10 தெனாவெட்டான
10 தெனாவெட்டான
தாமரையால் ரத்னாவின் ஆன்மாவை உணர முடிகிறது என்பதை பாட்டியால் நம்ப முடியவில்லை. இது எப்படி நடந்தது? ரத்னாவின் ஆன்மா கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாய் அந்த வீட்டை சுற்றி வருகிறது. ஆனால் அவர் குடும்பத்தைச் சார்ந்த யாரும் அவரது ஆன்மாவை உணரவில்லை. அப்படி இருக்கும் பொழுது தாமரைக்கு மட்டும் அது எப்படி சாத்தியம்?
இதற்கு என்ன அர்த்தம்? ரத்னாவை கொன்றது யார் என்று கண்டுபிடிக்க தாமரையால் உதவ முடியுமா? தனக்கு ஏற்பட்டிருக்கும் அந்த உணர்வைக் கண்டு தாமரை அஞ்சுவதாக தெரிகிறது. அப்படி இருக்கும் போது, அவளுக்கு ஏற்பட்டிருக்கும் உணர்வுக்கு காரணம், சூர்யாவின் அம்மாவின் ஆன்மா தான் என்று அவரால் எப்படி கூற முடியும்? அவளிடம் கூறினால் அதை அவள் எப்படி எடுத்துக் கொள்வாள்? ஒருவேளை மீண்டும் திண்டிவனத்திற்கு ஓடிவிட்டால் என்ன செய்வது? இந்த விஷயத்தை எப்படி கையாள்வது என்று பாட்டிக்கு புரியவில்லை.
தாமரை அவரது தோளை மெதுவாய் தொட, திடுக்கிட்டார் பாட்டி.
"என்ன பாட்டி? என்ன யோசிச்சிகிட்டு இருக்கீங்க?"
"ஒன்னும் இல்லம்மா."
"இந்தாங்க, பாயாசம் சாப்பிடுங்க."
"ஆமாம், உன் தாத்தா நீ ரொம்ப நல்லா சமைப்பேன்னு சொன்னாரு."
"அவர் எல்லாத்தையும் மிகைப்படுத்தி தான் சொல்லுவார், பாட்டி."
அவரிடம் இருந்த கிண்ணத்தை வாங்கி அதை ருசித்தார் பாட்டி.
"உங்க தாத்தா எதையும் மிகைப்படுத்தல. உண்மையிலேயே உன் கையில மேஜிக் இருக்கு."
"எனக்கு என் தாத்தாவை பார்க்கிற மாதிரி இருக்கு, பாட்டி."
"நாங்க உண்மைய சொன்னா, உனக்கு மிகையா தெரியுதா?"
வரவேற்பறைக்கு வந்த அவர், பாயாசக் கிண்ணத்தோடு அமர்ந்து அதை சாப்பிட தொடங்கினார்.
அப்பொழுது அழைப்பு மணியின் ஓசை கேட்டது. பாட்டி பசுபதியை அழைக்க நினைத்தபோது,
"இருங்க, பாட்டி. நான் போய் பாக்குறேன்" என்றாள் தாமரை.
கதவைத் திறந்த தாமரை அங்கு, 50 வயது மதிக்கத்தக்க பெண்மணியும், இருபத்தைந்து வயது ஆடவனும் நின்றிருப்பதை கண்டாள்.
"யாரு, தாமரை?" என்றார் பாட்டி.
தெரியவில்லை என்பது போல் தலையசைத்தாள் தாமரை. அந்த பெண்மணி உள்ளே நுழைந்தார்.
"அட மாயாவா? வாங்க. எப்படி இருக்க ஆகாஷ்?"
"நல்லா இருக்கேன், பாட்டி" என்று அவர் காலை தொட்டு வணங்கினான் ஆகாஷ்.
"நல்லா இருப்பா" என்று அவனை வாழ்த்தினார்.
"எப்படி இருக்க, மாயா?"
"நல்லா இருக்கேன் மா. நீங்க எப்படி இருக்கீங்க?"
"கடவுள் புண்ணியத்துல நல்லா இருக்கேன்"
தாமரையை பார்த்த மாயா, பாட்டியை பார்த்தார். அவரது பார்வை, புதைத்து வைத்திருந்த கேள்வியை புரிந்து கொண்ட பாட்டி,
"தாமரை, மாயாவுக்கும் ஆகாஷுக்கும் பாயசம் கொண்டு வந்து கொடு." என்றார்.
பாயசம் கொண்டு வர சமையல் அறைக்கு சென்றாள் தாமரை.
"எங்க குலதெய்வ கோவிலோட காரியதரிசி இருந்தார் இல்ல, சிவசங்கர்... அவருடைய பேத்தி." என்றார்.
"ஆமாம், ஆகாஷ் சொன்னான் நீங்க திண்டிவனம் போயிருக்கீங்கன்னு..."
"ஆமாம் குலதெய்வ கோவிலுக்கு போயிருந்தேன்."
"ஏதாவது விசேஷமா?"
பெருமூச்சு விட்ட பாட்டி,
"என்ன சொல்றது மாயா?" என்றார்.
"என்னாச்சி மா?"
"நான் கூட அதைப்பத்தி உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன். நம்ம அப்புறம் பேசலாம்."
சரி என்று தலையசைத்தார் மாயா.
"சூர்யா எங்க பாட்டி?" என்றான் ஆகாஷ்.
"அவன் ரூம்ல இருக்கான்."
"நான் போய் பாத்துட்டு வரேன்."
"இரு, ஆகாஷ். முதல்ல தாமரை செஞ்ச பாயசத்தை சாப்பிட்டு பாரு. ரொம்ப நல்லா இருக்கு." என்றார்.
அதே நேரம் இரண்டு கிண்ணங்களில் பாயசத்துடன் வந்த தாமரை, அதை அவர்களிடம் கொடுத்தாள்.
"தேங்க்ஸ்" என்று புன்னகைத்தான் ஆகாஷ்.
"உண்மை தான், இது ரொம்ப நல்லா இருக்கு." என்றார் மாயா.
"அவ்வளவு சீக்கிரம் நம்ம புகழை எத்துக்க மாட்டா இந்த பொண்ணு. நம்ம ரொம்ப மிகைப்படுத்துறதா நினைப்பா." என்று சிரித்தார் பாட்டி.
"மிகையில்லங்க தாமரை. உண்மையிலேயே இது ரொம்ப நல்லா இருக்கு." என்றான் ஆகாஷ்.
அப்பொழுது அங்கு வந்த சூர்யா,
"என்ன நல்லா இருக்கு?" என்றான்.
"நான் உங்களுக்கு கொண்டு வரேன்." என்று மீண்டும் சமையலறைக்கு சென்றாள் தாமரை.
"எப்படி இருக்க, சூர்யா?" என்றார் மாயா.
"நல்லா இருக்கேன், ஆன்ட்டி."
தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து ஒரு இனிப்பு டப்பாவை எடுத்து அதை பாட்டியிடம் கொடுத்தார் மாயா.
"நேத்து சிவன் கோயிலுக்கு போய் நம்ம சூர்யாவுக்காக வேண்டிக்கிட்டேன்" என்றார்.
அதைப் பெற்றுக் கொண்ட பாட்டி,
"நீ எப்ப கோவிலுக்கு போனாலும் சூர்யாவுக்காக வேண்டிக்கிறதை மட்டும் மறக்கிறது இல்ல..." என்றார்.
"அவனும் என் பிள்ளை தானே மா! ரத்னாவோட இழப்பு உங்களுக்கு மட்டுமில்ல, என்னையும் அடிச்சு தான் உட்கார வச்சிருக்கு. 18 வருஷம் ஆச்சு. ஆனாலும் அந்த ரணம் இன்னும் ஆறல." என்றார் மாயா, தொண்டை அடைக்க.
அதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டான் சூர்யா மாயாவும், ரத்னாவும் தோழிகள். ரத்னா இறந்ததிலிருந்து மாயா தான் அவர்களுக்கு பக்கத்துணையாய் இருந்து வருகிறார்.
அதற்குப் பிறகு அந்த இடத்தில் அமைதி நிலவியது. அந்த அமைதியை உடைத்தவள் தாமரை தான். அவனிடம் பாயசத்தை கொடுக்க அதை அவளிடம் இருந்து பெற்றுக் கொண்டான்.
"ரொம்ப நல்லா இருந்ததுங்க, தாமரை. ரொம்ப நாளைக்கு பிறகு நான் நல்ல ஸ்வீட் சாப்பிட்டிருக்கேன்" என்றான் ஆகாஷ்.
"தாமரை, என் பிள்ளை அவ்வளவு சீக்கிரமா வாயை திறந்து பேசவே மாட்டான். அதுவும் யார் சமையலையும் புகழவே மாட்டான். தெரியுமா?" என்று மாயா கூற, சங்கடப்பட்டாள் தாமரை.
"நீங்க எதை பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க?" என்றபடி அங்கு வந்தார் மனோரமா, வழக்கம் போலவே முழுக்க ஒப்பனை செய்து கொண்டு.
"எப்படி இருக்கீங்க மனோரமா?" என்றார் மாயா.
"நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க, மாயா?"
"நல்லா இருக்கேன்."
"ஆகாஷ் யாரை, எதுக்கு புகழ்ந்தான்?" என்றார்.
"தாமரை செஞ்ச பாயசத்தை புகழ்ந்தான்."
"பாயசமா? என்ன பாயசம்?"
"பூஜைக்காக தாமரை பாயாசம் செஞ்சிருந்தா." என்றார் பாட்டி.
"ஓ... அவளை இங்க கூட்டிகிட்டு வந்ததுல ஏதோ ஒரு பிரயோஜனம் இருக்குன்னு சொல்லுங்க..." என்றார் மனோரமா.
தாமரையின் முகம் ஒரு நொடி மாறி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. அங்கிருந்தவர்கள் அதை கவனித்து ஆச்சரியமடைந்தார்கள்.
அதை சாப்பிட்டு முடித்து கிண்ணத்தை கீழே வைத்தான் சூர்யா.
"எப்படி இருக்கு சூர்யா?"
"நல்லா இல்ல."
தாமரையின் முகம் வாடிப்போனதை கவனித்தார்கள் மாயாவும் ஆகாஷும். பாட்டி ஏதோ கூறப்போக, சூர்யா கூறியதை கேட்டு அவர் நிறுத்தினார்
"நீ இன்னைக்கு ஆஃபீசுக்கு வரப்போறதில்லயா, ஆகாஷ்?"
"அம்மாவை வீட்ல விட்டுவிட்டு வருவேன்."
"சரி, நான் ஆஃபீசுக்கு கிளம்புறேன்." என்று தன் அறைக்கு சென்றான்
*பாட்டி சொன்னது உண்மைதான் இந்த வீட்ல இருக்கிறவங்களுக்கு எல்லாம் ரொம்ப தலைகனம் தான்* என்று முணுமுணுத்தபடி சமையல் அறைக்கு சென்றாள் தாமரை.
"நாங்க கிளம்பறோம் மா." என்றார் மாயா.
"சரி போயிட்டு வாங்க" என்றதும் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள் மாயாவும் ஆகாஷும்.
சூர்யாவின் அறைக்கு சென்ற பாட்டி, அவனது அறையின் கதவை தட்டினார். அவர் நின்றிருப்பதை பார்த்த சூர்யா,
"வாங்க, பாட்டி." என்றான்.
"எதுக்காக இப்படி பண்ற சூர்யா? தாமரையை இங்க கூட்டிகிட்டு வரதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட அனுமதி கேட்டு தானே கூட்டிகிட்டு வந்தேன்? அப்படி இருக்கும்போது எதுக்காக அந்த பொண்ணை இப்படி கஷ்டப்படுத்துற? அவர் செஞ்ச பாயாசம் நல்லா இல்லயா?"
அவர் பேசி முடிக்கட்டும் என்று ஒன்றும் கூறாமல் காத்திருந்தான் சூர்யா.
"பாவம் அந்த பொண்ணு நீ சொன்னதை கேட்டு அவ முகமே வாடி போச்சு. நேத்து தான் அவளை ஸ்வீட் கொடுத்து நீ இந்த வீட்டுக்கு வரவேற்ற. அவளுக்கு யாரும் இல்லன்னு அவ ஃபீல் பண்ண கூடாதுன்னு நீ சொன்னப்போ நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். இன்னைக்கு நீ சொன்ன வார்த்தை என்ன ஆச்சு? நீ அந்த பொண்ணை அப்செட் பண்ணிட்ட. "
"எனக்கு தெரியும், பாட்டி. அவளுக்கு யாரும் இல்ல. ஆனா நீங்களும் நானும் இருக்கோம். அவ நம்ம வீட்டோட விருந்தாளி. மத்தவங்க அவளை வேலைக்காரி மாதிரி நடத்துறது எனக்கு பிடிக்கல. அவ மத்தவங்களுக்காக வேலை செய்ய ஆரம்பிச்சா, அவளுக்கு ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சும். மாமி அவகிட்ட எப்படி நடந்துக்கிட்டாங்கன்னு நீங்க பாக்கலயா? அவளை எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லுங்க பாட்டி " என்றான்.
"மன்னிச்சிடு சூர்யா, நான் உன்னை தப்பா புரிஞ்சுகிட்டேன்."
"பரவாயில்ல, பாட்டி. அவளுக்கு சமாதானம் சொல்லுங்க. நான் அவளை அப்செட் பண்ணிட்டேன்."
"நான் பார்த்துக்கிறேன். ஆனா இந்த வீட்ல இருந்த ஒரு சப்போர்ட்டை அவ இழந்துட்டாளே, அதுக்கு என்ன சொல்றது?"
"அவளை எப்படி சமாதானப்படுத்தணும்னு எனக்கு தெரியும்." என்றான்
"எப்படி?"
பதில் கூறாமல் புன்னகை புரிந்தான். வியப்போடு அங்கிருந்து நடந்தார் பாட்டி. அவர்கள் பேசியதை மறைவாய் நின்று கேட்டுக் கொண்டிருந்த தாமரை அந்த இடம் விட்டு அகன்றாள். விருந்தினர் அறைக்கு வந்த அவள், அமைதியாய் அமர்ந்து கொண்டாள். அவள் எதிர்பார்த்தது போலவே பாட்டி அவள் அறைக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் எழுந்து நின்றாள் தாமரை.
"நீ அப்செட் ஆயிட்டியா?"
இல்லை என்று தலையசைத்தாள்.
"அதை பெருசா நினைக்காத. நீ இங்க வேலை செய்றது அவனுக்கு பிடிக்கல. அதனால தான் அவன் பாயசம் நல்லா இல்லைன்னு சொன்னான்."
சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு சரி என்று தலையசைத்தாள்.
"நான் சொன்னதை நீ நம்பலையா?"
"நான் உங்களையும் நம்புறேன், அங்கிளையும் நம்புறேன்."
அவளை வியப்போடு பார்த்தார் பாட்டி.
"அவர் சொன்னதை நான் கேட்டுட்டேன்." என்று சிரிப்பை அடக்கியபடி கூறினாள்.
"நெஜமாவா?" என்று சிரித்தார் பாட்டி.
"ஆம்." என்று அவள் சிரிக்க,
"நல்லதா போச்சு." என்று நிம்மதி பெருமூச்சு விட்டார் பாட்டி.
"உன்னை சமாதானப் படுத்துறேன்னு சூர்யா சொன்னான். அவன் அதை எப்படி செய்றான்னு பார்க்கலாம்." என்றார் பாட்டி.
சரி என்று புத்துணர்ச்சியோடு தலையசைத்தாள் தாமரை. அப்பொழுது சூர்யா அவள் அறையை கடந்து செல்வதை பார்த்த அவள் சோகமாய் இருப்பது போல் தன் முகத்தை ஒரு கையால் மூடி கொண்டாள்.
"என்ன ஆச்சு, தாமரை?"
"அங்கிள் நம்மளை பாக்குறார்." என்று ரகசியமாய் கூறினாள்.
பாட்டி உஷாரானார்.
"கவலைப்படாத தாமரை. உண்மையாவே நீ பாயாசம் நல்லா இருந்தது. மாயாவும் ஆகாஷும் சொன்னதை நீ கேட்கலையா?"
"அவரைப் பார்த்தா ரொம்ப நல்லவரா தெரியுது, பாட்டி. அதனால தான் அவர் என்னை அப்செட் பண்ண வேண்டாம்னு பொய் சொல்லி இருக்காரு போல இருக்கு." என்று மூக்கை உறிஞ்சினாள்.
"நீ வேணா பாரு, வேற யார் சாப்பிட்டாலும் அந்த பாயசம் நல்லா இருக்குன்னு தான் சொல்லுவாங்க. அதுக்காக கவலைப்படாதே."
"பரவாயில்ல, பாட்டி. எனக்குன்னு சில நல்ல உள்ளங்கள் கிடைச்சிருக்காங்கன்னு நான் நெனச்சேன்..." என்று அதை முடிக்காமல் விட்டாள்.
அவளுக்காக வருத்தப்பட்டான் சூர்யா. அமைதியாய் அந்த இடத்தை விட்டு அகன்றான். ஏனென்றால் அவனுக்கு பேச்சின் மூலம் சமாதானம் செய்வதெல்லாம் தெரியாது. அவன் செல்வதை பார்த்த தாமரை,
"ஐயோ பாவம்!" என்று சிரித்தாள்.
உணவு மேசைக்கு வந்த சூர்யா காலை சிற்றுண்டியை சாப்பிட்டான், தாமரையின் அறையை கண்காணித்தவாறு. ஆனால் தாமரையோ பாட்டியோ அறையை விட்டு வெளியே வரவில்லை.
"தாமரை, உன்கிட்ட கோவில் புரோகிதர் ஃபோன் நம்பர் இருக்கா?"
"இருக்கு பாட்டி."
"அதை எனக்கு கொஞ்சம் கொடேன்."
தன் பையில் இருந்து ஒரு பேப்பர் துண்டை எடுத்து அதை அவரிடம் கொடுத்தாள் தாமரை.
"நீங்க பேசும் போது என்னையும் கூப்பிடுங்க, பாட்டி. நானும் அவர்கிட்ட பேசுறேன்." என்றாள்.
"சரி மா"
"மத்தியானத்துல பேசுங்க, பாட்டி."
"ஏன்?"
"அப்போ அவர் வீட்ல இருப்பார். சீதா அண்ணிகிட்டேயும் பேசலாம். அதுக்காகத்தான்."
"எதுக்காக நான் அவங்க கிட்ட பேசுற வரைக்கும் நீ காத்திருக்கணும்? விருப்பப்பட்டா நீ எப்ப வேணும்னாலும் அவங்க கிட்ட பேசலாம். இப்போ பேசுறியா?"
"இப்போ வேணாம் பாட்டி. இந்த நேரம் அண்ணன் கோவில்ல பிஸியா இருப்பாரு."
"நீ சொல்றதும் சரி தான்."
"12 மணிக்கு மேல பேசலாம்."
"சரி"
"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா, பாட்டி?"
"கேளுமா."
"பூஜை ரூம்ல ஒரு போட்டோ வச்சிருக்கீங்களே, அவங்க அங்கிளோட அம்மா தானே?"
"ஆமாம்"
"அவரோட அப்பா எங்க இருக்காரு?"
"அவங்க அம்மா சாகறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி அவர் இறந்துட்டாரு."
"அப்படின்னா அவரோட போட்டோவை ஏன் நீங்க வைக்கல?'
"எங்க யாருக்கும் அவரை பிடிக்காது."
"அங்கிளுக்குமா?"
"அவரை அதிகமாக வெறுக்கிறதே அவன் தான்."
"அவங்க அப்பாவுக்கு சொந்தம் யாரும் இல்லையா?"
"ஒரு தம்பி மட்டும் இருக்கான்." என்று பதில் கூறிய பாட்டி சில நொடி திகைத்தார்.
அரவிந்தனின் தம்பியான ஆனந்தனும் அவரது குடும்பம் தானே? ஒருவேளை அவன் கூட ரத்னாவை கொன்றிருக்க முடியுமே. அதற்கும் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. சூர்யா இறந்தால் அவர்களுக்கு தானே அனைத்து சொத்தும் சென்று சேரும்? அவர் ஏன் இந்த கோணத்தில் யோசிக்காமல் விட்டார்? என்று தீவிரமாய் யோசித்தார் பாட்டி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro