Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

விஸாத்தின் மனம்.

மேடு பள்ளம் இல்லாத அந்த மண் மைதானத்தில், தன் கால்தடம் பதியாமல் நடந்துக் கொண்டிருந்தான், ரஷீத். இவ்வளவு மென்மையாக நடந்தாலும் தப்பித்தவறித் தன் கால்-அச்சு மண்ணில் பதிந்து விட்டதோ என மண்ணையே உற்று நோக்கிக்கொண்டு வந்தவனை அப்படியே சிலையாக்கி நிற்க வைத்தது, வெள்ளை மயில் ரயாஸீயின் குரல்.

"ரஷீத்,"அவன் பெயரை சொல்லிக் கேட்ட அழைப்போசையால், பாதி தூக்கிய வலது முன்னங்காலையும் இடது பின்னங்காலையும் அப்படியே காற்றில் நிறுத்தி, இடப்பக்கமாகக் கழுத்தைத் திருப்பிட, "இங்க என்ன செய்யுற? இது நாங்க இருக்குற எடமாச்சே?" தன் நட்புகள் இருவரையும் இரண்டு காவலர்களைப் போல் இருபக்கமும் அழைத்துக்கொண்டு ரஷீதின் முன்பாக வந்து நின்றான், விஸாத். நான்கு கால்களால் நின்றுகொண்ட ரஷீத், எப்படி தப்பிக்கலாம் என்னும் அலைபாயும் பார்வையுடன், தன் தலையை நிமிர்த்தி அம்மூவரையும் நோக்கினான்.

"அ.. அம்ம்.. நான்..... சாப்ட போறேன்?" நீண்ட யோசனைக்குப் பின் வந்த அவன் பதில், ஒரு முடிவில்லாமலே இருந்தது.

"அட! நாங்களும் காட்டுக்குத் தான் போறோம்.. எங்க கூட வா.. சேந்து சாப்ட போலாம்" விஸாத்தின் சொல்லைக் கேட்ட ரயாஸீ, நொந்தபடி பெருமூச்சு விட்ட அதே நேரம், "ஓஹ், விஸாத். இவன பாத்தா ரொம்ப சின்னவனா தெரியுறான். இவன் இன்னுமும் பால் குடிக்கிற குட்டி தான். காட்டுக்குலாம் வர மாட்டான்" தன் நண்பனின் புத்திக்கூர்மை, சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக வேலை செய்தாலும் பல நேரங்களில் அது எங்கிருக்கிறதென்றே தெரியாத அளவில் இருப்பதை நினைத்து ஜூபாவும் நொந்துக்கொண்டே சொல்லிய சொல்லுக்கு, இந்த தகவல் எனக்கு மிக மிக புதியது என்பது போல் சிலிர்த்துக்கொண்டு திரும்பி நின்ற விஸாத், "ம்ம்... அப்போனா வாங்க.. நாம போலாம். உன்னை நான் அப்பறமா சந்திக்கிறேன், ரஷீத்" அவன் போக்கில் முன்னோக்கி நடக்கத் தொடங்கி விட்டான்.

 அவனையும் ரஷீதையும் மாற்றி மாற்றி இருமுறை பார்த்த ஜூபாவும் ரயாஸீயும், இவனத் திருத்துறதுக்கு இந்த லோகத்துல ஆளில்லடா என வாய்விட்டுப் புலம்பாதக் குறையாக தலையை ஆட்டிக்கொண்டு, அவன் பின்னேயே சென்றார்கள்.

ஏன் வந்தார்கள்? எதற்குச் சென்றார்கள்? என எதுவுமே புரியாமல், செல்லும் அவர்களையே பார்த்த நிலையில் நின்றிருந்த ரஷீதின் கண்ணில், பளிச்சென மின்னிச் சென்ற ஒரு ஒளியால் அவன் கண்கள் ஒருநொடி மூடித் திறந்தது. மறு நொடியில், ஒளி வந்த திசையில் அவன் தலை தானாகவேத் திரும்பிட.. அங்கே ஒரு பெரிய பெண் புலி. அவளைப் பார்த்த நொடியில் ரஷீதிற்கு எங்கிருந்துதான் வந்ததோ அத்தனை வேகம், மண்ணுக்கு வலிக்காமல் நடந்துக் கொண்டிருந்தவன் இப்போது மண்ணை வாரி முதுகுக்குப் பின்னால் வீசி எறியும் வேகத்தில் பாய்ந்தோடினான் அந்தப் பெண் புலியிடம். அதேநேரம், காட்டுக்கு நடுவில் இருக்கும் ஒரு நீர்வீழ்ச்சியை நோக்கி நடந்துக் கொண்டிருந்தார்கள், விஸாத், ரயாஸீ மற்றும் ஜூபா.

"விஸாத், உன் தங்கச்சி இப்போ பாறைக்கு தான் போயிருப்பா.. அவங்க அப்டி தான் பேசிக்கிட்டாங்க"

"நானும் கேட்டுட்டுத் தான் இருந்தேன், ஜூபா. அவள நா பாத்துக்குறேன். நீங்க நம்ம எடத்துக்குக் கெளம்புங்க. இன்னைக்கு நா மட்டும் போய் நமக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்."

நண்பர்களைக் கிளம்பச் சொல்லிவிட்டுத் தன் நீண்ட வெள்ளை ரெக்கையை விரித்த விஸாத், வழவழப்பான பாறைகளுக்கு மத்தியிலிருந்துக் கொட்டும் நீர்வீழ்ச்சியை நோக்கிச் சீறிப் பறந்தான்.

✨✨✨


ஒன்றினைந்த ஐரா லோகத்தின் பாறை மலை, அந்த லோகத்தில் இருக்கும் இளைய உயிர்களை அதிகம் ஈர்க்கு மலை. வானிலிருந்து கொட்டுவது போல் நிறைந்தோடிக் கொண்டிருக்கும் அந்த நீர்வீழ்ச்சியின் அழகு மட்டுமல்ல, அதைத் தாண்டி மேலே செல்லும் பயணத்தில் இருக்கும் சுவாரஸ்யமும் கூட இதற்கு ஒரு காரணம். மேலும், அதன் இருபுறத்திலும் ஆங்காங்கே தொற்றிக் கொண்டிருக்கும் புதர் கூட்டம்.. அதில் மலர்ந்திருக்கும் ஒற்றை மலர்கள்.. நீர்வீழ்ச்சியைத் தாண்டி மேலே சென்றால் அங்கே ஓடும் நீண்ட நதியை ஒட்டியிருக்கும் பழ வகை மரங்கள்.. அதைத் தாண்டி இருக்கும் பெரும் சமவெளி என அனைத்தும் இங்கிருக்கும் இளைய உள்ளங்களைக் கவர்ந்தவைகள் தான். 

இளையவர்கள் தவிர பெரியவர்கள் இங்கு வர மாட்டார்களா என்றால், அது தான் இங்கே பெரிய சவால். பொதுவாகவே இங்கு வரும் இளையவர்கள், ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டுக்கொண்டோ அல்லது சவால் விட்டுக்கொண்டோ தங்களின் பலத்தை நிரூபிக்கவே பாறை மலையைத் தாண்டி அந்த நீர்வீழ்ச்சியின் மேல் ஏறிடுவார்கள். அதைத் தாண்டிடும் அளவிற்கு பெரியவர்களின் வலிமை குறைந்து விடுவதால் பெரும்பாலும் இளையவர்களே இங்கு வருவார்கள். 

நீர்வீழ்ச்சி பாறையத் தாண்டி மேலே செல்லும் இளைஞர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல், அவர்களின் சவால் நிறைந்த பயணத்திற்குத் தக்கப் பரிசாகவே இருக்கும் மலையின் மேல்புறம் உள்ள காடும் சமவெளியும். ஒளிரும் வரி-புலிகளின் நடமாட்டம் இல்லாததால் எந்நேரம் நினைத்தாலும் பிரபஞ்சத்தின் நட்சத்திரக் கூட்டங்களைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய ஒரு இடம். இருளுக்குள்ளேயே வாழும் ஒளிரும் உயிரினங்கள், நீர்வீழ்ச்சிக்கு கீழ் பகுதியில் கிடைக்காத ருசி தரக்கூடிய பழங்கள் என அனைத்துமே இங்கு விசேஷம் தான். இங்கிருக்கும் சில இலைகள் கூட அமோக ருசியைத் தரக்கூடியவையே.

அப்படிப்பட்ட இடத்தில், தன் நண்பனிடம் இன்று தோல்வியைத் தழுவிய ஒரே காரணத்திற்காக அவர்கள் அனைவருக்கும் சேர்த்து உணவுகளைச் சேகரித்து, ஒரு பெரிய இலையின்மேல் வைத்துக் கொண்டிருந்தாள், வியூனி. அந்த நேரம், அவளை அடைந்தது அவள் சகோதரனின் குரல்.

"வியூனி.." இருள்வானில் ஒரு நகரும் நட்சத்திரம் போல் தன் நீள வாலில் இரண்டு மணிகளைக் கட்டிவிட்டது போல் கினிங்-கினிங் சத்தத்துடன் ஒளிர்ந்துக் கொண்டே பறக்கும் பட்டாம்பூச்சியை ரசித்தபடியே பழங்களை எடுத்துக் கொண்டிருந்தவளின் ரசனை, அவனின் குரலால் தடைபட்டது. பார்வையை நிலத்தை நோக்கித் திருப்பியவள், எந்தவித உணர்வும் இல்லாமல் வெறும் தரையை வெறிக்கத் தொடங்கினாள்.

"நீ இங்க என்ன செய்யுற, விஸாத்?"

"உன்ன பாக்கதான் வந்தேன். உன்கிட்ட பேசனும், வியூனி."

"நீ என்ன சொல்லப் போறன்னு எனக்குத் தெரியும், விஸாத். நம்ம சக்திகளுக்கும் நம்ம தகுதிகளுக்கும் என் நண்பர்கள் ஒன்னுமே இல்லாதவங்க. பலவீனமானவங்க. தகுதிக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோ. இந்த மாதிரி தானே ஏதாச்சும் சொல்லப்போற?"

"இல்ல-"

"அதத்தான் சொல்லப் போறன்னா தயவுசெஞ்சு எதையும் பேசாத, விஸாத்."

"அப்டி அவங்கக்கிட்ட என்ன இருக்கு, வியூனி?", இவ்வளவு நேரமும் மென்மையாக இருந்த விஸாத்தின் குரல் சற்று எரிச்சலடைந்தது. "பாசம்.." படக்கென அவனை நோக்கித் திரும்பிய வியூனியின் சொல்லிலும் கண்ணிலும் தெளிவு மட்டுமே இருந்தது.

"உண்மையான பாசம் இருக்கு, விஸாத்.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருத்தர் மேலயும் அக்கற இருக்கு.. அதுவும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாம"

"உன் மனசத் தோட்டுச் சொல்லு, எங்கக்கிட்ட அதெல்லாம் நீ பாத்ததே இல்லையா?"

"கண்டிப்பா உங்க எல்லார்கிட்டயும் நான் பாத்துருக்கேன் விஸாத். எல்லார்கிட்டயும் அன்பும் அக்கறையும் இருக்கு. ஆனா, அத வெளிக்காட்ட உங்களுக்குலாம் ஒரு காரணம் தேவ. நீங்க எல்லாரும், காட்டுற பாசத்துக்குக் கைமாறு எதிர்பாக்குறீங்க. ஒரு தகுதிய எதிர்பாக்குறீங்க. உங்க சுயரூபத்தையே இந்த தகுதிக்குப் பின்னாடி ஒளிச்சு வைக்குறீங்க." அழுத்தம் நிறைந்தப் பார்வையுடன் அவனின் குற்றங்களை ஒவ்வொன்றாக அடுக்கியவள், "அதுதான் பவனுக்கு புடிக்கல" இரு நொடி இடைவெளிக்குப் பின் மென்மையானக் குரலுடன் முடித்தாள். தங்கை, மூச்சுவாங்க இவ்வளவு சொல்லியும் தன் பிடியிலிருந்து அவன் நகர்வதாகவே தெரியவில்லை.

"வியூனி. நம்ம சக்திகள் தான் நம்மள உயர்ந்தவங்களா மாத்துறது. எப்படியும் இணைவுக்கட்ட போராட்டத்தத் தாண்டி அவங்க வாழப் போரதி-."

"போதும் நிறுத்து விஸாத்." இதற்குமேல் தன் அண்ணனின் அர்த்தமில்லாத சொற்களைக் கேட்பதாக இல்லை அவள். எரிச்சலுடன் விஸாத்தை நோக்கி கத்தினாள். "அவங்கள காப்பாத்த தான் நாங்க இருக்கோம்."

"பேரழிவ தாக்குப்புடிக்க சக்தி இல்லாதவங்க, வாழத் தகுதியில்லாதவங்க, வியூனி. கூடி சீக்கிரம் பிரியப்போற-"

"அஹ்ஹ்ஹ்.. போதும் விஸாத். இங்க யாரும் பிரியப் போரதில்ல. யாரும் அழியப் போறதில்ல. நீ மறுபடியும் மறுபடியும் பாடுன கதையவே பாடப் போறன்னா இத்தோட நிறுத்திக்கோ உன் பேச்ச."

"இல்ல, வியூ-"

"நான் கெளம்புறேன் விஸாத். என் நண்பர்கள் எனக்காக காத்துட்டு இருக்காங்க." சிடுசிடுவென்ற முகத்துடன், ஒருவகை இலையிலிருந்து எடுத்த பசையைக் கொண்டு ஒட்டப்பட்ட, பழங்கள் நிறைந்த அந்தப் பெரிய இலையைத் தன் வாயால் கவ்விக்கொண்டுத் தன் ரெக்கையை விரித்துப் பறந்துவிட்டாள் அவள். ஒரு பெருமூச்சுடன், பறந்துச் செல்லும் தங்கையை பார்த்தபடியே நின்றான், விஸாத்.

அவனுக்கு அவன் கோட்பாடுகளே சரி, அவன் சொல்லும் சொல்லுக்கு மற்றவர்கள் தலையாட்ட வேண்டும். தொடக்கத்தில் எல்லாம் சரியாகத் தான் இருந்தது. நல்ல நண்பர்களாகத் தான் இருந்தார்கள் பவனும் விஸாத்தும். என்று இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் தொடங்கியதோ அங்கிருந்துத் தொடங்கியது இந்தக் கலவரங்கள் எல்லாம்.

✨✨✨


_தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro