2. ஆதிலோக மாய சரித்திரம்
ஆறு ஆண்டுளுக்கு பின்,
வைர மாளிகையின் வைரம் அழகாக பிரகாசிக்கத் தொடங்கி அன்றைய விடியல் கதிர்களை ஆதிலோகம் எங்கிலும் பரப்பிடத் தொடங்கியது.
லோகத்தின் ஒரு முனையில் உள்ள ரட்சகராஜ்யத்தின் வடக்கு எல்லையில் இருக்கும் வைர மாளிகையின் ஜொலிஜொலிக்கும் வைர ஒளி, ராஜ்யத்தின் தெற்கு எல்லையைக் கடந்து... வனதேசத்தின் இரு மாய இனங்களின் வாழ்விடம் தாண்டி... மறு முனையில் இருந்த அந்த இருண்ட இடத்தில் தடைபட்டு நின்றது.. அது, ரட்சகராஜ்யத்தின் நிழலில் மறைந்திருக்கும் இருளின் ராஜ்யம்... சாயல் அரசாங்கம் என்னும் நிழல் தேசம்.
இருள்... திரும்பும் திசையெல்லாம் இருள்... பரந்து விரிந்த அந்த பெரும் ராஜ்யம் முழுவதும் காரிருள் மட்டுமே ஆட்சிசெய்து கொண்டிருக்க.... ராஜ்யத்தின் மையத்தில் இருந்த இருள்மாளிகையில் ஒரு அறையின் முகப்பில் மட்டும் ஒரே ஒரு திரைசீலை, உள்ளுக்குள் ஒளி இருப்பதை காட்டிடும் விதத்தில் மிளிர்ந்து கொண்டிருந்தது.
மொத்த ராஜ்யத்திற்கும் சேர்த்து, இருள் மாளிகையின் அந்த ஒரு அறை மட்டுமே ஒளியில் நிறைந்திருக்க... அவ்வறையின் மையத்தில் இருந்த மஞ்சத்தின் மீது அமர்ந்திருந்தவளோ தன் வாழ்வில் தனக்கென எஞ்சியிருக்கும் ஒரேயொரு மகிழ்ச்சியை.. தன் புத்திரனைக் காண, மணி நேரங்கள் கடந்தும் இருள் சூழ்ந்த வாயிலை நோக்கிக்கொண்டு காத்திருந்தாள்.
இத்தனைக்கும், இருளில் மூழ்கிடும் இராப்பொழுது அன்றி பளிச்சென்ற ஒளி மின்னத் தொடங்கிய காலைவேளை தான் அது... ஒளி வீசிடும் காலை பொழுதில் கூட இருளிலே மூழ்கிக் கிடக்கும் அக்காரிருள் சூழும் ராஜ்யமே நிழல் தேசம். அதுதான் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவள் கணவன் அவளை விட்டுச்சென்ற இடம்... விதி அவளுக்கென கொடுத்த அவளின் இன்றைய இருப்பிடம்.
தேசம் என்னவோ வெறும் இருளில் மூழ்கியிருக்க... அந்த தேசத்தின் தலைமை இடமான இருள்மாளிகை, அதற்கும் மேல். காரிருள் கூட உள்நுழைய அஞ்சும் ஒரு இறுக்கமான சூழல் நிலவிடும் அக்கோட்டையில், இவளின் இந்த ஒரேயொரு அறை மட்டும் சதா நேரமும் ஒளியில் ஜகஜோதியாக மிளிர்ந்து கொண்டிருக்கும். அதன் காரணம்.. அறையினுள் இருக்கும் அவள் மாத்திரமே.
இருள் மாளிகையினுள் சாதாரணமாக ஒருவர் நுழைந்தாலே அவர் மனநிலை ஏகத்திற்கும் எதிர்மறையான எண்ணங்களை நினைக்கத் துவங்கிவிடும்... அவ்வாறிருக்க, அதனுள்ளேயே தன் மொத்த வாழ்க்கையையும் கடத்துபவர்களின் எண்ணங்களோ அந்த இருளை போலவே இருண்டு போய் இருக்கும். அதன் விதிவிலக்காக இவ்விடம் வீற்றிருப்பவளே இவள்.. ரட்சகராஜ்யத்தின் இளவரசி என்னும் தன் அடையாளத்தை தன் கணவனுக்காக மாற்றிக்கொண்ட ஷிவேதனா..
பிறப்பால் அவள் ராஜ்யம் இதுவல்ல தான்... காலம் யாரைதான் விட்டுவைத்தது?.. ரட்சக மஹா சாம்ராஜ்யத்தின் முன்னால் இளவரசி... இருள் மாளிகையின் தலைவன், இருளரசனின் இந்நாள் பினைகைதி.
இப்போது மகனைத் தேடி அவள் வெளியில் செல்லலாம் தான்.. ஆனால் ஒளியன்றி செல்லும் பாதை புலப்படுவது எவ்வாறு?.. கையோடு எடுத்துச்செல்ல அவள் அறையில் இருப்பது ஒன்றும் செயற்கை ஒளி அல்லவே.. அவளின் புனிதத்தை அடையாளம் காட்டிடும் விதத்தில் இருக்கும் இயற்கை ஒளி. ஏனோ அவ்வொளி அவள் வாழ்வில் துணை வரவில்லை.
மகனுக்காக காத்திருந்தவளின் நினைவுகள் எப்படியோ அவள் கடந்த காலத்தினுள் மெல்ல மெல்ல ஊடுருவத் தொடங்கியிருக்க.. அதனுள் அவளை முழுவதுமாக மூழ்கவிடாமல் காக்கவே வரவளித்தான் அவன்... அவளின் ஐந்து வயது புதல்வன்... ஷேனா.
"அம்மா... நான் வந்துவிட்டேன்...", ஆசையாக கூவிக்கொண்டே ஓடிவந்து அன்னையின் காலை தன் ஒற்றை கையால் கட்டிகொண்டவனிடம் அவனால் சரியாக பிடித்துத் தூக்கமுடியாத ஒரு புத்தகம். அளவில் உள்ளங்கை அகலமாக இருந்தாலும் கணத்தில் ஒரு குழந்தையால் தூக்க முடியாத கணம்..
அவனை அள்ளிக் கொஞ்சிய ஷிவேதனா, அவன் கையில் இருக்கும் புத்தகத்தை குழப்பத்துடன் வாங்கினாள்.
"ஷேனா.. இது...? இது எனது புத்தகம் ஆயிற்றே... எங்கிருந்து எடுத்து வந்தாய்?", அப்புத்தகத்தை கண்டதில் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு அவளுள்.
"அம்மா... இது உங்களுடையதா?", ஷேனாவின் கண்கள் ஆச்சரியத்தில் மிளிர.., "ஆம் ஷேனா... நான் எழுதியது தான்...", சிறு புன்சிரிப்புடன் கூறி அவனைத் தூக்கி மடியில் அமரவைத்தாள் அவள்...
அன்னையின் மடியில் அவன் இருக்க.. அவன் மடியில் புத்தகம் இருக்க, "இதில் என்ன உள்ளது அம்மா??.. கதைகள் உள்ளதா??", ஆர்வம் பொங்கிட கேட்டவனுக்கு மௌனமே பதிலாக வந்தது.
"சொல்லுங்கள் அம்மா.. இதில் என்ன உள்ளது?", அவளின் கரத்தை ஆட்டிக்கொண்டே கேட்க..., "ஷேனா... இதில் நம் ஆதிலோகத்தின் மாய சரித்திரம் உள்ளது", என கூறிய கணம், மீண்டும் தன் ராஜ்யத்தின் இளவரசி ஆகியது போல் அவள் கண்களில் அத்தனை கம்பீரம்... அத்தனை அதிகாரம். ஆனால் மகனின் முகம்தான் தொங்கிவிட்டது..
"சரித்திரமா?... ஹ்ம்ம்ம்ம்.... அழகழகான சித்திரங்கள் இருப்பதை பார்த்து இது கதை புத்தகம் என ஏமாந்துவிட்டேன் அம்மா...", ஷேனாவின் முகம் ஏமாற்றத்தில் சுருங்கிட... எதையோ நினைத்து கொண்டிருந்தவள் அவன் தோய்ந்த குரலில் நிஜஉலகை அடைந்தாள்.
"ஹஹஹஹா... ஆஹா.. என் செல்ல ஷேனாவுக்கு இப்போது கதை கேட்க ஆர்வம் கூடிவிட்டது போலவே...", சிரிப்புடன், தன் மகனின் மடியிலிருந்த புத்தகத்தை தன் பக்கமாக திருப்பினாள் அவள்.
"ஹான்.. ஆர்வமாக தான் உள்ளது... ஆனால் இதில் தான் கதை இல்லையே."
"இது கதை அல்லவென யார் சொல்லியது?"
"ஹும்... நீங்கள் தானே சொல்லியது அம்மா... இதில் நம் ஆதிலோகத்தின் சரித்திரம் உள்ளதென்று...", தாயின் மீதே சாய்ந்தபடி அவளை விழித்து விழித்து பார்த்தபடி குழப்பத்தில் கேட்க.. அவனை தூக்கி தனக்கு எதிரில் அமரவைத்து புத்தகத்தை நடுவில் வைத்தவள், "என் செல்ல மகனே... சரித்திரம் கூட கதை போல் தான். சரி, நம் சரித்திர கதையை தெரிந்து கொள்கிறாயா??..", அவன் ஆர்வத்தை தூண்டுமாறு கேட்டாள் ஷிவேதனா. அடுத்தநொடி, உற்சாகமாக முதல் பக்கத்தை புரட்டி வைத்துவிட்டு கதைக்காக தாயை நோக்கினான் ஷேனா. ஒருகாலத்தில், தன் மருமகனுக்காக தன் கைப்பட தானே உருவாக்கிய அப்புத்தகத்தை, இப்பொழுது மகனுக்கு கூறத் தொடங்கினாள் அவள்.
ஷேனா திறந்து வைத்த புத்தகத்தை மீண்டும் மூடியவள், "ஷேனா... இங்கு வெள்ளை நிறத்தில் இருக்கிறதல்லவா.... இது தான் நம் ஆதிலோகம்...", அட்டை படத்தில் இருக்கும் சித்திரத்தை சுட்டிக்காட்டி அவள் கூற.. வெள்ளை நிற பெரிய சர்ப்பம் ஒன்று, கையில் வெள்ளை நிற பந்து ஒன்றையும் வாலில் நீல நிற பந்து ஒன்றையும் தாங்கிக் கொண்டு பிரபஞ்சத்தின் வெற்றிடத்தில் பறந்து கொண்டிருந்தது.
"அம்மா... எனில் இந்த நீல நிறத்தில் இருப்பது??...
"அதுவும் நம் லோகத்தை போன்ற வேறொரு லோகம் தான் ஷேனா.. ஆனால் இதுவரையில் இங்கிருந்து யாரும் அங்கு சென்றதில்லை.. அங்கிருந்தும் யாரும் இங்கு வந்ததில்லை"
"ஓஹ்!!.. சரி, இரண்டையும் பிடித்து வைத்திருப்பது யார் அம்மா?"
"ஹாஹா... அவர்கள் பிடித்து வைக்கவில்லை ஷேனா.., இன்றும் நம்மை அவர்கள் கரத்தினுள் வைத்து பாதுகாக்கிறார்கள்... அவர்கள் தான் நம் ஆதிலோகத்தை உருவாக்கியவர்.. ஆதிலோகினி...", சொல்லிக்கொண்டே புத்தகத்தின் முதல் பக்கத்தை புரட்டி வைக்க, வெள்ளை நிறத்தில் இருந்த ஆதிலோகம் மட்டும் ஒரு பக்கம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது.
"ஷேனா, நாம் வாழும் ஆதிலோகம் இதுதான்.. இது எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை அறிவாயா?", சில நொடிகள் யோசித்தவனுக்கு எந்தவித வர்ணனையும் கிடைக்காமல் போக, தாயின் கேள்விக்கு இடவலதாக தலையசைத்து பதில் கொடுத்தான் ஷேனா..
"நம் கற்பனைக்கு எட்டாத அளவு பிரமாண்டமானது ஷேனா!.... உனக்கு இந்த இருள்மாளிகை மட்டும் தானே தெரியும்?"
"ம்ம்"
"ஆனால் இந்த இருள்மாளிகை, நிழல் ராஜ்யத்தில் சிறு பகுதிதான்..", சொல்லிக்கொண்டே, புத்தகத்தின் முதல் பக்கத்தை முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்த ஆதிலோக ஓவியத்தின் மேல் தன் கையை வைத்தார் ஷிவேதனா. அவர் கையில் இருந்து வெளிபட்ட நீல நிற ஒளி, அந்த பக்கம் முழுவதும் படர்ந்த அடுத்த நொடி, அந்த அறை முழுவதிலும் படர்ந்தது மறுமை பூமியின் மாதிரி உருவம்.
"வ்வ்வாஆஆஆ..!!!", அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்துவிட்ட ஷேனா, கண்களை அகல விரித்துவைத்து அறை முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்ட ஆதிலோக மாதிரி காட்சியை பிரம்மிப்புடன் பார்த்து வியக்கத் தொடங்கினான்.
அறையின் இரண்டு ஓரங்களிலும் இரண்டு பெரிய பெரிய மலைகளின் தோற்றங்கள்.. ஒருபுறம், அழகிய காட்சியாக பசுமை படர்ந்தும் மறுபுறம் கொடிய தோற்றத்தில் முழுவதும் இருள் படர்ந்தும் தெரிந்தது.... அதனை தொடர்ந்து இருபுறமும், பெரிய மாளிகைகள் சிலவும் சிறிய மாளிகைகள் சிலவும் சூழ இரண்டு ராஜ்யங்கள்.. இரண்டையும் குறுக்காக தடுத்துவைக்கும் ஒரு மாபெரும் வனம், பச்சை மரங்களைத் தவிர்த்து பல வண்ண மரங்களை கொண்டும் என கண்ணை பறிக்கும் காட்சியில் இருந்தது முழு ஆதிலோகம்.
"ஆதிலோகத்தின் கிழக்கு முனையிலிருந்து தொடங்கிடுவோம் வா..", ரசனையை நிறுத்தவிடாமல் செய்யும் அந்தக் காட்சியில் மூழ்கிக் கொண்டிருந்த தன் மகனை இழுத்து மடியில் அமர்த்திய ஷிவேதனா, அறை முழுவதையும் ஆக்கிரமித்திருந்த மாதிரி உருவத்தை இருவருக்கு மட்டும் போதுமான அளவு தெரியும்படி சுருக்கி, அதன் கிழக்கு முனையை ஷேனாவின் பார்வைக்கு முன்னிலையில் காட்சிபடுத்தினார்.
"உனக்கு இருள்மாளிகை மட்டும் தானே தெரியும். அதை வைத்தே விளக்குகிறேன்.. இது தான் நாம் இருக்கும் இருள் மாளிகை", இருண்ட மலை இருக்கும் திசையில் இருந்த ராஜ்யத்தின் மையத்தில், பெரிய மாளிகை ஒன்றை குறிப்பிட்டு காட்டி, "இந்த இருள்மாளிகையின் நாலாபுறத்திலும் ஒரு ஒரு வாயில்கள் என நான்கு வாயில்கள் உள்ளது.. கிழக்கு வாயிலிலிருந்து எல்லைவரை சென்றால் இந்த மலை இருக்கும்..", அந்த கரிய மலையை காட்டினார். "இதுதான் அராலி பர்வதம். ஆதிலோகத்தின் கிழக்கு எல்லை. இந்த பர்வதத்தின் எல்லையில் நாம் வசிக்கும் மாளிகையைப் போன்றே சிறிய மாளிகை ஒன்று இருக்கும்.. அதுதான் முத்துமாளிகை. ஆதிலோகத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த பொருட்களில் ஒன்று அங்கு தான் உள்ளது."
"என்ன பொருள் அம்மா?!!"
"கரு முத்து. அந்த முத்து அங்கிருப்பதால் தான் அந்த மாளிகையை முத்துமாளிகை என்பார்கள். அந்த முத்து, இந்த மாளிகைக்கு வருவதற்கு முன்பு அதை வைத்திருந்தவர் மிக திறமைசாலியானவர்.
நீ ஒன்று அறிவாயா?.. இயற்கையாகவே மாய சக்திகளுடன் பிறப்பவர்கள் தான் மாயங்களை கையாழ முடியும். ஆனால்-"
"எனில் என்னால் முடியுமா அம்மா?"
"உன்னிடம் மாயங்கள் இல்லை ஷேனா..", ஷிவேதனா மென்மையான குரலில் பதிலுரைத்த நொடியில் ஷேனாவின் முகம் சுருங்க.., "இல்லையென்றால் என்ன.. இந்த கருமுத்தை வைத்திருந்தவரை போல் என் மகனும் திறமைசாலி ஆயிற்றே!.. அவர் எந்தவித இயற்கையான மாய சக்திகளும் தன்னுடன் இல்லாமலே மிகப்பெரிய மாய வித்வான்களையெல்லாம் தன் கைக்குள் வைத்திருந்தாராம்... அதுபோலவே என் மகனுக்கும் எவ்வித மாயங்களும் அவசியமில்லை.", தன் அன்னை, கன்னத்தை வருடி முத்தமிட்ட நொடியில் ஷேனாவின் சுருங்கிய முகம் மலர்ந்தது..
"ஓஹ்ஹ்ஹ்! மெய்யாகவா?"
"ம்ம். மெய்யாகவே. சரி கேள், அந்த முத்துமாளிகையிலிருந்து அப்படியே இருள் மாளிகைக்கு வரும் வரையில், முழுவதுமே நிழல்தேசம் தான். அதன் மையத்தில் தான் இருள்மாளிகை உள்ளது. வடக்கிலும் தெற்கிலும் சிறிய மாளிகைகள் சிலவையும் உள்ளது.. அதில் ஒன்று தான் பாதாள கோட்டை."
"ஹான்!.. இக்கோட்டையை நான் பார்த்திருக்கிறேன்.. தந்தையின் அறையில் இருந்து பார்க்கும்பொழுது தெரியும் அம்மா....", ஷிவேதனா சுட்டிக்காட்டிய சிறு மாளிகை ஒன்றினை பார்த்த நிலையிலேயே ஷேனா கூற.. அவன் பதிலுக்குப்பின் சில நொடிகளுக்கு வேறு எதுவுமே சொல்லவில்லை அவர். அந்த மௌனத்தின் காரணம் என்னவென அவர் முகத்தை பார்த்திருந்தால் புரிந்திருக்கும் ஆனால் ஷேனாவோ மௌன மொழிகளை புரிந்துகொள்ளும் அளவிற்கு வளர்ந்திருக்கவில்லை. ஓரிரண்டு நொடிகளுக்கு பின் ஷிவேதனா, மீண்டும் தொடர்ந்தார் தன் விளக்கங்களை.
"சொல்லப்போனால் அது கோட்டையே அல்ல ஷேனா, அது ஒரு சிறை. கொடிய அரக்க ஜந்துக்களை அடக்கி வைக்கும் மாயசிறை."
"ஓஹ்ஹ்!!.. அதனால் தான் அங்கு பெரிய சத்தம் கேட்டுக்கொண்டே இருக்குமா??.."
"ம்ம்.. அது பெரிய சத்தம் அல்ல.. மிருகங்களின் உறுமல்."
"ஹான்ன்!!"
"பிறகு, நேராக மேற்கு வாயிலைக் கடந்து சென்றால், நிழல்தேசத்தின் மாய எல்லைக்கோடு வரும். அதுவரையில் முழுவதும் இருள்வனம் தான். அதனை தாண்டி சென்றால், முழுவதும் வனதேசம். வண்ணமயமான இயற்கை செழித்த அழகானதொரு இடம்.."
"வண்ணமயமான இடமா?.. அது எப்படி இருக்கும் அம்மா.."
"ஹம்.. இப்படி தான்..", மாதிரி காட்சியில், பல வண்ணங்களுடன் பிரகாசமாக தெரியும் வனதேசத்தை மட்டும் ஷிவேதனா தன் விரலால் குறிப்பிட்டு காட்டினார்.
"வ்வ்வாஹ்ஹ்ஹ்!!.. நிழல் தேசத்தில் ஏன் அம்மா இப்படி இல்லை.."
"ஏனென்றால் இது நிழலின் தேசம் ஷேனா. அராலி பர்வதம் முதல் நிழல்தேசத்தின் மாய எல்லை வரையில் எங்கும் ஒளியே கிடையாது. நம் அறையை தவிர."
"நம் அறையை தவிர வேறு எங்குமே ஒளி கிடையாதா?.. நான் கேட்கும்போதெல்லாம் தூரத்தில் ஒளி இருக்கிறது என்று தானே சொல்வீர்கள்?"
"ஆம் ஷேனா. அதுதான் இந்த வனதேசமும் மற்றைய இடங்களும்.."
"எனில், நம் நிழல் தேசத்தில் கிடையாதா?!.. ஏன் அம்மா அப்படி?.. நமக்கு மட்டும் ஏன் இந்த ஒளி இருக்கிறது?", அவன் முகத்தில் இருக்கும் அதிர்ச்சியைப் பார்த்தால்தான் சொல்ல முடியும் என்றில்லை. மடியில் அமர்ந்திருக்கும் மகனின் குரலிலேயே புரிந்தது ஷிவேதனாவிற்கு. இந்த ஒளி, தன் தேசத்தை விட்டு தன்னை ஒதுக்கி வைத்திருப்பது போல் ஒரு உணர்வு எழத் தொடங்கியது ஷேனாவின் மனதினுள். ஆனால் அதை அதிக நேரம் நீடிக்கவிடவில்லை அவன் அன்னை.
"இது, ஆதிலோகத்தின் மகாராணி நமக்கு கொடுத்த வரம் ஷேனா. நிழல்தேசத்தில் எவருக்கும் கிடைத்திடாத வரம். என் திறமைசாலி மகன், இந்த ஒளியை கண்டு ரசிக்கவேண்டுமென மகாராணி கொடுத்த வரம்.", அன்னையின் சொல்லைக் கேட்டநொடியில், சுருங்கியிருந்த ஷேனாவின் முகம் மீண்டும் மலர்ந்தது.
"ஹஹா!! எனக்காகவா?! யாரந்த மகாராணி? எங்கிருக்கிறார்கள் அம்மா.?"
"அவர்கள்.. இங்கிருக்கிறார்கள்", மாதிரி படத்தின் மறுமுனையில் இருந்த மலையை அடுத்து இருக்கும் ராஜ்யத்தின் மையத்தில் உள்ள மிகப்பெரிய வெள்ளை நிற மாளிகையை சுட்டிக்காட்டி, "ரட்சக மஹா சாம்ராஜ்யத்தின் முக்கிய மாளிகையான வைர மாளிகையில் இருக்கிறார் நம் மகாராணி", எனக்கூற, "இங்கு நான் எப்படி செல்வேன்?", ஷேனாவின் கண்கள் வைரமாளிகையை விட்டு அகலவில்லை..
"அங்கு செல்லவேண்டுமானால் முதலில் இந்த நிழல்தேசத்தின் இருளைத் தாண்ட வேண்டும் ஷேனா. இருள் எல்லையைத் தாண்டி... வன தேசத்தின் இரு வனங்களையும் தாண்டி... ரட்சகராஜ்யத்தின் எல்லையை அடைய வேண்டும். அங்கே பிரம்மாண்ட வாயில் ஒன்று உள்ளது... எளிதில் யார் கண்ணுக்கும் சிக்காத வாயில்!!.. அதை கண்டுபிடிக்க வேண்டும்.. அதன் பின்னால் இருக்கிறது ரட்சக மஹா சாம்ராஜ்யம்... அதன் மையத்தில் தான் வைர மாளிகை உள்ளது.. செல்கிறாயா அங்கே?"
"ஹான், ஹான்!... நான் செல்வேன்..."
"ஹஹஹா.. செல்லலாம் செல்லலாம்..", சிரித்துக்கொண்டே மகனை கட்டியனைத்துக்கொள்ள, "ரட்சகராஜ்யம் எப்படி இருக்கும் அம்மா.. அதையும் சொல்லுங்கள்", அன்னையின் அணைப்பில் இருந்துகொண்டே அவர் முகம்பார்த்துக் கேட்டான் ஷேனா.
"நிழல் ராஜ்யத்துக்கும் ரட்சகராஜ்யத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் ஷேனா. இங்கு முழுவதும் இருள் நிரம்பியிருக்கும்.. அங்கு, வைரமாளிகையின் வைர ஒளி நிரம்பியிருக்கும். அவ்வளவு தான். மற்றபடி இங்கிருப்பதை போலவே சிறிய பெரிய மாளிகைகள், கோட்டைகள்.. ஹான்!, இங்கு கிழக்கு எல்லையில் அராலி பர்வதம் இருப்பது போல் அங்கு பசுமையான அனாலி பர்வதம் இருக்கும் ஷேனா. அவ்வளவுதான் வித்தியாசம்.
"ஓஹ்ஹ்!!.. எனில், மலைக்கு பின்னால் அப்புறம் என்ன இருக்கும் அம்மா?.. இதில் எதுவுமே தெரியவில்லை."
"இந்த மலைகளுக்கெல்லாம் எவருமே சென்றதில்லை ஷேனா. இதை கண்களால் பார்த்தது கூட இல்லை.. இங்கு இப்படி இரு மலைகள் இருக்கும் என கேள்விபட்டது மட்டும்தான்.. பின் அங்கு எவருமே சென்றதில்லை.. இரு எல்லைகளில் இருக்கும் அந்த மலைகள் இரண்டும் ஒன்றாக இணைந்துவிடும் என்றுதான் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். மூத்தவர்கள் சிலர், அப்புறம் முழுவதும் நீரால் சூழப்பட்ட புதியதொரு லோகமே உள்ளதெனவும் சொல்லிடுவார்கள். ஆனால் குறிபிட்ட எல்லையைத் தாண்டி மக்கள் எவரும் செல்ல முடியாது. செல்ல நினைத்த பலர் மீண்டு வரவே இல்லையாம்.."
"ஓஹ்ஹ்!!!.. .. .. அப்படியென்றால் வனதேசமும் அப்படி தான் இருக்குமா?"
"இல்லை, இல்லை ஷேனா.. வனதேசம் முற்றிலும் மாறுபட்ட ஒரு தேசம். இங்கு பார்..", மாதிரி காட்சியில் வனதேசத்தை மட்டும் தனியே பிரித்து எடுத்துக் காண்பித்தவர் அதை பற்றி விளக்கமளிக்கத் தொடங்கினார். "பல நிறங்களில் மரங்கள்.. அழகிய மலர் கொடிகள்.. இந்த நதி.. ஓடை.. இவை எல்லாமே வனதேசத்தில் மட்டும்தான் இருக்கும். ரட்சகராஜ்யமாயினும் சரி நிழல்தேசமாயினும் சரி.. இதையெல்லாம் பார்க்க இங்குதான் வரவேண்டும். பல விசேஷ மூலிகைகளை சேகரிக்கவும் இங்கு தான் வரவேண்டும். இன்னுமொரு தனிதன்மை உள்ளது வனதேசத்தில். கிழக்கில் நிழல்தேசமும் மேற்கில் ரட்சகராஜ்யமும் இருப்பது போலவே வடக்கில் குள்ளர்கள் மறைவிடமும் தெற்கில் மின்மினி தேவதைகளின் மறைவிடமும் இருக்கும். அவர்கள்-"
"ஏன் அது மட்டும் மறைவிடம்.. அவர்கள் மறைந்து கொண்டிருக்கிறார்களா என்ன?"
"ஆம் ஷேனா அவர்கள் மறைந்து தான் வாழ்வார்கள்.. ஏனெனில் அவர்களில் அனைவரிடமுமே மாய சக்திகள் இருக்கும். அந்த சக்திகள் அனைத்துமே அபூர்வமானது. அதை வேறெவரும் தவறாக பயன்படுத்திடக் கூடாதென அவர்கள் மறைவிடத்தில் வாழ்கிறார்கள்."
"அப்படியானால் அவர்களை பார்க்கவே முடியாத அம்மா?"
"நமக்கு அதிஷ்டம் இருந்தால் நிச்சயம் பார்க்கலாம் ஷேனா.. மற்ற இரு ராஜ்ய மக்களும் மூலிகைகளுக்காக வனதேசம் வருவது போலவே இவர்களும் வனதேசம் வருவார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் நாம் பார்க்கலாம். பார்த்தவுடன் யாரேனும் இவர்களைப் பிடித்துவிட்டால் அவர்கள் கேட்கும் உதவிகள் எவ்வளவு பெரியதாக இருப்பினும் இந்த இரு இனத்தவர்களும் நிச்சயம் செய்திடுவார்கள்... நம் மக்களில் மாயங்களுடன் பிறப்பெடுக்காதவர்கள், ஏதேனும் மாய காரியங்களுக்கு உதவிகள் வேண்டுமானால் இவர்களைத் தேடித்தான் செல்வார்கள்.. இவர்களைப் பார்பதுகூட கொஞ்சம் சுலபம்தான் ஆனால் பிடிப்பது மிகவும் கடினம்.."
"ஓஹோ!! ஆனால் நான் பிடித்துவிடுவேன்", அவன் முகம் முழுவதும் மலரும்படிக்கு புன்னகைக்க, "நீ தான் திறமையானவனாயிற்றே ஷேனா! நிச்சயம் பிடித்துவிடுவாய்", மகனை போலவே சிரித்தார் ஷிவேதனா.
"ஹ்ம்.. அவ்வளவு தான் ஆதிலோகத்தின் மொத்த ராஜாங்கம். இப்போது ஆதிலோகம் எப்படி உருவாகியது என்பதை பார்ப்போமா?", கேட்டுக்கொண்டே அந்த மாதிரி உருவத்தை மீண்டும் அந்த புத்தகத்தின் பக்கத்தில் அடக்கியவர் அடுத்த பக்கத்தைத் திருப்பிட, அப்பக்கம் முழுவதும் கறுமை படர்ந்து நடுவில் மட்டும் சிறு புள்ளியென தெரிந்தது ஒளி ... அதனை காண்கையில் அவள் வாழ்க்கையே கண் முன் நிழலாடுவது போல் தோன்றியது ஷிவேதனாவிற்கு.
"அம்மா, ஏன் இந்த பக்கத்தில் மட்டும் எதுவுமே இல்லை?.. பக்கம் முழுவதும் வெறும் கருமையாக உள்ளது?"
"முழுவதுமாக இல்லை ஷேனா.. இங்கு பார். இங்கு சிறு புள்ளியென ஒளி தென்படுகிறதல்லவா?"
"ஹான்.. சிறிதாக இருந்ததால் நான் கவனிக்கவில்லை அம்மா"
"அதுதான் எல்லோரும் செய்யும் தவறு.. எது அதிக இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறதோ அதுவே முழுவதுமாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.."
"ஓஓஓஹ்!!.. ஆனால் இனி நான் அப்படி நினைக்க மாட்டேன்.. இந்த ஒளி போல் சிறிதாக ஏதேனும் இருக்கிறதா என்றும் நன்றாக பார்ப்பேன்"
"என் ஷேனா தான் புத்திசாலியாயிற்றே... ஆனால் இந்த இருள் அப்படியல்ல ஷேனா.. எல்லாரையும் போல் இருளும் அதே தவறைத்தான் செய்தது. தொடக்க காலத்தில் இந்த இருள்தான் நம் முழு பிரபஞ்சத்திலும் பரவி இருந்தது..", கருமை படர்ந்த அந்த பக்கத்தை சுட்டுக்காட்டியபடி, ஆதிலோகம் உருவாகிய சரித்திரத்தை தொடர்ந்தார் அவர். "அதனால்தான் இந்த ஒளி போல் சிறிதாக இருந்த சக்திகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருந்தது இருள்.. இதுதான் நம் சரித்திரத்தின் துவக்கம் ஷேனா.. இந்த இருள் தான் நம் முழு பிரபஞ்சத்திற்கும் துவக்கம்..", ஆழ்ந்த மென்மையான குரலில் தன் அன்னை சொல்லும் சரித்திரத்தை மௌனமாக உள்வாங்கத் தொடங்கினான் ஷேனா..
"பிரபஞ்சத்தில் இருளும் வெறுமையும் மட்டுமே ஆட்சி செய்த காலம் அது... எதுவுமே இல்லாமல் அதே நிலையே பல யுகங்களாக நீடிக்க..சில காலங்கள் கடந்தபோது வேறு சில சக்திகளும் உருவாகியிருந்தாலும் இருளின் காரணமாக அவை எதுவும் வெளிப்படாமலே இருந்தது... இருளை மீறி வாழ அந்த சக்திகளுக்கு எந்த வழியும் கிட்டவில்லை.
அதனைப் பார்த்து இருளுக்கு ஆணவம்... 'சகலமும் தானே' என்ற எண்ணத்தில் எதிர்வரும் அனைத்தையும் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து, தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது... ஒன்றைத் தவிர..."
"என்ன அது அம்மா?"
"அந்த ஒன்று தான் மாயம்... இருளால் மாயத்தை ஆழ முடியவில்லை... காரணம், அது மாயம்.... மாயாஜாலம் எதற்கும் கட்டுப்படாத ஒன்று... இந்த நொடியில் இங்கிருப்பது மறுநொடி ஏதோ ஒரு மூலையில் இருக்கும்.... அதற்கு உருவமில்லை... அடர்த்தி இல்லை.. எதுவுமே இல்லை.. ஆனால் அதனிடம் தான் அனைத்துமே இருக்கிறது..."
"அன்ங்ங்!! அதெப்படி? எதுவுமே இல்லாதவரிடம் அனைத்தும் இருக்கும்?"
"மாயம் நினைத்து நடவாதது என்று எதுவுமே இல்லை ஷேனா. இப்போது நீ ஆசைபடும் ஒன்று உன்னிடம் இல்லை என்னும் பட்சத்தில் நீ மாயத்தின் உதவியை நாடினால் அது உனக்கு கிடைத்துவிடும்... நேற்று நீ கீழே விழுந்தபொழுது உன் காலில் உண்டான காயத்திற்கு மருந்திட்டோமே... நம்மிடம் மருந்து இருந்ததா என்ன?... மாயம் தானே உனக்கு மருந்திட்டது....", ஷிவேதனா மாயத்திற்கு விளக்கமளிக்க..., "ஓஹோ... அதுதான் மாயமா??.. அந்த மாயம் அருமை.. எனக்கும் அதன் உதவிகள் வேண்டும்", என விழிகள் மின்ன ஆசையாக கேட்டான் அவன். அதற்கு பதிலளிக்காமல் அவன் சிகையை வருடிக் கொடுத்தவர், "சரி கதையைக் கேள்", என மீண்டும் கூறத் தொடங்க... அவன், அன்னையின் தோளில் சாய்ந்துக்கொண்டான்.
"பிரபஞ்சத்தில் இருந்த எல்லா சக்திகளையும் கட்டுப்படுத்தினாலும் இந்த மாயத்தை மட்டும் தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என இருளுக்கு ஒரு பயம் மெல்லமாக துளிர்க்கத் தொடங்கியது... 'தன்னை விட சக்திசாலியா இந்த மாயம்??.. அப்படி இருந்தால் அதனையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்' என அப்போதிலிருந்து மாயத்தை அடக்க அதனை துரத்திச்செல்ல ஆரம்பித்தது இருள். இத்தனை காலம் வெறுமை மட்டுமே இருந்த இடத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த மாயம், இருளை ஒரு பொருட்டாவே மதிக்காமல் இருந்து.. இப்போது இருளின் குறி மொத்தமாக தன் பக்கம் திரும்பியதும்தான் அதை கவனிக்கத் தொடங்கியது.
தான் கடந்துவந்த பல இடங்களில் பலவித சக்திகளை உணர்ந்திருந்த மாயம், அவையெல்லாம் தன்னைப்போல் இல்லாமல் ஒரு உயிர்ப்பே இல்லாத சக்திகளாக மட்டுமே பிரபஞ்சம் முழுக்க பரவி இருந்ததை பார்த்து சந்தேகமடைந்தது. காலம் செல்ல செல்லதான் அதற்கு காரணம் இருள் என்பது மாயத்திற்கு புரிந்தது.
தன்னைப் போலவே மற்ற சக்திகளுக்கும் சுதந்திரம் கிடைக்க வேண்டுமென நினைத்த மாயம், அன்றிலிருந்து இருளை எதிர்த்து நிற்க ஆரம்பித்தது... இருளோ சுலபமாக மாயத்தை எதிர்த்து, அதனுள் ஊடுருவி சென்று கொஞ்சம் கொஞ்சமா அதனுடைய சக்திகளை தனக்குள் இழுக்க ஆரம்பித்தது",
"அய்யோ!!.. பிறகென்ன... மாயம் தோல்வியடைந்ததா அம்மா?...", திடீரென கத்திக்கொண்டு எழுந்து அமர்ந்தான் ஷேனா.
"இல்லையடா மகனே. மாயம், தன்னுடைய விருப்பம் இல்லாமல் யாருக்கும் அடங்காது... அது பாவம் அந்த இருளுக்கு தான் தெரியவில்லை.. தன் முழு விருப்பத்துடனே தன் சக்திகளை கொஞ்சம் கொஞ்சமாக இருளுக்குள் இழக்க ஆரம்பித்தது மாயம்... பிரபஞ்சம் முழுக்க இருக்கும் இருளை இப்டியெல்லாம் எதிர்த்தால் ஒன்றுக்கும் ஆகாது... இதற்கு வேறு எதாவது தான் செய்ய வேண்டும் என நினைத்த மாயம், எப்படியும் தனக்கு அழிவில்லை என்பதை அறிந்தே ஒரு பெரிய திட்டத்தோடு தன்னை முழுமையாக இருளுக்குள் தியாகித்தது. மாயத்தை அடக்கிய ஆணவத்தில் இருளும் தலைகால் புரியாமல் ஆடிவிட்டு மற்ற சக்திகளை ஆக்கிரமிக்கக் கிளம்பிவிட்டது. இப்போது தன்னைவிட அதிசக்தி இந்த பிரபஞ்சத்தில் இல்லை என்ற முடிவுக்கு வந்த இருள், அந்த அதிசக்தியே தனக்கு எமனாக போவது அறியாமல் பிரபஞ்சத்தை தனக்குள் மூழ்கடிக்கும் முயற்சியில் இறங்கியது.
ஒவ்வொரு சக்தியாய் இருள் ஆக்கிரமிக்க ஆக்கிரமிக்க அந்த இருளுக்குள் பல மாற்றங்கள்... ஆனால் ஏன் என்னும் காரணம்தான் இருளுக்கு புரியவில்லை. இதற்கெல்லாம் உண்மையான காரணம், இருளோடு கலந்த மாயம் தான். புதுவித உந்தம்.. அழுத்தம்... புது விசை என பல வித்தியாசமான சக்திகளை இருளோடு கலக்க ஆரம்பித்த மாயம், தன்னுடைய சக்திகளையும் சேர்த்து இருளுக்குள் வரும் மற்ற சக்திகளையும் பன்மடங்காக பெருக்கிக் கொண்டே சென்றது. நாளடைவில், அந்த சக்தியெல்லாம் சேர்ந்து இருளுகுள் ஒரு பெரிய அழுத்தத்தை உருவாக்கி, இதற்கு மேல் இருளால் எதையும் உள்ளிழுக்க முடியாத நிலையில் அது அப்டியே ஸ்தம்பித்து போனது. அந்த நேரம், இன்னும் இன்னும் நிறுத்தாமல் தன் சக்திகளைப் பெருக்கிக்கொண்டே போனது மாயம். ஒரு கட்டத்திற்கு மேல், இறுதியாக மாயத்தின் காரணமாக அந்த இருள் வெடித்துச் சிதறியது.
அப்போது தான் பிறந்தது சிறு புள்ளியென இங்கு தெரியும் இந்த ஒளி.. இதுதான் இருளை அழித்து பிறந்த சக்தி.. எப்போதும் அழிக்கும் சக்தி.."
"ஹாஹ்!!"
"ஆனால், ஒளி ஒரு பொருளை பார்க்கும் நேரம் அந்த பொருளின் நிழலில் சென்று மறைந்து கொண்டு இன்னுமும் வாழ்கிறது அந்த இருள்."
"பிறகு என்ன ஆனதாம்மா?"
"பிறகு.. அதுவரையில் இருந்த இருளின் தலைக்கணம் மொத்தமாக அழிந்து, தன்னை மிஞ்சிய சக்தி யாருமில்லை என்னும் அதன் எண்ணத்தையே போய்யாக்கியது", அடுத்த பக்கத்தை புரட்டிக்காட்ட.. ஏதோ பிரம்மாண்டமாக வெடித்துச் சிதறுவது போல், கறுமைக்கு இடமே இல்லை என்னும் அளவிற்கு பிரகாசமாக இருந்தது அந்த பக்கம். ஷேனா விழி விரித்து அதைப் பார்த்துக் கொண்டிருக்க.., "சிறிய அளவில் இருந்த ஒளி, சிறிது சிறிதாகவே இருளை அழிக்கத் தொடங்கியது.", என்றார் ஷிவேதனா..
"ஏன் சிறிது சிறிதாக. மொத்தமாக அழிக்கலாம் அல்லவா?"
"ஒளியிடம் அவ்வளவு சக்திகள் இல்லை ஷேனா.. ஆனால் ஒளியின் சக்தி வித்தியாசமானது. சிறிதளவாயினும் இருளை அழிக்கும் அளவிற்கு வலிமை ஒளியிடம் மட்டுமே இருந்தது.", என மீண்டும் முன்பக்கம் புரட்டியவர், இருள் சூழ்ந்த அந்த பக்கத்தில் இருக்கும் சிறு புள்ளியான ஒளியை பார்த்தபடியே கூற... அவளின் குரலில் வெறுமையே எஞ்சி இருந்தது... ஷேனாவிற்கு தான் அந்த குரல் மாற்றங்கள் எல்லாம் புரியவில்லை.
"அது எப்படிபட்ட சக்தி அம்மா?"
"சுற்றிலும் இருள் சூழ்ந்தாலும் சிறு புள்ளியளவு ஒளி வாழ்ந்துவிடும். ஆனால் அந்த சிறிதளவு ஒளி இருந்தால் கூட இருளால் அவ்விடம் நெருங்க முடியாது.. அதனால் ஒளியைப் பார்த்து இருள் பயந்துதான் ஆகவேண்டும்."
"ஓஹ்ஹ்!!"
"ஹம்.. பிறகு, ஒளிக்கு பயந்து இருள் தூரமாக சென்றுவிட்டது. ஒளியின் சக்திகள் நெருங்காத அளவு தூரத்தில்.. ஒரு பாதாளத்தில் சென்று ஒளிந்து கொண்டது. ஆனால் ஒளியிடம் தொல்வி கொண்டதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இருளால். தன்னால் நேரடியாக ஒளியை எதிர்க்க முடியாதென புரிந்துகொண்டு, தன் நிலைக்குக் காரணமான ஒளியையும் மாயத்தையும் அழிப்பதற்காக ஒரு உயிரை உருவாக்கத் தொடங்கியது. அதேநேரம் ஒளிக்கும் மாயத்திற்கும் முதல் பிள்ளையாக பிறந்தாள் இந்த பிரபஞ்சத்தின் முதல் மனித உயிராகிய ஆதிலோகினி.."
"ஆதிலோகினி!!.. அவர்கள் தான் முதல் மனித உயிரா?"
"ஆம் ஷேனா, அவர்களே தான். ஆதி பிறந்தப்பின் அவளையும் அழைத்துகொண்டு ஓரிடத்தை அடைந்தார்கள் ஒளியும் மாயமும்.. அதே இடம்தான் ஒளி மற்றும் மாயத்தின் சக்திகளை எதிர்க்கப்போகும் இருளின் புது உயிர் உருவாகிக் கொண்டிருக்கும் இடமும் கூட... பாதாள லோகம். ஆனால் அவை எதையும் அறியாத ஒளியும் மாயமும் தங்கள் மகளுடன் பாதாள லோகத்தில் வாழத் தொடங்கினார்கள்.. ஒளி அவ்விடத்திற்கு வந்துவிட்டது இருளுக்குத் தெரிந்துபோனது. இதற்குமேல் இங்கு இருந்தால் தன்னுடைய சக்திகள் தான் பலவீனம் அடையும் என்பதை அறிந்து, தான் உருவாக்கிக் கொண்டிருக்கும் அழிவின் சக்தியான அந்த புதிய, கொடிய உயிருக்கு பாதுகாப்பாக வேறொரு சக்தியை வைத்துவிட்டு, அது முழுமையாக உருபெறும் வரையில் பிரபஞ்சத்திற்கே மீண்டும் சென்றுவிட்டது இருள்.
காலம் அதன் போக்கில் கடந்தது... ஒளியின் பிரகாசத்தையும் மாயத்தின் சக்திகளையும் கொண்டு பிறந்திருக்கும் ஆதியின் சக்திகள், அனைத்திலும் தனித்துவமாக இருந்தது. அந்த வரண்டுபோன பாதாளத்தையே அழகிய சோலைவனமாக மாற்றியிருந்தாள் அவள். மறுபுறம், அந்த அழிவின் சக்தியும் வளர்ந்துகொண்டே வந்தது.. ஆனால் இன்னும் உயிர் பெறவில்லை.. இருளின் வாரிசான அழிவின் சக்தியும், அதனைக் காக்கும் சக்தியும் அந்த பாதாளலோகத்தின் ஒரு துருவத்தில் இருக்க.. ஆதியுடன் ஒளியும் மாயமும் மற்றொரு துருவத்தில் இருந்தார்கள்.. "
"அனாலி பர்வதம் - அராலி பர்வதம் போலவா அம்மா?
"ஆம் ஷேனா அதேபோல் தான்... .. இப்போது ஆதிக்கு ஏழு வயது துவங்கியிருந்தது.. அன்றுதான் அந்த அழிவின்சக்தி முழுமையாக உருவம்பெற்று பிறக்கப்போகும் நாள்.. அது தெரிந்ததால் அங்கு வந்தது இருள். அப்போது, பாதாள லோகத்தில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள் ஆதி... சரியாகச் சொல்ல வேண்டுமானால், பெரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள். ஏனென்றால் அன்றுதான் அவளுக்கு தம்பி பிறந்திருந்தான்."
"தம்பியா?"
"ம்ம். என் மகனை போலவே ஒரு குட்டி மகன் பிறந்திருந்தான் ஒளிக்கும் மாயத்திற்கும்.. தம்பி பிறந்த மகிழ்வுடன் ஆதி விளையாடிக் கொண்டிருக்க.. திடீரென சூழலில் ஒருவித மாற்றம்... ஒருவித அழுத்தம்..."
"ஏன்!!!???.....", ஷிவேதனாவின் கதைக்கு குறிக்கீடாக நீண்டு ஒலித்தது ஷேனாவின் குரல்...
"ஏனெனில்... தான் உருவாக்கிய அழிவின் சக்தி, இன்றைய தினத்தில் தான் பிறப்பெடுக்கப் போகிறது என்பதை அறிந்து பாதாள லோகத்திற்கு இருள் வந்துவிட்டதல்லவா?..."
"ஹான்.. ஒளியை அழைத்து அதை விரட்டிடுங்கள்."
"ஹஹஹா!.. அழைக்கலாம் தான் ஆனால் இம்முறை அவசியமில்லை."
"ஏன்?"
"ஏனென்றால், இருள் உருவாக்கிய அந்த அழிவின் சக்தியிடம் செல்லும் முன்பே இருளின் பார்வையில் விழுந்தாள் ஆதி. அவளைப் பார்த்த கணமே அவளிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல்களை அறிந்துகொண்ட இருள், பழக்கதோஷத்தில் அவள் யாரென்பதைக் கூட ஆராயாமல், அவளின் சக்திகளை உறிஞ்சத் துடித்தது.. இறுதியில் அவளை நெருங்கியது... ஆனால் பாவம்... ஆதியின் ஆற்றல் குறித்து முழுமையாக அறிந்திருக்கவில்லை அந்த இருள்...
அவளின் சக்திகளை திருடும் நோக்கில் அவளை நெருங்கிய இருள், இறுதியில் குழந்தையான ஆதியின் அதிசக்தியாலேயே பிரபஞ்சத்தின் எல்லையில் சிறை வைக்கப்பட்டது. இருள், சிறைவைக்கபட்ட அதே நாளில் பாதாளத்தில் கால் பதித்திருந்தது இரு மனித உயிர்கள்.. ஒளியை அழிக்க பிறந்த அழிவின் ஆற்றல் கொண்ட அந்த்கார ரூபன் மற்றும் ஆதியின் சகோதரன் அமிழ்த பத்ரன்..."
"ஹஹஹஹா... மீண்டும் தோல்விகொண்டது இருள்"
"ம்ம். தோல்விதான். .. .. அப்படியே பல காலம் சென்றது.. பாதாள லோகத்தில் பல மக்கள் வாழத் தொடங்கிவிட்டார்கள்... இன்னும் அதே இரு துருவங்கள் தான் இருந்தது. அந்த அழிவின்சக்தி அந்த்காரன், பிறந்ததிலிருந்து இருளை சந்திக்காததால் அவன் எதற்காக பிறந்தான் என்னும் ரகசியம் அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. மேலும், ஒளி இருக்கும் திசைக்கு அவன் சென்றதும் இல்லை. அதனால், ஒளியையும் மாயத்தையும் அழிக்கவே தன்னை உருவாக்கினார்கள் என்பது அவனுக்கு தெரியவில்லை. அவன் இருந்த துருவத்தில் வாழும் மக்களுக்கு அவனே அரசன்.. அதேபோல் ஆதி இருந்த துருவத்தில் அவள்தான் அரசி.
ஆதியின் சகோதரன் அமிழ்தன். ஒரு குறும்புக்காரன். ஆனால் உயிர்களின் ரட்சகன். எவருக்கேனும் சிறிதளவு துன்பம் ஏற்பட்டாலும் அவனின் உள்ளுணர்வு காட்டிக் கொடுத்துவிடும். மறுநொடியில் அவர்களுக்கு உதவ அங்கு வந்திருப்பான். அவனுடன் அவன் நண்பனும் வந்திருபான். ரட்சகன் இருக்குமிடம் அவனும் இருப்பான். இப்படியே காலம் கடக்க.. ஆதிக்கு அந்த அழிவின் சக்தியை பற்றியும், அந்தக்காரனுக்கு ஆதியையும் அவள் மக்களை பற்றியும் தெரிய வந்தது. அதேநேரம் ஆதியின் சிறையிலிருந்து இருளும் தப்பித்து பாதளத்திற்கு வந்து, அந்தக்காரன் செய்யவேண்டியதை அவனுக்குச் சொல்லிவிட்டது."
"ஆஹ்ஹ்ஹ்!! ஒளியையும் மாயத்தையும் அழிக்க கிளம்பிவிட்டானா அவன்?"
"ம்ம்.. கிளம்பிவிட்டான். அப்போதுதான் தொடங்கியது ஒரு பெரும்ம்ம்ம்ம் யுத்தம். அவன் இருளாக இருந்திருந்தால் ஒளியால் அவனை எளிதாக அழித்திருக்க முடியும்... ஆனால் ஒளியையும் மாயத்தையும் அழிக்கும் நோக்கத்துடனே அவன் உருவாக்கப்பட்டிருந்ததால் அவர்கள் இருவராலுமே அவனை எதிர்க்க முடியவில்லை. அதேநேரம் இருள்சக்தி, பாதாளத்தில் வாழும் மொத்த உயிர்களின் சக்திகளையும் உறிஞ்சி தன் சக்திகளை பெருக்கிடத் தொடங்கியது. அந்தக்காரனை நேரடியாக எதிர்க்க முடியாதென புரிந்துகொண்ட ஒளியும் மாயமும் முதலில் மக்களை காப்பாற்ற வேண்டுமென இருளை அடக்கிட முடிவுசெய்து இருளை மட்டும் எதிர்க்கத் தொடங்கினார்கள். அவர்களே எதிர்பார்க்காத ஒன்று, தங்களால் எதிர்க்க முடியாத அந்தக்காரனை தங்களின் பிள்ளைகள் எதிர்க்க தொடங்கியது தான்.. ஒளியும் மாயமும் இணைந்து, இருளை, பாதாளலோகத்தை விட்டு வெளியே இழுத்துவந்துவிட்டார்கள். மீண்டும் அந்த இருளால் பாதளத்தினூள் நுழைய முடியாத அளவிற்கு அந்த லோகத்தைச் சுற்றி ஒளிக்கவசம் ஒன்றினை உருவாக்கிவிட்டாள் ஒளி. இருளை பிரிந்ததால் அந்தக்காரனின் சக்திகளும் குறைந்துபோனது. ஆதியும் அவள் சகோதரனும் தங்களின் ஒட்டுமொத்த சக்தியை திரட்டி அந்தக்காரனை அழித்தார்கள். அதேநேரம் மொத்த பாதாள லோகத்தையுமே அழிவின் விளிம்பில் நிறுத்திவிட்டார்கள்.. அனைத்து அதிசக்திகளும் ஒன்றுசேர்ந்து யுத்தமிட்டதால் அவர்களின் சக்திகளே மக்கள் அனைவரையும் எதிர்மறையாக தாக்கத் தொடங்கிவிட்டது. இறுதியாக, வேறுவழி இல்லாமல் அந்த லோகத்தில் எஞ்சியிருக்கும் உயிர்களை காக்க, பாதாள லோகத்தை மொத்தமாக அழித்துவிட்டாள் ஆதி. அதற்கு பதிலாக புதிய இரு லோகத்தை உருவாக்கி, எஞ்சிய மக்களை அதில் வாழச்செய்து அதன் நிரந்தர பாதுகாப்பாக மாறி போனாள்... அந்த லோகம்தான் நம் ஆதிலோகம் மற்றும் அதனுடனே இருக்கும் பூவிலோகம். ஒரு லோகத்திலிருக்கும் மக்களைக் குறித்து இன்னொரு லோகத்தில் இருப்பவர்களுக்குத் தெரியாது. ஆனால் ஒருநாள் தெரிந்துக் கொள்வார்கள். இருள்சக்தி மீண்டும் விடைபெறும் ஒரு நாளில், நம் ஆதிலோகத்தினுள் ஆதியின் சகோதரன், நம் ரட்சகன் வரும்பொழுது.. அன்று தெரிந்துகொள்வார்கள் ஒருவரை பற்றி மற்றவர்கள்.. அவ்வளவு தான்.. நம் சரித்திரக் கதை முடிந்தது...", புத்தகத்தின் இறுதி பக்கத்தை மூடியவர் மகனைத் தூக்கி தனக்கு முன்னால் அமரவைத்து, "இப்போது, மற்ற எல்லாரையும் போலவே ரட்சகனின் வரவிற்காக நாமும் காத்திருப்போம்.", அவன் கன்னங்களை வருடியபடியே சொல்ல.. தொங்கிய முகத்துடன், வாயிலுக்கு வெளியில் பரவியிருக்கும் இருளை நோக்கினான் ஷேனா.
"அம்மா.. நாம் இருப்பது நிழல்தேசம்.. நம்மை சுற்றி இருப்பது இருள்.. அது வேண்டாம் அம்மா... அது மோசம்...", அந்த வார்த்தையை அவன் சொல்லிய நொடி ஷிவேதனாவின் கண்ணில் அத்துனை ஆனந்தம்... ஏனென்று அவளே அறிந்திருக்கவில்லை.
"அது மோசம் தான் ஷேனா... ஆனால் என்றேனும் ஒருநாளில் நம் ரட்சகன் வந்து இந்த இருளை மொத்தமாக அழித்துவிடுவான்..", ஒரு கையில் புத்தகத்தை பிடித்திருந்தவள் மறு கரத்தால் மகனை அனைத்துக்கொள்ள, "ஹான்.. நானும் அவனுக்கு உதவிடுவேன்", சபதம் மேற்கொள்வது போல் கூறும் மகனை பூரிப்புடன் நோக்கினார் ஷிவேதனா.
"சரி ஷேனா... கதை இருக்கட்டும்... முதலில் இதைச்சொல்.. இப்புத்தகம் உனக்கு எங்கிருந்து கிட்டியது?"
"தந்தையின் உடைமைகளில் இருந்துதான் அம்மா.... இன்று தந்தையின் அறையை சுத்தப்படுத்தும் சமயம் அவரது உடைமையில் இருந்து கீழே விழுந்தது... இதில் அழகாக படங்கள் இருந்தது.... அதனால்தான் எடுத்து வந்தேன்....", அவன் கூறிய அடுத்தநொடி ஷிவேதனாவின் முகம் இறுகியது.
"பரந்து விரிந்த அறையை நீ ஒருவனாக சுத்தம் செய்தாயா?... .... இந்த பிஞ்சு கரங்களால்....", அவனது கரங்கள் இரண்டையும் தன் கையில் ஏந்தி, கலங்கிய மனதுடன் தன் மகனை நோக்க... அவனோ பயந்து போய் இருந்தான்.
"அம்ம்ம்... இல்..இல்லை அம்மா.. ஹம்... என்னை தந்தை விரைவாக அழைத்தார்... நான் செல்கிறேன் அம்மா... சீக்கிரம் உங்களிடம் வந்து விடுவேன்", அன்னையின் கன்னத்தில் அழகாய் ஒரு முத்தம் வைத்துவிட்டு அவசர அவசரமாக வாயில் இருக்கும் திசை நோக்கி ஓடி, இருளுக்குள் மறைந்தான் ஷேனா... பிறந்தது முதல் அவனுக்கு இந்த இருள் பழகிப் போனதால் ஒளியின் அவசியம் அவனுக்கில்லை.
அவன் சென்ற திசையில் பார்வையை செலுத்திய ஷிவேதனாவால் தன் வாழ்வின் இருண்ட பக்கங்களை நினைத்து கண்ணீர் விட மட்டும்தான் முடிந்தது. அதே நேரம், அவ்வறையிலிருந்து ஷேனா ஓடியதும் அவன் நிலையையும் எண்ணி கலங்கியவளின் கண்கள் அனிச்சையாகவே அப்புத்தகத்தின் மீது பதிந்தது. 'ஆதிலோக மாய சரித்திரம்' என்றிருந்த அப்புத்தகத்தை ஷிவேதனா தன் கைப்படவே செய்திருந்தாலும் அவரே அறியாத பல மாய ரகசியங்களை சுமந்திருக்கிறது அப்புத்தகம்.
மற்ற புத்தகங்களை போல் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்டும்.. தூரிகை கொண்டு வரையப்பட்டும் இருந்திருந்தால் அப்புத்தகம் சாதாரணமாக இருந்திருக்கும். ஆனால் இதுவோ, காற்றில் கலந்த முன்னோர்களின் நினைவலைகளை மாயத்தால் சிறைவைத்து, அதனை ஏட்டில் அடக்கிய மந்திர தாள்களை கொண்ட மாயோள் புத்தகம் ஆயிற்றே.. நடந்த நிகழ்வை, படிப்பவர் வயதிற்கும் குணத்திற்கும் ஏற்றவாறு ஆள்பார்த்து ஒரே சரித்திரத்தை மாற்றி மாற்றிக் காட்டிடும் ஆதிலோகத்தின் மாயாஜால புத்தகம் இது. இதனைப் படித்தவர் எவரும் இதுவரையில் அதை உணர்ந்ததில்லை. வெகு சிலரால் மட்டுமே இதுபோன்ற புத்தகத்தை உருவாக்க முடியும் அதில் ஒருவரே ஷிவேதனா.
இப்போது, தன்னுடைய மாயத்தினால் ஆன அப்புத்தகத்தை அவரே விசித்திரமாக பார்த்து கொண்டிருந்தாள்.. காரணம், தான் தனது ராஜ்யத்திலேயே கைவிட்டு வந்த புத்தகம் இங்கெப்படி என்னும் கேள்வி அவளுள். அக்கேள்வி அவள் சிந்தையை துளைத்துக் கொண்டிருக்க.. அவள் விழிகள் இரண்டும் ஒருநோடி முழுமையாக கறுமை படர்ந்து பின் சகஜ நிலைக்குத் திரும்பியது.
திடீரென தனக்கு ஏதோ நடந்தது போல் இருக்க.. தலையில் லேசாக பாரம் ஏறியதில் தலையை பிடித்துக்கொண்ட ஷிவேதனா, வாயிலில் இருக்கும் ஏதோ பொருள் கீழே விழுந்தது உருளும் சத்தத்தில் அப்பக்கமாக திரும்பினாள்.
"யாரது??.. ", ஷிவேதனாவின் குரல் வாயிலை அடைய.. ஒரு அசாத்ய மௌனம் நிலவியது அங்கே...
"யாரது வாயிலில்..? கேட்கிறேனல்லவா...", ஷிவேதனா எழுந்து முன்னோக்கி நடந்து வர.. வாயிலருகில் இருந்த துளியளவு வெளிச்சத்தில் சிறுவனின் இரு கால்கள் புலப்பட்டது.
"அட!... ஷேனா.... ஏன் வாயிலிலேயே நின்று கொண்டிருக்கிறாய்?... உள்ளே வரலாம் அல்லவா?...", கேட்டுகொண்டே அவள் முன்னோக்கி அடியெடுத்து வைக்க.. அவனோ குடுகுடுவென ஓடியேவிட்டான்... பாவம் அவன் செய்கையில் குழம்பியது என்னவோ ஷிவேதனா தான்
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro