Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 27

அவனது கடையில் அமர்ந்து இருந்த ராசுவுக்கு தன் நிலைமையை நினைத்து சிரிப்பும், அழுகையும் சேர்ந்து வந்தது. அவனது மனைவியை அம்பைக்கு அழைத்து வந்ததிலிருந்து  அவளை மாமா என்று ஒரு முறையாவது கூப்பிட வைத்து விட வேண்டும் என்று அவனும் ஒவ்வொரு நொடியும் போராடிக் கொண்டு தான் இருக்கிறான். ஆனால் என்ன முயற்சி செய்தாலும் பலன் தான் கிடைத்த பாடில்லை.

"எவ்வளவு கொழுப்பு இருந்தா மிஸ் இனியான்னு கூப்பிட்டதும் எஞ் சட்டையை புடிச்சு ரெண்டு உலுக்கு உலுக்காம நல்லாத்தேன் இருக்குன்னு சொல்லுவ; மாமன் உன்ன மரியாதையா பேசினா உனக்கு எரிச்சல் வருதுல்ல..... அப்படித்தான்டீ நீ யார் கிட்டயோ பேசுற மாதிரி எங்கிட்ட பேசினா எனக்கும் எரியுது. திடீர்னு விருந்தை பத்தி எதுக்கு பேசினா.....? சிட்டுக்குருவி நம்ம கிட்ட எதுவும் கோக்குமாக்கு பண்றாளான்னு தெரியலையே? என்னத்தையோ பேசணும்னு கூப்பிட்டா, அவ பேசுறத கேக்கையில சிரிப்பாதேன் வருது. ஆனாலும் உனக்கு  இவ்வளவு அழுத்தம் ஆகாதுடீ என் கண்ணாட்டி! இரு படிப்பை முடிச்சுட்டு அப்புறம் இங்கண வருவேல்ல..... அப்போ ஒன்னைய நல்லா ஏறி மேயுறேன்!" என்று குப்புறக் கவிழ்ந்து முணுமுணுத்துக் கொண்டு இருந்தவனிடம்,

"த்தூ..... ஏறி மேயுற மொகரையைப் பாரு! முதல்ல உன் பொஞ்ஜாதிய ஊரறிய உன் பொஞ்ஜாதின்னு சொல்ல வைக்குத வழியப் பாருலே; அம்பையில வண்டியை நிறுத்த ஆலங்குளத்திலயே ப்ரேக் அடிச்சுட்டு உனக்கெதுக்குலே வெட்டிப் பகுமானம்?" என்று அவன்  மனசாட்சியே கேவலமாக அவனை கேள்வி கேட்டுக் கொண்டிருக்க தலையை உலுக்கிக் கொண்டு தன் கைகளை பின் புறம் கோர்த்து சேரில் சாய்ந்து  படுத்திருந்தான் இசக்கிராசு.

"ஏதோ வேலை இருக்குன்னு சொன்னீங்க. இப்படி படுத்துட்டு போஸ் குடுக்கறது தான் அந்த வேலையா?" என்று கேட்ட படி உள்ளே வந்து அமரப் போனவளை தடுத்தவன்,

"எப்டி வந்தீக? என் கிட்ட சொன்னா நா வந்து கூட்டிட்டு வந்து இருப்பேன்ல?" என்று கேட்ட படி எழுந்து அவன் அமர்ந்து இருந்த நாற்காலியை கை காட்டி, "இங்கண உட்காருங்க!" என்றான்.

ஆனால் இனியா அதைக் கண்டு கொள்ளாமல், அவனுக்கு எதிராக அமர்ந்து கொண்டு, "வீடும், கடையும் ரெண்டு தெரு தாண்டி தானே; வீட்ல சும்மா இருந்தேன். அதான் இங்க வந்தேன்.  உங்க கிட்ட சில கேள்வி கேக்கலாமா? ஏன் என்னை ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க...... இது தப்புன்னு உங்களுக்கு தோணலையா? என்னை பலவந்தப்படுத்தி  ரிலேஷன்ஷிப் ஏற்படுத்திக்கணும்னு உங்களுக்கு என்ன அவசியம் வந்தது? உங்களை எனக்கு பிடிக்குது. ஆனா திரும்ப திரும்ப மனசுக்குள்ள நீங்க செஞ்ச தப்பு தான் நியாபகம் வருது. என் நிலைமையில உங்களுக்கு தெரிஞ்ச ஏதாவது ஒரு பொண்ணை வச்சு யோசிச்சு பாருங்க. இது எவ்வளவு பெரிய விஷயம்னு உங்களுக்கு புரியும்!" என்றாள் இனியா சற்று குரலை உயர்த்தி.

உதடுகளை பற்களால் அழுத்திப் பிடித்திருந்தாள். மார்பு மேலும் கீழும் ஏறி இறங்கியது. கண்களில் நீர் விழவா வேண்டாமா என்று எட்டிப் பார்த்து நின்று கொண்டு இருந்தது. அவள் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தவன் அவளையும் சேரில் இருந்து எழுப்பி மெதுவாக அணைத்துக் கொண்டு அவள் விழிநீரை அவன் விரல்களால் விரட்டினான்.

இனியாவிற்கு அவனது அணைப்பு ஏனோ புதிதாக தோன்றவில்லை. அவனிடம் நியாயம் கேட்டுக் கொண்டு இருந்தவள் அவனையே பற்றுக்கோடாகவும் ஆக்கிக் கொண்டாள். மெல்லிய விசும்பலில் அவள் உடல் சற்று அதிர்வுறவும்,

"ஏட்டி சிட்டு...... வேணாமுடீ, என்னைய அழ வை. நான் தானே தப்பு செஞ்சேன்......... தயவு செஞ்சு நீ அழாதடீ! நெஞ்செல்லாம் வலிக்குது!" என்றான் ராசு. அவன் அணைப்பில் அவளைப் பத்திரமாக பொத்தி வைத்துக் கொண்டு அப்படியே நின்று விட்டான்.

"உங்க கிட்ட கேள்வி கேட்டேன், உங்க ஆறுதல் எல்லாம் கேக்கல! என்னை விடுங்க ப்ளீஸ்!" என்றாள் இனியா சற்று திமிறிக் கொண்டு.

"என் பொஞ்ஜாதியோட வாசம் எனக்கு வேணுமுடீ..... குடுக்க மாட்டேன்னு அடம் பிடிச்ச; அப்புறம் நான் என் மனசுல இருக்கிறதையெல்லாம் சொல்ல மாட்டேன்! அங்கண பெஞ்சில வந்து உட்காரு. எவ்வளவு நேரம் இப்படி நின்னுட்டு இருப்ப.....!" என்று அவன் சொல்ல ஒரு பெஞ்ச்சில் இருவரும் இணைந்து அமர்ந்தனர்.

அவன் மடியில் அமர வைத்துக் கொண்டவனிடம் தயக்கத்துடன்,
"உங்களுக்கு கால் வலிக்கும். உங்க பக்கத்தில உட்கார்ந்துக்குறேன்!" என்று சொன்னாள் இனியா.

"ஆமா..... இவுக நூறு கிலோ நெல் மூடை, இவுகள மடியில வச்சு அப்படியே எங்க கால் நொந்துடும். போடீங்கு.... இவளே; எந்த சாமி உன் மண்டைக்குள்ள புகுந்து உன் மனச மாத்துச்சோ தெரியல. மொத முறையா இன்னைக்குதேன் பக்கத்துலயே வந்துருக்க. சும்மா கொணட்டாம மடியில ஒக்காந்துட்டு கதை கேளு!" என்றான் ராசு.

"நீங்க..... நம்ம கல்யாணத்த அவசரமா பண்ணினதுல ஏதோ காரணம் இருக்கு தானே?" என்று கேட்டவளிடம் ஓர் வறட்டுச் சிரிப்புடன் இல்லையென தலையாட்டி விட்டு,

"கல்யாணத்த அவசரமா பண்ணிக்கணும்; அதுவும் ஒங்கூட கல்யாணம் பண்ணிக்கணும்! அவ்ளோ தான்த்தா காரணம்!" என்றான் அவளைப் பார்த்த படி.

இனியா எதுவும் பேசாமல் அவனது மார்பைப் பார்த்த படி இருக்கவும்,

"பொதுவா அப்பத்தா எங்கிட்ட எதையுமே கேட்டதில்ல இனியா...... அது எங்கிட்ட ஆசைப்பட்டு கேட்ட ஒரே ஒரு விஷயம் என் புள்ளைய அது சாகறதுக்கு முன்னாடி பார்த்துப்புடணும்ங்குறது மட்டும்தேன்; நம்ம ஊரு புள்ளைகளுக்கு விவசாயம் பண்ணிகிட்டு, சொந்த ஊர்லயே சுத்திக்கிட்டு திரியற பய எல்லாம் வேண்டாமாம்.  பட்டணத்துல வேலை பார்க்குற பயலுகளுக்கு நம்ம எந்த விதத்துல கொறைஞ்சு போயிட்டம்னு எனக்கு மொணப்பு வந்துடுச்சு. இருங்கடீ உங்கள விட நல்ல பொண்ணை தேடி பிடிச்சாந்து கட்டுக்கிடுவேன்னு நான் கருவிக்கிட்டு இருக்கும் போதுதேன் அப்பத்தா உன்னைய பத்தி சொல்லுச்சு. தேடி வந்து உன்னைய பத்தி விசாரிச்சதும் விஷயமெல்லாம் நமக்கு ரொம்ப தோதா இருந்துச்சு. ஆனா உன்ன பாத்த அந்த நிமிஷத்துல சத்தியமா சொல்றேன்டீ, எனக்கு உலகம் மறந்து போயிடுச்சு. இந்த புள்ள தான் என் புள்ளைகளுக்கு அம்மையா இருக்கும்னு நா சொன்னதும் அங்கண இருந்த பயலுக எல்லாம் அந்த புள்ள பெரிய இடம், உன் தகுதிக்கெல்லாம் எட்டாதுன்னு கொம்பு வீசி விட்டானுங்க. நமக்குதேன் கோபம் வந்துட்டா மூளை வேலை செய்யாதுல்ல...... உன்னைய பார்த்த நாலு மணி நேரத்துல உனக்கு முஹுர்த்தப் புடவை வாங்கிட்டேன். தாலி எல்லாம் ஊர்ல இருந்து கிளம்பும் போதே  அய்யனார் கோவில்ல வச்சு  கும்பிட்டு கொண்டு வந்துட்டேன். பொறவும் ஒரு குழப்பம். உன்னைய அம்பைக்கு தூக்கிட்டு மட்டும் வந்தா அப்பத்தா வஞ்சி கழட்டிப்புடும். உங்கொப்பன் கூட திருப்பி அனுப்பி வச்சுபுடும். சரி எப்படியும் ஏசு வாங்குறதுன்னு ஆகிப் போச்சு. அதை கல்யாணத்தை முடிச்சுபுட்டே வாங்கிக்கிடலாம்னுதேன் வீம்புக்கு வந்து உங்கண்ணன் கிட்ட மல்லுக்கட்டி, சும்மா ஒரு ஆட்டம் காட்டிப்புட்டு அப்படியே உன்னை அள்ளிக்கிட்டு வந்துட்டேன். இப்போ நீ கேட்டதுக்கு அப்புறந்தேன் நான் செஞ்ச தப்பு எனக்கு ரொம்ப ஒரைக்குது. எனக்கு ஒரு தங்கச்சி இருந்து அந்த புள்ளைய எவனாவது இப்படி தூக்கியிருந்தா அந்தப்பய சங்க அறுத்திருக்க மாட்டேன் நானு.....? அதே கோபமும், ஆத்திரமும் உங்கண்ணனுக்கும், உன் அத்தானுக்கும் வரத்தானே செய்யும்? உன் பொறந்த வீட்ல அவுக முழு மனசோட எப்போ என்னை மருமகனா ஏத்துக்குறாகளோ அது வரைக்கும் நீ என் மாமன் மகளாவே இரு! அப்பத்தாவுக்கு அப்புறம் நா தனியாளா திரியணும்னு நெனைக்கையில மனசு பதறுச்சு, இப்போதேன் நீ இருக்கியே.....
நான் உனக்கு கட்டாய தாலி கட்டி உன் மனசை வேதனைப்படுத்துனது ரொம்ப ரொம்ப தப்புதேன்! முடிஞ்சா என்னை மன்னிச்சுடு!" என்று சொல்லி அவளை நிற்க வைத்து கைகூப்பி, அவள் காலில் சாஷ்டங்கமாக விழுந்து வணங்கினான் இசக்கிராசு.

"ஐயோ......... கடவுளே, என்ன இது, எழுந்துரிங்க ப்ளீஸ்!" என்று சொல்லிய இனியா அவன் முன்னிருந்து பதறி விலகினாள்.

"பஞ்சாயத்துல எல்லாம் இப்படித்தான் புள்ள தண்டனை குடுப்பாய்ங்க; என்ன அங்க எல்லார் முன்னாடியும் விழணும். இங்க உன் முன்னாடி மட்டும். அம்புட்டுதேன் வித்தியாசம். நீ என் பொஞ்ஜாதி மட்டும் இல்ல, எனக்கு கிடைச்ச இன்னொரு அம்மையும்தேன், எதுக்கு இப்படி பதறுறவ?" என்று கேட்டவனிடம்,

"பொண்டாட்டியை இப்படி விழுந்து கும்பிடறதை எல்லாம் வெளியே சொல்லிடாதீங்க. சிரிக்க போறாங்க. சாப்பிட போகலாமா?" என்று கேட்ட படி திரும்பியவளை பின்புறம் இருந்து இழுத்தவன்,

"ஏட்டி மாமன மன்னிச்சுட்டியா இல்லையான்னு சொல்லவேயில்லையே?" என்று கேட்ட படி ஏக்கமாக அவள் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தான். 

"விடுறா மொக்கை! ஃபீல் பண்ணாத! ஏதோ அறிவு கெட்ட தனமா வேலை எல்லாம் பார்த்துட்டே; இனிமே ஒழுங்கா இருக்கணும். கல்யாணம் வேற ஆகிடுச்சு. பொறுப்பில்லாம இருந்தா ஊர்ல எல்லாரும் இனியா புருஷன் இப்படி இருக்கான்னு தானே தப்பா பேசுவாங்க?" என்று அவன் கண்களை பார்த்து புருவம் தூக்கி வினவினாள் அவள்.

குறுஞ்சிரிப்புடன் அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவன், "மொக்கை ராசு இனியா புருஷன்னு எல்லாருக்கும் தெரிஞ்சா தானே சிட்டுக்குருவி பொரணி பேசுவானுக.... நா எல்லார்ட்டயும் நீ தான் என் பொஞ்ஜாதின்னு சொல்லிடட்டுமா?" என்று பயமும், ஆர்வமும் கலந்த குரலில் கேட்டான்.

முகவாயில் கையை வைத்துக் கொண்டு அவனை ஏற இறங்கப் பார்த்தவள், "உங்களுக்கு யார் மொக்கை ராசுன்னு பேரு வச்சாங்க? ஒண்ணுமே புரியாம மொக்கையா தான் இருப்பீங்கன்னு தெரிஞ்சு சரியா சூஸ் பண்ணியிருக்காளே..... அவங்கள கூப்பிட்டு ஒரு முத்தம் குடுக்கணும்!" என்றாள் உதட்டில் சிரிப்புடன்.

"ஏட்டி சிட்டு.... என்ன எகத்தாளமா? எனக்கே இங்க ஒண்ணும் குடுக்கலையாமாம். இதுல வேற எந்த பயபுள்ளைக்கோ முத்தமா? அது யாருன்னு கண்டுபிடிச்சு தூக்கி போட்டு நாலு மிதி மிதிச்சுட்டு வர்றேன். இரு!" என்று சொன்னவன் மேல்சட்டையை கொத்தாக பற்றி இருந்தாள் இனியா.

"என்னட்........டீ!" என்று இழுத்தவனிடம்,

"நான் ரெண்டு பேர் கிட்ட உங்க பொண்டாட்டி நான் தான்னு சொல்லிட்டு வந்தேன். அது நாலாகி, எட்டாகி இந்நேரம் பாதி ஊருக்கு தெரிஞ்சுருக்கும். யாராவது விசாரிக்க வருவாங்க. அவங்க கிட்ட நாளைக்கு விருந்து வக்கிறேன்னு சொல்லிடுங்க. அவ்வளவு தான். நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமா கிளம்பணும் ராசு! இப்ப வீட்டுக்கு போகலாமா?" என்று கேட்டு அவன் கைகளைப் பிடித்துக் கொண்டவளிடம் அவசரமான குரலில்,

"ஏட்டீ..... என்னட்டீ நடக்குது இங்க? நாம புருஷன், பொஞ்ஜாதின்னு ஊரு பூராவும் தெரிஞ்சா உனக்கு பரவாயில்லையா?" என்று கேட்டவனிடம் ஒரு முறைப்பை வழங்கியவள்,

"நான் என்ன தப்பு செஞ்சேன் பயப்படுறதுக்கு? நான் என்னை உங்க பொண்டாட்டின்னு  அடையாளப்படுத்திக்க பயப்படல. எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. ஐ ஸ்டார்ட்டட் லவ்விங் யூ; ஆனா என் கோபம் இன்னும் முழுசா போகல. நம்ம கல்யாணத்துக்குள்ள அதை நீங்க தான் சரி பண்ணனும். இனிமே வாரத்துக்கு ஒரு தடவை என்னை இங்க கூட்டிட்டு வரணும். எனக்கு இந்த வில்லேஜ் லைஃப் ரொம்ப பிடிச்சிருக்கு. ஸ்டடீஸ் முடியற வரைக்கும் என்னை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. கல்யாணம் ஆகி இங்க வந்ததுக்கப்புறம் வாரத்துல ஒரு நாள் ரூபியை பார்க்க கூட்டிட்டு போகணும்! இதுக்கெல்லாம் ஓகேன்னா......ஹலோ ஸார் அதுக்குள்ள ட்ரீமுக்கு போயாச்சா?" என்று அவனை உலுக்கியவளை கட்டியணைத்துக் கொண்டு,

"என் செல்ல சிட்டுக்குருவி, நாளைக்கு காலையில பாரு..... கறி விருந்துல சும்மா ஊரே மணக்கப் போகுது! மாமன் போய் வேலையை பாக்கேன். டாட்டா!" என்று அவள் கன்னங்களை கிள்ளி முத்தமிட்டு விடைபெற்று  வெளியே  சென்றான் இசக்கிராசு.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro