20. வெள்ளை குதிரை
மதி, போதும் என்று சொல்லும் வரையில் அவளுக்கு பூமியை சுற்றிக்காட்டிவிட்டு வந்திருந்த காலா, இப்போது மீண்டும் அந்த மூன்று வீடியோ போல்டர்களைத் தன் லாப்டாப்பில் திறந்து வைத்துக்கொண்டு.. தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான். அப்படியே இரண்டு நிமிடம் கடந்திருக்கும். அதில், சயனா நிற்கும் வீடியோவை மட்டும் பிளே செய்தவன் அதைப் பார்க்காமல், ஒரு பெருமூச்சுடன் லாப்டாப்பை மூடிவிட்டு எழுந்துச் சென்றுவிட்டான்.
ரட்சக ராஜ்யம்..
புதிதாக வந்திருக்கும் குழந்தைகளை அழைத்துகக்கொண்டு வந்தது மாயா தான் எனச் சொல்லி வைரமாளிகையின் புறமாக சங்கவி தன் கையைக் காட்டியத்தைப் பார்த்த சயனா, யோசனையுடன் வைரமாளிகை இருக்கும் திசையில் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, "பிறகு, அவனும் வந்தான். வந்து... என் குட்டித் தங்கை பாப்பாவையும் பெரிய தங்கை பாப்பாவையும் முட்டிவிட்டு அங்குச் சென்று தூங்கிவிட்டான்", தனக்கு வலதுபுறமாக இருக்கும் படிகட்டின் பக்கமாக இருந்த ஒரு அடர்ந்த மலர்-செடியை நோக்கிக் கைக்காட்டினாள் சங்கவி.
"அவனா? யாரவன்?", சயனா தன் அக்காவின் புதல்வியை வித்தியாசமாக பார்த்துக்கொண்டே மலர்செடியை எட்டிப் பார்க்க... ஒன்றுமே தெரியவில்லை. சரியென கையில் வைத்திருக்கும் குழந்தையுடன் அந்தப் படியின் வழியாக இறங்கிச் சென்றுப் பார்த்தவள், அங்குக் கண்டக் காட்சியில் உடல் நடுங்கிட அதிர்ந்துப் போனாள்.
"அபி. விரைந்து சென்று உன் மாமாவை அழைத்து வா. உடனடியாக.", அதிர்ந்த குரலிலேயே தன் மருமகனை நோக்கி கத்தினாள் சயனா. தன் அத்தை சொல்லிய வேகத்திலேயே, ஏதோ விபரீதம் என புரிந்துக்கொண்டவன், சட்டென நிமிர்ந்து அக்காட்சியை நோக்கிய அடுத்தநொடியே மறுவார்த்தைக் கேட்காமல் இல்லம் நோக்கி ஓடினான் அபி.
மடியில் குழந்தை இருந்ததால் அவளைத் தூக்கத் தெரியாமல் சங்கவி விழித்துக் கொண்டிருக்க.. ராகவி, அந்தக் குழந்தையை எப்படியோ தூக்கித் தன்னோடு அனைத்துக் கொண்டு சித்தியிடம் ஓடினாள். அவளைத் தொடர்ந்து சங்கவியும் ஓடிச்சென்று பார்க்க... அவளால் 'அவன்' எனக் குறிப்பிடப்பட்ட அந்த வெண்ணிறக் குதிரை, தரையில் சரிந்துக் கிடந்தான். சிவந்தக் குருதி நிலமெங்கிலும் ஒழுகிட.. மூச்சு விடக்கூட சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். அதைக்கண்டு, மருண்ட விழிகளுடன் சகோதரிகள் இருவரும் சித்தியின் இருபுறமும் சென்று அவரோடு ஒட்டி நின்றுக்கொள்ள... ராகவி மற்றும் சயனாவின் கைகளில் இருந்த இரு குழந்தைகளும் வீலெனக் கத்தி அழத் தொடங்கினார்கள்.
அதேநேரம், அபி வந்து இல்லத்தில் குதித்த குதியில், என்ன ஏதென்றே புரியாமல் வைரமாளிகைக்கு விரைந்தார், ரோஹினியின் கணவர் அரவிந்தன். அவர் வைரமாளிகையை அடைந்த நொடி, ராஜ்யத்தின் பாதி ஜனம் அங்குக் கூடியிருந்தது. கூட்டத்தை விளக்கிக்கொண்டு அதன் மையத்தை சென்று அவர் பார்க்க.. சயனா, கையில் ஒரு கை குழந்தையை ஏந்திக்கொண்டும் காலோடு ஒரு குழந்தையை அனைத்துக் கொண்டும் நின்றிருந்தாள். அதைப்பார்த்து குழம்பியவாறே முன்னே சென்றவர் அவர்களை நோக்கி இரு அடிகள் தான் வைத்திருப்பார். அந்நொடியே அவர் கண்ணில் விழுந்தது அந்த வெண்ணிற குதிரை கிடைக்கும் பரிதாபக்காட்சி. நிலமையைப் புரிந்தவர் விரைந்து அந்த குதிரையினிடத்தில் சென்று துரிதமாக செயல்படத் தொடங்கினார்.
அதன் காயங்களைச் சோதிப்பதற்காக ஒருநொடிதான் அதன் மீது தன் கையைப் பதித்திருப்பார். அடுத்தநொடியே தன் வலியையும் பொருட்படுத்தாமல் திமிறிக்கொண்டு எழுந்த அக்குதிரை, அரவிந்தனை முட்டித் தள்ளிவிட்டு சற்று தூரமாக சென்று சரிந்தது. அதேநேரம், இப்போதே அழுகையை நிறுத்தியிருந்த இரு புதிய குழந்தைகளும் மீண்டும் வீலென கத்தித் தங்கள் அழுகையைத் தொடங்கினார்கள். அந்த சத்தத்தில், ஊர்ஜனம் மொத்தமும் குழந்தைகளை நோக்கித் திரும்பிட... கூட்டத்தில் சிறு சலசலப்பு எழுந்தது. அரவிந்தனும் இரண்டு மூன்று முறை அந்தக் குதிரையை நெருங்க முயற்சிக்க... ஒவ்வொரு முறையும் தோல்வியே.
"விலகி இருந்தே ஏதேனும் முயற்சியுங்கள் மாமா. அவனை தீண்டுவது பிடிக்கவில்லை போலும்.", சயனா தன் அக்காவின் கணவனிடம் கூற, "இல்லை சயனா.. அவனை நெருங்கினால் கூட என்னால் எதுவும் செய்ய முடியாது. நிச்சயமாக ஏதோ மாயத்தினால்தான் இக்குதிரை தாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த மாயம் நம் ஆதிலோகத்தில் கிடையவே கிடையாது.", என்றவரின் முகம் ஏகப்பட்டக் குழப்பங்களைத் தன்னில் சுமந்திருந்தது.
அவர், எத்தனைமுறை முயற்சித்தும் அந்த வெண்ணிறக் குதிரை, அவரை அருகிலேயே நெருங்க விடவில்லை. அதன் சரீரத்தில் இருந்து அதிகமாக இரத்தமும் ஓடிக்கொண்டே இருந்தது. சரியாக எழுந்துக்கூட நிற்க முடியாத நிலையிலும் எதற்காக இப்படி ஓடுகிறது என எவருக்கும் புரியவில்லை. புதிகாக அங்கிருந்த இரு குழந்தைகளும் திடீர் திடீரென வீரிட்டு அழுதவண்ணமே இருந்தது. அரவிந்தனுக்கு இவற்றிற்கெல்லாம் காரணமும் புரியவில்லை. தீர்வும் தெரியவில்லை. ரட்சகராஜ்யத்திலேயே தலைசிறந்த மாய வைத்தியரான அரவிந்தனுக்கே என்ன செய்வது என்பது புரியாமல் இருக்கும் நிலையில் மற்றவர்கள் என்ன செய்திட முடியும்?.
அடுத்து என்ன செய்வது என புரியாத நிலையில் ஊர்மக்கள் பதைபதைப்பில் நின்றிருந்த சமயம், அனைத்திற்கும் தீர்களிக்கவே வந்தது அக்குரல். "சற்று விலகினால் அவனை நான் பார்க்கிறேன்.", ஒரு கணீர் குரல் கேட்டு அனைவரின் கவனமும் அத்திசையில் திரும்ப... ஏழடியில், வெள்ளை வண்ண ஒளிக்கீற்று அரைவட்டக் கதவாகத் திறந்திருக்க... அதன்வழியே ஆறடி உயரத்தில் நிமிர்ந்த தோற்றத்துடன் பொலிவு நிறைந்த முகத்துடன் வெண்ணிற வஸ்த்திரத்தில் வந்து நின்றார் அவர். ஆதிலோகம் உருவாகியதில் இருந்து அதில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கும் வழிகாட்டியாக வாழ்ந்து வருபவர். ஆதிலோக மக்களின் குரு. கர்ணவிஜயன்.
அவரைக் கண்டதுமே ஜனங்கள் அனைவரும் மரியாதை நிமிர்த்தமாக அவருக்கு வழிவிட்டு நிற்க.. நேராக அந்த வெண்ணிறக் குதிரையை நோக்கி தன் பாதங்களை செலுத்தினார் கர்ணவிஜயன். அந்தக் குதிரைக்கு இரண்டடி தள்ளியே நின்றவர், தன் கைகளை அவனை நோக்கி உயர்த்தி ஏதோ மாயம் உபயோகிக்க.. அவரின் கரங்கள் வழியே ஊடுருவி வந்த வெண்ணிற ஒளிக்கதிர் அக்குதிரையின் காயம் மொத்தத்தையும் குணப்படுத்திய அடுத்தநொடி, அப்படியே மயக்கத்திற்கு சென்றது அக்குதிரை.
"குருவே! இதன் மேனியைத் தாக்கியிருப்பது நிச்சயமாய் ஒரு அதீத மாயம் தான். ஆனால், எவ்விடத்தைச் சேர்ந்தது?", தன் மனதை உருத்திக் கொண்டிருந்த விஷயத்தை அரவிந்தன் கேட்டுவிட, "அம்மாயம் அதன் வாழ்விடத்தைச் சார்ந்ததாக இருக்கலாம். மாயம், நம் லோகத்தை மட்டுமே சார்ந்தது அல்ல என்பது குறித்து அறிவீர்கள் தானே?", அவருக்கு பதிலளித்துக்கொண்டே சயனாவை நோக்கி நடந்தவர், அவர் கையில் இருந்த கைக்குழந்தையை மென்மையாக தன் கையில் தூக்கிக்கொண்டு, அங்கேயே நின்றிருந்த மூன்று வயது சிறுமிக்கு நிகராக குணிந்து அமர்ந்து இருவரையும் சேர்த்து அனைத்துக் கொண்டார். அதில், அவர் முகத்தில் ஒருவித பூரிப்பு.
பின் விலகி, தன் கையில் இருப்பவள் நெற்றியில் மென்மையாக முத்தம் பதித்தவர், அவளைத் தன் ஒற்றைக் கைக்கு மாற்றிக்கொண்டு மற்றொரு குழந்தையையும் தூக்கிக்கொள்ள, "இவர்கள் இருவரும் யார் குருவே?", என்றவாறு அவர் முன்பாக வந்து நின்றாள் சயனா.
மென்நகை பூத்தவர், "இவர்கள்... ரட்சகனின் இந்த ராஜ்யத்தில் வாழ வந்தவர்கள். உங்கள் அனைவருக்கும் ஆட்சேபனையேதும் இல்லையேல்... இவர்களை நீங்களே வளர்க்க சம்மதம் தெரிவிக்க முடியுமா?", அவளின் கேள்விக்கு பதிலுடன், கூடுதலாக ஒரு சம்மதத்தையும் அவர் வேண்டி நிற்க.. ஏற்கனவே அந்தக் குழந்தையின் முகத்திலும்.. மழலை அழைப்பிலும் நெஞ்சம் நெகிழ்ந்துப்போய் நின்றிருந்த சயனாவிற்கு மறுப்புத் தெரிவிக்கும் எண்ணம் என்பது துளியும் வரவில்லை .
"குருவின் வார்த்தைக்கு மறுப்பேதும் கிடையாது, இதைச் செய்யெனக் கட்டளையிடுங்கள் குருவே. இப்படி வேண்டி நிற்பதன் அவசியம் இங்கில்லை. இனி இவர்கள் என் பிள்ளைகள்.", அவர் கையிலிருக்கும் ஒரு குழந்தையை சயனா பெற்றுக்கொள்ள... மற்றொரு குழந்தையை அரவிந்தன் தூக்கிக்கொண்டார்.
"மகிழ்ச்சி. எனில், நான் புறப்படுகிறேன்", நிம்மதியுடன் புன்னகைத்தவர், மறுகணமே அவர் வந்த வெள்ளைநிற ஒளி-வாயிலிக்குள் சென்று மறைந்துவிட..., "மாமா... மாமா... அங்கு பாருங்கள்... அவன் என்னைமட்டும் அருகில் அனுமதிக்க மாட்டேன் என்கிறான்", தொங்கிய முகத்துடன் அரவிந்தனின் காலை சுரண்டினான் அபி. எதை குறிப்பிடுகிறான் என அவரும் திரும்பி நோக்கிட.. அங்கு, மயக்கத்திலிருந்து எழுந்திருந்த குதிரை, தன் முழு பலத்துடன் எழுந்து கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்தது. அதன் முன்னங்கால் இரண்டையும் ஆளுக்கு ஒன்றாக பிடித்து வருடிக் கொண்டிருந்தார்கள் அரவிந்தனின் மகள்கள், ராகவி மற்றும் சங்கவி.
எதன் காரணமாகவோ அக்குதிரை அபியை மட்டும் தன்னருகில் அனுமதிக்காமல் இருக்க.. அரவிந்தன் மற்றும் சயனா, குழப்பத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro