22 ஒன்றாய் இணைந்து
22 ஒன்றாய் இணைந்து
"மதங்கன் உன்னை சந்தித்தாரா?" என்றான்.
"ஆம், அரசு சட்டத்திற்கு உட்பட்டு அவர் என்னைக் காண வந்திருந்தார்" என்றாள் சாதாரணமாய்.
"அதைப் பற்றி நீ என்னிடம் ஏன் கூறவில்லை?"
"கூறவேண்டும் என்று தான் நினைத்தேன். அதற்கு முன் அந்த சிறு பெண் என் கவனத்தை ஈர்த்து விட்டாள். அவளை நான் எப்படி தவிர்ப்பது?" அவள் முகத்தில் எந்த பாவமுமின்றி கூறியது, அமுதனுக்கு சரியாய் படவில்லை.
"அவர் என்ன கூறினார்? உன்னிடம் ஏதாவது கேட்டாரா?"
"அமுதே, அதைப்பற்றி பேசுவதற்கு உகந்த இடம் இது அல்ல என்பது என் கருத்து"
"ஏன்?"
"நாம் கண்காணிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம்"
"அதனால் என்ன?"
"நீங்கள் என்னை நம்புகிறீர்களா?"
பெருமூச்சு விட்ட அமுதன், ஆம் என்று தலையசைத்தான்.
"அது உண்மை எனில், இப்பொழுது என்னை எதுவும் கேட்க வேண்டாம். அவரை நான் சமாளித்துக் கொள்கிறேன். என்னை நம்புங்கள். நான் அதை நிச்சயம் செய்வேன்"
என்ன கூறுவது என்று புரியாமல் நின்றான் அமுதன். அவள் அங்கிருந்து இளவஞ்சியின் அறையை நோக்கி நடந்தாள்.
இளவஞ்சி அந்த அறையின் மூலையில் அமர்ந்திருந்ததை கண்டாள். அவள் அமர்ந்திருந்த இடத்தை சுற்றி திரையிடப்பட்டிருந்தது. புன்னகையுடன்
இளவஞ்சியிடம் வந்தாள்.
"பாருங்கள் அக்கா, இவர்கள் அனைவரும் சேர்ந்து என்னை தனியாய் அமர வைத்திருக்கிறார்கள்" என்றாள் சோகமாய்.
"அப்படி செய்வது தான் வழக்கம். இந்த நேரத்தில் பெண்ணுக்கு ஓய்வும், ஊட்டமும் அவசியம். அனைவரும் இணைந்து உன்னை சிறப்பாய் உபசரிக்கப் போகிறார்கள்" என்று தன்மயாவும் அவளுடன் அமர்ந்து கொண்டாள்.
"தாம் அவளுடன் அமரக்கூடாது" என்றாள் தாமரை.
"பரவாயில்லை. எங்கள் நாட்டில் இதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதில்லை"
"அப்படி என்றால், தாம் என்னுடன் இருக்கப் போகிறீர்களா?" என்றாள் இளவஞ்சி குதூகலமாய்.
ஆம் என்று தலையசைத்த தன்மயா,
"நான் உனக்கு கதைகள் கூறுகிறேன்" என்றாள்.
"உண்மையாகத்தான் கூறுகிறீர்களா? நான் எப்படி தனியே அமர்ந்து காலத்தை கழிப்பது என்று கவலையோடு இருந்தேன்"
"என்ன கதை கூற போகிறீர்கள் அக்கா?" என்ற அங்கிருந்த மற்ற பெண்களும், சற்று இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டார்கள்.
அவர்களுக்கு கதைகளை கூற ஆரம்பித்தாள் தன்மயா. அக்பர் பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், மற்றும் பஞ்சதந்திர கதைகள் என தனக்குத் தெரிந்த அனைத்து கதைகளையும் அவள் கூற, அதை கேட்ட பெண்கள் மனம்விட்டு சிரித்ததோடு மட்டும் அல்லாமல், அதில் இருந்த கருத்துகளையும் ஏற்றுக் கொண்டார்கள். தன்மயா கூறிய கதைகளை மட்டுமல்லாது, தன்மயாவையும் அவர்களுக்கு வெகுவாய் பிடித்துப் போனது.
"தங்களை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்றாள் இன்பவல்லி.
"நாளையும் இங்கு வந்து எங்களுக்கு கதைகளை கூறுவீர்களா?" என்றாள் இளவஞ்சி.
"நிச்சயம் வருகிறேன்"
"தாம் இளவஞ்சியை தொட்டால், நீராட வேண்டும்" என்றாள் தேவநங்கை.
"நான் தான் தினமும் நீராடுகிறேனே..." என்றாள் அவள் வேடிக்கையாய்.
"அக்கா, நாம் அனைவரும் தினமும் நீராடத்தான் செய்கிறோம். நான் அதைப் பற்றி கூறவில்லை. இலவஞ்சியையும் அவளது உடைமைகளையும் தொட்டால் தாம் நீராட வேண்டும்."
"அதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை"
அவர்கள் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார்கள்.
மறுப்புறம்...
இளவஞ்சியின் அறைக்குச் சென்ற தன்மயா, இரவு உணவு நேரம் வரை திரும்பாததால், அமுதன் தவித்துக் கொண்டிருந்தான். தன்மயா வேண்டுமென்றே தான் தாமதித்துக் கொண்டிருந்தாள். அவளது எண்ணத்தின் மீது மதங்கனுக்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது என்பதால்.
மதங்கன் தன்மயாவிடம் என்ன பேசினான் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என காத்திருந்தான் அமுதன். ஆனால் அவளோ, அந்தபுறத்தில் இருந்தாள். தன் பொறுமை இழந்த அவன், ஒரு பணிப்பெண்ணை அனுப்பி அவளை வரச் சொல்லலாம் என்று அவன் எண்ணிய போது, தன்மயாவே அவனது அறைக்கு வந்தாள்.
"நான் உன்னை அழைத்து வர சொல்லலாம் என்று எண்ணியிருந்தேன்"
"எதற்காக?"
"ஏன் என்று நீ அறிய மாட்டாயா?"
"நான் தான் தங்களிடம் கூறினேனே...!"
"நான் உன்னை நம்புகிறேன். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் உன்னிடம் என்ன பேசினார் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும்"
"தாம் சினம் கொள்ள மாட்டேன் என்று எனக்கு உறுதி அளித்தால் கூறுகிறேன்"
"அப்படி என்றால் நான் சினம் கொள்ளும் அளவிற்கு ஏதாவது நடந்ததா?" என்றான் தன் கண்களை சுருக்கி.
அவள் ஆம் என்று தலையசைத்தாள்.
"அவர் உன்னிடம் தவறாக நடக்க முயன்றாரா?" என்றான் கோபமாக.
"இல்லை, நான் தான் அவரிடம் தவறாக நடந்து கொண்டேன்" என்றாள் தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு.
"என்ன்னன?" என்று அதிர்ந்தான் அவன்
"நான் அவரிடம் விளையாடினேன்"
"நீ கூறுவது எனக்கு புரியவில்லை"
"அவர் தன்னை மணந்து கொள்ளும்படி என்னை கேட்டார்"
"என்ன்னன...? என்ன துணிச்சல்...!" என்று பல்லை கடித்தான் அமுதன்
"இதில் சினம் கொள்ள எதுவும் இல்லை. ஒரு பெண் அழகாக இருந்தால், அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு ஆண் நினைப்பது நியாயம் தானே?" அவனை சிரிக்க வைக்க வேண்டும் என்று அவள் கூறினாள். ஆனால் அவன் சிரிக்கும் மனநிலையில் இல்லை.
"அதற்கு நீ என்ன கூறினாய்?"
"ஒப்புக்கொண்டேன்"
அவளை நம்ப முடியாமல் பார்த்த அமுதன், கோபத்தில் தன் பல்லை கடித்தான்.
"சினம் கொள்ள மாட்டேன் என்று உறுதி அளித்திருக்கிறீர்கள்... " என்று அவனுக்கு நினைவூட்டினாள்.
"இதற்காகத்தான் என்னிடமிருந்து வாக்குறுதி பெற்றாயா?"
"சினம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நான் அவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினேன். அதற்காக நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று பொருள் அல்ல"
"பொய்யுரைக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது?"
"அதை பொய் என்று ஏன் நினைக்கிறீர்கள்? அதற்கு பெயர் தந்திரம். அவரது தலைமை ஒற்றனை மன்னரிடம் அழைத்து வந்து, என் மீது கொடுத்த புகாரை திரும்ப பெறுவதாய் கூறியிருக்கிறார்"
அமுதன் முகம் சுருகினான்.
"தாம் அவரை நம்பவில்லையா?"
இல்லை என்று தலையசைத்தான்.
"என்னை மணந்து கொள்ள வேண்டும் என்றால், நான் குற்றமற்றவள் என்பதை மெய்பிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன்"
"எதற்காக இந்த விபரீத விளையாட்டு?"
"நமக்கு வேறு வழியில்லை. நாம் விளையாடித் தான் தீர வேண்டும்"
"இல்லை. நீ அதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை"
"நான் ஏன் செய்யக்கூடாது?"
"எனக்காக நீ ஏன் சிரமத்திற்கு ஆளாக வேண்டும்?"
"தங்களை காக்க வேண்டியது என் கடமை இல்லையா?"
"மதங்கன் மிகவும் ஆபத்தானவர்"
"என்னால் முடிந்தவரை நான் முயற்சிக்கிறேன். அதற்குப் பிறகு தாம் பார்த்துக் கொள்ளுங்கள்"
"அவர் மனதில் இருக்கும் திட்டம் என்ன என்பது நமக்கு தெரியாது"
"அவரது திட்டம் எதுவாக இருந்தாலும் அது பலிக்காது"
"நீ அதீத நம்பிக்கையுடன் பேசுகிறாய்"
அப்பொழுது அவனது அறையின் கதவை யாரோ தட்டினார்கள். அவளை ஒளிந்து கொள்ளுமாறு சைகை செய்தான் அமுதன். ஓடிச்சென்று கட்டிலின் பின்னால் ஒளிந்து கொண்டாள் தன்மயா.
கதவை திறந்து வந்திருப்பது யார் என்பதை பார்த்த அமுதன், அந்த நபர் உள்ளே நுழைய வழி கொடுத்தான். உள்ளே நுழைந்த அந்த மனிதன், தலை தாழ்த்தி வணங்கினான். அவன் மதங்கனின் அரண்மனையில் பணிபுரியும் அமுதனின் ஒற்றன்.
"நான் தெரிந்து கொள்ள வேண்டியது ஏதாவது இருக்கிறதா, காரிமாறா?"
"ஆம் இளவரசே...! மிக அவசர செய்தி ஒன்றை கொண்டு வந்திருக்கிறேன். தாம் அழைத்து வந்திருக்கும் விருந்தாளியை எச்சரிக்கையுடன் இருக்கச் சொல்லுங்கள். அவர் மதங்கரை மணக்க ஒப்புக்கொண்டு உள்ளதாக தெரிகிறது"
அமைதியாய் நின்றான் அமுதன்.
"அவரை எப்படியும் மனந்தே தீருவது என்ற முடிவில் இருக்கிறார் மதங்கன். அதே நேரம், அவர் குறித்து வேறு திட்டமும் அவரிடம் இருக்கிறது"
"என்ன திட்டம்?"
"அதை நான் அறியேன்! அதைப் பற்றி அவர் பேசவில்லை"
"அவர் யாரிடம் பேசினார்?"
பதில் கூற தயங்கினான் அந்த ஒற்றன்.
"சொல் காரிமாறா"
"குருதேவரிடம் பேசினார்"
"என்ன்னன?" அதிர்ந்தான் அமுதன்.
"ஆம் இளவரசே... இன்று இரண்டாம் சாமத்தின் முடிவில், குருநாதரின் இருப்பிடத்தில் அவர்கள் இதைப் பற்றி ஆலோசிக்க இருக்கிறார்கள்"
( இரண்டாம் சாமம் என்பது, இரவு ஒன்பது மணியிலிருந்து பனிரெண்டு மணி வரை)
"உனக்கு அது பற்றி உறுதியாக தெரியுமா?"
"ஆம் இளவரசே... என்னுடைய இருப்பை அறியாமல் அவர்கள் பேசிக் கொண்டார்கள்"
"சரி. அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ எச்சரிக்கையாக இரு. உன்னை அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளாமல் பார்த்துக்கொள்"
"ஆகட்டும் இளவரசே"
காரிமாறன் அங்கிருந்து சென்றான்.
கட்டிலுக்கு பின்னாலிருந்து எழுந்து நின்றாள் தன்மயா.
"பார், நான் கூறியது தான் நிகழ்கிறது...! மதங்கன் ஏதோ திட்டமிடுகிறார்"
"அவர்களை தாம் கண்காணிக்க முடியாதா? குருநாதரின் இருப்பிடத்திற்கு சென்று அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்க முடியாதா?"
யோசனையில் ஆழ்ந்தான் அமுதன்.
"தங்கள் அரண்மனையில் சுரங்கப்பாதை ஏதும் இல்லையா?"
இருக்கிறது என்பது போல் தலையசைத்தான்.
"அதன் மூலமாக தாம் அங்கு செல்ல முடியாதா?"
முடியும் என்று தலையசைத்து,
"இன்று இரவு நான் அங்கு செல்கிறேன்" என்றான்.
"குருநாதர் நியாயமானவர் இல்லை போல் இருக்கிறது"
"அதைத்தான் நான் தொடக்கம் முதலே கூறி வருகிறேன்...! என்னை யார் நம்பியது?" என்றான் சலிப்புடன்.
"அவர் தவறானவர் என்று மெய்பிக்க தங்களுக்கு கிடைத்திருக்கும் அருமையான சந்தர்ப்பம் இது"
ஆம் என்று தலையசைத்தான் அமுதன்.
"நல்லது... அங்கு சென்று அவர்களை கையும் களவுமாக பிடியுங்கள்"
"நீ என்னுடன் வரப்போவது இல்லையா?" என்றான் அமுதன் அவளுக்கு வியப்பளித்து.
"நானா?"
"நேற்று இரவு, உன்னையும் என்னுடன் அழைத்துச் செல்லும்படி நீ கேட்கவில்லையா?"
"ஆனால் சுரங்க வழி என்பது ரகசியமாய் காக்கப்பட வேண்டியது அல்லவா?"
"அதைப் பற்றி நீ அறிந்து கொண்டாலும், அது ரகசியமாகத்தான் இருக்கும் என்பது எனக்கு தெரியும்"
அவன் அவள் மீது கொண்டிருந்த நம்பிக்கை அவளை பேச்சிழக்கச் செய்தது.
"ஒருவரை இந்த அளவிற்கு கண்மூடித்தனமாய் நம்புவது, உங்களைப் போன்ற இளவரசருக்கு அழகல்ல"
"நீ கூற வருவது என்ன, தன்மயா?"
"நீங்கள் மட்டும் செல்லுங்கள் என்கிறேன்"
"எதற்காக நீ அஞ்சுகிறாய்?"
"நான் எதற்காக அஞ்ச வேண்டும்? நேற்று இரவு நான் உங்கள் மீது எப்படி பாய்ந்தேன் என்று தாம் காணவில்லையா?" என்றாள் தன் விரல்களை மடக்கி.
"ஆம், கண்டேன்...! அதனால் தான் நீயும் என்னுடன் வர வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை பாதுகாக்க என்னுடன் ஒருவர் வேண்டுமென்று உனக்கு தோன்றவில்லையா?"
தன் கையை இடுப்பில் வைத்துக் கொண்டு அவனை எகத்தாளமாய் நோக்கிய அவள்,
"எப்போதிலிருந்து இளவரசர் வாகைவேந்தருக்கு என்னைப் போன்ற ஒரு பெண்ணின் பாதுகாப்பு தேவைப்படுகிறது?" என்றாள்.
"அந்தப் பெண் அவனது வாழ்க்கையில் வந்த நாளிலிருந்து..." என்றான் புன்னகையுடன்.
அவன் எந்த அர்த்தத்தில் கூறுகிறான் என்று புரியாத தன்மயா, திகைத்து நின்றாள்.
"நீ என்னுடன் வரப்போவதில்லையா?"
"என்னை தங்களுடன் அழைத்துச் செல்வது புத்திசாலித்தனமான செயல் என்று உங்களுக்கு தோன்றுகிறதா?"
"ஏன் அப்படி கேட்கிறாய்?"
"சுரங்கப்பாதையில் நான் எதையாவது பார்த்து கூச்சலிட்டுவிட்டால் என்ன ஆவது?"
"நீயே வந்து பார்த்துக் கொள்" என்று சிரித்தான்.
சற்று யோசித்த தன்மயா,
"சரி வாருங்கள் போகலாம்" என்றாள்.
"இப்பொழுதா?"
"பிறகு எப்பொழுது?"
"இரு வருகிறேன்" என்று உள்கட்டுக்கு சென்றவன், திரும்பி வந்து தன்மயாவிடம் சில துணிகளை கொடுத்தான்.
"இதை அணிந்து கொள்" என்றான்.
அது ஆண் உடை.
"நான் மாறுவேடம் அணிய போகிறேனா?" என்றாள் தன்மயா.
"ஆம். நாம் இருவரும் மாறுவேடம் அணிய போகிறோம்"
"மிகவும் சுவாரசியமாக இருக்கப் போகிறது" என்று கூறியபடி அந்த துணிகளுடன் தன் அறைக்குச் சென்றாள் தன்மயா.
உடையை மாற்றிக் கொண்டபோது அவள் எதையோ யோசித்தாள். மதங்கனும் குருநாதரும், அவளைப் பற்றி பேசினால் கூட, அவர்கள் தவறானவர்கள் என்று அமுதனால் எப்படி நிரூபிக்க முடியும்? முன்பு செய்தது போல், பிரச்சனையை தங்கள் பக்கமே மதங்கன் திருப்பிவிட்டால் என்னவாவது?
தனது கைபேசியை எடுத்த தன்மயா, அவர்களது செயல்பாடுகளை அதில் பதிவேற்றம் செய்தால் என்ன, என்று நினைத்தாள். அந்த காணொளியை பார்க்கும் இக்கால மக்கள் என்ன நினைப்பார்கள்? அவளை சூனியக்காரி என்று நினைக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதில் இருக்கும் சிக்கல் அவளுக்கு புரிந்து தான் இருந்தது. ஆனாலும் அதை செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொண்டு போகட்டும்...! மதங்கனின் குற்றத்தை மெய்பித்த பிறகு, அவள் தான் இங்கு இருக்கப் போவதே இல்லையே...! பிறகு ஏன் அவள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும்?
கைபேசியை ஆன் செய்து, அதை நைட் மோடுக்கு மாற்றி, சைலன்டில் போட்டு, அதை தனது இடுப்பில் அணிந்திருந்த பட்டையில் மறைத்துக் கொண்டாள். அப்படி செய்ய அந்த பட்டை வசதியாய் இருந்தது. தாடியை ஒட்டிக்கொண்டு, தன்னை கண்ணாடியில் பார்த்து சிரித்தாள்.
"கலக்குற தன்மயா...! செம்ம ஹேண்ட்ஸமா இருக்க...! சென்னைக்கு போன பிறகு இதை ஒரு தடவை ட்ரை பண்ணி பாரு. பொண்ணுங்க உன்னை சுத்து போடுவாங்க" என்று சிரித்தாள்.
கைபேசியை எடுத்து ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டாள்.
"என்ன ஒரு எக்ஸ்பீரியன்ஸ்...! அமுதனுக்கு தான் நன்றி சொல்லணும். இன்னைக்கு நான் உண்மையான சுரங்க பாதையில நடக்கப் போறேன்" என்றாள் குதூகலமாய்.
மெல்ல தன் அறையின் கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். அங்கு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, அமுதனின் அறைக்கு சென்றாள்.
மறுப்புறம், மிகவும் பதற்றமாய் இருந்தான் அமுதன்.
"தன்மயாவை குருநாதரின் இடத்திற்கு அழைத்துச் செல்வது அவ்வளவு பொருத்தமாக இருக்குமா? அவளை நான் சிக்கலில் ஆழ்த்துகிறேனா? அவளுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால்? இல்லை, அப்படியெல்லாம் ஒன்றும் நிகழாது. அதுவும் நான் அவளுடன் இருக்கும்போது, அவளுக்கு எப்படி எதுவும் நிகழ்ந்துவிடும்?" என்று கூறிக்கொண்டான்.
அப்போது அவனது அறைக்குள் ஒருவன் நுழைவதை கண்டான் அவன்.
"யாரது?" என்றான்.
"இளவரசர் வாகைவேந்தரே... நான் யார் என்று உமக்கு தெரியாதா?" தடிமனான குரலில் கேட்டாள் தன்மயா, தனது விரலின் பின்புறத்தால் தன் மீசையை தடவியபடி.
சில நொடி அவளை பார்த்து நின்ற அமுதன், வெடித்து சிரித்தான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro