Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

இரவின் நிலவு

' சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவேன்
பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன் கொல்  என் காதலன் எனவே'

நான் சாவதற்கு கூட அஞ்சவில்லை, வேறு ஒன்றிற்காக அஞ்சுகிறேன்.நான் இறந்து மறுபிறவி என்ற ஒன்றை எடுத்தால் அப்பிறவியில் என் மன்னவனை மறந்துவிடுவேனோ! என்று தான் அஞ்சுகிறேன் என்று தலைவி உருக்கமாக கூறும் நற்றிணை பாடல் வரிகளில் மூலம் அறியலாம் அக்காலங்களில் தலைவி தலைவன் மேல் கொண்ட காதலின் ஆழத்தை.

காதல் , இதை கடந்து வராதவர்களை எளிதில் எண்ணிவிடலாம்...
அசடனை அறிவு கூர்மை மிக்கவனாகவும், ஓவியம், இசை என பல கலைகளில் சிறந்து விளங்குபவனை பித்தனாக்குவதும் தான் காதல்.

காதலனின் கரம்கோர்க்காமல், கண்களால் காதலைக் கூறி ,அவனுடன் வாழத் தொடங்கும் நேரத்திற்காக காத்திருந்து அது நடக்காமல் போக வேறு ஒருவனுக்கு கழுத்தை நீட்டினாலும் அவள் நிழலைக் கூட அவன் தொட அனுமதியாது இறுதி வரை காதலனின் நினைவுகளிலே வாழ்ந்து இறந்த லைலாவின் காதல் என்னை பிரம்மிக்க வைத்தது உண்மை தான்.

ஆப்பிரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் தென்மேற்கு ஆசியாவில்
உள்ள ஒரு தீபகற்பமே அரபு நாடு.

வாசனை திரவியங்களுக்கும், பேரிச்சை பழங்களுக்கும், இஸ்லாமியக் கொள்கைகளுக்கும் பெயர் போன இந்நாடு 7ம் நூற்றாண்டில் இவர்களின் காதல் காவியத்தால் இன்னும் பெயர் பெற்றது எனத் தான் கூறவேண்டும்.

லைலா அல் ஆமிரா கண்களால் அனைவரையும் கைது செய்பவள்,  இளவரசியாக அந்த அரண்மனையில் வலம் வருபவள்,கண்கள் மட்டுமே தெரியுமளவு தான் அவளின் ஆடை அலங்காரங்கள் இருக்கும்.
மிகப் பெரிய செல்வந்தரின் மகளான இவளுக்கு படிப்பதில் சிறு ஆர்வம்.

அதைக் கெடுக்க விரும்பாத அவரின் தந்தையும் பாடசாலைக்கு அனுப்பிவைத்தார்.

முக்காடிட்ட தலை, மூக்கு வரை துணி, கண்கள் மற்றும் நெற்றி மட்டுமே தெரியுமளவு தான் இவளும் பாடசாலைக்கு சென்று வந்தாள்.

இவள் விழிகள் பேசும் மௌனமொழி அங்கு படிக்கும் ஒருவனால் மட்டும் அறிந்து கொள்ள முடிந்தது.
அவன் தான் காயிஸ் இப்ன் அல் முல்லாவாஹ்.

கண்டதும் அந்த செல்வந்தரின் மகள் மீது காதல் கொண்டான் ஏழ்மையின் குலமகன் காயிஸ்.

பணம் தான் இல்லையே தவிர காயிஸ் ஒரு மிகச் சிறந்த கவிஞன்.
அவனின் கவி வரிகள் லைலாவைப் பற்றி தான் இருக்கும்.

எங்கு சென்றாலும் லைலா தான்.
எங்கு கிறுக்கினாலும் லைலாவைப் பற்றி தான்.
அவள் மீது பித்தனாகிவிட்டான் காயிஸ்.

இதனால் தான் என்னவோ அந்த ஊர் மக்கள் அனைவரும் அவனை மஜ்னூன் என்று அழைக்க ஆரம்பித்து விட்டனர்.
மஜ்னூன் என்றால் பைத்தியம் என்று அர்த்தம்.

இவர்களின் காதலைக் கண்டுகொண்ட லைலாவின் பெற்றோரோ அதை வன்மையாக கண்டிக்க ஆரம்பித்துவிட்டனர்.

கண்டதும் காதல் கொண்ட அவனால் அவளின் செல்வசெழிப்பிற்கு முன்னால் நிற்க முடியவில்லை.
இப்படி கிறுக்குவதைத் தவிர என்ன தெரியும் என்று கேட்ட லைலாவின் அப்பாவிற்கு கூட அவனால் பதிலளிக்க முடியவில்லை.

அன்றுதான் உணர்ந்தான் அவனின் நிலையை...
அவனுள் நுழைந்த மூச்சுக்காற்று கூட ஆச்சரியப்பட்டது அவனின் எல்லா அணுக்களிலும் லைலா மட்டுமே கலந்திருப்பதைக் கண்டு.
அவனின் எழுதுகோலை கூட வசியம் செய்துவிட்டாள் அந்த பாவை.
அவன் பேச்சைக் கேட்காமல் அவளைப் பற்றி மட்டுமே எழுதுகிறது. லைலாவைப் பற்றி நினைப்பது ,லைலாவைப் பற்றி கவி எழுதுவது இதைத் தவிற அவனுக்கு வேறு எதுவும் தெரியவில்லை.

அப்பொழுது தான் ஆங்கிலக் கவிதைகளும் உருபெற ஆரம்பித்திருந்த சமயம்.
கவிதைகள், கவிஞர்கள் என்றாலே வியந்து பார்ப்பதோடு அவர்களுக்கென தனி மரியாதையும் உண்டு.
அதையே தன் தொழிலாக மாற்றி மஜ்னூன் என்ற பெயரை மாற்றியமைக்க எவ்வளவு முயற்சித்தும் அவன் சிந்தையெங்கும் லைலா தான்.
மன்னரைப் புகழ்ந்து பாட சென்ற போது கூட அவனின் கவி வரிகள் அவனை ஏமாற்றி லைலாவைப் பற்றியே பாடிவிட்டது.

இங்கு லைலாவும் அவன் நினைவால் வாடி வதங்கி இருக்க அவளின் நிலையைக் கண்ட பெற்றோரோ உடனடியாக அவளுக்கு திருமண ஏற்பாட்டை ஆரம்பித்திருந்தனர்.

தன்னை மணக்கப் போகும் மணவாளன் மஜ்னு தான் என எண்ணி ஆவலுடன் வந்து பார்த்தவள் வேறு ஒருவனைக் கண்டு அதிர்ந்தாள்.
என்றும் பெற்றோர்கள் கையில் எடுக்கும் தாரக மந்திரம் இது...
அதுதான் அன்றும் லைலாவின் வாழ்வையும் புரட்டிப் போட்டது.

"நீ இவனை மணந்துக் கொள்ளவில்லை என்றால் எங்களை உயிரோடு காண முடியாது " என்ற தந்தையின் வார்த்தைகளில் மனம் நொந்தவள் திருமணத்திற்கும் ஒப்புக் கொண்டாள்.

வேறு ஒருவனை மணந்தாளே தவிர அவன் நிழல் கூட இவளை நெருங்க அனுமதித்ததில்லை.
இவளின் திருமண செய்தி அறிந்த மஜ்னுவும் ஊரை விட்டு வாழ்க்கையை வெறுத்து பாலைவனத்திற்கு சென்றுவிட்டான்.
அங்கும் அவன் செய்தது லைலாவைப் பற்றி கிறுக்குவதைத் தான்.

மஜ்னூன் என்று அழைக்கப்பட்டவன் இன்று உண்மையாகவே மஜ்னூனாக மாறிவிட்டான்.

மஜ்னூனின் காதலை மட்டுமே போற்றும் இந்த உலகம் லைலாவின் வலிகளை உணர மறந்துவிட்டது.

அவளின் நினைவுகளிலே வாழ்ந்து பித்தனாக மாறிய மஜ்னூன் காதலில் சிறந்தவனென்றால் பெற்றோருக்காக மனதில் ஒருவனை நினைத்துக் கொண்டு வேறு ஒருவனுக்கு உரிமையான பிறகும் தன் காதலனையே நினைத்து உருகி உடல் மெலிந்து தன் உயிரை விட்ட லைலாவும் சிறந்தவள் தான்.

தன் பெற்றோருக்காக வேறு ஒருவனை மணந்துக் கொண்டு அந்த நாட்டை விட்டு வெளியேறிய லைலாவால் கணவனை மனதார ஏற்றுக் கொள்ள முடியாமலும் மஜ்னுவை மறக்க முடியாமலும் தவித்தாள்.

லைலாவின் கணவன் என்ன செய்தும் அவன் முகத்தைக் கூட அவள் பார்க்க விரும்பவில்லை.
கண்கள் மூடினாலும் சரி , திறந்தாலும் சரி அவள் நினைவெங்கும் மஜ்னு மட்டுமே நிறைந்திருந்தான்.

அவனின் காதல், காதல் தந்த பிரிவு, பிரிவு தந்த துயரம் மட்டுமே அவளுக்கு பரிசாக கிடைத்திருக்க உணவு என்ற ஒன்றையே மறந்திருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

உணவு  உண்ணச் சொல்லி வற்புறுத்தியும் உண்ணாது மஜ்னுவின் நினைவுகளிலே வாடினாள். விழிமொழி பேசும் பாவையவளின் விழிகள் ஒளியிழந்து பார்ப்போரை இவள் மேல் பரிதாபம் கொள்ளும் அளவு செய்தது.

மாடங்களில் அமர்ந்து நிலவையே வெறித்துக் கொண்டிருக்கும் லைலாவின் கைகளில்  அவர்களின் காதல் சின்னமான யாழ் என்றுமே இருக்கும்.

கவிதைகள் மட்டுமல்லாது இசையிலும் சிறந்து விளங்கியவன் மஜ்னு.
அவன் பரிசாக கொடுத்த யாழ் தான் அவளுக்கு உற்ற துணை.
ஏனோ அதை எடுத்து மீட்டும் போது அவனே அவள் கைகளில் தவழ்வது போல் ஒரு பிரம்மை உண்டாகும்.

அந்த காலங்களிலெல்லாம் அவ்வப்போது கொள்ளை நோய்கள் வரும்.
ஜஸ்டீனியக் கொள்ளை எனும் நோய் பரவி 100 மில்லியன்களுக்கும் அதிகமானோரைக் கொன்றது.இதன் காரணமாகவே உலக மக்கள் தொகை 208 மில்லியனாக குறைந்தது.
உணவு உண்ணாது ,தன் உடல்நலனைப் பேணாது இருந்த லைலாவையும் இந்த நோய் தாக்கியது.
மஜ்னுவின் காதலையும் மிஞ்சி அவளின் மேல் காதல் கொண்டது போல அந்த கொள்ளை நோய்.
அதனால் மிகவும் வாடிப் போனாள் லைலா.
மருத்துவம் பார்க்காது மஜ்னுவின் நினைவுகளிலே உலன்றுக் கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில் கூனிக் குறுகி போனாள்.

அழகே பொறாமைப் படும் பேரழகி, இன்று இவள் தான் லைலா என்று கூறினாலும் மற்றவர்கள் இனம் காண முடியாதவாறு  மாறினாள்.

நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தவளுக்கு ஏனோ இன்று மனம் ஒருநிலையில் இல்லாமல் தவித்தது.
என்றுமில்லாத திருநாளாய் மஜ்னுவின் நினைவுகள் வேறு அதிகமாய் அவளை வாட்டியது.
ஒவ்வொரு நாழிகையும் அவனின் நினைப்பிலேயே கரைபவளுக்கு நாழிகைகள் போதாமல் போனது.

இரவின் நிலவான இந்த அழகிய நிலாவின் கண்கள் உறக்கத்தைத் தழுவ முயற்சிக்க அவள் கனவில் மஜ்னூன் புன்னகை முகமாக காட்சியளித்தான்.

திருமணம் ஆன நாளிலிருந்து புன்னகை என்ற ஒன்றையே மறந்திருந்தவளின் முகம் அவனைக் கண்டதும்  மெலிதாக புன்னகைக்க

"இதயமே உன் இதயத்தை பிரிந்து செல்ல நினைக்கிறாயா?" என்று கூறியவனின்
முகம் இப்போது மழை காணாத பயிர்களைப் போல் வாட அதைக் கண்டவள் உடனே கண் விழித்தாள்.

"மாட்டேன் உன்னை விட்டு பிரியமாட்டேன்" என்றவளின் அலறல் கேட்டு அனைவரும் வர அவர்களை சமாதானம் செய்து அனுப்பிய மங்கைக்கோ இறுதியாக ஒரு முறை அவனைக் காண அவா ஏற்பட்டது.

காதல் மொழிகளை கண்களால் மட்டுமே பரிமாறிக் கொண்டவர்கள் வாய்மொழிகளால் இதுவரை கூறியதில்லை.
ஏன் அவள் கரம் கூட அவன் பற்றியதில்லை.

ஒரே ஒருமுறை அவனைக் காணும் ஆவல் ஏற்பட எப்படி அதை நடைமுறைப் படுத்துவது என்று யோசித்தவளுக்கோ அவனைத் தவிர வேறு எதையும் யோசிக்க முடியவில்லை.

சிந்தித்து சிந்தித்து மனம் வாடிப் போனவளுக்கு ஐந்து நாட்கள் கழித்தே அந்த எண்ணம் உதித்தது.
ஆம் அவள் மாறுவேடமிட்டு அவளின் மஜ்னுவை சந்திக்க திட்டமிட்டுவிட்டாள்.

பணியாளைப் போல் வேடமிட்டவள் அவனைத் தேடி பாலைவனத்திற்கு புறப்பட்டாள்.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்

என்று கூறிய சிலப்பதிகாரத்தின் வரிகளைப் போல் மாரியைக் காணாத இந்நிலத்தில் வெய்யோன் தன் வெம்மையால் சுட்டெரிக்க ஆங்காங்கே சுற்றித் திரியும் பருந்துகளோ எப்போது இரை கிட்டும் என கண்கொத்தி பாம்பாய் சுற்றிக் கொண்டிருந்தது.

கண்ணிற்கு எட்டும் தூரம் வரை மரம்,செடி என்று எதுவும் தென்படாமல் இருக்க சூறையாடல் மட்டுமே நடக்கும் அந்த பாலை நிலத்தில் தன் மனதை சூறையாடிய கள்வனை தேடிக் கொண்டிருந்தாள் அந்த பேதை.

அவனைப் போல் அவன் புரவியும் கலையிழந்து காணப்பட மணல் குன்றுகளுக்கு நடுவில் காய்ந்து போன கள்ளியின் அருகே தன்னைச் சுடும் கதிரவனைக் கூட கண்டுக்கொள்ளாது ஆகாயத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் மஜ்னு.

ஓரத்தில் நின்றிருந்து இந்த நிகழ்வைக் கண்டவள் மனது ஆயிரம் எரிகற்களை தன்மேல் வீசியது போல் ஒரு உணர்வு தோன்ற வாய் வார்த்தைகளால் மஜ்னு என்றழைக்கப்பட்டவன் இன்று உண்மையிலேயே மஜ்னுவின் தோற்றத்தில் காணப்பட்டான்.

அரபு நாட்டிற்குரிய வெள்ளை நிறத்தில்  அழகாக காட்சியளிப்பவன் இன்று சவரம் செய்யாத கேசம்,நீண்ட தாடி,கிழிந்த ஆடை அவனின் வெள்ளை நிறம் வெய்யோனின் வெம்மையால் கருப்பு நிறத்தை  தத்தெடுத்திருக்க பலநாள் உணவு உண்ணாது உடல் மெலிந்து காணப்பட்டான்.

அவனை நெருங்கியவள் காயிஸ்  என்றழைப்பதற்குள் "என்னைத் தேடி வந்துவிட்டாயா லைலா?" என்றவனின் குரலில் திடுக்கிட்டு நின்றாள்.

அவளைத் திரும்பி பாராமலே அவன் அடையாளம் கண்டுகொண்டது அவளை வியப்பில் ஆழ்த்தியது.

"என்னை ஒருமுறை திரும்பி பாருங்கள் காயிஸ்" என்றவளின் குரலில் தெரிந்த ஏக்கத்தைக் கண்டு அவன் மனம் வருந்தினாலும்
"என் லைலா பௌர்ணமி இரவில் தோன்றும் முழுநிலவைப் போன்றவள்...அவள் கண்களே அந்த நிலவைக் காட்டிலும் பிரகாசமாக காட்சியளிக்கும். ஆனால் அந்த கண்கள் எங்கே லைலா ? உன்னை இந்த நிலையில்  கண்டால் இதுவரை தேக்கி வைத்திருந்த என் உயிரும் அந்த நொடியே என்னை விட்டுப் பிரிந்துவிடும் " என்றவன் கண்கள் கலங்கியதோ என்னவோ லைலாவின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

"உன் லைலாவின் கண்கள் உன்னைப் பார்க்கும் பொழுது மட்டுமே தன் ஒண்டுமொத்த காதலையும் காண்பித்து பிரகாசமாகும்...
ஒருமுறை என்னைத் திரும்பி பாருங்கள் காயிஸ்" என்றவளில் குரலில் தெரிந்த காதலில் கட்டுண்டவன் திரும்பி அவனின் லைலாவைப் பார்த்தான்.
கண்களால் மனதினுள் நிரப்பினான் என்று தான் சொல்ல வேண்டும்.

இதுவரை லைலாவின் முகத்தை அவன் கண்டதே இல்லை அவள் கண்களை மட்டுமே கண்டு காதலில் விழுந்தவன்.

அவன் முகத்தைக் கண்டதும் அவள் இதழ்களை மீறி கண்களும் சிரிக்க அந்த கண்கள் காட்டிய பாவனையில் அவன் இதழ்களும் புன்னகைத்தது.

இதைத் தான் நான் எதிர்ப்பார்த்தேன் என்பதைப் போல் அந்த பாலைவனம் இப்போது பூக்கள் பூத்துக் குலுங்கும் சோலைவனமாக மாறியது.

அன்றில் பறவையாய் தன் இணையை விட்டு பிரியாது அவனைத் தேடி வந்தவளைக் கண்டு கடவுளுக்கும் கண்கள் கலங்கியது என்று தான் சொல்ல வேண்டும்.

இழையணி மகளிரின் விழைதகப் பூத்த நீடுசுரி இணர சுடர்வீக்கொன்றைக் 
காடுகவின் பூத்த - ஆயினும் நன்றும்

என்பது போல் பொன்மாலை சூடிய பெண்களைப் போல் பூத்துக் குலுங்கும்  மலர்களைக் கொண்ட கொன்றை மரங்களும்,  கார்காலத்தில் சில்லென்ற தென்றலை வாரி வழங்கும் உழிஞை மற்றும் இருப்பை மரங்களும், இதம் தரும் நறுமணத்தை வீசும் மராம்பு மலர்களும் தன் இருப்பைக் காட்ட மெய் மறந்து நின்றனர் அந்த அழகில்.

இவர்கள் காதல் கை கூட இயற்கை அன்னையும் விரும்பியதோ என்னவோ  அவர்களை கட்டித் தழுவியது தன் ஆனந்தக் கண்ணீரால்...

கொன்றை மரங்களுக்கு இடையில் ஒரு கிணறு அமைந்திருக்க அதனருகில் சென்று இடைவெளி விட்டு அமர்ந்தவர்கள் இதுவரை பேசாததையெல்லாம் இனி நமக்கு நாட்களே இல்லை என்பதைப் போல் பேச ஆரம்பித்தனர்.

"என் கண்களிலே நான் உங்களின் மேல் கொண்ட காதலை தெரிந்து கொண்டீரா? " என்ற லைலாவிற்கு
ஆமென்று தலையசைத்தவன்

"உன் கண்களை நான் சிறை செய்து என் இதயத்திற்குள் குடி வைத்துவிட்டேன் அது என்றுமே என்னிடம் பொய் உரைக்காது " என்றவன் மேல் காதல் ஊற்றாக பொங்கியது லைலாவிற்கு.

"எனக்கு திருமணமான செய்தியைக் கேட்டு நீங்கள் வருந்தியிருப்பீர்கள்...என்னைத் திட்டும் எண்ணம் கூட இருந்திருக்கலாம் அப்படி இருந்திருந்தால் என்னை என்னவென்று  திட்டியிருப்பீர்கள் காயிஸ் ? " என்றவளின் ஆர்வத்தை பொய்யாக்காமல் அவன் கூறியது அவளுக்கு வியப்பைத் தோற்றுவித்தது.

"ஞாயிறு காயாது மரநிழல் படவேண்டும்
மலையில் கற்கள் இல்லாமல்
மணலாக இருக்க வேண்டும்
என்னைப் பிரிந்து செல்லும்
என் நாயகியே நின் பயணம்
சுகமாக இருக்க வேண்டும்"

என்றவனின் விரக்தி புன்னகை வியப்பையும், வெறுமையையும் ஏற்படுத்தியது.

"காயிஸ் " என்றவளுக்கு அதற்கு மேல் பேச நா எழவே இல்லை.

அவள் கலங்கிய கண்களைத் துடைக்க கைகள் துடித்தாலும் "அழுகாதே லைலா கண்களைத்  துடைத்துக் கொள்" என்றவனை ஒரு பார்வைப் பார்த்தவள்

"உங்களைப் பார்ப்பதற்கு முன்னரே என் உயிர் என்னை விட்டு பிரிந்திருந்தால் தாங்கள் என்ன செய்திருப்பீர்கள் மஜ்னு?"  என்ற அவளின் திடீர் வினாவில்

"மடத்தனமான வினா லைலா...
நீங்கள் எப்பொழுதுமே சுகமாக இருக்க வேண்டும்.என் இதயமான நீங்கள் சுகமாக இருக்க வேண்டும் என்று தான் இத்தனை நாள் நான் என் உயிரை பிடித்துக் கொண்டு இருக்கிறேன்.
மரணம் என்ற ஒன்று உங்களைத் தழுவி விட்டால் என் இதயமுமல்லவா துடிப்பதை நிறுத்திவிடும்" என்றவனின் விடையில் அவன் வாயை மூட சென்றவள் உடனே தன் கரங்களை விலக்கிக் கொண்டாள்.

"வேண்டாம் காயிஸ் அப்படியெல்லாம் கூறாதீர்கள்! உங்களைப் பிரிந்த நான் எப்படி அங்கு நலமாக இருக்க முடியும்...
உங்களின் அருகில் இருந்தால் தானே இந்த லைலாவும் நலமாக இருப்பாள்?
எப்பொழுதுதான் அந்த காலன் என்னை அழைத்துக் கொள்வான் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.
வேறு ஒருவரின் மனையாளாய் வாழா விட்டாலும் அவரின் அரண்மனையில்
இருப்பதும் எனக்கு நரகத்தில் இருப்பதைப் போல் தானே காயிஸ்?"
என்றவளின் காதலைக் கண்டு மெய் சிலிர்த்தது மஜ்னுவிற்கு.

கண்களாலே காதலைப் பறிமாறிக் கொண்டவர்கள் இப்போது தான் மடை திறந்த வெள்ளமாய் தங்களில் காதலை வாய்மொழிகளால் பகிர்ந்துக் கொண்டிருக்கின்றனர்.

"காயிஸ் ஒரு வேளை மரணம் என்னை தழுவி விட்டால் என் கல்லறையிலும் உங்கள் கவி வரிகள் இடம் பெறுமா?" என்று புன்னகை முகமாக கேட்ட லைலாவின் முகத்தைப் பாராமல்

உதிருவதற்கு முன் உருண்டை உருண்டையாக மணமாலை
தொடுக்கப்பட்டது போல் காணப்படும் கொன்றை மலர்களைக் கண்டவன்

" நான் உன் கல்லறை சுவர்களை அணைத்துக் கொள்வேன்
அந்த சுவர்களுக்கு இடைவிடாது முத்தமிடுவேன்
இதைத் தாண்டி இன்னும் எத்தனை
சுவர்கள் இருந்தாலும் அதற்கும் முத்தமிடுவேன்...
அதற்காக இந்த சுவர்களை நான் காதலிக்கிறேன் என பழிக்க வேண்டாம்!
நான் இந்த சுவர்களைக் காதலிக்கவில்லை
இந்த சுவர்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் என் இதயத்தைத் தான் காதலிக்கிறேன்! " என்று கூறியவன் திரும்பி லைலாவின் கண்களைக் காண அதில் தான் எத்துணை காதல்!!!

எழுந்து நின்றவள் அவனருகே வர
"லைலா என்ன செய்கிறாய்? " என்று அதிர்ச்சியுடன் கேட்டவனிடம்

"அந்த காலன் என்று என்னை அழைத்துச் செல்வான் எனத் தெரியாது காயிஸ்...
நான் என்றுமே உங்களின் லைலா தான் ஒரே ஒரு முறை உங்களின் லைலாவிற்கு முத்தமிடுகிறீர்களா காயிஸ் ?" என்று கூறியவளிடம்
புன்னகை முகமாக மறுத்தவன்

"நான் என் இதயத்தை காதலிக்கிறேன் ஆனால் அவள் என்று வேறு ஒருவரின் கரம் பிடித்தாளோ அன்றே அவளைக் காதலிக்கும் தகுதியை இழந்துவிட்டேன்.

என் தகுதியை இழந்து விட்டேனே என்று வருந்தி வருந்தி தான் நான் மஜ்னூனாகவே மாறிவிட்டேன்.
என் இதயத்தின் மீதான என் காதல் உண்மை.
மனதில் மட்டுமே அவளை நினைத்திருந்தால் ஒருவேளை மறந்திருப்பேனோ என்னவோ?
அவள் தான் என் ஒவ்வொரு அணுக்களிலும் நிறைந்திருக்கிறாளே!!!
அவளைக் காதலிக்கும் தகுதியை இழந்துவிட்டாலும் அவளின் காதல் , இன்று  வரை அவள் எண்ணங்களில் வாழும் நான் புண்ணியம் செய்தவன் தான். அது போதும் எனக்கு " என்றவனின் கரங்களைப் பற்றிக் கொண்டவள்

"மறுபிறவி என்ற ஒன்றிலாவது நாம் லைலா மஜ்னுவாக பிறக்காமல் சாதாரண மானிடர்களாக பிறந்தால் இதே அளவு என்னை காதலிப்பீர்களா மஜ்னு ? " எனக் கேட்டாள்.

இந்த மஜ்னு என்றுமே லைலாவிற்கு தான் சொந்தம்...
வேறு பெண்ணை சிந்தையிலும் தொடேன் என்றவனைக் கண்டு கோபம் தான் வந்தது அவளுக்கு.

"ஏன் மஜ்னு என்னை இந்தளவு காதலிக்கிறீர்கள்? என்ன தவம் செய்தேன் நான்? " என்று கதற ஆரம்பித்தவளை அணைத்து ஆறுதல் கூட சொல்ல இயலவில்லையே என வெம்பினான் மஜ்னு.

எழுந்து நின்று கண்களைத் துடைத்துக் கொண்டவள் "நானும் உங்களைக் காதலிக்கிறேன் காயிஸ்...
உங்கள் கவி வரிகளால் காதலின் ஆழத்தை அனைவருக்கும் கூறிவிட்டீர்கள்.
அதனால் தான் என்னவோ என் காதல் எந்தளவு என்பதை யாரும் அறிய முற்படவில்லை.
என் இறுதி வரிகள் உங்களுக்காக...
என் மரணம் என்னைத் தழுவும் நொடி கூட என் நினைவெங்கும் நீங்கள் தான் இருப்பீர்கள் காயிஸ்.
நான் உச்சரிக்கும் இறுதி வார்த்தை கூட உங்களது பெயராகத் தான் இருக்கும் காயிஸ் " என்றவள்

அவனிடம் அவன் பரிசாக தந்த யாழைக் கொடுத்தாள்.

அதில் ஒரு ஓரத்தில் அவள் உதிரங்களால் கோர்த்த பாமாலை  ஒன்று அவள் காதலின் ஆழத்தைக் காட்ட காத்திருந்தது.

ஏதோ தவறாக பட அதை வாசிக்க மாட்டேன் என்று கூறிய மஜ்னுவிடம்
அவள் பார்வையாலே வாசிக்க சொல்லி யாசிக்க மனதைக் கல்லாக்கிக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தான்.

படகு போன்ற அந்த யாழை கைகளில் தாங்கியவன் அவளின் கவி வரிகளைப் பார்த்தான்.

தேக்கி வைத்த காதலெல்லாம்
உன்னுள் சேர்த்துக்கொண்டிருக்கிறாய் நீ...

தேவைப்படும் போது
கவிதையாய் தூவிக்கொண்டிருக்கிறாய்...
பெருங்கவிஞன் என்று
பெயரெடுத்துக்கொண்டிருக்கிறாய் நீ..!

வக்கற்ற பெண்ணிவள்
என் செய்வாள்...
காதலெல்லாம் சேர்த்துக்கொண்டிருப்பதை
தவிர... !

மஜ்னூன்
என்னும் உன் கடலுக்குள்
புதைக்க
என் காதலெல்லாம்
நதி போல்
சேர்த்துக்கொண்டிருக்கிறேன்
என் கண்ணாளா...

உரிமை வேறொருவன்
எடுத்துக்கொண்ட போதும்
துன்பங்கள் அனுபவித்த
உயிர் காத்திருக்கிறது
உனக்காக...

உடல் மெலிந்து
தசை சுருங்கி
அழகற்று போன பின்னும்
என் காதல் வேண்டுமென்றால்
சொல்...

என் உயிரை எவரும்
பறித்து செல்லாமல்
உனக்காய்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
என் மஜ்னூன்....... !

வாசித்ததும் மௌனமாய் கண்ணீர் சிந்தியவன் நிமிர்ந்து அவளைப் பார்க்க "இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் காயிஸ்"

"என்னை காதலிக்கும் தகுதியை
இழந்ததாக எப்பொழுது கூறினீரோ
அந்த நொடியே எந்தன் உயிர்
என்னை விட்டு பிரிந்துவிட்டது...

மாய்ந்த பின் இந்த உடல் வேண்டுமானால் கணவருக்கு சொந்தமாக இருக்கலாம்
ஆனால் உயிர் என்றும் உங்களுக்குத் தான் "

என்றவளைத் தடுத்து நிறுத்தியவன்
"நீ நலமாக இருக்க வேண்டும் லைலா இப்படி பைத்தியம் போல் பிதற்றாதே" என்று அந்த கவி வரிகளை அழிக்க முற்படும் சமயம் யாழிலிருந்து ஒரு நரம்பு அறுபட்டது.
அதிர்ந்து நிமிர்ந்தவன் எதிரில் இருப்பவளைக் கண்டு இன்னும் அதிர்ந்தான்.
ஆம் அவனின் எதிரில் இருந்த லைலாவும் கொஞ்சம் கொஞ்சமாக மாயமாக தொடங்கிவிட்டாள்.

லைலா என்று அவன் சென்று பிடித்தது காற்றைத் தான்...
அதைக் கூட கரங்களால் தொட முடியவில்லை லைலாவைப் போல்...

காற்றில் வரைந்துக் கொண்டிருந்த ஓவியம் முடிந்து திடீரென்று கண் விழித்தவனுக்கு அப்போது தான் தோன்றியது லைலா வந்தது வெறும் கனவு தான் என்று.

ஆனால் மனம் உறுதியாக சொன்னது லைலா என்னை விட்டு பிரிந்துவிட்டாள் என்று.

நோய் தாக்கியும் சிகிச்சை எடுக்காமல் கூனி குறுகியவள் காலனின் பிடியில் சிக்கி மரணத்தைத் தழுவும் அந்த இறுதி நொடியில் கூட யார் முகத்தையும் காணாது அவன் தந்த யாழை வாசித்து காயிஸ் என்ற பெயரை உச்சரித்து தான் மடிந்தாள்.

அவள் இறந்த செய்தியைக் கூறவேண்டும் என நண்பர்கள் மஜ்னுவைத் தேட அவனை எங்கும் காணவில்லை....
அவன் இறந்துவிட்டானா? பாலைவனத்தில் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டானா?
எதுவும் தெரியவில்லை.

சரியாக ஒரு வருடம் கழித்து லைலாவின் கல்லறைக்கு அருகில் ஒரு எலும்புக் கூடு காணப்பட்டது.
அதற்கு மேல் அவன் இறுதியாக லைலாவிடம் கனவில் கூறிய கவி வரிகளும்.

அவள் உடல் தான் மஜ்னுவிற்கு சொந்தமில்லையே தவிர உயிர் அல்லவே!
அதனால் தான் தன் உயிருக்கு முத்தமிட அவனும் வந்துவிட்டான்.





வணக்கம் லட்டூஸ்,

இது நான் பிரதிலிபி காவியத்தலைவன் போட்டிக்காக எழுதினது.
லைலா என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம்...
வரலாற்றில் இருந்த அவர்கள் காதலோடு என் கற்பனையும் சேர்த்து எழுதினது தான் இது❤...

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்❤

ப்ரியமுடன்
தனு❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro