Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 16

ஷைலஜா இனியாவை காணவில்லை என்று சொன்னதும் ஜெய், விவேக் ஆகியோர் முதலில் அந்த விஷயத்தை அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

"கூட்டம், சத்தம்னு கசகசன்னு இருக்குல்லடா ரூபி; நம்ம லட்டு எங்கேயாவது தனியா உட்கார்ந்து இருப்பா. நல்லா தேடிப் பார்த்தியா?" என்று கேட்ட தன் தந்தையிடம்,

"எல்லா இடத்திலயும் நல்லா தேடிட்டேன்பா; அஜு மாமா, ராம் மாமா கிட்ட கூட சொன்னேன். அவங்களும் தேடிப் பார்த்துட்டு இல்லன்னு சொன்னதுக்கு அப்புறம் ரொம்ப பயமாயிருக்குப்பா!" என்று நடுங்கிய குரலில் சொன்னவளை அணைத்துக் கொண்ட ஜீவானந்தன், "அப்பா எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க. நானும், பாகியும், விவேக் சித்தப்பாவும் இங்க இருக்கோம்! ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்துட்டா பெட்டரா இருக்கும்னு நினைக்கிறேன்ப்பா!" என்று சொன்னவனிடம் பதறிய பத்மா,

"நந்தும்மா..... அன்அஃபீஷியலா வேணும்னா ரெக்வெஸ்ட் பண்ணுங்க. நம்ம பொண்ணை காணும்னு தெரிஞ்சா என்னென்ன கேள்வியெல்லாம் வருமோ..... வயசுப் பொண்ணு, இன்னொரு வீட்டுக்கு வாழப் போற பொண்ணு இல்லையா.....!" என்று சொன்னவரை கோபப்பார்வையில் தகித்த பார்கவ்,

"என்ன பத்மாச்சி பேசுற..... லட்டுவை காணும்னு கவலைப்பட்டுட்டு இருக்கோம்! இந்த நேரத்தில போலீஸ் கம்ப்ளைன்ட் குடுக்கணும்னு ஜீவா நினைச்சா அதை நாலு பேருக்கு தெரியாம பண்ணுங்கன்னு சொல்லிட்டு இருக்க. நம்ம கிட்ட தப்பு இல்லாதப்போ நாம எதுக்கு பயப்படணும்? ஒரு வேளை நம்ம பொண்ணை யாராவது கடத்திட்டு போயிருந்தா.........
பரவாயில்லை; செஞ்சுட்டு போகட்டும்னு விட்ரலாம்ன்னு சொல்றியா?" என்று பார்கவ் கேட்க பத்மா அமைதியாகி விட்டார்.

"அப்பா, பெரியப்பா, மாமா எல்லாரையும் கூட்டிட்டு வீட்டுக்கு கிளம்புங்க. ஏய் ஷைலு...... அழுது அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருக்காதடீ.... எரிச்சல் வருது. வாயை மூடு. கவிம்மா எல்லாரையும் பார்த்துக்க! முக்கியமா இவளை அழ விடாம பார்த்துக்க! நிர்மலா அத்தை முகத்தை இப்படி தூக்கி வச்சுக்காத! லட்டு எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சு கொண்டு வர வேண்டியது எங்க பொறுப்பு!" என்று அனைவருக்கும் அவரவருக்கு ஏற்றவாறு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தான் பார்கவ்.

"தம்பி லட்டு எனக்கு ரொம்ப ஸ்பெஷல்டா. அவளைக் காணும்னு சொன்னதும் எனக்கு குலை நடுங்குது. நமக்கு நம்ம குழந்தைங்க எல்லாம் இன்னும் சின்னப் புள்ளைங்க தான்...... ஆனா என்ன இருந்தாலும் பத்மா பாட்டி சொன்ன மாதிரி இனியா ஒரு வயசுப் பொண்ணு. அவ மேல வேற யாரோட மூச்சுக் காத்து கூட படாம காப்பாத்திடணும். முடியும்ல ஆனந்த்?" என்று கேட்ட ஜெய் நந்தனிடம்,

"டென்ஷன் ஆகாதீங்கப்பா, ஒரு பிரச்சனை வர்ற நேரத்துல தான் உணர்ச்சிவசப்படாம, மனசால எதையும் யோசிக்காம புத்தியால யோசிச்சு முடிவெடுக்கணும். நீங்க கவலைப்படாம வீட்டுக்கு போங்க! என் தங்கச்சிக்கு எதுவும் ஆகியிருக்காது. நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்......... சும்மா விட்டுட மாட்டோம்; கிளம்புங்க!" என்று சொல்லி தன் தந்தையையும், தாய், தங்கை, அத்தைகளையும் சமாதானப் படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தான் ஜீவானந்தன்.

தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த விவேக்கின் அருகே வந்தமர்ந்த பார்கவ், "அங்கிள் இப்படி இடிஞ்சு போன மாதிரி உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம்? வாங்க ஸ்டேஷன் கிளம்பலாம்!" என்று அழைத்த பார்கவிடம் கண்கள் கலங்க,

"பாப்பாவுக்கு ரெண்டு வயசு இருக்கும் போதே என் வொய்ப் போயிட்டா பார்கவ். நான் என் மனசை தேத்திட்டு இனியாவுக்காக தான் இவ்வளவு நாள் வாழ்ந்துட்டு இருக்கேன். அழுகை வந்ததுன்னா கூட யாருக்கும் தொந்தரவா இருக்கக் கூடாதுன்னு நினைச்சு சத்தமில்லாம தான் அழுவா. அவளுக்கு யாரு தொந்தரவு குடுக்கணும்னு நினைச்சு இருப்பாங்கன்னு தெரியலையேப்பா....
அண்ணா வீட்டில இப்போ தான் எல்லாம் சரியாச்சு. இனிமே ரொம்ப சந்தோஷமா
இருப்பார்ன்னு நினைச்சேனே........ இப்ப அவளை நினைச்சு அழுதுட்டு இருப்பாரே; நான் என்ன செய்யட்டும்?" என்று கலங்கிய விவேக்கின் அருகே வந்தமர்ந்த ஜீவானந்தன் அமைதியான குரலில்,

"சித்தப்பா இன்னிக்கு காலையில ராசுன்னு ஒருத்தன்..... ஐ'ம் ஸாரி..... உங்க ரிலேட்டிவ் ஒருத்தர் வந்திருந்தாரே..... அவர் எந்த ஊரு?" என்றான்.

விவேக் ஜீவாவை ஒரு புரியாத பார்வை பார்த்து விட்டு, "அவனைப் பத்தி இப்போ எதுக்கு திடீர்னு விசாரிக்கிற ஜீவாம்மா? பொறுக்கி; அம்பை பய எஞ்சொந்தக்காரன் தான். ஆனா அவ்வளவு நல்லவன் கிடையாது. ஒரு வேளை அவன் தானா நம்ம இனியாவை.........!" என்று மேலே பேச வார்த்தைகள் வராமல் திணறிய விவேக்கிடம்,

"வந்ததுல இருந்து அவன் ஒரு மாதிரி டபுள் மீனிங்லயே பேசிட்டு இருந்தான் சித்தப்பா, இத்தன வருஷம் இல்லாம திடீர்னு இப்போ ஏன் வந்தான்.....இதுக்கு முன்னாடி இங்க வந்திருக்கானா?" என்று விசாரித்த ஜீவாவிடம்,

"இனியாவுக்கு முறை செய்றதுக்காக ஒரு தடவை வந்தான். இங்க நீ இருந்தாலும் உன் சொந்தத்தை எல்லாம் மறந்துடக் கூடாதுன்னு அவ பங்ஷனுக்கு அண்ணா ஊர்ல இருக்கிற எல்லா சொந்தத்தையும் கூப்பிட சொல்லி இருந்தாங்க. எல்லாரும் சொன்னதுனால அவன் தான் அவளுக்கு முறை செஞ்சான். ஆனா அப்பவே அவனுக்கு 23 வயசுப்பா.... ஆறு வருஷம் முழுசா முடிஞ்சுடுச்சுல்ல; அப்போ பார்த்ததுக்கப்புறம் இன்னிக்கு தான் அவனைப் பார்த்தேன் ஜீவா, நம்ம இனியாவுக்கு எல்லாம் அவனை அடையாளம் கூட தெரியுதோ..... என்னவோ!" என்று சொன்னவரிடம்,

"சித்தப்பா என் சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமா உறுதியாகிட்டே வருது. அவன் தான் இனியாவை  தூக்கியிருக்கணும்.  எதுக்கும் ஒரு தடவை அந்த ஊர்ல அவனுக்கும், உங்களுக்கும் தெரிஞ்ச யாரையாவது அவன் வீட்டுக்கு அனுப்பி ஏதாவது சந்தேகப்படுற மாதிரி நடக்குதான்னு பார்க்க சொல்றீங்களா?" என்று ஜீவா கேட்டு கொண்டிருக்கையில் அவனது அலைபேசி சப்தமிட்டது.

மகிழ்ச்சியில் முகம் மலர்ந்தவன், "இனியா தான் சித்தப்பா கூப்பிடுறா. பேசுங்க!" என்று அவர் கையில் போனைக் கொடுத்தான்.

கலங்கிய குரலில், "இனுக்குட்டி எங்கடா இருக்க ராசாத்தி?" என்று கேட்டவரிடம் ஒரு முரட்டுக்குரல்,

"என்ன மாமா புள்ளைய காணும்னு பரிதவிச்சுட்டு இருக்கியா...... பதறாத; உன் ராசாத்தி என் கிட்டதேன் இருக்காவ..... ஆனா மயக்கத்துல கிடக்காவ!" என்று திமிரான சிரிப்புடன் சொன்னான் இசக்கிராசு.

"எலேய்...... கோட்டிக்கார பயலே!
எம்புட்டு திமிரு இருக்கணும் உனக்கு! எங்க ஊர்ல வந்து எம்மவள தூக்கிட்டு போற அளவுக்கு உடம்புல தெனவு எறிடுச்சாலே உனக்கு......ஆக்கங்கெட்ட கூவ....... அந்தால வந்தேன்.... பாளை அருவாள எடுத்து உம் குடலை உருவிப்புடுவேன்.  மரியாதையா எம் பொண்ணை என் கிட்ட குடுத்துட்டு ஓடிடு!" என்று விவேக் தொண்டை நரம்பு புடைக்க கோபத்தில் பேசிக் கொண்டிருந்த போது இசக்கிராசுவின் சிரிப்பு அவரை மேலும் வெறியேற்றியது.

"ரொம்ப பயந்து பயந்து வருது மாமா.....
இப்படியெல்லாம் சிரிப்பு வார மாதிரி மிரட்டாதீக; என்ன கேட்டீக..... உம்ம மவள தூக்கிட்டு போற அளவுக்கு தெனவு எறிடுச்சாலேன்னா..... நீரு இருக்குத வூட்ல ரெண்டு பேரு இருந்தானுவளே.....
அவனுங்கட்ட கேட்டுப் பாருங்க.... உம்ம மருமகன் ஒரு தினவெடுத்த சண்டியன்தேன்னு சொல்லுவானுவ. எம் முறைப்பொண்ணை நான் தூக்கிட்டு வந்ததுக்கு எவன் கிட்டயும் அனுமதில்லாம் வாங்கிட்டு இருக்க வேண்டியதில்லல்லா.... மறுவீடு போற சடங்குக்கு வந்து பொண்ணையும், மாப்பிள்ளையையும் வந்து அழைச்சிட்டுப் போங்க!" என்று சொன்ன ராசுவிடம், பதட்டமும் பயத்துடனும்

"எலேய் எம் புள்ளைய என்னடா பண்ணி வைச்ச?" என்று கேட்டார் விவேக்.

"தூக்கிட்டு வந்து என்ன பண்ணுவாய்ங்க...... கல்யாணம் தேன்! என்ன நா அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டத நம்ப முடியாம உம்ம மவளுக்கு மயக்கம் வந்துடுச்சு....
அதேன் விசனப்பட்டுக்கிட்டு என் பொஞ்ஜாதி பக்கத்திலேயே உட்கார்ந்து கிடக்கேன். கண் முழிச்சா சமாதானம் செய்யணும்ல...!" என்று சொல்லி விட்டு அவன் அலைபேசியை வைத்து விட விவேக் தலையிலடித்துக் கொண்டு மடங்கி அமர்ந்து விட்டார்.

"என்னாச்சு அங்கிள்.....?" என்று கர்ஜித்த பார்கவிடம் விவேக்,

"இனியாவை தூக்கிட்டு போய் அவளை கட்டாயக் கல்யாணம் பண்ணியிருக்கான் பார்கவ். மயக்கத்துல இருக்கான்னு சொல்றான். அண்ணாவும், அண்ணியும்
அவ கல்யாணத்தை பத்தி கனவு கண்டு வச்சிருந்தாங்க. இப்போ அவங்க கிட்ட என்னத்த சொல்லுவேன்; ஜீவாம்மா இனியா எனக்கு வேணும். நாம போய் அவன் கிட்ட கேட்டுப் பார்ப்பமா?" என்று மிட்டாய் தொலைத்த குழந்தை தன் பெற்றோரிடம் புகார் செய்வது போல் ஜீவாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார் விவேக்.

ஜீவானந்தன் அமைதியாக நின்று கொண்டு இருந்தாலும் அவனுக்குள் இருக்கும் ஒரு கோப எரிமலை வெடிப்பு எப்போது நடைபெறும் என்று தெரியாத அளவுக்கு இறுக்கமான பாவத்துடன் நின்று கொண்டு இருந்தான்.

தன் தந்தையிடம் நிலைமையை விளக்கியவன் வீட்டுக்கு வந்து ஜெய் நந்தனையும், விவேக்கையும் அழைத்து உடனே அம்பாசமுத்திரத்திற்கு கிளம்ப வேண்டும் என்றான்.

"நாங்களும் வர்றோம்டா ஜீவாம்மா!" என்று கேட்ட அர்ஜுனிடம்,

"வேண்டாம் மாமா; நிறைய பேர் போனா சரிப்பட்டு வராது. எல்லாரும் அவன் மேல கொலைவெறில வேற இருக்கோம்! இது அவனுக்கு நல்லதில்ல. புரியற மாதிரி சொல்ல முயற்சி செய்வோம். இல்லன்னா..... ஜெயில் கம்பிக்கு பின்னால தான் கிடப்பான்!" என்று அடிக்குரலில் சீறியவனிடம் அழுகையுடன் ஷைலஜா,

"அண்ணா லட்டுவை எப்படியாவது நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுண்ணா....... ரொம்ப பயந்து போய் இருப்பா. அவ வந்ததுக்கப்புறம் அவ கிட்ட எல்லாத்தையும் நான் பேசிக்குறேன்!" என்று சொல்லி விட்டு மறுபடியும் விம்மியவளை, "இப்போ வாயை மூடப் போறியா இல்லையா ரூபி.....?" என்ற நிர்மலாவின் அதட்டல் சற்று அடக்கியது.

"ம்ப்ச்! ஷைலுவை எதுக்கு அத்தை இப்போ திட்டுற?" என்று கேட்டு அவளை அணைத்தபடி நின்று கொண்ட கவிப்ரியாவிடம், "கவி அக்கா!" என்று மருண்டு போய் ஒண்டிக் கொண்டாள் ஷைலஜா.

"எதுக்கு திட்டுறாங்களா...... ஏற்கனவே மூணு பேரும் அந்த பையனை வெட்டலாமா, குத்தலாமான்னு நின்னுட்டு இருக்காங்க. இதுல இவ வேற..... உடனே இனியாவை கூட்டிட்டு வந்துடுன்னு அவ அண்ணனுக்கு கட்டளை போட்டுட்டு இருக்கா. அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு அவன் சொன்னது எல்லாருக்கும் நியாபகம் இருக்கான்னு எனக்கு தெரியல. அர்ஜுன் அண்ணா நீங்க எல்லாம் ஊருக்கு கிளம்புங்க. மாமா, அத்தை நீங்க ரெண்டு பேரும் நம்ம ஷைலுவை கூட்டிட்டு எஸ்டேட்டுக்கு கிளம்புங்க. நானும் இவங்க கூட சேர்ந்து அம்பைக்கு கிளம்பறேன். மல்லிகா அக்கா எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வைங்க!" என்று உத்தரவாக சொல்லி விட்டு உள்ளே சென்றார் நிர்மலா.

இவ்வாறு அவர் குரலை உயர்த்திப் பேசும் தொனி அவ்வப்போது வீட்டில் நடக்கும். ஜெய் நந்தன் என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் திகைத்து நிற்கும் தருணங்களில் கண்டிப்பாக நடக்கும் என்பதால் அனைவரும் மௌனமாக சாப்பாட்டு மேஜையில் வந்தமர்ந்தனர். சாப்பிட ஆரம்பித்த பின்னரே ஒவ்வொருவருக்கும் தன் பசி தெரிய ஆரம்பித்தது. கவிப்ரியா ஜீவாவிடம் வந்து, "பார்த்து போயிட்டு வா நந்து. கோபப்படாம சிச்சுவேஷனை பொறுமையா ஹாண்டில் பண்ணு. நான் ஊருக்கு கிளம்பறேன். பை நந்து!" என்றாள் சற்று வருத்தத்துடன்.

"சென்னை ரீச் ஆகிட்டு கூப்பிடு கவி; பை!" என்றவன் அதற்கு மேல் அவளிடம் ஏதும் பேசாமல் சென்று விட்டான்.

அர்ஜுனும், பலராமும் ஜெய் நந்தன் மற்றும் விவேக்கிடம் வந்து தேவை ஏற்பட்டால் தங்கள் இருவரையும் தயங்காமல் அழைக்குமாறு சொல்லி விட்டு கிளம்பினர்.

ஜெயந்தனும், பத்மாவும் ஷைலஜாவை கூட்டிக் கொண்டு துரையுடன் எஸ்டேட்டுக்கு கிளம்ப ஜீவானந்தன் தன் தங்கையை மீட்டு வர அம்பைக்கு நள்ளிரவில் பயணத்தை தொடங்கினான்.

மல்யுத்தப் போட்டிக்கு பிறகு (அது தான் சகோஸ் ப்ளாஷ்பேக் போகப் போறோம்) இனியா இசக்கிராசுவின் அருகே வந்தாள்.

"ஹலோ ஸார், என் பேரு இனியா. நைஸ் டூ மீட் யூ! ஆக்சுவலி உங்களுக்கு தேங்க்ஸ் சொல்றதுக்காக வந்தேன். இப்போ ரெண்டு பேரு கூட போட்டி போட்டீங்கல்ல..... அதுல ஒருத்தர் எங்கண்ணா, இன்னொருத்தர் எங்க  அத்தான்.... ரெண்டு பேரும் அப்பப்போ டைம் கிடைக்கிறப்போ சிலம்பம், கராத்தே, பாக்ஸிங், மல்யுத்தம்னு கத்துக்கிட்டு இருக்காங்க. பட் உங்களை பார்த்தா ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் ஆனவர் மாதிரி தெரிஞ்சது. இருந்தாலும் எங்க அண்ணா, அத்தானுக்கு விட்டுக் குடுத்ததுக்காக தேங்க்ஸ் ஸார்!" என்று சொல்லிய தன் மாமன் மகளை கண் பார்வையையும், கவனத்தையும் வேறு எங்கும் திருப்பாமல் ரசித்து கொண்டு இருந்தான் ராசு.

"ஒன் கிட்ட..... மன்னிச்சிக்கிடுங்க, ஒங்க கிட்ட ஒண்ணு கேக்கலாமா?" என்று அவன் அனுமதி கேட்க இனியா அனுமதி அளித்தாள்.

"இன்னும் கொஞ்சம் ஒரக்க பேசுங்க. பேசுறதுல  பாதி காதுலயே விழல" என்று ராசு சொல்ல இனியா புன்னகையுடன் அவனிடம் இருந்து விடைபெற்றாள்.

"மறுபடியும் ஒரு நிமிஷம்!" என்று சொன்னவனை திரும்பி கேள்வியாக நோக்கியவளிடம்,

"உங்கண்ணன், உங்க அயித்தானுக்கெல்லாம் போட்டியில ஜெயிப்ப அம்புட்டு சூளுவா விட்டுக் குடுத்திருக்கேனே.... எங்கூட சேர்ந்து ஒரு கலர் குடிக்கலாம்லா.....!" என்று கேட்டவனிடம் ஒத்துக் கொண்டு அவனுடன் சென்றாள் இனியா.

குளிர்பானம் அருந்தி முடித்ததும் தூக்கம் வருவது போல் தோன்ற ஷைலுவிடம் காருக்கு செல்வதாக சொல்லி விட்டு சென்றவளை தூக்கி செல்வது ராசுவுக்கு மிகவும் சுலபமாக இருந்தது. ஆனால் அந்த அரை மயக்கத்தில் கூட இனியா அவன் ஸ்பரிசத்தை உணர்ந்து,

"எங்க தூக்கிட்டு....யாரு நீ.....ங்க?"  என்று குழறலாக கேட்டாள்.

ராசு புன்னகையுடன், "மாமன் தான்ட்டீ..... பயப்படாத!" என்று சொன்னதும், "அர்ஜுன் மாமாவா?" என்று கேட்டவாறு அவளது கண்கள் தூக்கத்திற்கு சென்றிருந்தன.  தன் அப்பத்தாவின் தூக்க மாத்திரை ஒன்றை தான் ராசு பயன்படுத்தி தனது மாமனின் மகளை தூக்கி சென்று கொண்டிருந்தான்.
தன்னை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை என்பதை கூட ராசு பொறுத்துக் கொண்டான். ஆனால் மாமன் என்று சொன்னவுடன் வேறு யாரையோ அரை மயக்கத்தில் இருந்த போதும் சரியாக நினைவில் வைத்திருக்கிறாள் என்பதை தான் அவனால் தாங்க முடியவில்லை.

தன் அப்பத்தாவின் அனத்தல் தாங்க முடியாமல் தான் ராசு திருமணம் செய்து கொள்ள சம்மதித்தான். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக பெண் பார்க்கும் படலம், பெண் வீட்டாரின் மறுப்பு, பெண்ணுக்கான தேடல் என்று கல்யாணம் செய்வதற்கு இவ்வளவு போராட்டம் அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

"நம்ம சொந்தத்துல எவனுக்கும் பொண்ணு இல்லையா அப்பத்தா....?" என்று கேட்ட ராசுவிடம் விவேக்கின் மகள் இனியாவை பற்றி சொன்னார் அந்த மூதாட்டி.

"ஆமால்ல..... வெள்ளரிப்பழம் மாதிரி மாமன் மவ இருக்கையில என்னத்துக்கு நான் இம்புட்டு நாளா பொண்ணுக்கு தேடி திரிஞ்சுட்டு கிடந்தேன்.....நா ஒரு மடப்பய, இவ்வளவு மாசத்த வீணாக்கிப்புட்டேன். சரி பரவாயில்லை விடு, மாமன் மவ தேன் என் பொஞ்ஜாதி......என்ன அப்பத்தா சொல்ற?" என்று கேட்ட தன் பேரனிடம் மகிழ்ச்சியுடன் தலையசைத்தார் ராசுவின் பாட்டி. ஆனால் இனியாவை மணந்து கொள்ள தன் பேரன் சில குறுக்கு வழிகளை தான் கையாள போகிறான் என்று அவர் அறிந்திருக்கவில்லை.

இனியாவின் உறக்கம் கலைந்து அவள் எழுந்ததும்  இடம், படுக்கை அனைத்தும் புதிதாக இருக்கவும் அரண்டு போன தோற்றத்தில் தான் தலையைப் பிடித்துக் கொண்டு எழுந்தாள். சிரமப்பட்டு எழுந்து விட்டாலும் விட்டால் இன்னும் சில நேரம் தூங்கலாம் என்பது போல இருந்தது அவளுக்கு. தெளிவாக எதையும் சிந்திக்க முடியாததால் எழுந்து சென்று முகத்தை நன்றாக தண்ணீர் அடித்து கழுவினாள். சற்று தெளிவு பிறந்தது.

"ஏட்டி சிட்டு...... கண்ணு முழிச்சுட்டியா? கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று விரலில் சிகரெட்டை பிடித்துக் கொண்டு மூக்கிலும், வாயிலும் வழியும் புகையுடன் அறையின் பால்கனியில் நின்று கொண்டு  பேசியவனிடம்,

"முதல்ல உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும். எனக்கு சிகரெட் ஸ்மெல் பயங்கர அலர்ஜி ஸார். ஒண்ணு அதை வாயில வைச்சுக்கோங்க. இல்ல எங்கிட்ட பேசுங்க. உங்க அப்பா, அம்மா எல்லாம் உங்களை கண்டிச்சு, தட்டி குடுத்து வளர்க்கலையா? சிகரெட் பிடிக்கிறது உங்க உடம்புக்கு மட்டும் இல்ல, பக்கத்தில நிக்குற ஆளுங்களுக்கும் கெடுதல் பண்ற விஷயம். கீழே போடுங்க!" என்று அவள் சொன்னதும் அவன் யோசிக்காமல், "எங்க அம்மையும் இப்படித்தான் என்ன வையும், எப்பவாவது தான்ட்டீ..... கொஞ்சம் படபடப்பா இருந்தது. அதான்.....!" என்று சொன்ன படி சிகரெட்டை கீழே போட்டு காலால் அழுத்தினான்.

"இப்போ இரண்டாவது விஷயம் முதல் முறையா பார்க்குற பொண்ணு கிட்ட இப்படி தப்பா பேசக் கூடாது. நீங்க யாருன்னே எனக்கு தெரியாது. ஒரு ஹெல்ப் பண்ணீங்க. தேங்க் பண்ணேன். அதோட முடிஞ்சது. இப்போ எங்க என்ன தூக்கிட்டு வந்துருக்கீங்க...... வீட்ல என்னைக் காணும்னு எல்லாரும் கவலைப்படுவாங்க ஸார்! தயவு செஞ்சு தப்பா எல்லாம் பேசாம என்னைக் கொண்டு போய் வீட்ல விட்டுடுங்க!" என்று சொன்னவளிடம் சிரிப்புடன்,

"என்னட்டீ பூனைக்குட்டிய தடவிக் குடுக்குற மாதிரி பேசிட்டு இருக்க....நல்லா ஒரப்பா பேசு. மொதத்தடவை பார்க்குத பொண்ணு கிட்டதேன தப்பா பேசக் கூடாதுன்னு சொன்ன..... நீ என் முறைப்பொண்ணு தேன், உங்கிட்ட கல்யாணத்தை பத்தி பேசலாம். கல்யாணமும் செஞ்சுக்கலாம். எனக்கு எல்லாத்துக்கும் உரிமை இருக்கு. இந்தா இதுல சீலை, நகை, எல்லாம் இருக்கு. பிடிச்சிருந்தா போட்டுக்க. இல்லன்னா இந்த உடுப்புலயே உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்!" என்று சொன்னவனிடம் சொன்னதை நடத்தி முடிப்பேன் என்ற பிடிவாதம் தெரிந்தது.

"நீங்க என் ரிலேட்டிவா..... எனக்கு தெரியாது. பட் ரிலேட்டிவா இருந்தாலும் உங்களை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது ஸார். எங்க பெரியப்பா சொல்றவரை தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்!" என்றவளிடம் சற்று கோபத்துடன்,

"நிஜமான சொந்தமெல்லாம் உனக்கும், உங்கொப்பனுக்கும் கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது. எவனோ வேலை குடுத்த மொதலாளியை போய் பெரியப்புங்கிற! அவன் குடும்பம் மொத்தத்தையும் முறை வச்சு கூப்பிட்டுட்டு திரியுற; முறை மாமனை போயி ஸாரு கடைஞ்சு வச்ச மோருங்கிற? என்னங்கடீ இது உங்க நியாயம்..... வெரசா கிளம்பி வா புள்ள. நாம இப்போ உங்க ஊர்ல தேன் இருக்கம். சீக்கிரம் கல்யாணத்தை பண்ணிட்டு அம்பைக்கு கிளம்பணும்லா!" என்று சொன்னவனிடம்,

"என்னை ப்ளான் பண்ணி கிட்னாப் பண்ணியிருக்கீங்க. இதுவே பெரிய தப்பு. இதுக்கு மேல ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் வேறன்னா அது ரொம்ப தப்பு! எங்க வீட்ல கம்ப்ளைன்ட் குடுத்துட்டா நீங்க ஜெயில்ல இருக்கணும்!" என்ற இனியாவிடம் அழகான சிரிப்புடன்,

"பரவாயில்லையே.... என் மாமன் மகளுக்கு ஸாருங்கிற வார்த்தை வாயில இருந்து காணாம போயிடுச்சு. உன்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டா ஜெயில்ல போட்டுடுவாகளா..... அதையும் தேன் பார்ப்போம்! இதுக்கு மேல பேசிக்கிட்டு இருந்தால்லாம் வேலைக்காகாது. இந்தால வா!" என்று சொல்லி அழுத்தமான குரலில் அவளை அழைத்தான் இசக்கிராசு.

இனியாவின் கண்கள் படுக்கையில் கிடந்த அவளது ஹேண்ட்பேக் மேல் பதியவும் அவன் சிரிப்புடன், "என்ன தேடுறவ? இதத்தானா?" என்று தன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த அலைபேசியை தொட்டுக் காட்டினான்.

"குடுங்க அதை..... நான் ஒரு கால் பண்ணணும்!" என்று அலைபேசிக்காக கையை நீட்டியவளின் கையைப் பற்றி இழுத்து தன் தோளில் கிடத்திக் கொண்டவன்,

"வீட்டுக்கு பேசறதெல்லாம் பொறவு பண்ணலாம். இப்போதைக்கு என் ஸ்நேகிதன் வீட்டு பூசரூம்ல கல்யாணம் பண்ணிக்கலாம். பொறவு ஊருக்கெல்லாம் கறி விருந்து போட்ரலாம். சரிதானா அழகி!" என்று கேட்டவன் அவள் மறுப்புக்கும், அழுகைக்கும், ஓட்டத்திற்கும், பயத்திற்கும் ஈடு கொடுத்து அவளைத் தன் மனைவியாக்கி மங்கல நாணை அவள் கழுத்தில் அணிவித்த போது கனவில் கூட இப்படி ஒரு திருமணத்தை எதிர்பார்த்திராத  இனியா அது நடந்து முடிந்திருப்பதை உணர்ந்து தன் சுய உணர்வை இழந்து மயக்கமுற்றாள்.

"உன்ன கல்யாணம் செஞ்ச முறை வேணும்னா தப்பா இருக்கலாம். ஆனா உசுருள்ள வரைக்கும் உன்ன என் கண்ணுக்குள்ள வச்சு சத்தியமா பார்த்துப்பேன்டீ!" என்று மயங்கியிருந்த தன் மனைவியிடம் சொல்லி தனக்குத் தானே சிரித்து கொண்டு அவள் கையைப் பற்றி தன் இதழ் பதித்தான் இசக்கிராசு.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro