Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

3. இருள் சாம்ராஜ்யம்.

~ ~ மை-இருட்டு மட்டுமே குடிகொண்ட அந்த குறுகிய அறையினுள், வெளிச்சத்தின் ஆதாரமாக வட்ட வடிவில் கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது ரத்தச்சிவப்பு நிறத்திலான நெருப்பு.. தரையிலிருந்து மேல்நோக்கி அல்ல.... அறையின் வாயிலுக்கு நேரெதிரே இருந்த சுவற்றினுள் இருந்து அதற்கு முன்பாக அமர்ந்திருக்கும் ஒருவரை நோக்கி. தீஜ்ஜுவாலைகள், அந்நபரின் முகம் நோக்கியே சீறி வர.. வரும் கதிர்கள் யாவும் அவரின் முகத்தை தொடாமல் மிரண்டுபோய் பின்னோக்கியே தான் சென்று கொண்டிருந்தன. நெருப்பையே மிரளச்செய்யும் அவரும், முகம் நமக்கெல்லாம் தெரியாதது போல் வாயிலுக்கு முதுகை காட்டி நெருப்புக்கு முகத்தைக் காட்டித்தான் அமர்ந்திருந்தார் .

அவர் முகத்தை பார்த்துதான் தோரணையை அடையாளம் காணமுடிலும் என்றெல்லாம் கிடையாது. அணிந்திருக்கும் ஆடையே அவரை வர்ணித்துவிடும்.. வழவழபான பட்டுத்துணியில் உருவாக்கப்பட்ட ஒரு கரிய நிற மேல்-அங்கி.. இது எந்தவகையான ரசனையோ தெரியவில்லை. அந்த அங்கியை ஆடையோடு இணைக்க, கூரிய முட்களை வரிசையாக ஒட்டவைத்தது போலான ஒரு இரும்பு இணைப்பு அவரின் இரு தோள்பட்டையிலும் இணைக்கப் பட்டிருந்தது.

நிமிர்ந்து அமர்ந்திருக்கு அவரின் தோற்றம், அவரின் கம்பீரத்தைச் சொல்லியது. ஆடாமல் அசையாமல் இருக்கும் அவரின் நிலை, செய்யும் காரியத்தில் அவருக்கிருக்கும் கவனத்தைச் சொல்லியது. அனைத்திலும் மேலாக, முதுகின் பாதியளவைத் தொட்டிடும் அவரின் நீண்ட கேசத்தின் உச்சத்திலே இருக்கும் அந்த ராஜமகுடம்.... பார்க்கும் நொடியிலேயே அவரின் அதிகாரத்தைச் சொல்லிவிட்டது.

அந்த நெருப்பைப் பார்த்த நிலையில் அமர்ந்திருந்தவர், ஏதோ புரியாத மொழியில், ஓரளவுக்கு வெளியே கேட்கும் அளவிலேயே மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருக்க.. அவரின் வலது புறத்தில், அடர்-நீல நிற பட்டுத்துணியில் மல்லாக்க படுத்த நிலையில், என்ன நடக்கிறதென்றே புரியாமல் அந்த சிவப்பு நெருப்பை உறுத்து நோக்கியபடி தன் வலதுகாலின் கட்டைவிரலைப் பிடித்து சுவைத்துக்கொண்டிருந்தான் அவன்.

பல நிமிடங்களாக தொடர்ந்து கொண்டிருந்த யாகத்தை மேலும் ஓரிரு நிமிடங்களுக்கு தொடர்ந்தவர், இறுதியாக அதை முடித்துக்கொண்டு தன் இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி, எக்காரணத்திற்காகவும் தலையைவிட்டு கீழிறங்கிடாத தன் ராஜ மகுடத்தை பொறுமையாக கழற்றி இடதுபக்கத்தில் வைத்துவிட்டு, சிவந்த நெருப்பை நோக்கித் தன் இரு கைகளையும் ஏந்தினார். "ஆத்ம லோகத்தின் அதிபதியே! உன் ராஜாங்கத்தை விரிவு செய்கிறேன்.. என் கோரிக்கையை ஏற்றுக்கொள்..", கறாரான அவர் குரலில் இருக்கும் கம்பீரம், ஒரு வீரம் நிறைந்த அரசனுக்கு சலைத்ததல்ல.. "நிலையான இருளின் தளபதியே! காணிக்கையை ஏற்றுக்கொண்டு என் வேண்டுதலை நிறைவேற்றுங்கள்..", தன் இடையில் சொருகி வைத்திருந்த குறுவாளை எடுத்து இடது உள்ளங்கையை கிழித்து அந்த நெருப்பின் முன்னிலையில் ரத்ததை விட்டபடி மீண்டும் இரண்டு கைகளையும் ஏந்தினார். "என் தேவனே!! என்றும் உங்கள் அடிமை நான். உங்கள் சேவகன் நான்.. இருள் சாம்ராஜ்யம் பிரபஞ்சமெங்கிலும் விரிந்து இருளின் படைகள் கூட... என் கோரிக்கையை நிறைவேற்றிடுங்கள் தேவா!!", அவர் உரக்க கத்திய நொடியில் அந்த சிவப்பு நெருப்பினுள் இருந்து பல கரிய ஆன்மாக்கள், கோரமாக அலறிடும் நிலையில் அந்த நெருப்போடு சேர்ந்து வெளியே வருவதும் மீண்டும் உள்ளே போவதுமாக வெளிப்படத் தொடங்கியது.. அதைப்பார்த்ததும் நெருப்பின் முன் அமர்ந்திருந்தவரின் கண்கள் தீவிரமானது. சுவற்றினுள் ஒரு ஆழமான இடத்தில், நெருப்பின் தொடக்கம் இருக்கும் இடத்திலிருந்து அந்த ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்றுகூடி ஏதோ ஒன்றினை வலுக்கட்டாயமாக இழுத்துவருவது அவர் கண்ணில் சிக்கிவிட்டது.

"உன் உயிருக்கு உடல் தருகிறேன், என்னிடம் வா..", அந்த நெருப்பை நோக்கி கட்டளையிட்டார்..

"உனக்கு மீண்டும் ஒரு பிறப்பைத் தருகிறேன்..", அடுத்த கட்டளை.., "நீ தொலைத்த உன் வாழ்க்கையை உனக்கே மீண்டும் தருகிறேன்.. என் மகனாக என்னிடமே வந்திவிடு மகனே", இறுதி வார்த்தையைக் கூறிய நொடியில் மொத்த ஆன்மாக்களும் ஒன்றுசேர்ந்து இழுத்துவந்த அந்த ஒரேயொரு ஆத்மாவை மட்டும் நெருப்பைவிட்டு வெளியே தள்ளிவிட.. நொடியில் செயல்பட்டது அவரின் கரங்கள். ரத்தம் வழியும் இடது கைக்கொண்டு அந்த ஆன்மாவை கையில் ஏந்தியவர், தனக்கு பக்கத்திலேயே கிடந்த பிஞ்சுக் குழந்தையின் நெற்றியில் தன் வலது உள்ளங்கையை பதித்தார். அவர் கையிலிருந்து கீழ்நோக்கி வழிந்து கொண்டிருந்த ரத்தம், அந்த ஆன்மாவின் கைக்கு வந்ததும், அதன் உருவம் மொத்தத்திலும் படர்ந்து பயணிக்கத் தொடங்கிட.. சுவற்றில் மட்டுமே எரிந்து கொண்டிருந்த நெருப்பின் சிவந்த ஒளி, மெல்ல மெல்ல வளர்ந்து அந்தக் குறுகிய அறை முழுவதையும் ஆக்கிரமித்தது.. இப்போது, ஒளியின் உள்ளே என்ன நடக்கிறது? எதுவுமே தெரியவில்லை.. அறை முழுவதுமே ரத்த நிறத்தில் தான் மிளிர்ந்து கொண்டிருந்தது. சிறு ஓசை கூட இல்லை.. ஆழ்ந்த நிசப்தம் மட்டுமே..

ஒரு நொடி.. இரு நொடி.. முழுதாக ஐந்து நொடிகள் கடந்த நேரம் அந்த அறையுள் இருந்து திடீரென கேட்டது ஒரு குழந்தை துடித்து அலறிடும் ஓசை... நொடிகள் செல்லச் செல்ல அக்குழந்தையின் அலறல் ஓசை அதிகரித்துக் கொண்டே செல்ல.. அத்துடன் இணைந்து கேட்டது இன்னுமொரு ஒலி. சலங்கை ஒலி. பெண்கள் கால்களில் அணியும் கொலுசில், சரம் சரமாக கோர்த்திருக்கும் நிறை சலங்கையின் ஒலி. அத்துடன் இணைத்தே ஒலித்தது ஒரு பெண்ணின் ஆக்ரோஷ குரல்.

"என்ன காரியம் செய்கிறீர்கள்..", அவளின் குரலைத் தொடர்ந்து, அலறிக்கொண்டிருந்த குழந்தையின் அழுகுரல் முற்றிலுமாக ஓய்ந்தது.

"இங்கென்ன செய்கிறாய் நீ", யாகத்தை நடத்திய நபரின் குரல் எரிச்சலும் கோபமும் கலந்து ஒலிக்க, "உங்களுக்கு இங்கென்ன வேலை??.. இது என்ன கோலம்.. மூடனா நீங்கள்..", உச்ச ஸ்தானியில் ஒலித்தது அவள் குரல்.

"என்ன சொன்னாய்..??", அவரின் ஒரு அழுத்தமான குரலைத் தொடர்ந்து அந்தப் பெண் பேசத் திணறும் குரலும் ஒலித்தது. நிச்சயம் அவளின் கழுத்தை பிடித்திருப்பார் அவர். "யாரிடம் குரலை உயர்த்துகிறாய் என நினைவில் வைத்து பேசு.", இறுதி எச்சரிக்கை செய்யும் குரலைத் தொடர்ந்து அவளின் தடுமாறும் காலடிகள், கொலுசொலியின் வாயிலாக புரிந்தது. கழுத்தை பிடித்திருந்தவர் இப்போது நிச்சயம் அவளைத் தள்ளி விட்டிருப்பார்.

"என் உயிரே பிரிந்தாலும் இதற்கு நான் அனுமதியேன்..", பெருமூச்சுகளுக்கு நடுவில் அவளின் அழுத்தமான குரல் ஒலிக்க.., "என் காரியங்களில் குறுக்கிட எண்ணம் கொள்ளாதே..", அவர் குரல், கோபத்துடன் கலந்த கட்டளையாக ஒலித்தது.

"இது மொத்த லோகத்திற்கு மட்டுமல்ல... நம் உயிருக்கும் ஆபத்து.."

"யார்யாருக்கெல்லாம் ஆபத்தென நான் அறிவேன்.. நீ எதையும் விளக்கிட அவசியமில்லை.. விலகிச்செல்.."

"முடியாது.."

"இறுதியாக உன்னை எச்சரிக்கிறேன். இங்கிருந்து சென்றுவிடு"

"நினைத்ததை முடிக்காமல் விலகி செல்பவள் நானல்ல.."

"நானும் விலகுபவன் அல்ல ஜ்வாலாங்கினி..", அவர் கோபத்தில் அலரிய பெருங்குரலையடுத்து அவரின் வேகப்பெருமூச்சுகளே அவ்விடத்தின் நிசப்தத்தை அழித்துக் கொண்டிருக்க.. இரு நொடிகள் கடந்த நேரம், பாறைகள் உருளுவது போல் ஒரு சத்தம்.. அந்த சத்தம் ஓய்ந்த மறுநொடியில் மெல்ல மங்கத் தொடங்கியது அந்த சிவந்த நிற ஒளி.

இதற்கு முன்னால் குறுகியிருந்த அந்த அறை, இப்போது தாராளமாக இடத்தைக் கொடுக்கும் நிலையில் இருந்தது.. அதிலும், ஒரு வினோத நீர்நிலை, அறைக்கு நடுவிலிருக்கும் மெத்தையைச் சுற்றிலும் அமைந்திருந்தது. இதில் வித்தியாசம் என்னவென்றால், அந்த நீரிலிருந்து புகை வந்துகொண்டிருந்தது. இவை அனைத்திலும் மேலாக சில்லென்ற காற்று, மேற்கூரையில்லா அந்தரத்தின் வழியே வந்து மேனி தீண்டியது..

யாகத்தில் அமர்ந்திருந்த அந்நபர், வாயிலில் இருந்து எவ்வளவு தொலைவில் அமர்ந்திருந்தாரோ அதே தொலைவில் இப்போது நின்றிருந்தார். இப்போதும் முதுகை காட்டிய நிலையில்தான். அவருக்கு முன்பாக இருந்த சுவர் மட்டும் இப்போது இல்லை. அந்த இடத்தில் இருந்த நெருப்பு மட்டும் சிறிது சிறிதாக குறையும் நிலையில் எரிந்துக் கொண்டிருந்தது. சற்றுமுன் ஒரு பெண் அங்கு வந்து அவருடன் சண்டையிட்டதற்கான எவ்வித தடையமும் அங்கில்லை.. அங்கே இருந்ததெல்லாம், ஏற்கனவே அவருக்கு அருகில் நீல நிற துணியில் படுத்திருந்த குழந்தையும், இப்போது புதிதாக பொன்நிற பட்டுத்துணியில் படுத்துக்கொண்டு, தன்னை சுற்றிலும் இருப்பவைகளை கண்களால் அளவெடுத்துக் கொண்டிருக்கும் குழந்தையும் தான்.. வித்தியாசம் என்னவென்றால், ஏற்கனவே இருந்த குழந்தை இப்போது கண்களை மூடிய நிலையில் மூச்சு பேச்சற்று இருந்தது..

சரியாக அந்த இரு குழந்தைகளையும் அவர் தன் கையில் தூக்கிய நொடியில், மிச்சம் மீதியாக எரிந்து கொண்டிருந்த அந்த நெருப்பு முழுவதுமாக அணைந்துபோய்விட.. அவர் அந்த அறையை விட்டு வெளியேரிடும் காலடி ஓசையை தொடர்ந்து அறைகதவு படாரென அடைக்கும் சத்தமும் தான் கேட்டது இறுதியாக. ~ ~

"ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டது.", உணர்வற்ற குரலில் கூறியபடி, அடைக்கப்பட்டிருக்கும் அந்த கதவுக்கு முன்னால், இறுகிய முகத்துடன் நின்றிருந்தார் நிழல்தேசத்தின் அரசரான இருளரசன். சாதாரன மனிதன் ஆறடி எனில் இவர் எட்டடி உயரத்தில்... இருளுக்கே இருளை தானம் செய்யும் அளவிற்கு ஒரு நிறத்தில், தடித்த உடலுடன் கரும்புகை சூழ நின்றிருந்தார் அவர். அவரின் பார்வை, உணர்வற்று போய் அந்த கதவையே பார்த்திருக்க.. அவர் தோளின் மேல் படர்ந்தது ஒரு பெண்ணின் கரம்.

"அண்ணியின் நினைவு வந்துவிட்டதா சகோதரா?", இருளரசரின் தோள் அளவிற்கே வளர்ந்திருந்த ஒருவள், கரிசனத்துடன் கேட்ட கேள்விக்கு அவரின் பதில், ஆழ்ந்த பெருமூச்சே.

"நடந்தது நடந்ததுதான் சகோதரா.. அதையெல்லாம் விடுங்கள். அதான் அவரை உரித்து வைத்தது போல் ஒரு மகனை விட்டுச் சென்றிருக்கிறாரே", நம்பவைக்கப்பட்ட உண்மைகளை நம்பிக்கொண்டு அப்பெண் ஆறுதல் கூற.. உண்மையான உண்மை நிழலாடியது, இருளரசரின் நினைவுகளில். இப்போது அவரின் பார்வை பதிந்திருக்கும் அதே அறைக்குள் தான் நடந்தது அந்த நிகழ்வு.. ஐந்து ஆண்டுகளுக்கு முன்.. இரண்டு வாரக் குழந்தையாக இருந்த ஷேனாவின் உயிர்-ஆத்ம சக்திகளைத் திருடி, இருளரசர் உருவாக்கிய அவரின் செயற்கை மகன், விரோஷன ராணா பிறப்பெடுத்த நிகழ்வு.. அனைத்தும் நேற்று நடந்தது போல் புத்தம் புதிதாக இருக்கிறது அவர் நினைவில். புதிதாக பிறந்திருந்த ராணாவையும் அவனுக்கு தன் சக்திகளை கொடுத்ததால் மயங்கியிருந்த ஷேனாவையும் தூக்கிக்கொண்டு நேராக அரசவைக்குத்தான் சென்றார்.

ராணாவை மட்டும் மக்களுக்கு காண்பித்தவர், ஏழு மாத கார்பினியாக இருந்த தன் மனைவி ஜ்வாலாங்கினி, இவனை மட்டும் தன்னிடம் கொடுத்துவிட்டு பஞ்ச-பூதங்களுடன் இணைந்து விட்டதாக அறிவித்துவிட்டார். இன்றுவரையில் அனைவரும் அதையே உண்மையென நம்பிக்கொண்டிருக்க, இருளரசரை தவிர்த்து அந்த உண்மையை அறிந்த மற்ற இருவர், பிஞ்சு குழந்தைகளாக இருந்த ஷேனாவும் ராணாவும் தான்.

நீண்ட நினைவலைகளில் இருந்து வெளியே வந்தவர், "ஹ்ம்ம்ம்.. இவ்வழியில் வரும்போதெல்லாம் என் நினைவுகள் பின்னோக்கியே நகர்கின்றன காத்யாயினி.. சரி அதை விடு... நான் உனக்கு வைத்திருப்பதாகச் சொல்லிய பரிசை காண்பிக்கிறேன் வா..", சட்டென வரவழைத்துக்கொண்ட புன்னகையுடன் தன் சகோதரியை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் ஒரு அறையினுள் நுழைந்தார் அவர். அவர்கள் சென்றபின் இரண்டே நொடிதான் கடந்திருக்கும்.. இவ்வளவு நேரம் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த அந்த அறைகதவு, பூப்போல திறந்து கொண்டது. உள்ளே இருந்து சின்னஞ்சிறு சிறுவன் ஒருவன் தலையை மட்டும் எட்டிக்கொண்டு பார்த்தான். தன் பாதையில் எவரும் இல்லை என்பதை உறுதிபடுத்திய பின்பே அறையை விட்டு வெளியேறி வந்தவன், பழையபடிக்கே கதவை அடைத்து வைத்துவிட்டு, இருளரசனும் அவரின் சகோதரியும் சென்ற திசைக்கு எதிர் திசையில், துள்ளிக்குதித்து ஓடினான்.

✨✨✨

இறுக்கம் நிறைந்த இருள்மாளிகையின் அந்த நீண்ட நடைபாதை வழியாக நடந்து கொண்டிருந்தான் ஷேனா... அப்போது ஒரு அதிகார குரல் அவன் பெயரை உரக்கக் கத்தி அழைக்க... எங்கோ இருந்து வந்த குரலை கச்சிதமாக அடையாளம் கண்டு, குரல் வந்த திசை நோக்கி வேகமாக ஓடினான்.. அந்த இருளில் கூட எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் ஓடியவன், நேராக சென்று நின்றது இருளரசர் மற்றும் அவரின் சகோதரியின் முன்புதான்..

"அழைத்தீர்களா தந்தையே?...", மெல்லிய குரலில் கேட்ட ஷேனாவின் பார்வை பதிந்திருந்தது என்னவோ இருளரசனின் பாதத்தை நோக்கித்தான். நேருக்கு நேராக எதிர்கொள்ள கூட அவனுக்கு அதிகாரம் இல்லா நிலைதான் இங்கே. ஷேனாவின் வார்த்தைகளுக்கு இருளரசனிடம் இருந்து எந்தவித பதிலும் வராமல் இருக்க.., "செல்... சென்று என் மகளை இங்கு அழைத்து வா..", அவனை உதாசீனம் செய்யும்படியான வார்த்தைகள் வந்தது காத்யாயினியின் நாவிலிருந்து. அதையெல்லாம் பொருட்படுத்தாதவன், சரியெனக்கூறி இருவருக்கும் தலைபணிந்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் அங்கிருந்து நகர்ந்தவுடன் இருளரசனை நோக்கிய காத்யாயினி, "சகோதரா.. நீங்கள் சொல்லிய சிறுவன் இவன் தானே.?", ஏதோ ஒரு அதிசயத்தை கண்டதைப் போல் வினவினாள் அவள்.

"ஆம் காத்யாயினி.. இவனேதான் நான் குறிப்பிட்ட அதி சக்திசாலி.. இந்நிழல்தேசத்தில் பிறப்பெடுத்த ரட்சக ராஜ்யத்தின் வாரிசு..", இருளரசன் சொற்கள் ஒவ்வொன்றிலும் அவ்வளவு ஆணவம்.. அவ்வளவு தலைக்கணம்.

"சகோதரா.. அவன் அருகில் நிற்கையில் அவனது சக்திகளை என்னால் நன்றாகவே உணர முடிகிறது. இப்படி ஒருவன் நம்மிடம் இருந்தால்... நிச்சயம் நம் சக்திகளுக்கு என்றும் குறைவே கிடையாது", காத்யாயினியின் எண்ணங்கள் சுற்றி வந்தது ஷேனாவின் அளவிட முடியாத சக்திகளின் பின்னேதான்.

"அருகிலிருந்து உணர்ந்ததற்கே இவ்வளவாய் மகிழ்கிறாயே சகோதரியே.. இப்போது அவன் வரட்டும்... அவனது சக்திகளை இன்று நீ முழுமையாக உணர்ந்து பார்..", ஏதோ தனது சக்திகளை தானமாக கொடுக்கப்போவது போல தாராள வள்ளல் வசனங்களை பேசிய இருளரசன், வெளியில் ஆயிரம் வசனங்களைப் பேசினாலும், அவர் மனதினுள் ஏதோ ஒன்று ஆழமாக புதைந்திருப்பது, தங்கையை பார்க்கும் பார்வையிலேயே புரிகிறது. ஆனால் பாவம், அவருக்கு முன்னிருப்பவளுக்கு அது புரியவில்லை.

"அதற்காய் தான் காத்திருக்கிறேன் சகோதரா", என்கையில் அவள் கண்களில் அத்தனை பேராசை... அதன் நஷ்டமும் அழிவும் அவளுக்கு பாதி வழியில் நிற்கிறது. அவள் முன்னேயே நிற்கிறது. அதை அறியாமல் அந்த அழிவு காட்டிடும் பாதையிலேயே சென்றாள் காத்யாயினி.

✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro