41
"சேர்ந்து சாப்பிடலாமா?"
வார்த்தையின்றி அவளை ஒருகணம் பார்த்தவன், மறுகணம் நெருங்கிவந்து அணைத்துக்கொண்டான் அவளை.
தாரா திகைத்தாலும், அவளுக்குமே அந்த அணைப்பும் ஆதரவும் தேவைப்பட, எதிர்ப்பின்றி நின்றாள் அவளும்.
"எனக்காக சாப்பிடாம தூங்காம யாரும் இதுவரை வெய்ட் பண்ணினதில்லை"
அவள் காதருகே தாழ்ந்த குரலில் தழுதழுத்தான் அவன்.
அவள் தளர்வான புன்னகையோடு, "எனக்காகவும் இதுவரை சாப்பிடாம யாரும் நாலு மணிநேரம் ட்ராவல் பண்ணி வந்ததில்லை" என்க, அவன் சிரித்தான்.
அணைப்பைத் தளர்த்திவிட்டு பார்வையைத் தவிர்த்து தூரமாய்ப் பார்த்தான் அவன்.
"ஐம் ரியலி ஸாரி. அன்னிக்கு மோனல் பேசினப்பவே நான் பதில் சொல்லியிருக்கணும். பிரியப் போற உறவுதான் நம்மோடது. ஆனா என்னிக்கோ ஒருநாள் நடக்கப்போறதை நினைச்சுக்கிட்டு முட்டாள் மாதிரி உன்கிட்ட நான் நடந்துக்கிட்டேன்.
சத்தியமா சொல்றேன் தாரா.. உன்னை கஷ்டப்படுத்தணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்லை. உன்னை சந்திச்சப்போ, 'கல்யாணம் வேணாம்'னு சொன்னியே, அன்னிக்கே உன்மேல மரியாதை வந்தது எனக்கு. உன் மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கையை நீ வாழணும்னு தான் நானும் நினைச்சேன். ஆனா விதிவசமா நானே அதுக்கொரு தடையா ஆகிட்டேன்.."
அவள் மறுப்பாகத் தலையசைத்தாள்.
"நானும் நம்ம நிலமையை மறந்துட்டு உங்கள்ட்ட எதையெதையோ எதிர்பார்த்தது தப்பு. அதுக்கு ஸாரி. இருக்கற வரை நல்லபடியா இருப்போம். பிரிஞ்சாலும் சந்தோஷமா பிரிவோம். நாளைக்கு என்ன நடக்கும்னு யோசிக்க வேணாம். இன்னிக்கு வாழ்வோம்."
ஆமோதித்துத் தலையாட்டினான் ஆதித்தும்.
"தேங்க்ஸ் தாரா."
உணவு மேசைக்கு இருவரும் செல்ல, இரு தட்டில் உணவை வைத்து அவன்புறம் ஒன்றை நீட்டினாள்.
"சமாதானம்?"
அவன் சிரித்தான். "சமாதானம்."
போஹா எனப்படும் அவல் உப்புமாவும், அதனுடன் காய்கறி மசாலாவும் ஆதித்தின் பசியைத் தீர்த்துவைக்க, சாப்பிட்டுக்கொண்டே அவளிடம், "கோபம் எப்டி போனது? ராஜீவ் எதாச்சும் சொன்னானா?" என வினவினான்.
தாரா இல்லையெனத் தலையாட்டிவிட்டு, "ஹால்ல காபி டேபிள் மேல உங்க நோட்பேடை விட்டுட்டுப் போயிட்டீங்க.." என்றாள் தட்டிலிருந்து கண்ணெடுக்காமல்.
ஆதித்துக்கு லேசாகப் புரையேறியது.
"அ..அது.. வந்து.."
"புரியுது.. நீங்களும் பிரச்சனையை பேசித் தீர்க்கத் தான் அவசரமா கிளம்பி வந்தீங்க. நான்தான் அது தெரியாம கண்டபடி கத்திட்டேன். என் நிலமை அப்படி.. உங்களுக்கே புரியுதுல்ல?"
ஆதித் அமைதியாகத் தலையசைக்க, அவளே தொடர்ந்தாள்.
"நான் அப்டி யார்கிட்டவும் சண்டை போட்டதே கிடையாது. போடவும் பிடிக்காது. ஏன்னா எங்க வீடே எப்பவும் சண்டை சத்தத்தோட தான் இருக்கும். அப்பா கத்துறதை கேட்டாலே காதெல்லாம் ஈயத்தை காய்ச்சி ஊத்தின மாதிரி இருக்கும். தன்னுவும் நானும் காதை அடைச்சிட்டு ரூம்ல இருப்போம்.
ஆனா நானே இன்னிக்கு கத்திட்டேன்னு நினைக்கறப்ப வருத்தமா இருக்கு. அம்மாகிட்ட பேசலாம்னு ஃபோன் பண்ணேன்.. ஆனா எதுவும் சொல்லல. வீட்டுக்கு வரவான்னு கேட்டேன்; கூப்பிட்டுக்க முடியாதுன்னு சொல்லி அழறாங்க. அப்பதான் புரிஞ்சது, எனக்கு வேற போக்கிடம் கிடையாதுன்னு. விரும்பினாலும் விரும்பலைன்னாலும், இதுதான் இனி என் வீடு."
"தாரா, நாளைக்கு நடக்கறதை பேசவேணான்னு சொன்ன, இருந்தாலும், இதை ஞாபகம் வச்சிக்கோ: எத்தனை வருஷம் ஆனாலும், எங்க போனாலும், நீ நினைச்சா திரும்ப வர இந்த வீட்டோட வாசல் எப்பவும் உனக்காகத் திறந்திருக்கும். நம்ம ரிலேஷன்ஷிப்பெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது, உனக்கு இந்த வீட்ல இருக்கற உரிமைக்கு."
அவள் சன்னமாக சிரித்தாள்.
"பெரிய மனசு உங்களுக்கு. தேங்க்ஸ். நீங்க செய்யற உதவிக்கெல்லாம் முழுசா என்னால கைம்மாறு செய்ய முடியாட்டாலும், என்னால முடிஞ்சதை நிச்சயமா திரும்ப செய்வேன். ப்ராமிஸ்."
***
கல்லூரிக்கு வந்தபோது தாராவின் மனது சாந்தமடைந்திருந்தது. வீட்டில் மீண்டும் இயல்புநிலை திரும்பியிருந்தது முகத்திலும் தெரிந்தது.
அவளது தோழி ரோசியும் பார்த்துவிட்டு, "நேத்தெல்லாம் ஒருமாதிரி சோகமே உருவா இருந்த.. இன்னிக்கு முகம் ப்ரைட் ஆகிடுச்சே! என்ன சேதி? அபிமன்யூ ராய் என்ன சொல்றார்??" என்றாள்.
தாரா தோளைக் குலுக்கிவிட்டு முறுவலித்தாள்.
"அதெல்லாம் அப்படித்தான். அப்றம், அபிமன்யூ ராய் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். அவ்ளோதான்."
"உன் பெஸ்ட் ஃப்ரெண்டுக்கு என்னையும் கொஞ்சம் அறிமுகப்படுத்தினா தான் என்னவாம்?? நான் அவரோட பெரிய ஃபேன் தெரியுமா?"
"சரி, சரி, டைம் வரும்போது செய்யறேன் ரோசி. இப்ப க்ளாஸை கவனி!"
அன்று மதியம் மனுவை எதிர்பார்த்து நின்றவளுக்கு, அவனது குறுஞ்செய்தி மட்டும்தான் வந்தது. அவன் தன் புதிய கதையை ஒரு திரைப்பட வர்த்தக நிறுவனத்திடம் எடுத்துச்செல்லப் போவதாகவும், இரண்டு நாட்களுக்கு சந்திக்க முடியாதெனவும் எழுதியிருந்தான். கூடவே சோகமான இரண்டு பூனைகளின் படங்களும் இட்டிருந்தான்.
தாரா சோர்வாகப் புன்னகைத்தாள். பின் குறுஞ்செய்தியில் அவனுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, வீட்டுக்குக் கிளம்ப ஓட்டுநர் தாஸை வரச்சொன்னாள்.
வீட்டுக்கு வந்தபோது ஆதித் அவளுக்காகக் காத்திருந்ததைக் கண்டவும் கேள்வியாகப் புருவம் தூக்கியபடி உள்ளே சென்றாள்.
அவனோ கூடத்து மேசையை நோக்கிக் கைகாட்டினான்.
அங்கே பார்த்தால் பெரிய கூண்டொன்றில் சிறகடித்துக் கொண்டிருந்தது ஒரு பஞ்சவர்ணக் கிளி.
தாரா ஆச்சரியக் குரல்களோடு அதனருகே ஓடிச்செல்ல, ஆதித் புன்னகைத்தான்.
"உனக்கு சமமா நாள்பூரா பேசறதுக்கு, ஏதோ என்னால முடிஞ்சது"
கிளியையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தவள் நம்பாத பார்வையுடன், "நிஜமாவா?? எனக்காகவா??" என்றாள் குழந்தைபோன்ற உற்சாகத்துடன்.
ஆனால் மறுகணமே, "ஐயோ.. ஆனா இப்டி கூண்டுல அடைச்சு வைக்கறது பாவமாச்சே.." என சோர்ந்துவிட, ஆதித்தோ, "இந்த வகை கிளிகள் அழியத் தொடங்கியாச்சு. வெளியில விட்டா காக்கா, கழுகு, வல்லூறு எல்லாம் இதுங்களை சண்டைபோட்டு கொன்னுடும். அத்தோடு, காடுகள் இல்லாததால, இதுங்களுக்கு உணவும் சரியாக் கிடைக்காது. நீ அன்பா, பாதுகாப்பா வளர்த்தா, கொஞ்ச நாள்லயே கூண்டைத் திறந்து வீட்டுக்குள்ள சுதந்திரமா பறக்க விட்டுரலாம்" என விளக்க, அவள் முகம் மீண்டும் பிரகாசமானது.
"தேங்க்ஸ். தேங்க்யூ ஸோ மச். நான் நிச்சயமா பத்திரமா பாத்துக்குவேன். என்னவெல்லாம் செய்யணுமோ, கரெக்டா செஞ்சு கவனிச்சுக்குவேன்."
"சரி, இதுக்கு என்ன பேரு வைக்கப்போற?"
அவள் தாடையில் ஒருவிரல் வைத்து யோசனை செய்வதுபோல் சிலகணங்கள் மேல்நோக்கிப் பார்த்துவிட்டு, "ம்ம்... நம்ம கிளிக்குப் பேரு பேனர்ஜி!" என அறிவித்தாள் உற்சாகமாக. அத்தோடு நில்லாமல், கிளியிடமும், "இனிமே, உன் பேர் பேனர்ஜி! என்ன பேனர்ஜி, பேரு புடிச்சிருக்கா ஒனக்கு?" என விழிவிரித்து ஆசையாக வினவினாள். அவளுக்கு ஆமோதிப்பதுபோல, கிளியும் துள்ளலோடு 'கீகீ' எனக் கத்தி சம்மதம் சொன்னது.
"கல்கத்தாவுல பேனர்ஜிங்கற பேரு ரொம்ப ஃபேமஸ்ல? 'ஆதவன்' படத்துல வடிவேலு சொல்லுவாரு, அவரும் கல்கத்தால இருப்பார். நான் முதல் முதல் கல்கத்தாவைப் பார்த்ததே அந்தப படத்துல தான். வடிவேலு காமெடி செம சூப்பரா இருக்கும் அதுல! ஜட்ஜைக் கொல்லப் போறேன்னு சொல்லிட்டு அலப்பறை பண்ணுவாங்க பாருங்க! ஸோ, நம்ம பேனர்ஜிக்கும் சீக்கரம் தமிழ் கத்துக்குடுத்து, அந்த காமெடியெல்லாம் சொல்லிக் குடுக்கணும்! என்ன பேனர்ஜி.. தமிழ் கத்துக்க ரெடியா?"
கிளி அவளை மிஞ்சிய ஆர்வத்தோடு கொஞ்சிக் குலவியது.
ஆதித் மந்தகாசப் புன்னகையோடு அனைத்தையும் கவனித்தவாறு நின்றான். கிளியைக் கண்டு குழந்தை போலவே அவள் மகிழ்ந்திட, அவள் சிரிப்பதைப் பார்ப்பதே அவனுக்கு நிறைவாக இருந்தது.
"எங்க பக்கத்து வீட்டு பத்மா மாமியோட பூனைக்குப் பேரு சீலு! தனு அதைப் போய் கொஞ்சப் போனானா, அது அவனை நல்லா பூரிவிட்டுருச்சு. அதுக்கப்பறம் அவன் அழுது அலறி, ஹாஸ்பிடல்ல போய் டிடி ஊசி எல்லாம் போட்டு.. ஒரே ரகளை. அதுலிருந்து பூனையைப் பார்த்தாலே தண்ணி ஊத்தறது, தொரத்துறதுன்னு ஒரே ரவுடிஸம் தான்.. அவனுக்கு கிளி ஒண்ணு வளர்க்கணும்னு ரொம்ப ஆசை. அப்பா தான் வேணாம்னு சொல்லிட்டார். அப்பறம் மொட்டை மாடில தானியம் போட்டு ஒரு காக்கா கூட்டத்தை வளர்த்துட்டு இருந்தான். பேனர்ஜியைப் பார்த்தா அவன்தான் பயங்கரமா சந்தோஷப்படுவான்.
தன்னுவுக்கு சொல்லணும்... நான் ஃபோன் பண்ணட்டா?"
"ம்ம். You have fun. கொஞ்சம் வொர்க் இருக்கு, நான் கிளம்பறேன்."
கையசைத்துவிட்டு அவன் வேகமாகப் புறப்பட, தோளைக் குலுக்கிவிட்டுக் கிளிக்கூண்டை நோக்கித் திரும்பிக் கொஞ்சத் தொடங்கினாள் தாரா.
"பேனர்ஜீ.. வாங்க, நம்ம ரூமுக்கு போலாம். தன்னுவை வீடியோ கால்ல பார்க்கலாம்!!"
தன்னுவை அழைத்து அவனுக்கு பேனர்ஜியை அறிமுகம் செய்து, இருவரும் பேனர்ஜியுடன் விளையாடிப் பொழுதைப் போக்கிவிட்டு, தன்னுவிடம் ஆசைதீர கதைகள் பேசிவிட்டு, அம்மாவிடமும் பேசினாள் தாரா.
நேற்றைய அழைப்பிலிருந்து நிலைக்கொள்ளாமல் இருந்த தேவியும் இன்று காணொளியில் மந்தகாசப் புன்னகையுடன் கொஞ்சிப் பேசும் தன் மகளைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
"நேத்து என்னவெல்லாமோ பேசி என்னை பயமுறுத்திட்டயே தாராக்குட்டி.. அம்மாவுக்கு நைட்டெல்லாம் தூக்கமே இல்ல, தெரியுமா?"
"ம்ம், ஏதோ கொஞ்சம் வீட்டு ஞாபகமா இருந்தேன்மா.. அதான்.. சாரிம்மா.."
தன்னு இடையில் புகுந்து, "தாரா.. நீயாச்சும் அங்க ஜாலியா இரு, ஹௌரா பிரிட்ஜும் பேனர்ஜியுமா. இங்க வந்து எங்களோட மாட்டிக்கணும்னு நினைக்காத" என்றிட, தேவியும் தாராவும் ஒருவரையொருவர் வேதனையாகப் பார்த்துக்கொண்டனர்.
ஏதோ யோசனை வந்து தாரா பிரகாசமாக நிமிர்ந்தாள்.
"தன்னு, உனக்கு அடுத்த மாசம் எக்ஸாம் முடிஞ்சு லீவு வருதே! கொல்கத்தாவுக்கு வந்துடறியா லீவுக்கு?"
தன்னுவும் உற்சாகமாக ஆமோதிக்க, தேவி அவசரமாக இருவரையும் அடக்கினார்.
"தாரா!? என்ன இது? அப்பாக்குத் தெரிஞ்சா என்ன ஆகறது? அப்பா இவனை மில்லுல வேலை பார்க்கச் சொல்லியிருக்கார் லீவுல! நடுவுல நீ அங்க வரச்சொன்னா அவர் எப்டி விடுவார்? டேய், உனக்குத்தான் தெரியுமேடா.. அப்பறமென்ன, ஆசையை தேவையில்லாம வளர்த்துக்கறது!?"
தாராவிற்குக் கோபம் வந்தது; தேவி மீதல்ல.
'நான் சொன்னாத் தானே விடமாட்டார்??'
***********
அடுத்த அத்தியாயம், மிகக்குறைந்த இடைவெளியில். எனக்கே ஆச்சரியம்தான். இந்த சண்டே லீவ் என்பதால் எழுத முடிந்தது. என்ஜாய்.
அப்பறம், வெளிநாட்டில் மருத்துவ படிப்பு படிப்பவர்கள் யாராவது உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் கூறவும்.
கதை இதுவரை எப்படி? ஓகேவா? இன்னும் முப்பது, நாப்பது அத்தியாயங்கள் எழுதத் திட்டம் உள்ளது. பொறுமையாக வாசிக்கும் அன்பு வாசகர்களுக்கு நன்றி.
அன்புடன், மது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro