Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

56 இளவரசனும், வாகைவேந்தனும்

56 இளவரசனும், வாகைவேந்தனும்

தனது துப்பாக்கியை அமுதனை நோக்கி குறி வைத்தார் ருத்ரமூர்த்தி.

"இளவரசர் வாகைவேந்தரே, நீர் மிகச்சிறந்த திறமைசாலி என்று எனக்குத் தெரியும். ஆனால், இவ்வளவு திறமைசாலியாக இருக்கக் கூடாது. நீங்கள் கொஞ்சம் கூட மாறவில்லை. நாங்கள் உங்களை சந்தித்தபோது எப்படி இருந்தீர்களோ, அப்படித்தான் இப்பொழுதும் இருக்கிறீர்கள். என்ன நடந்திருக்க கூடும் என்பதை எவ்வளவு அழகாய் கணித்துவிட்டீர்கள்!" எக்களித்தார் ருத்ரமூர்த்தி.

"இதெல்லாம் என்ன? ஏன் இப்படி எல்லாம் செய்கிறீர்கள்?" என்றார் ஆதித்தன்.

"வேறு எதற்காக? பொருள் ஈட்டத்தான்...! நானும் தம்பிரானும் இப்படி ஒரு அறிய சந்தர்ப்பத்திற்காக தான் காத்திருந்தோம்"

"அப்படி என்றால் நீங்கள் இருவரும் கூட்டாளிகளா?"

"உங்கள் குடும்பத்தாரிடமிருந்து மணல் கடிகாரத்தை பெற நாங்கள் இருவரும் கூட்டாளிகள் ஆனோம்"

"உங்களை நான் பெருந்தன்மையானவர் என்று நினைத்தேன்..." என்றாள் தன்மயா.

"நான் பெருந்தன்மை மிக்கவனாக தான் இருந்திருப்பேன், உனது பாட்டனார் எனது நட்பை வெட்டி விடாமல் இருந்திருந்தால்...!"

"காரணம் இல்லாமல் எனது பாட்டனார் உங்கள் நட்பை வெட்டி விட்டிருக்க மாட்டார். அவருக்கு அதிருப்தி தரும் வண்ணம் நீங்கள் ஏதாவது செய்திருப்பீர்கள். அதனால் தான் அவர் உங்கள் நட்பு தனக்கு வேண்டாம் என்று நினைத்திருக்க வேண்டும். அவர் உங்களை தன்னுடன் சோழ நாட்டிற்கு கூட அழைத்துச் சென்றிருக்கிறார். ஆரம்பத்தில் உங்கள் மீது அவர் வைத்திருந்த நன்மதிப்பையும், நம்பிக்கையையும் அது காட்டுகிறது..." என்றாள் கோபமாக.

"ஆம், அவன் என்னை நம்பினான். அது என் குற்றமல்ல. நான் எதற்காக அவனோடு சோழநாடு சென்றேன்? ஊரை சுற்றி பார்க்கவா? இல்லை, புராதான பொருட்களை கொண்டு வரத்தான் அவனுடன் நான் சென்றேன். அவற்றின் மதிப்பு இப்பொழுது என்னவென்று உனக்குத் தெரியுமா...? பல லட்சங்கள்... ஏன் கோடிகள் கூட பெறும்...! இளவரசர் வாகைவேந்தரிடம் இருந்து நான் அவரது முத்திரை மோதிரத்தை கவரத்தான் முயன்றேன். என்னவோ செய்யக்கூடாத குற்றத்தை செய்துவிட்டது போல், உனது பாட்டன் என் மீது கோபம் கொண்டான். யார் தான் அப்படி செய்ய மாட்டார்கள்? எந்த ஒரு கால பயணியும் முத்திரை மோதிரத்தை பெரும் அரிய வாய்ப்பை தவறவிடவே மாட்டான்" என்ற அவரை அமுதன் அருவருப்போடு பார்த்தான்.

"இளவரசர் வாகைவேந்தர் உங்களை நண்பனாக ஏற்றுக்கொண்டார். அவரிடமிருந்து அவரது முத்திரை மோதிரத்தை பறிக்க நினைத்தது குற்றமில்லையா?" சீறினாள் தன்மயா.

"அவர் ஒரு இளவரசர். முத்திரை மோதிரத்தை பெறுவது அவருக்கு ஒன்றும் பெரிய காரியம் அல்ல. அவர் நினைத்தால் பல முத்திரை மோதிரங்களை அடைய முடியும். அதிலிருந்து நான் ஒன்றை எடுத்துக் கொண்டால் என்ன குறைந்து விடப் போகிறது? அவர் இறந்த பிறகு கூட அவரிடமிருந்து அந்த மோதிரத்தை எடுக்க உனது பாட்டன் எனக்கு இசைவளிக்கவில்லை" என்றார் வெறுப்புடன்.

"அவர் இறந்த பிறகும் அவரிடம் இருந்து அதை களவாட நினைத்தீர்களா...? என்ன மனிதன் நீங்கள்...? இதனால் தான் எனது பாட்டனார் உங்கள் நட்பு தனக்கு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டும்" கொதித்தாள் அவள்.

"ஆமாம், அவனுடைய கால பயண அனுபவங்களையும், மணல் கடிகாரத்தையும் பற்றி என்னுடன் பகிர்ந்து கொள்வதை நிறுத்திக் கொண்டான். பல நாட்களுக்கு யார் கண்களிலும் படாமல் காணாமல் போய்விடுவான். என்னை அவனோடு அழைத்துச் செல்வதை நிறுத்திக் கொண்டான். அவனுக்கு கிடைத்த வசதிகள் அனைத்தும், காலப்பயணம் செய்து அவன் ஈட்டிய பொருட்களின் மூலமாகத்தான் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இளவரசன் வாகைவேந்தனிடம் இருந்து எதையும் எடுக்கக்கூடாது என்று என்னை தடுத்து விட்டு, அவன் மட்டும் பெரு வசதிகளை தேடிக்கொண்டது சரியா?"

"என் தாத்தா என்ன செய்தார் என்று எனக்குத் தெரியாது. நீங்கள் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் மட்டும் தான் நான் உங்களது வார்த்தைகளை ஏற்க முடியும். ஆனால் நீங்கள் ஒரு ஏமாற்றுக்காரர். அதனால் என் தாத்தாவை பற்றி நீங்கள் கூறும் எதையும் நான் நம்ப மாட்டேன்..."

"நம்பாதே... யார் உன்னை நம்ப சொன்னது?" என்று மூர்க்க சிரிப்பை உதிர்த்தார்.

"எதற்காக காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? எப்படி இருந்தாலும் நாங்கள் யாரும் உங்களை நம்ப போவதில்லை. இப்பொழுது உங்களுக்கு என்ன வேண்டும் என்று கூறுங்கள்" என்றான் அமுதன்.

"நான் காலத்தை தேவையில்லாமல் வீணடிக்கவில்லை. நான் தங்களை மதிக்கிறேன். அதனால் தான் தங்களிடம் அனைத்தையும் கூறிக் கொண்டிருக்கிறேன். உங்கள் மரணத்தின் காரணம் தெரியாமல் நீங்கள் உயிரை விட்டு விடக்கூடாது அல்லவா...!"

"எல்லோரும் ஒரு நாள் மடிய வேண்டியவர்கள் தான். இளவரசன் வாகைவேந்தன் மரணத்தைக் கண்டு அஞ்சுபவன் அல்ல. உண்மையை கூறப்போனால், அவன் எப்பொழுதோ இறந்திருக்க வேண்டியவன். தன்மயாவால் தான் நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். அவளுக்காக என் உயிரை கொடுக்கத்தான் நான் உயிரோடு இருக்கிறேனோ என்னவோ... அவளுக்காக என் உயிரை நான் மகிழ்வோடு வழங்குவேன். எனது இன்னுயிர் போர்க்களத்தில் தான் பிரிய வேண்டும் என்று நான் ஆவல் கொண்டிருந்தேன். இன்று நான் இறந்தால், அதே திருப்தியை நிச்சயம் இந்த மரணம் எனக்கு வழங்கும். கூறுங்கள், உங்களுக்கு என்ன வேண்டும்? மணல் கடிகாரமா?"

"மணல் கடிகாரம் மட்டுமல்ல... உங்கள் வாள் வேண்டும்... முத்திரை மோதிரம் வேண்டும்... அணிகலன்கள் வேண்டும்... உங்களிடம் இருக்கும் அனைத்தும் வேண்டும்... அதோடு தன்மயா கழுத்தில் அணிந்திருக்கும் சங்கிலியும் வேண்டும்"

தன்மயாவை அதிர்ச்சியோடு ஏறிட்டான் அமுதன். அவளும் அதே அதிர்ச்சியோடு தான் இருந்தாள். ஏனென்றால், ருத்ரமூர்த்தி கேட்டது, அவர்களது திருமணத்தன்று அமுதன் அவள் கழுத்தில் அணிவித்த திருமாங்கல்யத்தை. தன்மயா அதை அவிழ்க்க நினைத்தபோது தானே, அரசி அன்பிற்கினியாள் அவளை தடுத்து, நடந்தது திருமணம் என்று மனப்பூர்வமாய் அதை அங்கீகரித்தார்? இந்த வீணன் அதை கேட்கிறானே...!

"இது எனது தாலி. அதை நான் கொடுக்க முடியாது"

"உனது இசைவை யார் கேட்டது? இறந்து கிடக்க போகும் பிணத்திடமிருந்து பொருள்களை எடுக்க எந்த இசைவும் தேவையில்லை அல்லவா? நீங்கள் அனைவரும் இப்பொழுது செத்து மடிய போகிறீர்கள். இந்த சந்தர்ப்பத்திற்காக எத்தனை ஆண்டுகளாய் நான் காத்திருந்தேன். இளவரசர் வாகைவேந்தர் அணிந்திருக்கும் ஒவ்வொரு பொருளும் என் மீது பண மழையை பொழிய காத்திருக்கிறது..." அவரது கண்களில் பேராசை ஒளிர்ந்தது.

"என் பிணத்தின் மீதிருந்து நீர் அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நான் இளவரசன் வாகைவேந்தன்! கேட்டவருக்கு இல்லை என்று கூறாதவன்! அவை அனைத்தையும் நானே தங்களுக்கு வழங்குவேன். மரணத்திற்கு முன்பு, கொடை அளிக்கும் அரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்ததற்காக நான் மகிழ்கிறேன்!" என்றான் அமுதன்.

தனது அணிகலன்களில் ஒன்றை ருத்ரமூர்த்தியின் மீது வீசி எறிந்து அவரது கவனத்தை திசை திருப்புவது தான் அவனது திட்டம். அவரை வீழ்த்த சில நொடிகள் கிடைத்தாலே போதுமானது. அதன் பிறகு ருத்ரமூர்த்தி அவனது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுவார். அவனது மனம் வேகமாய் திட்டமிட்டது.

"இல்லை... நிறுத்துங்கள்... நீங்கள் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை... தங்கள் புத்திசாலித்தனத்தை என்னிடம் காட்டாதீர்கள் இளவரசே! நான் கூறுவதை மட்டும் செய்யுங்கள்"
ருத்ரமூர்த்தி எச்சரிக்கை அடைந்தார். அதை அமுதன் புரிந்து கொண்டான்.

"தங்களுக்கு மணல் கடிகாரம் கிடைத்துவிட்டால், நீங்கள் எத்தனை வரலாற்று காலங்களுக்கு வேண்டுமானாலும் சென்று இதைப்போல் பல பொருட்களை அபகரித்துக் கொள்ள முடியுமே! அப்படி இருக்கும் பொழுது, எதற்காக இப்பொழுது என்னுடைய பொருட்களின் மீது கண் வைக்கிறீர்கள்? காலப்பயணம் செய்வது குறித்து தங்களுக்கு திடமான நம்பிக்கை இல்லையா?" வேண்டுமென்றே உரையாடலை நீட்டித்தான் அமுதன், தனக்கு தேவைப்படும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து.

"எனக்கு ஏன் காலப்பயணம் குறித்து திடமான நம்பிக்கை இருக்காது? நிச்சயம் நான் பல யுகங்களுக்கும் செல்வேன். என்னிடம் அதற்கான மிக நீண்ட பட்டியல் இருக்கிறது" என்றார் அவர் தீப்பொறி பறக்கும் கண்களுடன்.

"பிறகு ஏன் இந்த பொருளுக்கு ஆசைப்படுகிறீர்கள்?"

"இளவரசன் வாகைவேந்தன் போன்ற ஒரு மாவீரனை வீழ்த்தி, நான் வாகை சூடினேன் என்று மார்தட்டி கொள்ளத்தான்...! இந்த அணிகலன்கள், எனது வெற்றிக்கு கிடைக்கப் போகும் வாகை மாலைகள்...!" கொக்கரித்தார் அவர்.

தன் கண்களை சுருக்கினான் அமுதன். பல போர்க்களங்களில் பல மாவீரர்களை கண்ணிமைக்கும் நேரத்தில் வெற்றி கொண்டவன் அவன். இப்பொழுதோ, வாகைவேந்தனின் தரத்தை மறந்து, சுரண்டி வாழும் ஒரு புல்லுருவி, அவனுக்கு முன்னால் நின்று வீம்பு பேசிக் கொண்டிருக்கிறது ...!

அப்பொழுது அவர்கள், ஒரு காலடித்தடம் அவர்களை அணுகுவதை கேட்டார்கள். அமுதனும் தன்மயாவும் குழப்பத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், யார் வருவது? ருத்ரமூர்த்தி ஆவலானார்.

"இதோ வந்து விட்டான்! இவனுக்காகத்தான் நான் காலம் தாழ்த்தினேன்" எக்களித்தார்.

"யார்?" என்றான் அமுதன்.

"எனது பெயரன், வாகைவேந்தன்...!"

இப்பொழுது அமுதனையும் ஆவல் தொற்றிக் கொண்டது, தனது பெயரைக் கொண்ட அந்த மனிதனை காண...! காலடி சத்தம் அருகில் வந்து விட்டதால், அவனது கண்கள் நிலை வாசலில் குத்திட்டு நின்றன.

தனது பெயருக்கு சிறிதும் பொருத்தம் இல்லாமல், தனது வாளின் அகலமே இருந்த ஒருவன் உள்ளே நுழைவதை பார்த்த அமுதன் முகம் சுருக்கினான். அவனுக்கு சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை. இந்த பலவீனனா தன் பெயர் கொண்ட வாகைவேந்தன்!
வாகைவேந்தன் என்று பெயரை கொண்டதால் மட்டுமே, யாரும் அவனை போல் மாறிவிட முடியாது அல்லவா...? அவன் தான் எவ்வளவு சிறந்தவன்...! தன்னைப்போல் யாரும் இருக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டான் அமுதன்.

அவனைப் போன்ற அதே மனநிலையில் இருந்த தன்மயாவை ஏறிட்டான் அவன். அவளது முகம் போன போக்கே, அவளது மனநிலையை கூறியது. அது அவனை புன்னகைக்க செய்தது.

"வாகா, நீ எப்படிப்பட்ட பேரு பெற்றவன் என்பதை பார்... இந்த உலகத்திலேயே உனது பெயருக்கான காரண கர்த்தாவை நேரில் பார்க்கும் பேரு பெற்றவன் நீயாக தான் இருப்பாய். இவர் தான் உன் பெயருக்கு காரணமானவர்" என்றார் ருத்ரமூர்த்தி தனது பெயரனிடம்.

தன் தாத்தா தூய தமிழில் பேசிய காரணத்தை புரிந்து கொண்ட அந்த நோஞ்சானை கூரான பார்வை பார்த்தான் அமுதன்.

"நீங்கள் வாகைவேந்தனை பற்றியா பேசுகிறீர்கள்?" என்றான் அவன்.

"ஆம், அப்படி ஒரு அறிய சந்தர்ப்பத்தை உனக்கு வழங்குவதற்காக தான் நான் காத்திருந்தேன்"

அமுதனை உச்சி முதல் பாதம் வரை அளவெடுத்த அவன்,

"ஓ... இவன் தானா அது? நான் மிகவும் அதிகமாக எதிர்பார்த்தேன். நீங்கள் இவனைப் பற்றி என்னிடம் மிகைப்படுத்தி கூறினீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு இளவரசனாய் இருப்பதால் அவன் பார்க்க மிகவும் அழகாகவும், வாட்டசாட்டமாகவும், கவர்ச்சியாகவும் இருப்பான் என்று எண்ணினேன். இவனது பெயரை அடைந்ததற்காக பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவிற்கு, இவனிடம் எதுவும் இருப்பதாய் எனக்கு தோன்றவில்லை" என்றான் அவன் சலிப்புடன்.

அமுதனின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே...! ஊதினால் பறந்து விடும் கொசுவை போல் இருந்து கொண்டு, இந்த நோஞ்சான் பேசும் பேச்சுக்களை எல்லாம் கேட்பதற்கு பதிலாக, ருத்ரமூர்த்தி தன்னை கொன்றே இருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு!

"உனக்கு அந்த பெயரை வைத்தது நான் அல்ல, எனது நண்பன் குலோத்துங்கன்" என்றார் ருத்ரமூர்த்தி, தனது பெயரனை காயப்படுத்தும் அந்த மிகப்பெரிய தவறை செய்தது தான் அல்ல என்று வருத்தப்படுவதைப் போல.

அவர்கள் பேச்சை பொறுக்க முடியாத தன்மயா, தன் தலையை சுவரில் முட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.

"போகட்டும் விடுங்கள் தாத்தா... இவன் எப்படி இங்கே வந்தான்?" என்றது அந்த நோஞ்சான்.

"இவள் தான் தன்மயா. குலோத்துங்கனின் பேத்தி. அவளிடம் தான் மணல் கடிகாரம் இருக்கிறது. சோழ நாட்டிற்குச் சென்ற அவள், இவரை மணமுடித்துக் கொண்டிருக்கிறாள். அவளது பெற்றோரை காப்பாற்ற அவர்கள் இருவரும் இங்கு வந்திருக்கிறார்கள்"

"நீங்கள் மணல் கடிகாரத்தை பற்றி கூறியதெல்லாம் உண்மை தான் என்று என்னால் நம்பவே முடியவில்லை" என்றான் அந்த பலவீனன்.

"ஆம், நான் சொன்ன எதையும் நீ நம்பவில்லை. பார், இப்பொழுது அனைத்தும் உன் கண் முன்னால் இருக்கிறது. இப்பொழுது நீ என்னை நம்புவாய் என்று நினைக்கிறேன்"

"நிச்சயம் நம்புகிறேன்...! நான் பல யுகங்களையும் காண ஆவலுடன் இருக்கிறேன்... முக்கியமாக, அங்கு வாழ்ந்த பெண்களை..." என்று கண்ணடித்தது அந்த நோஞ்சான்.

ருத்ரமூர்த்தி வாய்விட்டு சிரித்தார்.
ஆனால் அதைக் கேட்ட அமுதனோ அதிர்ச்சி அடைந்தான். இந்த பலவீனன், பெண்கள் விடயத்திலும் பலவீனமானவன் தானா? அவனுக்கு தன் பெயரை வழங்க காரணமாக இருந்த வண்டு மச்சத்தை தன் கையிலிருந்து வெட்டி விட வேண்டும் என்று தோன்றியது அமுதனுக்கு.

"எதற்காக காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள் தாத்தா?  அவர்களின் கதைகளை முடித்துவிட்டு அவர்களிடமிருந்து மணல் கடிகாரத்தை பறியுங்கள்" என்று கட்டளையிட்டது அந்த நோஞ்சான்.

"மணல் கடிகாரம் எங்கே?" என்றார் ருத்ரமூர்த்தி துப்பாக்கியை தன்மயாவின் பக்கம் திருப்பி.

"அது இளவரசரிடம் இருக்கிறது" என்றாள் முகத்தை திடமாய் வைத்துக் கொண்டு.

எதைப் பற்றியும் யோசிக்காத நோஞ்சான், அமுதனிடமிருந்து மணல் கடிகாரத்தை பறிக்க அவனை நோக்கி ஓடியது, தன்னை விழுங்க காத்திருக்கும் ஆபத்தை நோக்கி பயணிக்கிறோம் என்று அறியாமல்...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro