💟 ஜீவாமிர்தம் 8
"வட்ட வட்டமாக வானவில்லை வெட்டி குட்டி குட்டி மாலை ஆக்குவேன். புரவில் ஏறி நீயும் என்னை அள்ளிக் கொண்டால் மூச்சு முட்ட முட்ட சூட்டுவேன்.....ஷப்பா! இந்த கோலம் போடுற வேலையை எவன் தான் கண்டுபிடிச்சானோ.....!" என்று தனக்குள்ளேயே முணங்கிய படி கழுத்தில் படர்ந்த கூந்தலை இடக்கையை கழுத்துப்புறம் கொண்டு சென்று ஒதுக்கினாள் கவிப்ரியா. வழக்கமாக மீரா செய்யும் பணி, ஊரிலிருந்து அனைவரும் வந்து விட்டார்களென்றால் கவிப்ரியாவின் வசம் சென்று விடும். அதனால் தான் பாட்டுக்கு இடையே இப்படி கடுப்பு மொழிகளும் கவியின் வாயில் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் அதையறியாமல் அவள் மாமன் மகள் ஷைலு அவளருகில் வந்து நின்று இடுப்பில் கை வைத்து கொண்டு,
"ஏ.....கவிப்ரியா அக்கா; என்ன இவ்வளவு ஹேப்பியா ஸாங் ஹம் பண்ணிட்டு இருக்க? இன்னும் ரெண்டு நாளாவது ரூமை பூட்டிட்டு அழுதுட்டு இருப்பன்னு நினைச்சோம்!" என்று கேட்ட படி அவளருகில் வந்து குத்துக் காலிட்டு அமர்ந்தாள்.
"ஏய் குட்டை கொக்கே; நான் எதுக்குடீ அழணும்? என் மச்சான் கிட்ட நான் பேசி பல வருஷம் ஆச்சு. ஆனாலும் எனக்கு என்ன பிடிக்கும்ன்னு, என்னோட டேஸ்ட் எப்படி இருக்கும்ன்னு கரெக்டா தெரிஞ்சு எழுதியிருக்கான் பாரு, எல்லார் கிட்டயும் என்னை அவனுக்கு எவ்வளவு பிடிக்கும்ன்னு சொல்லாம சொல்லிட்டானே....... நான் கேம்ல தோத்துட்டேன் தான்! தனியா அவன் என் கையில சிக்கறப்போ அதுக்கு இருக்கு ட்ரீட்மெண்ட்! ஆனா நேத்து உண்மையிலேயே எனக்கு கோபமெல்லாம் வரல. என்னமோ உங்கண்ணன் எனக்கு பயப்படுறேன்னு ஸீன் போட்டதுல சிரிப்பு தான் வந்தது. சிரிச்சா ரெண்டு பேரும் ரொம்ப ஆடுவானுங்கன்னு தான் ஒரு லுக் விட்டேன். ஓடிப் போயிட்டானுங்க..... இல்லன்னா அந்த நேரம் உங்க அண்ணனை என்ன பண்ணியிருப்பேன்னு தெரியுமா?" என்று கேட்டவளிடம்,
"என்ன பண்ணியிருப்ப? ஏதாவது கம்ப்ளைன்ட் பண்ணி அழுதுருப்ப! அவன் அப்பா கிட்ட இல்லன்னா மாமா கிட்ட ரெண்டு திட்டு வாங்கியிருப்பான்!" என்று சொன்ன ஷைலஜாவிடம்,
"அடிப் போடீ இவளே..... அதெல்லாம் அறியாத வயசு, இப்போ எல்லாம் உங்கண்ணி ரொம்ப போல்டாகிட்டா. நோ பேச்சுவார்த்தை, நோ சமாதான உடன்படிக்கை, ஒன்லி ஸ்ட்ரைட் டீலிங் தான்! எனக்காச்சு, அந்த மலைமாடுக்காச்சு; மூச்சு விட முடியாம உங்கண்ணன் என் கிட்ட மாட்டிக்கிட்டு என்னை விட்டுடு அம்முலு, நான் பாவம்டான்னு கெஞ்சணும். போனா போகுது பொழைச்சு போறான் பையன்னு நம்மளும் விட்டுடணும்! சும்மா வார்த்தைக்கு வார்த்தை வாயாடிட்டு இருந்தா அவன் வாயை என் வாயால தான் மூடி வைக்கணும். அப்போ தான் அடங்குவான்!" என்று கவிப்ரியா கெத்துடன் சிரிக்க ஷைலஜா கையை உதறிக் கொண்டு,
"ஐயோ அம்மா, அத்தை இங்க வாங்க! இந்த கவிப்ரியா தப்பு தப்பா பேசுறா! வாயில சூடு போடுங்க!" என்று கத்திக் கொண்டு வீட்டிற்குள் ஓடிக் கொண்டிருக்க அவள் பின்னாலேயே ஓடி வந்து அவளை தடுத்து நிறுத்தி,
"அடியேய் குட்ட கொக்கு.... நான் உன்னை விட ரெண்டு வயசு மூத்தவடீ! உன் ஜீவா அண்ணன் இதெல்லாம் எங்கிட்ட எக்ஸ்ப்ரிமெண்டே பண்ணிட்டு இருக்கான். நான் சும்மா பேசினா தப்பாடீ? ஒழுங்கா சின்ன புள்ளையா அங்கிட்டும், இங்கிட்டும் ஓடாம, எதையும் போட்டு குடுக்காம அடக்க ஒடுக்கமா இரு!" என்று சொல்லி ஷைலுவின் தலையில் குட்டி விட்டு சென்றாள் கவிப்ரியா.
இரவில் ஜெய் நந்தன் மலைக்கு கிளம்பவதென்று முடிவு செய்து அனைவரிடமும் சொல்லி இருந்தார். காலை உணவு நேரம் முடிந்ததும் அனைவரும் ஹாலில் அமர்ந்து இருந்த போது கவிப்ரியா அவரிடம்,
"டார்லிங்....என்ன வந்து ரெண்டு நாள் தான் ஆச்சு, அதுக்குள்ள கிளம்பறேன்னு
சொல்லுற?" என்று கேட்டு விட்டு அவர் மடியில் அமர்ந்து கழுத்தை கட்டிக் கொண்டாள்.
"எனக்கு கிளம்ப மூடே இல்லடா ஏஞ்சல்! ஆனா அங்க ஒரு ரோபோ உட்கார்ந்து இருக்கான் பாரு! அவன் தான் எப்போ வருவ; எப்போ வருவன்னு என் உயிரை எடுக்கிறான்! இன்னும் 4 நாள் தானே? அதுக்கு பிறகு எல்லாரும் மலைக்கு தானே வரப் போறீங்க ன்னு தான் அவன் கிட்ட வந்துடுறதா ஒத்துக்கிட்டேன். சீக்கிரம் வந்துடணும்டா ஏஞ்சல்! எல்லாரையும் நீ தான் கூட்டிட்டு வரணும், இந்த வருஷம் பங்ஷனுக்காக நான் ரொம்ப எக்ஸைட்டடா காத்துக்கிட்டு இருக்கேன்!" என்றவரிடம்,
"கண்டிப்பா மாமா, சரஸ் பாட்டி, அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, பார்கவ்...... அப்புறம் நீ எதிர்பார்க்குற முக்கியமான ஆள்! இவங்க எல்லாரையும் மலைக்கு கூட்டிட்டு வர வேண்டியது என்னோட பொறுப்பு, எனக்கு இந்த வருஷம் என்ன ப்ரசெண்ட் மாமா வாங்கி தரப் போற?" என்று கேட்டவளின் காதைப் பற்றிய நிர்மலா,
"ஏதாவது காரியம் ஆகணும்ன்னா மட்டும் உனக்கு உன் டார்லிங் மாமா ஆகிடுவாரே...... என்ன வேணும்ன்னு நீயே டிஸைட் பண்ணு கவிம்மா! உனக்கு பிடிச்சதை வாங்கி தர்றோம்!" என்று கேட்ட தன் அத்தையிடம்,
"நானே எனக்கு பிடிச்சதை கேட்டு அப்புறம் நீங்க அதை எனக்கு வாங்கி குடுத்தா எப்படி அத்தை அதுல த்ரில் இருக்கும்? இருந்தாலும் நமக்கு பிடிச்ச கிப்ட்ன்னு யோசிக்கும் போது....!" என்று சொன்னவாறு கண்களை சுருக்கி யோசித்தவள்,
"அன்னிக்கு டெரஸ்ல உங்க ரெண்டு பேர் கிட்ட ஒரு கிப்ட் கேட்டேனே.......
அந்த கிப்ட் தான் வேணும்!" என்று சொல்ல ஜெய் நந்தனும், நிர்மலாவும் சிரித்து விட்டனர்.
"ஏன் நிர்மலா.....அவ்வளவு பெரிய கிப்ட்டை எப்படிம்மா நம்ம கவிக்கு வாங்கி குடுக்குறது? அதை பார்சல் கூட பண்ண முடியாதே?" என்று சொன்னவரிடம் சிரிப்புடன்,
"கவிம்மா கிப்ட் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு அதை உன் கையில சேர்த்துடுறோம். அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு!" என்றார் நிர்மலா.
அப்போது தான் பலராம், ஜீவா, மற்றும் பார்கவும் வீட்டிற்குள் நுழைந்தனர். கீதா அவர்களிடம், "எங்கடா போயிருந்தீங்க மூணு பேரும்?" என்று கேட்க ஜீவா கீதாவின் கன்னத்தில் கிள்ளி விட்டு,
"இப்போ நீ யாரை எங்கடா போயிட்டு வந்தீங்கன்னு கேக்குற கீத்து? எங்களையா..... இல்ல உன் ஆசை ப்ராணநாதரையா?" என்று சிரிப்புடன் கேட்டான்.
"மூணு பேரையும் சேர்த்து தான்டா கேக்குறேன். எங்க போயிட்டு வர்றீங்க?" என்று கேள்வியாக ஏறிட்டவரிடம்,
"ரொம்ப நாளாச்சுல்லடா கீத்து.... அதான் இந்த தடியனுங்களை கூட்டிட்டு தீராஸுக்கு போயிட்டு வர்றோம்!" என்றார் பலராம்.
தீராஸ் அழிந்து வரும் கிராமப்புற விளையாட்டுகளை காக்க பலராம், பார்கவ் மற்றும் ஜீவானந்தன் ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவாக்கப் பட்ட கலைக்கூடம். ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சிலம்பம், மல்யுத்தம், நொண்டி, கபடி, பச்சை குதிரை, விற்பயிற்சி, வாள் சண்டை, பறை இசை, ஆகிய கலைகளை சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு இலவசமாக கற்றுத்தர மூவரும் முயல மாணவர்களும், மாணவிகளும் ஆர்வத்துடன் வந்து கற்றுக் கொண்டனர். இந்த கலைக்கூடத்திற்கு எப்படியாவது தன் தந்தை வென்றெடுத்த இளவட்டக் கல்லை கொண்டு வந்து சேர்த்து விட வேண்டும் என்பது பார்கவின் நீண்ட நாள் ஆசை. ஆனால் தானாகவே சென்று தன் தாயின் தந்தையிடம் கேட்க சங்கடப்பட்டு கொண்டு தயங்கிக் கொண்டிருந்தான்.
"ஜீவாம்மா..... என்னடா ரொம்ப ஜாலியா இருக்க போலிருக்கு! உங்க மாமாவை ஏதாவது கேம்ல ஜெயிச்சியா?" என்று கேட்ட கீதாவிடம்,
"ம்ஹூம்...... மாம்ஸ ஜெயிச்சா நான் எதுக்கு இப்படி சந்தோஷமா இருக்கப் போறேன்? நேத்து என் பொண்டாட்டி கூட கம்பாட்டபிளிட்டி கேம்ல ஜெயிச்சேன்ல கீத்து? கதை சொன்னா உம் கொட்டி கேக்கணும்ன்னு ஜானு பாட்டி சொல்லி இருக்காங்க. நீ எதுக்கு அத்தை இப்படி வாயை பெரிசா திறந்துட்டு நிக்கிற, உம் கொட்டு பார்க்கலாம்!" என்று புன்னகைத்தவனை தன் அனல் பார்வையால் பற்ற வைக்க முயற்சி செய்து கொண்டிருந்த கவிப்ரியா,
"சித்தி உம் கொட்டாத! அவன் தலையில சாம்பாரை எடுத்து கொட்டு; எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்துகிட்டு இருக்கோம்! இப்போ போய் இப்படியெல்லாம் பேசுறான் பாரேன்; டேய் பாகி இதெல்லாம் நீ என்னன்னு கேக்க மாட்டியாடா?" என்று தன் சகோதரனிடம் நியாயம் கேட்டவளிடம்,
"ம்ஹூம்; உங்கண்ணன்...... வாயை திறப்பேனா என் தங்க தங்கச்சி, வீட்ல பெரிய தலைங்களே ஷாக் ரியாக்ஷன் மட்டும் தான் குடுத்துட்டு உட்கார்ந்து இருக்காங்க. இதுல நான் பெரிசா மீசையை முறுக்கிட்டு போய் இவன் சட்டை மேல கையை வச்சேன்னு வை! இப்பவாவது சும்மா வார்த்தையில சொல்றான். சும்மா இருந்தவனை சுரண்டி விட்டு சொன்னதை நிஜமாவே செஞ்சிட்டான்னா....... எதுக்கு இந்த வீண் வம்பு? எல்லாரும் எப்படி வேடிக்கை பார்க்குறாங்களோ அதே மாதிரி நானும் வேடிக்கை பார்ப்பேன். நீ வேற ஏதாவது பெரிய சிபாரிசா பிடி! உன் பக்கத்தில உட்கார்ந்து இருக்கிற பண்ணையார் சத்தியமா உனக்கு ஹெல்ப் பண்ண மாட்டாரு. அதனால வேற ஏதாவது ஆளைப் பாரு!" என்று சொல்லி விட்டு வாயை மூடிக் கொண்டான் பார்கவ்.
"டேய் அண்ணா இதெல்லாம் ரொம்ப ஓவர்!" என்று விரலை உயர்த்திக் கொண்டு வந்த ஷைலஜாவிடம் புன்சிரிப்புடன்,
"நீங்க யாரு....என்னை எதுக்காக அண்ணான்னு கூப்பிடுறீங்க?" என்றான் ஜீவா பதவிசான குரலில்.
"ஏய்.....என்னடா திமிர் பண்ணுறியா?" என்று எகிறியவளை, "ரூபி என்னடா இது? அண்ணாவை மரியாதையா பேசு!" என்றார் ஜெய் நந்தன்.
"இதுக்கு மட்டும் வாயைத் திறப்பீங்களாப்பா நீங்க? ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கான். யாருமே அவனை ஒரு கேள்வி கேக்க கூட தயாரா இல்லை... நான் கேட்டா யார் நீங்கன்னு கேக்குறான் பக்கி!" என்று திட்டியவளை,
"ஏய் ஷைலு வாயை மூடுடீ!" என்றார் நிர்மலா.
"என்னைய மட்டும் திட்டுறதுக்கு வரிஞ்சு கட்டிட்டு வந்துடும்மா.... கவி அக்காவ பொண்டாட்டின்னு சொல்லிட்டு இருக்கான். அது உன் காதுல கேக்கலையா?" என்று கேட்ட படி ஷைலு நிற்க அவளிடம்
ஜீவா தன் முகத்தில் புன்னகை மாறாமல், "மிஸ். ஷைலஜா ஜெய் நந்தன், நீங்க இந்த ஊருக்கு வந்து, இந்த வீட்டுக்கு வந்து இரண்டு நாள் ஆச்சு, இதுவரைக்கும் என் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல. உங்க ப்ரெண்டு இனியாவும் தான்! உங்கப்பா கிட்ட நான் பேசாம இருக்கேன்னு உங்களுக்கு என் மேல கோபம்; இது வரைக்கும் என்னை யாரோ வேற ஆளுன்னு நினைச்ச நீங்க, இப்போ எப்படி கரெக்டா உங்கண்ணன்னு அடையாளம் கண்டு பிடிச்சீங்க? உங்க அத்தை மகளுக்கு ஸப்போர்ட் பண்றதுக்காக என் கிட்ட பேச வர்றீங்களா? அப்படி சிரமமான வேலை எல்லாம் நீங்க பார்க்க வேண்டாம். போய் உட்காருங்க!" என்றான் தன் தங்கையிடம்.
"நான், எங்கப்பா, எங்க அம்மா, பெரியம்மா, பெரியப்பாவை எப்படியும் வாயை திறக்க கூடாதுன்னு சொல்லி வச்சிருப்பான். ஷைலஜா ராணி மண்ணை கவ்விட்டா.... லட்டு சுத்தம்... வாயவே திறக்காது. சரஸ், ஜெய் மாமா, அத்தை இதுக எல்லாரும் இவன் விஷயத்தில உப்புக்கு சப்பாணிங்க; ஐயோ என் தங்கச்சியை நாக்கு மேல பல்லை போட்டு பொண்டாட்டின்னு கூப்பிட்டுட்டு கல்லூளி மங்கன் போஸ் குடுத்துட்டு நிக்குறானே..... கடவுளே என்னடா இது கவிக்குட்டிக்கு வந்த சோதனை?" என்று புலம்பியவனின் குரல் ஜெயந்தனை தட்டி எழுப்பி விட்டது.
"ஜீவாம்மா! என்ன இருந்தாலும் நீ கவிம்மாவை பொண்டாட்டின்னு கூப்பிடுறது ரொம்ப தப்பு!" என்றார் ஜெயந்தன்.
"தாத்தா இப்போ நான் கவியை உரிமையா கூப்பிடுறது தப்புன்னு சொன்னா சின்ன வயசுல இருந்து கவி உனக்காக மீராத்தை குடுத்த பாப்பா, அவளை பத்திரமா பார்த்துக்கணும்னு சொல்லி சொல்லி குடுத்தது யார் தப்பு?" என்று கேட்டு விட்டு கைகளை கட்டிக் கொண்டு முறைப்புடன் நின்று கொண்டு இருந்தான் ஜீவானந்தன்.
"ஆனந்த்.....உம் மனசுல கவி மேல உரிமை உணர்வு வந்ததுக்கு நான் தான் காரணம். என்ன தான் உறவா இருந்தாலும், கவிக்கு உன் கூட வாழ சம்மதமான்னு கேட்டு அவ சம்மதம் சொல்லிட்டான்னா கல்யாணம் பண்ணி, அதுக்கப்புறம் பொண்டாட்டின்னு கூப்பிடுப்பா!" என்று சொன்ன தன் தந்தையை ஒரு பார்வை பார்த்த ஜீவா தன் நண்பன் பார்கவின் முகத்தை தாடையை பிடித்து தன் புறம் திருப்பி,
"டேய் பாகி அம்முலு என்ன ஸ்டேட்மெண்ட் குடுத்தான்னு கவனிச்சியா நீ?" என்று அவன் கேட்க பார்கவ் சற்று உஷாராகி விட்டான்.
"எதையோ இந்த அமுக்குணி நம்ம வாயில இருந்து வர வைக்க பார்க்குது. சிக்கிடாதடா பாகி!" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு,
"ஆளாளுக்கு ஒண்ணொன்னு பேசிட்டு இருக்காங்க. இதுல கவிம்மா பேசுனதை மட்டும் தனியா பிரிச்சு எடுக்க நான் என்ன அன்னப்பறவையாடா? அவ வாயில இருந்து உனக்கு தேவைப்படுற விஷயம் வந்துருச்சுன்னு நினைக்கிறேன்! ம்ம்ம்......நீ நடத்து மச்சி!" என்றான் புன்னகைத்து விட்டு.
கவியின் எதிரில் வந்து நின்ற ஜீவா, அவளிடம் மெல்லிய குரலில், "எல்லாரும் சேர்ந்து இருக்கிறப்ப உன்னை நான் பொண்டாட்டின்னு சொன்னதுக்கு கோபப்படுறியா? இல்ல நம்ம ரெண்டு பேர் மட்டும் பேசிட்டு இருக்கும் போது உன்னை அப்படி கூப்பிடலையேன்னு வருத்தப்படுறியா அம்முலு?" என்று ஜீவானந்தன் கேட்ட கேள்வியில் திகைத்து போய் நிற்பது இப்போது கவிப்ரியாவின் முறையாகி இருந்தது.

ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro