Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

29. மாயவாயில்

வனதேசத்தில் அலைந்துத் திரிந்ததில் உண்டானக் கலைப்புடன் அன்னை மடியில் ஷேனா படுத்திருக்க... மகனின் கேசத்தை மென்மையாய் கோதிக்கொண்டே, "ஷேனா, இன்று முதல்முறையாக வனதேசம் சென்றாயே, எப்படி இருந்தது அங்கே?", ஆர்வமாகக் கேட்டாள் ஷிவேதானா. அன்னையின் கேள்விக்கு, அடுத்தநொடியே வந்தது ஷேனாவின் சூடான பதில்.

"அங்கு மூவர் என்னை வெகுவாக அச்சமடையச் செய்துவிட்டார்கள் அம்மா", சிறு கோபத்துடன் அவன் கத்த, "என்ன? என் மகனையே அச்சமடையச் செய்தார்களா? யார் அவர்கள்?", தன் மகனின் கோபத்தால் சற்று அதிசயித்துப் போனக் குரலில் கேட்டாள் ஷிவேதனா. "ஆம் அம்மா", படக்கென எழுந்துக்கொண்டவன், தீவிர முகபாவத்துடன் கதையைக் கூறத் தொடங்கினான்.

"நான், வழி தவறிவிட்டேன் அம்மா. அங்கு, அவர்கள் மூவரும் என் முன்னே வந்து நின்றார்கள். ஒரேபோல் இருந்தார்கள். அவர்களின் விழி, மூன்று நிறத்தில் இருந்தது. பிறகு, நீங்கள் கொடுத்த வாளை என்னிடமிருந்து பறித்துக் கொண்டார்கள்", கூறிக்கொண்டே போனவனை இடைமறித்த ஷிவேதனா, "வாளா? எந்த வாள் ஷேனா?", குழப்பத்துடன் கேட்க, "அந்த வாள்தான் அம்மா. நீங்கள் என் பாதுகாப்பிற்காய் கொடுத்தீர்களே!", அந்தக் குறுவாளை, போர் வாளாகவே பாவித்துக் கூற, "ஓஹ்! குறுவாளைப் பற்றிச் சொல்கிறாயா?", மகனின் பதிலால் சிரித்துவிட்டாள் ஷிவேதானா.

"ஆம் அம்மா, அவ்வாள் தான். அதை அவர்கள் பிடுங்கிக்கொள்ளவும் நான் ஓடி வந்துவிட்டேன். அவர்கள் என் பின்னேயே துரத்தி வந்தார்கள். பிறகு, நான் மரத்தில் ஏறிக்கொண்டு அவர்களை விரட்ட முயற்சிக்கையில், நான் வீசியக் கல்லை அவர்களின் பார்வையைக் கொண்டே எரித்து விட்டார்கள். பின், என்னை தூக்கிக்கொண்டு வானில் சென்றார்கள். எனக்கு மிகவும் அச்சமாக இருந்தது. தந்தைதான் என்னை மீண்டும் இங்கு அழைத்து வந்தார்", முகத்தில் உண்மையான பயத்துடனே நடந்ததைக் கூறிமுடித்தான் அவன்.

இருளரசன் குறித்து அவன் கூறியதைக் கண்டுக்கொள்ளாத ஷிவேதனா , "இதில் அச்சமடைய ஒன்றுமே இல்லையே ஷேனா. அவர்களும் நம்மைப் போன்றவர்கள் தான். நீ அவர்களைத் துன்புறுத்தாத வரையில் அவர்களால் உனக்கு எத்தீங்கும் நேராது. அவர்களிடம் நல்லவிதத்தில் நட்பு பாராட்டினால் நீ கேட்பதை அவர்கள் உனக்குக் கொடுப்பார்கள். அவர்களை எப்போதாவது நீ மீண்டும் சந்தித்தால், முன்பு செய்த செயலுக்கு மன்னிப்புக் கேட்டிட வேண்டும். சரியா?", மென்மையாகக் கூறித் தன் மகனுக்கு அவள் புரியவைக்க... சிலநொடி யோசித்தவன், உண்மையில் அவர்கள் தன்னைக் காயப்படுத்த நினைக்கவில்லை என்பதை உணர்ந்து அன்னையிடம் சரியென தலையாட்டினான்.

"அம்மா, ஆனால் அவர்கள் எத்தீங்கும் செய்ய மாட்டார்கள் என எப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள்தான் அவர்களைப் பார்க்கவே இல்லையே?"

"இதில் தேடிக் கண்டுபிடிக்கும் அளவிற்கு ரகசியம் எதுவுமில்லை ஷேனா. அவர்கள் பார்ப்பதற்கு ஒரேபோல் இருந்தார்கள் என்று சொன்னாய். உன்னைத் தூக்கிக்கொண்டு வானில் பறந்தார்கள் என்றும் சொல்கிறாய். எனில், நிச்சயம் அவர்கள் குள்ள-மாயர்களாகத் தான் இருப்பார்கள். வனதேசத்தில் இருக்கும் இரண்டு மாய இனங்களைப் பற்றித்தான் நான் உனக்குச் சொல்லியிருக்கிறேனே", ஷிவேதனா தன யூகத்தை அவனுக்குப் புரியவைக்க... சிறு யோசனையுடனே அவனும் தலையாட்டினான். தனக்கு நடந்ததை ஷேனா கூறியவிதத்தில், அவன் சென்றுவிட்டுத் திரும்பியது பூமிக்குத்தான் என்னும் யோசனையே ஷிவேதனாவிற்கு இல்லை. மாறாக, அவர் மனதினில் நினைத்துக் கொண்டது, வனதேசத்தில் இருக்கும் குள்ள-மாயர்கள் இனத்தைச் சேர்ந்த எவரையோதான் இவன் சந்தித்திருக்கிறான் என்பதே.

✨✨✨

புதிதாகத் திறந்த வெள்ளை நிற மாயவாயிலினுள் விழுந்த தீரா, நேராகச் சென்று விழுந்தது, வேட்டைக்காக புதரின் பின்னால் மறைந்த நிலையில் அமர்ந்திருந்த எவரோ ஒருவரின் முதுகின் மீதுதான். கையில், வில்-அம்பைப் பிடித்துக்கொண்டு எதையோ குறிவைத்துக் கொண்டிருந்த அந்நபர், தன் முதுகின்மீது ஏதோ பொத்தென விழுந்ததில், அதை வேகமாகத் தள்ளிவிட்டுப் படக்கென நிமிர... அவன் நிமிர்ந்த வேகத்தில் அவன் கைகளும் செயல்பட்டது. அவனின் கையசைவில், அங்கிருந்த நிலம் தூண்போல் மேலெழும்பி நாலாபுறத்தில் இருந்தும் தீராவைச் சிறைவைத்தது. அந்தச் சத்தம் கேட்டதில், புதருக்கு மறுபக்கம் இருந்து எழுந்தான் மற்றொருவன். "என்னானது சகோதரா? ஏனிந்த பதற்றம்?", தனக்குப் பின்னால் கேட்டக் குரலுக்கு எவ்வித பதிலும் வழங்காது, தன் முதுகின் மீது விழுந்து, இப்போது தன் சிறையில் கிடக்கும் சிறுமியைத்தான் நோக்கிக் கொண்டிருந்தான், அவளைச் சிறை வைத்தவன்.

தான் கேட்டக் கேள்விக்கு பதில் கொடுக்காமல் குழப்பப் பார்வையுடன் தரையைப் பார்த்துக் கொண்டிருப்பவனை கவனித்த மற்றொருவன், "அங்கு என்ன தானடா இருக்கிறது? வானிலிருந்து விண்மீனேதும் கீழே விழுந்துவிட்டதா? அப்படி எதையடா இந்த நோக்கு நோக்குகிறாய்?", நக்கலாகக் கேட்டுக்கொண்டே புதரைச் சுற்றிவந்து அவனும் அவ்விடத்தைக் காண... வேகமாக விழுந்ததால் தன்னுடையக் குட்டிக் கையில் ஏற்பட்டிருந்த மிகச் சிறிய காயத்தையும் அதில் துளிர்த்திருந்த அரைத்துளி இரத்தத்தையும் பார்த்துக்கொண்டே தன்னைத் தள்ளிவிட்டதுடன் கல்லாலான வேலியை வைத்துச் சிறைவைத்திருக்கும் நபரை முறைத்துக் கொண்டிருந்தாள் தீரா. அக்காட்சியைக் கண்டு அதிர்ந்த மற்றொருவன், பதறியபடி அவளை நெருங்க முனைந்த நொடி, "வேண்டாம் சகோதரா", அவனைத் தடுத்தான், தீராவை சிறை வைத்தவன்.

"ஏன் சகோதரா?"

"சிந்தித்துச் செயலாற்று. இவ்வனத்தினில் இச்சிறுமிக்கு என்ன வேலை? இது ஏதேனும் எதிரிகளின் சூழ்ச்சியாக இருப்பின்?", தீவிர முகத்துடன் அவன் கேட்க... அதன்பின்பே அதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிய மற்றொருவனைக் கலைத்தது தீராவின் குரல்.

"நீங்கள் இருவரும் ஏன் ஒரேபோல் இருக்கிறீர்கள்? நீங்களும் என் இளவரசிகளைப் (மாயா, ரக்ஷா) போல் ஒரே நேரத்தில் பிறந்தீர்களா?", கேள்வியை எழுப்பியவள், தன்னைத் தள்ளிவிட்டவனை இன்னுமும் முறைத்தபடியே தான் இருந்தாள். அவள் கேட்டதில் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் நின்றிருந்த இரட்டை சகோதரர்கள் இருவரும் அவளை வினோதமாக நோக்க... தன் உள்ளுணர்வு உருத்தியதால் ஏதோ ஒருவிதக் குருட்டு நம்பிக்கையில், எந்தவித தயக்கமும் இல்லாமல் அவளருகில் அமர்ந்து அவளின் காயம்பட்டக் கையைப் பற்றினான், புதருக்கு பின்னிருந்து வந்தவன். அவளின் காயத்தை ஆராய்ந்துக் கொண்டே, "யாரம்மா நீ? வனத்தில் தனிமையில் என்ன செய்கிறாய்?", மென்மையாகவே கேட்டவனிடமிருந்து வெடுக்கெனத் தன் கையை இழுத்தவள், "ஹும். நானாக ஒன்றும் வரவில்லை. நான் மாய வாயிலினுள் விழுந்துவிட்டேன். என்னை விடுங்கள். நான் மருந்து போட்டுக்கொண்டு வீட்டிற்குச் செல்லவேண்டும்", படபடவென பேசிவிட்டு, அடுத்தநொடியே நீல நிற ஒளிக்குள் மறைந்து போனாள்.

கண்முன் நடந்த நிகழ்வை இருநொடி கடந்தே உணர்ந்தவன், வில்லுடன் நிற்கும் தன் சகோதரனை அதிர்ச்சியில் நோக்கியவாரே, "இது சாதாரண எதிரிகளின் சதி போல் அல்ல சகோதரா. ஏதோ மாய எதிரிகளின் சதிவலைதான் இது. வா, உடனடியாக குடிலுக்குச் சென்று மற்றவர்களை எச்சரிக்க வேண்டும்", தீவிரமாகக் கூறியபடித் தன் இரட்டை சகோதரனை இழுத்துக்கொண்டு தங்களின் குடிலுக்கு விரைந்தான் அவன். அதேநேரம், அவன் குறிப்பிட்ட அந்த விசாலமான குடிலில், ஒரு பக்கத்தில் இருந்த நீண்ட மர மேஜையின் மீது பலவித வண்ண திரவங்களைச் சுமந்திருந்தக் கண்ணாடிக் குடுவையினை ஆராய்ந்துக் கொண்டே, "தாமிருவரும் கூறுவதை மெய் தானென யான் எவ்வாறு நம்புவது?", எனக் கேட்டபடி, தனக்கு முன்பாக இருந்த இருவரை நோக்கினான் அவன். பெரிய தீரா பார்த்த மூவரில் இன்னொருவன்.

"நன்கு கேள் நண்பா.. இவர்களின் கதை நம்புவது போலவா இருக்கிறது? இம்முறை நாம் ஏமாறக் கூடாது", தீராவை சந்தித்தது பற்றி அவ்விருவரும் கூறியதை நம்பாமல், இருவரையும் இங்கு இழுத்து வந்திருந்தவன், தீவிரமாகக் கூறியபடி வந்து அந்த மேஜையின் மீது சாய்ந்துக்கொண்டு மற்ற இருவரையும் நோக்க, "எதைக்கூறி நம்ப வைப்பேன் உங்களை", எனச் சொல்லாமல் சொல்வதுபோல் சத்தமாகப் பெருமூச்சு விட்டார்கள், தீராவின் குரங்குச் சேட்டைகளைக் கண்டிருந்த அவ்விருவரும். அதேநேரத்தில், "எனக்கு காயத்திற்கு மருந்து போட்டு விடுங்கள்", மேஜைக்குக் கீழே கேட்டக் குரலால் பகீறென்றிருக்க.. வேகமாகக் குனிந்து கீழே நோக்கினான், மருந்துக் குடுவையை ஆட்டிக்கொண்டு, தன்நண்பர்களைக் கண்டு நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தவன்.

அங்கே, காயம்பட்டத் தன் கையை நீட்டியபடி தீவிர முகத்துடன் தீரா நின்றிருக்க... அவளுக்குப் பின்னால் நீல நிறக் குட்டி ஒளிவட்டம், ஒரு வாயில் போல் இருந்தது. எங்கோ கேட்டக் குரல் போல் இருக்கிறதே என தீராவின் குரலை ஓரளவிற்கு கண்டுபிடித்துவிட்ட இருவரும் மேஜையைத் தாண்டி எட்டிப்பார்த்த அடுத்தநொடி, "இவள்தான் அந்தச் சிறுமி", அங்கு நின்றிருந்தவளைக் கண்டு கண்கள் விரிய, ஒரே நேரத்தில் கத்தினார்கள். இப்போது நால்வருமே தீராவைக் கண்டு விழிக்க... அவர்களில், மூலிகைக் கூடையுடன் தான் முதலாவதாகச் சந்தித்தவனை மட்டும் அடையாளம் கண்டுக்கொண்ட தீரா, "நீங்கள் வைத்திருந்த மூலிகை எங்கே? எனக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. எனக்கு தாருங்கள்", மேஜையை சுற்றிக்கொண்டு வந்து அவன் முன்பாக நின்றாள்.

"இப்போதாவது நம்புகிறீர்களா?", இவ்வளவு நேரம் தன் பேச்சை நம்பாமல் நின்றிருந்த நண்பர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்தபடியே மேஜையின் மீதிருந்த ஒரு மண் குடுவையினுள் இருந்து சில இலைகளை எடுத்து, அதைக்கசக்கி தீராவின் குட்டிக் காயத்தில் தடவிக்கொண்டே, "தீரா, நீ உன் வீட்டிற்குச் செல்கிறேன் எனக் கூறிவிட்டுச் சென்றாயல்லவா? இப்போது இங்கு என்ன செய்கிறாய்? உன் வீடு எங்கே இருக்கிறது?", எனக் கேட்டுக்கொண்டே மூலிகையை முழுவதுமாகப் பூசி முடிக்க, "நான் அங்குதான் சென்றேன். பின், கீழே விழுந்துவிட்டேன். உங்களிடம் காயதிற்கு மூலிகை இருந்ததல்லவா, அதான் மருந்திட்டுக்கொள்ள இங்கே வந்தேன். சரி, நன்றி", என்றவள், அவன் கையிலிருந்து நழுவிக்கொண்டு, வந்தவழியே ஓடிவிட்டாள்.

"இப்படித்தான் அப்போதும் ஓடினாள்", என நொந்துக் கொண்டவன், தீராவை புதிதாக சந்தித்த இருவரையும் நோக்கி நிமிர, "சற்றுமுன் இங்கு என்ன நிகழ்ந்தது?", என்னும் பார்வையுடன் சிலையாகிப் போய் நின்றிருந்தார்கள் அவ்விருவரும்.

✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro