Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

18 தாமரையின் வார்த்தைகள்

18 தாமரையின் வார்த்தைகள்

ரோஜா செடிக்கு நீரூற்றியதன் வாயிலாக, அந்த வீட்டையே சூடேற்றிவிட்டாள் தாமரை. அனைவரும் அதை எண்ணி எண்ணி திகைத்தார்கள். ஆச்சரியமடைந்தார்கள் அதிர்ச்சியும் அடைந்தார்கள். அவர்களது விசித்திரமான பார்வைகளை சந்திக்கவே திணறினாள் தாமரை. இப்படிப்பட்ட பார்வையை அவள் இதற்கு முன் எதிர்கொண்டதே இல்லை.

"இத என்னால நம்ப முடியல." என்றார் மனோரமா, அந்த செடியை பார்த்தவாறு.

"ஆமாம் சித்தி. இது உண்மையிலேயே ரொம்ப பெரிய அதிசயம்." என்றாள் லாவன்யா தன் விழிகளை பெரிதாக்கி.

"அவளுக்கு ஏதோ மந்திரம் தெரியும்னு நினைக்கிறேன்." என்றாள் அஞ்சலி.

"இது வெறும் மந்திரம்னு எனக்கு தோணல." என்றார் அஞ்சனா.

"ஏன் கா அப்படி நினைக்கிறீங்க?" 

"இந்த செடி கிட்டத்தட்ட செத்துடுச்சு. இதை துளிர்க்க வைக்கிறது வெறும் மந்திரத்தால முடியாது."

"நீங்க என்ன சொல்றீங்க?"

அந்த இடத்தை விட்டு அமைதியாய் அகன்றார் அஞ்சனா.

"ரத்னா சம்பந்தப்பட்ட எல்லா விஷயமுமே இந்த வீட்ல குழப்பமா தான் இருக்கு." என்று பெருமூச்சு விட்டார் மனோரமா.

அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்ட பாட்டி வருத்தம் கொண்டார். அவர்கள் இதை சூனியம் என்பதை தவிர வேறு என்ன நினைப்பார்கள்? எல்லோரும் அவரவருக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தானே யோசிக்க முடியும்?

"நான் கோவிலுக்கு போக போறேன்." என்றார் மனோரமா.

"என்ன ஆச்சு மனோரமா? நீ திடீர்னு கோவிலுக்கு எல்லாம் போகணும்னு விருப்பமா இருக்க?"

"போகணும்னு தோணுது, அத்தை." என்றார்  திக்கியபடி

தெய்வானைக்கு புரிந்து போனது, அவர் கோவிலுக்கு செல்கிறேன் என்று வேறெங்கோ செல்கிறார் என்பது.

"சரி, உன் கூட நானும் வரேன். என்றார் அவர் முகபாவத்தை கவனித்தவாறு.

"நீங்களும் வரிங்களா? ஆனா நான் சாயங்காலம் தானே போவேன்?" என்றார்.

"ஒன்னும் பிரச்சனை இல்ல. நானும் வரேன்."

"நீங்க வீட்ல பூஜை பண்ண போறது இல்லையா?"

"கோயிலுக்கு போயிட்டு வந்து அதுக்கப்புறம் செய்றேன்."

ஏமாற்றத்துடன் தலையசைத்தார் மனோரமா. உள்ளுக்குள் நகைத்தவாறு தன் அறைக்குச் சென்றார் தெய்வானை.

தன் அறைக்கு வந்த பாட்டி, தாமரையின் நெற்றியில் அன்பாய் முத்தமிட்டு,

"நீ உண்மையிலேயே தெய்வீகமான குழந்தை. இது பெரிய ஆச்சரியம்." என்றார்.

"எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு, பாட்டி. எல்லாரும் என்னைப் பத்தி கிசுகிசு பேசுறாங்க."

"நான் உன்னை பத்தி யாரும் தெரிஞ்சுக்க வேண்டாம்னு நினைச்சேன். ஆனா, சூர்யா போட்டு உடைச்சிட்டான்."

"பாட்டி, நம்ம பூஜையை பத்தி அவர் கிட்ட சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன். இந்த செடியை பத்தி எல்லாரும் முன்னாடியும் சொன்ன மாதிரி அவர் அதையும் சொல்லிடுவாருன்னு நினைக்கிறேன்." என்று பாட்டியை உஷார் படுத்தினாள்.

"நானும் உன்கிட்ட அதையே தான் சொல்ல நினைச்சேன். அவன்கிட்ட எதுவும் சொல்லாதே. அவனுக்கு பூஜையில எல்லாம் நம்பிக்கை இல்ல."

"அப்படின்னா நான் அவர்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்."

"ஆனா, சூர்யா ரொம்ப சந்தோஷமா இருக்கான். நான் அவன் கண்ல அந்த சந்தோஷத்தை ரொம்ப நாளுக்கு அப்புறம் பார்த்தேன்."

அப்பொழுது அவர்கள்,

"ஆமாம் பாட்டி, நீங்க சொல்றது சரி." என்று ஆகாஷ் கூறுவதை கேட்டார்கள்.

புன்னகையோடு அந்த அறைக்குள் நுழைந்தான் ஆகாஷ்.

"வாப்பா ஆகாஷ்." என்றார் பாட்டி.

உள்ளே வந்து சோபாவில் அமர்ந்த அவன்,

"பாட்டி சொல்றது மிகையில்ல. நீங்க சூர்யாவோட முகத்துல ஒரு புத்துணர்ச்சியான புன்னகையை கூட்டிக்கிட்டு வந்துட்டீங்க. நீங்க என்ன செஞ்சிருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியாது. சூர்யாவுக்கு அவங்க அம்மான்னா ரொம்ப பிடிக்கும். அதை அவன் யார்கிட்டயும் காட்டிக்க மாட்டான். ஆனா, அது அவனுக்கு நெருக்கமானவங்களுக்கு தெரியும். நான் சொல்றது சரி தானே, பாட்டி?"

"ஆமாம், ஆகாஷ் சொல்றது சரி தான். சூர்யாவுக்கு ரத்னான்னா உயிர்."

"அவன் சந்தோஷமா இருக்கிறதை பார்க்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு." என்றான் ஆகாஷ்.

"மாயா எப்ப திரும்பி வாரா?"

"நாளைக்கு வராங்க, பாட்டி."

"இப்போ உனக்கு எப்படி இருக்கு?"

"நான் நல்லா இருக்கேன். இப்ப விட்டாலும் ஆஃபீசுக்கு போயிடுவேன். ஆனா சூர்யா தான் விட மாட்டேங்கிறான்."

"அவன் விடமாட்டான்." என்று புன்னகைத்தார் பாட்டி.

"ஆமாம், அவன் என்னை நோயாளி மாதிரி பாக்குறான்."

"ஒன்னும் பிரச்சனை இல்ல, ஆகாஷ். ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு நாளைக்கு போ."

"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்க தான் பாட்டி வந்தேன்."

"என்ன வேணும், ஆகாஷ்?"

"ஒரு நாள் நீங்க பால் பணியாரம் செஞ்சு ஆஃபீஸ்க்கு கொடுத்து அனுப்பி இருந்தீங்க. அது ரொம்ப நல்லா இருந்தது. எனக்கு அதை செஞ்சு கொடுங்களேன்"

அதைக் கேட்டு சிரித்த பாட்டி,

"நிச்சயமா செஞ்சு தாரேன்." என்றார்.

"ரொம்ப தேங்க்ஸ், பாட்டி."

"உனக்கு ஒன்னு தெரியுமா? சூர்யாவுக்கு நான் செய்ற பால் பணியாரம் சுத்தமா பிடிக்காது."

"அப்படியா?"

"ஆமாம், நான் செய்யும் போதெல்லாம் அது அவங்க அம்மா செய்ற மாதிரி இல்லன்னு குறை சொல்லுவான்."

"அவனுக்கு அவங்க அம்மா செஞ்சது இன்னும் கூட ஞாபகம் இருக்கா?"

"நல்லா இருக்கு. அவங்க அம்மா இறந்ததிலிருந்து அவன் அவ செஞ்ச எதையுமே அதிகமாக ஞாபகப்படுத்திக்க ஆரம்பிச்சிட்டான்."

சூர்யாவுக்காக வருத்தப்பட்டாள் தாமரை.

"நீங்க செய்யறதயே அவன் குறை சொன்னா, அப்போ அவனை யார் தான் திருப்தி படுத்த முடியும்? அவனுக்கு வரப்போற வைஃப் அவன் கிட்ட ரொம்ப கஷ்டப்படுவாங்க போல இருக்கு." என்று சிரித்தான் ஆகாஷ்.

"நானும் அதைத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்." என்று சிரித்தாள் தாமரை.

"அவனோட வைஃப் அவனுக்காக சமைக்காம இருந்தா பெட்டரா இருக்கும்." என்று ஷீலாவை நினைத்து கூறினான் ஆகாஷ்.

"சூர்யா கம்பேர் பண்ணி பாக்குறத நிறுத்திட்டா பிரச்சனை தீந்துடும்." என்றார் பாட்டி.

"பாட்டி, அவர் உங்க சமையலை அவங்க அம்மா சமையலோட கம்பேர் பண்ணி பார்க்கிறார், ஏன்னா, நீங்க அவங்களோட அம்மா. ஆனா, அதை அவர் எல்லார் கூடவும் செய்வார்னு நான் நினைக்கல." என்றாள் தாமரை.

"நீ சொல்றதும் சரி தான். அப்படி இருந்துட்டா, அவனுக்கு வரப்போற வைஃப் சந்தோஷமா இருப்பா."

"பாட்டி, நான் மாத்திரை சாப்பிடணும். நான் போறேன்." என்றான் ஆகாஷ்.

"மாத்திரை சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ." என்றார் பாட்டி.

"சரி" என்று அங்கிருந்து வெளியே வந்த ஆகாஷ், அங்கே லாவண்யா அஞ்சலியுடன் நின்று அவனை பார்த்து புன்னகைப்பதை பார்த்து திகைத்தான்.

அவளைப் பார்த்து சிரிக்காமல் அங்கிருந்து சென்றான் அஞ்சலியும் லாவண்யாவும் பாட்டியின் அறைக்கு வந்தார்கள்.

"பாட்டி, நான் இதை உங்களுக்காக அமெரிக்காவிலிருந்து வாங்கிக்கிட்டு வந்தேன்." என்று ஒரு டப்பாவை அவரிடம் கொடுத்தாள் லாவண்யா.

"என்ன இது?" என்று அதை திறந்து பார்த்த பாட்டி, அதில் அமெரிக்காவின் லிபர்ட்டி சிலை இருந்ததை பார்த்து புன்னகை புரிந்தார்.

"இதை வச்சுக்கிட்டு நான் என்ன செய்யப் போறேன்?"

"போங்க பாட்டி, உங்களுக்கு என்ன வாங்குறதுன்னு எனக்கு தெரியல. உங்களுக்கு ஏத்த மாதிரியான பொருள் அங்க எதுவுமே இல்லையே!" என்று உதடு சுழித்தாள் லாவண்யா.

"பரவாயில்ல. எனக்கு ஏதாவது வாங்கிட்டு வரணும்னு உனக்கு தோணுச்சே, அதுவே போதும். நான் இதை வச்சுக்கிறேன். உங்க அண்ணன்களுக்கும் அண்ணிக்கும் என்ன வாங்கிட்டு வந்த?"

"அண்ணன்களுக்கு  வாட்ச் பெர்ஃப்யூம், டிரஸ். அப்புறம் சித்திக்கும் அண்ணிக்கும் நகை வாங்கிட்டு வந்தேன்."

"பரவாயில்லையே...!"

"இன்னைக்கு சாயந்தரம் நீங்க கோவிலுக்கு போகும் போது சித்தி அந்த நகையை போட்டுக்கிட்டு வருவாங்க." என்றாள் லாவண்யா.

"ஆனா இன்னைக்கு அவங்க கோவிலுக்கு போக மாட்டாங்க." என்று கூறிவிட்டு தன் வாயை பொத்திக் கொண்ட தாமரை, இயலாமையுடன் பாட்டியை பார்த்தாள்.

அஞ்சலியும் லாவன்யாவும் அவளை பார்த்து முகம் சுருக்கினார்கள்.

"நீ எதுக்காக அப்படி சொன்ன?" என்றாள் அஞ்சலி குழப்பத்துடன்.

"நாங்க ரெண்டு பேரும் இன்னைக்கு கோவிலுக்கு போக மாட்டோம்னு அவ கிட்ட சொல்லி இருந்தேன். என்று நிலைமையை சமாளிக்க முயன்றார் பாட்டி.

"ஏன் பாட்டி?"

"பால் பணியாரம் செய்ய சொல்லி ஆகாஷ் என்கிட்ட கேட்டான். நான் அதை அவனுக்காக செஞ்சு கொடுக்கலாம்னு இருக்கேன்."

"வாவ்! பால் பணியாரம் எனக்கு ரொம்ப பிடிக்கும்." என்றாள் லாவன்யா.

"அதை நாளைக்கு கூட செஞ்சு கொடுக்கலாமே பாட்டி?" என்றாள் அஞ்சலி.

"நாளைக்கு மாயா திரும்பி வராளாம். நாளைக்கு என்னால அதை செஞ்சிகொடுக்க முடியும்னு எனக்கு தோணல."

"ஓ..."

அவர்கள் அங்கிருந்து சென்றார்கள். அஞ்சலிக்கு ஏதோ சந்தேகமாய் தோன்றியது. தாமரையின் முகபாவத்தை பார்த்த பிறகு, பாட்டி கூறிய பதிலில் அவளுக்கு திருப்தி இல்லை.

"என்னை மன்னிச்சிடுங்க பாட்டி." என்றாள் தாமரை சோகமாய்.

"எனக்கு உன்னை பத்தி தெரியாதா?"

"இதுக்காகத்தான் நான் யார்கிட்டயும் பேச விரும்புறதே இல்ல."

"பரவாயில்ல விடு. என்ன நடக்கணுமோ அது தான் நடக்கும். இது உன்னோட இயல்பு. அது உன்னை மீறி வந்துடுச்சு" என்று அவளை சமாதானப்படுத்தினார் பாட்டி.

"பாட்டி, நான் சூர்யா சார் ரூமுக்கு போய் அந்த செடியை பார்க்கட்டுமா?" என்றாள்.

"போ தாமரை"

சரி என்று தலையசைத்து விட்டு சூர்யாவின் அறைக்குச் சென்றாள் தாமரை. அந்த செடியை பார்த்து புன்னகை புரிந்தாள். அந்த செடிக்கு முன்னதாய் முழங்கால் இட்டு அமர்ந்து அதை அன்பாய் தடவிக் கொடுத்தாள். சரியாய் அதே நேரம் தன் அறைக்குள் நுழைந்த சூர்யா, அவள் அங்கிருந்ததை பார்த்து அப்படியே நின்றான்.

"அம்மா, எது இந்த செடியை துளிர்க்க வச்சிதுன்னு எனக்கு தெரியல. இது மூலமா நீங்க எங்களுக்கு என்ன தெரியப்படுத்த நினைக்கிறீங்கன்னு எனக்கு புரியல. அது எதுவா வேணும்னாலும் இருக்கட்டும். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உங்க பிள்ளை ரொம்ப நல்லவரு. அதுக்கு காரணம் நீங்களா தான் இருப்பீங்கன்னு எனக்கு எந்த சந்தேகமும் இல்ல. நீங்க இன்னும் இந்த வீட்ல தான் இருக்கீங்கன்னு எல்லாரையும் நினைக்க வச்சிருக்கீங்க. அது உங்க பிள்ளையையும் சந்தோஷப்படுத்தி இருக்கு. அவரை சந்தோஷப்படுத்த தான் இந்த செடியை நீங்க துளிர்க்க வச்சிங்கன்னு எனக்கு தோணுது. உங்க ரெண்டு பேரையும் இணைக்கும் பாலமா என்னை பயன்படுத்திக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்." என்று அந்த செடிக்கு முத்தமிட்டாள்.

பூவாளியை எடுத்து அந்த செடிக்கு நீர்விட்டாள். அந்த பூவாளியை கீழே வைத்துவிட்டு திரும்பி அவள், சூர்யா அவளையே பார்த்தபடி நின்றிருப்பதை கண்டாள்.

"நீங்க வந்துட்டீங்களா?"

அவன் தலையசைத்தான்.

"இந்த செடி பார்க்க அழகா இருக்குல்ல?"

"ரொம்ப அழகா இருக்கு."

"நீங்க கேட்ட மாதிரி நான் அதுக்கு தண்ணீ ஊத்திட்டேன்."

"தேங்க்யூ சோ மச்."

"பரவாயில்ல"

"நீ தண்ணி ஊத்துனதுக்காக நான் உனக்கு தேங்க்ஸ் சொல்லல. எல்லாத்துக்கும் தான் சொன்னேன்."

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. இதெல்லாம் எப்படி நடக்குதுன்னு எனக்கு புரியல."

சற்று நேரத்திற்கு முன்பு அந்த செடியிடம் அவள் பேசியதை அவன் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டான்.

இது மூலமா நீங்க எங்களுக்கு என்ன தெரியப்படுத்த நினைக்கிறீங்கன்னு எனக்கு புரியல.

இதன் மூலமாக அவனது அம்மா அவர்களுக்கு ஏதாவது தெரியப்படுத்த நினைக்கிறாரா? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"எது எப்படியோ, எனக்கு ரொம்ப சந்தோஷம்." என்றான்.

"எனக்கும் தான்."

"எனக்கு ஒரு விஷயம் தான் புரியல."

"என்னது?"

"இந்த செடி இலைகளை உதிர்த்து 18 வருஷம் ஆச்சு. நானும் எங்க அம்மா இறந்ததுக்கு பிறகு தவறாம இதற்கு தண்ணீ ஊத்திக்கிட்டு தான் இருக்கேன். ஆனா அது எப்பவுமே துளிர்க்கல. ஆனா, நீ ஒரே ஒரு தடவை தான் தண்ணி ஊத்துன. உடனே அது எப்படி துளிர்த்தது?"

"எனக்கு தெரியலன்னு சொன்னேனே" என்றாள் முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு.

"நீ ரொம்ப நல்ல பொண்ணு. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு." என்றான்.

"நெஜமாவா? சேம் பின்ச்."

"அப்படின்னா?"

"எனக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு."

சூர்யா புன்னகைத்தான்.

"நான் உங்களைப் பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்."

"என்னது?"

"உங்களுக்கு உங்க அம்மாவோட சமையல் ரொம்ப பிடிக்குமாமே... இல்ல, இல்ல, உங்க அம்மாவோட சமையல் மட்டும் தான் பிடிக்குமாமே?"

ஆம் என்று புன்னகையுடன் தலையசைத்தான்.

"பாட்டி சொன்னாங்களா?"

"ஆமாம். இன்னைக்கு அவங்க ஆகாஷ் சாருக்காக பால் பணியாரம் செய்ய போறாங்க."

"ஓஹோ, எங்க அம்மா அதை ரொம்ப நல்லா செய்வாங்க தெரியுமா?"

"அது எனக்கு தெரியாது. ஆனால் வேற ஒரு விஷயம் தெரியும்."

"என்ன?"

"நீங்க உங்க அம்மாவை ரொம்ப மிஸ் பண்றிங்க."

மெல்ல கண்ணிமைத்தான்.

"உங்க அம்மா பால் பணியாரம் செய்றத பாட்டிகிட்ட இருந்து தான் கத்துக்கிட்டு இருந்திருப்பாங்க. அதனால பாட்டி செய்றது உங்க அம்மா செய்றதை விட நிச்சயம் நல்லா தான் இருக்கும். ஆனாலும் அது உங்களுக்கு பிடிக்கல. அப்படின்னா என்ன அர்த்தம்? பாட்டி நல்லா சமைக்கலன்னு அர்த்தம் இல்ல. உங்க அம்மாவோட கைப்பக்குவத்தை நீங்க மறக்கலன்னு அர்த்தம்."

அவளைக் கூர்ந்து பார்த்தபடி மென்று விழுங்கினான்.

"கவலைப்படாதீங்க. இந்த செடியை துளிர்க்க வச்சு அவங்க உங்களுக்கு ஆசீர்வாதம் கொடுத்திருக்காங்க. அது உங்களுக்கு போதாதா?"

ஆம் என்று தலையசைத்தான்.

"அவ்வளவு தான்" என்று சிரித்தாள்.

அவனது சிரிப்பு காணாமல் போனது, கீழிருந்து வந்த சத்தத்தை கேட்டு.

"அய்யய்யோ..."

சூர்யாவும் தாமரையும் கீழ்தளம் நோக்கி ஓடினார்கள். அங்கு மனோரமா தன் இடுப்பை பிடித்தவாறு தரையில் அமர்ந்திருந்தார். அவரது கண்கள் கலங்கியிருந்தது. படிக்கட்டில் இருந்து அவர் தவறி விழுந்து விட்டது போல் தோன்றியது.

அஞ்சலி தன்னை விசித்திரமான பார்வையோடு பார்த்துக் கொண்டிருப்பதை கண்டாள் தாமரை. அது அவளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது 

*இன்னைக்கு அவங்க கோவிலுக்கு போக மாட்டாங்க* என்று அவள் உதிர்த்த வார்த்தைகளை, அஞ்சலி மீண்டும் நினைத்துப் பார்ப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro