Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

13. உண்மைகள்

 மேற்கூரையில்லா அந்த உயர்தர அறையில், வெள்ளை திரையிட்ட ஜன்னலின் வழியே காற்றானது சிலுசிலுவென வீசிக்கொண்டிருக்க.. யூனிகார்ன் குதிரையுடன் வானவில் சேர்ந்திருக்கும் குட்டிக்குட்டி படங்களைக் கொண்ட நைட்-டிரஸ்சில், அட்டினக்கால் போட்ட நிலையில் கண்ணயர்ந்திருந்த காலாவின் விழிகள் சட்டென திறந்தது. வேகப் பெருமூச்சுகளுடன் பதறியடித்து எழுந்தமர்ந்த காலாவின் பார்வை படக்கென ஜன்னலின் புறம் திரும்ப.. அதே நொடியில் அவன் கால்களும் ஜன்னலை நோக்கியே ஓடியது.

ஒரே நொடியில் ஜன்னலை அடைந்துவிட்டவன், தூரத்தில் தெரியும் எதையோ கூர்ந்து கவனித்தான். அது பார்ப்பதற்கு எப்படி இருக்குமென விளக்க வேண்டுமானால்.. பூமியின் இரவுநேர வானில் தெரியும் பௌர்ணமி நிலவின் அல்ட்ரா ஜூமிங்க உருவம் எனக் கூறலாம். ஒரேயொரு வித்தியாசம் தான் இங்கே... பகல் வானில் தெரியும் அமாவாசை நிலவு போல் இருந்தது அந்த ஏதோ ஒன்று.

"ஓஹ் நோ!!.. இல்ல, இல்ல, இல்ல.. இது நடக்கக் கூடாது.. நடக்க கூடாது", பதட்டத்துடன் பின்னோக்கி திரும்பியவன் வலது கையை மேலுயர்த்தி ஒரு சொடுக்கிட.. அடுத்தநொடியே அவன் அணிந்திருந்த இரவு-நேர ஆடை, நீளமான வெள்ளை நிற ஆடையில் வெள்ளி துகள்களை பூசியது போன்ற ஒரு ராஜா காலத்து ஆடைக்கு மாறியது. அப்படியே கதவைத் திறந்துக்கொண்டு கீழே ஓடிtயவன், படிகளில் ஓடியபடியே, "மதி, ஏதாவது செய்.. நா நெனச்சது மாதிரி இந்த முடிவு இருக்கக் கூடாது. அண்ணனுக்கு உதவி செய் மதி..", யாருக்கோ கத்தியபடி வாயிலை கடந்து வெளியே ஓட.. அதுவரையில், அங்கே கீழ்தளத்தில் தவழ்ந்துக் கொண்டிருந்த காலாவின் தங்கை மதி, அவன் வாயிலைக் கடந்த அடுத்த நொடியில் இருபது வயதுடைய யுவதியாக மாறி, தன் அண்ணன் சென்ற வாயிலை பார்த்து விழிக்கத் தொடங்கினாள்.

"உதவனுமா!? இப்போ போய் நா என்னன்னு உதவி செய்வேன்...", தலையில் கை வைத்துக்கொண்டே அங்கிருந்த சோஃபாவில் பொத்தென அமர்ந்தாள் மதி. யோசனையுடன் இருந்தவளின் கண், அவள் முன்னே இருந்த காலாவின் டைரி மீது பதிய.., "இத பொரட்டுனா ஏதாவது ஐடியா கெடைக்கும்", என அதைப்போட்டுப் புரட்டத் தொடங்கினாள்.

✨✨✨

கோட்டையிலிருந்து வெளியேறிய காலா, வெள்ளி தண்டுகள் கொண்ட வெள்ளை மரங்கள் இருக்கும் தன் தோட்டத்தின் வழியாக பரபரப்புடன் வேகமாக நடந்துக்கொண்டே, அந்த அமாவாசை நிலவு போன்ற உலகத்தையும் ஒரு கண் பார்த்துக்கொண்டான். அதையே உற்று கவனித்தால் இன்னுமொன்றும் தெரியும்.. காலா பார்க்கும் உலகத்திற்கு பின்னே வெகு தொலைவில், ஒரு தங்க நிற நட்சத்திரத்தின் ஐந்து கதிர்களுக்கு நடுநடுவே உருளை உருளையாக இருக்கும் ஐந்து உலகங்கள் அந்த நட்சத்திரத்தை விட்டு தனித்தனியாக பிரிந்து சென்றுக் கொண்டிருந்தது. அதைப்பார்த்து இறுகிய காலாவின் முகம், தன் பாதையை நோக்கி திரும்பியது..

"மன்னித்து விடு ஆதி.. பத்ரா, முடிந்தால் நீயும் என்னை மன்னித்துவிடு", மனதினுள்ளேயே நினைத்தவனுக்கு கண்களும் கலங்கிட, ஒரு சொட்டுக் கண்ணீர் அவன் கன்னத்தைத் தாண்டிய நொடியில் அதைத் துடைத்துக்கொண்டு, ஒளி நிரம்பிய ஒரு வாயிலுக்குள் நுழைந்தான் காலா. அதேநேரம், தன் அண்ணனின் டைரியை திறந்த மதி, அதன் முதல் பக்கத்தை வாசிக்கத் தொடங்கினாள்.

~ நெனச்சது எல்லாமே அப்படியே நடக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.. ஆனா நா எதார்த்தமா நெனைக்குற சின்ன சின்ன விஷயங்கள் கூட அப்படியே நடக்க ஆரம்பிச்சப்போ.....

சந்தோஷத்தையே பாத்து பழகுன நான் 'இந்த மாதிரி ஒரு சம்பவம் எனக்கும் நடந்தா எப்டி இருக்கும்ன்னு' எதிர்மறையான விஷயங்கள எதார்த்தமா நெனச்சாலே அதெல்லாம் நடக்க ஆரம்பிக்குது.

நா என்ன செய்வேன் பத்ரா'ண்ணா.. சிந்தனைய கட்டுப்படுத்துர சக்தி எனக்கில்லையே.. ~

என்றதுடன் முடிந்திருந்தது முதல் பக்கம். சத்தமாக பெருமூச்சு விட்ட மதி, அடுத்த பக்கத்தைப் புரட்ட.. வெறுமையாக இருந்தது அந்த பக்கம். அந்த வெள்ளை பக்கங்களைக் கண்டு முறைத்தவள், "ஆ..ஊ..ன்னா இந்த லாக் ஒன்னு போட்டு வச்சுட்டு போய்றது", வாய்க்குள்ளேயே முணுமுணுத்துவிட்டு, "டேய் டைரி பையா.. என் அண்ணன் அழுதுட்டே போய்ருக்கான்.. அதுக்கு காரணம் என்னன்னு மட்டுமாச்சும் காட்டித் தொலையேன்..", கொஞ்சம் அலுத்துக்கொண்டே அவள் கேட்க.. மூன்று நொடிகள் கடந்த நிலையில், அந்த ஒரே ஒரு பக்கத்தில் மட்டும் எழுத்துகள் நிரம்பத் தொடங்கியது..

~ நான் எதையும் விரும்பியே செய்யல.. இந்த மாதிரியெல்லாம் நடந்துறக் கூடாதுன்னு நெனச்சுதான் நா அப்டிபட்ட காட்சியெல்லாம் யோசிச்சுப் பாத்தேன்...

ஆனா நா யோசிச்சுட்டேனே பத்ரா'ண்ணா.. நீ உருவாக்குன எல்லாமே என் ஒரே ஒரு யோசனையால ஒன்னுமில்லாம போகப் போகுது அண்ணா.. ~

மதியின் கெஞ்சலுக்கு அந்த வெள்ளை பக்கம் காட்டியது அவ்வளவே. "இவனும்.. இவன் டைரியும்.. போடா டேய்..", சலிப்புடன் அந்த டைரியை மேஜைமீது வீசி எறிந்தவள், "இப்போ என்ன செஞ்சு பத்ரா'ண்ணா உருவாக்குன எல்லாத்தையும் காப்பாத்துவேன் நானு?", சோஃபா மேல் மல்லாக்க சாய்ந்துவிட்டாள்.

"ஐடியா!!!", ஐந்து நிமிடம் கடந்த நிலையில், முகத்தில் சிரிப்புடன் கண்ணில் வெற்றியுடன் படக்கென எழுந்தவள், விரலை சொடுக்கிட.. தானாகவே காற்றில் மறைந்து போனாள் அவள்.

✨✨✨

அதே போர்களம்.. பாதாள லோகத்தின் இறுதி யுத்தம் நிகழ்ந்த அதே போர்களம். சட்டென தோன்றிய ஒளிக்கீற்றின் வழியே காலா அவ்விடத்தில் தோன்றிட.. அங்கு வரவேண்டும் என யோசித்தானே ஒழிய, வந்து என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றி எதையும் யோசிக்கவில்லை. நீங்காத பதைபதைப்புடன் கண்களை அங்குமிங்குமாக அலைபாய விட்டவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.. இன்னும் பத்தே நொடி தான்.. முழு லோகமுமே வெடிக்கும் என்பது அவனுக்குத் தெரியும்.

ஒன்பது நொடி.. அவன் சிந்தனைகள் அனைத்துமே ஸ்தம்பித்து நிற்க.. ஒன்றும் செய்யமுடியாத தன் நிலையை நினைத்து எழுந்த வெறியுடன் தலைமுடியை இரு கைகளாலும் கொத்தாகப் பிடித்துக்கொண்டு பித்துப் பிடித்தவனாக அங்குமிங்கும் பார்வையால் அலைந்தான். எட்டு நொடிகள் இருக்கையில் அவன் கண்ணில் சிக்கினாள் தூரத்தில் நின்றிருந்த மித்லா. அவனது அண்ணி.

அவள், மாயோள் புத்தகம் தயாரிக்கும் வேலையில் மும்முரமாக இருக்க.. ஏழு நொடிகளே மிச்சம். அவளைப் பார்த்த காலனின் கண்ணில் கண்ணீர் சொட்டியது. அதேநேரம் அவன் கண்ணில் சிக்கியது மித்லாவின் நெற்றியில் மூன்று சுழிகள் போல் மிளிர்ந்த ஜென்மவாக்கின் அச்சு. அதைக்கண்டு காலாவின் விழி ஆச்சரியத்தில் விரிய, மீதமிருந்தது ஆறு நொடிகள்.. அந்த நொடியே தன் வேலையைத் தொடங்கினான்.

காலா தன் இரு கைகளையும் மேலே உயர்த்த.. அவன் கையின் வழியே பாய்ந்த சக்திகள், சாகாமல் எஞ்சியிருந்த உயிர்களின் உடல்களுக்குள் ஊடுருவியது.. ஐந்து நொடிகள் மீதமிருக்க.. அவன் மூலமாக உருவாக்கப்பட்ட கண்ணுக்கு தெரியாத கவசம் ஒன்று முழு லோகத்தையும் சூழ்ந்தது.

நான்கு நொடிகள் இருக்கையில் தன் வேலை முடிந்ததாக பெருமூச்சு விட்டவன், மூன்று நொடிகள் இருக்கையில் அங்கிருந்து மறைந்தான். இன்னும் இரண்டே நொடிகள்.. அங்கிருந்த உயிர்கள் அனைத்தையும் ஒரு வெள்ளை ஒளி உள்ளிழுக்கத் தொடங்கியது. இறுதியாக உள்ள ஒரு நொடி முடிவதற்கு முன்பாக மித்லாவின் முன்னால் தோன்றியிருந்தான் காலன்.

அவள் கண்கள் காலனை பார்க்க.. வெடித்தது பாதாள லோகம். மீண்டும் ஒரு பத்து நொடிகள் கடந்திருக்கும். தன்னைச் சுற்றிலும் இருந்த திடமான ஒளிக் கவசத்தை விளக்கிக்கொண்டு காலா கண்விழிக்க.. குறிப்பிட்டச் சுற்றளவிற்கு, பாதாள லோகத்தின் ஒரு பகுதி மட்டும் தனியாக மிதந்து கொண்டிருந்தது பிரபஞ்சத்தின் வெட்டவெளியில். தன்னைச் சுற்றிலும் இருப்பதை வெறுமையான பார்வையில் காலா பார்க்க.. சிவப்பு நிறத்திலும் ஊதா நிறத்திலும் ஒளிப் பந்துகள், மின்மினிகளைப் போல் அவனைச் சுற்றி பறந்துக் கொண்டிருந்தது. அவைகளில் ஒன்றுமட்டும் தனியாக வெள்ளை நிறத்தில் பறக்க.. அதை தொடர்ந்தே பறந்தது இன்னுமொரு வெள்ளை நிற ஒளிப் பந்து.

அவைகளைப் பார்த்து பெருமூச்சுடன் எழுந்து நின்ற காலாவிற்கு அவனே எதிர்பார்க்காத அதிர்ச்சி, ஒன்றுக்கு இரண்டாக கண்முன்னே இருந்தது. ஒரு கைக்குழந்தையும் இரண்டு அல்லது மூன்று வயது மதிக்கத்தக்க இன்னொரு குழந்தையும் அவனையே பார்த்துக்கொண்டு அவனுக்கு முன்பாக இருந்தது.

✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro