42
தேவியை உறுதியாகப் பார்த்தாள் தாரா.
"நான் சொன்னாத்தானே அப்பா விடமாட்டார்? அவரோட முதலாளியம்மா பேரன் சொன்னா விடுவாருல்ல?"
தேவி மிடறுவிழுங்கினார்.
"எதுக்கு.. தேவையில்லாம.. இந்த விஷயத்துக்கெல்லாம் மாப்பிள்ளையை தொந்தரவு பண்ணிக்கிட்டு..."
தன்னு அவசரமாக, "தாரா தாரா! அம்மா சொல்றதை கேட்காத, நீ அந்த சிடுமூஞ்சி கிட்ட சொல்லி அப்பாவை மிரட்ட சொல்லு! அவங்க வீட்டுக்குப் போனபோது அப்பாவை எப்படி மிரளவைச்சான்!" என்க, தேவி அவனை முறைத்தார்.
"என்ன பழக்கம் இது? மாமாவைப் போயி சிடுமூஞ்சி அதுயிதுன்னு!"
"அவன் அப்பாவையே ஹிட்லர்னு தான் கூப்பிடுவான்.. நீங்க வேற!" எனச் சிரித்தாள் தாரா. கூண்டில் இருந்த பேனர்ஜியும் கீக்கீ எனக் கத்தி ஆமோதித்தது.
கொல்கத்தா கிளம்பும் தினத்தில் பர்வதம்மாள் வீட்டில் அப்பாவை எப்படிப் போட்டு ஆதித் ஆட்டிவைத்தான் என்பதை நினைத்தபோது அவளுக்குமே சிரிப்பு அதீதமாக வந்தது.
ஆதித் மீது கொஞ்சம் நம்பிக்கையும் இருந்ததால் தாரா உறுதியாக, "அம்மா, நீங்களும் தன்னுவும் அடுத்த மாசம் கொல்கத்தாவுல இருப்பீங்க. இங்க ரொம்ப குளிரும், ஸ்வெட்டர் எடுத்து வச்சுக்கங்க," என்றுவிட்டு அழைப்பை வைக்க, பேனர்ஜி கூண்டுக்குள் சிறகடித்துப் படபடத்தது.
"ஹூம்.. எனக்குமே டென்ஷனா தான் இருக்குடா பேனர்ஜி.. பாத்துக்கலாம்!"
"கீக்கீ!"
"நான் லஞ்ச் சாப்பிடப் போறேன்.. உனக்கு என்ன தரட்டும் நான்? ஆப்பிள் தரட்டுமா? இல்லை பருப்பு சாதம் தரட்டுமா?"
"காபார்! காபார்! கீக்கீ!!"
தாரா சிரித்தபடியே சென்று அதற்குப் பழத்துண்டுகள் வைத்துவிட்டு இந்திராணியைத் தேடி சமையலறைக்குச் சென்றாள்.
"ராணிக்கா.. இன்னிக்கு ஸ்பெஷல் என்ன?"
"ஸ்பெஷல் எல்லாம் ஒண்ணுமில்லை.. சாதாரண சாப்பாடுதான் தாரா"
"ஆனாலுமே எனக்கது ஸ்பெஷல் தானே! கொல்கத்தா சாப்பாடு எனக்குப் புதுசுல்ல?"
அவர் புன்சிரிப்புடன் அவளை அமரவைத்துப் பரிமாறினார். அவள் கேட்காமலேயே, "முதலாளி ஐயா சாப்பிட்டாச்சான்னு கேட்காத, அவர் ஆபிஸ் கேண்ட்டீன்ல சாப்ட்டு தான் வந்தாரு.." என்க, தாரா தலையைக் குனிந்துகொண்டாள் அசட்டுத்தனமாக. ஏனோ கொஞ்சம் சிரிப்பு வந்தது. அவன் சாப்பிட்டுவிட்டான் எனக் கேட்டபோது நிறைவாக இருந்தது. ஆனாலும் தன்னோடு சேர்ந்து உணவருந்தியிருக்கலாம் என்றும் மனதோரத்தில் தோன்றியது.
"சரி.. டின்னர் ஒண்ணா சாப்பிடலாம்.. இப்ப என்ன?" எனத் தனக்குள்ளாரே சொல்லிக்கொண்டாள் அவள். ராணி சிரித்தார் நமட்டுச் சிரிப்பாக.
தட்டில் இருந்த உருளைக்கிழங்கு வறுவலை நாவில் வைத்தபோது சட்டென கசப்பு சுவை தாக்க, தாரா திகைத்தாள். "என்னதிது?"
"நீம் பத்தா ஆலுபாஜா. அதாவது வேப்பிலை போட்ட உருளைக் கறி. உடம்புக்கு நல்லது."
"கறியில கறிவேப்பிலை தானே போடுவாங்க.. நீங்க என்ன வேப்பிலை எல்லாமா போடுவீங்க!?"
அவரோ சிரித்தார்.
"பெங்காலிகளுக்கு, இனிப்பு எவ்ளோ இஷ்டமோ அதேயளவு கசப்பும் புடிக்கும். வாழ்க்கைல பேலன்ஸ் வேணும்ல? அதான்.. பெங்காலி சமையல்ல கசப்புக் கீரைகளும், வேப்பங் கொழுந்தும், பாகற்காயும் நிறைய இருக்கும்."
"ஆனா.."
"ஆதித்துக்கு இதெல்லாம் ரொம்பப் புடிக்கும், தெரியுமா?"
உதட்டைச் சுழித்துவிட்டு அமைதியாக உணவருந்தத் தொடங்கினாள் அவளும்.
***
அந்தி சாயும்வரை தோட்டத்தில் உலவிவிட்டு, பின் தன்னறையில் வந்து புத்தகங்களுடன் அமர்ந்தபோது, தன்னுவையும் அம்மாவையும் பற்றியே அவள் சிந்தித்துக் கொண்டிருந்ததால், "ஓய்! ஆள் வர்றதுகூடத் தெரியாமல் என்ன யோசனை?" எனக்கேட்டவாறு வந்த ஷீத்தலை சில நொடிகள் கழித்தே கவனித்து நிமிர்ந்தாள்.
"ஷீத்து!!" என்றபடி அவளை வாரியணைத்துக்கொண்டாள் தாரா.
"நாலு நாள் நான் ஊர்ல இல்லைன்னா, இங்க என்னென்னவோ நடந்திருக்கே! ராஜீவ் சொன்னான்... நம்மாளை நல்லா லெஃப்ட் ரைட் வாங்கிட்டயாமே?! சியர்ஸ் டூ யூ தாரா!"
தாரா லேசாக சிரித்தாள். எனினும் சோர்வாக, "ஓவர்-ரியாக்ட் பண்ணிட்டேன்.. அவர் சாப்பிடாம கொள்ளாம--" எனத் தொடங்க, ஷீத்தலோ இடையிட்டு மறுப்பாக உச்சுக்கொட்டினாள்.
"Never apologize for showing your feelings. நீ சொல்லாம உன் மனசுல இருக்கறது எப்படி அவருக்கு தெரியும்? எப்படி புரிஞ்சுப்பீங்க ஒருத்தரையொருத்தர்? இப்ப பேசினதால தானே பிரச்சனை சால்வ் ஆச்சு? அதான், எப்பவும் மனசுல இருக்கறத சொன்னதுக்கு ஸாரி கேட்காத; குற்றவுணர்ச்சி வைச்சுக்காத."
தாரா லேசாக வியந்தாள்; தலையசைத்தாள்.
"சரி, இப்ப எல்லாம் ஓகே தான? ஏன் உம்முனு இருக்க?"
"இல்ல.. வீட்டை நினைச்சு.."
"அடடடடடா.. உனக்குக் கவலைப்பட காரணம்தான் வேணுமா? கொல்கத்தா வந்தும் குடும்பத்த நெனச்சு இப்படி சோகமாகவே இருக்கணுமா?"
ஷீத்தலின் தோளில் சாய்ந்துகொண்டு விசும்பினாள் அவள். "தன்னுவைப் பாக்கணும்போல இருக்கு.."
"ப்ச்.. பார்த்துட்டு வர்றதுதானே-- ஓ.. தனியா வீட்டுக்குப் போக முடியாதோ.. சரி, ஆதித்தையும் கூட்டிட்டுப் போகலாம்ல?"
"ப்ச்.. அவரு இருக்கிற பிஸியில..."
"ஹூம்.. எவ்ளோ பிஸியா இருந்தாலும், பொண்டாட்டிக்காக வரக் கூடாதா?"
தாரா வெறுமையாக சிரித்தாள். கிளி பேனர்ஜி திடீரென, "ஆஷி, ஆஷி" எனக் கொஞ்சத் தொடங்க, இருவரும் திரும்பிப் பார்க்கையில் ராஜீவ் மற்றும் ஆதித் நின்றிருக்க, ஷீத்தல் நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
"வாங்க சார்.. உங்களைப் பத்தித்தான் பேச்சு!"
தாரா சட்டென்று நாண, ஆதித்தும் வியப்புடன், "கிளி என்ன பண்ணுதுன்னு பார்க்க வந்தேன்.. என்னைப் பத்தி என்ன விஷயம் பேசறீங்க?" என்றபடி உள்ளே வந்தான்.
"தாராவுக்கு அவங்க ஊருக்குப் போகணுமாம்."
தாரா அவசரமாக, "இ..இல்ல.. தன்னுவை பார்க்கணும்போல இருக்குன்னு சொன்னேன்.." என விளக்க, ஆதித் தாராவை பரிவாகப் பார்த்தான்.
ராஜீவ் இடையிட்டு, "அப்போ கோயமுத்தூருக்கு ரெண்டு டிக்கெட் போட்றவா? ஏர் இண்டியா ஓகே தானே பாஸ்?" என்க, தாரா மறுப்பாகத் தலையசைத்தாள்.
"அ.. அதாவது.. அம்மாவும் தன்னுவும்.. இங்க வந்தா நல்லா இருக்கும்ணு.. நினைக்கறேன்.. தன்னுவுக்கு ஸ்கூல்ல லீவு வருது.. அம்மாவும் இதுவரை எங்கயுமே டூர் போனதில்லை. ரெண்டுபேரும் இங்க வந்து கொஞ்ச நாள் இருந்தா.. எனக்கும் நல்லா இருக்கும். ஆனா, அப்பா நீங்க சொன்னா தான் விடுவார்.. அ.. அதான்.. உங்களுக்குத் தொந்தரவா இல்லைன்னா.."
ஆதித்தைப் பார்த்தபடி அவள் இழுக்க, ஷீத்தலும் ராஜீவும்கூட அவனை ஆர்வமாகப் பார்க்க, அவன் தாராவிடம் திரும்பினான்.
"இப்போவே பேசட்டா, இல்ல காலைல பேசட்டா?"
தாராவின் முகம் பிரகாசிக்க, வெளிச்சமாகச் சிரித்தாள் அவள்.
"அப்பா இப்ப வீட்டுக்கு வந்திருப்பார்.. இப்ப கால் பண்ணா புடிச்சிடலாம்!"
அவளது உற்சாகத்தைக் கண்டு மூவரும் சிரிக்க, ஆதித் தனது கைபேசியை எடுத்தான். ஷீத்தல் உடனே, "ஸ்பீக்கர்ல போடுங்களேன்.. அந்த டெரர் பார்ட்டியோட குரலை நாங்களும் கேட்கணும்ல?" என்க, ராஜீவும் ஆமோதித்துத் தலையசைத்தான். ஆதித்தோ தாராவை நேராகப் பார்த்தான், கண்ணில் கேள்வியுடன்.
அவளும் தலையசைக்க, ஸ்பீக்கர் ஃபோனில் தமிழகத்துக்கு அழைப்புப் போனது.
"ஹலோ! யார் பேசறது?"
கரகரக் குரலொன்று கறாராகக் கேட்க, தாரா அனிச்சையாகவே மிரள, ஷீத்தலும் ராஜீவும் முகம்சுழித்தனர்.
"நான் ஆதித் பேசறேன்."
இருகணங்கள் அமைதி தொடர்ந்தது.
'எந்த ஆதித்' எனக் கேட்டுவிடுவாரோ எனத் தாரா நினைக்க, அதற்குள் தெரிந்துகொண்ட பணிவுடன் மரியாதை நிரம்பிய தொனியில், "சொல்லுங்க மாப்பிள்ளை... எப்படி இருக்கீங்க? இந்த நேரத்துல கூப்பிட்டிருக்கீங்களே.. எதாச்சும் முக்கியமான விஷயமுங்களா? முதலாளியம்மாவை காலைல தான் பார்த்தேன்.. எதுவும் சொல்லலைங்களே.." என சீனிவாசன் பேசத் தொடங்க, ஷீத்தல் நாடகத்தனமாகக் கண்ணைச் சுழற்ற, ராஜீவ் வாய்பொத்திச் சிரித்தான்.
ஆதித் இருவரையும் கண்ணால் முறைத்தபடி, "நான் தனுஷைப் பத்திப் பேசறதுக்காக கூப்பிட்டேன். அவனுக்கு ஸ்கூல் லீவு வருதாமே.." என ஆரம்பித்தான்.
"ஆமாங்க மாப்பிள்ளை. அதான் நம்ம ஃபேக்டரியிலேயே வேலை கத்துக்கட்டும்னு சேரச் சொல்லியிருக்கேன். நல்லா உழைச்சா தானுங்க உங்களைப் போல பெரிய ஆளா வர முடியும்?"
"உண்மைதான். ஆனா டென்த் படிக்கற பையனுக்கு அவ்ளோ நிறைய பொறுப்பு தேவையா என்ன?"
"பின்ன இல்லீங்களா? அவன்தானே எனக்கு அடுத்ததா குடும்பத்தை பார்த்துக்கணும்?"
தாரா கைகளை முறுக்கினாள் கோபத்தில். ஆதித் கவனித்து கண்களால் அவளை சமாதானப்படுத்தினான்.
"சரி, அப்ப தனுஷ் கொல்கத்தா வந்து என்னோட ஃபேக்டரியில ஒரு மாசம் இருக்கட்டும். கோயமுத்தூரை விட, இங்க கத்துக்க நிறைய இருக்கு. சீக்கிரமாகவே நீங்க ஆசைப்படற மாதிரி பெரிய ஆளா வரட்டும்"
"ஹஹ.. அவனெல்லாம் கல்கத்தா வர மாட்டானுங்க மாப்பிள்ளை.. இங்கிருக்கற கரியபாளையத்துக்கே அவங்கம்மாவை விட்டுட்டு வரமாட்டான்.. கல்கத்தா வரைக்கும்னா.."
"பிரச்சினையில்லை. அவங்க அம்மாவும் வரட்டும்."
"அ.. அது வந்து.. அதில்ல மாப்பிள்ளை.. உங்களுக்கு எதுக்கு வீணா சிரமம்.. நான் அவனை இங்கயே--"
"எனக்கு ஒரு சிரமமும் இல்ல. நான் ஃப்ளைட் டிக்கெட் ஏற்பாடு பண்ண சொல்றேன்.. எக்ஸாம் முடிஞ்சதுமே ரெண்டு பேரும் கிளம்பட்டும்."
அவர் வாயடைத்துப் போனதை அலைபேசி வழியாகவே உணர முடிந்தது அனைவருக்கும். ஷீத்தலும் ராஜீவும் வெடிச்சிரிப்பின் விளிம்பில் இருக்க, தாரா நகத்தைக் கடித்தபடி காத்திருக்க, இயலாமையின் கனத்தினால் எழும்பாத குரலில், "சரிங்க மாப்பிள்ளை" என சீனிவாசனின் சம்மதம் வர, சத்தமின்றி ஆர்ப்பரித்தனர் ஷீத்தலும் ராஜீவும்.
ஆதித்தின் முகத்தில் வெற்றிப் புன்னகை அடிக்கோடிட, தாராவிடம் நிம்மதிப் பெருமூச்சொன்று கிளம்ப, அவரிடம் பேசி அழைப்பைத் துண்டித்த மறுகணமே ஷீத்தலைக் கட்டியணைத்துக்கொண்டு தாரா கொண்டாடினாள் உற்சாகமாய். அம்மகிழ்ச்சியில் ராஜீவும் இணைந்துகொள்ள, அவளது சிரிப்பை திருப்தியோடு பார்த்தபடி நின்றான் ஆதித்.
*****************
சுமார் ஆறு மாசம் கழிச்சு அப்டேட் குடுத்துருக்கேன்.. வரவர விடாமுயற்சி டீம் மாதிரி ஆகிட்டேனா நானு... ஹிஹி..
வாசகர்களுக்கு வணக்கம். உங்க டாக்டர் இப்ப நிஜமாவே டாக்டராகிட்ட காரணத்தால, திருச்சி அரசு மருத்துவமனைக்காகத் தன் உடல், பொருள், ஆவி எல்லாம் அர்ப்பணித்து வேலை பார்க்க வேண்டியதா போயிடுச்சு. கிடைக்கற கொஞ்ச நேரத்துல சாப்பிடவும் தூங்கவுமே சரியா போயிடுது.. எனவே, இப்டி ஆடிக்கும் அமாவாசைக்கும் ஒருதடவை தான் அப்டேட் வரும். உங்கள் அனைவரின் மன உளைச்சலுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இத்தகைய இடற்பாட்டிலும் என்னோடு தோள்நிற்கும் என் அன்பு வாசக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். என்னை வாழவைக்கும் தெய்வங்கள் நீங்கள்தாம்!
அன்பு, மது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro