Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சந்திப்பு - 14

சுபித்ராவை அவளுக்காக பார்த்து வைத்த புது வீட்டில் விட்டு வந்த விசோழன் அவள் வீட்டிற்கு நேரெதிரே இருக்கும் தன் வீட்டு கதவினுள் சாவியை நுழைக்கும் பொழுது, இன்றைய நாளின் அழகிய நினைவுகள் அனைத்தும் அவனது நினைவடுக்கினுள் ஒன்றன் பின் ஒன்றாக வளம் வந்தது.. அதே நேரம், மற்ற நாட்களை விட நீளமாக தொடர்ந்தது போல் ஒரு பிரம்மையை கொடுத்த இன்றைய நாளின் களைப்பும் சேர்ந்தே அவனை தாக்கியது.

வாசலில் காலணியை கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தவன், நுழைந்ததும் லைட்டை ஆன் செய்து கொண்டே இடது புறமிருந்த ஹாங்கரில் சாவியை தொங்கவிட்டான்.

ஹால், கிட்சன், பாத்ரூம் என்றிருந்த அந்த சிறிய வீட்டில், ஹாலின் வலது பக்கம் சுவரோடு சேர்த்து பூசியிருந்த ஒரு மூன்றடுக்கு கப்போர்டை திறந்தவன் அதிலிருந்த தன்னுடைய பல ஆடைகளுக்கு மத்தியில் இருந்து ஒரு குட்டி நகை பெட்டியை கையில் எடுத்தான்.

கல்யான் ஜூவல்லர்ஸ் என கடையின் பெயரை தாங்கியிருந்த அந்த வெண்ணிற குட்டி பெட்டியை திறக்க வேண்டும் என நினைக்கும் போதே அவன் மனம் பாரமேரியது... இருந்தும் தினம் தினம் அவனுள் இருக்கும் அந்த வேகத் தீயை அனைய விடாமல் செய்வது இந்த பாரம் தானே. அதனால் இதை திறந்தே தீர வேண்டும் என்னும் எண்ணத்துடன் இருந்த விசோழன், ஆழ பெருமூச்சு விட்டபடி அந்த கல்யான் ஜூவல்லர்ஸ் நகை பெட்டியை திறக்க... மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய தடினமனான பிளாட்டினம் மோதிரம் ஒன்று, நவ ரத்தினங்களையும் தன்னை சுற்றிலும் சுமந்த நிலையம் அந்த பெட்டியின் மையத்தில் அழகாக அமர்ந்திருந்தது.

அந்த மோதிரத்தின் மையத்தில் மற்ற ரத்தினங்களை விட சற்றே பெரியதாக ஒற்றை வென்முத்து இருக்க... அந்த முத்தை சுற்றிலும் பிற ரத்தினங்களை விட சிறியதாக சிவப்பு ரத்தின கற்கள் பதிக்க பட்டிருந்தது... அந்த முத்தின் மையத்தில் பக்குவமாக செதுக்கி அதன் உள்பக்கத்தில் VS என ஒன்றுசேர்த்து கோர்வையாக வரைந்தது போல் ஒரு மயிலிறகு, அச்சாக வரையபட்டு இருந்தது. பொறுமையுடன் உன்னிப்பாக உற்று நோக்கினால் மட்டுமே இந்த நுண்ணிய வேலைபாடுகள் எல்லாம் ஒருவரின் பார்வைக்குத் தெரியும். அப்படிப்பட்ட ஒரு பிளாட்டினம் மோதிரம்.. அதிலும், நவ ரத்தினங்களையும் தன்னில் சுமந்திருக்கும் ஒரு மோதிரம்.. இதன் விலை என்னவாக இருக்கும்?... அதன் விலை, விசோழனின் இன்றைய நிலை.

மன்னர் காலத்து படைத் தளபதியின் வம்ச வாரிசாகியவன்.. பிறந்தது முதல் கஷ்டம் என்பது என்னவென்றே தெரியாமல் வளர்ந்தவன்... குடும்பத்தில் உள்ள அனைவருமே வேலை இல்லாமல் இருந்தாலும், இன்னும் நான்கு தலைமுறைக்கு சுகபோக வாழ்க்கை வாழும் அளவு சொத்துகளுக்கு உரிமையாளன்.. இன்று, வெறும் இருபதாயிரம்... அவன் பாணியில் சொல்ல போனால் சொற்ப பணம் பெரும் தற்காலிக வேலைக்கு சென்று கொண்டிருப்பது தான் அந்த மோதிரத்தின் விலை.

சுபித்ராவிற்காக, தானே சென்று கடையில் அமர்ந்து.. மாதிரி படம் வரைந்து கொடுத்து, ஆசை ஆசையாக செய்து வைத்திருக்கும் மோதிரம்... ஆனால் கொடுக்க இயலவில்லை... கொடுக்க வேண்டும் என நினைத்தால் கூட அவன் மனம் உடன் வரவில்லை. மாறாக, "வெட்டி பய நீ.. யாரை கேட்டு டா அந்த பொண்ணுக்காக நம்ம சொத்த கரைக்கிற.. இந்த சொத்து எல்லாம் என்ன உன் அப்பனுக்கு மட்டும் சொந்தம்ன்னு நெனச்சுட்டு இருக்கியா நீ??.. ஒவ்வொரு காசையும் சம்பாதிக்க எவ்ளோ காஷ்ட்ட பட்டோம்ன்னு உழச்ச எங்களுக்கு தான்டா தெரியும்.... ஒரு நாளாசும் ஃபேக்டரி பக்கம் வந்துருக்கியா டா நீ??... தெண்ட பயலே... நீயே ஓசி சோறு திங்கற... இதுல இன்னொருத்தியும் உன்ன மாதிரியே குடும்பத்துக்கு வந்து உக்கார பாக்குறா.. உன்ன சொல்லி குத்தமில்ல.... கேட்டது எல்லாத்தையும் ஒடனைக்கு ஒடனே செஞ்சு குடுத்தோம்ல... எங்கள தா சொல்லணும்...", என்ற சொல்லே காதினுள் ரீங்காரமிட்டு அவன் மனதினுள் ரணமாக ஈட்டிகளை இறக்கியது.

சுபித்ராவை தன் வாழ்வினுள் முழு அங்கமாக பார்க்க துவங்கிய பின் முதன் முதலாக வந்த அவளின் பிறந்த நாளுக்கு, ஆசை கொண்டு வாங்கிய அன்பு பரிசு.. அதை கொடுக்க முடியாமல்... தூக்கி வீசவும் முடியாமல் அதையே தன் காயமாகவும்... காயத்தின் மருந்தாகவும் நினைத்து கொண்டு... தனக்கென ஒரு நிரந்தர வேலை.. நிரந்தர அடையாளம் கிடைத்திடும் வரையில், துவண்டு போய் தனது முயற்சியை கைவிட்டு விட கூடாதென அன்றைய நினைவை தினம் தினம் நினைத்து தன்னுள் எரியும் நெருப்பை அனைய விடாமல் பாதுகாத்து வருகிறான் இவன்.

மோதிரத்தையே வைத்த கண் எடுக்காமல்... எவ்வித சலனமும் இல்லாமல் சில கணம் வரையில் பார்த்திருந்தவன், மீண்டும் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவாறு அதனை மூடி, பழையபடிக்கே ஆடைக்கு நடுவில் வைத்துவிட்டு, கபோர்டுக்கு பக்கவாட்டில் கிச்சன் கதவிற்கு அருகே இருந்த ஹாங்கரில் சட்டையை கழற்றி தொங்க விட்டுவிட்டு, போட்டிருந்த ஜீன்ஸை கழற்றிவிட்டு ஒரு லுங்கி அணிந்து கொண்டு, கறுப்பு நிற பூமர் பணியனுடன் தரையில் ஒரு ஓரமாக விரிக்கபட்டிருந்த மெத்தை விரிப்பில் அப்படியே மல்லாந்து விழுந்தான்.

அதன் பின்பே விளக்கை எல்லாம் அனைக்க மறந்து விட்டோம் என கவனித்தவன் எழுந்து சென்று, அனைத்து விளக்கையும் அணைத்து விட்டு நைட் பல்ப் ஒன்றை மட்டும் எரிய விட்டுவிட்டு ஜன்னல் வழியே எதிர் வீட்டை பார்க்க.. அவனால் ஏற்கனவே அமைக்கபட்டிருந்த மெத்தையில் இன்றைய நீளமான நாளின் களைப்பின் அசதியில் அழகாக உறங்கி கொண்டிருந்தாள் சுபித்ரா.

இவ்வளவு நேரமும் அவன் ஜன்னலுக்கு வருவான் என பொருத்திருந்தவள், எப்படியோ அசதியில் ஓரிரு நிமிடத்திலேயே உறங்கி விட்டாள். அவள் தூங்கும் அழகை ரசித்த விசோழன், ஜன்னல் கம்பியில் தன் வலது கை விரல்களை பினைத்துபடி, "சுபி மா நீ என் வீட்டுக்கு ராணி மாதிரி இருக்கணும்.. யார் தயவுளையும் நாம வாழக்கூடாது இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ டா... ஏதோ ஒரு பெர்மனெண்ட் ஜாப்க்கு ரெடி பண்ணிறேன்... நம்ம செலவ நானே பாத்துக்குறேன்...", என மானசீகமாக அவளிடம் பேசி கொண்டவன், பின் அசதியில் வந்து உறங்கி விட்டான்.

★★★

தன் கட்டிலில் படுத்திருந்த நிலையிலேயே மௌனமாய் கண் விழித்திருந்த மனோஜிற்கு உறக்கம் என்பது வரவே இல்லை. அக்கா மகிழ்வுடன் இருக்கிறாள் என்னும் நிம்மதி ஒருபுறம் இருந்தாலும்... தன்னை உணவிற்கு கூட அழைக்க கூடாத அளவிற்கா தவறு செய்தோம் என உள்ளுக்குள் புழுங்கி கொண்டிருக்கிறான்.

என்னதான் தன் செயலால் பெற்றோர்கள் கோபம் கொண்டிருந்தாலும் உணவுக்கு அழைக்கவில்லை என்றால் பரவாயில்லை.. ஆனால் தனக்கென உணவை வைக்கவே இல்லாத அளவிற்கு அன்னை தந்தையின் கோபம் இருப்பதை அவனால் ஏற்றுகொள்ள இயலவில்லை.

பசியுடன் அடுப்பங்கரைக்குள் சென்ற நொடியில், அங்கு துடைத்து வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை கண்ட நொடியில் அவனுள் எழுந்த ஒரு உணர்வு.. இன்னுமும் உள்ளுக்குள் இருந்து அவனை வாட்டி வதக்கி கொண்டிருந்தது. அம்மாவும் அப்பாவும் தன்னை இப்படி ஒரேயடியாக ஒதுக்கி விட்டார்கள் என்பதை அவன் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.

"ம்மா... இருந்தாலும் உனக்கு இவ்வளவு கோபம் இருக்க கூடாது ம்மா.. புள்ளைக்கு சாப்பாடு குடுக்க கூட மறந்துட்டல்ல நீ ...."

"மறந்துட்டியா?.. இல்ல, இனி எனக்கு சாப்பாடே குடுக்க வேணாம்ன்னு முடிவு பண்ணிட்டியா??.."

"அப்டி என்ன ம்மா தப்பு செஞ்சேன்?.. சுபாக்கு நல்லது தானே செஞ்சுருக்கேன்... அவ அவளுக்குன்னு ஒரு அடையாளத்த உருவாக்கிக்குறது அவளுக்கு நல்லது தானே?.. மாமா ஃபேமிலி மொத்தமும் ஒரு ஒரு வேலைல இருக்கைளா இவளும் ஒரு வேல பாத்தா தானே சரியா இருக்கும்??", என அன்னையை கோபித்த மனோஜின் மனம், காலையில் இருந்ததை விட இப்போது தான் உண்மையிலேயே வேதனையில் தவித்துக் கொண்டிருந்தது.

★★★

மணி நள்ளிரவு ஒன்றை கடந்து கொண்டிருந்தது.... திடீரென உறக்கம் கலைந்து கண் விழித்த வந்தனா, தன்னை சுற்றியும் தன் படுக்கையை சுற்றியும் எதையோ தேடி திருதிருவென விழிக்க... தேடியது கிடைக்காமல் போனதால் நிம்மதி பெருமூச்சு விட்டு அப்படியே மல்லாந்து சரிந்தாள்.

அவள் கண்கள் இரண்டும் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த மஞ்சள் நிற விடிபல்ப்பை நோக்க... முகமோ நாணத்தை தன்னில் சுமந்து மெல்ல மெல்ல சிவந்து கொண்டிருந்தது.

அருகில் இருந்த டேபிளை நோக்கி கையை நீட்டியவள் மொபைலை தேடி பிடித்து நேரத்தை நோட்டமிட்ட.... மணி நள்ளிரவு ஒன்று நாற்பத்தி எட்டு என காட்டியது.

"அடியே வந்தனா... ஒரு நாள் பேசுனதுக்கே உனக்கு இந்த நெலமையா?.. வெக்கமா இல்ல உனக்கு.. த்தூ...", என தன்னை தானே தலையில் தட்டி கொண்டவள், புன்னகையுடன் உறங்க முயற்சி செய்ய... கனவில் வந்த கவினின் முகமே மீண்டும் மீண்டும் அவள் விழிக்குள் நுழைந்து கொண்டிருந்தது.

என்னதான் மனதை கட்டுபடுத்த முயற்சித்தும் அவளால் இயலாமல் போக... ஒரு கட்டத்திற்கு மேல் தன் கனவில் நுழைந்தவனை கள்ள பார்வையில் ரசிக்கவே துவங்கி விட்டாள் வந்தனா.

இவ்வாறாக ஆளாளுக்கு ஒவ்வொரு விதமான மனநிலையில் அந்த கரிய இரவை கடக்க தங்களால் ஆனா ஒரே முயற்சியாக உறக்கத்தை தான் இழுத்து பிடித்து கொண்டிருந்தார்கள்.

எவ்வளவு நேரம் இந்த நிம்மதியான உறக்கம் நீடிக்கும்... எந்த நொடியில் அது கலைந்து போய் மீண்டும் அந்த பாரமான.. கசப்பான... வலியான... ஏமாற்றமான நினைவுகளை கொடுக்கும் என அவர்களுக்கே தெரியவில்லை.

இருப்பினும், நாளை என்ற ஒரு விடியல் தங்கள் வாழ்விலும் விடியும் என்னும் குருட்டுத்தனமான நம்பிக்கையில்... தங்கள் மேல் தாங்களே வைத்திருக்கும் தன்னம்பிக்கையை கைவிடாமல்... மனதினை தளர விடாமல்... சாந்தமாக மூச்சு விட்டபடி, ஆழ்ந்த உறக்கத்தில்... தங்களின் கனவு உலகத்தில்... மனம் கவர்ந்தவனுடன்... கை பிடிக்க காத்திருக்கும் கனவுடன்... கணவனுடன்... நேசிக்கும் ஒருவருக்கான தாங்களின் ஆதரவுடன் மகிழ்வான நாளையை நோக்கி... எதிர்காலத்தை நோக்கி... விடியலுக்கான பாலத்தின் மேல் நொடி நொடியாக அடிகள் வைத்து.. மெல்ல மெல்ல ஒவ்வொரு தருணத்தையும் உணர்ந்து கடந்து... நடந்து... அந்த இரவினை தைரியமாக எதிர் கொண்டிருந்தார்கள் அனைவரும்.

சந்திப்பின் காலம் வரும்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro