Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சந்திப்பு - 10

அரை மணி நேரமாக அந்த இனோவாவினுள் மௌனமே விளையாடி கொண்டிருக்க.. அதை அவ்வப்பொழுது களைத்தது என்னவோ சுபித்ராவை மீறி அவளிடம் இருந்து வந்த விசும்பல்களே.

அவளின் ஒவ்வொரு விசும்பலிலும் இங்கே குற்ற உணர்வில் தவித்து கொண்டிருந்த விசோழன், இதற்கு மேல் முடியாமல் வண்டியை சாலையில் இருந்து திசை மாற்றி ஒரு வெட்ட வெளியில் செலுத்த தொடங்கினான்.

வண்டி சாலையில் இருந்து தடம் மாறி  புல்வெளியில் செல்வதை உணர்ந்த சுபித்ரா, நொடியில் தன் விழிநீரை மறந்து, "சோழா.. என்ன பண்ணுற நீ., என்னாச்சு உனக்கு...?", என்றவளின் குரலில் பயத்தை காட்டிலும் பதட்டமே மேலோங்கி இருக்க.. அவளின் அந்த குரலால்... அவள் விளிப்பால் வண்டி சடன் பிரேக்கிட்டு நின்றது.

விசோழனின் பார்வை ஸ்டியரிங்கையே நோக்கியிருக்க அவன் கண்களிலோ இனம் புரியாத பேரானந்தம் ஒன்று எங்கோ இருந்து ஓடி வந்து ஒட்டிக்கொண்டது... இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வண்டியை நிறுத்துவான் என்பதை எதிர்பாராத சுபித்ரா, சீட் பெல்ட் இருந்ததால் கண்ணாடியில் சென்று முட்டிகொல்லாமல் தப்பித்திருந்தாலும், அவன் தந்த திடீர் அதிர்ச்சியால் குதிரை வண்டி ஓட்டிடும் தன் நெஞ்சில் கை வைத்தபடி அருகிலிருப்பவனை மிரண்ட விழிகளுடன் நோக்கினாள்.

அவளின் கேள்வி சுமந்த பார்வை தன் பக்கம் திரும்பியதை உணர்ந்தவன், ஸ்டியரிங்கில் இருக்கும் தன் மலர்ந்த பார்வையை மாற்றாமலேயே, "இன்னையோட ஐநூத்தி இருபத்தி ஏழு நாள் ஆச்சு..", என்றவன் மெல்லமாக நிமிர்ந்து அவளை கண்ணோடு கண்ணாக நோக்கி, "நீ என்ன இப்டி கூப்புட்டு...", என உணர்ச்சி பொங்க கூறியதில் சுபித்ராவின் கண்ணில் கண்ணீருடன் ஒரு புன்னகை விரிந்தது.

"ஹான்??.. நீ... அப்போ நீ....  ஒவ்வொரு நாளையும் எண்ணிட்டே இருக்கியா நீ.... சோழா... நீ இருக்க பாரு...", மிகுந்த மகிழ்ச்சியால் தன் கன்னத்தில் ஆட்டம்போடும் கண்ணீரை கூட பொருட்படுத்தாமல் விசோழனை ஆசையாக பார்த்தவள், "அப்போ.. அப்போ அன்னைக்கு நீ சொன்னது???....  எல்லாமே பொய்... பொய் தானே? ... ஆமா.. பொய்தான்.... கண்டிப்பா பொய்யே தா... சொல்லு பொய் தானே?.. ", என தனக்கு தானே புன்னகை கலந்த கண்ணீருடன் கூறி கொண்டவள் இறுதியாக அவனையே ஏக்கமாக நோக்கி திரும்பியதை காண்கையில் விசோழனின் மனம் சற்று லேசாகியது.

மெல்லிய புன்னகையை மட்டும் அவளுக்கு விடையாக அளித்தவன் கதவை திறந்து கொண்டு வெளியேறி விட... நீண்ட பெருமூச்சுடன் தலையை பின் பக்கமாக சீட்டில் சாய்த்த சுபித்ரா தன் கண்ணை இருக்கமாக மூடினாள். அவள் கண்ணில் இருந்து நில்லாமல் காண்ணீர் சுரந்தது... ஆனாலும் அதில் நூறு சதவீதம் ஆனந்தமும் கலந்திருந்தது.

★★★


கவினின் குடும்பம், முழு மனநிறைவுடன் வந்தனாவின் வீட்டில் இருந்து கிளம்பி அரைமணி நேரம் ஆகியிருந்தது. தன்னறையில் ஜன்னல் அருகில் நாற்காலியை போட்டு அமர்ந்திருந்த வந்தானாவின் மனதில் இன்னும் ஏதோ ஒரு நெருடல் இருந்து கொண்டே தான் இருந்தது.

தான் ஏன் கவினின் பேச்சுக்கு இவ்வளவு எளிதாக சாய்கிறோம் என புரியாமல் தவித்தவளுக்கு விடை தான் இன்னுமும் கிடைத்த பாடில்லை. இருந்தும் அவள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததன் காரணம், வந்தனாவின் தந்தை கூறிய அதே காரணம் தான். இது போல் ஒரு குடும்பத்தை நிராகரிக்க எந்த ஒரு காரணமும் கிடைக்கவில்லை என்பதே முற்றிலும் மெய்.


ஆனால் வந்தனாவின் பார்வையில் அதுவே முழு காரணம் ஆகிடவில்லை...  மாடியில் வைத்து அவளிடம் பேசிவிட்டு, அவளையே முடிவெடுக்க கூறிவிட்டு கீழே சென்ற கவின் அப்படியே சென்றிருந்தால் நிச்சயமாக இல்லாத ஒரு காரணத்தை தேடி பிடித்தேனும் இந்த திருமணத்தை நிராகரித்திருப்பாள்... ஆனால் அவனோ அந்த மொட்டை வெயிலிலும் இவளுக்காக படியிலேயே காத்துக்கொண்டு  நின்றிருக்கிறான்.

கவினின் பேச்சால் வந்தனாவின் மனம் அலைபாய்ந்ததில் அவள் நேரத்தையும் மறந்தாள் வெயிலையும் மறந்தாள்.... கால் மணி நேரத்திற்கு மேலாக அவளை காணாமல் படியில் நின்றிருந்த கவின், மீண்டும் மேலே ஏறி வந்துவிட்டான்.

திண்டில் சாய்ந்தபடி தீவிர யோசனையில் இருப்பவளை நோக்கி, "ஏங்க.. இன்னுமா யோசிக்குறீங்க?" சட்டென குரல் கொடுத்திட.. திடுகிட்டு கவினை நோக்கி திரும்பியவள், "நீங்க இன்னும் கீழ போலையா??", என விழித்தாள் வந்தானா.

"நா கேட்டதுக்கு பதில் சொல்லுங்க... இன்னுமா ஒரு முடிவெடுக்கல நீங்க?.. இவ்ளோ நேரம் யோசிக்குறீங்க..."

"ஏன் யோசிக்க கூடாதா?

"அட போதுங்க நீங்க யோசிச்சது.. இந்த வெயில்னால உங்க மண்ட சூடாகலனாலும் நீங்க யோசிச்சதுல சூடாகிருக்கும் போல.... நீங்க வாங்க மொதல்ல... கீழ போலாம்.

"நா இன்னும் முடிவெடுக்கலங்க.."

"ஏங்க.. ரொம்ப யோசிக்கதீங்க... இவ்வளவு நேரம் யோசிச்சே நோ சொல்ல முடியலனா உங்களுக்கு ஓகேன்னு தாங்க அர்த்தம்...  இருந்தாலும் என்னை ரிஜெக்ட் பண்ணியே தீரனும்னு ஏதோ காரணம் தேடிட்டு இருக்கீங்க நீங்க... இப்டி கெடைக்காத ஒன்ன கஷ்ட பட்டு தேடாதீங்கங்க... அதெல்லாம் சரி கெடையாது", என பிடிவாதமாக அவன் நிற்க.. உண்மையில் அவன் செய்கையால்.. பேச்சால்.. கணிவால்... குணத்தால் ஈர்க்கபட்டாள் வந்தானா.

அவன் கூறுவதும் அந்நேரத்தில் அவளுக்கு சரியெனவே தோன்றியது... என்ன தான் தேடியும் இவனிடம் கூறும் அளவுக்கு எவ்வொரு குறையும் கிடைக்கவில்லை... இல்லாததை ஏன் தேடவென்று அவளும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டாள்.

ஆனால் தட்டு மாற்றிக்கொண்ட பின் இப்போது மீண்டும் எதையோ தீவிரமாக சிந்தித்து கொண்டே ஜன்னலில் பார்வையை பதித்திருந்தாள் வந்தனா.

★★★

எப்படியும் இருபது நிமிடம் கடந்திருக்கும்... விசோழன் வண்டியில் இருந்து இறங்கி சென்று... சுபித்ரா இன்னுமும் வண்டியின் உள்ளேயே தான் இருந்தாள்...

நீண்ட நேரம் கழித்து, ஓட்டுநர் இருக்கையின் பக்கமாக இருந்த கதவு திறக்கப்பட.... விசோழன் தன் ஒற்றை காலை உள்ளே வைத்து தலையை மட்டும் தான் உள்ளே நீட்டினான்... அடுத்த நொடியே சீட் பெல்ட்டை அவிழ்த்து விட்டு, அவன் கழுத்தை பிடித்து உள்ளே இழுத்து ஒரே தாவில் அவனை அணைத்து கொண்டாள் சுபித்ரா.

"சோழா.. என்னால முடியல டா.. ஒரு வருஷத்த எப்டியோ காலேஜ் போயே உன் நியாபகத்த வர விடாம கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணிக்கிட்டேன்... ஆனா இந்த மூனு மாசமா... என்னால சுத்தமா முடியல... நீ பாட்டுக்கு என்ன மறந்துறுன்னு சொல்லிட்டு எங்க போரன்னு கூட சொல்லாம போய்ட்ட.. நீ சொன்ன நாளும் நெருங்கி வந்துட்டே இருக்கு...  நெஜமாவே என்ன பாக்க திரும்ப வரமாட்டியோன்னு எவ்ளோ பயந்தேன் தெரியுமா.. உன்ன மறக்க முடியல சோழா.. பிளீஸ்.. மறுபடியும்... என்ன விட்டு... என்ன தனியா விட்டுட்டு போகாத... பிளீஸ் சோழா...", மெல்லிய குரல் கலங்கிட கேட்டவளை ஆதரவாக அணைத்தபடி அவளை அவள் இருக்கையிலேயே அமர வைத்தவன், "சுபி... அழ கூடாது... என் பாப்பால..", என அவளின் கண்ணீர் துடைக்க..., "போடா.... மென்டல் பையா...", சிரிப்புடன், தன் கண்ணீரை துடைக்கும் அவன் கரத்தை தட்டி விட்டாள் அவள்.

அவனும் மெல்ல சிரித்து கொண்டு மீண்டும் வண்டியை இயக்க..., "சரி... இப்போ எங்க போறோம் நாம..", எதுவுமே நடாவாததை போல் சாதாரணமாகவே கேள்வி எழுப்பினாள் சுபித்ரா.

"ஹப்பா... இப்போவாச்சும் கேக்கனும்ன்னு தோணுச்சே...", கேலியாக விசோழன் அவளை நோக்க.., "ஹும்... அதெல்லாம் முன்னாடியே கேக்கணும்ன்னு தா தோணுச்சு.. நா தா கேக்கல..", என முகத்தை திருப்பி கொண்டாள் அவள்.

"ஹ்ம்ம்...", என எதுவும் கூறாதவன் வண்டியை மீண்டும் சாலையை நோக்கியே செலுத்திட.. அவன் பதில் கூறாமல் இருந்ததாலே செல்லும் இடத்தை குறித்த கேள்வி சுபித்ராவின் மூளையை அறிக்க தொடங்கியிருந்தது.

"ம்ச்... சொல்லு சோழா... எங்க போறோம்", அவன் சட்டை கையை இழுத்தபடி அவள் கேட்க..., "சர்...பிரைஸ்ஸ்ஸ்...", ராகமாக கூறியபடி பார்வையை சாலையில் பதித்திருந்தான் விசோழன்.

"ஹையோ.. விளையாடாத சொல்லு... எனக்கு சர்பிரைஸ்லாம் வேணாம்.. அதெல்லாம் எனக்கு பிடிக்காது...."

"ம்ம்ஹும்... உனக்கு வேணும்னா சர்பிரைஸ் பிடிக்காம இருக்கலாம்.. ஆனா எனக்கு பிடிக்குமே.. சோ.. நா சொல்ல மாட்டேன்"

"ஹான் என் மண்ட வெடிச்சுறும்... பிளீஸ்.. சொல்லு சொல்லு சொல்லு.. பிளீஸ்..."

"நோ நோ நோ நோ.... நெவர்... நீ பொறுமையா இருந்து தா ஆகனும் சுபி.... என்ன தா டிரை பண்ணினாலும் உன் ஆட்டத்துக்கு இன்னைக்கி நா மயங்க போறதில்ல...", சிரிப்புடன் வண்டியை செல்ல வேண்டிய இடத்தை நோக்கி செலுத்தினான் அவன்.

சந்திப்பின் காலம் வரும்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro