1 ஆய்வுப் பயணி
1 ஆய்வுப் பயணி
தன்மயா என்று பெயர் கொண்ட அந்த பெண், பின்னால் திரும்பி திரும்பி பார்த்தபடி ஓடினாள். அவளை சிலர் துரத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யார், எதற்காக அவளை துரத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அவளுக்கு புரியவில்லை. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலுக்கு சென்று விட்டு, அவள் இப்பொழுது தான் சென்னை திரும்பினாள். அவள் தாராசுரம் கோவிலுக்கு சென்றது, அவள் மிகப்பெரிய பக்தை என்பதால் அல்ல. பழந்தமிழர்களின் வாழ்க்கை முறை பற்றி அறிய அவளுக்கு இருந்த ஆர்வம் காரணமாக...!
அந்த ஆர்வத்தை அவள் மனதில் விதைத்தது அவளது தாத்தா, குலோத்துங்கன். கிட்டத்தட்ட தமிழர்களின் வரலாறு அணைத்தும் அவளுக்கு அத்துப்படி. சிறு வயதிலிருந்தே அதை அவளுக்கு புகட்டியவர் அவளது தாத்தா தான். தொல்பொருள் ஆய்வாளரான அவர், பல கதைகளை சொல்லி அவளை வளர்த்தார். அது, கல்லூரியில் எபிகிராபியை (கல்வெட்டு பற்றிய ஆய்வு) விருப்பப்படமாய் படிக்கும் அளவிற்கு அவளுக்குள் வளர்ந்து நின்றது.
அதனால், அவளுக்கு புதுப்புது தகவல்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஒவ்வொரு நாளும் மேலோங்கி கொண்டே இருந்தது. அதனால் தமிழகத்தில் இருக்கும் அனைத்து கோவில்களையும் ஒன்றன்பின் ஒன்றாக பார்த்து, அதில் இருக்கும் கல்வெட்டுகளை படித்துவிடுவது என்ற முடிவில் இருந்தாள் அவள்.
வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதால், பணம் அவளுக்கு ஒரு பிரச்சனையாக இருந்ததே இல்லை. அவளது பெற்றோர் இருவரும் பள்ளி ஆசிரியர்கள். அப்பா வரலாறு, அம்மா தமிழ்! அதனால் தமிழும், வரலாறும் அவள் ரத்தத்திலேயே ஓடியது.
அவள் பத்தாம் வகுப்பு படித்த வரை, அவளுக்கு சொல்லப்பட்ட கதைகளை எல்லாம், *சொல்கிறார்களே* என்று கேட்டுக் கொண்டிருந்தவளது வாழ்க்கையில், மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது, அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவல்.
*இவ்வளவு பெரிய புக்கா?* என்று ஆரம்பத்தில் அலுத்து கொண்டவள், அதைப் படிக்க துவங்கியவுடன், அதை கீழே வைக்க மனமில்லாமல், சோறு, தண்ணிர், தூக்கம் மறந்து படித்து முடித்தாள்... இல்லை, அக்காலத்திற்கே சென்று வாழ்ந்து முடித்தாள்...!
அதில் விவரிக்கப்பட்டிருந்த தமிழரின் வாழ்வியல் நெறிமுறைகள், அவளை வெகுவாய் கவர்ந்தது. அதில் விவரிக்கப்பட்டிருந்த காட்சி அமைப்புகளை கற்பனையில் கொண்டு வந்து நிறுத்தி,
"அப்போ எப்படி வாழ்ந்திருக்காங்க இல்ல?" என்று தன் தாத்தாவிடமும் பெற்றோரிடமும் அதைப் பற்றி மணிக்கணக்காய் பேசிக் கொண்டிருப்பது அவளுக்கு மிகப் பிடித்த ஒன்று.
அந்தக் கதையில், வந்தியத்தேவன் குதிரையில் சென்றான் என்ற ஒரே காரணத்திற்காக, அடம் பிடித்து குதிரை ஏற்றம் கற்றாள். இரண்டு முறை குதிரையிலிருந்து கீழே விழுந்த பிறகும், அதை நிறுத்தவில்லை.
அதோடு நிற்காமல், தமிழில் இருந்த அனைத்து புகழ்பெற்ற சரித்திர நாவல்களையும் தேடி தேடி படித்தாள். அந்த நாவல்கள் அவளுக்குள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து அவளால் வெளிவரவே முடியவில்லை. அவற்றை அனுபவபூர்வமாய் உணரத்தான் ஆய்வு பயணங்களை மேற்கொள்ள தொடங்கினாள்.
பயணம் செய்வதற்கு வசதியாக, நவநாகரீக உடை அணிவதை வழக்கமாக கொண்டிருந்தாலும், தோய்ந்தெடுத்த தமிழச்சி...!
அவள் தான் இப்பொழுது சிலர் துரத்த ஓடிக் கொண்டிருக்கிறாள். கூட்டம் மிகுந்த ஒரு வீதியை பார்த்தவுடன் சட்டென்று அதனுள் புகுந்து கொண்டாள். அது பல கடைகளை உள்ளடக்கிய ஒரு மசூதி தெரு.
எதைப் பற்றியும் யோசிக்காமல், ஒரு துணி கடைக்குள் நுழைந்த அவள்,
"எனக்கு இந்த பர்தா வேணும்" என்றாள்.
பார்க்க இஸ்லாமிய பெண் போல் இல்லாத அவளை, மேலும் கீழும் பார்த்தார் அந்த கடைக்காரர். அவரது பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட அவள்,
"ஒரு டிராமாவுக்காக வாங்குறேன், பாய்" என்றாள் பல்லை காட்டி சிரித்து.
அந்த கடைக்காரருக்கு சந்தேகம் இருந்த போதிலும், அதை அவளுக்கு கொடுத்தார்.
எச்சரிக்கை உணர்வோடு, அந்த கடையில் இருந்தபடியே இங்கும் அங்கும் பார்த்தாள் தன்மயா. தன்னை துரத்திக் கொண்டு வந்தவர்கள் அங்கே இல்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு, தான் வாங்கிய பர்தாவை கண்ணிமைக்கும் நேரத்தில் அணிந்து கொண்டு, கடையைவிட்டு வெளியே வந்தாள்.
தன்னை துரத்திக் கொண்டு வந்தவர்களில் ஒருவன், அந்த தெருவின் முனையில் நின்று, கைபேசியில் பேசிக் கொண்டிருப்பதை கண்டாள். அவன் அணிந்திருந்தது சிவப்பு நிற சட்டை என்பதால், அது அவன் தான் என்பதை நிச்சயப்படுத்தி கொள்வதில் அவளுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை.
அவனருகே சென்ற அவள், அவனுக்கு பக்கத்தில் இருந்த பழக்கடையில் மாம்பழங்கள் வாங்குவது போல பாசாங்கு செய்து கொண்டு நின்றாள்.
"அவ எங்க போனான்னு தெரியல. நம்ம அவளை மிஸ் பண்ணிட்டோம். சார் என்ன சொல்ல போறாருன்னு தெரியல" என்று கைபேசியில் யாரிடமோ கூறினான் அவன்.
சாரா? அவன் சார் என்று கூறியது யாராக இருக்கும்? அந்த சாருக்கு அவளிடம் இருந்து என்ன வேண்டும்? தன்னை துரத்திக் கொண்டிருக்கும் அந்த மனிதன் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவளுக்கு அதிகரித்தது. இதை அப்படியே விட்டுவிட அவள் தயாராக இல்லை.
அதனால் அவனை பின்தொடர்வது என்று முடிவு செய்தாள். அவன் அங்கேயே நின்று யாருக்காகவோ காத்திருந்தான். அப்பொழுது, இருசக்கர வாகனத்தில் வந்த வேறொருவன், சிவப்பு சட்டை காரனருகில் நின்றான். அவனது வண்டியில் ஏறிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டான் அந்த சிவப்பு சட்டைக்காரன்.
அந்த பக்கம் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி, அதில் ஏறிக்கொண்ட தன்மயா, அவர்களை பின்தொடருமாறு பணித்தாள். நாற்பது நிமிட ஓட்டத்திற்கு பின், அவர்களது இருசக்கர வாகனம், ஒரு தனிமையான பங்களாவின் முன் வந்து நின்றது. சற்று தூரத்தில் ஆட்டோவை நிறுத்தி, ஆட்டோவிற்கான பணத்தை கொடுத்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டு நடப்பதை கவனித்தாள் அவள்.
மெல்ல அந்த பங்களாவை நோக்கி முன்னேறிய அவள், சத்தம் செய்யாமல் அந்த பங்களாவை சுற்றி வளைத்துக் கொண்டு பின்புறம் சென்றாள். அந்த பங்களாவில் இருந்து வந்த முனங்கள் சத்தத்தை கேட்டு நின்றாள் அவள். அந்த குரல், எங்கோ கேட்டதாய் தோன்றியது அவளுக்கு. அந்தக் குரல் வித்தியாசமாக இருந்தாலும் பரிச்சயமானதாய் இருந்தது.
அங்கிருந்த சாளரம் வழியாக, மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தாள். அவளது கண்கள் அகல விரிந்தன. ஒரு வயதான பெரியவரை ஒரு நாற்காலியில் அமர வைத்து கட்டிப் போட்டு இருந்தார்கள். அந்தப் பெரியவர் அவளது தாத்தாவின் நண்பர், தம்பிரான். அவரை நன்றாக அடித்திருக்கிறார்கள் என்று புரிந்தது. அவரது முகத்தில் ரத்தக்கட்டு தெரிந்தது.
"சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது. தன்மயாவுக்கும் அதைப்பத்தி தெரிஞ்சிருக்கும்னு எனக்கு தோணல. அவ குழந்தை. நான் அவ தாத்தாவோட இருந்திருக்கேன். எனக்கே எதுவும் தெரியலன்னா, அந்த பொண்ணுக்கு எப்படி தெரியும்? தயவுசெய்து எங்களை விட்டுடுங்க" என்று கெஞ்சினார் தம்பிரான்.
அவர் எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை அவளுக்கு. காலம் கடத்தாமல் தனது கைபேசியை எடுத்து காவல் துறையை அழைத்தாள்.
அழைப்பை துண்டித்து விட்டு, உள்ளே நோட்டம் விட்டாள். சற்று நேரத்தில் தம்பிரான் மயங்கி போனார். அங்கே நடப்பதை கவனித்தபடி காவலர் வருகைக்காக தவிப்புடன் காத்திருந்தாள் அவள்.
சில நிமிடங்களில், காவலர்கள் அந்த இடம் வந்து சேர்ந்தார்கள். காவலர்களைக் கண்ட அடியாட்கள், பின் வாசல் வழியாக தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார்கள். காவலர்கள் தம்பிரானை காப்பாற்றினார்கள். தான் அணிந்திருந்த பர்தாவை நீக்கி பையில் வைத்துக் கொண்டு, அவரை நோக்கி ஓடினாள் தன்மயா.
"தாத்தா... " என்று அவர் கன்னத்தை தட்டினாள்.
அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எடுத்து, அவளிடம் கொடுத்தார் ஆய்வாளர். அந்த தண்ணீரை அவர் முகத்தில் தெளித்தாள் அவள். சிரமப்பட்டு தன் கண்களை திறந்தார் தம்பிரான். தன்மயாவை பார்த்த அவர்,
"தன்மயா, நீயா? நீ இங்க எப்படி வந்த? இங்கிருந்து போயிடு. இவனுங்க ரொம்ப மோசமானவங்க" என்றார் பதற்றத்துடன்.
"எனக்கு தெரியும் தாத்தா. அதனால தான் உங்களை காப்பாத்த, போலீசை கூட்டிகிட்டு வந்தேன்"
"அப்படின்னா, நீ என்னை காப்பாத்திட்டியா? ரொம்ப தேங்க்ஸ் மா" என்றார் நிம்மதி பெருமூச்சுடன்.
"அவங்க எதுக்காக உங்களை கடத்திக்கிட்டு வந்தாங்க?" என்றார் ஆய்வாளர்.
"தன்மயா எங்க இருக்கான்னு கேட்டு என்னை டார்ச்சர் பண்ணாங்க. ஆனா, நான் அவங்ககிட்ட எதுவும் சொல்லல. நல்ல காலம், நீங்க சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க"
"நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுங்க" என்றார் ஆய்வாளர்.
"நிச்சயமா செய்றேன், சார்"
அவர் எழுந்து நிற்க உதவினாள் தன்மயா. அவரை போலீஸ் ஜீப்புக்கு அழைத்து வந்த அவள், அவருடன் அதில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
"நீ என் கூட போலீஸ் ஸ்டேஷனுக்கு எல்லாம் வர வேண்டாம், மா. நீ இங்கிருந்து போ. நம்ம அப்புறம் பார்க்கலாம்" என்றார் தம்பிரான்.
"பரவாயில்ல தாத்தா. நீங்க இந்த நிலைமையில எப்படி போலீஸ் ஸ்டேஷனுக்கு தனியா போவீங்க? நானும் உங்க கூட வரேன். அதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல"
கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தார் தம்பிரான்.
எழுத்து மூலமாய் வழக்கு பதிவு செய்த பின், தன்மயாவுடன் காவல் நிலையத்தை விட்டு கிளம்பினார் தம்பிரான். அங்கிருந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துவிட்டு, பிறகு அவரை அவரது வீட்டிற்கு அழைத்து வந்தாள் தன்மயா.
"இதெல்லாம் என்ன தாத்தா? இவங்கல்லாம் யாரு? எதுக்காக அவங்க என்னை துரத்திகிட்டு இருக்காங்க?"
"என்ன்னனது? அவங்க உன்னை துரத்தினாங்களா?"
"ஆமாம். என்னை ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து துரத்திகிட்டு வந்தாங்க"
"நீ சென்னைக்கு வந்த விஷயம் அவங்களுக்கு எப்படி தெரியும்? அது எனக்கே தெரியாதே..."
"எனக்கு ஒன்னும் புரியல தாத்தா. அவங்கள்ல ஒருத்தன், ஃபோன்ல பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன். யாரையோ அவங்க சார்னு சொன்னாங்க. இதுக்கு பின்னாடி யாரோ இருக்காங்க. அவங்க உங்ககிட்ட என்ன கேட்டாங்க? அவங்களுக்கு என்கிட்ட இருந்து என்ன வேணும்?"
"சாண்ட் கிளாக்... மணல் கடிகாரம்"
"மணல் கடிகாரமா?" என்று முகம் சுருக்கினாள் தன்மயா.
"ஆமாம். உங்க தாத்தாகிட்ட ஒரு மணல் கடிகாரம் இருந்தது"
"அதுல என்ன அவ்வளவு ஸ்பெஷல்?"
"அது ஒரு டைம் மெஷின்"
"என்னது? டைம் மெஷினா?" என்று நம்ப முடியாமல் கேட்டாள் தன்மயா.
"ஆமாம். அது குலோத்துங்கனுக்கு எப்படி கிடச்சிதுன்னு எனக்கு தெரியாது. ஆனா, அதை வச்சு அவன் நிறைய தடவை டைம் டிராவல் பண்ணி இருக்காருன்னு எனக்கு தெரியும்"
அதைக் கேட்ட தன்மயா அதிர்ச்சி அடைந்தாள், ஆச்சரியமடைந்தாள், ஆனந்தமடைந்தாள். அதே நேரம், அவளால் அதை நம்பவும் முடியவில்லை.
"என்னோட தாத்தா ஒரு டைம் ட்ராவலரா?" என்றாள் நம்ப முடியாமல்.
ஆம் என்று தலையசைத்தார் தம்பிரான்.
"அந்த ஸாண்ட் கிளாக்கை வச்சு, அவன் நிறைய தடவை டைம் டிராவல் பண்ணியிருக்கான்"
"ஆனா, அப்படி ஒரு ஸாண்ட் கிளாக்கை நான் எங்க வீட்டுல பார்த்ததே இல்லையே..."
"அதை நான் ஒரு தடவை பாத்திருக்கேன். ஆனா, அது ஒரு டைம் மெஷின்னு அப்போ எனக்கு தெரியாது. ரொம்ப நாளைக்கு பிறகு, உங்க தாத்தா அதை பத்தி என்கிட்ட சொன்னான். ஆனா அது எங்க இருக்குன்னு சொல்லல. அவன் அதை என்ன செஞ்சான்னும் எனக்கு தெரியல"
"அப்படின்னா, அவங்க அந்த டைம் மெஷினுக்காகத் தான் என்னை துரத்துறாங்களா?"
"ஆமாம்"
"அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாதே"
"உனக்கு தெரியாதுன்னு எனக்கும் தெரியும். நான் அவங்ககிட்ட அதை பத்தி சொன்னேன். ஆனா அவங்க என்னை நம்பல"
"அதைப்பத்தி அவங்களுக்கு எப்படி தெரிஞ்சது?"
"ருத்ரமூர்த்தின்னு ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட் உன் தாத்தாவோட வேலை செஞ்சான். அந்த டைம் மெஷின் பத்தி கேட்டு உன் தாத்தாவை அவன் நிறைய தடவை தொல்லை பண்ணதா உன் தாத்தா சொன்னான். அதுக்கப்புறம் தான் உன் தாத்தா அதை எங்கயோ ஒளிச்சு வச்சுருக்கணும்னு நினைக்கிறேன்"
"இப்போ ருத்ரமூர்த்தி எங்க?"
"எனக்கு தெரியல. உன் அப்பா அம்மா இறந்ததுக்கு பிறகு, அவன் ஒரு தடவை என்னை மீட் பண்ணி அந்த ஸாண்ட் கிளாக்கை பத்தி கேட்டான்"
"என்ன சொல்றீங்க?"
"ஆமாம். உங்க அம்மா அப்பாவை கொன்னது அவனா இருக்குமோன்னு எனக்கு சந்தேகம் இருக்கு"
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் தன்மயா.
"நீ கராத்தே தெரிஞ்ச பொண்ணு அப்படிங்கறதால, அவங்ககிட்ட இருந்து நீ ஈசியா தப்பிச்சிருப்ப..."
"இல்ல தாத்தா, அவங்க கையில ஒரு ஸ்பிரே பாட்டில் இருந்துச்சு. அவங்க என்னை மயங்க வைக்க முயற்சி பண்றாங்கன்னு புரிஞ்சிடுச்சு. அதனால அவங்ககிட்ட சண்டை போடறது புத்திசாலித்தனம் இல்லன்னு, அவங்ககிட்ட இருந்து நான் தப்பிச்சு ஓடி வந்துட்டேன்"
"நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். நல்ல காலம், நீ ஒரு இடத்துல இல்லாம ஆய்வு பயணம் போய்கிட்டு இருக்க. இங்கிருந்து எங்கேயாவது போயிடு. இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வர்ற வரைக்கும் சென்னைக்கு வராத"
அமைதியாய் இருந்தாள் தன்மயா. அவள் எந்த பதிலும் கூறவில்லை. அவளால் எதுவும் கூற முடியவில்லை. இது அவளது வாழ்வைப் பற்றிய எதிர்பாராத உண்மை. மணல் கடிகாரம், அவளது பெற்றோரின் கொலை பற்றிய சந்தேகம், ருத்ரமூர்த்தி, அனைத்தும் அவளுக்கு புதிதாக இருந்தது. இவற்றையெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வது என்று அவளுக்கு புரியவில்லை. அவளது பேக்பேக் பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து அமைதியாய் நடந்தாள்.
அவள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, அவளது பெற்றோர் கொல்லப்பட்டார்கள். சாதாரண பள்ளி ஆசிரியர்களை கொல்லும் அளவிற்கு என்ன குரோதம் இருந்து விட முடியும் என்பது அவளுக்கு புரியாமல் இருந்தது. ஆனால், அதற்கு இப்படி ஒரு பின்னணி இருக்கும் என்பது அவள் சிறிதும் எதிர்பாராதது.
அவளது பெற்றோரின் இழப்பிற்கு பிறகு, யாருமின்றி இடிந்து அமர்ந்திருந்த அவளை, உற்சாகப்படுத்தி, அவளுக்கு துணை நின்றது, அவளது கல்லூரி பேராசிரியர்களும் சில தோழிகளும் தான். அந்த உற்சாகம் தான் அவளை ஆய்வு பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு கொண்டு வந்து நிறுத்தியது.
அவள் தங்கியிருந்த பெண்கள் விடுதிக்கு வந்த அவள், கட்டிலில் சாய்ந்தாள். தம்பிரான் கூறியது உண்மையாக இருக்குமா? டைம் மெஷின் என்பது உண்மையிலேயே சாத்தியம் தானா? கட்டிலில் எழுந்து அமர்ந்த அவள், மீண்டும் பர்தாவை அணிந்து கொண்டு அந்த விடுதியை விட்டு வெளியேறினாள்.
அவளது பெற்றோரின் மரணத்திற்கு பிறகு, அவள் எப்பொழுதும் அவர்களது பழைய வீட்டிற்கு வரவே இல்லை. ஆனால் இன்று, அவள் அதை செய்ய தயாரானாள். பூத்தொட்டியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து, அந்த வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே அடி எடுத்து வைத்தாள். பராமரிக்கப்படாமல் விடப்பட்டிருந்த அந்த வீடு, தூசும் தும்புமாய் இருந்தது. வாசலில் நின்று அந்த வீட்டை தன் கண்களால் துழாவினாள். சிரமம் பார்க்காமல் அதை சுத்த படுத்திவிட்டு, ஒவ்வொரு அறையாய் தேடினாள். மணல் கடிகாரம் என்ற ஒன்று அங்கு இல்லை. தன் காலால் தரையை தட்டிப் பார்த்தாள், ஏதாவது ரகசிய அறை இருக்கிறதா என்று. ஆனால் அப்படி ஒன்றும் இல்லை.
"அதை எங்க வச்சீங்க, தாத்து?" என்று முணுமுணுத்தாள்.
அப்பொழுது அவளது பார்வை, அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய டெடிபியர் பொம்மையின் மீது விழுந்தது. அதைப் பார்த்த அவளது கண்கள் சுருங்கின. அது, அவளது பிறந்தநாளுக்கு, அவளது தாத்தா பரிசாய் அளித்தது. அதைக் கொடுக்கும் போது அவர் கூறிய வார்த்தைகள் அவளுக்கு நினைவுக்கு வந்தன...!
*தனு, இதை மட்டும் எப்பவும் தவற விட்டுடாதே*
"ஒரு வேலை, அதுல இருக்குமோ?" என்று எண்ணியபடி, அதை நோக்கி விரைந்த அவள், அந்த பொம்மையை எடுத்து, இடது பக்கமும், வலது பக்கமும் திருப்பி பார்த்தாள். அதன் வலது காலின் கீழ்ப்புறத்தில் கையால் தைக்கப்பட்ட சுவடு தெரிந்தது. அந்த நூலைப் பிடித்து இழுத்து, அதை கிழித்தாள். அந்த பொம்மையின் பஞ்சுக்குள் புதைந்திருந்தது இரண்டு அங்குலமே இருந்த மணல் கடிகாரம்...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro