30. குழப்பங்கள், சந்தேகங்கள்
நீண்ட நேரமாக மல்லாந்துக் கிடந்த இரு குழந்தைகளும் இப்போது தரையில் தங்கள் போக்கில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருக்க... தீராவின் சத்தத்தை பல நிமிடங்களாகக் காணவில்லையே என பார்வையைச் சுழற்றிய அபியை அடைந்தது, "அபி மாமா!", என்ற தீராவின் உற்சாகக் குரல். குரல் வந்தத் திசையை நோக்கி சாதாரணமாகவே திரும்பியவன், கையில் எதையோ பூசிக்கொண்டு ஓடி வருபவளைக் கண்டதும் தன் பார்வையை அவள் கரத்தின்மீது கூர்மையாக்கினான்."தீரா, என்ன இது? எப்படி ஏற்பட்டது இந்தக் காயம்?", வேகமாக அவளருகில் அமர்ந்த அபி, காயம் பெரிதாக இருக்கிறதா என ஆராய, "நான் கீழே விழுந்துவிட்டேன் மாமா.. பிறகு, வனதேசத்தில் இருந்தவர்கள் தான் என் காயத்தில் மருந்து வைத்தார்கள்", என விளக்கமளித்ததும், அவள் குறிப்பிடுவது யாரென புரியாமல் குழப்பத்துடன் அந்த மருந்தை நுகர்ந்துப்பார்த்த அபி, "இது என்ன மூலிகை? வனதேசத்தில் யார் உனக்கு இதை காயத்தில் வைத்தது?", எனக் கேட்டுக்கொண்டே அவள் கையில் இருந்த மருந்தை தொட்டுப்பார்த்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கிவிட்டான். தினமும் தன் அரவிந்தன் மாமாவிடம் மூலிகைகளைக் குறித்த விவரங்களைக் கேட்டுத் தெரிந்துக்கொள்வதால் இந்த மருந்தானது ஆதிலோகத்தின் மூலிகை இல்லை என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. வனதேசத்தில் இருந்தவர்கள்தான் மருந்து வைத்தார்கள் என தீரா சொல்லியதை மீண்டும் ஒருமுறை மனதில் ஓடவிட்டுப் பார்த்ததில், இவள் எந்த இடத்தைப் பற்றிக் கூறுகிறாள் என்பதைக் கணித்துவிட்டான் அபி.
"தீரா, உன்னை எங்கும் செல்லாமல் வீட்டிலேயே விளையாடத் தானே சொன்னேன்? ஏன் மீண்டும் அவ்விடம் சென்றாய்?", சிறிது கோபம் கலந்தக் குரலிலும் அபியின் இருக்கமானப் பார்வையிலும் சற்று பயந்துதான் போனாள் அவள். அபிக்கு அவளைக் குறித்த பயம் தான். அவள் ஆதிலோகம் வந்தநாள் முதல் அவளை கைக்குள் வைத்துப் பார்த்துக் கொள்பவன், இவள் மாயங்களைக் கையாளும் திறன் உடையவள் என தாயானவள் கண்டுபிடித்து சொல்லவேண்டியதைக் கண்டுகொண்டு அவளை இன்று மாயகலை பயிற்சிக்குத் தயாராக்குபவன் அவனுக்கு இந்த பயம் இல்லாவிட்டால் தானே ஆச்சரியம்.
"மாமா, நான் செல்லவில்லை... அந்த வெள்ளை மாய வாயிலை நான் திறக்கவில்லை. அதுவாகத் தான் என்னை உள்ளே தள்ளிவிட்டது", தலையை தொங்கவிட்டபடி அழுகைக்குத் தயாராகிய அவள் குரலைக் கேட்ட அபி, உடனடியாகத் தன்னை நிதானமாக்கிக் கொண்டு அவளுக்கு நிகராக தரையில் அமர்ந்தான்.
"சரி, சரி... மாமா கோபம் கொள்ளவில்லை. நீ சமத்துப்பிள்ளை தானே? அழக்கூடாது. என் செல்லப் பிள்ளை தீரா அழக்கூடாது.", அவன் சமாதானம் செய்த பின்னரே அவள் கண்ணிலிருந்துக் கண்ணீர் துளித்துளியாகக் குதித்து விழுந்தது.
"நான் செல்லவில்லை மாமா. என்னை அந்த வாயில் தன் இழுத்துக்கொண்டது.", எனச்சொல்லி ஓவென அழுக, அதைப்பார்த்து அபியின் அருகே வந்த நீலி, "அபி, நிச்சயம் மகாராணி எதையோ செய்ய விளைகிறார். இவளை எதன் காரணமாகவோ பூலோகத்துடன் இணைக்க விரும்புகிறார்", என அபியின் காதில் கிசுகிசுத்தாள். அவள் கூறியதை கேட்ட அபி, தீராவின் கண்ணீரைத் துடைத்தபடி தீவிரமாக எதையோ சிந்திக்க தொடங்கினான்.
நீலி சொல்லிய விஷயத்தில் தன் முழு சிந்தையையும் செலுத்திய நிலையில் ஆழ்ந்த யோசனையில் அபி இருக்க.. அவன்முன், இன்னுமும் தன் அழுகையை நிறுத்தாமலேயே இருந்தாள் தீரா. நொடிக்குநொடி மெல்ல மெல்ல அதிகமான அவளின் விசும்பல்களால் தன் சிந்தனையை விட்டு வெளியே வந்தான் அபி.
"தீரா, இங்கு பார்.. என்னை பார். மாமா மன்னிப்பு கேட்டும் அழுகையை நிறுத்த மாட்டாயா நீ?"
"ஹும்ம்ம்ம்... அங்கு நான் செல்லவில்லை மாமா"
"ஆமாம். அங்கு நீ செல்லவில்லை தான். நானறிவேன். உன்னை, மகாராணி தான் அங்கு செல்லவைத்தார். அந்த வெள்ளைநிற மாயவாயிலை அவரால் மட்டுமே உருவாக்கிட முடியும்.", என தீராவுக்கு நிகராக அமர்ந்த நிலையில் அவளைத் தன் தோளில் சாய்த்து அவன் சொல்ல, "அவ்வாறெனில் அவரை திட்டுங்கள்.. அவரை கோபித்துக் கொள்ளுங்கள். ஹான்ன்ன்ன்ன்... எனில், என்னைத் தள்ளிவிட்டதும் அவர் தானா?", என அழுகையினூடே அபியிடமிருந்து பிரிந்து நின்று அவனை முறைத்ததில், "ஆங்?? மகாராணியைக் கோபித்துக் கொள்ளவா?", அபியுடன் நீலியும், அவளைப் பார்த்துக் கொட்டக் கொட்ட விழிக்கத் தொடங்கினாள்.
இங்கு மறுபுறமோ, தான் சொல்லியதைச் செய்யாமல் தன்னையே உருத்து நோக்கிடும் அபியைப் பார்த்து, தீரா மீண்டும் சத்தமாகக் கத்தி அழத் தொடங்கிட, திடீரென தீராவின் குரல் அதிகரித்ததால் தாரி மற்றும் ரக்ஷா தரையில் அமர்ந்தபடி, அங்கே நிகழும் விசித்திர நிகழ்வை பார்க்கத் தொடங்கினார்கள். அப்போதைக்கு வீட்டின் கீழ் தளத்தில் இருந்த சயனா மற்றும் ரோஹினியும் அவள் குரலால் உடனடியாக கூடத்திற்கு வந்து விட்டார்கள். மாடியில் மாயாவை தூங்க வைத்திருந்த சத்யபாமாவும், இவளின் கூக்குரலால் கூடத்திற்கு விரைந்து வர... அழுகை எப்போதோ நின்ற பின்பும், அழுகையே வரமால் வீம்புக்காக கத்திக்கத்தி, அனைவரையும் அழைக்காமல் அழைத்துக் கொண்டிருப்பவளை என்ன செய்தால் தகும் என்னும் ஒரு பார்வையில் பார்த்து கொண்டிருந்தான் அபி.
"என்னானது இவளுக்கு? ஏன் இவ்வாறு கூச்சலிடுகிறாள்??", கேள்வியை அபியிடம் கேட்டுக்கொண்டே வந்த சயனா, தீராவை தூக்கி தன் கைகளில் வைத்துக்கொண்டு அவள் முகத்தை நோக்கினார். அவள் கண்ணிலிருந்து உருண்டு விழக் காத்துக் கொண்டிருந்தது இரு கண்ணீர் துளிகள்."அது ஒன்றுமில்லை அத்தை.. நான் நீலியை மாயலோகத்திற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன்.. நீயும் வருகிறாயா என கேட்டதற்கு, வர மறுத்து அழுகிறாள்", என அன்னை மற்றும் அத்தைகளிடம் அபி கண்ணடித்துச் சொல்ல, அடுத்த நொடியே அழுகையை மறந்த தீரா, "என்ன?.. நான் அப்படிச் சொல்லவில்லை அம்மா. அபி மாமா பொய்யுரைக்கிறார்..", அபியின் சொல்லுக்கு சயனாவிடம் மறுப்புத் தெரிவித்தவள், வேகமாக அவர் கரத்திலிருந்து நழுவிக்கொண்டு அபியிடம் ஓடினாள். அப்போதே அபியின் சொல் புரிந்து, அங்கே ஒரு குட்டி ஜீவன் பறந்துக் கொண்டிருந்ததை கவனித்தார்கள் பெரியவர்கள் மூவரும்.
"நீலி! எப்பொழுதம்மா இங்கு வந்தாய்? தீரா, அபியுடனா வந்தாய்?.. நான் கவனிக்கவில்லையே", புன்னகையுடன் சத்யா அவளை நெருங்க, அவர் முகத்திற்கு நேராக பறந்தவள், "வணக்கம் அம்மா.. நான் வந்து சில கணங்கள் தான் ஆகிறது. அதனாலே நீங்கள் என்னை கவனிக்கவில்லை", என சத்யாவிற்கு விளக்கமளித்தாள் நீலி.
"எனில், அபியுடன் வரவில்லையா?", ரோஹினின் குரல் அதிர்ச்சியுடன் ஒலிக்க, "ஆம் அத்தை. நான்.. அபியுடன் வரவில்லை... தனித்துதான் இவ்விடம் வந்தேன்", சிறு தயக்கமும் குழப்பமும் குடிகொண்ட குரலில் விடை கொடுத்தாள் நீலி.
"என்ன? அது எவ்வாறு சாத்தியம்? தேவ இனதவரால், வனதேசத்தினைத் தனித்துக் கடக்க முடியாதே? உன்னால் எப்படி இங்கு வர முடிந்தது?", சயனா கேட்ட அதே கேள்வியை, தங்கள் பார்வையில் சுமந்து அவளை நோக்கினார்கள் மற்ற இருவரும். அவர்களுக்கு என்ன பதிலளிப்பது என புரியாமல் நீலி விழித்து கொண்டிருக்க.. அவர்களை இடைமறித்த அபி தீராவை பயிற்சிக்காக வனதேசம் அழைத்து சென்றது முதல் இப்போது தீரா கத்தி கொண்டிருப்பதற்கு காரணம் வரையில் நடந்ததைத் தெளிவாகச் சொல்லிவிட்டான்.
அபியின் சொல்லைக் கேட்டு மூவரும் விக்கித்துப் போய் நிற்க, "அபி கண்ணா... அந்திநேரம் நெருங்குகிறது. முதலில் நீ சென்று நீலியை அவள் இருப்பிடம் விட்டு வா... மற்றவை குறித்து நான் உன் தந்தையிடம் பேசுகிறேன்", எனக்கூறி, அபியின் கேசத்தை வருடினார் சத்யா. அன்னையிடம் சரியென அபி தலையசைக்க, "மாமா... நானும் உங்களுடன் வருவேன். என்னையும் மாயலோகம் அழைத்துச் செல்லுங்கள்", அபியின் கரத்தில் அமர்ந்திருந்த தீரா, அவனது கன்னத்தை சுரண்டி, பவ்யமாக ஒரு பார்வையை வீசினாள். இவ்வளவு நேரம் கண்ணீரில் கரைந்ததை அவள் மறந்துவிட்டதை எண்ணி உள்ளுக்குள் சிரித்து கொண்ட அபி, "சரி செல்லலாம், வா", என மாயவாயிலைத் திறக்கத் தயாராகிட, "மாமா, மாமா.. கவி அக்காவும் வேண்டும். அவரையும் அழைத்துச் செல்லலாம்.. அவரையும் அழையுங்கள்.", அவன் கரத்தில் இருந்தபடியே குதியாய் குதித்தாள் தீரா. "அவ்விருவரும் வீராவை சந்திக்கச் சென்றிருக்கிறார்கள். சற்று நேரத்தில் வந்து விடுவார்கள் அபி.", மருமகன் வினவிடும் முன்னரே மகள்கள் குறித்து விளக்கமளித்தார் ரோஹினி.
புன்னகையுடன் அத்தைக்கு தலையசைத்தவன், "அதென்ன?.. கவி அக்காவை மட்டும் கேட்கிறாய்? எனில் ராவி வேண்டாமா?", சிறு முறைப்புடன் தீராவிடம் வினவிட, "இல்லை, வேண்டாம். ராவி அக்கா இவர்களைப் பார்த்துக் கொள்ளட்டும். எனக்கு கவி அக்கா மட்டும் போதும்.", தரையிலிருந்தக் குழந்தைகளைச் சுட்டிக்காட்டிச் சொல்லியவளைக் குறும்பாக நோக்கினான் அபி.
"அதெப்படி நீ கவியை மட்டும் கேட்கலாம்.. உனக்கு உன் கவி அக்கா வேண்டுமென்றால் எனக்கு என் ராவி வேண்டும். ஹ்ம்ம்..", தீராவுடன் அபி சண்டைக்குத் தயாராகி நிற்க, "அஹ்ஹ்ஹ். முதலில் நான் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.. நினைவிருக்கிறதா அபி?", சண்டையிடத் தயாராகிய இருவரையும் பார்த்து கத்த தொடங்கினாள் நீலி.
✨✨✨
தங்கள் முன் வந்த புதிய சிறுவனை அவனது தந்தை வலுக்கட்டாயமாக அழைத்து சென்ற பின்பு, வந்த வழியாகவே பூலோகம் வந்திருந்த கோவான்கள் மூவரும், சற்று நேரம் முன்பாக கண்முன் கண்ட சிறுவனைப் பற்றியும் அந்த இடத்தைப் பற்றியும் அங்கு நடந்த சம்பவங்களைப் பற்றியும் தங்கள் தோழர்களிடம் கூற, அவர்கள் கூறிய செய்தியால் கோவங்களின் எட்டு நண்பர்களான சகாத்ய சூரர்களுக்கும் ஆச்சரியம் தான்... பூலோகம் அல்லாத மற்றொரு உலகம் இருக்கிறது என்னும் தகவலை அவர்களின் சிந்தை ஒப்புகொள்ளவே சில கணங்கள் தேவை பட்டது. இருப்பினும், அவர்கள் இப்போது முடிவெடுக்கத் திணறுவது என்னவோ, ஷேனா சாதாரண சிறுவனாக இருந்தான், அவன் தந்தை அவனுக்கு நேர்மாறாக இருந்தார்.. இங்கு மறுபுறம் சூரர்கள் சந்தித்த தீரா, மாயங்களை உபயோகித்தாள்... எனில், அந்த லோகத்தின் மக்கள் குணம் எத்தகையது? என்பதே.
"நாம் சந்தித்த இருவருமே குழந்தைகளே.. அதனால் அந்த மாயாவி லோகத்தினால் பூலோகத்திற்கு ஆபத்து நேருமா என்பது இக்கணம் வரையிலும் சந்தேகம் தான். நம் லோகத்தின் பாதுகாப்பிற்காய் அந்த லோகத்தில் இருக்கும் மக்களை குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.. ஆயின் செல்லும் வழியை தான் அறியோம்", இவ்வளவு நேரமாகத் தான் யோசித்துக் கொண்டிருந்ததைக் கூறினான் யுவன்.
"சகோதரா... நாளை, நாம் சென்ற பாதை வழியாகவே மீண்டும் அங்கு செல்லலாமே?", சக்தி, யுவனிடம் வினவ.. சற்று யோசித்த யுவன், "அங்கு அந்த வாயில் அப்படியே இருக்குமா என்ன?", பதில் கேள்வியை எழுப்பி சகோதரனை நோக்கினான் அவன்.
"நாளைய விடியலில் எதற்கும் ஒருமுறை சென்றுப் பார்க்கலாமே?", விஷ்ணு, தன் கருத்தை முன்வைக்க, "அதுவும் சரி தான்.. அங்கே அவ்வாயில் இருப்பின், நமக்கு நன்மையே. நாளை சென்று பார்க்கலாம். அப்படி அவ்வாயில் அங்கு இல்லையெனில் நிச்சயம் வேறு வழியை கண்டறிய வேண்டும் நாம்", என சகோதரர்களின் சொல்லினை ஒப்புக்கொண்டான் யுவன்.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro