45
'அர்ச்சுனன்' எனப் பெயர் கேட்டதுமே தாரா ஆறு மாதங்கள் பின்னோக்கிச் சென்றிருந்தாள்.
ஆதித் வந்து சென்ற அடுத்த நாள், அர்ச்சுனன் வந்திருந்தான் அவளைப் பெண்பார்க்க.
ஆதித்திடம் கேட்ட அதே வேண்டுகோளை அவனிடமும் கேட்டபோது, அவன் அவளை மேலும் கீழுமாய்ப் பார்த்துவிட்டு நக்கலாகச் சிரித்தான். சீனிவாசனிடம் சென்று திருமண வேலைகளைத் தொடங்குமாறு கூறியிருந்தான்.
மூன்று மாதத்தில் திருமணமென நிச்சயிக்கப்பட்டு, திருமண நாளும் வந்தபோது, நள்ளிரவில் நண்பர்களுடன் எங்கோ சென்றுவிட்டு விடிகாலையில் கல்யாண மண்டபத்திற்கு பைக்கில் அதிவேகத்தில் வந்தபோது மின்கம்பம் ஒன்றில் அடிபட்டு விபத்துக்குள்ளாகி இருந்தான்.
ஏதோ அந்த விபத்தைத் தாராவே நடத்தியதாக அவனது குடும்பத்தார் ஒவ்வொருவரும் வாய்க்கு வந்தபடி வசைபாடி அவளையும் தேவியையும் அழ வைத்த நினைவு இன்னும் நெருப்பாக நெஞ்சில் சுட்டது. தாராவின் கண்கள் தாமாகவே தாரைவார்க்கத் தொடங்கின.
"அ.. அவன் ஏன்ப்பா அங்க வந்திருக்கான்?"
"உன்னை பார்த்துட்டு போலான்னு வந்தான். நீ கல்கத்தாவுக்கு போயிட்டனு சொன்னேன்.. பேசணும்ன்னான். இந்தா பேசு."
தாரா விக்கித்து நிற்க, சீனிவாசன் கைபேசியை அவனிடம் தரும் அரவம் கேட்டது.
"ஹலோ?? தாரா??"
தாரா பற்களைக் கடித்தாள் கோபத்தில். இவனுக்குத் தன்னிடம் பேச என்ன இருக்கிறதென அவளுக்குப் புரியவில்லை. தனக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம், என்ன உரிமையில் வீடு தேடி வந்து தன்னைக் கேட்கிறான், என்ன நினைத்துக்கொண்டு தன் தந்தையும் இவனிடம் பேசச் சொல்கிறார்?
"ஹ.. ஹான்.."
"என்ன தாரா, எங்கிட்ட கல்யாணமே வேணாம்னு கெஞ்சிட்டு, கல்கத்தா மாப்பிள்ளை கிடைச்சதும் சிட்டா பறந்துட்ட!?"
அவனது ஏளன வார்த்தைகள் கண்ணில் கண்ணீரைப் பெருக்க, வார்த்தைகள் வராமல் தவித்த நேரத்தில் வாசற்பக்கம் ஏதோ சத்தம் வரவும் தாரா கைபேசியுடன் வாசலை நோக்கி நடந்தாள்.
ஆதித் லேசாக நெற்றியைத் தேய்த்தவாறு, "ஒரு பென்ட்ரைவை மறந்து வச்சிட்டுப் போயிட்டேன்.." என்றபடி படியேறி வந்தான். அவளது கலங்கிய முகத்தைக் கண்டதும் அதிர்ந்தவன், விரைந்து அவளருகே நெருங்கினான்.
"ஹேய்.. என்ன ஆச்சு?"
வார்த்தை வராமல் அவன் மார்பில் சாய்ந்து கேவியழுதாள் அவள். அவளது கைபேசித் திரையில் சீனிவாசன் பெயரைப் பார்த்தவன் முகம் இறுக, "குடு அதை" என்றபடி கைபேசியை வாங்கிக் காதில் வைத்தான்.
வேறொரு ஆண்குரல், "என்ன தாரா, பதிலையே காணோம்.. என்னதான் இருந்தாலும், நான் உனக்கு பரிசம் போட்ட பையன். இப்படி பேசாம இருக்கலாமா?" என வினவுவது காதில் விழ, குழப்பமும் கோபமும் மேலோங்க, "மைண்ட் யுவர் வேர்ட்ஸ்" என கர்ஜித்தான் ஆதித்.
எதிர்முனை சற்றே திகைத்து, "நீங்க யார், ஓ.. கல்கத்தா மாப்பிள்ளையா? நலமா சார்?" என்றது நைச்சியமாக.
இன்னும் விசும்பல் தீராமல் அவன் நெஞ்சில் சாய்ந்திருந்த தாராவின் கேசத்தை அனிச்சையாகவே வருடிக்கொடுத்தவன், "நீ யார்னு எனக்குத் தெரியாது. ஆனா இன்னொரு தடவை தாராவை காயப்படுத்தற மாதிரி எதாவது பேசினா, உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது! ஜாக்கிரதை!" என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
குனிந்து அவளைப் பார்த்தவன், மெதுவாக அவள் முகத்தை நிமிர்த்தினான் தன்னை நோக்கி.
"தாரா.. தாரா இங்க பார்.. ஒண்ணும் இல்ல, ரிலாக்ஸ். கண்ட கண்ட இடியட்ஸ் பேசறதைக் கேட்டெல்லாம் நீ இப்படி அழலாமா? தைரியமா இருக்க வேணாமா? விடு, இனிமேல் இப்படி நடக்காது. நடக்காம நான் பார்த்துக்கறேன். உங்க அப்பாவுக்கு அறிவே கிடையாது.. ப்ச்.. அவரை உனக்கு ஃபோன் பண்ண வேணாம்னு சொல்லிடட்டுமா?"
தாரா அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, மறுப்பாகத் தலையசைத்தாள்.
"திடீர்னு பழசை நினைச்சதும் அழுகை வந்துடுச்சு. ஆனா இனிமேல், அவன் மறுபடி பேசினா, நாக்கை புடுங்கற மாதிரி நாலு வார்த்தை கேட்பேன். அவனுக்கோ, அப்பாவுக்கோ, நான் ஏன் பயப்படணும்?"
ஆதித் நிம்மதிப் புன்னகையுடன் அவள் கன்னத்து ஈரத்தை நாசூக்காகத் துடைத்தான்.
"ஒரு செகண்ட்ல பயமுறுத்திட்டயே.."
அவன் விளையாட்டாக சிரிக்க, அவள் முகத்திலும் புன்னகை பூத்தது.
"ம்ம், சாரி.. ஆனா சரியான நேரத்துல வந்ததுக்கு தேங்க்ஸ்."
"தற்செயல். சரி, நான் கிளம்பறேன்.. ஃப்ளைட்டுக்கு டைம் ஆச்சு. பத்திரமா இரு," என்றபடி இந்திராணியை அழைத்தவன், "த்தார் ஜோத்னோ நியோ" (அவளை பாத்துக்கங்க) என அறிவுரைத்துவிட்டுத் தான் தேடிவந்த பொருளை எடுத்துக்கொண்டு கிளம்ப, இம்முறை ஏனோ மனமின்றி விடைகொடுத்தாள் தாரா.
வெளி கேட் வரை சென்று, கார் தெருமுனையைத் தாண்டும்வரை ஏக்கமாகப் பார்த்திருந்தவள், பெருமூச்சுடன் உள்ளே வந்தாள். பேனர்ஜியை தேடி அறைக்குச் சென்றவள், அதற்குப் பழங்கள் தந்துவிட்டு, அதன் கூண்டின் அருகில் நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தாள்.
"பேனர்ஜி.. டேய் பேனர்ஜி, இன்னும் ரெண்டு நாள் அவர் இல்லாம என்ன பண்ணப் போறேனோ.. எனக்கு இப்பவே பயங்கர சோகமா இருக்கு."
"கீக்கீ.. காபார்!"
"நீ சாப்பிடு. எனக்கு ஏனோ பசியே இல்லை. எப்பதான் சண்டே வருமோன்னு இருக்கு."
"சண்டே.. கீக்கீ.."
"ம்ம். உங்க ஊர் பாஷைல 'ரோவிவார்'. ஞாயத்துக்கிழமை. ஆதித் திரும்பி வருவார்.. அம்மாவும் தன்னுவும் ஊர்ல இருந்து வருவாங்க. அவங்களுக்கு அப்பாகிட்ட இருந்து பதினைஞ்சு நாள் விடுதலை. நான் கூட பரவால்லடா, அவங்களை நினைச்சா தான் எனக்கு இன்னும் கஷ்டமா இருக்கு. அப்பாகிட்ட சிக்கி இன்னும் எத்தனை காலம் போராடணுமோ.."
"கீ.. க்கி.."
"தன்னு கூட படிக்கவோ, வேலைக்குப் போகவோ வீட்டை விட்டு கிளம்ப வாய்ப்பு இருக்கு. அம்மா..? ப்ச்.. வாய்ப்பு இல்ல. ஹேய், பேசாம அம்மாவை நம்ம கூடவே வெச்சுக்கலாமா?"
"கலாம் கலாம்.. கீக்கீ!"
"ஹாஹா.. நாமளே இங்கே விருந்தாளி. இதுல அம்மாவை எப்படி.. ஆனா பேனர்ஜி, நீ வேணா பார், சொந்தமா சம்பாதிக்க ஆரம்பிச்ச அடுத்த நிமிஷம் அம்மாவை அந்த நரகத்துல இருந்து காப்பாத்திக் கூட்டிட்டு வந்துவேன். ப்ராமிஸ்."
கண்ணில் திரண்ட பனித்திரையை அவள் துடைக்க, இந்திராணி அவள் தோளில் ஆதுரமாகத் தொட்டு அழுத்தமளித்தார்.
"தாரா... ரோனோ மாத். கேதே ஆஷேன்."
"ப்ச்.. பசிக்கல ராணிக்கா. நீங்க சாப்டுட்டு படுங்க."
வற்புறுத்தாமல் அவரும் சென்றுவிட, தாரா பேனர்ஜியின் கூண்டுக்குப் போர்வை போர்த்திவிட்டு தனது கட்டிலில் அமர்ந்தாள் கைகளை விரித்து சோம்பல் முறித்தவாறே.
கைபேசியை எடுத்தவள் ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு ராஜீவுக்கு அழைத்தாள்.
"ராஜீவ்.. ஃப்ளைட் ஏறிட்டாரா உங்க பாஸ்?"
"பாஸ் பயங்கர பாதுகாப்பா ஃப்ளைட் ஏறிட்டாரு.. இன்னும் ஒருமணி நேரத்துல டெல்லி; அடுத்த ஒன்பது மணி நேரத்துல லண்டன். இறங்கின அடுத்த செகண்ட் உங்களுக்கு தகவல் சொல்றேன், ஓகேவா? இப்ப தூங்குங்க மேடம். குட்நைட்."
"தேங்க்ஸ் ராஜீவ். குட்நைட்."
சிரிப்புடன் அழைப்பை வைத்தவள், சிரிப்பு மாறாமல் கட்டிலில் சாய்ந்தாள்.
****
லண்டன் வந்து இறங்கிய பின்னரும் கூட மனது ஏனோ கல்கத்தாவையே சுற்றிக் கொண்டிருக்க, ஆதித் நெற்றியைத் தேய்த்தான் குழப்பத்துடன்.
ராஜீவுக்கு அழைத்து அலுவலக நிர்வாகக் கட்டளைகளை அவன் அடுக்க, அவன் அழைப்பை வைக்கும் நேரத்தில் தாரா கேட்டதாக சொல்ல, மனதின் தடுமாற்றத்திற்குக் காரணம் புரிந்தது ஆதித்துக்கு.
'அவளை அப்படியே விட்டுவிட்டு அவசரமாகக் கிளம்பி வந்துவிட்டோமென்ற நினைப்பு தான்... அதுதான் மனதை அரிக்கிறது..'
அவளை அழைக்கலாமா என ஒருகணம் யோசித்தவன், விடுமுறை தினத்தில் எதற்காக அதிகாலை அழைத்துத் தொந்தரவு செய்ய வேண்டும் என்றெண்ணிக் கைபேசியை சட்டைப்பையில் வைத்தான்.
வைத்த மறுகணம் அழைப்புமணி ஒலித்தது. கைபேசித் திரை தாராவின் பெயரைக் காட்டியது.
"ஹலோ, தாரா?"
"ஹான்.. பத்திரமா இறங்கீட்டீங்களா? அதைக் கேட்க தான் கூப்பிட்டேன். ராஜீவ் ஃபோன் பண்றேன்னு சொன்னார், ஆனா கூப்பிடல; அதான்.."
"சேஃபா இறங்கிட்டேன். வேலையை முடிச்சிட்டு நாளைக்கே கிளம்பிடுவேன். நீ லீவை என்ஜாய் பண்ணு, பைய்."
"ஹ்ம், பைய். வைக்கிறேன்."
முதல் முறையாக அலைபேசியில் அவள் குரல். முதல் தூரதேசத்து சம்பாஷணை. ஒன்றரை நிமிடமே என்றாலும் அவளது கரிசனம் பிடித்திருந்தது அவனுக்கு. தான் மட்டும் ஆறுதல் தராமல் அவளை விட்டுவிட்டு வந்தது இப்போது இன்னும் உறுத்தியது.
ஒரு நெடுமூச்சுடன் தன் வழியில் விரைந்தான் அவன்.
***
ராஜீவ் ஆதித்தின் கட்டளைகளை நிறைவேற்றச் சென்றுவிட, ஷீத்தலும் ஏதோ அலுவல் இருப்பதாகக் கைவிரித்துவிட, தாரா தனியே கிளம்பினாள் கல்கத்தாவைச் சுற்ற.
பாரா பஜார் எனப்படும் சந்தைப் பகுதிக்குச் சென்றவள், அங்கிருந்த விதவிதமான கடைகளை ரசித்துப் பார்வையிட்டவாறே தெருவோரமாய் நடந்தாள். கைத்தறிகள், கண்ணாடி வேலைகள், அரக்கு வளையல்கள், வண்ண வண்ண மலைகளாகக் குவித்து வைத்திருந்த மசாலாப் பொடிகள், பூக்குவியல்கள், மரப்பாச்சி பொம்மைகள் என, ஒரு மனிதனின் தேவைகள் அனைத்தும் அங்கே பொருட்களாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்க, வாய்பிளந்து அவற்றைப் பார்த்தாள் தாரா.
சிற்றுண்டிகளுக்கும் பஞ்சமில்லாமல் சில நூறு கடைகள் அங்கங்கே முளைத்திருக்க, சிற்சில நட்சத்திர விடுதிகளும் கூட இருந்தன பிரதான சாலையில். தெருமுனையில் தென்பட்ட ஒரு புத்தகக் கடையில் நுழைந்தவள் அங்கிருந்த அலமாரிகளை ஆராயத் தொடங்கிட, "கி கூன்ம்சேன்?" (என்ன தேடறீங்க?) என்றபடி ஒரு இளம்பெண் அருகில் வர, தாரா புன்னகைத்துத் தலையசைத்தாள்.
"ஷுது தேக்சி." (சும்மா பாக்குறேன்)
"உங்களைப் பார்த்தா, கதை புத்தகம் படிக்கற ஆளா தெரியலையே..?"
"ஹிஹி.. காமிக்ஸ் படிக்கிற ஆள் நான்."
"அப்படியா?"
"இங்கே பழைய டிங்கிள் காமிக்ஸ் கிடைக்குமா? எங்க ஸ்கூல் லைப்ரரில அதுதான் நிறைய இருக்கும்."
"எல்லாமே இருக்கு! டிங்கிள் முதல் பிரசுரமே இந்த கடையில தான் விற்கத் தொடங்கிச்சு! இப்போ தனி செக்ஷனே வெச்சிருக்கோம்.. வாங்க."
வியப்பாகக் கேட்டுக்கொண்டு தாரா பின்தொடர்ந்து செல்ல, பல வரிசை அலமாரிகளைத் தாண்டி, கடையின் மற்றொரு பக்கம் இருந்த காமிக்ஸ் பகுதிக்கு அழைத்துச்சென்றாள் அப்பெண்.
"என் வாழ்க்கையிலேயே நான் பார்த்த பெரிய புக் ஸ்டோர் இதுதான். லட்சக்கணக்குல புக்ஸ் இருக்கும் போல?"
"நீங்க பார்த்ததுலயே மிகப் பழமையான கடையும் இதுவா தான் இருக்கும். 1920ல மவுண்ட்பேட்டன் பிரபு திறந்து வெச்ச கடை இது, தெரியுமா?"
அப்போதுதான் கடையின் உயர்ந்த மேற்கூரையில் தொங்கிய பதாகையைப் படித்தாள் தாரா.
"ஆக்ஸ்ஃபோர்ட் புக் ஸ்டோர்- தொடக்கம் 1920. அட, ஆமா!"
அப்பெண் தாராவின் இயல்பான ஆச்சரியத்தைக் கண்டு சிரித்தாள்.
"நீங்க வெளியூர் தானே?"
"ஹான்.. கோயமுத்தூர்ல இருந்து வர்றேன். கோவை தெரியுமா? தமிழ்நாட்டுல இருக்க ஊரு.."
"ஹிஹி.. சாரி.. சென்னை மட்டும் தெரியும்.."
பேசிக்கொண்டிருந்த வேளையில் அப்பெண்ணை யாரோ வாடிக்கையாளர் அழைக்க, அவள் சென்றுவிட்டாள். தாரா இரண்டொரு சித்திரக் கதைபுத்தகங்களை புரட்டிப் பார்த்துவிட்டு, தன்னுவுக்கென சிலவற்றை வாங்கிக்கொண்டாள்.
நெகிழி இல்லாது முழுக்க முழுக்கக் காகித உறைகளும் துணிப் பைகளுமாய் பயன்படுத்தி புத்தகங்களை அவர்கள் விற்க, பையில் இருந்த அழகிய ஓவியங்களையும் வாசகத்தையும் ரசித்துப் பாராட்டிவிட்டு, நன்றியும் கூறிவிட்டு வெளியேறினாள்.
கடையை விட்டுத் தெருவில் இறங்கிய நேரம், இரண்டொரு அடிகள் வைத்தவுடன் அவளருகே அயல்நாட்டு நிறுவன மகிழுந்து ஒன்று வந்து உரசி நின்றது. பதறி அவள் விலக, கண்ணாடியை இறக்கிவிட்டு, "ஹாய் தாரா" எனப் புன்னகைத்தாள் மோனல்.
*********
வாசக அன்பர்களுக்கு வணக்கம்.
செஞ்ச ப்ராமிஸ் எனக்கும் ஞாபகம் இருக்கு தான். படிப்பு முடிஞ்சதும் முற்றுப்பெறாக கதைகள் முடிப்பதாக சொல்லியிருந்தேன். ஆனா எங்க வீட்ல என்னை ஏமாத்திட்டாங்க! ஆமா, இத்தோட விட்ருவாங்கனு நினைச்சேன்.. ஆனா மறுபடி பிஜி படிக்க சொல்லிட்டாங்க. மருத்துவ முதுகலை படிப்புக்கும் நீட் தேர்வு இருப்பதால், மறுபடி மொத புரோட்டால இருந்து ஆரம்பிச்சாச்சு.
ஒரு பக்கம் அனாடமி, ஆப்ஸ்டெட்ரிக்ஸ் படிச்சிட்டே, இன்னொரு பக்கம் ஆங்கிலம் தமிழ்னு மாறி மாறி கதை எழுதிட்டு, கூடவே வேலையும் பார்த்துட்டு, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா...
சரி, அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தாராவின் பாணியில், "ஹேப்பி அண்ட் சேஃப் தீபாவளி!!"
அன்பு,
மது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro