Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

16

அதுதான் அவளது முதல் விமானப் பயணம் என்பதை அறிந்ததும் ஆதித் திகைத்தான்.
கையை உயர்த்தித் தலைக்குமேல் இருந்த பொத்தானை அவன் அழுத்த, விளக்கைத் தேய்த்தால் வரும் ஜீனியைப் போல, சிவப்புச் சீருடைப் பணிப்பெண் வந்தாள் அவனிடம்.
"யெஸ் ஸார்?"

"We need a sickness kit. She's a first timer."

அப்பெண் தாராவின் சீட்டின் பக்கவாட்டிலிருந்து ஒரு பையை எடுத்தாள். மஞ்சள் நிறத்தில் ஸ்ட்ரெஸ் பால் எனப்படும் பந்தும், காக்கி நிறத்தில் காகிதக் கவர்களும், மேலும் சில தைலங்களும் இருந்தன அதில்.

"குமட்டல் எதாவது வந்தா, இந்த ப்ரவுன் பேகை யூஸ் பண்ணனும். குமட்டல் போக தைலத்தை மோந்து பாக்கலாம். பயம் போறதுக்கு இந்த பாலை அழுத்தலாம்."

ஆங்கிலத்தில் பொறுமையாக விளக்கிவிட்டு அப்பெண் நகர, ஆதித்தும் அவளைக் கரிசனமாகப் பார்த்துக்கொண்டிருக்க, தாரா கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.

விமானம் வேகமெடுத்து, வானத்தில் சாய்வாக ஏற, சீட்டில் தொப்பெனப் பின்னால் சாய்ந்தாள் தாரா. ஆதித்தின் கையை விடுத்து பந்தை அழுத்தத் தொடங்கினாள். மூச்சுவிட மறந்து மருண்ட பார்வையுடன் ஜன்னல் வழியே ஓரக்கண்ணால் பார்த்தாள். கொஞ்ச கொஞ்சமாகக் கோயமுத்தூர் மொத்தமும் சின்னப் புள்ளியாகி மறைய, கண்ணுக்கு எதிரில் மேகங்கள் பஞ்சுப் பொதிகளாகத் தெரிய, விமானமும் ஆடாமல் அசங்காமல் செல்ல, பயம் மறைந்து பரவசமானாள் அவள்.

"வாவ்... மேகமெல்லாம் நமக்குப் பக்கத்துலயே இருக்கு! எவ்வளவு அழகா இருக்குல்ல? கீழ பாத்தா கோயமுத்தூரே தெரியல.. எவ்ளோ ஸ்பீடுல போகுது இந்தப் ப்ளேன்? அதோ தெரியுதே, அது மருதமலையா, இல்ல குன்னூரா?"

காக்கிக் கவரை மடித்து வைத்துவிட்டு, வாய்க்கொள்ளாப் புன்னகையோடு அவள் ஆர்வமாகக் கேள்விகளாகக் கேட்டுக்கொண்டு, ஜன்னலிலேயே முகத்தையும் ஒட்டிவைத்துக்கொண்டு, மொத்தக் காட்சிகளையும் விழுங்கிவிடப் பிரயத்தனம் செய்வதுபோல் கண்களை அகல விரித்து வேடிக்கை பார்த்துவந்தாள் தாரா.

ஆதியோ அவளது ஆர்வத்தில் துளிகூடக் காட்டாமல், பொத்தானை அழைத்துப் பணிப்பெண்ணிடம் குடிக்கத் தண்ணீரும் அன்றைய நாளிதழும் கேட்டான். சில நிமிடங்களில் கண்ணாடி க்ளாஸில் தண்ணீரும், ஒரு ட்ரேயில் நீளமாக நறுக்கிப் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலும் வர, கெட்ச்சப் என்னும் தக்காளிக் கூழ்மத்தை அதனுடன் தந்திருக்க, அவனோ அவற்றைத் திரும்பி அனுப்பிவிட்டான்.

தாரா அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு,
"எனக்கும் சிப்ஸ் கிடைக்குமா?" என்றாள் கண்கள் மின்ன.

சலிப்பாக மீண்டும் பணிப்பெண்ணை அழைக்கும் பொத்தானை அழுத்தினான் ஆதித்.

"யெஸ் சார்?"

"ஷீ நீட்ஸ் சம்திங்" என்று அவளைக் கைகாட்டினான் பணிப்பெண்ணிடம். பணிப்பெண் மாறாத புன்னகையோடு அவளிடம் திரும்ப, தாராவிற்கு ஏனோ பேச்சு வரவில்லை.

"அ.. அ... அது.."

"யெஸ் மேம்?"

"ஐ.. ஐ..." என அவள் தயங்கிக்கொண்டிருக்க, ஆதித் பொறுமையிழந்தான்.

"சிப்ஸ்"

ஒற்றை வார்த்தையில் அவன் ஆணையிட, "ஷ்யூர் சார்" என்றுவிட்டு அப்பணிப்பெண் சென்றாள்.

தாரா பலமாக மூச்சுவிட்டுவிட்டு, "தேங்க்ஸ்" என்றாள் அவனிடம். வழக்கம்போல அவன் கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தான்.

தாரா போரடித்துப் போய் தன்னெதிரே இருந்த டிவியைத் தொட்டாள். எடுத்ததுமே அதில் ஏதோ சண்டைக்காட்சி ஓடத்தொடங்க, அதை எப்படி மாற்றுவதெனத் தெரியாமல் அங்குமிங்கும் தொட்டு பொத்தான் தேடினாள். வேறு வழியின்றி ஆதியையே திரும்பிப் பார்க்க, அவனும் அதை எதிர்பார்த்ததைப் போல, பக்கவாட்டில் இருந்த சில பட்டன்களை இயக்கச் சொல்லிக்கொடுத்தான் அவளுக்கு.

அவளுக்கான உருளைக்கிழங்கு வறுவல் வந்ததும், சூர்யாவின் 'ஆதவன்' படத்தைத் திரையில் ஓடவிட்டு ரசித்தவாறே சிப்ஸைக் காலி செய்யத் தொடங்கினாள் அவள்.

"ஆதவன் படத்துல தான் முதல்முதலா கொல்கத்தாவைப் பார்த்தோம் நாங்க..! தன்னுவுக்கு அந்த 'ஜிகிர்தண்டா தூத்' காமெடி மனப்பாடமாத் தெரியும்!! அப்படியே நடிச்சுக் காட்டுவான் தெரியுமா?"
உற்சாகமாக அவனிடம் சொல்லிக்கொண்டே வந்தாள் அவன், அவன் கேட்கிறானா என்பதைக்கூடப் பார்க்காமல்.

உண்டு முடித்து, காகிதத்தில் கையையும் துடைத்துக்கொண்டு, மீண்டும் பணிப்பெண்ணை அழைக்கும் பொத்தானை அழுத்தினாள் அவள்.

ஆதித் கேள்வியாகப் பார்க்க, "ஜூஸ்.. வேணும்.." என அசட்டுச் சிரிப்பாக இழுத்தாள் அவள்.

அவன் பேசாமல் திரும்பிக்கொண்டான். பணிப்பெண் வந்து "யெஸ் மேம்?" என்றிட, தாரா தைரியமாக, "Can I get a juice?" என்று கேட்டுவிட்டாள்.

அப்பெண் சிரிப்புடனே சென்று அன்னாசிப் பழச்சாறை எடுத்துவந்து தந்துவிட்டு, "நல்லா இருக்கான்னு சொல்லுங்க" என்றுவிட்டுச் செல்ல, தாராவும் புன்னகையோடு நன்றி சொன்னாள்.

ஆதிக்கு ஆயாசமாக இருந்தது. திரையில் பாடல் காட்சி, 'வாராயோ வாராயோ காதல் கொள்ள ..' என ஒடிக்கொண்டிருக்க, தாரா அதில் லயித்துப் போயிருந்தாள்.

ஒருமணிக்கு மதிய உணவு வர, தாராவிடம் மட்டும் நின்று சிரித்துப் பேசிவிட்டுச் சென்றாள் அப்பெண். சின்னச்சின்னப் பெட்டிகளில் வந்த உணவை ஆதித் தானே சிரமப்பட்டுப் பிரித்துக்கொள்ள, தாராவிற்கோ இரண்டு பணிப்பெண்கள் வந்து உதவினர். உணவு வைக்கும் மேசையை அழகாக நிறுத்தித்தந்து, அதில் சிந்தாமல் உணவைப் பிரித்து வைத்துவிட்டு, புன்னகைத்துவிட்டுச் செல்ல, ஆதி பிரம்மித்தான்.

சாப்பிட்ட பின்னர் ஆதித் தனது மடிக்கணினியைப் பிரித்து வைத்துக்கொண்டு மும்முரமாகிவிட, தாரா வினோதமாகப் பார்த்தாள் அவனை.
"ஃப்ளைட்ல இருக்கறப்போ கூட வேலை பாக்கணுமா?"

ஆதித் அவள்புறம் திரும்பாமல், "ஆமா." என்றுமட்டும் சொல்ல, தாரா அமைதியாகிப் போனாள்.

அரைமணி நேரம் கழித்தும் அவளிடமிருந்து மேற்கொண்டு எவ்விதக் கேள்வியும் வராததால் மெல்லத் தனது மடிக்கணினியிலிருந்து நிமிர்ந்து பார்த்த ஆதித், தனது சீட்டில் நன்றாக சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்த தாராவைக் கண்டதும், அனிச்சையாகவே குறுநகையில் இதழ்வளைத்தான்.

***

மூன்று மணியளவில் கொல்கத்தாவை அடைந்தது விமானம். இம்முறை விமானம் மீண்டும் சாய்வாக இறங்கத் தொடங்கியதும் விழித்தவள், அவசரமாக சீட் பெல்ட்டை சரிபார்த்துக்கொண்டு, கையில் மஞ்சள் பந்தை எடுத்துக்கொண்டாள் அவள். மூச்சுக்குள் "சாமி.. காப்பாத்து.. ஆஞ்சநேயா.. காப்பாத்து.." என வேண்டிக்கொண்டே வந்தவள், விமானம் நின்றபின்னர்தான் இயல்பானாள்.

ஆதித் தனது கைப்பையை எடுத்துக்கொண்டு முன்னே நடக்க, தாரா அங்கே நின்ற பணிப்பெண்கள் அனைவரிடம் சொல்லி விடைபெற்றுக்கொண்டுதான் வந்தாள்.

விமானத்திலிருந்து குழாய்போன்ற இணைப்பில் இறங்கி நடந்து, கல்கத்தா விமான நிலையத்தின் பிரதானக் கூடத்திற்கு வந்து தத்தம் பைகளை நகரும் விசைமேடையிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது மணி மூன்றே முக்கால்.

கல்கத்தாவின் காற்றை நாசிக்குள் இழுத்துப் பின் நீளமாக மூச்சுவிட்டாள் தாரா. முகம் ஆர்வத்திலும் அதிசயத்திலும் பளபளத்தது.

வானம் தெளிவான நீலத்தில் இருந்தது. கட்டிட முகப்பில், சுற்றிலும் பைன் மரங்களும், வெளிநாட்டுப் பனைகளும் இருக்க, மஞ்சள் வண்ண டாக்சிகளைத் துடைத்துக்கொண்டு பழுப்புநிறச் சீருடையணிந்த ஓட்டுநர்கள் காத்திருந்தனர்.

பார்க்கிங் அருகே யாருக்கோ காத்து நிற்பதுபோல நின்றான் ஆதித். தாராவும் அங்குமிங்கும் பார்த்தவாறே அவனுடன் நின்றாள்.

"சார், நமஸ்தே!"
காரை அவர்களருகே நிறுத்திவிட்டு, ஆதியிடம் வந்து பணிவாக வணங்கினார் நாற்பதைத் தாண்டிய மனிதர் ஒருவர். ஆதி தலையசைத்துவிட்டுத் தனது பயணப்பையை அவரிடம் கொடுத்துவிட்டு, தாராவை நோக்கிக் கைகாட்டி ஏதோ சொன்னான். பின் தாராவிடம் திரும்பி, "ட்ரைவர். தாஸ்." என்றான்.

தாஸ் என்றழைக்கப்பட்ட அந்த ஓட்டுனரைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தாள் சிதாரா.
"ஐம் சிதாரா. நீங்க தாரான்னு கூப்பிடலாம்."

"ம்ஹூம். அவர் தமிழ் இல்ல. ஆந்திராக்காரர்", ஆதித் விளக்க, "ஓ..." எனத் தலையசைத்தாள் தாரா. ஆனால் புன்னகை மாறாமல் மீண்டும், "தாரா" என்றபடி தாஸிடம் கைநீட்டினாள் நட்பாக. அவர் வினோதமாகப் பார்த்தாலும், மரியாதைக்காக அவள் கையைக் குலுக்கிவிட்டு, தனது ஓட்டுநர் இருக்கையில் ஏறியமர்ந்து வண்டியை உயிர்ப்பிக்க, தாரா பின்புறக் கதவைத் தான் நுழைவதற்காகத் திறக்க, ஆதித் அதனுள் சென்று உள்ளே அமர, தாரா அரைக்கணம் திகைத்தாள். பின் சுற்றி வந்து மற்றொரு கதவைத் திறந்து உள்ளே அமரவும் கார் கிளம்பியது. 

ஓட்டுநரிடம் ஏதோ விபரங்கள் கேட்டுக்கொண்டிருந்தான் ஆதித். பெங்காலியில் அவன் சரளமாக உரையாடுவதை ஆர்வமாகப் பார்த்தாள் தாரா. பின் பிரதான சாலைக்கு வந்தவுடன் ஆர்வமாக வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.

'மகிழ்ச்சிகளின் நகரம்- City of joy' என்ற அடைமொழிக்கேற்பவே நகரெங்கும் வண்ணங்களும் வாசங்களும் வர்ணிக்க வார்த்தையில்லா அழகோடு பழம்பெரும் அரண்மணைகளும் நிறைந்திருக்க, வானத்திலிருந்து பூமியைப் பார்த்த அதே அதிசயப்பார்வையோடே நகரைப் பார்த்தாள் தாரா. ட்ராம் வண்டிகளைப் பார்த்து அவள் மகிழ்ச்சியில் மூர்ச்சையாகாத குறைதான்!

ஹௌரா பாலத்தைத் தூரத்திலிருந்து பார்த்ததுமே ஆர்வத்தில் விழிவிரித்தாள் அவள்.

"அது ஹௌரா ப்ரிட்ஜ் தானே??"

அரைக்கண்ணால் நிமிர்ந்து பார்த்துவிட்டு, "ம்ம்" என்றுமட்டும் சொன்னான் ஆதித்.

ஓட்டுநர் தாஸ் அவளது ஆர்வம் புரிந்து வண்டியை சற்றே வேகம் குறைத்தார். தாரா அவசரமாகத் தன் கைபேசியில் ஹௌராவை பத்துப் பதினைந்து புகைப்படங்கள் பிடித்தாள்.

"பாலத்துல போக மாட்டோமா?"

"வீடு இந்தப் பக்கம். பாலத்துல போறதுக்கு அவசியமில்ல."

"ஓ.."
அந்த ஒற்றை அட்சரத்தில் ஓராயிரம் டன் ஏமாற்றம் தொனித்தது. ஆதிக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை.

"வீடு இருக்கற இடம் பேரு சந்தோஷ்பூர்--"

"சந்தோஷ்பூர்.." என மென்மையாக ஒருமுறை சொல்லிப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டாள் தாரா. "அழகான பேர்."

"ஹ்ம்ம். அங்கே இருக்க மெட்ரோ ஸ்டேஷன் பேரும் சந்தோஷ்பூர் தான். பேர் கொஞ்சம் ஓல்டா தெரியும், ஆனா சவுத் இண்டியன்ஸ் கொல்கத்தாவுலயே அதிகமா இருக்கறது அங்கதான். மலையாளிஸ், ஆந்திரைட்ஸ், கன்னடிகாஸ், கொஞ்சம் கொஞ்சம் தமிழர்களும் இருப்பாங்க. வீடு இருக்குற ஸ்ட்ரீட் பேரு வாட்சன் ஸ்ட்ரீட்."

"சந்தோஷ்பூர் மெட்ரோ, வாட்சன் ஸ்ட்ரீட்" என்றெல்லாம் வாய்க்குள் உருப்போட்டுக்கொண்டே தலையசைத்துக் கேட்டுக்கொண்டாள் அவள்.

அரைமணி நேரம் கழித்து, "வீடு வந்தாச்சு" என ஆதித் சொல்ல, ஆவலோடு நிமிர்ந்து பார்த்து, வியப்பானாள் தாரா.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro