Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வண்ணம் - 6


"அந்த பொண்ண கல்யாணம் பண்ணிட்டு ஏதோ பெருசா சாதிச்ச மாதிரி வந்து நின்னியே அது உன்னோட வெற்றி இல்லடா. லட்சம் பிரச்சனை வந்தாலும் கூடையே கைய புடிச்சு நின்னு,

'இதே மாதிரி இன்னும் நூறு வருஷம் சந்தோசமா வாழுவேன்'-னு வாழ்ந்து காட்டி நெஞ்சை நிமிர்த்தி நிக்கிறப்போ ஒரு பெருமிதம் முகத்துல வரும் பாரு அந்த நேரம் தான் நீ உண்மைலயே ஜெயிச்சதா அர்த்தம்" மகனை பார்த்து தந்தை எதார்த்தத்தை கூற, அவர் தன்னை பார்த்து சிரிப்பது போலவே இருந்தது அவனுக்கு. 

"லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா போதுமா, எத்தனை நாள் சந்தோசமா வாழ்ந்துடுறனு பாக்குறேனு இளக்காரமா சிரிச்ச அந்த பொண்ணோட குடும்பத்து முன்னாடியும் இந்த ஊர் முன்னாடியும் நெஞ்ச நிமிர்த்தி வந்து நிக்க வேணாம்? 

கல்யாணம் பண்ணப்போ இருந்த பிடிவாதம் இப்ப எங்கடா போச்சு? சின்ன பிள்ளை அது. சரி தப்பு தெரியலனா சொல்லி குடுக்கணும். ரெண்டு தடவ மெதுவா சொல்லி புரியல்னா அழுத்தி சொல்லணும். 

அத விட்டு டிவோர்ஸ், பிடிக்கல, அவ்ளோ தான்னு சொல்ற" 

உன் மேல் மொத்தமும் அதிருப்த்தி தான் என அவ்விடத்தை விட்டு அவர் அகன்றதும் அன்னையை பார்த்தான், "ஏன் ம்மா என்ன புரிஞ்சுக்கவே மாட்டிங்களா எப்பவும்?" 

"புரிஞ்சுக்காமையா ரகு உன்ன ஏத்துக்குறோம்னு கால் பண்ணி சொன்னோம்? அப்போ தலைல போட்ட பாரேன் ஒரு பெரிய குண்டா... டிவோர்ஸ்னு... 

நீ கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்ன நேரம் கூட அவ்வளவு ஷாக் எங்களுக்கு இல்ல ரகு. பிடிவாதம் பிடிச்சாவது வாழ்க்கைல ஜெயிச்சா போதும்னு நினைச்சிட்டு இருந்தோம்" 

உன் செயலில் ஏமாற்றம் மட்டுமே எனக்கு என தன்னை பார்த்த அன்னையை பார்க்கவே முடியவில்லை அவனால், "ம்மா அப்டி பாக்காதீங்க, என்ன பண்றது நானும்? சந்தோசமா தான் இருந்தோம், சின்ன சின்ன பிரச்சனை பெருசா உருமாறி முகம் சுளிக்கிற அளவு வந்து நிறுத்திடுச்சு. இப்ப நானே நினைச்சாலும் அவ பின்வாங்க மாட்டா ம்மா" 

"ஏன்டா இதெல்லாம் ஒரு பிரச்சனைனு பிரிய நினைக்கிறதே தப்பு, இதுல அந்த பொண்ண வேற குறை சொல்ற" 

"தலைக்கு மேல வெள்ளம் போச்சு, இனி விடுங்க. நடக்குறது நடக்கட்டும்" என்றான் பேச்சை அறுத்துவிடும் எண்ணத்தோடு. 

"ஒரு தடவை உன் இஸ்டப்படியே விட்டது போதும் ரகு. நீ கொஞ்ச நேரம் முன்னாடி அடுக்குனது ஏதோ உளறுனது மாதிரி இருக்கு. உண்மையான காரணம், அழுத்தமான காரணம் எனக்கு சொல்லு" 

விசித்திரமாக அன்னையை பார்த்தவன், "எவ்ளோ பெரிய விசியம் சொன்னேன், ஒலறுனேன்னு சொல்றிங்க" 

"பின்ன என்ன மகனே, வசதியான குடும்பம், அப்பா அம்மா அண்ணனுங்கனு உள்ளங்கைல வச்சு தாங்குன குடும்பத்துல இருந்து வந்த பொண்ணால சட்டுனு தன்னோட சூழ்நிலையை புரிஞ்சு நடந்துக்க முடியல. அதுக்கான வயசு இல்ல, பக்குவமும் அவகிட்ட இல்ல. 

இல்ல கேக்குறேன், அப்டி செலவு தான் பண்ணட்டுமே உன் பொண்டாட்டி உன்னோட காசுல உரிமையா செலவு பண்ணாம வேற யார்கிட்ட இவ்வளவு உரிமையா பண்ண முடியும்? ஆயிரம் தான் பெத்த புள்ளையா இருந்தாலும் உன்கிட்ட என்னால ஒரு காசு தாடானு தயங்காம கேக்க முடியுமா சொல்லு" மௌனமாய் அன்னையை பார்த்தான் ரகு. 

"கிரிக்கெட் விளையாட விடலனு ஒரு குத்தம் சொன்னியே, மாசத்துல நாலு வாரமும் போகணும்னு பிடிவாதம் பிடிச்சா எந்த பொண்ணு சரினு சொல்லும்?" 

"ஏன் சொன்னா தான் என்ன?" என்றான் சண்டைக்கு தயாராகி. 

சிலிர்த்து வந்த மகனின் தலையில் கொட்டி, "திமிருடா உனக்கு. ஈஸியா அந்த பொண்ணே உன்ன தேடி வீட்டை விட்டு வந்துச்சுல... அது தான் அவ பண்ண பெரிய தப்பு. பிடிவாதமா வீட்டுல சமாதானம் படுத்தி என்ன கூட்டிட்டு போனு நின்னுருக்கணும். அப்போ தெரிஞ்சிருக்கும் அவ அருமை" 

விழி உயர்த்தி அன்னையை முறைத்தான், "என்ன முறைப்பு? குடும்பத்தை விட்டு நீ தான் வேணும்னு வந்த பொண்ணு கூட சனி ஞாயிறு டைம் ஸ்பென்ட் பண்ணாம எல்லா நாளும் வெளிய தான் சுத்துவேன்னு நிக்கிறது தப்பு இல்லையா?" 

"என்ன இருக்க சொல்லிட்டு..." 

"தப்பு தான்" 

மகனை இடைமறித்தார் கார்த்திகா, "உன் கூட பேசாம அவ ப்ரன்ட்ட பேசுறது பெரிய தப்பு தான். ஆனா பிரிய அது ஒரு காரணம் இல்ல. உன்ன திவ்யா வெளிய விடாத மாதிரி அவளோட ஃபோன நீ ஓரமா வாங்கி வச்சு உங்களுக்குனு நேரத்தை ஒதுக்கிருக்கலாமே. 

ஆம்பளைங்க நீங்க வெளிய நாள் எல்லாம் சுத்திட்டு வந்துடுங்க, ஆனா வீட்டுல இருக்க பொம்பளைங்கள வெளிய கூட்டிட்டு போக மனசு வராது. கேட்டா செலவாகும்னு ஒரு கேவலமான காரணம் வச்சிருப்பிங்க" 

அன்னை பேசவும் தான் திவ்யா இன்று கடற்கரையில் வைத்து பேசியது நினைவிற்கு வந்தது. அவள் கூறியது போல் திருமணம் ஆன சில மாதங்கள் வீட்டை விட்டு இருவரும் வெளியே வரவில்லை. 

கூடல், தேடல் என இவருக்கான நேரமாக மட்டுமே மாறிப்போனது. அதன் பிறகு வேலையில் ரகு மூழ்கிட, கொஞ்சம் கொஞ்சமாய் தங்களுக்கான நேரமும் குறைய துவங்கியது. சண்டை, முகம் சுளித்தல், பிடிவாதம் என நாட்கள் வெறுப்பாகவும் மன அழுத்தத்தோடும் மட்டுமே நகர்ந்தது. 

"சொந்த விருப்பு வெறுப்பு எல்லாம் தூக்கி எறிஞ்சா தான் ரகு குடும்பம் குடும்பமா இருக்கும். என் இஷ்டம், என் ஆசைனு ஒரேடியா பிடிவாதம் பிடிக்கிறது உறவை பலவீனம் தான் படுத்தும்" 

"அதுக்குன்னு எந்நேரமும் நானே விட்டு குடுத்து போக முடியுமா ம்மா? ரெண்டு பக்கமும் சரி சமமான பாலன்ஸ் வேணும்" 

"இது தான் ரகு தப்பு. பக்குவம் முதல உனக்கு வரணும். அப்றம் உன்ன பாத்தே திவ்யாவும் கால போக்குல கத்துக்காமையா போய்டுவா?" 

ரகு அமைதியாக இருக்க, உள்ளே வந்த அவன் தந்தை மனைவியிடம் தேநீர் கோப்பையை ஒப்படைத்து, "நேரமாச்சு வா படுக்கலாம். பொறுமையா ஒரு நாள் உன் மருமகளையும் வச்சு பேசு" மகனுக்கு மறைமுகமாக இப்பொழுது தாங்கள் கிளம்புவதாக இல்லை என்ற செய்தியை வைத்தார் மோகன். 

"என்னது... அப்போ நீங்க கெளம்புற ஐடியால வரலையா?" 

"இல்ல" என்றார் அன்னை அலட்டாமல். 

"இதெல்லாம் சரி வராது, ஒழுங்கா காலைல கெளம்பி இருங்க நானே வீட்டுல வந்து விடுறேன்" என்றவன் பேச்சு முடிந்ததாக தங்கள் அறைக்குள் செல்ல அங்கு திவ்யா தன்னுடைய உடைகளை மடித்து கொண்டிருந்தாள். 

அறையை அளந்தவன் கண்கள் மெச்சுதலில் புருவம் உயர்ந்தது, "பரவல்லையே ரூம் அழகா மாறிடுச்சே" என்றான். 

அவளிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. உடையை ஒரு ஓரமாக வைத்தவள் ரூம் ஸ்ப்ரே எடுத்து அறை முழுதும் அடித்துவிட்டாள். 

மெத்தை விரிப்பு, தலையணை, போர்வையை எடுத்த ரகு அறை வாயிலில் நின்று, "ம்மா நீங்க திவ்யா கூட உள்ள படுங்க. நான் அப்பா ஹால்ல படுத்துக்குறோம்" 

"நான் அப்பா கூட படுக்கறேன். நீ உள்ளையே படு" என்றார் அவன் அன்னை. 

வரவேற்பறை வந்தவன் விரிப்பை தரையில் விரித்து, "ம்மா நாங்க தனி தனியா தான் படுக்குறோம். அதெல்லாம் ஒன்னுமில்ல" 

"டேய் அம்மா சொன்னா கேளு" என்றார் தந்தையும் அதட்டலாக. 

"ப்பா நாங்க டிவோர்ஸ் பண்ண போறோம். இப்போ இதெல்லாம் பண்றது உங்களுக்கே ஓவரா தெரியல?" கார்த்திகா மகன் கையில் இருந்த போர்வை, தலையணையை வாங்கி படுக்கவே தயாரானார். 

"சும்மா பேசிட்டே இருக்காதடா. லைட் ஆப் பண்ணு" தயக்கத்தோடு அவர்களையும் அறையையும் மாறி மாறி பார்த்த ரகு மெதுவாக அறைக்குள் நுழைந்தான்.

இப்பொழுது தான் வந்து சென்ற அறை இது தானா என்ற சந்தேகம் ரகுவுக்கு. சில நொடிகள் முன்பு தான் ஒரு தூசி கூட இல்லாமல் இருந்த தரையில் அவனுடைய உடைகள் சிதறி கிடந்தது. அதற்கு காரணமானவளோ எதுவும் நடக்காதது போல் மெத்தையில் நடுநாயகமாக அமர்ந்தாள். 

"திவ்யா என்ன இது?" பார்வையை அகற்றாமல் அவளிடம் கேட்டான். 

"உன் அப்பா அம்மா வருவாங்கனு க்ளீன் பண்ணேன், இப்போ தா அவங்க ஹால்ல இருக்காங்களே நீயே உன்னோடதை எடுத்து வை" என வினவினாள். 

அவளை முறைத்து கீழே கிடந்த உடைகளை அள்ளி மூட்டையாய் சுருட்டி அதே வடிவில் அலமாரியினுள் திணித்து கதவை மூடினான். 

"ஆனாலும் உனக்கு ஏத்தம் அதிகம்டி. நீட்டா மடிச்சு வச்சத்த வேணும்னே கண்டமேனிக்கு போட்ருக்க" அவளை அவள் முதுகோடு பிடித்து தள்ளி படுக்கையின் நுனியில் விட்டு சொகுசாக படுத்துகொண்டான் ரகு. 

சினம் தலைக்கு ஏற, "டேய் ராஸ்கல், போடா அங்குட்டு" கடின பாறையை பிடித்து தள்ளுவது போல் சிரமமாக இருந்தாலும் திவ்யா தன்னுடைய முயற்சியை கை விடவில்லை.

முயன்ற மட்டும் தள்ளி பார்க்க பலனோ பூஜ்யமானது. அடித்து பார்த்தாள், உதைத்து பார்த்தாள், அசருவேனா என படுத்திருக்க சோர்ந்து அவன் அருகிலே விட்டதை பார்த்து படுத்துவிட்டாள். உஷ்ணமாக மூச்சு வாங்க கிடந்தவளை பார்த்து சிரித்தவன் அவள் பக்கம் திரும்பி தலைக்கு அணைவாய் கையை முட்டுக்கொடுத்து படுத்தான். 

"ஏன் உனக்கு இப்போல்லாம் இவ்ளோ கோவம் வருது?" 

எதார்த்தமாக தான் கேட்டான், அவளோ இதற்காக தான் காத்திருப்பது போல் திரும்பி அவன் டீ-ஷர்ட்டை கொத்தாக பிடித்து ஆவேசமாக இழுக்க நிலை தடுமாறி அவளுக்கு அருகில் வந்து விழுந்தவன் கைகள் தன்னிச்சையாக அவளது இடையை பிடித்துக்கொண்டது. கோவத்தில் அவளும், அதிர்ச்சியில் அவனும் அதை கவனிக்க தவறினர். 

"என்னடா சொல்லிட்டு இருந்த உன் அம்மாகிட்ட?" 

கேட்டுவிட்டாளோ என விழித்தவன், "நான்.. நான் என்ன சொன்னேன்?" என்றான் தெரியாதது போல். 

"நடிக்காத. நீ பேசுன எல்லாத்தையும் கேட்டேனே. ஏன்டா என்னமோ நான் கொடுமை படுத்தின மாதிரி பேசுன, ஏன் நீ பண்ண எதையும் சொல்ல மாட்டியா?" விழிகள் செவ்வானமாய் சிவந்திருந்தது பெண்ணுக்கு. 

பதில் கூறாமல் இருந்தவன், சில நொடிகள் யோசனைக்கு பிறகு, "இல்லையே சொன்னேனே..." என்றவன், "ஏய் நான் என்னடி உன்ன கொடுமை படுத்துனேன். நீ தான் மனுஷனை மூச்சு விட முடியாம திரும்புன பக்கம் எல்லாம் குத்துணியே" என்றான் கேலி சிரிப்போடு. 

அவனது டீ-ஷர்டில் இறுக்கத்தை கூட்டியவள், "அப்போ நீ எனக்கு சந்தோசத்தை மட்டும் தான் குடுத்தியா? எனக்கு புடிச்சதை மட்டும் தான் செஞ்ச... நான் தான் உன்ன கொடுமை படுத்தி, சோறு தண்ணி போடாம, உன் சொத்து மொத்தத்தையும் அழிச்சு நடு தெருவுல நிக்க வச்சேன். அப்டி தான?" என்றவள் குரல் கோவதத்தை மறைத்து எள்ளலில் நிறைந்திருந்தது. 

"ஹே நான் அப்டி சொல்லல ம்மா" 

"வேற எப்படி சொன்னிங்க சார்? ஷாப்பிங் போறா, அலட்டிக்கிறா, அடங்காபிடாரி, இப்டி தான் சொல்லி வச்சிருக்க உன் அம்மாகிட்ட. என்ன நினைப்பாங்க என்ன பத்தி அவங்க? 

என்னைக்குடா நீ எனக்கு கை நிறைய காசு குடுத்து செலவு பண்ணுனு சொன்ன? ரெண்டாயிரம் மூவாயிரம் குடுப்ப. அதையே ரெண்டு வாரம் நான் வச்சுக்கணும். எனக்காகனு பாக்காம எப்போ வெளிய போனாலும் உனக்காகவும் சேர்த்து தான் வாங்கிட்டு வருவேன். ஏன் அதை சொல்லல உன் அம்மாகிட்ட?

ஆக மொத்தம், நான் உன் கதைல வில்லி அப்டி தான?" என்றவள் கரம் அவன் சட்டையிலிருந்து மெல்ல தளர அப்பொழுது தான் அவன் கை அவளது இடையில் இருப்பதையே அவள் உணர்ந்தாள்.

ஏதேதோ பேசி அவனோடு சண்டையிட்டு அழுக தான் மனம் ஆசை கொண்டது. ஆனால் முடியவில்லை. மனதில் பெரிதாக பாரம் இருந்தது. தோன்றியதை எல்லாம் ஒருவரோடு பகிர்ந்து, அதற்கான தீர்வை தேட தவித்த மனதிற்கு எவரும் கண்ணில் படவில்லை. 

உள்ளேயே வைத்து மருக தான் செய்தாள். சோர்வோடு அவன் கையை எடுத்துவிட்டு எழ பார்க்க, இம்முறை சுய உணர்வோடு அவள் இடையோடு பிடித்து அருகிலே நெருக்கி வைத்துக்கொண்டான். 

"அழுதியா?" என்றான் அவள் முகம் பார்த்து. 

"நான் எதுக்குடா அழுக போறேன், நீயே வேணாம்னு முடிவு பண்ணியாச்சு இதுல உன் குடும்பம் என்ன எப்படி நினைச்சா எனக்கு என்ன?" என்றாள் கமறிய குரலில். 

அவள் கண்களை பார்த்து ஊடுருவியது அவன் விழிகள், "அப்றம் ஏன் கண்ணு சிவந்துருக்கு?"

"தலை வலி, தூக்கம் இல்லாததுனு எனக்கு ஆயிரம் காரணம் இருக்கும். இல்ல சரக்கு கூட அடிச்சிருப்பேன் உனக்கென்ன வந்துச்சு, போ போய் படு" அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள முயல அசரவில்லை ரகு. 

அவள் கையை தன்னோடு பிடித்துவைத்துக்கொண்டவன், "பேசுறப்போ ஓட பாக்காத திவ்யா. நமக்கு இடைல ஆறு வருஷம் உறவு. நட்பு, காதல், கல்யாணம்னு எல்லாமே. இந்த ஆறு வருசத்துல உன் கண் எதுக்கு சிவந்துருகுணு கூடவா என்னால கண்டு பிடிக்க முடியாது? அழுத்துருக்க நீ" என்றான் பொய் கூறி மறுக்கவே கூடாதென்ற பார்வையோடு. 

"இல்ல..." 

"உன் கை நடுங்குது" தன் கைகளினுள் இருந்த அவள் கைகளை சுட்டிக்காட்டினான். 

"பீவர் வர்ற மாதிரி இருக்கு. அதுனால..." அவள் பேசி முடிக்கும் முன்பே அவன் கை தயங்காமல் அவள் நெற்றியை ஆராய்ந்து பின்னர் அவள் கழுத்து வளைவில் வந்து ஆராய்ந்து. 

திடுக்கிட்டு அவன் முகம் பார்க்க, அவனது முகத்திலோ பார்வையிலோ சலனமே இல்லை. 

"காய்ச்சல் எதுவும் இல்லையே. நெத்தில டெம்ப்பரேச்சர் நார்மலா தான் இருக்கு" மீண்டும் அவள் நெற்றி கன்னம் என்ன தொட்டு பார்த்து கையை எடுத்தான். 

திவ்யா அசையாது அவனை மிரட்சியோடு பார்த்து படுத்திருக்க, "அப்போ பொய் தான் சொல்ற. கண்டிப்பா எதையோ மறைக்கிற என்கிட்ட"

பொய் கூறி நழுவிடும் வாய்ப்பு இதுவரை திவ்யாவுக்கு கிட்டியதில்லை ரகுவிடமிருந்து. அவளது சிறு அசைவை பார்த்தே அதில் இருக்கும் செய்தியை உணர்பவனுக்கு இன்றும் பெரிதாக சிரமம் இருக்கவில்லை. 

உண்மையை கூறி அவனது மனத்தினையும் வேதனைப்படுத்த விரும்பவில்லை திவ்யா. உன்னை விட்டு போக முடியாமல் தான் அழுகிறேன் என கூறினால் யோசித்து அவளுக்காக தங்கள் விவாகரத்தையும் நிறுத்திடுவான் என்று தெரிந்து பேச்சை மாற்ற முயன்றாள். 

"உன்ன டெய்லி வந்து பிக்அப், ட்ராப் பண்ற அந்த பொண்ணு யாரு ரகு?" பல நாட்களாக மனதை அரித்த கேள்வி அது. 

இன்று தன்னையும் அறியாமல் ஏதேனும் பேச வேண்டும் என்றே பேசினாள். விஜியிடம் பேசியதை எல்லாம் நினைத்து பார்த்தவன் மனதில் குற்றவுணர்ச்சி ஆழமாக வேரூன்றியது. 

பல நாள் விஜியோடு வாகனத்தில் ஏறி செல்லும் பொழுதும் சரி, இல்லம் திரும்பி வரும் பொழுதும் இருவரையும் கவனிக்கும் அவள் பார்வையின் அர்த்தத்தை இப்பொழுது தான் உணர்கிறான். திவ்யா விஜியின் எண்ணத்தை புரிந்துவைத்துளாள். 

ஏற்கனவே திருமணம் செய்ய போகிறேன், வீட்டில் அவசரப்படுத்துகிறார்கள் என விளையாட்டாக கூறியது கூட தவறாகி போனதோ என்ற வருத்தம் வேறு மலையாய் நின்று மலைக்க வைத்தது. 

"அவ என்னோட டீம் மேட்" 

"அவ்ளோ தானா ரகு?" வேதனையை விழுங்கி பேசினாள். பொய் கூறுகிறான் அவளிடம் முதல்முறையாக. 

சிறு சிறு தவறுகள் செய்து அவளிடம் மழுப்பி அடி வாங்கி திக்கி திணறி உண்மையை உரைப்பவன், இன்று தான் அவளுக்கு தெரிந்து திடமாக பொய்யுரைக்கிறான் அதுவும் அவள் முகத்திற்கு நேராக. 

"ஓ" என்றாள் விழி மூடி தூங்க தயாராகும் எண்ணத்தோடு. 

நீண்ட அமைதிக்கு பிறகு, "ஆறு மாசம் முன்னாடி தான் தெரியும் விஜிய" முன்பு கேட்டதை விட மிக நெருக்கமாக இருந்தது அவன் குரல். 

கண்களை திறந்து திவ்யா பார்க்க அவளை விட்டு ஒரு அடி இடைவேளையில் தான் இருந்தான் ரகுநந்தன். 

"என்ன மாதிரியே இருப்பா திவ்யா. சிக்கனம். அவளோட குடும்பம் நல்ல வசதி ஆனாலும் பணத்தோட அருமை தெரிஞ்சு அதுக்கு தக்கன இருப்பா. என்ன மாதிரியே எல்லாரையும் நம்புவா. 

நான் வேலைல ஜாயின் பண்ண புதுசுல எப்படி வேலை தெரியாம முழிச்சிட்டு இருந்தேன் அதே மாதிரி தான் அவளும். என்ன பாக்குற மாதிரியே இருந்தது. ஏதோ ஒரு வகைல என்னை அறியாமலே அவ கூட ரொம்ப கிளோஸ் ஆகிட்டேன்" 

மனம் கேட்காமல் அவளிடம் உண்மையை ரகு வைக்க திவ்யாவால் உணர்வுகளை முகத்தில் பிரதிபலிக்க விடாமல் போராட வேண்டி இருந்தது. இறுகிய உடலையும், உறைந்த இதயத்தின் வேதனையும் என அகமும் புறமும் நாடகமே ஆடியது. அவன் கைகளை தன்னிடமிருந்து எடுத்துவிட்டு கண்களை மூடி இடைவேளை விட்டு படுத்தாள். 

'அவனுக்கு அந்த பெண்ணை பிடித்திருக்கிறது' திவ்யாவின் மூளை காட்டு கத்தலில் மீண்டும் மீண்டும் ஈடுபட்டிருக்க தலையே வெடித்துவிடும் அளவு தலை வலி தெறித்தது. 

சுருங்கியிருந்த அவள் புருவமும், மெத்தை விரிப்பை பற்றியிருந்த இறுக்கமும் அவளில் ஏதோ சரியில்லை என கூற பலத்த யோசனைக்கு பிறகு அவளது கையை பற்றி பெருவிரல் கொண்டு மென்மையாக வருடினான். 

அதில் உணர்வு பெற்று சுதாரித்தவள் மூடிய கண்களோடு தன்னுடைய கையை பின்னுக்கு இழுத்து மேலும் பின்னே நகர, அதற்கு மேல் படுக்கை இல்லாமல் போக, கீழே விழப் போனவளை நொடியில் சுதாரித்து பிடித்துக்கொண்டான் ரகு, "பாத்து ம்மா" என்ற அக்கறை செய்தியோடு. 

அவனுக்கு பதில் கூறாமல் கலவையான உணர்வுகளில் மூழ்கி தத்தளித்திருந்தவள், "முடியுமா ரகு நம்மளால?" கேள்வியை அவனிடம் வைத்தாள். 

"புரியல" 

"நம்மள, நம்ம நினைவுகளை நம்மளால மறக்க முடியுமா?" 

"முடியாதுனு நினைக்கிறியா திவ்யா?" 

"எனக்கு தெரியல" தலை அசைத்தாள் உண்மையாக. 

'என்னால முடியாது' என மனதில் தோன்றியதை சொல்லாமல் விட்டான் ரகு. 

"ஆனா அது தானே நல்லது? என்ன நீயும், உன்ன நானும் வெறுத்தே வாழ்ந்துட தான ஆகணும்" 

"என்ன வெறுக்க ஆரமிச்சிட்டியா ரகு?" மெல்ல போலியாக சிரித்தான், 

"நமக்குள்ள வெறுப்பு வந்ததை என்னைக்காவது உணர்த்துருக்கியா?" மௌனமாய் திவ்யா இருந்தது அவனுக்கு ஏதோ போல் ஆனது. 

"ம்ம்ம் அப்போ இருக்குதுல?" 

அதற்கும் வேதனையோடு சிரித்தவன், "அவ்ளோ தான் அப்போ ரொம்ப ஈஸி" என்றவன் மேலும், "என்ன சண்டை போட தான் உன்ன மாதிரி ஒரு ரவுடி பொம்பள கூட இருக்க மாட்டா" 

அவன் கூறியதில் அவளுக்கும் சிரிப்பு வந்திட, "நாம வித்யாசமானவங்க தான் இல்ல? டிவோர்ஸ் பண்ண போறவங்க யாராவது இப்டி சிரிச்சிட்டு ஒரே ரூம்ல படுத்து கதை பேசுவாங்களா. நம்மள பாரு. 

உன் அம்மாவை பாத்து பயப்புடுறேன், நல்ல மருமக மாதிரி வீட்டை சுத்தம் பண்றேன், ஒரே ரூம், ஒரே பெட்-னு டிவோர்ஸ்னு ஒன்னே மறந்து போன மாதிரி இருக்கு" என்றாள் தன்னையே மறந்து ஏதோ சிந்தனையில். 

"மொத்தமா மறந்துட முடியாதா?" 

ஏக்கத்தோடு அவன் பேசியதை சரியாக கேட்காதவள், "என்ன ரகு?" என்றாள். 

"இல்ல மொத்தமா மறந்துட முடியாதுல-னு சொன்னேன்" அவனும் பேச்சை மாற்றினான். 

சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு, "நாளைக்கு அம்மாகிட்ட பேசி அவங்கள இங்க படுக்க சொல்றேன்" 

"எல்லாத்தையும் மறந்துட கூடாதா ரகு" எதிர்பார்ப்பில் ஆசையாக அவளை அவன் பார்க்க அந்த பார்வைக்கும் எதிர்மறையான எண்ணத்தை உருவகப்படுத்திக்கொண்டு, 

"டிவோ... டிவோர்ஸ் ஆகுற வர எந்த சண்டை இல்லாம காலேஜ் ஸ்டார்டிங் ஸ்டேஜ்ல இருந்த மாதிரி இருக்கலாமா?" திக்கி திணறி தயக்கத்தோடு அவள் கேட்க என்ன சொல்வதென தெரியாமல் தவித்தான் ரகு. 

விஜியின் செயல்களில் பெரிதும் அடி பட்டாலும் அவள் அவ்வாறு கேட்டிராவிட்டால் திவ்யாவின் மேல் இருக்கும் அவனது உறுதியான நேசத்தின் ஆழம் விளங்கியது. 

அவசரத்தில் முடிவெடுத்துவிட்டோமோ என்ற தவிப்பு இந்த சில மணி நேரங்களில் புரிய, அதனை அவள் நெருக்கமும் அவள் வார்த்தைகளும் தீவிரமாக்கி அவள் விருப்பத்தையும் எண்ணாமல் தன்னோடு நிறுத்தி வைக்க கூறியது. 

ஆனால் அதே மனம், அவளது விருப்பத்தை பற்றிய சிந்தனையை தூண்டிவிட்டு அவன் ஆசைகளை மறுபரீசலனை செய்ய கூற அமைதியாகி போனது. 

"டிவோர்ஸ் வர இல்ல, எப்பவும் நாம ஒரு நல்ல ப்ரன்ட்ஸா கண்டிப்பா இருக்கலாம்" 

வார்த்தைகளுக்கு மாறாக இருவரின் பார்வையும் உடலும் செயல்படுவதையோ மனம் மற்றவர்பால் சாய்வதையும் கவனிக்க தவறினர். சாத்தியமற்றதை பற்றிய இந்த உரையாடல் பேராசையாக இருப்பினும் கேட்க, பேச, ருசித்தது. 

இழக்கப்போவதை பற்றி யோசிக்காமல் இருக்கும் இந்த ராகம் போன்ற இனிய பேச்சுகளை அசைபோட்டுக்கொண்டே தன்னையும் மீறி திவ்யா உறங்கியிருக்க, விழி எடுக்காது அவளை தன்னுள் சிறை செய்தவன் மெல்ல அவளை நெருங்கி மூக்கோடு மூக்கை உரசிவிடும் நெருக்கத்தில் படுத்து பரிதவிப்பான வார்த்தைகளில், 

"கோவிந்தம்மா உன் மனசு மாற வாய்ப்பே இல்லையாடி? என்ன விட்டு இருந்துடுவியா நீ?" கலங்கிய விழிகளோடு ஏக்கமாய் கேள்வி கேட்கவன் உறக்கம் தூரம் சென்றிருந்தது. 

நீண்ட நாட்கள் பிறகு தனக்கான இடத்தில் படுத்த நிம்மதியில் அசந்து திவ்யா உறங்கிப்போக, இதையே சாதகமாக பயன்படுத்தி அவளது கன்னம் படர முத்தமிட்டு கனத்த இதயத்தை சுமந்தபடியே வெகு நேரமாகி உறங்கினான் திவ்யாவின் காதல் கணவன்.


How is the chapter? Bore adikitha story? Perusa read panrapo impact ilala?

Dont worry vegama story mudichittu nxt story poidalam.

Comments plz

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro