Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 1

அதிகாலை ஏழு மணியளவில் சென்னை வடபழனி முருகன் கோவில் தன்னைத் தேடி வரும் நிறைய பக்தர்கள் மற்றும் அவர்களுடைய ஏகப்பட்ட ப்ரார்த்தனைகளுடன் உங்கள் வேண்டுதல்களில் சிலவற்றை எங்கள் வேலன் அருளால் நிறைவேற்றித் தர சித்தமாக இருக்கிறோம் என்று மானசீகமாக நம்மிடம் சொல்லும்படி நித்தியப்படி பூஜை, இன்று காலை முஹுர்த்த வேளையில் அங்கு நடக்கப்போகும் திருமணங்களின் ஆயத்தம் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

இந்த பரபரப்பான இயக்கம் எல்லாம் எனது ஸ்திரமான சிந்தனைக்கு எந்த இடையூறும் விளைவிக்க முடியாது என்ற பாவத்தில் பிரகாரத்தில் கம்பீரமாக பத்மாஸனத்தில் அமர்ந்து கந்தகுரு கவசத்தை உளமுருகிப் பாடிக் கொண்டிருந்தார் திருவாளர் சபாபதி.

அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருளின்பம் வீடுமே தந்தருள்வாய்

தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுரு நாதா
சண்முகா சரணம் சரணம் ஸ்கந்தகுரோ

காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா

போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி

என்று ஸ்தோத்திரத்தின் அடுத்த வரி என்ன வரும் என்றெல்லாம் தலையை சொறியாமல் திடீர் மழையால் புறப்படும் வெள்ளம் போன்ற வேகத்துடன் 
தன்னுடைய இஷ்ட தெய்வத்தை பாடி வணங்கியபடி ஒரு தனி உலகிற்குள் சஞ்சரித்தவரை சலித்த பார்வை பார்த்து அரை உறக்கத்தில் தலையைச் சொறிந்து கொண்டு கொட்டாவி விட்டான் நம் கதையின் நாயகன் வாகை செல்வன். பசி கொண்ட முதலை போல வாயை பெரிதாக திறந்திருந்தவன், தன்னுடைய வாய் துர்நாற்றத்தை தானே சகித்துக் கொள்ள முடியாமல் வேகமாக வாயையும், வாயுடன் முக்கையும் சேர்த்து மூடிக் கொண்டான்.

புருவத்திற்கும் கீழே வளர்ந்து விட்ட தன்னுடைய சிகையை கைகளால் கோதிக் கொண்டவன், இங்கு தான் வரப்போகிறேன் என்று சொல்லியிருந்தார் என்றால்  வீட்டில் இருந்து கிளம்பும் போது அவசரமாக ஒரு சிட்டுக்குருவி குளியலை மட்டுமாவது போட்டு வந்திருக்கலாம் என்று நினைத்தான். எப்போதும் நம் நாயகன் குளியலுக்கும் சோம்பி அதை ஒதுக்கும் ரகத்தினன் தான்! ஆனால் இந்த ஒரு வார காலமாக அவனுக்கு குளியல் மிகவும் பிடித்துப் போயிருந்தது.

சபாபதியின் வீட்டில் அவனுக்கென ஒரு தனி அறை, அவன் மட்டுமாக உபயோகித்து கொள்வதற்காக  ஒரு கதவு போட்டு மூடிய பாத்ரூம் என அந்த வசதி இரண்டும்  செல்வாவை தான் ஏதோ திடீரென மகாராஜா ஆகி விட்டதைப் போல் உணர வைத்தது. பழைய முதலாளியின் ஹோட்டலில் மளிகை சாமான்களை அடுக்கி வைக்கும் குடோனை அவனுடன் சேர்த்து எட்டு பேர் பங்கிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் எண்ணிக்கை போதாதென்று பெருச்சாளிகள், கரப்பான்களின் எண்ணிக்கை கணக்கு வேறு. சீயக்காய் மூட்டை, புளி மற்றும்
கருப்பட்டி கொட்டான்,
எண்ணெய் டின்களின் பிசுபிசுப்பு இவற்றுடன் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவனுக்கு இப்போதைய வசதி மிகவும் பெரிதாகத் தானே தெரியும்?

ஆனால் இங்கும் ஒரு தேக்கம் இருந்தது. அந்த வீட்டில் இருந்த மற்ற மனிதர்களின் சுபாவங்களை புரிந்து கொள்வதில் தான் மிகப்பெரிய அயர்ச்சி ஏற்பட்டது அவனுக்கு. இதோ தன் முன்னால் உட்கார்ந்து போற்றி போற்றி என்று போற்றி போட்டுக் கொண்டிருக்கும் தன்னுடைய வாத்யாரின் மீது தான் இப்போது அவனுடைய மொத்தக் கோபமும் இறங்கியிருந்தது.
காலையில் ஆறு மணிக்கு தன் தலையில் பெட்ஷீட்டால் முக்காடு போட்டுக் கொண்டு இரவில் இருந்து இப்போது வரை எனக்கு வாய்த்த உறக்கம் போதவில்லை என்று சொல்வது போல் பரிதாபமாக அமர்ந்திருந்தவனை
அரைமணி நேரத்தில் வெளியே செல்ல வேண்டும் என்று சொல்லி சபாபதி அழைக்கவும் அவருடன் எங்கே போகிறோம், எதற்கு போகிறோம் என்று கூட கேட்காமல் கிளம்பி வந்திருந்தான் செல்வா. அவர் எங்கு செல்கிறோம் என்று முன்பே சொல்லியிருந்தால் அவனும் குளித்து தெளித்து நெற்றியில் பட்டையுடன் வந்திருப்பான்!

சூடான சர்க்கரைப் பொங்கல் முந்திரியுடன் விலைக்கு வாங்கியாவது சாப்பிட்டிருக்கலாம்! இப்போது பல் கூட விளக்காமல் சர்க்கரைப் பொங்கலுக்காக போய் வரிசையில் நிற்க முடியாது. முருகன் அவர் கையிலிருக்கும் வேலை எடுத்து தன் கண்ணைக் குத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தான்
வாகை செல்வன்.

வெற்றியை என்றும் தனக்குள்ளே வைத்திருக்க பிறந்தவன் என்று நினைத்து இந்தப் பெயர் அவனுக்கு அவனது பெற்றோரால் வைக்கப்பட்டதல்ல......

"நம்ம ரோட்ல நடந்துபோவசொல நம்ம பேரோட மாஸ பாத்துக்கினு நாலு ஜனங்க நமக்கு சலாம் வைக்கணும்! அப்டி சூரா ஒரு பேரு சொல்லு!" என்று அவனது நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து அவர்களுடைய தேர்வு எதுவும் சரியாக அமையவில்லை என்று வருந்தி, அவனுக்கு அவனே வைத்துக் கொண்ட பெயர்! 

தன் பதினேழு வயதிற்குள்ளாக வாழ்க்கையில் நிறைய கசப்பான அனுபவங்களை பெற்று, ஏன் வாழ்கிறோம், எதற்காக வாழ்கிறோம் என்ற இலக்கே இல்லாமல் இருந்தாலும், இருக்கும் வரை வாழ்வை நிதமும் அனுபவித்து வாழ வேண்டும் என்ற உன்னத கொள்கையை உடையவன் இந்த வாகை செல்வன்!

இரண்டு மாதங்களுக்கு முன் அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் முதலாளியுடன் தகராறு ஏற்பட்டு அவரது விலாவில் கத்தியால் குத்தி அவரைக் காயப்படுத்திய குற்ற வழக்கில் புரசைவாக்கத்தில் Directorate of Social Defence, Juvenile Justice Board and Governement Observation Homeல் தங்கி, பின்னர் ஒருவழியாக அந்த கேஸ் முடிந்து ஒரு வாரத்திற்கு முன் சபாபதியால் அவருடைய வீட்டிற்கு அழைத்து வரப்பட்டவன்.

Observation Home எனும்
கண்காணிப்பு இல்லம் என்பது புறக்கணிக்கப்பட்ட மற்றும் குற்றமிழைத்த சிறார்களை 
அவர்களுடைய வழக்குவிசாரணை
நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் போது தங்க வைக்கும் இடமாகும். இங்கு தங்குவது அவர்களின் ஆளுமைப் பண்புகளையும் நடத்தையையும் மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

சபாபதி Directorate of Social Defence ல் Assistant Suprendent ஆக பணிபுரிகிறார். பதின்பருவத்தில் ஆழ்ந்து சிந்திக்க தெரியாமல் அவசரத்தால், ஆத்திரத்தால், கோபத்தால் சிறுவர்கள் தவறிழைத்து விட்டு சட்டத்திற்கு முன் குற்றவாளிகளாக நிற்கும் போது அவருக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்!

"நா பண்றது தப்புன்னு க்ளீரா தெரிஞ்சிகுனே தான் ஓனர கிழிச்சேன். இப்ப இன்னான்ற அதுக்கு?" என்று தன்னிடம் திமிருடன் நின்று வாயடிக்கும் சிறுவர்களை கண்டால் அவர்களுடைய வாயை உடைக்கும் அளவிற்கு அவருக்கு கோபமும் வரும்! மொத்தத்தில் சாம, தான, பேத சமரச வழிகளில் ஒரு குற்றவாளியை அடக்க முடியவில்லை என்றால் தண்டத்தை ப்ரயோகிக்க சற்றும் யோசிக்காத ஒரு 45 வயது நிரம்பிய இனிய மனிதர்!

வாகை செல்வனை ஹோமிற்கு அழைத்து வந்தவரும் அவர் தான்; அவன் சம்பந்தப்பட்ட வழக்கை சுமுகமான முறையில் முடித்து வைத்து பின் அவனை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றதும் அவருடைய முடிவு தான்!

"உன்னோட இந்த டெஸிஷனுக்காக நீ ரொம்ப வருத்தப்படப்போற சபா! இதுங்கல்லாம் பொறந்ததுல இருந்தே அக்யூஸ்ட் தான்; ஒண்ணொன்னுக்கும் மூஞ்சிய பாத்தியா? இந்த மாதிரி ஒருத்தன, உம்மகளையும் வீட்ல வச்சுக்கிட்டு அங்கேயே கூட்டிட்டுப் போகப்போறேன்னு சொல்றியே? உனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு!" என்று சக அலுவலர்கள் அவரிடம் அத்தனை வாதம் செய்த போதும் அவரது ஸ்திரமான எண்ணத்தில் இருந்து அவர் சிறிதும் பின்வாங்கவில்லை.

"டீன்ஏஜ்லயே இவங்கள அக்யூஸ்ட்ங்கன்னு முத்திரை குத்தி ஒதுக்கி வச்சுட்டா அது எவ்ளோ பெரிய தப்பாகிடும் தெரியுமா? அவங்கள வீட்டுக்குள்ள விட்டா ரேப் பண்ணிடுவாங்க, கொலை பண்ணிடுவாங்க இல்ல கொள்ளை அடிச்சுடுவாங்கன்னு சொல்லி ஒதுக்குறோமே? இந்தப் பசங்களும் நம்மள மாதிரியே தான் சாதாரணமா அன்பான ஒரு வாழ்க்கை வாழ ஆசைப்படுவாங்கன்னு நாம ஏன் நினைக்கல? இத்தன பசங்கள்ல இந்த செல்வா என் கண்ணுக்கு யுனீக்கா தெரியுறான்; அவன் மேல சொல்ல முடியாத ஒரு ஈர்ப்பு ஏற்படுது எனக்கு! ஒரு இயல்பான குடும்ப சூழ்நிலையில அவனோட ஆக்டீவிட்டீஸ் எப்டி இருக்கும்னு தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு! என் பொண்ணோட லைஃபயே நான் ரிஸ்க்ல கொண்டு போய் நிறுத்துறேன், தப்பு செய்யுறேன்னு நீங்க சொல்ற மாதிரி என்னோட இந்த முடிவு தப்பாயிருந்தா நான் அதுக்காக வருத்தப்பட்டுக்குறேன்......"

"பட் ஒருவேள என்னோட முடிவு சரியா இருந்து ஒரு அக்யூஸ்ட வீட்டுக்குள்ள விட்டு அவன் என்னோட குடும்பத்துல இருக்குறவங்க கிட்ட பைண்ட் ஆகி இயல்பான வாழ்க்கை வாழ ஆரம்பிச்சு அது அவனுக்குப் பிடிச்சுப் போய்டுச்சுன்னா, அப்போ இந்த ஹோம்ல இருக்குற மாதிரியான பசங்களல ஏதோ நோய் வந்தவங்க மாதிரி பாக்குற பார்வைய இந்த சமுதாயம் அன்னிக்குல இருந்து நிறுத்தணும்ங்குற ஒருபாடத்த எங்களால கத்துக்கட்டும். தட்ஸ் ஆல்!" என்று சொன்ன சபாபதி அந்த வளர் இளம் பருவத்தினனை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்.

"வாத்யாரே..... ஒனக்கும், எனக்கும் இன்னும் எம்மா நாளைக்கு
ப்ரெண்ட்ஷிப் இருக்கப்போவுதோ தெரியல..... பட் நமக்கு ஒண்டி நீ பெசலா கவனிப்பு, ரெஸ்பெக்ட்லா குடுத்து ஓவூட்டுக்கு கூட்டிக்கினு வந்து குந்த வச்சிருக்க பாத்தியா? அதுக்கு ஒரு டேங்க்ஸ் வாத்யாரே!" என்று சலாம் போட்டு தன்னுடைய இவ்வளவு நாள் ஜாகையாக இருந்த பழைய முதலாளியின் ஹோட்டலுக்கு ஒரு கும்பிடு போட்டு சபாபதியின் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தவன், இந்த ஒரு வாரத்திற்குள் உரலுக்குள் அகப்பட்ட இடிபொருள் போல் ஆகிப் போனான். 

முதலாவதாக சபாபதியின் வீட்டிலுள்ள அனைவருமே ஸ்விட்ச் போட்டால் இயங்கும் இயந்திரங்கள் போல கிட்டத்தட்ட உணர்வு மறத்துப் போனவர்களாக இருந்தார்கள். சபாபதி, அவருடைய ப்ளஸ் டூ படிக்கும் மகள், அறுபது வயதை ஒட்டிய ஒரு முதிய தம்பதியர் இப்படி நால்வருமே அவரவர் பாட்டுக்கு வருவது, செல்வது என அந்த வீட்டின் அங்கத்தினர்களாக இணைந்திருந்தாலும் தனித்தனி தீவுகளாக தான் இருந்தனர்.

இரண்டாவதாக என் மாமனார் என்று சபாபதியால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஒரு பெர்சு தினமும் அதிகாலை வேளையில் தொலைக்காட்சியில் செய்திகளை கேட்கிறேன் பேர்வழி என்று ஸ்டோர்ரூமில் தூங்கிக் கொண்டிருக்கும் அவனையும் தூங்க விடாமல் உபத்திரவம் செய்வது அவனுக்கு மிகப்பெரிய தொந்தரவாக இருந்தது.

"ஒங்கொ...., ........, ....... மனுசன் நிம்மதியா தூங்கொசொல வந்து காதுக்குள்ளயே ஏறி நின்னுக்கிட்டு கூவுறாப்ல இன்றைய முக்கிய செய்திகள்னு கூவுறானுக பாரு;  நீயி இம்மா சவுண்டு வச்சிக்கின்னு நியூஸ கேட்டாங்காண்டியும், அது ஒங்காதுல உழுதாடா டமாரக்கெழமே..... சோக்கா ஒரு லூசு கும்பலு கிட்ட சொருவிக்கினு இப்டி மல்லாக்க கிடக்குனியேடா செல்வா?" என்று தனக்குத் தானே புலம்பிய படி அந்த வீட்டின் ஹாலில்
அந்த அறையில் படுத்துக் கொண்டு தன் நெஞ்சுப் பகுதியை கீழாகவும், இடுப்புப் பகுதியை மேல்புறமாகவும் வைத்து அவனுக்கு கொடுக்கப்பட்ட தலையணையால் தன் முகத்தை பொத்திப் படுத்திருப்பவன், அதற்குப் பிறகும் அதே போஸில் ஒன்றரை, இரண்டு மணி நேரங்கள் தூங்கி இருப்பான்!

பூஜையறையாக அதைப் பயன்படுத்தும் நோக்கில் கட்டப்பட்டு பின் பூஜையறை கிழக்கு பார்த்த முகமாக தான் இருக்க வேண்டும் என்று சொல்லி இந்த அறையை அப்படியே உபயோகிக்காமல் விட்டு விட்டனர். பெயருக்கு ஒரு கதவு என்று பிவீசி கதவு ஒன்றை பொருத்தியிருந்ததால் அந்த கதவால் ஹாலில் கேட்கும் சப்தத்தை நிறுத்த முடியவில்லை. எனவே ஒரு வாரமாக செல்வாவிற்கு அதிகாலை ஐந்தரை மணி வரைக்கும் தான் நிம்மதியான உறக்கம் கிடைத்துக் கொண்டிருந்தது.

மூன்றாவதாக இந்த ஆள்...... சபாபதி; இவர் நல்லவரா, கெட்டவரா, சிடுமூஞ்சியா, சிரித்த மூஞ்சியா என்று எதையுமே முடிவெடுக்க முடியாத ஒரு இயல்பில் இருந்தார். கூட்டி வந்த ஒருவாரத்தில் அவனை ஒரு முறை கூட கை ஓங்கவில்லை. அதிகாரம் செய்யவில்லை. அறிவுரை சொல்லவில்லை. ஏன் தேவைக்கு மேலாக ஒரு வார்த்தை கூட அவனிடம் பேசவில்லை.

இப்போது கோவிலுக்கு கூட்டி வருவதாக ஏன் முதலிலேயே சொல்லவில்லை என்று அவரிடம் சண்டை போட நினைத்தவன்,

"நீ கேட்டு நான் சொல்லலையா? கிளம்புன்னு சொன்னா அது எந்த இடத்துக்குன்னு நீ கேட்ருக்கணுமா வேண்டாமா செல்வா?" என்ற பதில் அவரது ஏற்ற இறக்கமான கம்பீரமான குரலில் தனக்குள் ஒலித்ததை கண்டு தலையசைத்துக் கொண்டு
அவரது சாமி கும்பிடல் முடிவதற்காக காத்துக் கொண்டிருந்தான். 

இருபது நிமிடங்களில் சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு வந்த சபாபதி செல்வாவை கூப்பிட்டு தன் அருகில் அமருமாறு கையைக் காண்பித்து அவரும் ஒரு இடத்தில் அமர்ந்தார்.

"ஏவாத்தியாரே.... நீ செஞ்ச காரியம் நியாயமா இருக்குதா? ஒரு இடத்துக்கு இட்டுணு
போவசுல எங்க கூட்டிக்கினு போறன்னு என்னாண்ட சொல்ல தேவல்ல....? பல்லு கில்லு வெளக்கினு வந்துருந்தா இங்கயே நாஸ்தாவ முடிச்சினுருக்கலாம்! வீட்டுல அந்த கெழவி எனக்கு சோறும் போட மாட்டேங்குது; ஒண்ணும் போட மாட்டேங்குது! நானே சோத்த வடிச்சிக்கினு நாத்தங்கா ஊறுகாய தொட்டுக்கினு நாஸ்தா துன்ன வேண்டிதிருக்கு தெர்தா ஒனக்கு?" என்று கேட்டவனிடம்,

"அது தான் இப்போ பிரச்சனையே! அதுக்காக தான் ஒன் ஒயர் எங்கூடவே இருன்னு சொல்லி உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் செல்வா!" என்றார் சபாபதி.

"இன்னாத்துக்கு இட்டுன்னு வந்தேன்ற? பட்டினி கிடந்து சாவுறதுக்கா?" என்று கோபமாக கேட்டவனிடம் இல்லையென தலையசைத்த சபாபதி,

"நீயும் நல்லா சாப்ட்டு, எம் பொண்ணுக்கும் நல்லா சாப்பாடு குடுன்னு சொல்ல வந்தேன்!" என்றார்.

"இதோடா.... நீ எம்மாம் பெரிய ஆளு;  ஒம்மவ என்ன எங்கள மாதிரியா? பெத்த புள்ளைக்கு சோறு போடுறீ கெழவின்னு நீ அந்த பொம்பள கையில கேக்க வேண்டியதுதான? அத உட்டுட்டு உம்பொண்ணுக்கு சாப்பாடு போடணுங்கறதுக்காண்டியும் மெய்யாலுமே நீயி என்னைய ஒரு வருஷத்துக்கு குத்தகைக்கு எடுக்கப் போறியா என்ன?" என்று ஆச்சரியமாக கேட்ட செல்வாவிடம்,

"ஆமா.....!" என்று சொல்லி அவனது ஆச்சரியத்தை மேலும் ஒரு மடங்கு கூட்டினார் சபாபதி.

"யோவ் என்னய்யா நீ பாட்டுல ஆமாங்குற? அந்த கெழவியாண்ட நீ ஒண்ணுமே கேக்க மாட்டியா? அதென்ன ஒரு வருஷ கணக்கு?" என்று கேட்டவனிடம்,

"இவங்க ரெண்டு பேரும் சாம்பவி அம்மாவோட பேரெண்ட்ஸ் செல்வா! இப்ப சாம்பவியோட அம்மாவும், நானும் சேர்ந்து இல்ல; என் சைடுலயும் பவியப் பாத்துக்க யாரும் இல்லங்குற காரணத்தால நான் இவங்க ரெண்டு பேரோடயும் பவி இருக்கட்டும்னு விட்டேன்! முதல்ல எல்லாம் பேத்தின்னு நல்லா தான் பார்த்துக்கிட்டாங்க. பட் இப்போ ரெண்டு மூணு வருஷமாவே அவளுக்காக அவங்க என் வீட்ல இருக்கலங்குறத நல்லாவே உணர்த்துறாங்க! நான் உங்கிட்ட ஒரு வருஷ டைம் ஏன் கேட்டேன்னா பவி காலேஜ்க்குன்னு ஹாஸ்டலுக்குப் போயிட்டா இந்த வீட்ல உன்னோட தேவை இருக்காது..... அதான்!" என்று சொன்னார் சபாபதி.

"ஓ.... என்னைய மாரி ஒரு ராவான ரவுடிய வீட்ல வச்சுக்கினா ஓம்மாமியாக்காரி வாயவும் அடக்குனாப்ல ஆச்சு! என்னையவும் உன் கண்காணிப்புல வச்சுக்கினமேரியும் ஆச்சு! நீ ட்யூட்டிக்குப் போவசுல ஒம்மவ வயித்துப் பிரச்சனையும் தீந்தமேரியும் ஆச்சு! படா கில்லாடி வாத்யாரே நீ!" என்று தன்னைப் பாராட்டிய படி எழுந்த செல்வாவிடம்

"உங்கிட்ட இன்னும் கொஞ்சம் பேசணும் செல்வா! உக்காரு!" என்று சொன்னார் சபாபதி.

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro