24. புதிய லோகத்தில் ஒரு பிரவேசம்
தான் உருவாக்கிய மாய வாயிலினுள் தீராவுடன் நுழைந்த அபி, இப்போது ஆதிலோகத்தின் வனதேசத்தில் தோன்றியிருந்தான். இன்று, தீராவின் முதல்நாள் மாயப் பயிற்சிக்காக முதல் முறையாக அவளை இங்கு அழைத்து வந்திருக்கிறான். அழகிய வண்ண வண்ண மரங்கள், வெவ்வேறு அளவுக்கொண்ட மலர்கள், இவைகளுக்கு நடுவே கிளைகளுக்கு மத்தியிலிருந்து ஊடுருவி வரும் வைரமாளிகையின் வைர ஒளி எனக் கண்ணுக்கு இனிமையாக இருக்கும் அந்தக் காட்சியைக் கண்டு அவள் குதூகளித்துக் குதிக்கத் தொடங்கிட... அவளை, அங்கும் இங்குமாக ஓடி விளையாட விட்டவன் சிறிதுநேரம் கழித்து பயிற்சியைத் தொடங்கிட முடிவெடுத்து அவளை அழைத்தான். தனக்கு முன்பாக அவளை நிறுத்தியிருந்தவன், "தீரா, இதுதான் உன் முதல் பயிற்சி. மிகவும் எளிமையானப் பயிற்சி. கற்றுக்கொள்ள நீ தயாரா?", அவளை ஊக்கப்படுத்த... "தயார்", என உற்சாகமாகினாள் அவள்.
"அப்படியென்றால் சரி, முதலில் உன் கண்களை அழகாக மூடிக்கொண்டு உனக்குப் பிடித்தமான இடத்தையோ, இல்லை, நீ செல்ல நினைக்கும் இடத்தையோ நன்றாக நினைத்துக்கொள். பின், மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, இப்படி, உன் வலது கை விரல்களால் சொடுக்கிடு", ஒவ்வொன்றாக அபி செய்துக்காட்ட.. அங்கே ஒரு நீல நிற வாயில் திறந்தது. அந்த வாயிலினுள் தலையை மட்டும் நீட்டிப் பார்த்த தீரா, தன்னுடைய மூன்று குட்டி பொம்மைகளும் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு மீண்டும் தலையை இழுத்துக் கொண்டாள்.
"இந்த வாயிலை அடைக்க, நீ எங்கு நின்றுக்கொண்டு வாயிலை உருவாக்கினாயோ, அந்த இடத்தை மனதில் நினைத்துக்கொண்டு இடது கை விரலைச் சொடுக்கிடு. பின் வாயில் மூடி விடும்.", என அதையும் செய்துக்காட்ட.. அவன் உருவாக்கியிருந்த அந்த வாயில் மூடிக்கொண்டது.
"சரி, இப்போது நீ முயற்சிசெய் பார்க்கலாம்", அபி கூறியதும், அவன் கற்றுக்கொடுத்தது போலவே முதலில் கண்களை மூடினாள். பின், செல்லவேண்டிய இடத்தை மனக்கண்ணில் முடிவுசெய்து வலது கை விரலையும் சொடுக்கினாள். காற்றில் தீப்பொறிப் போல் ஒரு மின்னல் தோன்றி மெல்ல மெல்ல பெரியக் கோடாக மாறியது. திருதிருவென விழித்த தீரா, அபியைக் கேள்வியாக நோக்க... அந்த நீல நிறக் கோடு, ஒரு பெரும் வாயிலாகத் திறந்துக்கொண்டது. அதைப்பார்த்து உற்சாகமாக கைத்தட்டியவள் விருவிருவென அதனுள் புகுந்து ஓட... சிறு சிரிப்புடன் அவள் பின்னேயே அவ்வாயிலினுள் காலடி எடுத்துவைத்த அபி, மொத்தமாகக் குழம்பி, விக்கித்துப்போய் நின்றான் அக்காட்சியில்.
சுற்றிலும் நீண்டு நெடுந்துயர்ந்த அரக்கு நிற மரங்கள்.. அதன் உச்சத்தில் ஒரே போலான பச்சை நிற இலைகள். நில்லாமல் காதில் இனிக்கும் பட்சிகளின் கீச்சொலிகள். மொத்தத்தில், அடையாளமே தெரியாத இந்த இடத்தை எப்படி இவள் மனதில் நினைத்தாள் என்பதை எண்ணி சிலையாகி இருந்தான் அபி .
✨✨✨
இருளரசனின் கட்டளையினால் இன்றுதான் முதல் முறையாக வனதேசத்தின் எல்லைக்குள் காலடியை பதிக்கிறான் ஷேனா. சொல்லப்போனால், இருள் மாளிகையை விட்டே இன்றுதான் முதல் முறையாக வெளியேறி வருகிறான் அவன். அதுவும் தனிமையில் என்கையில் அவனுள் ஒருவித பயமும் இருந்தது.
இங்கு வரும்முன்பாக அவன் அன்னையைப் பார்த்து, வனதேசம் செல்லப்போவதாகக் கூறிவிட்டுத்தான் வந்திருக்கிறான். அவன் என்னவோ கோட்டையை விட்டு வெளியே வருவதற்கு அஞ்சிக் கொண்டிருக்க... மாறாக ஷிவேதனாவோ, தன் மைந்தனின் மனதிற்கு நேர்மாறாக மகிழ்ச்சியில் மூழ்கிக் கொண்டிருந்தாள். தன் மகனுக்கு இந்த இருளைவிட்டு வெளிச்சத்தை காண ஒரு வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சியே அவளுக்கு.
ஆனால் ஷேனா, தனியாகச் செல்ல பயந்துக்கொண்டே இருக்க... அவன் புறப்படும்பொழுது தன் மகனின் பயத்தினை போக்கவும் அவன் தைரியத்திற்காகவும், தன் மாய சக்திகளால் குறுவாள் ஒன்றை உருவாக்கி அவனுக்குக் கொடுத்தனுப்பினார் ஷிவேதனா. தன்னைத் தற்காத்துக்கொள்ள ஒரு ஆயுதம் கைவசம் உள்ளது என்னும் தைரியத்தை அவனுக்குக் கொடுக்கவே இந்த முயற்சி. ஆனால் உண்மையில், வனதேசத்தில் வைத்து அவனைத் தாக்குவதற்கு எதிரிகளோ விலங்குகளோ எதுவுமே கிடையாது. உயிர்களின் நடமாட்டத்தை அவ்விடத்தில் காண்பது மிக மிக அபூர்வக் காட்சியே. அப்படியே கண்டாலும் ஏதேனும் சாது விலங்கினமாகத் தான் இருக்கும்.
இதுவரையில் அன்னை சொல்லிய கதைகளில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த வனதேசத்தை முதல்முறையாகக் கண்கூடாகக் கண்டதில் ஷேனாவின் மனம் ஆச்சரியமும் ஆர்வமும் கொண்டிருந்தாலும், குழந்தையவனுக்கு இக்கணம் இருளரசனின் கட்டளைகள் யாவும் சேர்ந்து அவன் விளையாட்டு மனதை கட்டுண்டுக் கிடக்கச்செய்தது. இருளரசன் எடுத்துவரச் சொல்லிய மூலிகைச் செடிகள் யாவும் எளிதில் கிடைக்கக் கூடியவையே என்பதால் அனைத்தையும் சேகரித்து முடித்தவன், இறுதியில் திக்குத்தெரியாமல் அலைந்துக் கொண்டிருக்க... அவன் கண்முன்னே தெரிந்தது மினுமினுப்பான ஒரு பாதை. ஏற்கனவே வழியை தொலைத்து அலைந்துக் கொண்டிருந்தவன், ஏதோ எண்ணத்தில் அதனுள் நுழைந்தான். தீரா உருவாக்கிய அதே மாய வாயில்தான் அது.
இருக்கும் இடமும் தெரியாமல், செல்லும் வழியும் புரியாமல் பயத்தில் கண்கள் படபடக்க.. சுற்றிலும் பார்த்துக்கொண்டே நடந்து கொண்டிருந்த ஷேனா, திடீரென தன் நடையை நிறுத்திட.. அவன் முன் நின்றிந்தது மூன்று உருவங்கள்.
தன்முன் வந்து நின்ற மூன்று உருவங்களையும் ஷேனா அண்ணாந்து நோக்கிட... அஜானுபாகுவாய் ராஜதோரணையில் இருப்பினும், சாதாரண உடைகளும் சில ஆபரணங்களும் மட்டுமே அணிந்திருந்தார்கள் அந்த மூன்று உருவங்களும். அவர்களின் ஒருமித்த உருவமே அவர்கள் சகோதரர்கள் என எடுத்துக்காட்டியது. அவர்களை ஒருவருக்கொருவர் தனிமைப்படுத்திக் காட்டியது என்னவோ மூவ்வேறு வண்ணங்களில் இருந்த அவர்களின் விழிகள் தான்.
'இவ்வனத்தில் எங்கிருந்து சிறுவன் வந்தான்?' என்னும் கேள்வியுடம் அம்மூவரும் ஷேனாவை பார்க்க... ஒரேபோல் நிற்கும் மூவரையும், மூவ்வேறு நிறங்களில் ஜொலித்த அவர்களின் கண்களையும் பார்த்துக் குழந்தையவன் சற்று மிரண்டுதான் போனான். அம்மூவரும் குழப்பத்துடன் அவனை நெருங்கிட... ஏற்கனவே பயந்துப்போய் இருந்த ஷேனா, மூவர் தன்னை நோக்கி வருவதைக் கண்டு, "என்- என்னை நெருங்காதீர்கள். என்னிடம் வாள் உள்ளது. முன்னேறினால், பிறகு... அம்- பிறகு- பிறகு, தாக்கிடுவேன் உங்களை.", பயத்திலேயே அவர்களை மிரட்டியபடி தன் பாதங்களை பின்னுக்கு நகர்த்திக் கொண்டிருந்தான் ஷேனா. அவன் மழலை-மாறா மொழியில் தங்களை அழகாய் மிரட்டியதைப் பார்த்த மூவருக்கும் சிரிப்புத்தான் வந்தது.
அவனை பத்திரமாக அவனின் இருப்பிடம் அழைத்துச்செல்லும் நோக்கிலேயே வந்த அம்மூவருக்கும், அவன் மிரட்டலைக் கண்டதும் அவனிடம் விளையாடத் தோன்ற, "ஓ!! தமக்கு வாள் ஏந்தவெல்லாம் தெரியுமா? அடடே!! எங்கே? எங்கே தமது வாள்? தம் உயரத்திற்கு வாள் செய்த அந்த வித்வான் யாரென யாம் அறியலாமோ?", என கேட்டபடி வெண்ணிற விழிகள் சிரிக்க, அவனை நோக்கி மேலும் மேலும் முன்னேறினான் ஒருவன்.
அதைக்கண்டுத் தன் இடையில் சொறுகி வைத்திருந்தக் குட்டிக் கத்தியை வேகமாக உறுவி, பிடிக்கத் தெரியாமல் பிடித்து... தன்னை நோக்கி நடந்து வருபவன் முன்பு நீட்டியபடி முறைத்தான் ஷேனா. "என் அம்மா கொடுத்த வாள். முன்னேறினால், பிறகு தாக்கிடுவேன்", அவன் வீரவசனம் பேச... இரண்டடியிலேயே அவனை நெருங்கியிருந்த நீல விழி கொண்டவன், டபக்கென அந்த 'வாள்' என்கிற குட்டிக் கத்தியை அவன் கையிலிருந்து உறுவி எடுத்தான். திண்பண்டத்தைப் பறிகொடுத்ததுப் போல அவரை ஒரு பார்வை பார்த்தான் ஷேனா.
அவனைப் பார்க்கப்பார்க்க மூவருக்கும் சிரிப்புதான் வந்தது. மெல்ல அவனை நோக்கி நடந்து, அவனைத் தன் கையில் தூக்கிய சிவப்பு-விழி நபர், "தமது நாமம் என்ன கண்ணா? தாம் இவ்விடம் எங்ஙனம் வந்தீர்கள்? தமது இல்லம் எவ்விடம் உள்ளது? சொல்லுங்கள், யாமே சென்று தம்மை சேர்த்திடுகிறோம்", என பொறுமையாகக் கேட்க.. அவன் திடீரெனத் தன்னைத் தூக்கியதில் பயந்துப் போனவன், தன் குட்டிக் கைகளால் அந்தச் சிவப்பு விழி நபரை அடித்துக் கொண்டே அழத் தொடங்கிவிட்டான். அதைக் கண்டுப் பதறிய அந்த சிவப்பு-விழி நபர், உடனடியாக அவனை கீழே இறக்கிவிட்டு, "ஒன்றும் இல்லை கண்ணா.. யாம்-", அவன் அழுகையை சமாதானம் செய்யத் தொடங்கிடும் முன்பாகவே, விட்டால் போதுமென சிட்டாக பறந்துவிட்டான் அவன்.
ஒரு குழந்தை இவ்வளவு வேகமாக ஓடுவானா என அதிசயித்துக்கொண்டே அவர்கள் மூவரும், ஓடும் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த நேரம், சில அடி தூரம் ஓடியவன் ஒரு நீலநிற ஒளியினுள் மறைந்துப் போனதில், சிரித்துக் கொண்டிருந்த மூவரின் விழியிலும் அதிர்ச்சி! கண்கள் இரண்டும் ஆச்சரியத்தில் விரிய.. விக்கித்துதான் போனார்கள் மூவரும்.
கண்முன்னே ஓடிக்கொண்டிருந்த சிறுவன், திடீரென ஒரு ஒளியினுள் மறைந்து போனதும், அதை ஏதோ ஆபத்தென எண்ணிய மறுகணமே வேறு எதையும் சிந்திக்காமல் அவர்களும் விரைந்து அவ்வொளியினுள் நுழைந்திட.. இப்போது, தாங்கள் இருக்கும் இடத்தைப் பார்த்து பிரமித்துப் போனது என்னவோ அம்மூவரும் தான்.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro