எபிலாக்
வாழைமரம், மாவிலை தோரணம், அழகிய வண்ண கோலம், சரசரக்கும் பட்டுப்புடவை அணிந்த பெண்கள், அவர்களுக்கு ஈடாய் பட்டு வேஷ்டியில் சுற்றிய ஆண்கள் என அவ்விடமே வண்ணமயமாக இருக்க, சித்திரை வெயிலில் எவர் முகமும் சிறிதும் வடிவிடாமல் தென்னை மரங்கள் சாமரம் வீசியது.
காலை ஏழு மணி தான் ஆனாலும் வீடே ஜெகஜோதியாக மின்னியது. எங்கு திரும்பினும் சிரிப்பின் சாயல். அழகின் பிரதிபலிப்பு.
"டேய் மச்சான்... இங்க வா" தலையை ஆட்டி அருகில் தூரத்தில் நின்றவனை அழைத்தாள் ஆறு வயதான கிருஷ்ண ஜீவனி. தேவானந்த் - பைரவியின் மூத்த புதல்வி.
அவள் கையில் சுமக்க முடியாத அளவு பெரிய பாத்திரத்தில் ஜிலேபி நிரம்பி வழிந்தது. அவளது குரல் கேட்டு ஓடி விளையாடிக் கொண்டிருந்த சந்தோஷ் மற்றும் உதயநிலாவின் மகன் தீசன் முறைத்தான் அமைதியாக.
இருவருக்கும் ஒரே வயது தான். ஆனால் இருவருக்கும் இரண்டரை மாதம் தான் வித்யாசம். அந்த இரண்டரை மாதமே திஷனை பெரிய மனிதனாக காட்டியிருந்தது. அவன் தந்தையை போல அமைதி, பொறுமை என இருப்பான்.
அதே கிருஷ்ண ஜீவனி அவளது தந்தையின் மறு உருவம். எதிலும் அமர்க்களம், துறுதுறுப்பு, சேட்டை தான். பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை, தன்னை ஒத்த வயதில் இருக்கும் சிறுவர்களுக்கு சுத்தமாக கொடுக்க மாட்டாள். அதிகாரம் தூள் பறக்கும்.
"வாடா மச்சான்... அண்ணா நீயும் வா" விக்னேஷ் மகன் ஷ்ரவனையும் உடன் அழைத்தாள்.
கையில் இருந்த பெரிய பாத்திரத்தை பாவாடை சட்டையோடு தூக்க இயலாமல் கீழே வைத்து தலை தூக்கியவள் முகமெங்கும் முத்து முத்தாக வேர்த்தது. அந்த நிலையிலும் இரட்டை குடுமி அணிந்து அதில் அழகிய மல்லிகை பூ சூடி தேவதையாக மிளிர்ந்தாள் ஆனந்தபைரவியின் பெண் குழந்தை.
ஷ்ரவன் அவளுக்கு உதவ ஓடி வர, அவனை தடுத்தான் தீசன், "போகாத ஷ்ரவன். அவ ஸ்வீட் திருடிட்டு வந்துட்டா" என்றான் அவள் காதுப்படவே.
"டேய் புளிசட்டி. நான் திருடுனதை நீ பாத்தியாடா?" பாதை என்னும் பாராமல் இனிப்பை மண் தரையில் அப்படியே வைத்து அவனை நோக்கி சண்டைக்கு சென்றாள் சிறிய ராங்கி.
தீசன் அசையவே இல்லை. அப்படியே நின்று கண்களாலே சவால் விட்டான் வந்து பார் என.
"பாப்பா அப்டி எல்லாம் பண்ணிருக்க மாட்டா தீசன்" ஷ்ரவன் ஆணித்தரமாக கூறினான்.
"அப்டி சொல்லுடா அண்ணா" இடுப்பில் கை வைத்து தீசனை முறைத்தாள்.
"கிருஷ்ணா..." தூரத்தில் கேட்ட தந்தை குரல் கேட்டு கோவத்தில் சிவந்திருந்தவள் சிறிய கண்கள் மீனின் விழிகள் போல் விரிந்துகொண்டது.
"அப்பா..." பயந்தவள் ஒரே ஓட்டமாக சென்று ஒரு லாரிக்கு பின்னால் நின்றுகொண்டாள்.
அவ்வியம் வந்த தேவா தரையில் கிடந்த பாத்திரத்தை எடுத்து சுற்றிலும் மகளை தேடினான். எங்கும் மகளை காணவில்லை. வைக்கப்போரின் முன்னாள் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை தவிர.
"ஷ்ரவன் கிருஷ்ணாவ பாத்தியா?" அவனிடம் கேள்வி இருக்க சுற்றிலும் குழந்தைகளை சுற்றியும் கண்களை அலையவிட்டான் அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய.
சில நேரம் அரிதாக பாம்பு அந்த பக்கம் வருவதுண்டு, இன்று அதிலும் ஆள் நடமாட்டம் இருக்க வராது என தெரிந்தும் ஒரு முன்னெச்சரிக்கைக்காக பார்த்துக்கொண்டான்.
"இல்ல சித்தப்பா" என்று ஷ்ரவன் கூறிய தொனியில் சந்தேகமே வராது.
பிசுறு தட்டாமல் அடித்து கூறினான் பெரியவன். அவனை பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை கொடுத்து தீசன் பம்பரத்தை சுற்றும் வேலையில் இருந்தான்.
அவனது செயலே சந்தேகம் கொடுக்க, "மாப்பிள்ளை கிருஷ்ணாவ பாத்தியா நீ?" என்றான்.
அவனோ சரியாக கிருஷ்ணா இருந்த இடத்தை காட்டிவிட்டான்.
"இருக்கு இன்னைக்கு இவளுக்கு" முணுமுணுத்து தேவா அங்கு மெதுவாக செல்ல, "பாப்பா சித்தப்பா வர்றாங்க" எச்சரிக்கை மணியை ஷ்ரவன் அடிக்க அந்த குட்டி முயலோ ஓட்டமெடுத்து ஓட துவங்கியது.
ஒரு லாரியை சுற்றி சுற்றி இருவரும் ஓட எங்கிருந்து தான் வந்ததோ அடுத்த வாண்டு. வேதவ் தேவாவின் இரண்டாவது மகன். மூன்று வயதே நிரம்பியவன் செய்யும் சேட்டையை தேவா ஒருவனால் மட்டுமே சமாளிக்க முடியும்.
எந்நேரமும் துறுதுறுவென சுற்றி திரிபவனுக்கு இருக்கும் தெம்பு கூடுதலாய் இருக்கும். அதனாலே சில நேரம் இல்லை இல்லை பல நேரம் பைரவி தந்தையிடம் அனுப்பிவிடுவாள் மகனை.
"ப்பா ப்பா நானு நானு" என சகோதரியை துரத்த அவனும் தந்தைக்கு உதவ,
"வாடா மகனே உன் அக்காவை பிடிச்சு மரத்துல கட்டி வைக்கிறோம் நாம"
மகனையும் துணைக்கு அழைத்து இருவரும் திட்டம் வகுத்து இரண்டு பக்கமும் சென்று விரட்ட, அவளோ இருவருக்கும் போக்கு காட்டி தோப்பினுள் ஓடிட இப்பொழுது பெரிய மகன் ஷ்ரவனும், மாப்பிள்ளை தீசன், நிவேதாவின் மகள் ப்ரணிதா, இஷா மகள் இருவர் என அனைவரும் கிருஷ்ணாவை துரத்த அதுவே ஒரு விளையாட்டாகி போனது.
வந்த வேலையை மறந்து அனைவரும் தேவாவோடு ஆரவாரமாக துள்ளி குதித்து விளையாட துவங்கினர்.
"உன்ன எதுக்கு அனுப்பி வச்சா நீயும் பொடுசுகளோட சேர்ந்து ஆடிட்டு இருக்க? ஸ்வீட் எங்கடா? பந்துல எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க" மகனை வந்து அதட்டினார் நாயகி.
உடனே தீசன் பக்கம் திரும்பி, "மாப்பிள்ளை ஸ்வீட் எங்க?" என்றான்.
தீசன் கை நீட்டிய திசையில் பார்க்க நிதானமாக எவ்வளவு வாயில் அடைக்க முடியுமோ அவ்வளவு இனிப்பை வாயினுள் திணித்துக்கொண்டிருந்தனர் கிருஷ்ண மற்றும் வேதவ்.
"அடேய் அடேய் என்னடா பண்றீங்க" ஓடி சென்று பாத்திரத்தை பிடிங்கி அன்னையின் கையில் கொடுத்தான்.
"அப்பா அப்பா ஸ்வீட்.... அய்யம்மா" தந்தையைவிட்டு நாயகி பின்னால் தோன்றிக்கொண்டே இருவரும் செல்ல மற்ற பிள்ளைகளை தோப்பிலிருந்து வெளி வர கூறி மீண்டும் பந்திக்கு சென்றான் தேவா.
கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்த விருந்திலிருந்து வந்த பெரியவர் ஒருவர் கையை துடைத்தவாறே, "ராசா... வீடு பிரமாதம்... சாப்பாடும் உன் கவனிப்பும் அத விட அருமை"
வேட்டி மடிப்பிலிருந்து ஒரு சிறு பையை எடுத்தவர் அதில் கை விட்டு திருநீறை எடுத்து அவன் நெற்றியில் பூசினார், "சீரும் சிறப்புமா வாழையடி வாழையா சந்தோசமா இருப்ப ய்யா" மனதார வாழ்த்தி சென்றார் அவர்.
முகமெல்லாம் சிரிப்போடு புதிதாக கட்டியிருந்த தங்கள் வீட்டினை பார்வையிட்டான் தேவா.
பல வருடங்களாக அவளது கனவாக இருந்தது இந்த வீடு. அவனிடம் அதை பற்றிய கூறிய பிறகு அவன் கனவாகி போனது. உடனே வேலையை துவங்க முடியாத நிலை.
கைமீறி செலவுகள் அதிகம் இருந்தது. அதோடு மனைவி அடுத்த ஐந்து மாதத்தில் தங்கள் காதல் சின்னத்தை சுமக்க அதற்குண்டான செலவும் இழுத்து பிடித்துக்கொண்டது தேவாவை. இதே போல் அடுத்த ஆறு வருடங்கள் சற்று சிரமமாக ஓடியது.
இரண்டு பிள்ளைகளை வைத்தும் வீடு பத்தவில்லை, என ஒரு நாளும் மனைவி முகம் சுளித்ததில்லை. இருப்பதில் மகிழ்ச்சியாக வாழ துவங்கினாள். அவளுக்கு தேவை தேவாவின் அருகாமை மட்டுமே. தேவாவிற்குமே பைரவியை விட்டு ஒரு நாளும் இருக்க இயலாது.
ஆனாலும் அவளை கவனிப்பதில் ஒரு நாலும் தவறியதில்லை. என்ன வெளியாக இருப்பினும் மனைவியை அழைத்து சென்று அலுவலகம் விட்டு தானே அழைத்து வருவான்.
அவளது கர்ப காலங்களில் தந்தை வீட்டிலே தங்கி அலைச்சல் வராமல் பார்த்துக்கொண்டான். தனக்கு சிரமம் என்றெல்லாம் பார்க்கவில்லை. கிருஷ்ண ஜீவனி சற்று வளர்ந்த பின்னர் தங்கள் இல்லம் வந்து குழந்தையை தானே பார்த்துக்கொண்டு மனைவி கையில் தன்னுடைய வாகனத்தை ஒப்படைத்துவிட்டான்.
அது ஒரு காரணமோ என்னவோ, தந்தையோடு இருந்து தந்தையின் குணம் அதிகம் அவளுக்கு வர துவங்கியது. அடுத்த இரண்டு வருடத்தில் வேதவ் பிறக்க அவனும் வளர்ந்த பிறகு இருவரையும் தேவா தாயாய் மாறி பார்த்துக்கொண்டான்.
அவன் படும் கஷ்டங்களை பார்த்து வேலைக்கு செல்ல மாட்டேன் என நின்ற பைரவியை மிரட்டி வேலைக்கு அனுப்பி வைத்தான் தேவா.
இந்த நேரங்களில் வீடு கட்டுவதற்கு தேவையான முக்கால்வாசி பணத்தை சேமித்து வைத்துவிட்டு மனைவி கையில் புதிதாக ஒரு ஆப்பிள் மடிக்கணினியை கொடுத்தான்.
புரியாமல் விழித்தவளிடம், "உன் விருப்பம் போல நம்ம வீடு எனக்கு வேணும், மவளே ஒழுங்கா கட்டலன்னு வை" என செல்ல எச்சரிக்கை கொடுத்து சிரித்த கணவன் அன்பில் மேலும் மேலும் நனைந்தாள் பைரவி.
வீடு மெல்ல மெல்ல எழும்ப துவங்க தேவாவின் விருப்பத்தை கேட்டு வந்து நிற்கும் மனைவியை துரத்திவிடுவான். வீட்டின் செங்கல், சிமெண்ட், பெயிண்ட் , சிறு சிறு அலங்கார பொருட்கள் என அத்தனையும் பைரவியின் தேர்வு தான்.
என்ன தான் மனைவி, மக்கள் என நிறைவான வாழ்க்கை வாழ்ந்தாலும் மனைவி ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற வருத்தம் ஆடையாய் படிந்து நின்றது தேவாவின் இதயம் முழுதும்.
இப்பொழுது முழுதாய் அழகாய் எழும்பி நிற்கும் வீட்டின் முன்பு ஊர் கூட்டி நிறுத்தி என் மனைவியின் திறமையின் வெளிப்பாடு இது என சொல்லிய பிறகே நிறைவு வந்தது அவனுக்கு.
பெயருக்காக வீட்டினை பாராட்டாமல் மனதாராவே அனைவரும் பாராட்டி சென்றனர்.
சிரிப்போடு வீட்டினுள்ளே சென்றவன் முற்றத்தில் இன்னும் நறுமண புகை பரப்பிக்கொண்டிருந்த யாக குண்டத்தை தாண்டி கன்னி மூலையில் வீற்றிருந்த சிறு பூஜை அறைக்கு சென்றான்.
இளமஞ்சள் புடவையில் வாடாமல்லி பார்டர் வைத்த புடவையை இடையில் சொருகி, வாழைப்பழங்களை எல்லாம் எடுத்துக்கொண்டிருந்தவள் பாரம் தாங்காமல் சோர்வோடு சுவற்றில் சாய, மனைவியிடம் வேகமாக சென்று வாங்கிக்கொண்டான்.
"ஒரு வார்த்தை கூப்பிட்டிருந்தா வந்துருப்பேன்ல சக்கரை?" முறைத்து பார்த்தான்.
"இல்ல நீங்க பிஸியா இருப்பிங்கள்ல அதான். ஏதாவது வேணுமா?" கேட்டாள் கணவனிடம்.
சோர்வாக தலையை காட்டியவன், "ஏன்டி கொழந்தைக வயித்துல இருந்த நேரம் இவ்ளோ ஸ்வீட் சாப்பிட்ட?"
சிரித்தவள் மென்மையாக, "ஸ்வீட் வேணுமா?" என்றாள்.
"ஆமா, ரெண்டும் அஞ்சே நிமிசத்துல அரை கிலோ ஸ்வீட் சாப்பிட்டு முடிச்சிடுச்சுக"
"விடுங்க ஆனந்த். மூணு மாசம் ஆச்சு அவங்களுக்கு ஸ்வீட் குடுத்து"
"ஏன்டி அதுக்குன்னு அரை கிலோ ஸ்வீட்டா?" பார்வை மையலாக மனைவி முகத்தை அளவிட்டது.
"சரி விடுங்க, எல்லாரும் இருக்கப்போ எதுவும் சொல்லவும் முடியாது... வெளிய போய் ஸ்வீட் வாங்கிட்டு வாங்க, நான் காளைகளுக்கு வாழைப்பழத்தை குடுத்துட்டு வர்றேன்"
"வெளிய எல்லாம் போக வேணாம், உனக்காக பால்கோவா ஸ்பெஷலா செஞ்சு வாங்குனேன் அது கிட்சன்ல மேல் ஸ்லாப்ல இருக்கு எடுத்து குடு, நான் பசங்களுக்கு குடுத்துக்குறேன்" தேவா கூறவும் முகம் சூம்பி போனது பைரவிக்கு.
பால்கோவா அவள் விரும்பி உண்ணும் இனிப்பு, அதிலும் தேவா மதுரையில் ஒரு கடையில் வாங்கி வரும் அந்த இனிப்பிற்கு அவளும் அவள் நாவும் அடிமைகள்.
"ம்ம்ஹ்ம் நான் தர மாட்டேன்" சோகமாக மறுத்தாள்.
"சக்கரை இனிப்பில்லாம எப்படி பந்தி வைக்கிறது? நான் உனக்கு வேற வாங்கி தர்றேன்டி"
"ம்ம் அப்டி எப்படி எனக்குனு வாங்கிட்டு வந்து வேற யாருக்கோ குடுக்குறீங்க?"
கணவனிடம் சண்டையிட்டு கொண்டிருக்கும் நேரமே, "எம்மா இந்த வெத்தலை பாக்கு எங்க வச்சிருக்க?" இளங்கோவன் குரல் வெளியில் கேட்டது.
"நான் வந்து எடுத்து தர்றேன் தாத்தா" தன்னை முறைத்து சென்ற மனைவியை பார்த்து சிரித்துக்கொண்டவன் அவளோடு தானும் சமையலறை வந்தான்.
தேவா உள்ளே வந்த நேரம் பைரவி வெற்றிலை பையோடு வர, அவளிடமிருந்து வாங்கி, "நீ மேல இருக்க ஸ்வீட்ட எடு"
தாத்தாவிடம் சென்று, "பாக்கு, சுண்ணாம்பு எல்லாம் உள்ளையே இருக்கு தாத்தா" அவரிடம் கொடுத்து மீண்டும் சமையலறை வர, அவன் முகத்தையே பார்க்காமல் அவன் கையில் இனிப்பை திணித்து வெளியேறவிருந்த மனைவியின் வயிற்றோடு பிடித்து அப்படியே சமயலறையினுள் இழுத்து சென்றான்.
"சக்கரை சக்கரை... காரமான சக்கரை" வாஞ்சையாக மனைவியை திட்டி ஒரு சிறு இனிப்பை மனைவிக்கு ஊட்டிவிட்டு, "என் சக்கரைக்கு அப்றம் தான் எதுவும்" எதிர்பாராத நேரம் கன்னத்து முத்தம் ஒன்றை கொடுத்து வெளியேறியிருந்தான்.
சிவப்பேறிய கன்னங்களையும் சிரித்த ஆதாரங்களையும் சரி செய்து வெளியில் வரவே பைரவிக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது. பந்தியில் சென்று இனிப்பை கொடுத்து கொட்டகைக்கு சென்றாள்.
வழக்கம் போல தனியாக செல்லாமல் வீட்டின் சிறுவர்கள் அனைவரையும் அழைத்து சென்றிருந்தான் தேவா. மூன்றாக இருந்த காளைகள் இப்பொழுது எண்ணைக்கையில் வளர்ந்து பத்து காளைகளாக இருந்தது.
குழந்தைகள் ஆளுக்கு ஒரு பக்கமாக இருக்க அவர்களுக்கு அருகில் ஒவொருவரை நிறுத்தியிருந்த சற்று தொலைவில் நின்று அனைவரையும் பார்த்தான் தேவா.
"ஷ்ரவன் மாட்டுக்கு முன்னாடி வா பின்னாடி போகாத" தந்தையாய் திருத்தம் கூறி கையை பின்னால் கட்டி நின்றான்.
பயம் அறியாத வயதிலே பிள்ளைகளுக்கு மாட்டை காட்டி பயத்தை திணிக்காமல் பின்னால் நின்று ஊக்கம் கொடுப்பான். அதுவே அவர்களுக்கு பழகியிருக்க முதலில் பயந்த பெரியவர்கள் தேவாவின் அணுகுமுறையில் நம்பிக்கை வந்து பயத்தை தளர்த்தியிருந்தனர்.
மாடு கட்டியிருந்தால் மட்டுமே பிள்ளைகளை அருகில் விடுவான், அதிலும் அருகில் ஆட்கள் மூவர் நாள்வரை வைத்தே. மற்ற நேரம் யாரும் இன்றி பிள்ளைகளை காளைகள் அருகில் செல்ல அனுமதிப்பதில்லை.
"ப்பா... ப்பா... காளையன் பழம் நோ சொல்றான் ப்பா" ஒரு வாழைப் பழத்தை காளையன் வாயினருகே கொண்டு சென்று வம்படியாக உண்ணுமாறு நின்றான் வேதவ். காளையனோ அசராமல் பெரிய கோவில் தூணை போல் கம்பீரமாக அசையாது நின்றான்.
"மாமா என்ன பாத்திங்களா நான் குடுத்த பழத்தை லிங்கம் வாங்கிட்டான்" உல்லாசமாக கை தட்டி ஆர்பரித்தான் குணாவின் ஐந்து வயது மகன்.
"சிங்கம்டா நீ" தேவா சிரிக்க, தந்தையின் வேட்டியை பிடித்து இழுத்தான் வேதவ்.
கீழே குனிந்து என்ன என தேவா கேட்க, "பருத்தி கொட்டை தாங்க" என்றான் குட்டி கண்களை சிமிட்டி.
அப்படியே அவன் அன்னையின் மறு உருவம் இவன். ஒரே கண் அசைவில் பைரவி தேவாவை மயக்குவது போல் இவனும் மயக்கிவிடுவான்.
இப்பொழுது கூட அதிகாரம் தூள் பறக்க திமிராக கேட்கும் மகனை பார்த்து சிரிப்பு தான் வந்தது. தேவாவின் முட்டி வரை தான் உயரமிருப்பான் ஆனால் தந்தையை விட பெரியவன் தோரணையில் இருக்கும் செயல்கள்.
இளங்கோவன் பாதி, தேவா பாதி.
"போய் வாழைப்பழத்தை குடுடா... வந்துட்டான் எனக்கு ஆர்டர் போட" மகன் தலையில் வலிக்காமல் கொட்டினான்.
அந்த சிறு வாண்டோ தூசு போல் தட்டிவிட்டு, "ப்பா வாங்க நான் காளையனுக்கு பருத்தி கொட்டையும், பேரீச்சம்பழமும் குடுக்கணும், மாடு குளிக்கவே இல்ல இன்னும்" என்றான் மீண்டும் தந்தையின் தினசரி வழக்கத்தை நினைவுபடுத்தி.
"அடேய் அலாரம்... எனக்கு தெரியும்டா" தானாய் எதையும் செய்யும் பழக்கம் கொண்ட தேவாவிற்கு மகன் கட்டளைபோடுவது எப்பொழுதும் பிடிக்காது.
பிடித்தாலும் முறைத்துக்கொண்டு மகனை பார்த்தான். வேதவிர்க்கு தந்தையின் எண்ணம் புரிய தந்தையின் வேட்டியை பிடித்துக்கொண்டான். "வாங்க ப்பா" என.
"வேட்டிய புடிச்சு இழுத்தாலும் உள்ள டிரௌசர் போட்ருக்கான்டா இந்த தேவா" அரக்க சிரிப்பு ஒன்றை தேவா கொடுக்க தந்தையின் வேஷ்டியை விட்டு தந்தையின் கை பிடித்து அவனது உடலை ஏணியை போல் எண்ணி தந்தை கழுத்தோடு கட்டிக்கொண்டான் இறுக்கமாக.
மகனது விளையாட்டில் தந்தையானவன் அவனை பிடித்து கீழே நிறுத்த பார்க்க, மகனோ அவ்விடமே அதிரும் வகையில் வெற்றிக்களிப்பில் சிரித்தான்.
இருவரையும் பார்த்து சிரித்த பைரவி மீதமிருந்த வாழைப்பழங்களை காளையனுக்கு கொடுக்க போக அவளிடம் சமத்தாக வாங்கிக்கொண்டான் காளையன்.
இதை பார்த்த வேதவ் தந்தையிடமிருந்து இறங்கி, "அம்மா நானு" என ஓட, இப்பொழுது அவனை தூக்கி தோளில் போட்டுக்கொண்டான் தேவா.
"அவன் என் தம்பிடா... என் சொல் பேச்சு கேட்டு என் பொண்டாட்டி குடுத்தா தான் சாப்பாடு வாங்குவான். நீ குடுத்தாலாம் வாங்க மாட்டான்"
"நான் குடுப்பேன்... நான் குடுப்பேன்... ம்மா ம்மா" செல்லம் கொஞ்சி அன்னையை அழைத்தான். தேவா தான் விடவில்லையே.
அவனை கேலி செய்தே கையிலே வைத்துக்கொண்டான்.
குழந்தைகள் அனைவரையும் அப்புறப்படுத்தி ட்யூப் கொண்டு காளைகளை குளிப்பாட்ட, தந்தைக்கு உதவி செய்கிறேன் என்னும் பெயரில் தானும் குளித்து தந்தையையும் குளிப்பாட்டிய பிறகே நிம்மதியானான். ஆடிய ஆட்டத்தில் சிறிது சோர்வு தட்ட, தந்தையில் கைகளிலே தஞ்சமடைந்தான் வேதவ்.
"ப்பா... பசிக்கிது ப்பா" என்றான் தேவா கழுத்தில் முகம் புதைத்து.
மகனின் சோர்ந்த முகத்தை பார்த்து, "ட்ரெஸ் மாத்திட்டு சாப்பிடலாம்" என்றான் முதுகை வருடி.
சரி என தலையை ஆட்டி தேவா கழுத்தை கட்டிக்கொள்ள வீட்டினுள் நுழைந்தவனை பார்த்து, "தேவா நீயும் பைரவியும் தான் இன்னும் சாப்பிடல" என்றார் நாயகி.
"டிரஸ் மாத்திட்டு வர்றேன் ம்மா" என மகனை அழைத்து அறைக்குள் நுழைய அவனை தொடர்ந்து கையில் தட்டோடு வந்தாள் பைரவி.
"ம்மா ஆஆ..." மகன் ஆ காட்ட சிரிப்போடு அவனுக்கு பைரவி ஊட்ட, தேவா உடை மாற்றிவிட்டான்.
கொஞ்சமே உண்ட வேதவ் உறக்கத்தில் வீழ, அவனை தொந்தரவு செய்யாது தன்னுடைய சட்டையை அவிழ்த்து பைரவிடாயின் ஆ காட்டினான் தேவா. "நீங்களா சாப்பிட மாடீங்களோ" விளையாட்டாக கேட்டாலும் உணவை பைரவியின் கைகள் தன்னாலே ஊட்டிவிட்டது.
அதற்காக தானே அவள் எடுத்தும் வந்தது.
"அது என்னன்னே தெரியல சக்கரை... உன் கைல இருந்து சாப்பிட்டா அது தனி சுவையா இருக்கு"
"இதே தான ஆச்சிகிட்டயும், அத்தைகிட்டயும் சொன்னிங்க"
"அது பாசம்டி... இது காதல். அளவற்ற காதல்" கிசுகிசுப்பாக கூறியவன் மனைவி இதழ் நோக்கி குனிய முகத்தை திருப்பிய பைரவியின் செயலில் ஈர முத்தம் கன்ன கதுப்புகளுக்கு இடம் பெயர்ந்தது.
"ப்ச்" மனைவியை முறைத்தான் தேவா.
விழி விரித்து அவளும் முறைத்தாள், "எல்லாரும் வெளிய தான் இருக்காங்க... கதவும் திறந்துருக்கு" தலையை ஆட்டி அவளிடமிருந்து உணவை வாங்கி அவளுக்கே ஊட்டினான்.
"ரொம்ப டயர்டா இருக்கியே சக்கரை... நான் மட்டும் போயிட்டு வரவா ஆஸ்ரமதுக்கு?" கதவை அடைத்த பைரவி தேவா அருகில் வந்து அமர்ந்து அவன் இடையோடு அணைத்துக்கொண்டாள்.
"ம்ம்ஹ்ம் நானும் வருவேன். பசங்களையும் கூட்டிட்டு போகலாம்"
"அவங்க வேணாம். பாரு இப்போவே எப்படி தூங்குறானு. வெள்ளன எந்திரிச்சு அசத்தில இருகாங்க"
"இல்லங்க கஷ்டம் நஷ்டம் எல்லாம் அவங்களுக்கும் தெரியனும். எல்லாமே ஈஸியா கெடைக்கிது, லைப் இவ்ளோ தான் போலனு நினைச்சுட்டு கூடாது"
"சின்ன பசங்கடி. இப்ப சொன்னாலும் புரியாது"
"இது தான் தப்பு. இந்த காலத்து பசங்களுக்கு எல்லாமே நாம சொல்லாமலே புரியுது. கிருஷ்ணாக்கு இப்போவே நல்லா புரியிதுங்க. வேதவ் அப்டியே உங்கள மாதிரி. எல்லாமே தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே காட்டிக்கிறான். எல்லாத்தையும் பழக்கி விடலாம்.
குடுத்து சாப்பிடணும், சாப்பாட காக்க வைக்க கூடாது, ருசியான சாப்பாடு எல்லாருக்கும் தினமும் கிடைக்கிறது இல்லனு எல்லாமே தெரியனும் அவங்களுக்கு"
"என் பசங்கடி அவங்க. சாப்பாடு அவ்ளோ ஈஸியா வர்றது இல்லனு பொறந்ததுல இருந்தே பாத்துட்டு தான் இருக்காங்க. வறுமையை காட்ட கூட்டிட்டு போகலாம். ஆனா ஒரு மணிக்கு மேல தான் போகணும். அது வர கொஞ்சம் டிரஸ் மாத்திட்டு ரெஸ்ட் எடு"
மனைவி நெற்றியில் முத்தமிட்டு கதவருகில் சென்றவன் சென்ற வேகத்திலே மீண்டும் வந்து மனைவியின் தாடையை பற்றி இதழை சிறை செய்தான்.
ஒரு நிமிடம் நீண்ட அந்த முத்தத்தை நிராகரிக்க மனம் வராமல் கண் மூடி இழைந்தவளது சோர்வான உடலுக்கு தெம்பூட்டியது அவன் அணைப்பும், முத்தமும். முத்தம் முற்று பெற்று பிரிய அவள் நெற்றியில் முட்டி, "இனிக்கிறடி நாட்டுச்சக்கரை" வழக்கம் மாறாத பாராட்டையும் வைத்து சென்றுவிட்டான் காதல் கணவன்.
உடை மாற்றி வந்த பைரவிக்கு உறக்கம் வந்தாலும் வீடு முழுதும் ஆட்களை வைத்து தூங்க மனம் வரவில்லை. உறவினர்களோடு கலந்து பொழுது இனிமையாக சென்றது. குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் அனைவருக்கும் இரு இரு குழந்தைகள் பிறந்திருக்க, வீடே ஜெகஜோதியாக காட்சியளித்தது.
எங்கும் சிரிப்பு சத்தமும் கேலி பேச்சும் மட்டுமே. வரவேற்பறையில் முற்றத்திலும் ஆங்காங்கு ஒருவர் அமர்ந்து சிலர் படுத்து என பேச்சுக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சமே இல்லாமல் செல்ல, நேரமும் வேகமாக சென்றது.
வீட்டினுள் பரபரப்பாக வந்த தேவா மனைவியிடம், "பைரவி கிளம்பலாம் வா"
மனைவியிடம் கூறி பெரியவர்களை பார்த்து, "ஆஸ்ரமம் வர போயிட்டு வர்றோம்... மதிய சாப்பாடுக்கு அங்க சொல்லிருந்தேன்" என்றான் அனைவருக்கும் பொதுவாக.
"ஏன்டா இங்க தான் ஊரையே கூட்டி சாப்பாடு போட்டுட்டியே இன்னும் என்ன தானம் தர்மம்?" என்றார் அவன் தந்தை.
"இங்க ஊரையே கூட்டி விருந்து வச்சது பாசத்துக்கு. உண்மையான தானமே இனி தன் ப்பா... இருக்குறவங்களுக்கு குடுக்குறத விட இல்லாதவர்களுக்கு குடுத்தா தான் புண்ணியம். வர்றிங்களா நீங்களும்?"
ராஜரத்தினம், "நான் வரல ப்பா. நீங்க போயிட்டு வாங்க" மகனின் முன்னேற்றம், செயலில் இருக்கும் தெளிவு எல்லாம் தந்தையை அனைத்திலும் வாயடைக்க வைத்தது. இப்பொழுதை போல.
வீட்டினர் அனைவரிடமும் கூறி குடும்பத்தோடு தேவா ஆஸ்ரமம் சென்று அவர்கள் கையாலே உணவை பரிமாறி அவர்களோடே தானும் அமர்ந்து உண்டு மன நிறைவோடு இல்லம் வந்தனர்.
வேதவ் என்ன நடந்தது என்றே தெரியாமல் மகிழ்ச்சியாக முன்னிருக்கையில் அமர்ந்திருந்த அன்னையிடமும், பின்னிருக்கையில் இருந்த சகோதரியிடமும் மாறி மாறி தாவி ஆடிக்கொண்டே வந்தான்.
தந்தை முகத்தையே கிளம்பியதிலிருந்து ஏதோ கேட்கும் வேட்கையோடு வந்தாள் கிருஷ்ண ஜீவனி.
மகளை அடிக்கடி பார்த்த தேவா சிரிப்போடு மக்களிடம் கேட்டான், "என்னடா அப்பாகிட்ட கேக்கணும்?" என்று.
"அங்க நாம சாப்பிட்டோம்ல ப்பா சாப்பாடு. அது எப்படி ப்பா இருந்துச்சு?"
"அந்த சாப்பாடுக்கு என்னடா நல்லா இருந்துச்சே" என்றான் தந்தை. பைரவிக்கும் மகளது கேள்வி விளக்கிவிட கணவனை பார்த்தாள்.
"அப்பா நோ லைஸ்... நீங்க தானே சொல்லிருக்கீங்க? என் பக்கத்துல சாப்பிட்டால ஒரு பொண்ணு அவளும் அதே தான் ப்பா சொன்னா. ஆனா அந்த சாப்பாடு சுத்தமா நல்லா இல்ல. ஏன் பொய் சொல்றிங்க எல்லாரும்?"
உணவு நன்றாக இல்லாவிடினும் தனக்காக இலையில் வைத்த உணவை வீணாக்காமல் முழுதாக உண்ண வேண்டும் என்பது தேவா மற்றும் பைரவி சொல்லி கொடுத்து வார்த்தை. உணவு ஒவ்வாமையை தந்தாலும் ஒரு பருக்கை கூட வீணாக்காமல் கிருஷ்ண ஜீவனி உண்டு முடித்தாள்.
மனைவியை பார்த்து சிரித்த தேவா, "ஏன் சாப்பாட நானே அரேஞ் பண்ணலன்னு கேட்டியே... இதுக்காக தான்" என்றவன் மகளிடம் திரும்பி மெல்ல சிரித்தான்.
"உனக்கு எது வேணும்னாலும் அப்பாகிட்ட இல்லனா அம்மாகிட்ட கேக்குறலடா. அதே மாதிரி எல்லாருக்கும் அம்மா அப்பா இருக்க மாட்டாங்க கிருஷ்ணா. அங்க இருக்க பசங்களுக்கு அம்மா அப்பா இல்ல. அங்க குடுக்குற சாப்பாடை தான் சாப்பிடுவாங்க, சாப்பாடு குடுக்குற நேரத்துல தான் சாப்பிடுவாங்க.
எல்லா நேரமும் வயிறார சாப்பிடுவாங்கணும் சொல்ல முடியாது. இருக்குறத குறை சொல்லாம சாப்பிட்டு, சந்தோசமா இருக்க பழகிட்டாங்க. அத தான் இன்னைக்கு நீயும் பாத்த" தந்தை கூறி முடித்ததும் மகளிடம் சில நிமிடங்கள் அமைதி உண்டானது.
பைரவி மகளை அடிக்கடி திரும்பி பார்க்க என்ன நினைத்ததோ அந்த வாந்தி இருக்கையில் எழுந்து நின்று அன்னையின் கழுத்தோடு பின்னிருந்து கட்டி பைரவி கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
அதே போல் தந்தைக்கும் செய்து அப்படியே நிற்க வாகனத்தை ஓரமாக நிறுத்தி மகளை ஒரே கையில் முன்னுக்கு இழுத்து, "என்னாச்சுடா என் குட்டிக்கு?" என்றான் மகளின் கன்னத்தை ஆதூரமாக வருடி.
"அவங்க அம்மா அப்பா எங்க ப்பா?" என்றாள் சோகமாக.
"தெரியலடா அப்பாக்கு" குழந்தையின் மனதில் இந்த வயதிலே எதிர்மறையான கருத்தை புதைக்க விரும்பவில்லை தேவா.
"அவங்க ஊருக்கு போய்ட்டாங்களா?"
"இருக்கலாம் கிருஷ்ணா" என்றாள் அன்னை.
"பாவம்ல ம்மா அவங்க எல்லாரும்?" பைரவி ஆம் எனவும், "நானும் வேதவ்வும் லக்கி தான். இல்ல ப்பா?" என்றாள் சிரிப்போடு.
மகளின் கன்னத்தில் முத்தமிட்டு, "இல்ல டா. அப்பாவும் அம்மாவும் தான் லக்கி என் கிருஷ்ணா மாதிரி எல்லாத்தையும் புரிஞ்சுக்குற பொண்ணு கிடைக்க" தந்தையின் கன்னத்தில் வளர்ந்திருந்த தாடி குத்த குலுங்கி கிங்கிணி மணியாக சிரித்தாள் செல்ல மகள்.
"அப்பா கூசுது" தந்தையின் முகத்தை தள்ளி வைத்து பெண் குழந்தை சிரிக்க, வேதவ் உற்சாகமாய் அன்னையிடமிருந்து சகோதரியை தள்ளிவிட்டு, "அப்பா எனக்கு எனக்கு" என தன்னுடைய கன்னத்தை தந்தையின் கன்னத்தோடு ஒட்டி இளைத்து வேண்டினான்.
தந்தையானவனும் மகன் சொல்படியே நடக்க மகனின் சிரிப்பு சத்தமும் அதை பார்த்த மகளின் சிரிப்பு சத்தமும் அழகாக வாகனத்தை நிறைத்தது.
நிறைவான மனதோடு அன்றைய நாள் கடக்க, புதிய வீட்டில் அனைவருக்கும் முதல் நாள் இரவு.
நாயகி மகன், பேத்தி, பேரன், மருமகள் என அனைவரையும் நிற்க வைத்து சூடம் தடவி பொருத்தி அவர்களுக்கான அறைக்குள் சென்றுவிட்டார். மற்றவர்கள் அனைவரும் அடுத்த நாள் வேலை இருக்க அவரவர் இல்லம் நோக்கி சென்றுவிட்டனர் கணவன் ராஜரத்தினதோடு.
குழந்தைகள் இருவரையும் அவர்களுக்கென பைரவி பார்த்து வடிமைத்திருந்த குழந்தைகள் அறையில் படுக்க வைத்து தங்களது அறையில் நுழைந்தாள் பைரவி.
தோட்டத்தின் அருகே இருந்த காரணத்தினால் ஜன்னலோரம் அமைத்திருந்த கொசு வளையத்தையும் தாண்டி உள் நுழைந்திருந்த கொசுக்களை அடிக்கும் வேளையில் தேவா இருக்க, பைரவி வந்ததை பார்த்தவன்,
"எப்படி சக்கரை அந்த குட்டி வீட்டுல கொசு வளையும் இல்லாம இத்தனை வருஷம் சமாளிச்சோம்... ஒரு வேலை இப்போ ஆடம்பரம் கூடிடுச்சோ?" சந்தேகமாய் கேட்ட கணவனை பின்னிருந்து அனைத்து அவன் முதுகில் சாய்ந்து கண் மூடி கிறங்கினாள்.
"எந்த வித்தியாசமும் இல்ல. அப்போவும் முழிச்சிருந்து எங்களுக்காக அடிக்கடி கொசு அடிச்சிட்டு இருப்பிங்க. இப்பவும் அதே தான்" என்றாள் அவனுள் இன்னும் புதைந்து. மனைவி பக்கம் திரும்பிய தேவா அவளை தனக்கு முன்னாள் நிறுத்தி நெஞ்சோடு அணைத்தான்.
"பசங்க தூங்கிட்டாங்களா?"
"ம்ம் ஏதோ ஒரு ஆர்வத்துல தனியா படுத்துக்குறேனு சொல்லிட்டாங்க. நாளைக்கு பாருங்க கனவுல சாமி கண்ணா குத்துச்சு வயித்த குத்துச்சுனு கதை அடிக்கும் ரெண்டும்"
மனைவி சிரிக்க, "இப்ப தான் சக்கரை எனக்கு சந்தோசமா இருக்கு. மனசுல ஒரு ஓரத்துல அரிச்சிட்டே இருந்தது சரியாகிடுச்சு. என் பொண்டாட்டி ஆசைப்பட்ட ஒரு வீடு. நான் ஆசைப்பட்ட ஒரு குடும்பம். நல்லா இருக்குல்ல?" கண்ணை திறவாமல் ஆமாம் என்றாள்.
"ஹ்ம்ம் ஆனா இன்னும் ஒண்ணே ஒன்னு தான் பாக்கி" பெரு மூச்சு விட்டான்.
"என்னவாம்?"
"என் பொண்டாட்டி என்ன கல்யாணம் பண்ணிக்கிற அன்னைக்கு நான் ஸ்டேஜ்ல நிக்க, அவ தொட்டதெல்லாம் தூள் பறக்குது மம்பட்டியான்-னு ஆடிட்டே வரணும்னு ஆசை பட்டேன்"
"ஐயோ பாவம், நிசாசையா போச்சே" போலியாக பாவப்பட்ட சிரித்தாள்.
மனைவியை தன்னிடமிருந்து விலக்கி, "உனக்காக எவ்ளோ பெரிய வீடு கட்டிருக்கேன், எனக்காக ஒரே ஒரு டான்ஸ் ஆடு சக்கரை" கெஞ்சினான் அவள் நாடி பிடித்து.
அவனை கையை தட்டிவிட்டு, "நான் ஆட மாட்டேன். வேணும்னா இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு அவ கூட சேர்ந்து ஆடுங்க" தேவாவை விட்டு விலகி வந்து படுக்கையை தயார் செய்தாள் பைரவி.
"உன்ன விட்டு போக மாட்டேன்னு தைரியமா சுத்துறியாடி? மவளே இப்போ நினைச்சாலும் பொண்ணுங்க க்யூல நிப்பாங்க" என்றான் போலியான கோவத்தோடு.
"ஆல் தி பெஸ்ட் புருஷரே. கல்யாணத்துக்கு மறக்காம பத்திரிக்கை வச்சிடுங்க" முதுகு காட்டி நிற்கும் மனைவியின் இடையை அசுர வேகத்தில் திரும்பியவன் அவள் தாடையை பற்றி முகத்திற்கு நேராக நெருங்கினான்.
கண்கள் கோவத்திற்கு பதிலாக ஆசையில் சிவப்பேறியிருந்தது, "ஆடுடி எனக்காக" பற்களை கடித்தான்.
அவன் கண்கள் கொடுத்த ஆசையில் உடல் சிவக்க அவன் உடலோடு மேலும் ஒட்டி நின்றாள் தேவாவை போதையேற்றவே, "முடியாது" என அழுத்தமாக மறுத்து.
ஒரு இன்ச் இடைவெளியே விட்டு நிற்கும் மனைவியின் சிவந்த கன்னங்களில் பற்தடயம் பட கடித்த தேவா, "சக்கரை... எனக்காகடி" குரலில் இருந்த கணம் வார்த்தையில் இல்லை.
வலித்தாலும் வலியை அவள் காட்டவில்லை, "லஞ்சம் குடுக்கவா?" கேட்டாள் மாறாக. அவனுக்கு பிடித்த தேர்ந்தெடுக்கமாகவே இருந்தாலும் மம்பட்டியான் ஆசையை தூண்டியது.
"இல்ல இல்ல நீ ஆடு" என்றான் பிடிவாதமாக.
"நான் சொன்னது தான் இல்லனா உங்களுக்கு நஷ்டம்" தேவாவிடமிருந்து பைரவி விலக, மீண்டும் கைகளினுள்ளே இழுத்து வைத்துக்கொண்டான் மனைவியை.
"இல்ல லஞ்சம் கொடு" இறங்கி வந்த கணவனின் ஆசையை பூர்த்தி செய்ய கால்களை எம்பி அவன் கழுத்தோடு கைகளை மாலையாக்கி கணவனது இதழ்களை சிறை செய்திருந்தாள் பைரவி.
அளவாக தொடங்கிய அந்த முத்தம் அழகாக ஆழம் நோக்கி பயணிக்க, தேவாவின் கைகள் மெல்லிய அவளது டீ-ஷர்ட்டை தாண்டி அவளது வெற்று இடையில் மெல்ல பயணிக்க மெல்லிய கைகள் கதவை தட்டும் சத்தம் வந்து இனிய பொழுதை கலைத்தது.
பிரிய மனமில்லாமல் பிரிந்த தேவா மனைவியின் உடையை சரி செய்து, "ஏன்டி உன் பக்கத்துல நான் வந்தாலே உன் பிள்ளைகளுக்கு மூக்கு வேர்த்துடுது?" புலம்பிக்கொண்டே கதவை திறக்க தூக்கம் வழிந்தோட கண்களை கசக்கி தன்னுடைய முகம் பார்த்து நின்ற குழந்தைகளை பார்த்து சிரிப்பு பிறந்தது.
"அப்பா பயமா இருக்கு" மகன் தந்தையின் கைகளில் சரண் புக, மகளோ தந்தையின் கால்களை கட்டிக்கொண்டாள்.
இருவரையும் கைகளில் அள்ளி படுக்கைக்கு வர மகனை மனைவியிடம் கொடுத்து மகளை தன் நெஞ்சோடு அணைத்து மறக்காமல் எம்பி மனைவிக்கு நெற்றி முத்தம் கொடுத்து, "குட் நைட் சக்கரை" உறக்கத்தில் ஆழ்ந்தான் சிரிப்போடு.
கணவனை பார்த்துக்கொண்டே இருந்த பைரவி எத்தனை அழகான வாழ்க்கை கிடைக்க காரணமாய் இருந்த இறைவனை இறுதியாக அந்நாளில் வழிபட்டு மகிழ்ச்சியாக துயில்கொண்டாள்.
ஆனந்தத்தில் திக்குமுக்காடடும் அந்த அழகு குடும்பம் ❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro