20 சூர்யாவின் திகைப்பு
20 சூர்யாவின் திகைப்பு
ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டு நின்றாள் தாமரை.
"ஐ அம் சாரி, தாமரை. நான் உங்ககிட்ட ரூடா நடந்துக்கிட்டேன்." என்று அவள் கூறியதைக் கேட்டு தாமரை சங்கடத்தோடு புன்னகைத்தாள்.
"உங்களால எல்லாத்தையும் கணிச்சு சொல்ல முடியுமா?"
இல்லை என்று அவசரமாய் தலையசைத்தாள் தாமரை.
"அப்புறம்?"
"என்னையும் மீறி சில வார்த்தைகள் என் வாயிலிருந்து வந்துடும். அது தான் நடக்கும்."
"அது தெரியாம நான் உன்னைத் திட்டிட்டேன். நீ வேணும்னே அதைச் சொல்றீயோன்னு நினைச்சேன். என்னை மன்னிச்சிடு, தாமரை."
அவள் எதற்காக இத்தனை முறை மன்னிப்பு கேட்கிறாள் என்று புரியவில்லை தாமரைக்கு. அவளது முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்து,
"நான் பிரக்னண்டா இருக்கேன்." என்றாள் அஞ்சலி.
தாமரையின் முகம் மலர்ந்தது.
"நான் ஃப்ளை பண்ண கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு. நீ சொன்ன வார்த்தை உண்மையாயிடுச்சு." என்றாள் புன்னகையோடு.
தலை குனிந்து கொண்டாள் தாமரை.
"எனக்கு ரொம்ப சந்தோஷம்."
"நீங்க இப்ப ரெஸ்ட் எடுத்துக்கணும், அண்ணி." என்றாள் தாமரை.
ஆம் என்று தலையசைத்தாள்.
"உங்களுக்கு ஏதாவது வேணும்னா என்னைக் கேளுங்க, அண்ணி." என்றாள் தாமரை அக்கறையோடு.
"நெஜமாத்தான் சொல்றியா?"
"ஆமாம்"
"தேங்க்ஸ்" என்று தன் அறைக்குச் சென்றாள் அஞ்சலி.
பல கண்கள் அவளைத் துழாவியபடி இருந்ததைக் கண்ட தாமரை, அந்த இடத்தை விட்டு அமைதியாய் அகன்றாள். சூர்யாவின் அறைக்குச் சென்று ரோஜா செடிக்குத் தண்ணீர் ஊற்றியபடி,
"எனக்குச் சென்னையை சுத்தமா பிடிக்கல, மா. எங்க ஊரு எவ்வளவோ மேல். சென்னை என்னை எப்பவும் பதட்டத்திலேயே வச்சிருக்கு. இங்க எப்போ எப்படி மக்களோட மனசு மாறுமுன்னே தெரியல"
"எங்க அம்மா செடியை உனக்கு ரொம்பப் பிடிச்சிடுச்சு போலருக்கு?" என்றான் அங்கு வந்த சூர்யா.
"இந்த செடி என்னோட உளறலைக் கேட்டு ரியாக் பண்ணாது."
"உனக்கு முதல்ல ரியர்ட் பண்ணதே இந்த செடி தான். உன் குரலைக் கேட்டதுக்குப் பிறகு தான் அது துளிர்த்துது. ஞாபகம் இருக்கா?"
"ஆனா மனுஷங்க என்னைத் திட்டுற மாதிரி இது என்னைத் திட்டாது." என்றாள், முகத்தைச் சோகமாய் வைத்துக் கொண்டு.
"நான் அவங்களுக்குப் புரிய வச்சிட்டேன். அவங்களும் புரிஞ்சுக்கிட்டாங்க. இனிமே யாரும் உன்னைத் திட்ட மாட்டாங்க."
"இங்க மக்கள் கஷ்டப்படுறதைப் பார்த்தப் பிறகு கூட என்னால அவங்களுக்கு உதவி செய்ய முடியல..."
"யார் கஷ்டப்படுறதைப் பத்திப் பேசுற?"
"கீழ விழுந்து எழுந்தாங்களே அந்த ஆன்ட்டியைத் தான்."
"நீ என்ன சொல்ற? நீ எப்படி அவங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்?"
"நான் நல்லா சுளுக்கு எடுப்பேன் தெரியுமா?"
"நெஜமாவா?"
"ஆமாம் அதை ஒரு வயசான பாட்டிகிட்ட கத்துக்கிட்டேன். எங்க கிராமத்துல எல்லாரும் அந்த பாட்டிகிட்ட தான் சுளுக்கு எடுத்துக்குவாங்க. அவங்க எங்க பக்கத்து வீட்டு பாட்டி. யாராவது அவங்க கிட்ட சுளுக்கு எடுக்க வந்தா, நான் அவங்க வீட்டுக்கு போய் அவங்க அதை எப்படி செய்றாங்கன்னு கவனிப்பேன். நான் அவ்வளவு இன்ட்ரஸ்டா இருக்கிறதைப் பார்த்து, அந்தப் பாட்டி எனக்கு அதைச் சொல்லிக் கொடுத்தாங்க."
"உன்னால எந்த சுளுக்கையும் எடுக்க முடியுமா?"
"நிச்சயமா முடியும்"
"மாமியோட சுளுக்கை எடுக்க முடியும்னு உனக்கு நம்பிக்கை இருக்கா?"
"சொடுக்கு போடுற நேரத்துல எடுத்துடுவேன்."
அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டான் சூர்யா.
"அது சில நிமிஷ வேலை. ஆனா டாக்டர் அவங்களை ரெண்டு நாளைக்கு நடக்க கூடாதுன்னு சொல்லிட்டாரு." என்றாள் வெறுப்புடன்.
"என் கூட வா."
"எங்க?"
"வா..."
பூ வாளியை வைத்துவிட்டு அவனுடன் நடந்தாள். அவளை மனோரமாவின் அறைக்கு அழைத்துச் சென்ற அவனை அதிர்ச்சியோடு ஏறிட்டாள் தாமரை. அவனது எண்ணம் என்னவென்று அவளுக்குப் புரிந்துப் போனது.
"என்னை எதுக்காக இங்க கூட்டிகிட்டு வந்தீங்க?" என்றாள் மெல்லிய குரலில்.
அவளுக்கு பதில் கூறாமல்,
"மாமி, நீங்க ரெண்டு நாள் பெட்டை விட்டு இறங்காம இருக்கணுமா, இல்ல சில நிமிஷத்துல சரியாகணுமா?" என்றான்.
"சில நிமிஷத்துல எப்படி சரியாகும், சூர்யா? நீ என்ன செய்யப் போற?"
"நான் எதுவும் செய்யப் போறதில்ல. தாமரை தான் செய்யப் போறா."
"தாமரையா? அவளுக்கு என்ன தெரியும்?" என்றார் தாமரையை பார்த்தவாறு.
"அவ சுளுக்கு எடுக்கிறதுல எக்ஸ்பர்ட்" என்றான் பெருமையாக.
அவன் அவளை அந்த அளவிற்கு நம்பினான் என்பதை தாமரையால் நம்ப முடியவில்லை.
"அப்படியா?" என்றார்.
"அதை அவ, அவங்க கிராமத்தில் இருந்த ஒரு வயசான பாட்டிகிட்ட கத்துக்கிட்டாளாம்."
"ரொம்ப வலிக்குமா?" என்றார் மனோரமா.
சூர்யா தாமரையை பார்க்க,
"கொஞ்சம் வலிக்கும். ஆனா கொஞ்ச நேரத்துக்கு தான்..." என்றாள் தயக்கத்தோடு.
"ஒன்னும் பிரச்சனை இல்ல, தாமரை. வந்து அவங்களுக்கு சுளுக்கு எடுத்து விடு." என்றான்.
மனோரமா விழிகளை விரித்தார்.
"இல்ல சூர்யா..." என்று பயத்துடன் அவர் தடுமாற,
அவருக்கு செவி சாய்க்காமல்,
"தாமரை எதுக்காக காத்துகிட்டு இருக்க? சுளுக்கு எடுத்து விடு." என்றான் சூர்யா.
மனோரமாவின் முக பாவத்தை கவனித்தபடி தயக்கத்தோடு நின்றாள் தாமரை. அவள் கையைப் பிடித்து இழுத்து மனோரமாவின் கட்டிலில் அமர வைத்தான் சூர்யா.
தாமரை மற்றும் மனோரமா இருவருக்குமே, அந்த சூழ்நிலையில் இருந்து எந்த சாக்கும் சொல்லி தப்பிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. மெல்ல மனோரமாவின் கணுக்காலை தொட்டாள் தாமரை. மனோரமா தன் கண்ணை இறுக்கமாய் மூடிக்கொண்டார். அவர் காலில் கட்டி இருந்த பேண்டை நீக்கினாள். கண்களை மூடி மெல்ல அவர் கால்களை தடவி அதை மென்மையாய் பரிசோதித்தாள். அவளது விரல்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றன.
தாமரையையும் அவளது நடவடிக்கையையும் கவனித்துக் கொண்டிருந்தான் சூர்யா. நம்பிக்கையோடு கண்களைத் திறந்தாள் தாமரை. அவரது கணுக்காலைப் பற்றி, அதை கவனமாய் திருப்பினாள்.
"ஐயோ கடவுளே...!" என்று கத்தினார் மனோரமா.
அவரைப் பார்த்தபடி எழுந்து நின்றாள் தாமரை.
"அய்யய்யோ... போச்சு போச்சு..." என்று உளறினார் மனோரமா.
முடிஞ்சிருச்சா? என்பது போல் அவளிடம் கண்களால் கேட்டான் சூர்யா. அவள் ஆம் என்று தலையசைத்தாள்.
"மாமி உங்களுக்கு இன்னும் கூட வலிக்குதா?" என்றான் சூர்யா.
உளறுவதை நிறுத்திவிட்டு தன் கால்களை இப்படியும் அப்படியும் மெல்ல அசைத்தார் அவர். அவரது முகபாவம் மாறியது. கால்களை உதறி பார்த்தார். அவரது முகம் ஆச்சரியத்தால் பளிச்சிட்டது. கட்டிலை விட்டு கீழே இறங்கி சிரித்தபடி குதித்தார்.
"எனக்கு நல்லாயிருச்சு. வலிக்கவே இல்ல." என்று சின்னப்பிள்ளைப் போல் வட்டமிட்டார்.
தன் உதடு கடித்து தன் சிரிப்பை அடக்கிக் கொண்டான் சூர்யா. ஆனால் தாமரை பளிச்சென்று புன்னகைத்தாள். மனோரமா அங்கிருந்து சந்தோஷமாய் வெளியில் ஓடியவர், சற்று நின்று, திரும்பி தாமரையை பார்த்து,
"தேங்க்யூ சோ மச்" என்று புன்னகையோடு அங்கிருந்து சென்றார்.
"கிரேட் ஜாப், தாமரை. அமேசிங்!" என்றான் சூர்யா.
தாமரை நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் அவரை பார்த்து வாயை பிளந்தார்கள். அவர்களை நோக்கி பறக்கும் முத்தங்களை பறக்க விட்டபடி ஒரு மாடலை போல் நடந்து சென்றார் மனோரமா.
"மனோரமா, உன்னால எப்படி நடக்க முடியுது?" என்று தான் அமர்ந்திருந்த சோபாவை விட்டு எழுந்து நின்றார் அஞ்சனா.
"என்னோட சுளுக்குப் போயே போச்சு!"
"இது எப்படி?" என்றார் பாட்டி.
"மந்திர கைகளால..."
"புதிர் போடறத நிறுத்திட்டு, நடந்ததைச் சொல்லு." என்றார் அஞ்சனா.
"தாமரை எனக்கு சுளுக்கு எடுத்துவிட்டா."
"தாமரையா?" என்றார்கள் அனைவரும் நம்ப முடியாமல்.
"ஆமாம். அவர் சுளுக்கு எடுக்குறதுல எக்ஸ்பர்ட். ஒரு திருப்பு திருப்பினா... அவ்வளவு தான்... சுளுக்குப் போயிடுச்சு."
எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"நல்லவேளை, ரெண்டு நாள் வீணா போகப்போகுதுன்னு நெனச்சேன்." என்று சோபாவில் அமர்ந்தார்.
"உண்மையிலேயே உனக்கு வலிக்கலையா?" என்றார் அஞ்சனா சந்தேகத்தோடு.
"நான் எவ்வளவு சாதாரணமா நடக்குறேன்னு நீங்க பாக்கலையா?"
"நடக்கப் போறதை முன் கூட்டியே சொல்றா... சுளுக்கு எடுக்கிறா... இன்னும் அவளுக்கு என்னென்ன தெரியுமோ தெரியல," என்றாள் லாவன்யா.
அவளைச் சுற்றி இருந்த கண்கள் சுருங்கின. அதில் இருந்தது என்ன என்று நம்மால் கூற முடியவில்லை. பாட்டி தன் அறைக்குச் சென்றார்.
"தாமரை, உனக்கு இவ்வளவு திறமைகள் இருக்குன்னு என்கிட்ட சொல்லவே இல்லையே..."
"அதெல்லாம் இங்க வேலை செய்யும்னு நான் நினைக்கல பாட்டி. சூர்யா சார் தான் என்னை மாமியோட ரூமுக்கு கூட்டிகிட்டு போயி சுளுக்கு எடுக்க வச்சாரு."
"நல்லது தானே! உன்னோட திறமை ஒருத்தருக்கு உதவியிருக்குல்ல?"
ஆம் என்று தலையசைத்தாள்.
"அது சரி, நீ உண்மையிலேயே, அமாவாசை அன்னைக்கு பூஜை பண்ண போறியா?"
"ஆமாம் பாட்டி. அதுக்கு முன்னாடி சில ஏற்பாடு எல்லாம் செய்யணும்."
"என்ன ஏற்பாடு?"
"நீங்க அதைப் பத்தி எல்லாம் கவலைப்படாதிங்க பாட்டி. நான் பாத்துக்குறேன்."
"எல்லாத்தையும் ரகசியமா வச்சுக்கோ. இந்த பூஜையை பத்தி யாருக்கும் தெரிய கூடாது. யார்கிட்டயும் எதுவும் சொல்லாத. ப்ளீஸ்."
"சரிங்க பாட்டி. அன்னைக்கு அமாவாசையும் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வருது. அதனால என்னால சுலபமா சமாளிச்சிட முடியும்."
திருப்தியோடு தலையசைத்தார் பாட்டி.
மறுநாள் காலை
அலுவலகம் செல்ல தயாரானான் சூர்யா. அப்பொழுது அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பு அமரனிடமிருந்து வந்ததால் அந்த அழைப்பை உடனே ஏற்றான்.
"சொல்லு அமரா,"
"உன் வீட்ல இருக்கிற எல்லா பழைய ஃபைலையும் கொண்டு வந்துடு. நம்ம ஆபீஸ்ல நடந்த அட்டாக்கில் நிறைய ஃபைல்ஸ் ஸ்பாயில் ஆயிடுச்சு. பழைய ஃபைலை வச்சு அதையெல்லாம் நம்ம திருப்பி ரீக்கிரியேட் பண்ணணும்."
"சரி, கொண்டு வரேன்."
தன் அலமாரியில் இருந்து 15 கோப்புகளை எடுத்துக் கொண்டான். அதை காரில் வைப்பதற்காக பசுபதியை அழைத்தான். ஆனால் பசுபதி அங்கு வரவும் இல்லை, அவனுக்கு குரல் கொடுக்கவும் இல்லை. தன் அறையை விட்டு வெளியே வந்து மீண்டும் குரல் கொடுத்தான் சூர்யா.
"அவன் வீட்ல இல்ல, சூர்யா. மார்க்கெட்டுக்கு போயிருக்கான்." என்றார் பாட்டி பூஜை அறையில் இருந்தபடி.
"சரிங்க, பாட்டி." என்று மீண்டும் தன் அறைக்கு வந்து, அனைத்து கோப்புகளையும் ஒரு கையிலும், தனது மடிக்கணினி பையை மற்றொரு கையிலும் எடுத்துக் கொண்டான்.
பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்த பாட்டி, சூர்யா வீட்டை விட்டு வெளியேறுவதை கவனித்தார். அந்த கோப்புகளையும் மடிக்கணியையும் காரில் வைக்கச் சென்றான்.
"சூர்யா, ரத்னா போட்டோவுக்கு முன்னாடி இருக்கிற விளக்கை ஏத்த மறந்துடாதே." என்றார் அவன் வெளியே செல்வதை பார்த்து.
பின்னால் திரும்பிப் பார்த்த சூர்யா, தலையசைத்து விட்டு சென்றான். பூஜை அறையில் இருந்து பாட்டியை பின்தொடர்ந்து வந்த தாமரை, அவன் தலையசைத்ததை கவனிக்கவில்லை. அவன் பாட்டி கூறியதை கேட்கவில்லையோ என்று எண்ணினாள். பாட்டியும் தன் அறைக்கு சென்று விட்டார்.
அவள் அதை அப்படியே விட்டுவிடக்கூடாது என்று நினைத்தாள். மீண்டும் பூஜை அறைக்கு வந்து, தீப்பெட்டியை எடுத்து ரத்னாவின் புகைப்படத்திற்கு முன்னால் இருந்த விளக்கை ஏற்றினாள், அதன் பின்னால் இருந்த மர்மத்தை அறியாமல்.
ஆனால் ரத்னாவிற்கும் தாமரைக்கும் இடையில் எந்த மர்மமும் இல்லை. அவள் ஏற்றிய விளக்கின் ஒலி முத்து போல் அழகாய் சுடர்விட்டு எரிந்தது. அந்த சுடரை விட அழகாய் புன்னகை புரிந்தாள் தாமரை.
தலையை நிமிர்த்திய அவள், பெயர் கூற முடியாத முகபாவத்துடன் சூர்யா அவளையே பார்த்துக் கொண்டு நிற்பதை கண்டாள்.
"நீங்க வந்துட்டீங்களா? நீங்க போயிட்டிங்கன்னு நினைச்சேன். அதனால தான் இந்த விளக்கை ஏத்தினேன். நீங்க தான் எப்பவும் இதை ஏத்துவீங்கல்ல? நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் அதை ஏத்தியிருக்க மாட்டேன். இருங்க, நான் அதை அணைச்சிடுறேன். நீங்க மறுபடி ஏத்துங்க."
ஒரு பூவை கொண்டு அந்த விளக்கை அணைக்க முயன்றாள். தன் சுய நினைவுக்கு வந்த சூர்யா, அவளை தடுக்க முயன்றான். ஆனால் அவனுக்கு மேலும் ஆச்சரியம் அளிக்கும் வகையில், அந்த விளக்கு அணையவில்லை. முகத்தை சுருக்கிய தாமரை, அந்த பூவால் அந்த விளக்கின் சுடரை அழுத்தினாள்.
"இப்போ இது அணைஞ்சிடும்." என்று அவள் பூவை புன்னகையோடு எடுக்க, அவள் கண்கள் விரிவடைந்தது, அந்த சுடர் இன்னும் பிரகாசமாய் இருந்ததை பார்த்து. அதை அணைக்க அவள் மீண்டும் மீண்டும் முயன்று கொண்டே இருந்தாள். ஆனால் அவளால் அது முடியவில்லை.
யார் ஏற்றியும் எரியாத அந்த விளக்கு, தாமரை ஏற்றிய போது எரிந்ததோடு மட்டுமல்லாமல், அவள் அணைத்த போது அணையாமல் சுடர்விட்டு எரிந்ததை வியப்போடு பார்த்தபடி நின்றிருந்தான் சூர்யா.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro