21. கால ஓட்டம்
தன் அறையில் ஒரு மேஜைக்கு அருகில் அமர்ந்திருந்த ஷிவேதனா, தன் மனதினை ஒருநிலைப்படுத்தி, சக்திகளை ஒன்றுதிரட்டி அதனைத் தனக்கு முன்னால் இருந்த சதுர காகிதத்தின் மீது செலுத்திட... வண்ண வண்ண எழுத்துக்களையும் சிறு சிறு ஓவியங்களையும் சுமந்தக் காகிதமாக மாறிப்போனது அந்த வெற்றுக் காகிதம்.
புன்னகையுடன் அதை கையில் எடுத்தவள், கத்தையாக ஒரு புத்தகத்தைப் போல் அருகில் அடுக்கி வைத்திருந்த மற்ற காகிதங்களுடன் சேர்த்து அதையும் வைத்துவிட்டு மீண்டும் ஒரு வெற்றுக் காகிதத்தைக் கையில் எடுக்க, "அம்மா... நான் வந்துவிட்டேன்", உற்சாகமாக ஓடிவந்து பின்னால் இருந்தே அவள் கழுத்தை அனைத்துக் கொண்டான் ஷேனா. சற்றுமுன் நிகழ்ந்த நிகழ்வின் சுவடுகள் அவன் முகத்தில் துளியும் இல்லை. சரியாகக் கூற வேண்டுமானால், அப்படியொரு சம்பம் நடந்த நினைவுகள் கூட அவனிடம் இருப்பது போல் தெரியவில்லை. முன்பை விட புத்துணர்வு கொண்டவன் போல் தான் தெரிந்தான் அவன். இருக்காதா பின்னே! ஆறு அரக்க ஜந்துக்களின் சக்திகளை ஒன்றாக அல்லவா எடுத்துக்கொண்டு வந்திருக்கிறான்.
ஷிவேதனா, தன் கையில் எடுத்த காகிதத்தை அப்படியே மேஜை மீது வைத்துவிட்டு, "வந்துவிட்டாயா கண்ணா.", மகனை முன்னுக்கு இழுத்துத் தன் மடியில் அமர வைக்க, "அம்மா, புது கதைப் புத்தகமா?", என ஆர்வமாக அந்தக் காகிதங்களை எடுக்க முனைந்த ஷேனாவை தடுத்தார் ஷிவேதனா. "ஆங் ஆங்.. இப்போது இல்லை. நீ இதற்கு முன்னர் என்னிடம் வாங்கிச் சென்ற கதை புத்தகத்தை முழுவதுமாக படித்து முடித்த பின்னர் தான்", தன் அன்னை மறுத்ததில் முகம் வாடினான் ஷேனா.
"அட.. இதற்காக ஏன் சோகம் கொள்கிறாய் ஷேனா? நான் உருவாக்கிடும் புத்தகங்கள் அனைத்துமே உனக்குத் தானே?..."
"அதற்கு இல்லை அம்மா", என்றவன் இன்னுமும் வாடிய முகத்துடனே இருக்க, அவன் முகத்தைக் கையில் ஏந்திக் கொண்டவர், "பிறகென்ன ஷேனா? ஏனிந்த வாட்டம் என் வைரத்தின் முகத்தில்??" என ஷேனாவை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டார்.
"அம்மா"
"சொல் கண்ணா?"
"அது... அந்தப் புத்தகமும் தொலைந்து விட்டதம்மா", தன் சோகத்திற்கான காரணத்தை சிறு தயக்கத்துடனே அவன் கூற.. ஷிவேதனாவின் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது.
"அம்மா", சில நிமிட சிந்தனையில் இருந்தத் தன் அன்னையை கன்னம் தொட்டு நிஜத்திற்கு அழைத்து வந்த ஷேனா, "மன்னித்து விடுங்கள்", அப்பாவியாகத் தாயை நோக்கிட.. மகனைப் பார்த்து மெல்லிய புன்னகை வீசிய ஷிவேதனா, "ஹ்ம்ம்.. அவசியம் இல்லை கண்ணா. நீ வருந்தாதே. அவையெல்லாம் போகட்டும். அந்தக் கதைகளைச் சொல்லத்தான் நான் இருக்கிறேனே? நீ இரவில் தூங்கும்பொழுது உனக்கு நானே அந்தக் கதைகளை சொல்கிறேன். சரியா? இப்போது இந்தப் புத்தகத்தை உனக்காகவே விசேஷ மாயங்கள் மூலம் உருவாக்குகின்றேன். இது என்றுமே உன்னை விட்டுச் செல்லாது.", என்றதும் அப்புத்தகத்தை உற்சாகமாக நோக்கினான் ஷேனா.
"நிஜமாகவா அம்மா! எனில், சீக்கிரம் என்னிடம் கொடுங்கள். நான் பார்க்க வேண்டும்"
"ஹாஹா.. அவசரம் வேண்டாம் கண்ணா. உனக்குத்தான், உனக்குத்தான். ஆனால், நாளைதான். அதுவரையில் பொறுமையாக இருக்க வேண்டும்."
"ஹாம்ம். சரி, அம்மா. நான் நாளை வரையில் காத்திருக்கிறேன்", என அன்னை மடியில் அவன் வாகாக படுத்துக்கொண்டான்.
"சரி, கண்ணா. நீ இன்னும் உணவருந்தவில்லை தானே? வா.. மாலை வேலை நெருங்குகிறது", என அவனை அழைத்துக்கொண்டு உணவு மேஜைக்குச் சென்றவர் பணிப்பெண்களை அழைக்க... கண்களைக் கறுப்புத்துணியால் கட்டிக்கொண்டு அறையினுள் நுழைந்த இருவர், மேஜையில் உணவினை வைத்துவிட்டு வெளியே கிளம்பி விட்டார்கள். இருளில் வாழும் அவர்களுக்கு ஒளியை கண்டால் பயம். இருந்தும், அரசனின் கட்டளையால் உணவு கொடுக்க மட்டும் இப்படி ஒரு ரூபம்.
அவர்கள் சென்றதும், ஷிவேதனா தன் மகனுக்கு ஊட்டி விட.. காலையில் உண்டதற்குப் பின் இப்போது அதீத பசியினால் நன்றாக உண்டு முடித்தான் ஷேனா.
✨✨✨
ஐந்து பெரும் சிலைகளுடன் ஒரு விநோதமான சிலையையும் கொண்ட அந்த பிரம்மாண்ட அறையில் ஏதோ தீவிர சிந்தனையில் நின்றுக் கொண்டிருந்தார் இருளரசன். அவர் சிந்தனையை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது என்னவோ உறவு சங்கிலியின் முழு சக்தியையும் தன் ஆழுமையின் கீழ் கொண்டுவந்திருந்த ஷேனாவின் அந்த மெய் சிலிர்க்கவைக்கும் ரூபமே.
"தேவா! உறவு சங்கிலியானது அவன் வசத்தில் இருக்கும் வரையில் எம்மால் அவன் சக்திகளை நிச்சயமாக பறித்திட முடியாது.. மாற்று உபாயத்தினை நான் கண்டறியும் வரையில் சற்று பொருத்தருளும் தேவா. எப்படியாயினும் அந்தச் சங்கிலியை அவன் வசத்திலிருந்து பிரித்தெடுக்க முயற்சிக்கிறேன்.. உங்களை விடுவிக்க அவன் சக்திகளே ஒரே வழி", மாளிகை உயரத்தில் இருந்த அந்த அலங்கோலமான சிலையின் கையில், கத்தையாக இருக்கும் சங்கிலியை கொடுக்க முயற்சிக்கும் சிலையிடம் புலம்பிக் கொண்டிருந்தார் அவர்.
இங்கே ஷிவேதனாவின் அறையிலோ... இன்றுதான் உடலில் எவ்வித வலியும் இல்லாமல் அமைதியாக உறங்கிடும் மகனைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டார் அவனின் தாய். அதன் மெய்யான காரணமாகிய உறவு சங்கிலியோ, அவன் இதயத்தோடு பொருந்திக்கொண்டு ஷேனாவின் ஆடைக்குள் அழகாக ஜொலித்து மின்னியது. மேலும் ஒரு சம்பவம் அவர் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. இன்று மதியம் போல் இருந்த நேரத்தில், ஒரு பணிப் பெண்ணை அழைத்து 'நான் இருளரசனை சந்திக்க வேண்டும் என சொல்லியதாக சொல் அவரிடம்' எனக் கூறியிருக்க.. அவர் மறுத்துவிட்டதாகத் தான் பதில் வந்தது. இது ஒன்றும் முதல்முறை அல்ல.. இந்த ஆறு வருடத்தில் எப்படியும் ஆறாயிரம் முறையாவது கோரிக்கை வைத்திருப்பார். அனைத்துக் கோரிக்கைகளும் மறுக்கப்படத்தான் செய்திருக்கிறது. இப்படியே காலங்கள் ஓடியது.
அதேபோல், ரட்சகராஜ்யத்தில் குழந்தைகள் அனைவரும் ஓடியாடி விளையாடுவதைக் காணவே இரண்டுக் கண்கள் போதாதென்ற நிலைதான். புதிதாக வந்த குழந்தைகள் இருவருக்கு ஒரு நன்னாளில் மகாராணியின் முன்னிலையில் தீரா தீ, ரம்ய தாரிகா என பெயர் சூட்டப்பட்டது. அவர்களுடன் வந்த வெண்ணிறக் குதிரைக்கு வீரா என பெயரிட்டு தன் ஆசையை தீர்த்துக் கொண்டாள் சங்கவி. நாட்கள் செல்லச் செல்லத்தான் அனைவருக்கும் ஒன்று புரிந்தது. வீரா, அபியை மட்டுமல்ல, ஊரில் இருக்கும் எந்த ஆணையும் தன்னிடம் நெருங்க விடவில்லை... அதனால் அவனை கவனிக்கும் முழு பொறுப்பையும் ராகவியும் சங்கவியுமே எடுத்துக்கொள்ள.. அவர்களுடன் இப்போது தத்தக்கா பொத்தக்கா என நடக்கும் தீராவும் இணைந்து கொண்டாள்.. இப்படியே, ஷேனாவிடம் உறவுசங்கிலி வந்தத்தது முதல் எந்த பிரச்சனையும் இல்லாமலே கடந்தது அந்த ஓராண்டு காலம்.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro