்டிருந்தான் அவன்.

"அட! கண்ணா, அவ்வாறெல்லாம் எதுவும் நேராது. யாமிருக்கின்றோம் அல்லவா. நேரத்திற்கு உன்னை உன்னிடத்தில் சேர்த்து விடுவோம். நீ அஞ்சுவதற்கு அவசியமன்று." குதிக்கும் ஷேனாவை பிடித்து நிறுத்தியபடி அருகில் அமர்ந்து அவனை சமாதானம் செய்ய முயன்ற விஷ்ணு, விழிகளில் எதிர்பார்ப்புடன் வாயிலில் நின்று எதையோ எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் யுவனை நோக்க... அவனோ கடுப்பில் இருபக்கமும் தலையசைத்தான். 

அதற்கு நொந்துக் கொண்டவன், "சரி கண்ணா.. இன்னும் சிறிது நேரம் மட்டும் பொறுமை காத்திரு. எம் தோழர்கள் வந்த மறு கணமே உன்னை. அழைத்துச் செல்கிறோம். உனக்கு மூலிகைகள் சேகரிக்கவும் உதவுகின்றோம்.", பயத்தில் நடுங்கிப்போய் நிற்பவனை கெஞ்சலாக நோக்கியவனைக் கண்டு ஷேனாவின் விழிகள் கசியத் தொடங்கிவிட்டது. தன்னை இன்று இங்கேயே வைத்துக்கொண்டு தந்தையிடம் தனக்கு பெரும் தண்டனையை வாங்கிக் கொடுக்கப் போகிறார்கள் என்னும் பயம் அவனை முழுதாக ஆட்கொண்டிருந்தது.

"இல்லை. நான் செல்கிறேன். எனக்கு தாமதம் ஆகிறது. நான் இவ்வளவு மூலிகைகள் சேகரித்தாக வேண்டும்." கண்ணிலிருந்து குதிக்கும் தண்ணீருடன், தன் கரத்திலிருந்த காகிதங்களை விஷ்ணுவிடம் காண்பிக்க.. பத்திற்கும் மேற்பட்ட தாள்கள் கொண்ட அந்த கத்தையான காகிதங்களில் ஒவ்வொரு தாளிலும் குறைந்தது ஐந்து மூலிகைகள் முதல் எட்டு மூலிகைகள் வரையில் இருந்தது. அதை வாங்கிப் பார்த்த விஷ்ணு, யுவனை இப்போது கெஞ்சலாகப் பார்க்க... நீண்ட பெருமூச்சு விட்ட யுவன், வாயிலில் இருந்து வேகமாக குடிலுக்குள் வந்து ஷேனாவை தூக்கி அவன் கண்ணீரை துடைத்து விட்டுக்கொண்டே, "சரி கண்ணா. வா, நாம் புறப்படலாம். அழக்கூடாது.. தாமதமாகிடாமல் மூலிகைகள் சேகரிப்பதற்கு யாம் உனக்கு உதவுகின்றோம், சரியா? உன் தந்தை உன்னை கடிந்துக் கொள்ளவெல்லாம் மாட்டார்.", யுவன் மென்மையாகக் கூறியதற்கு அவன் வேகமாக தலையை ஆட்ட, "ஆயின்!. யான் பறைந்தது போலவே உனக்கு வாள் சுழற்றுவதற்கு நாளை முதல் பயிற்சியளிப்பேன். நீ தவறாமல் யான் சொல்லுமிடத்திற்கு வரவளிக்க வேண்டும். அதற்கு சம்மதம் தானே உமக்கு?", வினவியபடியே குடிலின் வாயிலைக் கடந்து காட்டுபகுதியை நோக்கி நடக்கத் தொடங்கினான் யுவன்.

தன் கண்களை தானே ஒருமுறை துடைத்துக்கொண்ட ஷேனா, வேறு எதையும் சிந்திக்காது அவசர அவசரமாகத் தலையை மட்டும் அசைத்து சம்மதம் தெரிவிக்க... சகோதரனின் நோக்கம் புரிந்த விஷ்ணு, ஒரு மென்புன்னகையுடன் அவர்கள் இருவரையும் மௌனமாக பின்தொடர்ந்தான்.

✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro