Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

10. பரம பிசாசினி

"காத்யாயினி... எதை இவ்வளவு அவசரமாக ஆராய்ந்துக் கொண்டிருக்கிறாய் நீ? என்னிடம் சொல்.. நானும் உதவிடுவேன் அல்லவா?", கிட்டத்தட்ட கால்மணி நேரமாக அறையில் இருக்கும் அலமாரிகளை நிலைகுழையச் செய்துகொண்டிருந்த தன் தங்கையிடம் இருளரசன் தன் கேள்விகளைத் தொடுக்க, "ஒன்றும் இல்லை சகோதரா.", பதட்டத்துடன் பதிலளித்தவள், சகோதரனின் கேள்விகள் எதற்கும் அசராமல் தன் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்துக் கொண்டிருந்தாள்.

"முத்துமாளிகை புறப்படுவதற்கு அனைத்தையும் தயார் செய்துவிட்டாயா?... அதற்காக எதையேனும் தேடுகின்றாயா?.."

"ஹான்?? இ- இல்லை சகோதரா..."

"எனில்? எனது உதவி நிச்சயம் அவசியமன்றா?..."

"இல்லை சகோதரா...", பதில் மட்டுமே இருளரசனுக்கு இருக்க.. கவனம் மொத்தமும் தேடிடும் பொருளின் மீதே தான் இருந்தது. சிறிதுநேரம் அவளையே பார்த்துக்கொண்டு அங்கேயே நின்ற இருளரசன், சரி அவளே சொல்லும்போது சொல்லட்டும் என அங்கிருந்து நகர்ந்தார்.

அவர் வாயிலைத் தாண்டி சில எட்டுகள் தான் வைத்திருப்பார், "சகோதரா... சகோதரா, சற்று நில்லுங்கள்.", கத்திக்கொண்டே ஓடி வந்தாள் காத்யாயினி. இருளரசன், ஒருநொடி நின்று தங்கையை திரும்பிப் பார்க்க, "சகோதரா... மாயோள் புத்தகம் உங்களிடம் தானே இருந்தது? அது எங்கே?", அவள் கேட்ட கேள்வியில் புருவம் சுருக்கினார் இருளரசன்.

"ஏன் காத்யாயினி?? ஏன் அதுகுறித்து கேட்கிறாய்? அப்படி அதில் எந்த விஷயம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டுமென்று என்னிடம் சொல். நானே உனக்கு விளக்கமாக சொல்கிறேன்"

"சகோதரா... பரம பிசாசினியின் சுபாவங்கள் என்ன??", அவள் கேட்ட மாத்திரத்தில் இருளரசனின் கண்கள் அகல விரிந்தது. தங்கையை ஒரு அதிர்ந்த பார்வையில் பார்த்தவர், "அது குறித்து ஏன் கேட்கிறாய்?", தீவிரமான முகபாவத்துடன் கேட்டார்.

"தாமதிக்காமல் முதலில் சொல்லுங்கள் சகோதரா. பரம பிசாசினியின் சுபாவங்கள் என்ன? அவளால் யார்யாருக்கு ஆபத்து?.. உங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்லுங்கள்", தங்கை பரபரத்ததால் தனக்கு தெரிந்தவைகளை சொல்லத் தொடங்கினார் இருளரசன்.

"பரம பிசாசினிகள் பாதாள லோகத்தில் வாழ்ந்தவர்கள். முதலில் சாதாரண பெண்களாகத் தான் இருந்தார்கள். அவர்களை ஒரு மஹா யாகத்தில் உட்படுத்தி அந்த யாகத்தின் மூலமாக உருவாக்கப்பட்டவர்கள் தான் பரம பிசாசினிகள். ஆண்களின் உயிர்-ஆத்ம சக்திகள் மூலமாகவோ அல்லது அவர்களின் உதிரத்தின் மூலமாகவோ தான் அவர்கள் தங்களின் சக்திகளைப் பெருக்கிக் கொண்டார்கள். ஒருவேளை, அப்படி செய்து சக்திகளை பெறவில்லையெனில் தங்களின் சக்திகளை இருமடங்கு வேகத்தில் இழந்து உயிர் நீப்பார்கள். இவ்வளவு தான் நான் அறிந்தது."

"ஓஹ்ஹ்."

"சரி, இது குறித்து ஏன் கேட்கிறாய் நீ??", ஆழ்ந்த யோசனைக்குள் மூழ்கிய தங்கையை அவர் பார்க்க, "சமாரா ஒரு பரம பிசாசினி சகோதரா...", முற்றிலும் வெளிறிய முகத்துடன் பதில் கூறினாள் அவள். சில நொடிகள் அவளை அதிர்ந்து நோக்கியவர், "என்ன உளருகின்றாய் காத்யாயினி..?", உச்ச ஸ்தானியில் கத்த.., "இல்லை சகோதரா... நான் உளரவில்லை. என் விழிகளாலேயே பார்த்தேன். நான் நேரில் பார்த்ததைத் தான் சொல்கிறேன்", சற்றுமுன் ராணா, சமாராவிடம் தன் உதிரத்தைக் கொடுக்கும் சமயத்தில் பார்த்ததை மொத்தமாக இருளரசனிடம் சொன்னாள் காத்யாயினி. அவள் சொல்லிமுடித்த நொடி, தன் மகன் இருக்குமிடம் நோக்கி மின்னலென விரைந்தார் இருளரசன்.

"ஆனால் காத்யாயினி... நிச்சயம் இதற்கு வாய்ப்பில்லை.. அவர்கள் அனைவருமே பாதாள லோகத்தில் ஆதிகாலத்தில் வாழ்ந்தவர்கள். அந்த லோகம் அழிந்திடும் சமயம் நிகழ்ந்த ஆதிமஹா யுத்தத்தில் பரம பிசாசினிகள் அனைவரும் மறுபிறப்பில்லா மரணத்தை அடைந்தார்கள் என்றுதான் மாயோள் புத்தகமும் சொல்கிறது. அப்படி இருக்கையில் சமாரா ஒரு பரம பிசாசினியாக இருக்க எப்படி வாய்ப்பிருக்கும்?", அவரின் வேக நடைக்கு ஈடுகொடுத்து வரும் காத்யாயினியிடம் கேள்விமேல் கேள்விகள் தொடுத்தாலும் அவளிடமிருந்து பதிலை எதிர்பார்க்கவில்லை அவர்.

"அதையெல்லாம் நான் அறியேன் சகோதரா... ஆனால் அவள் ராணாவின் உதிரத்தைப் பருகினாள். அதுவும் அவளின் கூரிய நகங்கள் வாயிலாக. முன்பு சிலமுறையும் அவள் நகங்களில் ரத்தம் படிந்திருப்பதை பார்த்திருக்கிறேன். அதன்பின் இப்படியொரு விஷயம் இருந்திருக்கும் என்பதை நான் யோசித்துக்கூட பார்க்கவில்லை சகோதரா.. .. .. ஆனால், ராணா எப்படி தெரிந்துக்கொண்டான் அவளுக்கு உதிரம் தேவை என்பதை?", இந்தக் கேள்விக்கு எவ்வித பதிலையும் இருளரசன் கொடுக்கவில்லை. அவர்தான் அறிவாரே, அவரைக்காட்டிலும் பாதாளலோகம் குறித்து அவர் மகன் அதிகம் அறிவான் என்பதை. அங்கு நிகழ்ந்த பலவற்றை அவன் மூலமாகத் தெரிந்துக்கொண்டு, தன் காரியத்திற்கு அவனை பயன்படுத்திக்கொள்ளத் தானே அவனை உருவாக்கியதே.

தன் மகளைக் குறித்து காத்யாயினி கூறிய அடுத்தநொடி, ஏகபட்ட சிந்தனைகளுடன் ராணாவின் அறைநோக்கி விரைந்த இருளரசன், அங்கு கண்ட காட்சியில் ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டார். "இல்லை... இது அப்படி இருக்கக்கூடாது...", அவர் சொல்லியது அவருக்கு மட்டுமே கேட்க.. அவரைத் தொடர்ந்து வந்திருந்த அவரின் தங்கை, தன் மகள் இருக்கும் இடத்தைப் பார்த்து அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டாள்.

"ராணா... அங்கெப்படி சென்றாய்??..", அதிர்ச்சியுடன் கோபமும் கலந்ததில், தன்னில் எழுந்த பயத்தையும் படபடப்பையும் குரலில் கலந்த காத்யாயினி, ராணாவை நோக்கிக் கத்திட.. அமில அகழிக்கு நடுவில் இருந்த மெத்தையில் அமர்ந்திருந்தவன் அமைதியாக தன் அத்தையை நிமிர்ந்து நோக்கினான்.

தங்கையின் குரல் கேட்டப்பின்னரே தன் சிந்தனைக் கடலிலிருந்து மீண்ட இருளரசன், "ராணா.. குழந்தையை வைத்துக்கொண்டு அங்கெப்படி சென்றாய்? இங்கே வா.", தானும் தன் மகனை நோக்கிக் கோபத்தைச் செலுத்தினார் இருளரசன்.

காத்யாயினி அழைத்தபோதே மெத்தையில் தூங்க வைத்திருந்த சமாராவை கையில் தூக்கியிருந்தவன், தன் தந்தையின் குரலுக்கு பின் மெல்லமாக கட்டிலில் இருந்து இறங்கி அகழியை நோக்கி நடந்தான்.

'அதனுள் இறங்கி, சமாராவை மறுபக்கமாக தூக்கிச் சென்றிருக்க வாய்ப்பே இல்லை. அப்படி அவன் செய்திருந்தால் இந்நேரம் சமாரா உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. எனில்? எப்படி மறுபக்கம் சென்றிருப்பான்?' என எண்ணிக் கொண்டிருந்த காத்யாயினியின் கண்கள் ராணாவின் மீதே இருக்க.. இருளரசனுக்கோ, இதயம் தாறுமாறாகத் துடித்துக் கொண்டிருந்தது. தான் நினைப்பது போல் நடந்துவிடக் கூடாதென. ஆனால், நடந்ததென்னவோ அவர் எண்ணத்திற்கு நேர்மாறாகத்தான்.

சமாராவை அகழி வரையில் தூக்கி வந்த ராணா, வரும்பொழுது செய்தது போலவே அவளை அந்த அகழியினுள் பொத்தென போட்டான் . அதைக்கண்ட இருவருக்கும் திக்கென்று இருக்க... அவர்களை மேலும் அதிர்ச்சியாக்கவே நடந்தது அடுத்த நிகழ்வு.

ராணாவின் கையிலிருந்து கீழே விழுந்தவள் அகழியினுள் விழவில்லை. மாறாக, ஒரு எலும்பின் கை மட்டும் அவளைத் தாங்கிப் பிடித்திருந்தது... இப்போது அமிலத்தினுள் இறங்கிய ராணா, முன்னோக்கி நடக்கத் தொடங்க... அவனைத் தொடர்ந்து அடுத்தடுத்து மேலெழும்பிய எலும்புக் கரங்கள், சமாராவை கைமாற்றிக் கைமாற்றி ராணாவை பின்தொடரச் செய்தது.

இதைக்கண்ட காத்யாயினி வாயடைத்துப்போய் நின்றாள் என்றால், இருளரசனோ, எதை நடக்கக் கூடாதென நினைத்தாரோ அதுவே நடப்பதை பார்த்து, எப்படி நடந்துக்கொள்வது எனப் புரியாமல் உறைந்துபோய் நின்றிருந்தார்.

ராணா செய்த காரியத்தைக் கண்ட இருளரசன், அவன் கையில் இருந்த சமாராவை பிடுங்கி அவள் அன்னையிடம் கொடுத்துவிட்டு, "உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் இப்படி செய்திருப்பாய்?", என கோபத்தில் தன் மகனின் முதுகிலேயே இரண்டு அடியை வைத்தார். ஆனால், அவன் கருவிழிகள் இரண்டும் அழுகைக்குத் தயாராவதைக் கண்டதும், காலையில் நடந்தது நினைவிற்கு வர. மீண்டும் அதுபோல் அசம்பாவிதம் நடக்கும்முன் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார் அவர்.

அவனுக்குச் சமமாக குனிந்து அமர்ந்தவர், "ராணா... இங்கு பார்... தந்தையை பார். தந்தையின் மீது கோபமா?", அவன் கன்னம் தொட்டு மென்மையாக கேட்க.. கண்ணீருடன் அவரின் கையை வெடுக்கென தட்டிவிட்டான் ராணா. இருந்தும் பொறுமை காத்தவர், "சரி, தந்தை உன்னிடத்தில் மன்னிப்பை வேண்டிக் கொள்கிறேன்...", என்றபடி மகனின் தலையை தன் தோள் மீது சாய்த்துக் கொள்ள... இருகணம் அமைதியாக நின்றிருந்தவன் பின் அவர் கழுத்தை மெல்லமாக அணைத்துக் கொண்டான்.

மென்மையாக அவன் தலையை வருடிய இருளரசன், பின் தன்னிடமிருந்து அவனைப் பிரித்து, "ராணா... இன்று உன் அத்தை, சமாராவை அழைத்துக்கொண்டு முத்துமாளிகை புறப்படுகிறார். உடன் நீயும் செல்கிறாயா?", என மென்மையாகவே அவர் கேட்டு நிற்க... ஏற்கனவே இதுகுறித்து காத்யாயினி கூறியிருந்ததால், வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் உடனடியாக தலையை மேலும் கீழுமாக ஆட்டி தன் சம்மதத்தைஹ் தெரிவித்தவான், உற்சாகமாக ஓடிச்சென்று தன் உடைமைகளை தயார் செய்யத் தொடங்கிவிட்டான்.

அவன் சென்றதும் தன் சகோதரனை நோக்கிய காத்யாயினி, "இது நிச்சயம் அவசியமா சகோதரா? என் மகளால் அவனுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால்?", என தயங்கியவாறே கேட்க, "இல்லை காத்யாயினி... இவளால் அவனுக்கும் அவனால் இவளுக்கும் எத்தீங்கும் நேரப் போவதில்லை. ஆனால்....", தன் முடிவில் தீர்மானமாக இருந்தாலும், எதற்காகவோ தயங்கினார் இருளரசன் ​​​.

"ஆனால்? ஆனால் என்ன சகோதரா? சொல்லுங்கள்..."

"ஹ்ம்ம்... ஒன்றுமில்லை காத்யாயினி.", ஏதோ சொல்லவந்தவர், ஒரு பெருமூச்சுடன் நிறுத்திக்கொண்டார். "நான் சொல்லும்வரையில் ராணா உன் பொறுப்பிலேயே இருக்கட்டும்", அதைமட்டுமே அவர் சொல்ல, சகோதரன் எதையோ மறைப்பது புரிந்தாலும் வேறு எதுவும் கேட்கவில்லை காத்யாயினி. "நீங்கள் கவலைக்கொள்ள தேவையில்லை சகோதரா, அவன் இனி என் பொறுப்பு", தீர்க்கமாக சொல்லியபடி, பார்வையை ராணாவை நோக்கி செலுத்தினாள் காத்யாயினி.

ஒரு கம்பளி கம்பளத்தை தரையில் விரித்து வைத்துக்கொண்டு தனக்குத் தேவையென அவன் நினைத்த கண்டதையும் அள்ளி அதில் குவித்து முடித்தவன், அதன் முனைகள் நான்கையும் சேர்த்து முடிந்துக்கொண்டு, அதனை தன் இரு கைகளாலும் லாவகமாக பிடித்து தூக்கிக்கொண்டு தன் அத்தை முன்பாக மலர்ந்த முகத்துடன் வந்து நின்றான் ராணா.

சமாராவை ஒற்றை கரத்தில் பிடித்துக்கொண்டு ராணாவின் தலையை வருடிய காத்யாயினி, தன் சகோதரனுக்கு தலையசைத்துவிட்டு ராணாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியே புறப்பட்டார்.

அவர்கள் அறையை விட்டு வெளியேறியதும் அவர்களைத் தொடர்ந்தே வெளியே வந்த இருளரசன், தன் தங்கை அங்கிருந்து தூரமாக சென்றுவிட்டாள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, வெறுமையான அந்த பெரும் அறைக்குள்ளே தன் பார்வையை செலுத்தினார். "என்ன நிகழ்ந்திருந்தாலும்.... நீயும் உன் கணவனை எதிர்த்திருக்கக் கூடாது. உன் மகனை சபித்திருக்கக் கூடாது. இப்போது என் மகன். எனக்கு மட்டுமே மகனானவன்... இந்த வாழ்க்கை வாழ்வதற்கு , இந்த நரக வாழ்க்கை அவனைத் துரத்துவதற்கு முழுமுதற் காரணமும் நீயே தான் ஜ்வாலாங்கினி... இம்முறையாவது... நீ உன் எல்லையினுள்ளேயே அமைதி காத்திருப்பது நல்லது. மீண்டும் எந்நாளும், எச்சூழலிலும் என் வழியில் குறுக்கிடாதே", வெறுமையான அந்த அறையை நோக்கி ஆழ்ந்தக் குரலில் உருமிய இருளரசன், சடாரென கதவுகள் இரண்டையும் இழுத்து அடைத்துவிட்டு, பின்னால் திரும்பியும் பாராமல் அங்கிருந்து விறுவிறுவென சென்றுவிட... யாருமே இல்லாத ராணாவின் அந்த அறையில், மயான அமைதியே நிலைத்திருந்தது.

✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro