27. கோவன்களும் ஷேனாவும்
தன் கண்முன்னே நடந்த நிகழ்வை ஒரு மரத்தின் மீது அமர்ந்தபடி ஆவென வாயைப்பிளந்து பார்த்த ஷேனா, தன்னைப் பின்தொடர்ந்தே அங்கு வந்திருந்த மூவரையும் பார்த்து மிரளத் தொடங்கினான். இவர்கள் மீது கல்லை எரிந்துவிட்டு அவர்கள் வலியில் அழும் நேரம், தப்பித்து இருள்மாளிகைக்குச் சென்றுவிடலாம் என அவன் தீட்டிவைத்திருந்த திட்டத்தை, யுவன் செய்த காரியத்தைப் பார்த்த அடுத்த நொடியே, இவர்கள் இங்கிருக்கும் வரையில் கீழே இறங்கவே கூடாது என அப்படியே தலைகீழாக மாற்றிக்கொண்டான் அவன்.
எவ்விடமென்றேத் தெரியாத அந்த புத்தம்புது வனத்தின் நடுவே நின்றிருந்த கோவன்களில், சரியாக யுவனை நோக்கிப் பாய்ந்து வந்தக் கல்லை அவன் தன் சக்தியைக் கொண்டு கண்ணசைவிலேயே எரித்துச் சாம்பலாக்கியிருக்க... கல் வந்த திசையை கணித்த மூவரும், ஷேனா அமர்ந்திருந்த அந்த மரத்தை சரியாகக் கண்டுக்கொண்டார்கள். அங்கிருந்த ஷேனாவோ 'அய்யோ பார்த்து விட்டார்களே' என மூவரையும் நோக்கித் திருதிருவென விழிக்கத் தொடங்கினான்.
அவன் கல்லை எரிந்ததையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், "கண்ணா! அவ்வளவு உயரத்திற்கு ஏன் சென்றாய்? அங்கிருந்துத் தவறி விழுந்தால் அடிபடும். கீழே இறங்கு", சக்தி கீழிருந்தே கத்த, "முடியாது, முடியாது. எனக்கு உயரத்தைப் பார்த்தெல்லாம் பயமில்லை. நான்- நான் இங்கேயே தான் இருப்பேன். கீழிறங்க மாட்டேன். நீங்கள் உங்கள் அம்மாவிடம் செல்லுங்கள். அவர்கள் உங்களைத் தேடிடுவார்கள்", மூவரையும் அங்கிருந்து விரட்டுவதிலேயே குறியாக இருந்தான் ஷேனா. அவன் என்னவோ முறைத்துக்கொண்டே தான் கூறினான். ஆனால், அவன் கண்ணிலும் குரலிலும் பயம் கலந்திருப்பது மூவருக்கும் அப்பட்டமாகத் தெரிந்தது. ஒரு மகா சாம்ராஜ்யத்தின் முடி இளவரசர்கள்... உலகின் ஆதி கோவன்களாகிய தங்களைப் பார்த்து ஒரு சிறுவன் பயம் கொள்வது அவர்களுக்கு மிகவும் புதிதாக இருந்தது. இவனது பயத்தை எப்படியாவது போக்கிட வேண்டுமென அப்போதே முடிவெடுத்தார்கள் அம்மூவரும்.
"ஓஹ்! அவ்வாறெனில் அங்கேயே இரு கண்ணா. யாம் எம்மிடத்திற்குப் புறப்படுகின்றோம். நீ கூறியது போன்றே எம் அன்னை எம்மை தேடிடுவார்", எனக் குரல் கொடுத்தவாறே யுவேந்திரன் தன் சகோதரர்களுக்குக் கண்ணைக் காட்டிவிட்டு நகர... சில நொடியில் மூவரும் அவ்விடத்திலிருந்து சென்றிருந்தார்கள். அதை உறுதி செய்துக்கொண்ட ஷேனா, இப்போது எப்படி இறங்கலாம் எனக் கால் வைப்பதற்குச் சரியான இடம் தேடிக் கீழே குனிந்து ஆராய்ந்து கொண்டிருந்த நேரம், "உமக்குத்தான் உயரத்தைக் கண்டு அச்சமில்லையே கண்ணா! அப்படியே குதித்திட வேண்டியது தானே?", மிக அருகில் விஷ்ணுவின் குரல் கேட்கவும் திடுக்கிட்டவன், தடுமாறிக் கீழே விழ.. இப்படித்தான் ஏதாவது நடக்கும் என கணித்திருந்த யுவன், நொடியில் அவனை தன் கையில் பிடித்திருந்தான். கீழே விழுந்த பயத்தில் கண்களை இறுக்க மூடியிருந்த ஷேனா, தான் இன்னும் கீழே விழவில்லை, யாரோ தன்னைப் பிடித்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து மெல்ல இமைப்பிரித்த நொடி, நீண்டு விரிந்த சிவப்பு ரெக்கையுடன் தன்னைக் கையில் அணைத்தபடி நட்டநடு வானில் மிதந்துக் கொண்டிருந்தான் யுவன். தன் சிவப்புநிற ரெக்கையை விரித்து அவன் விண்ணில் சீறிப்பாய... உடன், சக்தி, தன் நீல ரெக்கையுடனும் விஷ்ணு, தன் வெண்ணிற ரெக்கையுடனும் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.
அவ்வளவு உயரத்தை இதுவரையில் கண்டிராத ஷேனா, முதலில் பயத்துடன் யுவனின் கரத்தையே இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, கால்களை உதறியவாரு, "கீழே இறக்கிடுங்கள்... இறக்கிடுங்கள்... ஆஆஆஆ... கீழே விடுங்கள்...", கண்ணை மூடிக்கொண்டு கத்த... அவன் பயத்தை போக்கத் தன்னுடன் பத்திரமாக அவனை அணைத்துக்கொண்ட யுவன், "கண்ணா, இந்த அழகிய வனத்தைக் கண்டு உமக்கு அச்சமா! கண்களைத் திறந்து இவைகளை நோக்கு... எத்தகைய ரம்மியமான இடம்", மென்மையாகக் கூறி அவனைக் கண்விழிக்கச் செய்தவன், அவனுடன் சேர்ந்து அந்த இடத்தைத் தானும் ரசிக்கத் தொடங்கினான்.
ஷேனாவிற்கு மேலே பறப்பது மெல்ல மெல்லப் பழகிப் போனதும் லேசாகக் கண்ணைத் திறந்தவனுக்கு பயம் துளியும் இல்லை. அவ்விடத்தை யுவனுடன் சேர்ந்து ரசிக்கத் தொடங்கிவிட்டான். அவர்களுக்கு பின்னேயே வந்துக்கொண்டிருந்த விஷ்ணு மற்றும் சக்தி, அங்கிருந்த வித்தியாசமான மாளிகைகளையும் மலைகள் காடுகள் வண்ண வண்ண மரங்கள் வித்தியாசமான மாயங்களின் தாக்கம் என அனைத்தையும் நோக்கியவண்ணம், இது எந்த இடமாக இருக்கும்?, என்னும் யோசனையுடன் இவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.
சில நிமிடங்களிலேயே, "ஷேனா... எங்கிருக்கிறாய் நீ? ஷேனா...", ஒரு கோபக்குரல் காடு முழுவதிலும் ஒலிக்க. இவ்வளவுநேரம், யுவனின் அரவணைப்பில் இருந்தவன் இப்போது பயத்துடன் வேகமாகத் திமிரத் தொடங்கினான். "என்னை கீழே இறக்கி விடுங்கள். தந்தை அழைக்கிறார். நான் செல்ல வேண்டும். இறக்கிடுங்கள்", கீழே குதிப்பதுபோல் திமிரியவனின் முகத்தில், முன்பிருந்ததை விட இருமடங்கு பயம் ஒட்டிக்கொண்டிருந்தது.
"ஓஹ்! உனது நாமம் ஷேனாவா? அருமையான நாமம். யார் வைத்தது?", என யுவன் கேட்ட கேள்விக்கெல்லாம் பதிலளிக்கும் நிலையில் அவன் இல்லை, "இறக்கிடுங்கள் என்னை. நான் செல்ல வேண்டும்", அவன் அழத் தயாராவதைக் கண்டு வேகமாகத் தரையிறங்கிய யுவன், ஷேனாவை கீழே நிற்கவைத்து, "உம் தந்தை-.", என ஏதோ கூற வாயெடுக்க... அதையெல்லாம் கவனிக்காமல், விட்டால் போதுமென ஓடியேவிட்டான் அவன்.
அவன் ஓடும் திசையையே புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த யுவனைத் தொடர்ந்து தரையிறங்கிய மற்ற இருவரும், "வாரும் சகோதரா. அவன் அழைக்காவிடில் என்ன? நாம் சென்று அவன் தந்தையை சந்திக்கலாம்", யுவன் ஷேனாவிடம் கேட்க வாயெடுத்தக் கேள்வியைப் புரிந்துக்கொண்ட மற்ற இருவரும், சகோதரனை அழைக்க... அவ்விருவருக்கும் ஒரு புன்னகையை அளித்துவிட்டு, "செல்லலாம் சகோதரா", என மூவருமாய் ஷேனா ஓடிய திசையிலேயே சென்றார்கள்.
வேக எட்டுக்களுடன் நடந்தவர்கள், "என்ன பிள்ளையை வளர்த்து வைத்திருக்கிறீர்கள்? அனைவரையும் பார்வையிலேயே மிரட்டுகிறான்", என சாதாரணமாகவே அவன் தந்தையிடம் கேள்வி கேட்கும் எண்ணத்தில் சென்றவர்கள், அங்கு நடந்ததைக் கண்டு அப்படியே நின்றுவிட்டார்கள். புன்னகைத்துக் கொண்டிருந்த மூவரின் முகமும் நொடியில் கல்லாய் இறுகிட.. ஷேனா, குனிந்தத் தலை நிமிராமல் அமைதியாக நிற்பதையும், அவன் முன் ஒரு கரடு முரடான உருவம் கோபத்துடன் நிற்பதையும் கண்டு அவர்களறியாமலே கை முஷ்டியை இறுக்க மூடினார்கள் கோவன்கள் மூவரும்.
"எத்தனை முறை சொல்லியனுப்பினேன் உனக்கு? காரியம் நிறைவடைந்ததும் விரைந்து மாளிகைக்குத் திரும்பிடு என சொல்லியனுப்பினேன் அல்லவா??.. அதைவிடுத்து எங்கு சுற்றித்திரிந்துக் கொண்டிருந்தாய்? உன்னை அழைக்க இந்நிழல்தேச அரசனே வர வேண்டுமா? அவ்வளவு முக்கியமானவனாக மாறிவிட்டாயோ நீ? விரைந்துப் புறப்படு. மாளிகையில் உனக்கான பணிகள் காத்திருக்கிறது", சிறுவனென்றும் பாராமல் தன் வலியக் கரம்கொண்டு அவனை அடிக்க... அதைக்கண்டு கோவன்கள் மனம் கொதித்தது. 'ஒரு தந்தை தன் மகனை எப்படி வேண்டுமானாலும் கண்டித்து வளர்க்கலாம். அது அவரின் உரிமை' என மனம் கூறினாலும், ஒரு சிறுவனை இப்படி தண்டிப்பதைக் கண்டு அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முகம் இறுகிட, கோபத்துடன் மூவரும் அவரை நோக்கி முன்னேற... இவர்கள் வருவதை கவனிக்காத இருளரசன், நொடிப்பொழுதில் தோன்றியிருந்த கரும்புகைக்கு மத்தியில் ஷேனாவுடன் மறைந்திருந்தார்.
அதனைக்கண்டு திடுக்கிட்டு நின்றவர்கள், அப்போதே இருளரசனின் வார்த்தைகளை மனதில் ஓடவிட்டார்கள். நிழல்தேசத்து அரசன் என அவர் கூறிய வார்த்தையை உணர்ந்த பின்னரே, இது பூலோகமே இல்லை, வேறு ஒரு உலகம் என்பதை அறிந்து, ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் நோக்கிக்கொண்டார்கள்.
"சகோதரா, இது பூமியல்ல. வேறேதோ ஒரு ஞாலம். எமக்கேதோ நாம் உடனடியாக இங்கிருந்து புறப்பட வேண்டுமெனத் தோன்றுகிறது.", சுற்றிலும் பார்வையைச் செலுத்திக்கொண்டே விஷ்ணு கூற.. சம்மதமாய் தலையசைத்த மற்ற இருவரும், விஷ்ணு கூறியது போலவே வந்த வழியே புறப்பட்டார்கள். இப்பொழுது அவர்களுக்கும் வழிவிட்டது, தீராவினால் கடைசியாக உருவாக்கப்பட்ட மாயவாயில் தான். அம்மூவரும் இருந்த குழப்ப மனநிலையில், வரும்பொழுது இல்லாத வெண்ணிற ஒளிவட்டம் இப்போது அந்த வாயிலைச் சூழ்திருப்பதைக் கவனிக்க தவறியிருந்தார்கள்.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro