💟 ஜீவாமிர்தம் 26
அதிகாலை ஆறு மணியளவில் இனியா ராசுவின் வீட்டு வாசலைப் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்த போது அப்போது தான் தன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு ஓர் ஆட்டுக்குட்டியை கைகளில் அள்ளி அதற்கு பாட்டிலில் பால் கொடுத்து கொண்டு தன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான் இசக்கிராசு.
"இந்த வேலையெல்லாம் நீங்க எதுக்கு செஞ்சுட்டு?" என்று கேட்ட படி நின்றவனை தலை தூக்கிப் பார்த்தாள் இனியா.
கனமான ஒரு லெதர் செருப்பு, முழங்கால் அளவு மடித்து கட்டியிருந்த லுங்கி, அகன்ற தோள்களை பற்றியிருந்த பனியன், கைகளில் ஆட்டுக்குட்டி என நின்றவனை பார்த்து துப்புரவு வேலையை அப்படியே விட்டு விட்டு அவனருகில் வந்தாள்.
"இதெல்லாம் நான் பார்க்கலைன்னா நீங்க பார்ப்பீங்களா? நான் இருக்கும் போது அப்பத்தாவை எதுக்கு வேலை பார்க்க சொல்றது? அது தான் நானே சுத்தம் செஞ்சேன்..... உங்க வீட்ல நான் இந்த வேலையெல்லாம் பார்க்கிறது உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லிடுங்க. நான் செய்யல!" என்றாள் இனியா புன்னகையுடன்.
அவள் மூச்சு அவன் முகத்தில் படும் அளவுக்கு அவள் முகம் நோக்கி சற்று குனிந்தபடி நின்றவன்,
"என் வூட்டு வேலைன்னு நெனைச்சுகிட்டு செஞ்சீகன்னா வேல அப்படியே கிடக்கட்டும். நம்ம வூட்டு வேலைன்னு நினைச்சீகன்னா மட்டும் செய்ங்க; ஆனா எதைப் பேசினாலும் பூனைக்குட்டிய தடவிக் குடுக்குத மாதிரி மியா மியான்னு பேசுதீக பாத்தீகளா...... இந்த அழகுல நீங்க என்னைய பழி வாங்க வந்துவுகளா.... உங்க முகத்துக்கு எல்லாம் கோபம், ஆத்திரமெல்லாம் பொருந்த மாட்டேங்குது நர்ஸம்மா. உள்ள போய் தலையை துவட்டுங்க. நா வாச, தெரணையெல்லாம் பெருக்கி சுத்தம் பண்ணி வக்கிறேன். அது வரைக்கும் இந்த செவலப்பயல கொஞ்சம் கையில வாங்கிக்கிடுங்க!" என்று சொன்னவன்
அவள் கையில் ஆட்டுக்குட்டியை தந்து விட்டு துடைப்பத்தை கையில் எடுத்துக் கொண்டு சுத்தம் செய்து கொண்டிருந்தான்.
"எலே மொக்கை......கட்டிக்க போற புள்ளைய உட்கார வச்சு நீ முறை வாசல் பாக்கியாலே.....?" என்று கேட்ட படி சைக்கிளில் சென்ற ஒருவனைப் பார்த்து,
"லேய்...எவமுலே அது; ஆறு வீட்டு குருவம்மா மருமவன் தான; என் மாமன் புள்ளைய உட்கார வச்சு நான் வேலை செஞ்சா உனக்கெங்கலே நோவுது? உனக்கு தெம்பிருந்தா நீயும் வூட்ல போய் உன் பொஞ்ஜாதிய உட்கார வச்சு ஊழியம் பண்ணு. இல்ல மூடிட்டு போவே..... தேவையில்லாம சலம்புன ராட்டிப்புடுவேன்! கொஞ்சம் கூட நெஞ்சுல பயம் காணாம திரியுறானுவ எடுபட்ட பயலுவ!" என்று வசைமாரி பாடியவாறு வேலையை முடித்து விட்டு உள்ளே வந்தான் ராசு.
சற்று நேரத்தில் மறுபடியும் வெளியே சென்று தன் மனைவி போட்ட கோலத்தை கலையாமல் காவல் காத்து கொண்டு இருந்தவனிடம், "எலே ஐயா, சாப்பிட வாலே!" என்று அழைத்தார் ராசுவின் பாட்டி.
"இந்தா வர்றேன் அப்பத்தா!" என்று குரல் கொடுத்தானே ஒழிய உள்ளே கிளம்பவேயில்லை.
"என்னலே ராசா தெரணைக்கு காவல் காத்துட்டு இருக்கியாக்கும்....வாலே!" என்று சொன்ன தன் பாட்டியிடம்,
"எனக்கு இங்கயே போட்டு எடுத்தா! அந்த புள்ள இப்பத்தேன் அழகா கோலம் போட்டுட்டு போயிருக்கு. எவனாச்சும் வண்டியில போறேன்னு அழிச்சுட்டு போய்ட்டா இனியா புள்ள வெசனப்படும்ல....." என்று கேட்டவனிடம் புன்னகையுடன்,
"நல்லாத்தேன் பொஞ்ஜாதிய காப்பாத்துறியாக்கும்..... கிறுக்குப் பயபுள்ள..... போ! புள்ள கூட உட்கார்ந்து நல்லா சாப்பிட வை!" என்று விரட்டி விட்டார் பாட்டி.
இனியா அம்பைக்கு வந்து இரண்டு நாட்கள் முடிந்து விட்டது. இந்த இரண்டு நாட்களையும் அவள் நினைவுப் பெட்டகத்தில் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ளும் நாட்களாக ராசு மாற்றியிருந்தான். அவள் விருப்பத்தை அனுசரித்து தான் திருமணம் கொள்ள போகும் மாமன் மகள் என்று அனைவரிடமும் பறைசாற்றினான். அவளை கோவிலுக்கு, தோட்டத்தில் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு, அவனது கடைக்கு, பொருட்காட்சிக்கு என தன் மனைவியை எங்கெல்லாம் அழைத்து போக வேண்டும் என நினைத்து இருந்தானோ அங்கெல்லாம் மாமன் மகள் என்ற பெயரில் அழைத்துச் சென்றான்.
"அத்தாச்சி, இவுக நம்ம மாமா புள்ள...... நர்ஸிங் படிக்குறாவ; கொஞ்ச நேரம் இங்கண உங்க ஆஸ்பத்திரியில உதவிக்கு வச்சுக்குங்க. உங்களுக்கு இன்னிக்கு மாரியப்பன் பொஞ்ஜாதிக்கு பிரசவம் பார்க்க துணைக்கு ஆள் காங்கலைன்னு சொன்னீகல்ல...." என்று இழுத்தவனிடம்
"ஏமுலே.... நா வந்து எனக்கு ஆளு காங்கலைன்னு ஒங்கிட்ட
சொன்னேனாக்கும்..... நீ தானவே அந்த புள்ளைக்கு ட்ரைனிங் எடுக்குத மாதிரி இருக்கும் அத வரச் சொல்லவான்னு எங்கிட்ட கேட்டுட்டு இப்போ மாத்தி பேசுத?" என்று அந்த கிராமத்து மருத்துவர் ராசுவின் குட்டை உடைத்து விட ராசு இனியாவை பார்த்து அசடு வழிந்தான்.
சிறு சிரிப்புடன் அவனை நோக்கியவள், "உங்க முகத்துக்கு அசடு வழியறதெல்லாம் செட் ஆகல மிஸ்டர் ராசு! மீசைய முறுக்கிட்டு விறைப்பா சுத்துங்க. அது தான் நல்லா இருக்கு. ஆமா இங்க வந்ததுல இருந்து எனக்கு மரியாதை எல்லாம் பயங்கரமா இருக்கு. மலைக்கு வந்திருந்தப்போ, அதுக்கு முன்னாடி எல்லாம் ஒழுங்கா தானே பேசிட்டு இருந்தீங்க? இப்போ என்னாச்சு?" என்று ஓர் எதிர்பார்ப்புடன் கேட்ட இனியாவிடம்,
"இங்க எல்லாம் நம்ம ஒரு கோடு போட்டா மத்தவியல்லாம் சேர்ந்து ரோடே போட்டுப்புடுவாக. இந்த புள்ள என் பொஞ்ஜாதின்னு நானா சொல்லிக்கிட்டு கிடந்தா போதுமுங்கலா.... ஆமாவே கூவைகளா மொக்கை ராசு என் புருஷன்தேன்னு நீங்களும் சொல்லணுமாம்ல்ல..... அது வரைக்கும் மரியாதை எல்லாம் சகட்டுமேனிக்கு தேன் குடுப்பம்! அப்பத்தாதேன் இந்த யோசனை சொல்லுச்சு!" என்று சொல்லி விட்டு வெளியே சென்று அவன் அமர்ந்து கொள்ள இனியா தலையில் அடித்துக் கொண்டாள்.
இனியா அந்த கிராமத்து மருத்துவமனையில் மருத்துவருடன் செவிலியராக நின்று நல்ல படியாக பிரசவத்துக்கு உதவி புரிந்து ஒரு பெண் குழந்தையை அதன் அன்னையிடம் நீட்டினாள்.
"ரொம்ப நன்றிங்க நர்ஸம்மா! டாக்டரம்மா மட்டும் இருந்தாக்க ரொம்ப சிடுசிடுன்னு விழுவாக; துணைக்கு நீங்களும் இருந்ததால எனக்கு கொஞ்சம் தைரியமா இருந்துச்சு!" என்று அவளது கையைப் பற்றி சொன்ன அந்த இளம் தாயின் பாராட்டு இனியாவிற்கு தான் அப்போதே ஒரு நர்ஸ் ஆகி விட்டது போல் உணர்வை தந்தது. மருத்துவருக்கு நன்றி சொன்னவளிடம் தலையாட்டலுடன் கைகுலுக்கியவர்,
"நீ யாருல பொண்ணு; மொக்கை கூட்டியாந்துட்டு உங்கூடவே நிக்கான்..... இப்படி எல்லாம் எந்த பொண்ணு பின்னாடியும் அவன் போய் நாங்க பாக்கலையே?" என்று கேட்ட அந்த மருத்துவரிடம் சிரித்த முகத்துடன்,
"என் பின்னாடி வருவாரு டாக்டர்; யாருக்குமே தெரியாம கமுக்கமா தாலியே கட்டியிருக்காரு. பொண்டாட்டிக்காக இதைக் கூடவா செய்ய மாட்டாரு.... அய்யய்யோ அதை மட்டும் யார் கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொன்னாரு..... அப்புறம் ஊர்ல எல்லாரும் கடா விருந்து கேப்பாங்களாமே; அதனால முறைப்படி வீட்ல பேசி ஊரறிய கல்யாணம் பண்ணினதுக்கு பிறகு சொல்லிக்கலாம். அது வரைக்கும் மூச்சு விடாத புள்ளன்னு என் மாமன் சொன்னாரு. இது வரைக்கும் அவர் பேச்சை நான் மீறுனதேயில்ல டாக்டர். வெளியே யார் கிட்டயும் சொல்லிடாதீங்க. அக்கா நீங்களும் தான் சொல்லிடாதீங்க!" என்று பத்து முறை சொல்லி விட்டு சிரிப்புடன் வெளியேறினாள் இனியா.
"அடி ஆத்தி......பாரேன்டீ பாக்யம், பொண்ணு கிடைக்கல, பொண்ணு கிடைக்கலன்னு ஊரெல்லாம் ஏலம் போட்டுட்டு நம்ம மொக்கை அமுக்குணி கள்ளன் என்ன வேலை செஞ்சு வச்சிருக்கான் பாரேன்...... நமக்கு எதுக்கு பொல்லாப்பு; நாம நம்ம வேலைய பார்ப்பம்த்தா!" என்று வாயால் சொல்லிக் கொண்டு இருந்தவரின் மனது இதை முதலில் யாரிடம் சொல்லலாம் என்று யோசித்து கொண்டிருந்தது.
"என்ன நர்ஸம்மா, வாய் கொள்ளாத சிரிப்போட வர்றீக...... ராசு மேல கோபம் எல்லாம் போயிடுச்சா; கொஞ்சமாச்சும் பழி வாங்குவீகன்னு காத்துக்கிட்டு கிடக்கேன்..... மாரியப்பனுக்கு பொண்ணு பிறந்துருக்குன்னு இப்பத்தேன் சந்தோஷமா சொல்லிட்டு போறான். பின்னால அவுக அப்பனுக்கு ஒரு கஞ்சியாவது பாசமா ஊத்தும்; என்ன சொல்லுதீக?" என்று கேட்டவனிடம்,
"ப்ளீஸ்ஸ்ஸ்...... ஸ்டாப் இட்! ரொம்ப இரிடேட் பண்றீங்க மிஸ்டர் ராசு...... ம்ம்ம்! அந்த குட்டிப்பாப்பா அவங்க அப்பாவுக்கு கஞ்சி ஊத்தட்டும்; இல்ல கார்ன்ப்ளேக்ஸ் கலக்கி குடுக்கட்டும். அதெல்லாம் அவங்க பாடு. உங்களால என்னை இனியான்னு கூப்பிட முடியுமா? முடியாதா?" என்று கேட்டவளிடம்,
"ஸாரி மிஸ் இனியா விவேக், ஐ கான்ட்!" என்றான் ராசு நெஞ்சை நிமிர்த்தி.
அவனை பார்த்து ஒரு குறுஞ்சிரிப்புடன் கைகளை கட்டிக் கொண்டு நின்றவள், "மிஸ் இனியா விவேக்...... உங்க வாயால இப்படி கூப்பிட்டு கேக்கறப்போ நல்லா இருக்கு. பட் இன்னிக்கு நைட் இப்படி சொல்வீங்களான்னு தெரியல. உங்க ஊர்ல இருக்கிற எல்லாருக்கும் விருந்து வைக்க எவ்வளவு செலவாகும்?" என்று கேட்டவளிடம் புரியாத பாவத்துடன் சற்று கோபத்துடன்,
"எதுக்கு இப்போ ஊருக்கு எல்லாம் விருந்து வைக்கணும்? நாளைக்கு நீ இங்கிருந்து கிளம்பி உங்கொப்பன் வீட்டுக்கு போகப் போறியே..... அதுக்காகவாட்டீ?" என்று கேட்டான்.
"நாளைக்கு நான் ஊருக்குப் போனா உங்களுக்கு என்ன கஷ்டம் மிஸ்டர் ராசு? உங்களுக்கு நான் யாரோ ஒரு இனியா விவேக் தானே? எதுக்கு இப்படி கோபப்படுறீங்க......?" என்று கேட்டவளிடம் பதில் கூற முடியாமல் நரம்பு புடைக்க அடங்காத கோபத்துடன் முகம் சுணங்கி நின்றிருந்தான் இசக்கிராசு.
"வீட்டுக்கு போலாமா? குழம்புக்கு பத்து மிளகாய் அரைச்சா கூட அசராம கண்ணுல தண்ணி வராம சாப்பிடுறீங்க. அதனால இன்னிக்கி வேற ஏதாவது ட்ரை பண்ணணும்!" என்று சொன்னவளிடம் விரக்தி சிரிப்புடன்,
"எவ்வளவு கோபம் இருந்தாலும் நம்ம வூட்டு அடுப்படியில நின்னு, உங்கையால எனக்கு கஞ்சி காய்ச்சி தர்ற; வெறும் பத்து மிளகாய்க்கு பயந்துட்டு இந்த சுகத்தை எல்லாம் விட்டுக் குடுத்துடுவேனா...... அது கூட நாளைக்கு ராத்திரி வரைக்கும்தேன்; அதுக்கப்புறம் எப்போ கிடைக்குதோ, இல்ல கிடைக்காமலே போயிடுமோ..... உனக்கும், அப்பத்தாவுக்கும் நல்ல வக்கணையா சமைச்சு வச்சுட்டு என்னத்த வேணும்னாலும் என் தட்டுல போடு. சத்தம் காட்டாம சாப்புட்டு போறேன்!" என்று சொல்லி பெருமூச்சு விட்டான் இசக்கிராசு.
"உங்க கிட்ட பேசணும். கொஞ்ச நேரம் வீட்டுக்கு வர்றீங்களா?" என்று ஓர் தவிப்புடன் அவன் முகத்தை பார்த்து கேட்டவளின் முகத்தை பாராமல்,
"கடைக்கு போகணும்! வேலை இருக்கு. நான் வர்றதுக்கு நேரம் ஆகும். அப்பத்தாவும், நீயும் சாப்பிடுங்க!" என்று சொல்லி அவளை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்று விட்டான் இசக்கிராசு.
இனியாவிற்கு ராசுவின் செய்கைகள் அனைத்தும் குழப்பத்தை தான் தந்தது. ஷைலஜாவுக்கு அழைத்தாள்.
"லட்டு எப்போடீ ஊருக்கு வர்ற?" என்று கேட்ட தன் தோழியிடம்,
"இவ வேற! எப்போ கால் பண்ணாலும் இதைத் தான் கேப்பியா? நம்ம ஐடியா எல்லாம் வொர்க் அவுட் ஆகல ரூபிம்மா...... என்ன பனிஷ்மெண்ட் குடுத்தாலும் இவன் அதை எல்லாம் ஊதி விட்டுட்டு போயிட்டே இருக்கான்டீ, ஒரு வேளை நம்ம சின்னப் புள்ளத் தனமா ஐடியா பண்றோமோ? அவனைப் பார்த்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ப்ளீஸ் இதெல்லாம் விட்டுடலாமாடீ?" என்று சந்தேகமாக கேட்டாள் இனியா.
"லட்டு... நீ அவன் மேல கோபமா இருக்கியா? இல்லையா? உன் பேச்சை எல்லாம் கேட்டா அவன் கிட்ட நீ மெல்ட் ஆகிட்ட மாதிரி எனக்கு தோணுது!" என்றாள் ஷைலஜா.
"என்னன்னு தெரியல ரூபி; எனக்கு இவன் கம்பெல் பண்ணி தாலி கட்டினான்னு ஒவ்வொரு தடவையும் கஷ்டப்பட்டு நியாபகம் வச்சுக்க வேண்டியதா இருக்கு. இங்க வந்ததுல இருந்து எனக்கு மரியாதை குடுத்து பேசி என்னை வெறுப்பேத்துறான். பட் ஊருக்கு போகணும்ன்னு சொன்னவுடனே கோபப்படுறான். சோகமாகி அவாய்ட் பண்ணிட்டு போறான். அவன் கூட தனியா வந்தா அவனை நம்ம இஷ்டப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணி ஸாரி கேக்க வைக்கணும்னு நினைச்சேன். பட் இப்போ அதை என்னால செய்ய முடியல; ரொம்ப ட்ரான்ஸ்பரன்டா இருக்கான். அவன் கிட்ட நான் அட்ராக்ட் ஆகிட்டேன்னு நினைக்கிறேன்டா ரூபி! ஆனா இவ்வளவு நல்லவனா இருக்குறவன் ஏன் என்னை ஃபோர்ஸ் பண்ணினான்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும் ரூபிம்மா!" என்று இனியா தீர்மானமாக சொல்லியதும் ஷைலஜா சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.
"ஆல்ரைட் லட்டு! அவன் செஞ்ச தப்பையும் மீறி அவன் உன்னை அட்ராக்ட் பண்றான்னா, நீ உனக்கே தெரியாம அவனை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டன்னு நினைக்கிறேன். உன் மனசுல உள்ள விஷயத்தை எல்லாம் தெளிவா அவன் கிட்ட பேசிடு. ரெண்டு பேரும் மனசு விட்டு பேசினதுக்கப்புறம் அவன் சைடு ரீசன் வேலிடா இருந்ததுனா அதுக்கப்புறம் நம்ம யோசிக்கலாம்!" என்றாள் ஷைலஜா.
"ம்ப்ச்! என்னடீ ரூபி; அவனோட பாயிண்ட் வேலிடா இருக்குன்னா அதுக்கப்புறமும் என்ன யோசிக்கறது? சஹாயன்ல எத்தனை தடவை ட்ரைனிங்காக போயிட்டு வந்திருக்கேன் தெரியுமா; ஆனா ஒரு தடவை கூட டெலிவரி அட்டெண்ட் பண்ற சான்ஸ் கிடைக்கல. இவன் எனக்காக இந்த ஊர்ல இருக்கிற டாக்டர் கிட்ட பேசி டெலிவரி அட்டெண்ட் பண்ண பெர்மிஷன் வாங்கியிருக்கான். எனக்கு அந்த குட்டிப் பொண்ணை தூக்கி அவங்க அம்மா கிட்ட குடுக்கும் போது எப்படி இருந்தது தெரியுமா ரூபி; ஏதோ பெரிசா அச்சீவ் பண்ணிட்ட ஒரு ஃபீல்; அவனுக்கு ஒரு கிஸ் குடுக்கணும்ன்னு கூட தோணுச்சு தெரியுமாடீ....
வீட்டுக்குள்ள கூட பேசணும்ன்னு சொல்லி கூப்பிட்டேன். அவன் தான் ஏதோ வேலை இருக்குன்னு சொல்லிட்டு ஓடிட்டான்!" என்று சொல்லி வெட்கப்பட்ட இனியாவிடம்,
"ஏய் பிசாசே! என்னடீ நடக்குது அந்த ஊர்ல; தட் கை இசக்கிராசு..... சீம்ஸ் வெரி டேன்ஜரஸ்! உன்னை ஏதோ மெஸ்மரைஸ் பண்ணிட்டான்னு நினைக்கிறேன். உங்க டீலிங் முத்தத்தோட நிக்குமா..... இல்ல வேற லெவலுக்கு எகிறுமான்னு தெரியலையே...... வர வர இந்த வீட்ல என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது. ஆளாளுக்கு லவ் மூட்ல சுத்திக்கிட்டு இருக்குதுங்க. ஜீவாண்ணா கவி அக்காவோட என்கேஜ்மெண்ட் முடிச்சுட்டான்டீ, உனக்கு தெரியாதுல்ல....." என்று கேட்டவளிடம் அதிர்ந்து போய்,
"என்னடீ ரூபி சொல்ற...... நம்ம ஜீவா அண்ணாவா? நம்பவே முடியலையே....ஏன் எங்கிட்ட யாருமே சொல்லலை?" என்று ஆதங்கப்பட்டவளிடம்,
"அந்த ஃப்ராடு கவிக்கே சொல்லலையாம். ரொம்ப ஸிம்பிளா கவிம்மா ஷாப்ல வச்சு மோதிரம் மாத்தியிருக்காங்க. போட்டோஸ் ஷேர் பண்றேன் பாரு, நாளைக்கு தாத்தா பாட்டி, மாமா அத்தான் எல்லாரும் ஊர்ல இருந்து வர்றாங்க. மே பி உன் கல்யாணத்தோட சேர்த்து ஜீவாண்ணா கல்யாணமும் நடத்திடுவாங்கன்னு நினைக்கிறேன்!" என்றாள் ஷைலஜா.
"சரிடீ, நான் கொஞ்சம் சீக்கிரமா இங்க இருந்து கிளம்பறேன். வச்சுடட்டுமா..." என்று கேட்டு அழைப்பை முடித்து விட்டு யோசித்து கொண்டு இருந்தாள் இனியா.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro