24 தாமரையும் இரத்னாவும்
24 தாமரையும் இரத்னாவும்
இரத்னாவின் ஆன்மா அந்த புகைப்படத்தில் இருந்து வெளியே வருவதைக் கண்ட தாமரையின் கண்கள் விரிவடைந்தன. அந்த புகைப்படத்தையும் அவரையும் மாறி மாறி பார்த்தாள், உண்மையிலேயே வந்திருப்பது அவரது ஆன்மா தானா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள. அது உண்மை தான் என்று தெரிந்த போது அவளுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது. அவள் உடல் நடுங்கியது.
"பே... பே... பேய்..." என்று அவள் கத்த,
"ஷ்ஷ்ஷ்...." என்றார் ரத்னா.
"ஆஆஆஆ...." என கத்தியபடி மயங்கி விழுந்தாள் தாமரை.
பாலை டம்ளரில் ஊற்றிக் கொண்டிருந்த தெய்வானை, அவள் கத்தலைக் கேட்டு திடுக்கிட்டு அந்த பாலை தவறவிட்டார். அனைவரும் அவளுக்கு என்ன ஆனது என்று பார்க்க பூஜை அறையை நோக்கி ஓடினார்கள். அப்பொழுது தான் வீட்டிற்குள் நுழைந்த சூர்யாவும் ஓடினான்.
அவர்கள் அவள் அசைவின்றி விழுந்து கிடப்பதை பார்த்தார்கள். எதைப் பற்றியும் யோசிக்காமல், அவளை தன் கையில் தூக்கிக் கொண்டு விருந்தினர் அறைக்கு விரைந்தான் சூர்யா. அவளை கட்டிலில் கிடத்திவிட்டு, அவள் முகத்தில் தண்ணீரை தெளித்தான். தாமரை கண்களை திறக்க முயன்றாள். ஆனால் அவள் உடலில் சக்தியே இல்லாதது போல் இருந்தது.
அவளை தண்ணீர் குடிக்க செய்து முகத்தை துடைத்து விட்டார் தெய்வானை. மெல்ல கண் திறந்த தாமரை, சற்று முன் என்ன நடந்தது என்பதை நினைவு கூர்ந்தாள். சட்டென்று எழுந்தமர்ந்த அவள், இங்கும் அங்கும் பதட்டத்தோடு பார்வையிட்டாள். அதைக் கண்டு அனைவரும் குழப்பம் அடைந்தார்கள். தன் கைவிரல்களை ஒன்றாய் பிணைத்துக் கொண்டு பயத்தோடு நகம் கடித்தாள்.
"என்ன ஆச்சு, தாமரை? எதுக்காக இப்படி பயந்து போயிருக்க?" என்றான் சூர்யா.
தான் கண்டது உண்மையா அல்லது பிரமையா என்று தாமரைக்கு புரியவில்லை. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன ஒருவரை பார்த்தேன் என்று இவர்களிடம் கூறினால் அவளை அவர்கள் பைத்தியம் என்று நினைப்பார்கள். அதனால்,
"பல்லி... பல்லி என் மேல் விழப் பார்த்தது..." என்று பொய்யுரைத்தாள்.
சூர்யா தன் கண்களைச் சுழற்ற, மற்றவர்கள் பெருமூச்சு விட்டார்கள். தெய்வானை அவள் அருகில் அமர்ந்து,
"நீ எதுவும் சாப்பிடாம இருக்க. முதலில் இந்தப் பாலை குடி. அப்ப தான் உனக்கு கொஞ்சம் தெம்பு கிடைக்கும் என்றார்.
அவரிடமிருந்து அந்தப் பாலை வாங்கிப் பருகிய அவள், சூர்யாவை பார்த்து,
"நீங்களும் ஏதாவது சாப்பிடுங்க." என்றாள்.
சரி என்று தலையசைத்தான்.
"ஆமாம், சூர்யா. நீயும் எதுவும் சாப்பிடாம இருக்க. உனக்கு பசுபதி கிட்ட சொல்லி ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வர சொல்றேன்." என்றார் தெய்வானை.
"இல்ல, பாட்டி. மணி ஏழாக போகுது. நானும் தாமரையும் டின்னர் சாப்பிடுறோம். வா தாமரை, சாப்பிடலாம்?" என்றான்.
சரி என்று தலையசைத்தாள் தாமரை. அவளுக்கு பசி வயிற்றை கிள்ளியது.
"நான் முகத்தை கழுவிட்டு வரேன்." என்று தன் அறைக்குச் சென்றான் சூர்யா.
இங்கும் அங்கும் பார்த்தபடி உணவு மேசைக்கு வந்தாள் தாமரை. அடுத்த சில நிமிடங்களில் அவளுடன் இணைந்து கொண்டான் சூர்யா. அவளுக்கு ஏற்பட்ட விசித்திர உணர்வை எண்ணியபடி அமைதியாய் சாப்பிட்டாள் தாமரை. அவளை பார்த்த சூர்யா,
"நீ என்ன யோசிச்சுகிட்டு இருக்க?" என்றான்.
ஒன்றும் இல்லை என்று சங்கடத்தோடு தலையசைத்து விட்டு சாப்பிட்டாள். அப்பொழுது பண்டிதரிடமிருந்து பாட்டிக்கு அழைப்பு வந்தது.
"தாமரை, நீ சாப்பிடு. நான் இப்போ வரேன்." என்று அங்கிருந்து சென்றார்.
தன் அறைக்கு வந்த தெய்வானை, மீண்டும் பண்டிதருக்கு ஃபோன் செய்தார். அந்த அழைப்பை ஏற்றார் அவர்,
"அம்மா, தாமரை பூஜையை முடிச்சிட்டாளா?" என்றார்.
"ஆமாம் பண்டிதரே, கடவுள் அருளால பூஜை எந்த பிரச்சினையும் இல்லாம முடிஞ்சிடுச்சு."
"நிஜமாவா சொல்றீங்க? ஆச்சரியமா இருக்கே!"
"ஏன் அப்படி சொல்றீங்க?"
"உங்க மகளோட ஆன்மாவை கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கிற அந்த ஆள் நிச்சயம் இந்த பூஜை பூர்த்தி அடைய விடமாட்டாங்கன்னு நினைச்சேன்... (என்று சற்று நிறுத்திய அவர்) நீங்க எந்த டிஸ்டர்பன்சையுமே உணரலயா?" என்றார்
"ஒரே ஒரு முறை மட்டும், தாமரை விளக்கை என்கிட்ட கொடுத்த போது மட்டும் அந்த விளக்கு அணையை பார்த்தது. உடனே நான் அதை தாமரை கிட்ட கொடுத்தேன். அதோட ஜுவாலை மறுபடியும் நின்னு எறிய ஆரம்பிச்சுடுச்சு. அதை தவிர வேற எதையுமே நான் உணரல."
"அம்மா, நான் ரொம்ப மிகப் படுத்தி பேசுறேன்னு நினைக்காதீங்க. தாமரை உங்களுக்கு கிடைச்ச வரம். தாமரை மட்டும் உங்க கூட இல்லாம இருந்திருந்தா, நிச்சயமா இந்த பூஜையை உங்களால முடிச்சு இருக்கவே முடியாது. ஏன்னா, வழக்கமா இந்த பூஜையை செய்றவங்க பல இன்னல்களை சந்திப்பாங்க. அவ்வளவு சுலபமா இந்த பூஜையை முடிக்கவே முடியாது. அதை முடிச்சவங்க ரொம்ப கம்மி..."
"தாமரையை எனக்காக பூஜை செய்ய சொன்னதுக்கு ரொம்ப நன்றி பண்டிதரே!"
"இந்த பூஜையோட முடிவு உங்களுக்கு என்ன கொண்டு வருதுன்னு பார்க்கலாம்."
"என் மகளோட இருப்பை என்னால உணர முடியுமா?" என்றார் ஆர்வமாய்.
"இப்போ உங்களால அவங்களை உணர முடியுதா?"
"இல்ல..." என்றார் கவலையாக.
"உங்களால அவங்க இருப்பை உணர முடியும்னா, பூஜை முடிஞ்ச உடனே நீங்க உணர்ந்து இருப்பீங்க."
"அவளை என்னால உணர முடியாதா?"
"அம்மா, அவங்க எவ்வளவு ஸ்ட்ராங்கா கட்டுப்படுத்தப்பட்டு இருக்காங்கன்னு எனக்கு தெரியல. அது அவங்களுக்கே தெரியுமான்னு எனக்கு தெரியல."
"அவ எவ்வளவு ஸ்ட்ராங்கா கண்ட்ரோல் பண்ணி வச்சிருக்காங்கன்னு நம்ம எப்படி தெரிஞ்சுகிறது?"
"ரெண்டு நாள் பொறுங்க. எல்லாத்தையும் அமைதியா கண்காணிங்க."
"சரிங்க பண்டிதரே"
"தாமரை எங்க?"
"அவ பூஜையை முடிச்சிட்டு சாப்பிட்டுக்கிட்டு இருக்கா."
"சரிங்க அம்மா. நான் அவகிட்ட அப்புறமா பேசறேன்." என்று அழைப்பை துண்டித்துக் கொண்டார்கள். தாமரை வருவதை பார்த்தார் தெய்வானை.
"சாப்பிட்டியா தாமரை?"
"சாப்பிட்டேன் பாட்டி."
"எப்போ விளக்கை குளிர வைக்கிறது?"
"ஒரு மணி நேரம் கழிச்சு, பாட்டி."
"அதை நான் செஞ்சிடவா?"
"வேணாம் பாட்டி. நானே செய்றேன்."
"சரி,"
"நீங்க சாப்பிடலையா பாட்டி?"
"நான் அப்புறம் சாப்பிடுறேன்."
அவரிடம் பேசிக் கொண்டே சோபாவில் சாய்ந்து கண்களை மூடிய தாமரை, அப்படியே தூங்கிப் போனாள். விடியற்காலையிலேயே எழுந்து விட்டதால் அவளுக்கு அசதியாய் இருந்தது. உட்கார்ந்த நிலையிலேயே அவள் உறங்குவதை பார்த்த தெய்வானை, அவளை மெல்ல சாய்த்து படுக்க வைத்து விட்டு, சாப்பிட சென்றார்.
அப்பொழுது யாரோ தன் கன்னத்தை கட்டுவதை உணர்ந்தாள் தாமரை. அந்த கையை தட்டி விட்டு வசதியாய் படுத்துக்கொண்டாள் அவள்.
"தாமரை..."
"ம்ம்ம்?"
"ப்ளீஸ் எழுந்திடு..."
கண்களைத் திறந்த தாமரை, ரத்னா தன் தனக்கு முன்னாள் நின்று கொண்டிருப்பதை கண்டாள். அவளது தூக்கம் பறந்து போனது. சோபாவில் எகிரி அமர்ந்த அவள், கத்தி கூச்சலிட நினைத்தபோது,
"ஷ்ஷ்... கத்தாதே." என்றார் ரகசியமாய்.
"சூர்யா சாரோட அம்மா..." என்று கூறியபடி பின்னோக்கி நகர முயன்றாள். ஆனால் அவளால் அது முடியவில்லை.
"நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன். என நம்பு."
பயத்தோடு அவரைப் பார்த்தாள் தாமரை.
"நீ என்னை முதல் தடவை எங்க பார்த்த?"
"பூ... பூஜை ரூம்ல." என்றாள் திக்கி திக்கி.
"நான் கெட்ட ஆத்மாவ இருந்தா என்னால பூஜை ரூம்குள்ள வந்திருக்க முடியுமா?" என்று அவளுக்கு புரிய வைக்க முயன்றார் ரத்னா.
அவர் கூறுவது சரி என்பதால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் தாமரை. ஆம், அவர் ஒரு கெட்ட ஆன்மா என்றால், அவரால் பூஜை அறைக்குள் நுழைந்திருக்க முடியாது. அதுவும் அவள் அவ்வளவு சக்தி வாய்ந்த பூஜையை செய்த பிறகு...!
"உண்மையிலேயே நான் உங்களை பாக்குறேனா?"
"ஆமாம், நீ என்னை பாக்குற. அதுக்காக நான் உனக்கு ரொம்ப கடமைப்பட்டு இருக்கேன்."
"ஆனா, நீங்க உங்க மகன் இல்ல உங்க அம்மா கண்ணுக்கு தெரிஞ்சிருக்கலாமே..."
"இல்ல, அவங்களால என்னை பார்க்க முடியாது."
"ஏன்?"
"என்னை கட்டுப்படுத்தி வச்சிருக்காங்க."
"யார் உங்களை கட்டுப்படுத்தினது?"
"என்னை கொன்னவங்க"
"உங்களை கொன்னது யாருன்னு உங்களுக்கு தெரியுமா?"
"நீ எனக்கு உதவி செஞ்சா நான் அதை கண்டுபிடிப்பேன்."
"நானா?"
"ஆமாம். ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணு."
"ஏன் நான்?"
"ஏன்னா, நீ தெய்வீகமான பொண்ணு. நீ பிறந்த நாளும், நேரமும் உன்னோட ஜாதகத்துக்கு சிறப்பையும், வலுவையும் சேர்த்திருக்கு. அதனால தான் பூஜைக்கு முன்னாடியே என்னோட இருப்பை உன்னால உணர முடிஞ்சது. அதனால தான் இந்த பூஜையை உன்னால முடிக்க முடிஞ்சது. அதனால தான் இப்போ நீ என்னை பார்த்துக்கிட்டு இருக்க. இதெல்லாம் உன்னால மட்டும் தான் சாத்தியம்."
"பூஜையைப் பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்?"
"என்னால எல்லாத்தையும் கேட்க முடியும். எங்க அம்மா பண்டிதர் கிட்ட பூஜையை பத்தி பேசுனதை நான் கேட்டேன்."
"ஓ..."
"நீ எனக்கு உதவி செய்வியா?"
சரி என்று தயக்கத்தோடு தலையசைத்தாள் தாமரை.
"கவலைப்படாத, உனக்கு ஒன்னும் ஆகாது."
"சூர்யா சாருக்காக நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். ஏன்னா அவருக்கு உங்க மேல ரொம்ப பிரியம்."
"எனக்கு தெரியும்."
"அவர்கிட்ட நான் உங்களைப் பத்தி சொல்லட்டுமா?"
"அவன் ப்ரூஃப் இல்லாம எதையும் நம்ப மாட்டான்."
"பாட்டி கூடவா?"
"அவங்களுக்கு நம்ம சொல்ல தான் செய்யணும். இந்த பூஜையோட சக்தி என்னன்னு அவங்களுக்கு தெரியணும்."
"கொலைகாரனை நீங்க எப்படி கண்டுபிடிக்க போறீங்க?"
"அதை செய்யணும்னா என்னை கட்டி வச்சிருக்கிற அந்த கட்டுல இருந்து நான் வெளியே வரணும்."
"எப்படி உங்களால வெளியே வர முடியும்?"
"உனக்கு நான் அதைப் பத்தி அப்புறம் சொல்றேன். ஆனா உன்னால மட்டும் தான் அதை செய்ய முடியும்."
"என்னை பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்?"
"எனக்கு உங்க தாத்தாவை தெரியும். உங்க அம்மா எங்களோட குலதெய்வ கோவிலில் தான் உன்னை பிரசவிச்சாங்க."
"ஆமாம், அம்மா சொன்னாங்க."
"வேற என்ன சொன்னாங்க?"
"அவங்களுக்கு வலி வந்த போது தாத்தாவை தேடி கோவிலுக்கு வந்தாங்களாம். ஆனா கோவில்ல யாருமே இல்லையாம். திடீர்னு அங்க வந்த ஒருத்தர் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணாங்கன்னும், அப்போ தான் நான் பொறந்தேன்னும் சொன்னாங்க."
"அது நான் தான்."
அவரை வியப்போடு ஏறிட்டாள் தாமரை.
"ஆமாம், நீ பொறந்தப்போ, முதல் முதலில் உன்னை நான் தான் என் கையில தூக்கினேன். அப்போ திண்டிவனம் அவ்வளவா டெவலப் ஆகல. உங்க அம்மாவுக்கு வலி வந்துடுச்சு. எப்படியோ தட்டு தடுமாறி உங்க தாத்தாவை பார்க்க கோவிலுக்கு வந்தாங்க. ஆனா பண்டிதரோட அப்பா பாத்ரூம்ல வழுக்கி விழுந்ததால, அவர் கூட உங்க தாத்தாவும் அவங்க வீட்டுக்கு போயிட்டாரு. அந்த நேரம் தான் நான் கோவிலுக்கு வந்தேன். அப்ப தான் உங்க அம்மா கடுமையான வலியில இருந்ததை பார்த்தேன். அவங்களை ஹாஸ்பிடல் கூட்டிகிட்டு போற வரைக்கும் அவங்க தாங்க மாட்டாங்கன்னு எனக்கு புரிஞ்சு போச்சு. ஏன்னா, ஹாஸ்பிடல் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. உங்க அம்மாவுக்கு எங்க கோவில்லையே குழந்தை பிறந்திடுச்சு. அது தான் நீ."
அவர் கூறியதை கேட்டு மெல்ல கண்ணிமைத்தாள் தாமரை.
"எங்க கோவிலோட பண்டிதர், உங்க தாத்தா கிட்ட உன் ஜாதகத்தை பத்தி சொன்னாரு. எந்த ஒரு சூனியமும், கெட்ட சக்தியும் உன்கிட்ட வேலை செய்யாதுன்னு அப்போ தான் நான் தெரிஞ்சுகிட்டேன். நீ எது செஞ்சாலும் அது வெற்றியைத் தான் கொடுக்கும். என் சாவுக்கு பிறகு என் குடும்பத்துக்கு ஒரு நல்ல வழி காட்ட சொல்லி நான் என் குல தெய்வத்தை வேண்டிக்கிட்டே இருந்தேன். ஆனா எனக்கு உதவி செய்ய நீயே வருவேன்னு நான் எதிர்பார்க்கல."
"நான் இப்போ என்ன செய்யணும்?" என்றாள் தயக்கத்தோடு.
"இப்போதைக்கு ஒன்னும் வேண்டாம்."
"நான் பாட்டிகிட்ட உங்களை பத்தி சொல்லட்டுமா?"
"வேண்டாம். நாளைக்கு அவங்களே தெரிஞ்சுக்குவாங்க."
"எப்படி?"
"நாளைக்கு நீயே பாரு..."
சரி என தலையசைத்தாள்.
"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கட்டுமா?"
"கேளு"
"நான் பிறந்தப்போ சூர்யா சார் அங்க இருந்தாரா?"
ரத்னா புன்னகை புரிந்தார்.
"ஆமாம். அவனுக்கு அப்போ எட்டு வயசு. உன்னை தூக்கி வச்சுக்கணும்னு அடம் பிடிச்சான். ஆனா நான் அதுக்கு அனுமதி கொடுக்கல. ஏன்னா பிறந்த குழந்தையை சின்ன பிள்ளை கிட்ட கொடுக்கிறது ரிஸ்க்..."
அதைக் கேட்டு சிரித்தாள் தாமரை.
"ஆனா அவன் உன் குட்டி கால்ல முத்தம் கொடுத்தான்."
தாமரையின் முகபாவம் சற்றென்று மாறியது. தன் கால் விரல்களை சுருட்டி, மென்று விழுங்கினாள். ரத்னா புன்னகைத்தார்.
"ரோஜா செடி விஷயத்துல நம்ம ரெண்டு பேரும் ஏற்கனவே ஃபிரெண்டு தான், தெரியுமில்ல?"
ஆம் என்று புன்னகைத்தால் தாமரை.
"அந்தச் செடிக்கு சூர்யா சார் 18 வருஷமா தண்ணி ஊத்திக்கிட்டு இருக்காரு. நீங்க ஏன் அதை அப்பவே துளிர்க்க வைக்கல?"
"அது என் கையில இல்ல. அந்தச் செடியை சாகாம என்னால காப்பாத்த முடிஞ்சது. அவ்வளவு தான். ஆனா அது துளிர்த்துக்கு காரணம் நான் இல்ல. உன்னுடைய சக்தி. என் படத்துக்கு முன்னாடி இருந்த விளக்கை நீ ஏத்தினியே, அந்த மாதிரி. அது எனக்கே கூட ஆச்சரியம் தான்."
"இறந்தவங்க உருவம் பார்க்க ரொம்ப கொடூரமாக இருக்கும்ன்னு நினைச்சேன்..."
"நீ நிறைய சினிமா பாப்பியா?" என்றார் கிண்டலாய்.
"ஆமாம். எல்லா படத்திலயுமே ஆவி ரொம்ப கொடூரமா இருக்கும்னு தான் பயமா காட்டுவாங்க."
"பாவம், அந்தப் படங்களை எடுத்த டைரக்டருங்க ஒரு தடவை கூட சாகல போல இருக்கு...! அதனால தான் பேய் எப்படி இருக்கும்னு அவங்களுக்கு தெரியல." என்று சிரித்தார் ரத்னா.
அதைக் கேட்டு வாயை பிளந்த தாமரை,
"ஆவி இப்படி எல்லாம் கவுண்டர் கொடுக்கும்னு எனக்கு தெரியாது..." என்று கூற, மேலும் சிரித்தார் அவர்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro