34
"ஹாய் தாரா!"
"மனு??"
கல்லூரியெங்கும் 'வருகைதரும் வங்காள இயக்குனர் அபிமன்யூ ராய் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்' என பேனர்களும் சுவரொட்டிகளும் வைத்திருந்ததை தாரா அரைமனதாகக் கவனித்திருந்தாள். ஆனால் அது தனது பெங்காலி நண்பன் மனு தானென நம்பமுடியாமல் திகைத்து நின்றாள் அவள்.
அதற்குள் மனு அவளருகே வந்திருக்க, சுற்றியிருந்த மாணவர்கூட்டம் தங்களுக்குள் அதிசயமாகக் கிசுகிசுத்துக்கொள்ள, தாராவின் தோழி ரோசியும் இருவரையும் மாறிமாறிப் பார்த்துக் குழம்பிப்போக, தாரா அத்துணை பேரின் கவனமும் தன்மீது விழுவது பொறுக்காமல் விலகிச்செல்ல எத்தனிக்க, மனுவும் நடந்தான் அவளுடனே.
"ஹேய்.. என்னாச்சு!? அடுத்தமுறை பார்த்தா உன் செலவுல ஊர் சுத்தலாம்னு சொன்னியே? இப்ப என்ன கண்டுக்காமப் போற?"
வெள்ளந்தியான சிரிப்புடன் வெறும் குறும்போடு அவன் வினவ, முழு விவரம் புரியாமல் ரோஸியும் மற்றவர்களும் வாய்பிளக்க, தாரா கோபமாக நிமிர்ந்து பார்த்தாள்.
"நீங்க கல்கத்தாவுல ஃபேமஸான ஆள்னு ஏன் சொல்லல!?"
"நீ கூடத்தான் காலேஜ் ஸ்டூடண்ட்டுனு என்கிட்ட சொல்லல.. நாமதான் நிறைய பேசிக்கவே இல்லைல்ல.. அதான் தெரியல.. இப்ப உட்கார்ந்து பேசினா எல்லாமே தெரிஞ்சிக்கலாம், வா"
பிடிக்கவந்த கையை பிடிக்குமுன்னே உதறிவிட்டவள், தாழ்ந்த குரலில், "இங்க ஆடிட்டோரியம் முழுக்க உங்க ஃபேன்ஸ் இருக்காங்க. அவங்க முன்னாடி சண்டைபோட விரும்பல. ப்ளீஸ்.. கிளம்பிப் போங்க" என்றாள் இறுக்கமாக.
அவனோ பிடிவாதமாகக் கைகட்டி நின்றான்.
"நம்பர் குடு; நான் போறேன். இல்லேன்னா இங்கயேதான் நிப்பேன்"
அவனது பேச்சில் தாரா வாய்பிளக்க, சிலபல புகைப்படக் கலைஞர்கள் அவர்களைச் சுற்றிக் கூடவிட, தாரா அவசர அவசரமாகத் தன் கைபேசி எண்ணை அவன் நீட்டிய கைபேசித் திரையில் பதித்துத் தர, கண்ணடித்துவிட்டு அவன் நகர, பெரும் கூட்டமொன்று தாராவை சூழ்ந்துகொண்டு கேள்விமேல் கேள்வியாகக் கேட்கத் தொடங்க, தாரா அழாத குறையாக ரோசியைத் திரும்பிப் பார்த்தாள்.
அவள் புரிந்துகொண்டு பெங்காலியில் கத்திக் கூட்டத்தைக் கலையச் செய்தாள்.
"வேற வேலையில்லையா யாருக்கும்!? அவங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்.. உங்களுக்கு என்ன வந்தது? உம்! ஓடிப்போங்க க்ளாசுக்கு!"
"தேங்க்ஸ் ரோஸி..."
"ஹேய், அவங்களை ஓட்டுனது நான் கதை கேட்கறதுக்குத் தான்! உன்னை சாதாரண ஆள்னு தப்பா நினைச்சிட்டேனே நானு.. நீயென்னடான்னா அபிமன்யூ ராய் தானா வந்து உன்கிட்ட பேசற அளவுக்கு பயங்கரமான ஆளா இருக்க! சொல்லு, எப்படிப் பழக்கம்? லவ்வா, இல்லை டேட்டிங்கா?"
"நிஜமா அவர் அவ்ளோ பெரிய ஆள்னு தெரியாது எனக்கு... பெங்காலிப் படமெல்லாம் நான் பாக்கறதில்லை. சும்மா ரோட்ல மீட் பண்ணி பேசி--"
"ரோட்லயா? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? ப்ஸ்ட், சிதாரா.. இங்க வா.. உண்மைய சொல்லு, நான் ஒண்ணும் நினைச்சுக்க மாட்டேன்.."
தாரா கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு வைராக்கியமாக நின்றாள்.
"உண்மை அதுதான்; உன்னால நம்ப முடியாட்டாலும்."
வகுப்பறைக்கு நடந்தபோது காலையில் இருந்த குழப்பங்கள் மாறி இப்போது முற்றிலுமாகப் புதிய குழப்பங்கள் மனதை ஆக்கிரமித்திருந்தன.
'சாதாரணமாக சாலையில் சந்தித்த ஒருவன் என்றுதானே நினைத்திருந்தோம்... இதென்ன இன்று பிரமுகராக வந்து நின்கிறான்?? என்ன எதிர்பார்க்கிறான்?? எதற்காக நம்பர் வாங்கினான்??'
வகுப்பு முடிந்து தனது காருக்காக நிறுத்தத்தில் காத்திருந்தபோது, ஓட்டுநர் தாஸ் வரும்முன்னர் வேறொரு கார் வந்து அவளிடம் நின்றது. பின்சீட்டின் கண்ணாடியை இறக்கி மனு சிரித்தான்.
"நீ வாங்கித் தர்றதா சொன்ன லஞ்ச்! சாப்பிடப் போலாமா?"
தாரா திகைத்துப் பின்வாங்க, காரின் ஓட்டுநர் அவசரமாக, "கூட்டம் கூடறதுக்கு முன்னால கார்ல ஏறுங்க" என ஆங்கிலத்தில் கட்டளையிட, யோசிக்க மறந்து காரில் ஏறி அமர்ந்தாள் அவளும். அதன்பிறகே நாம் எதற்காக இந்த வண்டியில் ஏறவேண்டும் என மூளை கேள்வியெழுப்ப, மீண்டும் இறங்க முயல்வதற்குள் கார் வேகமெடுக்க, தார்சாலையையும் தன்னுடன் அமர்ந்திருந்த மனுவையும் மாறிமாறிப் பரிதாபகரமான பார்வை பார்த்தாள் அவள்.
"உன்னை நானென்ன கடத்திட்டா போறேன்? கண்ணுல எதுக்காக இவ்ளோ கலவரம்?"
துள்ளலான குரலில் அவன் கேலி செய்ய, அவளோ சிரிக்கவில்லை.
"சார்.. வண்டியை நிறுத்தறீங்களா?"
"நடு ட்ராபிக்ல வண்டியை நிறுத்தினா உங்க ஊர்ல என்ன பண்ணுவாங்களோ தெரியாது, ஆனா இங்க அரெஸ்ட் பண்ணிடுவாங்க. ஸோ.. பத்து நிமிஷம் பொறு தாரா"
"ப்ச்.. நான் வீட்டுக்குப் போகணும்!"
"தெரியும்.. இன்னும் ஒருமணி ஆகல. அதுக்குள்ள நானே உன்னை வீட்ல கொண்டுபோய் விட்டுடறேன்"
தாரா தவித்தாள்.
'வீட்டிற்கு இவனது காரில் சென்று இறங்கினால் வீட்டில் இருப்போர் என்ன நினைப்பர்? நான் என்னவென விளக்கம் சொல்வேன்!?'
அதற்குள் வண்டி சென்று ஒரு 'ட்ரைவ்-இன்' உணவகத்தில் நிற்க, ஓட்டுநர் இறங்கிச்சென்று அவர்களுக்காக உணவை ஆர்டர் செய்ய, தாரா நீளமாகப் பெருமூச்சு விட்டாள்.
"மனு..."
"எஸ்?"
"எதுக்காக என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க?"
"உண்மைய சொல்லட்டா? நான் ரொம்ப நாளைக்கப்பறம் மீட் பண்ணின கூலான பொண்ணு நீதான். உனக்கு என்னை யார்னே தெரியாதப்போ கூட, கனிவா பேசின; ஃப்ரெண்டா இருக்கலாம்னு சொன்ன. உன்னைமாதிரி ஜெனுயினான ஒருத்தியை நான் மீட் பண்ணதே இல்ல தாரா. மறுபடி உன்னை எப்போ சந்திப்பேனோன்னு ஒரு மாசமா காத்துட்டு இருந்தேன், தெரியுமா?"
"ஐயோ மனு.. ஆனா நான் அந்த மாதிரி ஆள் இல்லை. நான் கல்கத்தா வந்த சூழ்நிலையே வேற. இங்க இருக்கப் போறதும் கொஞ்ச நாள் தான். அதுவரை இருக்கற இடம் தெரியாம இருக்கறதுதான் என்னோட ப்ளான். அதுக்கு நடுவில இதெல்லாம் என் லைஃபுக்குத் தேவையில்லாதது.."
"நான் உன்கிட்ட எதையுமே கேட்கலையே..? பழைய மனுவாகவே என்னை நினைச்சிக்க, அதேமாதிரி சாதாரணமா பழகு, அதுபோதும். வேற எதையும் கேட்டு இந்த நல்ல நட்பை கெடுக்கற அளவுக்கு முட்டாள் இல்லை நான்."
தாரா தயக்கமாக அங்குமிங்கும் பார்த்தாள்.
மனுவே, "ஆமா.. யாருன்னே தெரியாதப்போ தைரியமா என்கூட வெளிய வந்த, இப்ப நாம சொசைட்டில ஒரு மரியாதையான ஆளா இருக்கறதை தெரிஞ்சிக்கிட்டு விலகிப் போற. உன் லாஜிக்கே எனக்குப் புரியல தாரா.." என்றிட, இப்போது தாரா திரும்பிப் பார்த்து முறைத்தாள்.
"எனக்கென்ன தெரியும், ரோட்ல மீட் பண்றவங்க எல்லாம் செலிப்ரிட்டியா இருப்பாங்கனு!? ஏதோ தமிழ்ப்படம் எல்லாம் பிடிக்கும்னு சொன்னியேன்னு நல்லா பேசினேன்.."
"ஹ்ம்ம்.. யோசிக்க வேணாமா? எதுக்காக கல்கத்தாவுல இருக்கற எவனோ ஒருத்தன் தமிழ் படங்களைப் பார்க்கறதா சொல்லுவான்? Unless he is into filmography?"
"ஓஹோ.. தமிழ் படங்களைப் பார்த்து காப்பி பண்ற ஆளா?"
மனு கோபப்படவில்லை; மாறாக வாய்விட்டுச் சிரித்தான்.
"நான் காப்பி டைரக்டரா ஒரிஜினலான்னு கண்டுபிடிக்க, என்கூட தியேட்டருக்கு வர்றியா? என் புதுப்படம் நேத்துதான் ரிலீஸாகியிருக்கு!"
"ஐயோ சாமி ஆளை விடு! நான் சொன்ன மாதிரி இந்த லஞ்ச் என் செலவுல நடக்கட்டும். மறுபடி என்னைத் தேடி வராதீங்க! அவ்ளோதான்!"
அவள் கறாராக பேச, அவனோ போலிக் கவலையுடன் உச்சுக்கொட்டினான்.
"அச்சோ.. நீங்க பே பண்ணுவீங்கனு தெரியாம என் ட்ரைவர் ஆல்ரெடி பணம் கட்டிட்டாரே.. என்ன பண்றது... நீ என்னை இன்னொரு லஞ்ச் டேட் அழைச்சிட்டுப் போகணும் போலவே தாரா.."
"என்ன விளையாடறீங்களா?"
"இதோ பாத்தியா? லஞ்ச் வந்துடுச்சு! சாப்பிடு, உன் கோவம் பசியால வந்துச்சான்னு பார்ப்போம். தாரா, உனக்குத் தெரியுமா? இந்த ட்ரைவ்-இன் பிரிட்டிஷ் காலத்துல ஆரம்பிச்சு இன்னிக்கு வரை ஒரே குடும்பத்தால நடத்தப்படுது. கல்கத்தாவில பெஸ்ட் உணவகங்கள்ல இதுவும் ஒண்ணு. அதுவும் இந்த மீன் குழம்புக்கு.. சொத்தையே எழுதி வெச்சாலும் குத்தமில்ல!"
அவன் தன்பாட்டில் மீன் குழம்பை ரசித்து ருசித்து உண்ணத் தொடங்க, சிறிதுநேரம் நன்றாக முறைத்துப் பார்த்தவள் பின் மீன்குழம்பின் நறுமணம் நாசியைத் துளைக்க, தோற்றுப்போய் அமைதியாக சாப்பிடத் தொடங்கினாள்.
கடுகு எண்ணெயில் பொறித்த மீனை மீண்டும் கடுகுக் கரைசலிலேயே குழம்பாக்கி அதை நீளமான பாசுமதி சாதத்துடன் அகன்ற தட்டில் ஆறேழு கூட்டுப் பொரியல்களுடன் வழங்கியிருக்க, மனு கூறியதைப் போலவே மீன் குழம்பிற்குத் தன் சொத்துக்களை எழுதி வைக்கத்தான் தோன்றியது தாராவிற்கும்.
'சொத்தா!? உனக்குனு இருக்கறது நாலு செட் சுடிதாரும் நாலைஞ்சு நோட்புக்கும் தான்! இதுல, மீன் குழம்புக்கு சொத்தை எழுதி வெப்பாங்களாம்!'
சட்டென சிரித்துப் புரையேற, மனு கரிசனமாக ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலைத் திறந்து தண்ணீர் தர, தாரா நன்றிகூறி அதைவாங்கி அருந்தினாள்.
"காரமா? இருக்காதே.. தமிழ்நாட்டுல இதைவிட அதிகமாகவே காரம் சாப்பிடுவீங்களே!?"
"காரமில்லை, வேற நினைப்பு."
"ஹ்ம்.. மீன் குழம்பு எப்படி?"
"நல்ல இருக்கு"
"இதை 'மசேர் ஜோல்'னு சொல்வாங்க இங்கே. கல்கத்தாவோட ஃபேமஸ் டிஷ் இது"
"ஓஹ்.."
"கொஞ்சம் நல்லாதான் பேசேன்! முதல் டைம் பார்த்தப்ப எவ்ளோ அழகா பேசின.. கல்கத்தாவை கண்கொட்டாம பார்த்து, வாய்மூடாம பேசினியே..? எவ்ளோ க்யூட்டா இருந்துச்சு தெரியுமா??"
தாராவிற்கு அனிச்சையாகவே சிரிப்பு வந்தது. மனு மீண்டும் ஏதோ கூற, தாரா சத்தமாகச் சிரித்தாள்.
அவள் சிரிப்பதைக் கண்கொட்டாமல் அவன் பார்த்துக்கொண்டிருக்க, தாரா தலையைத் தாழ்த்தினாள் அமைதியாகி.
"சரி, ஒருமணியாகப் போகுது, அதானே? வீட்டுக்குப் போகணுமா?"
"ம்ஹூம்.. காலேஜ்ல இறக்கி விட்டா போதும், நானே போயிக்குவேன்."
மனு அவளை ஆழமாகப் பார்த்தான். "ஸ்யூரா?"
"ம்ம். லஞ்ச்சுக்கு தேங்க்ஸ்."
கையலம்பிவிட்டு ஓட்டுநரிடம் ஏதோ கட்டளையிட, அவரும் தலையசைத்துவிட்டு வண்டியை கல்கத்தா பல்கலைக்கழக வாசலில் கொண்டுசென்று நிறுத்தினார்.
"டேக் கேர் தாரா. கீப் இன் டச்."
ஒப்புதலாகவும் இன்றி மறுப்பாகவும் இன்றி அவள் தலையசைக்க, மனு சிரிப்போடு கையசைத்துவிட்டுச் சென்றான். அவள் உள்ளூர குழப்பத்துடன் திரும்ப, அவர்களது காரில் ஓட்டுநர் தாஸின் அருகில் அமர்ந்திருந்து அவளைப் பார்த்திருந்தான் ஆதித் நிவேதன்.
**************
திருட்டுத்தனமாக வந்து ஒரு அத்தியாயம் எழுதின உங்கள் ஆத்தரை வாழ்த்தலாமே ப்ராண்ட்ஸ்??
ஹெஹ்ஹெஹ்ஹே!
காலைல தான் ஹாஸ்பிடல்ல அத்தனை திட்டு வாங்கிட்டு வந்தேன்... எக்ஸாம் ஒழுங்கா எழுதலைன்னு! இன்னும் மூணு மாசத்துல ஃபைனல் எக்ஸாம். இன்னும் பொறுப்பின்றித் திரிகிறேன்.. என்ன செய்வது!
ஆனா ஒண்ணு, கதை எழுதறதுல மட்டும் நம்மளை அடிச்சுக்க முடியாது! கன்டின்யுட்டி விட்டுப்போகாம கரெக்டா எழுதிட்டேனா? மனுவை யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு? (எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு! என்னா ஆளுய்யா!)
கதை பிடித்திருந்தால், வாக்களித்து நண்பர்களுக்கும் பகிரவும்! நன்றி!
அன்புடன்,
மது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro