Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நாணல் - 16




"ஏன்டா உனக்கு பசிச்சா நீயே சாப்பாடு வச்சுக்க மாட்டியா, எப்ப பாரு இவனுக்கு நேரம் காலம் பாக்காம நாம தான் சாப்பாடு போடணும்"

விஷ்ணுவின் அன்னை சலிப்போடு சமையலறை உள்ளே செல்ல குளித்து இடையோடு ஷார்ட்ஸ் மற்றும் உள் பணியனோடு மட்டுமே வந்த விஷ்ணு அன்னையின் கொதிநிலையை வித்யாசமாக பார்த்தான். 

தந்தையை திரும்பி பார்க்க அவர் முகமும் ஏதோ சரியில்லை என காட்டியது.

"உங்க கையால ஒரு தோசை சாப்பிட்டாலும் அதோட ருசியே தனி தானே ம்மா" அன்னைக்கு காக்கா பிடித்த மகனை திரும்பி அவர் முறைக்க, அமைதியாக தம்ளரில் தண்ணீரை நிரப்பினான்.

'ஏன் இவ்ளோ சூடு?' பெரியவன் வாயை அசைத்து சகோதரனிடம் கேட்க புத்தகத்தில் ஒரு கண்ணும் சகோதரன் திட்டு வாங்குவதில் ஒரு கண்ணையும் வைத்திருந்த சிறியவன் தோளை குலுக்கி பதில் கொடுத்தான்.

கையில் தண்ணீரை ஊற்றியவன் அதை சகோதரன் நோக்கி தெளித்தான், "எப்ப பாரு புக்கும் கையுமாவே இரு" என்று குறைப்பட்டான்.

"ஏன் அவன் அப்டி இருக்குறதுல என்ன தப்பு, உன்ன மாதிரி ஏனோ தானோனு படிச்சு இருக்கணுமா?"

"என் படிப்புக்கு என்னவாம்?" - விஷ்ணு

"அவனோட அந்த ஏதோ தானோ படிப்பு தான் இப்ப நாம இருக்க இந்த வீட்டை கொடுத்துச்சு" என்றார் விஷ்ணுவின் தந்தை மனைவியை முறைத்து.

"வீடு வாசல் இருக்கு, இல்லைனு சொல்லலையே. இதோ அவனுக்கு ஒரு வாழ்க்கை அமையிதா?"

"மா அண்ணா சாப்பிடட்டும் ம்மா" என்றான் சகோதரனும்.

விறுவிறுவென உள்ளே நடந்தவர் ஏற்கனவே ஊற்றி வைத்திருந்த இட்லியை எடுத்து வந்து வைத்தார். அவர் சென்று வந்த வேகமே அவர் கோவத்தை இன்னும் எடுத்து கூறியது. விஷ்ணுவுக்கு தேவையானவை அனைத்தையும் தட்டில் வைத்தவர் அவன் உண்டு முடிக்கும் வரை தான் பொறுத்தார்.

"இப்ப சொல்லுங்க ஏன் இந்த கோவம்?"

"சொன்னா தீத்து வச்சிடுவியாடா" இதற்கும் முறைப்பு தான் அன்னையிடம்.

'என்னடா இது கொடுமையா இருக்கு' என நினைத்தவனோ அமைதியாகிவிட்டான்.

அவருக்கும் மகனிடம் உண்மையை கூற தயக்கம். அவன் மனம் நோகாதா என தவித்தார்.

"சொல்லி தானே ம்மா ஆகணும் எதுக்கு தயக்கம்" என்றார் மனைவியிடம் விஷ்ணுவின் தந்தை.

"சொல்லுங்க ம்மா" சலிப்பாக அன்னை முகம் பார்த்தான் விஷ்ணு.

"அந்த பொண்ணு வீட்டுல வேணாம் சொல்றாங்க விஷ்ணு"

"எந்த பொண்ணு?" தெரியாமல் விழித்தான்.

"உன்னக்கு பாத்த பொண்ணு தான்டா. அப்பயே சொன்னேன் பேசி முடிச்சிடலாம்னு பிடி குடுத்தே பேச மாட்டிக்கிறான். எப்ப பாரு அந்த குடவுன் குடவுன்னு அங்கையே கெடக்குறான். அதுனால தான் இந்த சம்மந்தம் போச்சு. நல்ல குடும்பம்" புலம்பி தள்ளினார் அன்னை.

"என்ன பெரிய நல்ல குடும்பம்? நல்லவங்கனா இந்த மாதிரி நேரத்துல தான் கூட நிக்கணும். அப்போ அவங்க சொத்து பணத்தை பாத்து தான் வந்துருக்காங்க" என்றார் விஷ்ணு தந்தை.

"அப்டி எல்லாம் இல்லைங்க, அவங்க சொன்னதே, அவங்க பொண்ணு வந்த நேரம் இப்டி ஆகிடுச்சுனு யாரும் பேசிட கூடாதுனு கவலை தான் பட்டாங்க"

"அதெல்லாம் சும்மா பேச்சுக்கு சொல்றதுடி. நாம சொன்னோமா, இல்ல தயங்கி அவங்ககிட்ட சம்மந்தம் வேணாம்னு சொன்னோமா?"

"ப்ச் விடுங்க ப்பா. வேணாம்னு சொன்னதை எதுக்கு இவ்ளோ தூரம் பேசணும்?" சிறு உணர்வுகளின் வெளிப்பாடும் அவனிடத்தில் இல்லை. யாருக்கோ வந்த செய்தி போல் எளிதாக கடந்துவிட்டான்.

"உனக்கு கவலையே இல்லையா ன்னா?" சகோதரன் விக்ரம் கூட வியந்து பார்த்தான் விஷ்ணுவை.

"கவலை பட என்ன இருக்கு. தொழில் இல்லாம நிக்கிறவன் தானே நான்? இதெல்லாம் முன்னாடியே எதிர் பாத்து தான் வச்சிருந்தேன்"

"என்னடா தொழில் இல்லாம இருக்க? சேதாரம் ஆச்சு அதுக்குன்னு எதுவுமே இல்லனு ஆகிடுமா?"

தந்தை கேட்ட கேள்வியில் அமைதியாக எழுந்து நின்றவன், "இனி இந்த கல்யாண பேச்சு வேணாம்" என்றுவிட்டான்.

பெற்றவர்களுக்கு மனம் நொந்துபோனது. பல வருடங்கள் அவனிடம் மன்றாடி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தனர். இப்பொழுது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் கதையாகி போய்விடுமா என அஞ்சிவிட்டனர்.

"யாரோ ஒருத்தி வேணாம்னு சொல்லவும் நீ எதுக்கு கல்யாணம் பண்ணாம இருக்கனும்? உனக்கு என்ன வயசாடா திரும்புது முப்பதை தொட போற இப்பவே வயசை சொல்ல ஆரமிச்சிட்டாங்க சிலர்,

அதையும் மீறி வந்து உன்ன பத்தி விசாரிக்கிறவங்க உன் கோவத்தை பாத்து பயந்து வரவே மாட்டிக்கிறாங்க. ஈஸியா வேணாம்னு சொல்ற, நான் அந்த பொண்ணு வீட்டுல மறுபடியும் பேசி பாக்குறேன்"

"ஒன்னும் வேணாம்" குரல் உயர்த்தி கத்தியவன் எழுந்த வேகத்தில் அன்னையே அரண்டு போனார்.

"இனிமேல் அவனுங்களே வந்து கால்ல விழுந்தாலும் எனக்கு அந்த பொண்ணு வேணாம். என் கோவத்தை தெரிஞ்சு, என் கஷ்ட காலத்துல என் பக்கத்துல நிக்கிற பொண்ணா பாருங்க.

அதுக்கு எத்தனை வருஷம் ஆனாலும் பிரச்சனை இல்ல, அது யாரா இருந்தாலும் கட்டிக்கிறேன்" பெற்றோர் இருவரையும் பார்த்தவன் தந்தை தலையை அசைத்த பிறகு தான் மேலேறி சென்றான்.

"எனக்கு இவனோட பிடிவாதம் நினைச்சா பயமா இருக்குங்க. மொத வேலைக்கு போகலனு கவலை இருந்துச்சு, அப்றம் ஊர் எல்லாம் வாங்குன கடனை அடைச்சு நிப்பானான்னு கவலை இருந்துச்சு.

அதுல இருந்து வெளிய வந்து பொண்ணு பாக்கலாம்னு பாத்தா இன்னும் பெருசா தொழில் பண்ணிட்டு தான்னு சொல்லிட்டான், அப்றம் வீடு. எல்லாம் முடிஞ்சு நல்லது நடக்க போற நேரமா இப்டி ஆகணும்? என் புள்ள மனசு எவ்ளோ வருத்தத்துல இருக்கும்?" மன வேதனையில் வாட வாய்விட்டு கணவனிடம் அழுதார்.

"அவன் அதை பெருசா எடுத்துக்கலமா நீ ஏன் இவ்ளோ வருத்தப்படுற? அவனுக்கு பெருசா ஆசை கூட இல்ல போல" ஒரு யூகமாக மகன் சென்ற வழியை பார்த்து கூறினார்.

"அவன் வெளிய காட்டல, அவனை பத்தி உங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோ தான். வைராக்யம் புடிச்சவன், எதையும் மனச திறந்து சொல்ல மாட்டான். நமக்காக உள்ளேயே வச்சுக்குவான்.

அவன் கூட இருக்க எல்லாரும் கல்யாணம் ஆகி குழந்தை குட்டினு இருக்குறத பாத்து அவன் மனசு ஏங்காதா? இல்ல ஆசை இல்லாம தான் அன்னைக்கு பொண்ணு பாக்குறப்போ அவ்ளோ சந்தோசமா வந்தானா? இப்போ பாருங்க இத்தனை கண்டிஷன் வேற, நா எங்க போய் பொண்ணு தேடுவேன்? கிறுக்கன்."

விக்ரம், "ம்மா அண்ணனை திட்டுறீங்களா இல்ல பாராட்டுறீங்களா?" இளையவன் சூழலை இலகுவாக்க சிரிப்போடு கேட்க அன்னை அதற்கும் முறைத்தார்.

"சரி முறைக்காதீங்க, உங்களுக்கு என்ன பொண்ணு தானே வேணும்? நல்ல சாய்ஸ் அனாயா அக்கா தான்"

மனதில் பல நாட்களாக உருவாகியிருந்த எண்ணத்தை போட்டு பெற்றோரின் முன்பே அடித்து உடைத்தான் இளையவன்.

பெற்றவர்கள் அதிர்ந்து போயினர், அந்த எண்ணத்தில் அவர்களுக்கு துளியும் யோசனை கூட தேவைப்படவில்லை. உடனே சிந்தனையின் சாயல் பெற்றவர்கள் கண்களில்.

"நடக்குறத பேசு" என்றார் தந்தை உடனே.

அன்று இளைய மகன் கூறும் பொழுதே அனாயாவை ஆராய தான் செய்தார். எந்த குறையும் கூறும் நடவடிக்கை இல்லை. ஆனால் மனைவியை எண்ணி அந்த எண்ணத்தையே ஓரம் வைத்துவிட்டார்.

"இதான் ப்பா நாம. விஷ்ணு அண்ணாக்கு ஏத்த ஜோடிய ஊர் மொத்தமும் தேடுறீங்க, ஆனா கண்ணனுக்கு முன்னாடி இருக்குறத விட்டுடுறிங்க. பகைய தாண்டி அவங்க மனசை பாருங்க ம்மா" என்றான்.

"பெரிய மனுஷன் பேச்சு தான். அதுக்குன்னு யாரை வேணாலும் என் பையனுக்கு கட்டி வைக்க முடியுமா, குணம் இருக்கட்டும்டா. உன் அண்ணனுக்கு நாள பின்ன போக வர ஒரு இடம் வேணாம்?"

"ஏன் இல்லாம, அவங்க தம்பி இருக்கான். அம்மாக்கு அம்மாவா, அப்பாக்கு அப்பாவா கூடவே நின்னு அக்காவை அவன் தாங்குவான். என்னைக்கும்..." இளையவனுக்கு நண்பன் மேல் சொல்லில் அடங்காத நம்பிக்கை.

"பெரியவங்க வேணாமா?" விடவில்லை அன்னையும்.

விக்ரம், "ம்மா சும்மா ஏதாவது குறை சொல்லணும்னு சொல்லாதீங்க ம்மா. அண்ணாவை டாப் டு பாட்டம் தெரிஞ்சவங்க அவங்க ஒருத்தர் தான். அவர்கிட்ட எல்லாம் இருந்தப்பவும் இதே அன்பு தான், அண்ணன் கொஞ்சம் சறுக்குனப்பவும் அதே அன்பு தான் வச்சிருக்காங்க"

"லவ்வா தெரியலனு சொன்ன?" தந்தையிடமிருந்து இம்முறை கேள்வி வந்தது.

"அவங்கள நான் அன்னைக்கு மண்டபத்துல கவனிச்சேன் ப்பா. அண்ணன் பக்கமே திரும்பல. அப்றம் பயர் ஆக்சிடென்ட் நடந்தப்ப விஷ்ணு அண்ணா முகத்தை அப்டி பாத்துட்டே இருந்தவங்க.

அது எந்த மாதிரி பீலிங்ஸ்னு எனக்கு சரியா வார்த்தை வச்சு சொல்ல தெரியல. வேலைக்கு வந்த ஆள் மாதிரி இல்ல, பரிதாபப்பட்டு போக.

விஷ்ணு அண்ணா துடிச்சப்ப இவங்களுக்கு ஏன் ப்பா அழுகை வரணும், அண்ணனை பாத்து பாத்து கண்ணை துடைச்சிட்டே இருந்தாங்க. இது பத்தலயா ப்பா அண்ணனோட லைப்ல அவங்களுக்கு மட்டும் தான் இருக்க தகுதி இருக்குனு சொல்ல?"

அவ்விடமே மௌனத்தில் மூழ்கியது. பெரியவர்கள் இருவரும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தனர், ஆனாலும் ஏதோ ஒரு உறுத்தல் மனதின் ஓரத்தில். உடனே சரி சென்றுவிட முடியாதே.

"அதிகபடியா பாத்தா அவங்க தாத்தா காலம் எவ்ளோ நாள் இருந்துட போகுது, அஞ்சு பத்து வருஷம். அதுக்காகவா அவங்களுக்கு இவ்ளோ பெரிய தண்டனை?

விஷ்ணுண்ணா கோவமும் தெரியும், அவரோட உழைப்பை பத்தியும் தெரியும். அவரோட பாசத்தை மட்டும் அனுபவிக்க வழி செஞ்சு குடுங்க அண்ணா வாழ்க்கை சொர்க்கமா இருக்கும்"

மறுப்புகள் வந்த அன்னையின் நாவானது இப்பொழுது அமைதியாக இருக்க பேச வேண்டியதை எல்லாம் பேசி முடித்தவன் தன்னறைக்கு சென்றான்.

சென்றவன் உடனே அழைத்தது நண்பனுக்கு தான், "சொல்லு விக்ரம்" சுரத்தையே இல்லாமல் வந்தது அனாயா சகோதரன் ஆரிவ் குரல்.

"அண்ணாக்கு பாத்த பொண்ணு வீட்டுல இருந்து வேணாம் சொல்லிட்டாங்கடா அண்ணா கம்பெனி லாஸ் பாத்து"

"உன் அண்ணன் ரொம்ப பீல் பன்றாரா விக்ரம்?" இதானே, இந்த குணம் தானே சகோதரனுக்காக பெரிய மனிதன் போல் பேச வைத்தது விக்ரமை.

இவர்களை நம்பி எந்த இடத்திலும் பேசலாம், அத்தனை உயர்ந்த குணம் என மனம் ஆனந்தம் கொண்டது. அனாயாவை அன்று பார்த்ததிலிருந்து விக்ரம் ஆரிவ்வோடு பேச வேண்டும் என நினைத்திருக்க இரண்டு நாட்கள் முன்பு தான் அனாயாவின் நிலை தெரிய வந்தது.

வீட்டோடு முடக்கி வைக்கப்பட்டுளாள் என்பது. அப்பொழுது பேச முடியாதவன் இப்பொழுதும் அனாயாவின் நிலையை கேட்டறிந்து அமைதியாகிவிட்டான்.

எப்படியும் தெரியும் நண்பன் மூலம் அனாயாவிற்கு நம்பிக்கை செய்தி ஒன்றை தான் அனுப்பி வைத்ததே அவளுக்கு போதுமானதாக இருக்குமென்று.

*****

விடாமல் வீறிட்டு அழுகும் குழந்தையை என்னென்னவோ கூறி சமாதானம் செய்ய தான் பார்த்தனர் வீட்டினர் எல்லாம். ஆனால் அசையவே இல்லை பூர்வி.

மகளின் அழுகையை அறிந்த பார்த்திபனும் உடனே அலுவலகத்திலிருந்து இல்லம் வர தந்தை கைக்கு மாறிய பிறகும் அழுகை நிற்கவே இல்லை.

"ஒடம்பு எதுவும் பண்ணுதோ ம்மா, நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகவா?" என்ன செய்வதென புரியாமல் கலங்கிய பார்த்திபன் அன்னையிடம் கேட்டு நின்றான்.

"எங்க போனாலும் இப்டி தான் அழுவா. அவ ஆரபிய தேடுறா தம்பி. எத்தனை நாள் குழந்தையை அம்மாகிட்ட இருந்து பிரிச்சு வச்சிட்டு முடியும்?"

அதன் பிறகு ஒரு நொடி கூட யோசிக்கவில்லை உடனே மனைவி வீட்டில் நின்றான். வீட்டினர் அனைவரும் மாப்பிள்ளையை உபசரிக்க அவன் யாரை எதிர்பார்த்து வந்தானோ அவள் அவன் முன்பு வந்தே நிற்கவில்லை.

குழந்தை வந்த உடனே அன்னையை தேடி அவள் அறைக்கு சென்றிருக்க உள்ளே குழந்தையின் சிரிப்பு சத்தமும் மனைவியின் குரலும் கேட்டுக்கொண்டே தான் இருந்தது.

ஆரபி தந்தையும் அங்கு தான் இருந்தார்.

"இன்சூரன்ஸ் பணம் எதிர் பாக்குற அளவு வரலன்னு ஸ்ரீனி சொல்லிட்டு இருந்தான். என்ன பண்ண போறீங்க மாப்பிள்ளை?"

"வெளிய கேட்ருக்கேன்" என்றான் எப்பொழுதும் வரும் இரண்டு வார்த்தை பதிலாக.

"நான் வேணா ஏற்பாடு பண்ணவா?"

"வேணா ப்பா. அவா மேல ஊருக்கே நம்பிக்கை இல்லாதபோவே சாதிச்சவா, இப்போ முடியாதோனோ?"

இவ்வளவு நேரம் உள்ளிருந்தவள் திடீரென வந்து இவ்வாறு பேசவும் குடும்பமே அவளை அதிசயமாக பார்க்க, பார்த்திபனோ அவளை ரசிக்கவா முறைக்கவா என சிந்தனையில் இருந்தான்.

"ஆரபி" பார்த்திபன் கண்களை உருட்டி அதட்டினான்.

"இப்ப என்ன உன் தோப்பனார் தப்பா கேட்டுட்டா, உன் ஆம்படையாலும் எங்களுக்கு ஒரு ஸ்ரீனி தானே. அவாளுக்கு செய்ய கூடாதா நாங்க" என்றார் ஆரபி அன்னை.

"அத்தை அவ ஏதோ பேசுறா" என்றவன் மாமனாரிடம், "வெளிய கெடைக்கலனா அப்பா இப்போ ஒரு எல்.ஐ.சி எடுக்குறாங்க அதை கொஞ்சம் வாங்கலாம்னு இருக்கேன்" என்றான்.

இதை கேட்டு ஆரபி மீண்டும் அறைக்குள் சென்று ஒடுங்கிவிட்டாள். அவளை பார்த்து பேசி மூன்று நாட்கள் ஆகியது. எப்பொழுது எப்பொழுது என காத்திருந்தவனுக்கு குழந்தையே வழி ஒன்றை கொடுக்க அதனை பிடித்துக்கொண்டு வந்துவிட்டான்.

அவள் இல்லாமல் அங்கு அமரவும் சங்கடமாக இருந்தது. மாமனார் மாமியார் இருவரிடமும் கூறி எழுந்தான்.

"தப்பா நினைக்காதிங்கோ, உங்களுக்குள்ள என்ன மன கஷ்டம்னு தெரியல. இதுனால குழந்தை தான் அதிகம் பாதிக்கப்படுறா. இதுநாள் வர ஒத்த வார்த்தை ஆத்துகாரிய பேசாதவா நீங்க, அப்போ தப்பு எங்க பொண்ணு மேல தான்னு நேக்கும் புரியிது.

பேசி புத்திமதி சொல்லிண்டேன். பிள்ளையும் ரொம்ப அழுதுண்டே தான் இருக்கா, இனிமேலும் இவா ரெண்டு பேரையும் விட்டுண்டு தான் போறேள்னு பாக்குறப்போ மனசு கேக்கல" என்றார் தயங்கி தயங்கி.

"கிருஷ்ணா மாப்பிள்ளைக்கு தெரியும். நீ செத்த அமைதியா இரு" என்றார் ராஜ்கோபால் மனைவியிடம் கண்டிப்பாக.

"இல்ல அத்தை, தப்பு ஆரபி மேல இல்ல. என்னோட ஒர்க் டென்ஷன நான் அவ மேல இறக்க பாத்தேன். பாவம் அவளும் என்ன செய்வா? அவங்க இங்கையே இருக்கட்டும் இன்னும் ஒரு வாரம்"

பார்த்திபன் பார்வை மீண்டும் ஒரு முறை மனைவியின் அறையை பார்த்து வெளியேறியது. தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அமர்ந்தவனுக்கு மனம் மனைவியை விட்டு அகல மாட்டேன் என பிடிவாதம் பிடித்தது.

ஒருவாறு அதனை சமாதானம் செய்து வந்தவனுக்கு கண்களை மூடினாள் அவள் நினைவு தான். அதிக வாகன நெரிசல் நிறைந்த சிக்னலில் நின்றவன் ஹெல்மெட்டை அவிழ்த்து முகத்தை அழுத்தமாய் கண் மூடி துடைக்க விடைத்த மூக்கு சிவக்க வந்து தந்தையிடம் பேசிய மனைவி முகம் நினைவினில் வந்து நின்றுவிட இவன் அசைவுகளும் அப்படியே நின்று போனது.

அதற்கு மேலும் தாமதியாமல் வந்த வேகத்திற்கு முற்றிலும் மாறான அதீத வேகத்தில் மீண்டும் மாமனார் வீட்டினில் இருந்தான்.

சென்ற ஐந்தே நிமிடத்தில் வந்து நின்ற மருமகனை வியந்து பார்த்த க்ரிஷ்ணாம்பாள், "எதையாவது மறந்து போய்ட்டேளா மாப்பிள்ளை?" என்றார்.

சங்கடமாக போனது பார்த்திபனுக்கு, ஆனாலும் சமாளித்தான், "இல்ல அத்தை குழந்தைக்கு தடுப்பூசி பத்தி ஆரபிக்கிட்ட பேசணும்" என்றான். அவரும் அவனுக்கு வழிவிட மனைவி அறைக்குள் மின்னல் வேகத்தில் வந்து தாழிட்டவன் எறும்பு ஊரும் வேகத்தில் மனைவியை கண்களாலே அலசினான்.

திடீரென உள்ளே நுழைந்த கணவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்தவளும் எதுவும் பேசாமல் உறங்கும் பூர்வி அருகே படுத்திருந்தவள் எழுந்து நின்றாள்.

மூன்று நாட்கள் முன்பு பார்த்த அதே அழகு மனையாட்டி தான். அன்றை விட இன்று முகம் கருத்து தெரிந்தாள். போதாததற்கு இப்பொழுதும் அழுத்திருப்பாள் போல கண்கள் சிவந்து இருந்தது.

"ஆராம்மா..." பூக்காற்றை போல் மெல்ல வருடிய கணவனின் குரலில் முகத்தை திரும்பியவள் கண்ணீர் பார்த்திபனை அடித்து சாய்த்திருந்தது.

"மாமி மூக்கு சிவந்திருக்குடி" என்றான் அவளை நெருங்கி.

அவள் பேசவே இல்லை கணவனிடம். அவளை நெருங்க நெருங்க அவன் இல்லம் சேரும் நிம்மதி மனதினில் பார்த்திபனுக்கு.

'இருந்துட்டு போகுது' என்றாள் இன்னும் கோவமாய் முணுமுணுப்பாய். 

தன்னை பார்க்காத அந்த முகத்தை பூவை போல் மெல்ல இருக்கைகளில் ஏந்தி தன்னை பார்க்க செய்தவன் அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தம் ஒன்றை வைத்தான்.

அவனது இச்செயலில் சினம் கொண்டவள் அவனது நெஞ்சத்தினில் அடிக்க, "மூக்குத்தி எங்க மாமி?" கேட்டான் கண்களை மூடியபடியே அவள் நெற்றியில் நெற்றி முட்டி.

"போட்ருக்கேன்ல" என்றாள் இன்னும் கோவமாக.

"இது இல்ல ஆராம்மா. அந்த கொஞ்ச நேரம் முன்னாடி வேற மூக்குத்தி போட்ருந்தியே அதை கேட்டேன்" என்றான் ஆசையாக.

அவன் மார்பினில் கை வைத்து இருவருக்கும் இடையே இடைவெளி உருவாக்கியவள் முகம் கோவத்தில் சிவந்தது.

"போங்கோ, அப்போ என்ன பாக்க நீங்க வரல" திமிறி நகர்ந்தவள் இடை வளைத்து அருகே இழுத்தவன் தன்னுடைய நேசத்தை மனைவியின் இதழை சிறை செய்து காட்டியிருந்தான்.

மூன்று நாட்கள் முகம் பாராமல், ஒரு வாரம் ஆசை பார்வை கூட இல்லாமல் தவித்தவனுக்கு இந்த ஒரு முத்தம் இதனை சீர் செய்திடுமா? 

ஒரு காவியத்தையே மன காகிதத்தில் எழுதிவிட்டது ஆசை கொண்ட காதல் உள்ளம்.

ஆரபி முதல் முறை கர்பமாக இருந்த பொழுது பார்த்திபன் அவள் தாய்மைக்கு அழகு சேர்க்க அதிகம் தேடி வாங்கியது அந்த மூக்குத்தி. பூ வடிவ நவரத்தினங்கள் பதிக்கப்பட்டிருக்கும் மூக்குத்தியில் அழகாய் மூன்று முத்துக்கள் தொங்கும். 

அவளை அதிகம் சங்கட படுத்த கூடாதென்றே பிரத்யேகமாக சிறியதாக நுண்ணிய வேலைப்பாடுகளோடு செய்து வாங்கியிருந்தான்.

பூர்வி பிறந்ததும் அதனை போடாத மனைவியிடம், "அழகா இருந்துச்சு மாமி" என குறைப்பட்டான்.

"ரொம்ப க்ராண்டா இருக்கு ன்னா" தன்னுடைய சங்கடத்தை கூற, தலை அசைத்து சரி என்றான்.

அவனது வாடிய தலை அசைப்பில், "அடுத்த கொழந்தை வர்றப்போ போட்டுக்குறேன் போதுமா, இப்போ சிரிங்கோ"

அன்று கொடுத்த வாக்கு இன்று நிறைவேற்றி மனைவி வந்து நின்றதை கூட அந்த நொடி கணவன் கவனிக்கவில்லை.

சிக்னலில் அவளை நினைத்து கண் மூடிய சமயம் தோன்றியவளின் அழகு வதனத்தில் டாலடித்த அந்த மூக்குத்தி அவனை மீண்டும் இழுத்து வந்திருந்தது.

ஆரபியின் இதழிலிருந்து பிரிந்து வந்தவன் அவள் கன்னம், கண், நாசி என கிடைக்கும் இடமெல்லாம் முத்தமிட்டான்.

இறுதியாக தரையில் மண்டியிட்டு தங்கள் காதலின் அடுத்த அடையாளமாய் உருவாகியிருக்கும் இளம் தளிரை ஆசையாக மனைவியின் இடையோடு அணைக்க கணவனின் முகத்தை வயிற்றோடு கட்டி அவன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினாள்.

"அப்பா உன்னையும் அம்மாவையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல டா?" எதுவும் உணராத பிஞ்சிடம் அவன் கேட்டுக்கொண்டிருக்க,

"ம்ம் இப்போவும் உங்களுக்கு உங்க குழந்தை தானே முக்கியமா இருக்கு" கணவனின் சிகை இழுத்து தன்னை பார்க்க செய்த ஆர்பி ஏகத்திற்கும் முறைத்தாள்.

"எத்தனை குழந்தை வந்தாலும் நீ தான் எனக்கு முதல் முக்கியம்னு முத்தத்தோட வருசையே உனக்கு சொல்லும் மாமி"

"பேச்சுக்கு மட்டும் குறை இல்ல. போறேன்னு சொல்லவும் குழந்தை தனியா எப்படி இருப்பானு தான் கேக்குறேள். அப்போ நோக்கு என்ன பத்தி கவலையே இல்ல"

"கவலை இல்லாம தான் நீ போன கேப் பின்னாடியே வந்தேனா?"

"ரொம்ப பெரிய விஷயம் தான் பண்ணிருக்கேள். பின்னாடி வந்தவா கைய புடிச்சிண்டு விட மாட்டேன்னு சொல்ல எவ்ளோ நாழிகை ஆகியிருக்கும். எப்போடானு இருந்துருக்கேள்"

"என்னடி இப்டி எல்லாம் பேசுற. நான் கோவத்துல பேசிட்டேன். ஏன் இதுக்கு முன்னாடி நமக்குள்ள சண்டையே வந்தது இல்லையா, என்ன இப்போ புதுசா இப்டி பொட்டிய தூக்கிட்டு?"

"எல்லாம் என்னால தான்னு குத்தி காமிச்சேளே. அப்போ அதுக்கு என்ன விளக்கம் தர போறேள்"

"ரொம்ப ஸ்ட்ரெஸ் மாமி. எங்க போனாலும் பிரச்சனை. வந்த பெரிய பெரிய டெக்கரேஷன் ஆர்டர் எல்லாம் கை மாறி போச்சு. எங்க பணம் கேட்டாலும் கிடைக்கல. அதை தான் என்ன பன்றேன்னு எனக்கே தெரியாம உன் மேல இறக்கி வச்சேன்" என்றான் தளர்வாக.

"அப்டி எல்லாம் இறக்கி வைக்க கூடாது. உங்களோட பிரச்சனை என்னனு தெரிஞ்சுக்குற விவரம் குழந்தைக்கு இல்ல. இப்டி சிடுசிடுனு ஏதாவது சொல்லிட்டே இருந்தேள்ன்னா குழந்தை எப்படி உம்மை நெருங்கும்?

அந்த டிஸ்டன்ஸ் அதிகமாகிடும். இதை புரிஞ்சு நான் அவளை உம்ம நெருங்க விடாம பண்ணாலும் சார் அவா குழந்தையை அவாகிட்ட இருந்து பிரிக்கிறேன்னு குறை வேற பாடுறேள்"

தன்னையே நொந்துகொண்டான் பார்த்தவன், "பெரிய வார்த்தை சொல்லிட்டேன்ல ஆராம்மா? என்ன பேசுறேன்னு தெரியாம பேசிட்டேன் மாமி. ரொம்ப வருத்தப்பட்டேன். மன்னிச்சிரு ஆராம்மா" மனைவி கையை பற்றி கெஞ்சினான்.

"அதெல்லாம் நீங்களே வச்சுக்கோங்கோ" பார்த்திபன் கையை உதறியவளுக்கு அழுகையாக வந்தது,

"மூணு நாள் ஒரு வார்த்தை பேசல, குழந்தை அழுதானு வந்தேள், இப்போ மறுபடியும் இன்னொரு குழந்தையை கேக்க வந்துருக்கேள். நேக்கு தான் ஒவ்வொரு ராத்திரியும் உறக்கமே அண்ட மாட்டிக்கிது நீர் இல்லாம"

ஆரபியை இறுக்கமாக அணைத்திருந்தான் பார்த்திபன் அவள் அழுகையை பார்க்க முடியாமல்,

"கனவுலயும் அப்டி நினைக்காத மாமி. உன்ன பாக்க பாப்பா ஒரு சாக்கு. நான் வந்து உன்ன தேடுவேன்னு தெரிஞ்சும் நீ ஏன்டி ரூம்ல இருந்து வரல அந்த ஏமாற்றத்துல தான் போனேன்.

தினமும் நெய் சாம்பிராணினு உன்னோட வாசனையை எனக்கு பழக்கி விட்டுட்ட, நான் மட்டும் எப்படி ஒழுங்கா தூங்கிருப்பேன். கண்ணை பாரு" கண்ணை காட்டினான். கருவளையம் இருக்க தான் செய்தது.

ஒருநாளும் இப்படி பேசியிராதவன் தான் அவள் பார்த்திபன், அவன் மனநிலையும் புரிந்தது, அவனும் தவறை உணரவும் பெரிதாக வீம்பு பிடிக்க விரும்பவில்லை.

"சரி மன்னிச்சிடுறேன்" என்றாள் அவன் கன்னத்தில் முத்தம் வைத்து.

"எப்போ கணபார்ம் பண்ண?" கணவன் விரல்கள் ஆசையாக அவள் புடவையை ஒதுக்கி இடையை வருடியது.

"நான் வீட்டை விட்டு வந்த அன்னைக்கு"

அதிர்ந்தான், "தெரிஞ்சும் ஏன் ஆரா வந்த?"

"ம்ம் உமக்கு என்னோட அருமையா புரிய வைக்க"

"நல்லா புரிய வச்ச போ" என்றவன் ஆசையாய் மனைவிக்கு அவ்வவ்வபொழுது முத்தத்தை கொடுத்துக்கொண்டே இருந்தான்.

"வீட்டுக்கு வா மாமி" அவனுக்கு அவள் இல்லாமல் அங்கு இருக்கவே முடியவில்லை.

அவன் ஆசையாக உண்ணும் உணவோ பிடிக்காத உணவோ அவன் விருப்பத்திற்கு ஏற்று பரிமாறி, அருகிலே நின்று அந்நாளின் கதை பேசுவது, காலை எழுந்தவுடன் நாளினை அழகாக்கும் சிரிப்பை தரும் அவன் மாமி இல்லாமல் எதுவுமே ஓடவில்லை.

அவளோ முறுக்கிக்கொண்டாள், "போங்கோ நான் வர மாட்டேன், நேக்கு எப்போ தோணுத்தோ அப்போ தான் வருவேன். என்ன பேசுனத்துக்கு இது தான் தண்டனை" என்றுவிட்டாள்.

"ஆராம்மா"

"அவ்ளோ தான் முடிவு" இன்னும் அழுத்தி கூறி அவள் முகம் திருப்ப, திருப்பிய முகத்தை பற்றி அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் ஒன்றை வைத்தான்.

"சரி இரு. ரெண்டு நாள் பொறுத்துக்கோ வெள்ளிக்கிழமை நான் வந்து செக்க்கப் கூட்டிட்டு போறேன்" என்றான்.

அவளும் சரி என்க கிளம்ப போனவன் கை பற்றி, "சாப்ட்டேளா?" கேட்டாள்.

உதட்டை பிதுக்கினான், குழந்தைக்காக தான் வீட்டிற்கே அவன் வந்தது. இப்பொழுதே மணி நான்கை தொட்டிருந்தது.

"நீ இல்லாம வீட்டுக்கு போகவே மனசு வரல ஆராம்மா"

உண்மையை சிரிப்போடு கூறியவன் கை பிடித்து இழுத்து சென்றவள் அவனுக்காக பதினைந்தே நிமிடத்தில் சுட சுட சாதம் வைத்து பருப்பு பொடி மற்றும் உருளை வறுவலை வைக்க எப்பொழுதும் உண்பதை விட அதிகம் உண்டு எழுந்தான்.

அவ்வளவு பசியை வைத்தா சுற்றிக்கொண்டிருக்கிறான் என கணவனையே ஆரபி பார்வை தொடர்ந்தது.

ஆரபி அறைக்குள் சென்று வந்தவன் குழந்தையை ஒரு முறை பார்த்துவிட்டு ஆரபி கையை இறுக்கமாக பற்றி, "வீட்டுல இன்னைக்கு பேசலாம்னு பாக்குறேன், கொஞ்ச மாசத்துக்கு பணம் கேக்க போறேன்"

அவன் கூற தலை அசைத்து ஆரபி அனுமதி கொடுக்க, வெளியே சென்றான். எனோ மனம் இதமாக இருந்தது. மனைவியை அணைத்து அவள் கையால் உணவு உண்டதா, இல்லை தன்னுடைய இரண்டாவது வாரிசு வரும் புத்துணர்ச்சியா தெரியவில்லை.

இறகாய் மனம் பறக்க அலுவலகம் சென்றவன் கைகள் வேகமாக வேலையை செய்தது. இரவு உணவிற்கு முன்பே வீட்டினரிடம் பேசிவிட வேண்டும் என்கிற வேகம் அது.

எண்ணியது போலவே வீட்டிற்கு ஏழு மணிக்கெல்லாம் வந்த பார்த்திபன் இரண்டு சகோதரர்கள் இருப்பதை பார்த்து உடையை கூட மாற்ற நினைக்காமல் அனைவரையும் வந்தவுடனே பரபரப்பாக அழைக்க அவன் காலை கட்டிக்கொண்டு வந்து நின்றாள் அவன் அழகு தேவதை பூர்வியும்.

இன்ப அதிர்ச்சியில் மகளை கையில் எடுத்து முத்தமிட்ட பார்த்திபன் மனைவியை தேட, அவளோ சமையலறையிலிருந்து கணவனுக்கு தேநீர் எடுத்து வந்தாள்.

"சொக்க வக்கிரடி மாமி" கிறங்கும் குரலில் அவளுக்கு மட்டுமே கேட்கும்படி பார்த்திபன் கூற வெட்கசிரிப்போடு கணவனை முறைத்து உள்ளே சென்றாள் ஆரபி.

அவனிடம் கோவமாக முகத்தை திருப்பினாலும் அவனை விட்டு இருக்க முடியவில்லை. கோவத்தை காட்டிய அந்த பார்த்திபன் அவள் அனுதினமும் காண்பவன் இல்லையே, அவளே சினத்தை குழந்தையிடம் காட்டினாள் கூட மனைவியின் மனநிலையை புரிந்துகொண்ட குழந்தையை தாங்குபவன்.

திருமணத்திற்கு முன்பு உன் கணவன் இவ்வாறு அவ்வாறு என அவனது பல மூர்க்கமான செயல்களை கேள்வியுற்றிருந்தாலும் இன்று வரை அவளிடம் வார்த்தையில் கூட கோவத்தை எல்லை மீற விடாதவன் இன்றைய நிலையை எண்ணி மன்னிக்க தவறினால் அவள் வானம் அல்லவா இருண்டு போகும்? 

அது மட்டும் அல்லாது ஏனோ அவனோடு நின்றே ஆக வேண்டும் என தோன்ற மாலையே கிளம்பி வந்துவிட்டாள் அவனிடம்.

வீட்டில் உள்ள அனைவரும் கூடியாயிற்று, அனைவரும் இவன் பேச காத்திருக்க பார்த்திபனுக்கு அதீத தயக்கம்.

ஏற்கனவே ஒரு முறை வந்த நிராகரிப்பிலிருந்து இன்னும் அவன் மனம் மீளாமல் இருக்க மீண்டும் வீட்டினரிடம் வந்து நிற்பதா என்னும் தயக்கம்.ஆனால் வேறு பாதையும் இல்லாமல் போக இறுதியாக பெற்றோரை நாடியே வந்து நின்றான்.

"ஃபயர் ஆக்சிடன்ட் நடந்ததால லாஸ் கொஞ்சம் ஆகிடுச்சு ப்பா உங்களுக்கே தெரியும், பணத்துக்கு வெளிய முயற்சி பண்ணேன் கிடைக்கிற மாதிரி தெரியல"

"இன்சூரன்ஸ் வரும்லடா" கிரிதரன் கேட்க,

"வரும் ண்ணா, ஆனா எதிர் பாக்குற நேரத்துக்கு வருமா தெரியல. எந்த வேலையும் ஆகாம அப்டியே இருக்கு" என நிறுத்தினான்.

"சொல்லு பார்த்திபா" வித்யா மகனை ஊக்கப்படுத்தினார்.

"எல்.ஐ.சி பணம் வருதுல, அதுல இருந்து எனக்கு ஒரு எழுவது லட்சம் வேணும்"

தயக்கமாக தான் பெற்றோர் முகம் பார்த்தான் பார்த்திபன். இருவரும் பேசாதிருக்க, "அவ்ளோ கொடுத்துட்டா மிச்சம் நாப்பது தானே வரும்" வசந்த் இடையில் வந்தான்.

"வேகமா தந்துடுவேன்டா" என்றான் பார்த்திபன்.

வசந்த், "இவ்ளோ உறுதியா சொல்ற, வேகமானா எவ்ளோ மாசம் ஆகும்?"

பார்த்திபன், "இருவது லட்சம் கைக்கு இன்சுரன்ஸ் பணம் வந்த ஒடனே கொடுத்துடுவேன். மிச்சம் கொஞ்சம் கொஞ்சமா வேகமா தர்றதுனாலும் சரி" என்றான் நம்பிக்கையாக.

"என்ன தம்பி பணத்தை பிச்சு பிச்சு தர்றேன்னு சொல்றிங்க, பணம் செதறிடுமே.

"அப்போ ஒரு வருசத்துல மொத்தமா குடுத்துடலாம்"

கமலவல்லி, "நாங்க அந்த பணத்துல வேற யோசனை வச்சிருக்கோம் தம்பி அதான் யோசிக்கிறோம்" என்றாள்.

"ப்பா எனக்கு உங்களால எவ்ளோ முடியிதோ குடுங்க ப்பா, எழுவதே வேணும்னும் இல்ல" என்றான் தந்தையிடம்.

"அவங்க ரெண்டு பேர் என்ன சொன்னாலும் எனக்கு பிரச்சனை இல்ல பார்த்திபா" என்றார் ராஜேந்திரன்.

"நல்லா இருக்குப்பா உங்க கதை. அன்னைக்கு என்னோட கல்யாணத்துக்கு நான் பணம் கேட்டப்போ எவ்ளோ கணக்கு பாத்தீங்க இப்போ என்னாச்சு?" தந்தையிடம் நியாயம் கேட்டு நின்றான் வசந்த்.

"டேய் நீ திரும்பி குடுக்குற எண்ணத்துல கேக்கல, அவன் திருப்பி தந்துடுவேன்னு கேக்குறான்" பார்த்திபனுக்கு பரிந்து பேசி வந்தான் கிரிதரன்.

"எந்த நம்பிக்கைல குடுப்பானு சொல்ற?" வசந்த் கேள்வி கிரிதரனிடம் செல்ல வசந்த் பேசுவதை ஆர்ச்சிர்யமாக கேட்டாள் ஆரபி.

என் கணவன் திரும்பி தர மாட்டான் என்பதில் இவனுக்கு எப்படி இத்தனை நம்பிக்கை என்கிற வியப்பு அவளிடம்.

"அவன் கைல சாலிடா ஒரு பிஸ்னஸ் இருக்கு வசந்த்" 

வசந்த், "அதான் சொல்றேன், ஒன்னு தான் இருக்கு. இன்னும் ஒன்னு என்ன ஆக போகுதுன்னே தெரியல"

ஆரபி, "வசந்த் தம்பி, அவா மேல நம்பிக்கை இல்லையா?"

கமலவல்லி, "எப்படி ஆரபி நம்புறது. லாஸ் கொஞ்சமா, அதுல இருந்து கொழுந்தன் எந்திரிச்சு வரவே எவ்ளோ நாள் ஆகுதோ தெரியல" என்றாள்.

வசந்த், "எந்திரிச்சு வர்ற மாதிரி லாஸ்னா கூட குடுக்கலாம் அண்ணி. இனி அவன்கிட்ட ப்ராஜெட்ஸ் வருமா என்னனு தெரியல"

வித்யா, "வசந்த் வாய அடக்கி பேசு" இளைய மகனை பார்த்து பற்களை கடித்து நின்றார் வித்யா.

"என்ன இல்லாததை நான் சொல்லிட்டேன், எல்லாம் எரிஞ்சு போச்சு. எரிஞ்சு போன இடத்துல இருந்து யார் வீட்டு விசேஷத்துக்கு அலங்காரம் பண்ண வர சொல்லுவாங்க" நக்கல் சிரிப்போடு மொத்த வீட்டினரையும் பார்த்து கேட்டான்.

ஆரபி வேகமாக கணவன் அருகே சென்று நிற்க, அவனோ நிர்மலமான முகத்தோடு தான் இருந்தான். 

ஆனால் அந்த அமைதியான உடலினுள் இருக்கும் இதயம் எவ்வாறு தவிக்குமென தெரிந்து தான் அவன் அருகே வந்தது.

"அதுல இருந்து மீண்டு வர்ற வழிய நான் பாத்துக்குறேன் வசந்த்" என்றான் பார்த்திபன் அமைதியாக.

கிரி, "உன்னால ஹெல்ப் பண்ண முடிஞ்சா ஹெல்ப் பண்ணு. அதை விட்டு எதுக்கு தேவையில்லாம அவனை ஹர்ட் பண்ணிட்டு இருக்க"

வசந்த், "சரி என்னால முடியாது. நீ குடு"

பார்த்திபன், "ண்ணா நீங்க லாஸ்ட் டைம் பார்ட்னர் மாதிரி ஷேர் போடுறேனு சொன்னிங்களே"

ஒரு பிடிப்பு கிடைத்துவிடாதா என்கிற ஆர்வம் அவனிடம். 

கிரியோ அன்று இருந்த ஆர்வத்தை இன்று காட்டவில்லை, ஒரு வித சங்கடம் மனதில் தோன்ற தன் மனதில் தோன்றிய சிறு ஆர்வத்தை காட்ட மனைவியை பார்த்தான்.

"இல்ல தம்பி நாங்க ஒரு இடத்துக்கு அட்வான்ஸ் குடுத்துட்டோம்" பட்டென போட்டு உடைத்தாள் கமலவல்லி.

"கமல்..." கிரி மனைவியை முறைக்க, "இல்ல ண்ணா. இருக்கட்டும். எங்க இடம், சொல்லவே இல்ல" உண்மையான அக்கறையோடு பார்த்திபன் கேட்டது கூட தவறாகி போனது.

"அப்போ நாங்க எல்லாம் உங்கள கேட்டு தான் செய்யணுமா தம்பி" சிரிப்போடு கமலவல்லி கேட்டுவிட பார்த்திபன் முகம் உடனே இருண்டுவிட்டது.

"அவன் அக்கறையோடு கேட்டது கூட தப்பா கமல்? எதுக்கு இப்டி நெருப்பை கொட்டுன மாதிரி பேசுற?" வித்யா மருமகளை விரட்ட அவளோ முகத்தை திருப்பினாள்.

"சரி அத்தை பேசல, கொழுந்தன் கேக்குறதே தப்பு தானே, வசந்த் தம்பிக்கு பணம் தர முடியாதுனு சொன்னோம் அதே தானே பார்த்திபன் தம்பிக்கும் பொருத்தம். அவர் இந்த பேச்சையே எடுத்திருக்க கூடாது"

"இங்க அவனுக்கு மட்டும் எப்பவும் வேற ரூல்ஸ் தான். நம்மளாம் அடிபட்டு நசுங்கி தான் வளரனும்" என்றான் வசந்த் தன் பங்கிற்கு பார்த்திபனை பார்த்து.

"உன்ன அப்டி என்ன அவன் நசுக்குனான்னு நீ இப்டி குதிக்கிற?" மகன் பேசுவது சிறிதும் பிடிக்காமல், "அளவுக்கு மீறி பேசுற வசந்த்..." என ராஜேந்திரன் அதட்ட வர அவருக்கு முன்பு விருட்டென எழுந்து நின்றான் பார்த்திபன்.

"கிடைக்காதுனு தெரிஞ்சும் கேக்க வந்தது என் தப்பு தான் ப்பா"

"பார்த்திபா நில்லு நான் அவங்ககிட்ட பேசி வாங்கி தர்றேன்" வித்யா தடுக்க வர,

"வேணாம் அத்தம்மா நோக்கு கொடுக்கணும்னு தோணிருந்தா, என்னோட பணம் என்னோட புள்ளைக்கு குடுப்பேன்னு இவாகிட்ட ஆரம்பத்துலயே சொல்லிருப்பேள்"

வசந்த் கிரிதரனை மனதில் வைத்து வித்யாவை ஆரபி கேட்டுவிட்டாள். அவள் எண்ணமும் சரி தான், இந்த பணம் அதிகமாக வித்யாவின் சம்பளத்திலிருந்து உருவானது தான்.

அவர் நினைத்தால் மொத்தமாக கூட பார்த்திபனுக்கு கொடுக்கலாம். ஆனால் எடுத்த உடனே மகன்களை கை காட்டிவிட்டார்.

"ஆரபி மேல வா" பார்த்திபனை மனைவியை அழைக்க அவள் நகரவில்லை. 

வீட்டினர் எவரின் செயலும் பிடிக்கவில்லை அவளுக்கு. இத்தனை நாட்கள் இருந்த அமைதி குழைந்தால் கூட பரவாயில்லை கணவனுக்காக குரல் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற வெறி அவளுக்கு.

"நீ நில்லுடா" பார்த்திபனை அதட்டிய வசந்த் ஆரபியிடம், "உங்க வீட்டுக்காரன் கைல மொத்த காசையும் குடுத்துட்டா நாங்க என்ன அண்ணி பண்றது?"

"அவா ஒன்னும் மொத்தமா கேக்கலையே தம்பி. ஏன் இத்தனை நாள் ஒரு பைசா கூட வேணாம்னு சொல்லிண்டு இருந்தப்போ அமைதியா இருந்தேள். அப்போ பணம் வாங்குனு ஏன் சண்டை போடல?

அன்னைக்கு வேணாம்னு சொன்னவா இன்னைக்கு வேணுன்னு கேக்குறானா, அவாளோட பண கஷ்டம் என்னனு கூடவா புரிஞ்சுக்க முடியல நோக்கு?"

"மொத அவனுக்கு என்ன உரிமை இருக்கு இதுல?"

"வசந்த்..." மகனின் வார்த்தை எங்கு அழைத்து விடுமென ஓரளவிற்கு யூகித்திருந்த பெற்றோர் அவனை தடுத்திட பார்த்தனர்.

அவனோ அவர்கள் இருவரையும் திரும்பி கூட பார்க்கவில்லை. "அவனை விடுங்க, உங்களுக்கு என்ன கேள்வி கேக்க என்ன உரிமை இருக்குன்னு இப்டி நடு ஹால்ல நிக்க வச்சு..."

"யார்கிட்ட பேசுறனு பாத்து பேசு வசந்த், இல்லனா வாய உடைச்சிடுவேன்" வசந்த் ஆரபியை பார்த்து கேட்ட கேள்வியிலே மனம் உடைந்து கண்ணீர் பெறுக நின்ற மனைவியை காக்கும் பொருட்டு அவளை தனக்கு பின்னே நிற்க வைத்த பார்த்திபன் சகோதரனை எதிர்கொண்டு நின்றான்.

"என்ன வாய உடைப்பியா?" நக்கலாக கேட்ட வசந்த் பார்த்திபன் அருகே வர கிரி உடனே வசந்தத்தை நெருங்கினான், "எங்க உடடா பாக்கலாம்" என்று.

பார்த்திபன் கையை மடக்கி முன்னேற போக அவன் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு அவனது வேகத்தை தடுத்தாள் ஆரபி.

"வசந்த் நீ தேவையில்லாம பிரச்சனையா பெருசாக்குற" கமலவல்லிக்கு வசந்தின் இந்த நடவடிக்கை சுத்தமாக பிடிக்காமல் போக அரண்டு நின்ற இரண்டு குழந்தைகளையும் தன்னோடு ஒட்டி நிறுத்திக்கொண்டாள்.

"என்ன நான் பெருசாக்குறேனா, இவன் என் வாய உடைக்கிறேன், கொல்லுவேன்னு சொல்லுவான் நான் பாத்துட்டு சும்மா நிக்கணுமா? பெரிய இவன் மாதிரி பேசுனான் எங்க வர சொல்லுங்க. டேய் வாடா"

தங்களுக்கு நடுவே நின்ற கிரிதரனை மார்பினில் கை வைத்து எளிதாக தள்ளி நிறுத்திய பார்த்திபன், மூண்ட சின்னத்தில் கொடுத்த வாக்கை நிறைவேற்ற எத்தனிக்க, இவனுக்கு முன்பு வசந்தத்தின் கன்னத்தை பதம் பார்த்து நிறுத்தியிருந்தது வேறொரு கரம்.

பார்த்திபன் உட்பட மொத்த குடும்பமும் அதிர்ந்து திரும்பி பார்க்க முகம் மொத்தமும் ஜுவாலையாய் நின்றான் விஷ்ணு.

"என்ன வாய் ரொம்ப நீளுது, இப்ப பேசுடா பாப்போம்" என மேலும் அவனை அடிக்க கை ஓங்க, நண்பனை வேகமாக தடுத்திருந்தான் பார்த்திபன்.

"விஷ்ணு நான் பாத்துக்குறேன், நீ போ" என்றான்.

"உன் குடும்ப விசயத்துல நான் தலையிடல. நம்ம பிஸ்னஸ் விஷயமா இந்த நாய அடிச்சு கொல்ல வந்தேன்" என கூறி மீண்டும் அவனை தாக்க செல்ல வசந்தின் முகம் கருத்து போனது.

விஷ்ணுவை அழுத்தமாக பற்றிய பார்த்திபன், "என்ன விஷயம்?" என கேட்டான்.

விஷ்ணு இந்த அளவிற்கு கோபம்கொள்வதன் காரணம் சாதாரணமாக இருக்காது என்பது பார்த்திபனின் கணிப்பு.

அது சரி என நண்பனின் வார்த்தைகள் காரணத்தை கூறியது, "ரெண்டு மாசம் முன்னாடி நம்ம குடவுன்ல ஒரு ட்ராமா நடந்து போலீஸ் எல்லாம் வந்தானுங்கல, அதுக்கு காரணமே இந்த நாய் தான்" விஷ்ணு கூறியதை ஜீரணிக்கவே வீட்டினருக்கு பல நொடிகள் தேவைப்பட்டன.

"அது மட்டும் இல்லடா. ஃபயர் ஆக்சிடென்ட் தானா நடந்தது இல்ல, நாமளே பணத்துக்காக பண்ணோம்னு சொல்ல சொல்லி பணத்தை கிடைக்க விடாம பண்ண, அந்த இன்சூரன்ஸ் கம்பெனி பீல்ட் ஆபிசர்க்கு அஞ்சு லட்சம் பணத்தை அள்ளி குடுத்துட்டு வந்துருக்கான்"

விஷ்ணு அடுக்கி வைக்கும் ஒவ்வொரு குற்றசாட்டிற்கும் தவறிழைத்த வசந்த் முகம் ஒரு பக்கம் மாண்டாலும், அதை விட அதிகம் துடித்தது பார்த்திபனின் இதயம் தான்.

நொறுங்கிய போனான் மனதளவில். கோவம் துளியும் வரவில்லை, வேதனை நெஞ்சை அடைத்து பேச வார்த்தைகள் தோன்றவில்லை, ஏமாற்றத்தின் உச்சியில் நிலையில்லாமல் தவித்தவன் அப்படியே சிலையாகி நின்றுவிட்டான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro