Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ஆனந்தம் - 19


மார்கழி மாத குளிர்காற்று உடலை உறையவைத்து சில்லிட்டாலும், உறக்கம் வராமல் அமைதியாக அமர்ந்திருக்கும் காளையனை விழி அகலாமல் பார்த்தான் தேவா. இன்னும் மூன்று மணி நேரத்தில் மாட்டை வாடிவாசலுக்கு அழைத்து செல்ல வேண்டும். 

அது வரை உறக்கம் வந்தாலும் வராதது போல் வாடை காற்றை நுகர்ந்துகொண்டே மாட்டுக்கு காவலாய் நிற்க வேண்டும். அலங்காநல்லூரில் தெரிந்த ஒருவரின் வீட்டில் தான் இருந்தான் தேவா மற்றும் அவன் நண்பர்கள். 

ஆனாலும் பாதுகாவலன் ஒருவன் நிச்சயம் காளையனுக்கு தேவை. காரணம் சில மாதங்கள் முன்பு புலி வேந்தனுக்கு ஏற்பட்ட நிலை தன்னுடைய காளையனுக்கும் ஏற்பட்டு விட கூடாதென அச்சம். 

வலியை திறந்து சொல்ல முடியாமல் அன்று புலி வேந்தன் அதற்றிய முறையும், ம்மா ம்மா என அவ்விடமே ஓசையின்றி காற்றாடிய நேரமும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நெஞ்சை உலுக்கும். 

"என்னய்யா நீ தூங்கலையா?" சற்று தள்ளியிருந்த நார் கட்டிலில் படுத்திருந்த அவன் ஊர்க்காரன் ஒருவன் தலையை மட்டும் உயர்த்தி கேட்டான். 

"இல்லடா நீ படு விடியால எழுப்பிவிடுறேன்" எனவும், 

"மணி என்ன?" கேட்டான் அவன். 

கைபேசியை எடுத்து பார்த்த தேவா இரண்டரை என்கவும் மீண்டும் அவன் உறக்கத்திற்கு செல்ல நேரத்தை பார்க்க கைபேசியை எடுத்த தேவா அதில் இருந்த மனைவியை பார்த்து சிரிப்போடு ரசிக்க துவங்கினான். 

அன்று காளையனை இறுக்கமாக கட்டியிருந்த பைரவின் படம். அவளோடு காளையனும் அழகாக தெரிய தொடு திரையின் லாக் ஸ்கிரீனாக வைத்துவிட்டான். 

பெற்றோர் அன்று கிளம்பும் முன்பே தேவா காளையை அழைத்து அலங்காநல்லூர் செல்ல வேண்டிய கட்டாயம். ஆதலால் கையேடு அதற்கு ஆரத்தி எடுத்து சிறு பூஜை போல் செய்ய ஏற்பாடுகள் துவங்கியது. 

அன்னைக்கு இதெல்லாம் பிடிக்காதென அவரை அதிகம் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் அவரோ அவன் அழைப்பதற்கு முன்பே விடயம் கேள்விப்பட்டு பூஜை நடக்கும் முன்பே வந்துவிட்டார். 

அதிசயித்து போனவன் எப்பொழுதும் போல ஆச்சியின் கையில் சூட தட்டை கொடுக்க, "உன் அம்மை முதல் தடவ வந்துருக்கா அவ கைல குடுயா" என்றார் கடற்கரைதாயம்மாள். 

அன்னையிடம் சிறிய சிரிப்போடு நீட்ட, "பைரவிகிட்ட குடு" என்றார் அவர். 

தேவா மகிழ்ச்சியில் அன்னையை பார்க்க கண் சிமிட்டி ஆதரவு தந்தார் அன்னை. ராஜரத்தினம் தான் அதிசயத்தை பார்த்து போல் மனைவியை பார்த்தார் என்ன நடக்கின்றதென தெரியாமல். 

"பைரவி..." அவளை அழைத்து கையில் கொடுக்க பெரியவர்கள் இருக்கும் பொழுது தான் எப்படி என தயங்கினாள் அவள். 

"வாங்கு ம்மா" என்றார் இளங்கோவனும். 

அதற்கு மேல் மறுக்க முடியாமல் வாங்கியவள் இறைவனை வேண்டி காளையனுக்கு சூடம் ஏற்றி நெற்றியில் பொட்டு வைக்க செல்ல காளையனை இறுக்கமாக பிடிக்க பார்த்த ஆட்களை வேண்டாம் என தலை அசைத்தான் தேவா. 

புரியாமல் அவனை மற்றவர் பார்க்க அவளோ தயக்கமே இல்லாமல் அதன் அருகில் சென்று நெற்றியில் திலகமிட்டு அதன் முகத்தையும் அவள் ஆதூரமாக வருட வியந்து போயினர் அனைவரும். 

தேவா இதழ்களிலோ உடல் குலுங்கும் மெல்லிய சிரிப்பு. 

பிறகு தேவா காளையனுக்கு மாலை அணிவிக்க காளையை வாகனத்தில் ஏற்றும் வேலை நடந்துகொண்டிருந்தது. புலி வேந்தனை சென்று பார்த்து வந்தவன் தாத்தாவிடம் கூறி அதை அவர் வீட்டில் ஒரு வாரம் வைத்திருக்க கூறி மனைவியிடம், "தாத்தா வீட்டுல இரு பைரவி, ஆச்சிகிட்ட சொல்லிட்டேன்" என்றான். 

அவள் சரி என்க நாயகி தடுத்தார், "வீட்டுக்கு வரட்டும் தேவா. பைரவி வேலைக்கு போயே ரொம்ப நாள் அச்சுல?" என்றார். 

குடும்பமே குழம்பியது நாயகியின் அந்த நடவடிக்கையில், "ம்மா ஓவர் நைட்ல இவ்ளோ நல்லவங்களாக கூடாது ம்மா" என்றாள் இஷா குழப்பமாக. 

"சும்மா இருடி. தேவா பைரவிய நாங்க கூட்டிட்டு போறோம். நீ நிம்மதியா போய்ட்டு வா" என தைரியமூட்டி அனுப்பி வைக்க அவனும் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி மனைவிக்கு சிறு தலை அசைபோடு சென்றான். 

ஒரே நாளில் எல்லாம் சரியானது போல் இருந்தது. நேற்று பொங்கல் சீர் கொடுக்க வந்த கண்ணன் சீதாவிடம் அன்னை பாசமாக நடந்தது கேள்விப்பட்டு மேலும் நிம்மதியடைந்தான்.

வீட்டில் இருந்த பிரச்சனைகள் முடிந்திட வந்த வேலையை நிம்மதியாக கவனிக்க முடிந்தது. அன்று விடிந்ததும் முதலில் அவனுக்கு அழைத்தது அவன் மனைவி தான். காளையனை பற்றி கேட்டு தேவாவிடம் சுருக்கமாக பேசி மறக்காமல் காலை உணவை அருந்த கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாள்.  

காலை எழுந்தவுடன் காளையை ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு செல்ல முதலில் மாட்டின் உயரம், பற்களின் உயரம், வயது, தேவாவின் விபரங்கள் என பரிசோதிக்கப்பட்டு பிறகு மாட்டிற்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. 

அதில் மாட்டின் கொம்பு, மாட்டிற்கு நோய்கள் எதுவும் உள்ளதா என சோதித்து, மருந்து எதுவும் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஆராய்ந்து பிறகே வாடிவாசலுக்கு அனுப்பியிருந்தனர். மாட்டின் எண் நூற்றி அறுபத்தி இரண்டாக பதிவிடப்பட்டிருந்தது. 

அய்யனாரின் ஆட்கள் காளையை இவர்களுக்கு இருவது மாடுகள் பிறகு வந்து நிறுத்தியிருக்க ஒருவன் வந்து காளையனை சுற்றி பார்த்தான் இகழ்ச்சியாக சிரிப்போடு, "மாடு ஒடம்புல இருக்குற வீரம் மனசுல இருக்காது போலயே" எனவும் தேவா சத்தமாக சிரித்து காளையன் அருகே சென்றவன், 

"காளையன் அவன்கிட்ட என்னவோ பேசணுமாம் மாப்பிள்ளை, கயித்த அவுத்து விடு" என்றான் வற்றாத புன்னகையோடு. 

"எங்க அவுத்துவுடு" என்றவன் சற்று தள்ளியிருந்த ஆட்களை அழைத்தான் சத்தமாக, "யோவ் லந்து கூட்டுறான் இவன்" என. 

அவர்களோ உடனே வர, "என்னடா ஊருக்குள்ள நீ பண்ற கூத்து பத்தாதா வெளிய வந்தும் ஏழரையை கூட்டிட்டு நிக்கிற?" என சண்டைக்கு நின்றார்கள். 

"யோவ் இப்ப என்னத்துக்கு நீ இந்த ஆட்டம் ஆடுற? நான் சண்டைக்கு வந்தத நீ பாத்தியா?" என்றான் தேவா பொறுமையாக. 

"சண்டைக்கு வராமையா இவன் எங்களை கூப்டான்? ஏன்டா தனியா இருக்கவன்கிட்ட உங்க வீரத்தை காட்டுறிங்க?" 

"தனியா இருக்கவனா? அன்னைக்கு நடு ராத்திரி உங்க அத்தனை பேர் முன்னாடி மயிலைப்பண்ணை அடிச்சப்போ என்ன நொட்டிகிட்டு இருந்தீங்களாம்?" கோவம் கொப்பளிக்க துவங்கியது தேவாவுக்கு. 

உடனே ஒருவன் தேவாவின் சட்டையை பிடிக்க தேவாவும் பதிலுக்கு பிடிக்க அந்த இடமே ஒரே நொடியில் சண்டை மயமானது. அங்கிருந்தவர்களுக்கு சில காவல் துறை அதிகாரிகளும் வந்து சண்டையை தடுத்து நிறுத்தினர். 

அப்பொழுதும் வாய் தகராறு ஓயாமல் இருந்தது, "உன் மாடு இன்னைக்கு மண்ண கவ்விட்டு வரும் அதுக்கு அப்றம் இருக்குடி உனக்கு ஊர்ல" என்றான் ஒருவன் ஏளனமாக. 

தேவா வந்த ஆத்திரத்தில் அவன் சட்டையை பற்றி அவன் காதில் கேட்குமாறு, "மருந்தை குடுத்து மாட்ட கூட்டிட்டு வந்த தைரியமா?" எனவும் அவன் முகமோ வெளிறியது. 

அந்த முகமாற்றத்தில் சந்தேகம் உறுதியாக வெற்றி புன்னகை தேவாவின் இதழ்களில், "கவலைப்படாத இத நான் வெளிய சொல்ல மாட்டேன்" அவன் சட்டையை உதறி தள்ளிவிட்டான். 

மற்றவர்களை கூரிய பார்வையோடு பார்த்தவன், "உன்னோட மாட்ட புடிச்சு இன்னைக்கு என்னோட வீரத்தை இந்த ஊருக்கே நிரூபிக்கிறேன்டா" 

ஆத்திரமாக சூளுரைத்த நண்பன் சட்டையை பிடித்து இழுத்த வெற்றி, "யோவ் வேணாம் யா" உண்மை தெரிந்து தடுத்தான். 

தேவா அவன் வார்த்தையை சிறிதும் செவிசாய்க்கவில்லை, "சொன்னதை செய்வேன், அப்டி செஞ்சா இனிமேல் இந்த மாடு என்னோடது.. அதுக்கு ஒத்துப்பீங்களா?" அவர்களுக்கோ மாட்டின் மீது அவ்வளவு நம்பிக்கை. 

உள்ளிருந்த ஆள் ஒருவனை பிடித்து மாட்டின் மருத்துவ பரிசோதனையில் தாங்கள் செய்த தவறை மறைக்க இரண்டு லட்சத்தை செலவிட்டு இருக்க அதன் மேல் அதீத நம்பிக்கை. துணிச்சலோடு நின்றனர். 

ஆனால் மாட்டை பற்றிய உரிமை அவர்களுக்கு இல்லையே அய்யனாரிடம் தான் கேட்க வேண்டும் என்ற தயக்கம். அதை சூடு கிளப்பிவிட என்றே, "யோசனை பலமா இருக்கே, பயமோ?" 

"மாட்டை நம்பி நூறு பந்தயம் கூட வைக்க நான் ரெடி, கைய கிழிச்சது மறந்து போச்சாடா?" என்ற கேள்வியோடு அங்கு வந்து நின்றார் அய்யனார் தானே. தேவா பதில் பேசவில்லை. 

"நீ என் மாட்ட புடிச்சா என் மாடு உனக்கு, அதே என் மாட்ட புடிக்கலைனா உன் மாடு எனக்கு" அய்யனாரின் ஒப்பந்தத்தில் திருப்த்தி அடையாத தேவாவின் ஆட்கள் குரலை உயர்த்த தேவா நிறுத்தினான் அவர்களை. 

"ஒத்துக்குறேன்" எனவும் அய்யனார் மீசையை முறுக்கி புன்னகையோடு செல்ல அவரை பின் தொடர்ந்தனர் அவரின் ஆட்கள் அனைவரும். 

குணா, "கேனை மாதிரி பேசுற? போதை குடுத்து மாட்ட வாடிவாசல்ல இறக்குறதே தப்பு, இதுல நீ அத புடிக்கிறேன்னு சொல்ற? குடலை குத்தி கிழிச்சிடும்டா அறிவில்லாதவனே" 

"யோவ், இங்கன ஒன்னும் பூனைய புடிச்சு வெளையாடல, ஜல்லிக்கட்டு மாடு புலிக்கும் சிங்கத்துக்கும் சமம். களத்துல இறங்குனா உசுரே நாமளோடது இல்ல, இதுல மாட்ட வேற குடுக்குறேனு சொல்லிட்டு நிக்கிற... இதுக்கா இம்புட்டு கஷ்டப்பட்டு அத வளத்த?" மற்றொவர் கேட்க எந்த பதிலும் இல்லாமல் ஒரு ஓரமாய் சென்று அமர்ந்தவன் கைபேசி சிணுங்கியது. 

எடுத்து பார்த்தான், பைரவி தான். 

அழைப்பை ஏற்று காதில் வைத்தான், "குணா அண்ணா சொன்னாங்க" எனவும் கோவம் வந்தது அவனுக்கு. 

"ம்ம்ம்" என்றான் மேலும் பேச விருப்பமில்லாமல், இவளும் என்னை நம்பவில்லையா என்ற வருத்தம் அது. 

"இனிமேல் மூணு ஜல்லிக்கட்டு மாடா நமக்கு?" மனைவி குரலில் தெரிந்த சந்தோசம், குதூகலம் தேவாவை புன்னகைக்க வைத்தது. 

"சக்கரை..." ஆசையாக அழைத்தவன் இதழ்கள் புன்னகைக்க தலை வெட்க சிரிப்பில் கவிழ்ந்தது. 

நெற்றியை தேய்த்தவன் பெரும் நிம்மதியோடு, "மாடுகளை நான் கூட்டிட்டு வரப்போ நீ தான்டி அவனுகளுக்கு ஆரத்தி எடுக்கணும்" முழு மனதோடு கூறினான். 

"வெயிட் பண்றேன்" என்றாள் மனதார. 

அதன் பிறகு தேவா எப்பொழுதும் சிரித்த முகத்தோடு தான் இருந்தான். ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பிறகு காளையனை வாடிவாசல் அழைத்து செல்ல கூற கூட்டத்தை பார்த்து இப்பொழுதே திமிர ஆரம்பித்தான் அவன். 

அவன் உடலை வருடிக்கொண்டே, "ஒன்னுமில்லடா" என ஆசுவாசப்படுத்தியே வாசல் வரை அழைத்து சென்றான். 

"எப்பா மாட்ட அவுத்து வுடு, மாட்டுக்காரன் எங்க?" ஒலிபெருக்கியில் குரல் ஒன்று வர, தேவா வாசலை தாண்டி வந்து கயிற்றை பிடித்து நின்றான். 

"அயன்தென்கரை தேவானந்த் மாடு, காளையன் ப்பா... மாட்ட புடிச்சுக்க... மாட்ட புடிச்சுக்க, சோழவந்தான் சிறந்த மாடு, ரெண்டு வருசமா இந்த மாடு யாருக்கும் பிடிபட்டதில்ல, ஒரு ஆள் பிடி" காலையனின் பெயரை கேட்டதும் மாட்டினை பற்றி தெரிந்த பலர் பரணி மேல் ஏறி நின்றுவிட்டனர். 

ஒரு சிலரே தரையில் நின்று காத்திருக்க மாடோ இன்னும் வாடிவாசலை தாண்டவில்லை. 

"சோழவந்தான் பிரசிடெண்ட் வழங்கும் இரண்டாயிரம் ரூபாய், எஸ்.எம்.வி வழங்கும் ஒரு சைக்கிள், ராஜ்மஹல் வழங்கும் ஒரு பட்டுப்புடவை, மதுரை எம்.எல்.எ வழங்கும் ஒரு தங்க காசு, சுந்தரம் பாத்திரக்கடை வழங்கும் ஒரு குடம்" பரிசு பொருட்கள் அடுக்கிக்கொண்டே போக மாடு பிடி வீரர்களுக்கு ஏக சந்தோசம். 

"எப்பா மாட்ட விடு ப்பா..." 

"ஜெய்ச்சிட்டு வாடா காளையா" முதுகில் தடவிக்கொடுத்து கயிற்றை விட்டு அதன் முகுதில் தேவா ஒரு அடி போட கம்பீரமாக மெதுவான நடையோடு தன்னை சுற்றியும் பார்வையை அளந்து வந்த காளையனின் வீரத்தில் திண்டாடி போனது கூட்டம். 

"எப்பா பரணில இருந்து கீழ இறங்கி மாட்ட புடிங்க" 

"பரிசு பொருளை ஏத்துறாங்க, ஒன்றிய செயலாளர் ஐயாயிரம், டாக்டர் விக்டர் மூவாயிரம்" காளையனை முதலில் நெருங்கிய ஒருவன் அதன் திமிர தொட திமிர திமிலை ஒரே அசைவில் உதறி தள்ளி அவனை சாய்த்து அவனை முட்ட போக அந்த இளைஞனோ கீழே படுத்துகொண்டான். 

"எப்பா சூப்பர் மாடு ப்பா, டேய் வால புடிக்காத, எப்பா வால புடிக்காத சொன்னேன், கொம்ப புடி" என்றது ஒலிபெருகியிலிருந்து வந்த குரல். 

அதோடு நில்லாமல் மேலும் இருவர் காளையினை பிடிக்க வர சுற்றி சுற்றி மின்னல் வேகத்தில் அருகில் இருந்தவர் அனைவரையும் தூரம் தள்ளி பின்னால் வந்து நின்ற இருவரையும் பின்னிரு கால்கள் இரண்டையும் வைத்து மிதித்தெரிந்தது. 

"நெருப்பாக மாடு ப்பா, ஆத்தாடி ஆத்தே தீயா ஆடுது ப்பா..." கொம்பை கொண்டு மண்ணை வெட்டி வீச அதனை நெருங்க ஒருவரும் முன்வரவில்லை. 

அனைவரும் பரணி மேல் ஏறி நின்றிட இரண்டு வா என்ற சவாலோடு அசையாமல் சுற்றி இருந்த மாடு பிடி வீரர்களுக்கு அது சவால் விட்ட விதம் தேவாவை பெருமைப்படுத்தியது. 

"எப்பா பசங்களா கீழ இறங்கி வாங்க, இந்த மாட்டுக்கு சிறப்பு பரிசு ஆயிரம் கூட்டிருக்காங்க, மாட்ட பிடிக்கிறவனுக்கு இன்னைக்கு பண மழை தான்" அவரோ உற்சாக படுத்த முயற்சிக்க எவருக்கும் காளையனை நெருங்கும் தைரியம் இல்லை. 

"வாங்க ப்பா, புடிங்க மாட்ட... ஆஹா சூப்பர் சூப்பர், மாடு சூறாவளி டேய். ஒருத்தனையும் நெருங்க கூட விடல" 

சிங்கம் போல் கம்பீரமாக நடந்தவன் சவாலில் வென்றது போல் தலையை குனிந்து கொம்பை காட்டி அழைக்க இறங்கினார் யாரும் இல்லை, 

"தொட்டு பாரு, தொட்டு பாரு... தகிரியம் இருந்தா நெருங்கி பாருன்னு சவால் விட்டு நிக்கிது ப்பா மாடு. அருமையான மாடு... அழகுடா... அழகு. ஆம்பள சிங்கம் கொம்பு வச்ச சிங்கத்தை புடிச்சு பாருடா... நெருக்கி வந்து பிடி" 

"அடேயப்பா... மறுபடியும் பரிசு பொருள் கூடுது இந்த மாட்டுக்கு... அட்வகேட் சிங்கமுத்து வழங்கும் இரண்டாயிரம் ரூபாய், வி.எல் பாத்திரக்கடை வழங்கும் ஒரு அண்டா"

தைரியம் பெற்ற சிலர் இறங்கி வந்து மாட்டை நெருங்க ஒருவரை கொம்பினால் வளைத்து மண்ணில் சாய்த்து அவனை ஒரு மிதி மித்து சுற்றி இருந்தவருக்கு எல்லாம் எச்சரிக்கை கொடுத்தது. 

"மொத்த வீரர்களுக்கும் ஆட்டம் காம்பித்த மாட்டை வெற்றி பெற்றதாக அறிவிக்கிறோம். அயன்தென்கரை தேவா மாடுனா சும்மாவா... மாடு வெற்றி பெற்றது, எப்பா மாட்ட புடிச்சு நகத்திவிடுங்க ப்பா, காளையா வழி விடு ப்பா அடுத்த மாடு வரட்டும்" 

"உரிமையாளர் பரிசுப்பொருட்களை அள்ளிக்கிட்டு போ ப்பா... அற்புதமான மாடு, அடாவடியான மாடு" உடலே சிலிர்த்தது தேவாவிற்கு. 

ராஜாவை போல் நிமிர்ந்து வந்த காளையனை இறுக்கமாக கட்டி, "சிங்கம்டா நீ... உன் வேலை முடிஞ்சது இனி என் வேலை பாக்கி இருக்கு"

நண்பனை பரிசை பெற்றுக்கொள்ள கூறிவிட்டு உடையை மாற்றி அய்யனாரின் காளைக்காக காத்திருந்தான். 

சரியாக காளையும் வந்த நேரம் அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அனைவரும் திணறி போயினர், "மாடு சிறுத்த மாதிரி என்னா வேகம்... ஆம்பளைங்க வந்து புடிங்க ப்பா", கூட்டத்தினுள்ளே நுழைந்த தேவா சரியாக அதன் திமிலை பிடிக்க இரண்டு சுற்று மட்டுமே தாக்கு பிடிக்க முடிந்தது. 

தேவாவை உதறி தள்ளி அவனை முட்ட பார்க்க, அவனோ அதன் கொம்பினை பிடித்தே நொடியில் எழுந்து அதன் திமிலோடு பிடித்துக்கொண்டான். 

மருந்தின் வீரியத்தில் அதன் வேகமோ அசுரத்தனமாக இருந்தது "அப்டி தான் ப்பா, பிடி பிடி விட்றாத" கைகளில் இருந்த காயம் வலிக்க துவங்க, விடவில்லை அவன். 

காளை பல முறை அவனோடு சேர்ந்து சுற்றி சுற்றி தள்ளிவிட பார்க்க தேவாவின் பிடியின் முன்னாள் அந்த காளை தோற்று தன்னுடைய வேகத்தை குறைத்து சமாதானமடைந்தது. 

"மாடி பிடிபட்டது... வீரருக்கு வெள்ளி காசு பரிசு வந்து வாங்கிக்கோ ப்பா" 

தேவாவே மாட்டை வெளியே அழைத்து செல்ல அவனை தீயாக முறைத்த அய்யனார் முன்பு மீசையை முறுக்கி பளிச்சென வெற்றி களிப்பில் தேவா சிரிக்க, அய்யனாரோ வெறியில் வாகனத்தினுள் ஏறி பறந்துவிட்டார். 

நண்பர்களின் ஆரவாரத்தை அடக்கி இரண்டு காளைகளையும் தங்கள் வாகனத்தில் ஏற்றி முழு சந்தோசத்தோடு ஊர் வந்து சேர வழக்கம் போல் இருக்கும் ஆரவாரத்தோடு இணைந்து கொட்டு சத்தமும் வரவேற்றது அவனை. 

"டேய் என்னடா இதெல்லாம்?" சிரித்த தேவா கழுத்தில் ஒரு மாலையை போட மறுக்காமல் ஏற்றுக்கொண்டான் அவன். 

"இதெல்லாம் கேள்வி கேக்க கூடாது மாபிள்ளை, அனுபவிக்கனும்" என குணா தானும் இளைஞர்களோடு சேர்ந்து ஆட ஊரின் நுழைவிலிருந்து தோட்டம் வரை இரண்டு காளைகளையும் இருபுறமும் வைத்து அளப்பறையை கூட்டி நடந்தே வந்தனர். 

மனைவியை எதிர்பார்த்தே வந்த தேவாவின் கண்களுக்கு விருந்தாய் பளிச்சென புடவையில் தன்னுடைய ஆச்சிக்கு பின்னால் நின்றவளை பார்த்து விரிந்தது தேவாவின் புன்னகை. 

"ஏன்டா எத்தனை நாள் சொல்றது ஊர் வழிய நடத்தி கூட்டியார வேணாம்னு செவுல குடுத்து கேக்குறதே இல்ல" 

இளவட்டங்களை திட்டி பேத்தி கையில் ஆரத்தி தட்டை கொடுக்க பெரிய புன்னகையோடு மூவரும் சேர்த்து சுற்றியவள் இரண்டு காளைகளுக்கு திலகமிட்டு தேவாவிற்கு வர, "ரெண்டு காளைக கணக்கு கரெக்ட்டா?" 

மெல்லிய குரலில் கேட்க, மென்சிரிப்போடு அவனுக்கும் வெற்றித்திலகமிட்டு, "மூணு" என திருத்தினாள் மனைவி. 

சிரிப்பை கன்னம் கடித்து அடக்கியவன் அவளை பார்த்த மையல் பார்வையில் வெட்கத்தோடு ஆச்சியோடு மீண்டும் இணைந்துகொண்டாள். 

"ஏலேய் எல்லாருக்கும் சாப்பாடு ஆக்கியிருக்கு வந்து தெம்பா சாப்புடுங்க" கடற்கரைதாயம்மாள் அனைவரையும் அழைக்க அன்று மதிய உணவு அனைவருக்கும் தேவாவின் தோட்டத்து வீட்டில் வைத்து நிறைவாக முடித்திருந்தனர். 

கையேடு ஊர் பஞ்சாயத்தை தேவா கூட்ட மீண்டும் அய்யனாரின் மேல் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 

"இவரு ஜல்லிக்கட்டுக்கு கூட்டிட்டு போன காளைக்கு போதை மருந்து குடுத்துருக்கார்" என செய்தியை போட்டு உடைக்க கூட்டத்தில் பெரும் கூச்சல். 

"என்ன இது, தேவா நீ என்ன சொன்னாலும் அத இந்த கூட்டம் நம்பணுமா? வாடிவாசலுக்குள்ள போகுறதுக்கு முன்ன சோதிக்காம விடமாட்டாங்கனு எங்களுக்கும் தெரியும் ய்யா" 

"தெரியும் நான் சொன்ன கேக்க மாட்டீங்கனு" நண்பனுக்கு கைபேசி மூலம் அழைத்த தேவா அவர்களை வர சொல்ல, புதியவன் ஒருவன் வந்தான் அவர்களோடு. அவன் வந்ததும் சில காகிதங்களை நாட்டாமை திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவரிடம் கொடுத்தான். 

"இவர் கால்நடை டாக்டர். ஜல்லிக்கட்டுக்கு கவெர்மென்ட்ல இருந்து அப்பாய்ண்ட் பண்ண டாக்டர். இவர் தான் அய்யனாரோட காலைய செக் பண்ணி மெடிக்கல் அப்ப்ரூவள் குடுத்தவர்" 

தேவா கூறியதன் அனைத்து ஆதாரங்களும் அவன் ஒப்படைத்த காகிதங்களில் இருந்தது. 

அய்யனார், "ஆமா இப்ப அதுக்கு என்னங்குற?" குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் அய்யனார் முந்திக்கொண்டு தேவாவிடம் சண்டைக்கு வந்தார். 

"நில்லுங்க தலைவரே, என்ன அவசரம் நான் முழுசா பேசிக்கிறேன்" 

"என்னடா பேச போற? ஆஹ்? என்ன பேச போற? மாட்டுக்கு ஊசி போட்டு வாடிவாசல் அனுப்புனேனு சொல்லுவ? அப்போ மெடிக்கல் டெஸ்ட் எடுத்த நான் கிறுக்கன், அத அப்ரூவ் பண்ண டாக்டர் கிறுக்கனா...?" 

"கிறுக்கன் இல்ல தலைவரே, பண பிசாசு" அழுத்தி கூறினான். 

அய்யனார், "டேய் வார்த்தையை விடாத... ஒரு நாள் என் வேலை தப்பா போனதில்லை. நேர்மையா இருக்கறவன் எதுக்குடா காச குடுத்து அடுத்தவனை விலைக்கு வாங்கணும்?" 

"ஆனா சர்டிபிகேட் உங்க மேல தான் தப்புனு சொல்லுதே தலைவரே... உங்கள மீறி உங்க ஆளுங்க மாட்டுக்கு மருந்து குடுத்துருக்க மாட்டாங்க" 

"ஏன் நான் குடுத்துருக்கணும்? நீ டாக்டர்க்கு காச காட்டிருக்க மாட்டியா இல்ல அலங்காநல்லூர்ல இருந்து இங்க வர்ற இடைவெளில மருந்து குடுத்து நான் தான்னு சொல்ல எவ்ளோ நேரம் ஆகிட போகுது?" 

"வாயில்லாத ஜீவனை போதை பொருள் குடுத்து சித்திரவதை பண்ற மிருகம் நான் இல்லை" ஆத்திரம் தாளாமல் குரலை உயர்த்தினான் தேவா. 

"ஏய் என்ன ப்பா என்ன என்னமோ பேசுறீங்க?" பெரியவர் ஒருவர் இடையில் புகுந்து சந்தேகமாய் கேள்வி கேட்டார். 

"இதுக்கும் மேலையும் இருக்கு..." தன்னுடைய கைபேசியை எடுத்து ஒரு புகைப்படத்தை நீட்டினான். 

"இது என்ன புதுசா மாட்டுக்கு ஊசி போடுறத எதுவும் எடுத்தியா தேவா?" அவனிடம் தன்னை மீறிய எந்த ஆதாரம் இருந்திட போகிறதென தென்னகம் அய்யனாருக்கு. 

"ஊசி எதுக்கு தலைவரே நாம செடி வளக்குறத ஊருக்கே காட்டலாம்" தேவா உடைத்த உண்மையில் முகம் வெளிறி உறைந்து போனார் அய்யனார். 

"எந்த செடியை பத்தி பேசுற தம்பி நீ?" பெரியவர் ஒருவர் கேட்க, "போதை செடி" என்றான் உரத்த குரலில். 

"என்னடா நாயே நீ பண்ற தப்பலாம் எங்க மேல தள்ள பாக்குறியா?" வேட்டியை மடித்து கட்டி அருகில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து தேவாவை அடிக்க போக, அசையாமல் நிதானமாக நின்றவனை அய்யனாரின் ஆள் நெருங்கும் முன்பே ஊர் மக்கள் தடுத்து நிறுத்தியிருந்தனர். 

"என்ன அய்யனார் இது? ஊர்ல நல்ல பதவில இருக்க, பெரிய மனுஷன்-னு உன்ன மதிச்சு சபையை கூட்டி பேசிட்டு இருந்தா ஆளுங்கள வச்சு சின்ன பசங்கள அடிக்கிற... இது தான் இந்த ஊருக்கும் பஞ்சயாத்துக்கும் நீயே குடுக்குற மரியாதையா?" பஞ்சாயத்து செய்பவர் ஒருவர் அய்யனாரை பார்த்து அதட்டி கேள்வி எழுப்பினார். 

"யோவ் என்னமோ பெரிய மனுஷன், பதவில இருக்கறவன்-னு சொல்றிங்க, இவன் நாலு மாசமா ஒவ்வொரு இடத்துலயும் என்ன அசிங்கப்படுத்துறான், நான் பாத்துட்டு சும்மா இருக்கணுமா? ஊரும் துணைக்கு நிக்கல, பஞ்சாயத்தும் பொடியனுங்க பேசுறத கேட்டு ஆடிட்டு இருக்கீங்க" 

"என்ன அய்யனார் வார்த்தை எல்லை மீறுது... இது கிராம பஞ்சாயத்து இங்க நீயும் கட்டுப்படணும் உன் அப்பனும் கட்டுப்படணும், அப்டி மாட்டேன் ரவுடி மாதிரி தான் இருப்பேன்னா பட்டணத்துல போய் இருந்துக்கோ" அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த இளங்கோவன் அய்யனாரின் வார்த்தைகள் தந்த தாக்கத்தில் பேசியிருந்தார். 

அய்யனார், "ஓ ஹோ... பேரனும் தாத்தனும் சேர்ந்து ஊற விட்டு விரட்ட பாக்குறீங்களா?" 

தேவா, "தாத்தா வேணாம்... அவர் பேச்சை திசை திருப்ப பாக்குறார். இன்னும் நிறையா இருக்கு சொல்ல வேண்டியது" 

"என்ன தம்பி இன்னும் இருக்கா? கஞ்சா மாட்டுக்கு குடுத்ததே தப்பு இதுல அவன் வளத்துருக்கான், இதுக்கும் மேல என்ன இருக்கு?" 

"இருக்கே... தலைவர் தலைவர் பதிவிய வச்சு என்ன என்னமோ பண்ண பிளான் போடுறார். ஆத்து பாலம் கட்ட அனுமதி குடுத்து ஒன்றை வருசமாச்சு. ஆனா எலெக்ஷன் நேரத்துல பரபரப்பா வேலைய ஆரமிச்சு மறுபடியும் பதவில ஒக்கார திட்டம்" 

"ஏலேய் உன் தாத்தா காலத்துல இந்த ஊருக்கு ஏர்போர்ட் வருதுன்னும் தான் சொன்னாய்ங்க, எங்க கானம்?" அய்யனாரின் ஆள் ஒருவன் சலம்ப அந்த கூட்டம் கூட்டமாக சிரித்தது. 

தேவா, "எங்களால முடியல ப்பா, உன் அய்யாகிட்ட சொல்லு... ஊர் காச திருடி அவர் வச்சிருக்க பணத்துல சொந்தமாவே ஒரு ஹெலிகாப்டர் வாங்கி உன் நிலத்துல வந்து இறக்குவார்"

"இந்த எகத்தால மயிறு என்கிட்ட வேணாம்" ஆவேசமடைந்த அய்யனார் கண்கள் சிவக்க தேவாவை பார்த்து காய்ந்தார், 

"ஊர் காச நான் வச்சிருக்கேன்னு நீ வந்து பாத்தியாடா? சொந்த காசுல திங்காம தாத்தனோட காசுல அண்டி பொழைக்கிறவன் என்ன பேச வந்துட்டான். பிச்சைக்கார பய" 

அய்யனாரின் வார்த்தை சபையை மொத்தமாய் உலுக்கிட தான் பேசியதன் அர்த்தம் உணர்ந்த அய்யனார் அதனை என்னை கர்வப்படும் முன்பே அய்யனாரின் சட்டையை பற்றியிருந்தார் இளங்கோவன். 

"யாருடா அண்டி பொழைக்கிறவன்? யாரு பிச்சைக்கார பய? நாப்பது வருஷம் முன்னாடி ஒரு லட்சம் என்கிட்ட கடன் வாங்கி, இன்னைக்கு நீ பீத்திட்டு இருக்கியே அந்த இடத்தை எல்லாம் வாங்கி போட்டான் உன் அப்பன். இப்ப வர அதுக்கு ஒரு ரூவா காசு குடுக்கல. 

இப்ப சொல்லுடா யாரு பிச்சைக்கார பய, யாரு அண்டி பொழைக்க வந்தவன்னு?" அய்யனாரின் சட்டையை உதறி தள்ளி ஆக்ரோஷமாக முறைத்தார் அவனை. 

"தாத்தாவாவே இருந்தாலும் ஒரு ரூவா என்னோட சொத்துல இனாமா வாங்குனதில்லடா என் பேரன். இப்ப வர அதுக்கான காச என்கிட்ட குடுக்குறான். அடுத்தவனை பத்தி பேசுறப்போ தன்னோட தகுதி என்னனு யோசிச்சு பேசணும்டே" 

அவமானமாக உணர்ந்த அய்யனார் எதுவும் பேசாமல் அமைதியாகிவிட, பேரனிடம், "நீ சொல்லு சாமி இந்த அயோக்கிய பய இன்னும் என்னென்ன பண்ணிருக்கான்னு. இன்னைக்கு நான் அவன் அப்பனுக்கு குடுத்த காசையும், இவன் ஊருக்கு பண்ணிருக்குற கொடுமையையும் மொத்தமா வசூலிக்காம விடப்போறதில்ல, பஞ்சாயத்து தான் என்னோட காச இன்னைக்கே வாங்கி தரணும் இப்படியே சொல்லிட்டேன்" 

இளங்கோவனை எதிர்த்து அங்கு வேறு வாதமும் இல்லாமல் போக தைரியமாய் அடுத்த உண்மையை கூறினான். 

"கஞ்சா செடிய அய்யனார் அவர் வீட்டுல நாலு மாசமா வச்சு வளக்குறார்... இது எங்களுக்கு தெரிஞ்சு. தலைவரே நீங்க இல்ல-னு சொல்லாதீங்க. உங்க பக்கத்துக்கு இடத்தை அவ்ளோ போராட்டம் பண்ணி நான் வாங்குனது காரணமே இது தான். வீடியோ எல்லாம் பக்காவா இருக்கு. 

அந்த கஞ்சா செடியை எடுத்து மருந்தா மாத்தி எங்க வந்ததுன்னு யோசிக்கிறப்போ உங்களுக்கு சிக்கின இடம் நம்ம குளம். யாருக்கும் சந்தேகம் வராது, ஆனா அங்க யாரையும் அதிகம் வர வைக்க கூடாது. 

அதுக்கு ஒரே வழி உயிர் பயத்த குடுக்குறது. ஒரு உயிரை நான் காப்பாத்திட்டேன், செல்வம் அண்ணன் ஒரு உயிர் போய்டுச்சு..." பற்களை கடித்து ஆத்திரத்தை அடக்கினான் தேவா. 

"அடேய் அய்யனாரே இவ்ளோ மோசமானவனாடா நீ? பொறுப்பானவன், நல்லவன்னு தானேடா நாங்க நினைச்சு உன்ன இவ்ளோ தூரம் ஆளாக்கினது? இப்டி ஊருக்கே உபத்திரம் பண்ணி உன் குடும்பத்துக்கு என்ன பாவத்தை சேர்க்க போற? 

அரை வயிறு கஞ்சினாலும் நம்ம உழைச்சு நம்ம சாப்பிடணும்யா அதான் நம்ம ஒடம்புல ஒட்டும், வம்சத்துக்கும் அதான் நல்லது" மனம் தாளாமல் ஒரு பெரியவர் வருத்தமாக கேட்டார் கேட்க வேறொருவர், 

"அய்யா, இவன் வாட்டுக்கு என்ன சொன்னாலும் நம்புவிகளா? எப்பா தேவா, அவருக்கு எதிரா என்ன ஆதாரம் இருக்கு? ஊர்க்கு உன் மேல நம்பிக்கை இருந்தா பத்தாது இவனையும் தான் நாங்க நம்புனோம், 

இப்ப தலைல தண்ணி ஊத்தி உண்மைய புரிய வச்சிட்டான். அதே தப்ப இனி இங்க நடக்க விட மாட்டோம். ஆதாரம் எடு. ஆகுறத அப்றம் பாக்குறோம்" என்றார் நாட்டாமை ஒருவர் காட்டமாக. அய்யனார் பல் பிடுங்கிய பாம்பை போல் செய்வதறியாது தவித்தார். 

"அவ்ளோ தான... ஒரு பத்து நிமிஷம் பொறுங்க படமே ஓட்டுறேன்" பத்தே நிமிடத்தில் ஒரு மடிக்கணினியில் படத்தை ஓட விட்டான். 

குளத்தின் புதருக்கடியில் மறைத்திருந்த கேமரா துல்லியமாக அந்த காட்சியை படமாக்கியிருந்தது. அய்யனாரின் ஆட்கள் குளத்தை சுற்றிலும் பார்வையிட, அவர்களுக்கு பின்னே வந்த அய்யனார் வேலையை ஆரமிக்க உத்தரவிட, இரண்டு பேர் குளத்திற்குள் குதித்தனர். 

கையில் பெரிய பெரிய மூடைகளோடு. குளத்திற்குள் குதித்தவர்கள் சில பல நிமிடங்கள் கழித்தும் வராமல் இருக்க சில நொடிகளில் வந்தவர்கள் அடுத்த மூடையை பெரிய பாறாங்கல் கொண்டு கட்டி மீண்டும் குளத்திற்குள் குதித்தனர். 

இதுவே இன்னும் சில முறை நீடிக்க காணொளியில், "பொருளுக்கு எதுவும் ஆகிடாதுல?" உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டார் உடலை தண்ணீரிலிருந்து உத்தரிக்கொண்டிருந்தவனிடம். 

"அதெல்லாம் ஒன்னுமாகாது அண்ணாச்சி. வேலை பாத்தது நம்ம மக்கா. எந்த கோட்டிக்கார பயலும் நம்ம வேலைய சந்தேகப்பட மாட்டான். ஏலேய் சொல்லுங்கலே" அருகில் இருந்த இருவரை ஏவினான். 

"யண்ணே வேலை எல்லாம் பக்கவா இருக்கும். விடுங்க. அடுத்த செடியை இன்னும் ரெண்டு வாரத்துல இறக்கிடலாம்" எனவும் அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டே குளத்தை விட்டு வெளியேறினர். 

அந்த படம் ஓடி முடிய நீரினுள் இறங்கிய இருவரின் படத்தை காட்டினான். செல்வம் இறந்த அன்று அவரது உடலை நீருக்கடியிலிருந்து எடுத்து வந்தவர்கள். 

"இவங்க தூத்துகுடில இருந்து வந்தவங்க. செல்வம் அண்ணன் ஒடம்ப எடுத்து வந்த அப்போவே சந்தேகம், எப்படிடா இவ்ளோ நேரம் தண்ணிக்கடில இருந்து ஒடம்ப சிரமமே படாம தூக்கிட்டு வந்தாய்ங்கனு... அதான் தூத்துகுடில விசாரிச்சேன். முத்துகுளிக்கிறவங்களாம். 

வர்ற வருமானம் பத்தாதுன்னு ஹார்பர்ல பொருள் கடத்துற வேலை எல்லாம் பாத்து ரெண்டு வருஷம் ஜெயில்ல இருந்து வந்தவிங்க. 

அவிங்க பழக்கம் எப்படி நம்ம தலைவருக்கு கெடைச்சதோ வேலைக்கு வேலையும் ஆச்சு, சம்பளத்துக்கு குளத்துக்கு குளிக்க வர மனுசங்க கால பிடிச்சு ஆளத்துல இழுத்துட்டு போய் காலை கொடில கட்டி வச்சு உசுரு போனதும், அவங்க ஒடம்ப வெளிய எடுத்து வர உதவுறேன்னு சொல்லி ஆழத்தை காரணம் காட்டி காசும் எக்கச்சக்கமா வாங்கியும் பணத்தை சேர்த்தாச்சு" வாயில் கை வைத்து நடந்ததை கேள்வி கேட்க அய்யானர் மேல் சிலர் மண்ணை வாரி, கற்களை வீசி சாபமிட்டனர். 

"இதுக்கும் மேல உங்களுக்கு ஆதாரம் வேணும்னா அவரோட அமைதியே பதில் சொல்லிருக்கும், இன்னொன்னு அந்த தூத்துக்குடி காரைங்க இப்ப செல்லுக்குள்ள இருக்காய்ங்க அங்க போய் விசாரிச்சுக்கோங்க" 

தேவா கூட்டத்திரிலிருந்து ஓரமாக ஒதுங்கிவிட, அய்யனார் தவறுக்கு துணை சென்று குரலை கொடுத்த சில தலைகள் கூட்டத்திலிருந்து தப்பித்திருந்தனர். 

மயிலப்பன் கூட அதிகம் பேசாது அமைதி காத்துவிட்டான். திண்ணையில் அமர்ந்திருந்த நால்வர் தங்களுக்குள் ஒரு மனதோடு பேசி, 

"இளங்கோவன் அய்யனாரோட அய்யன்க்கு காசு குடுத்ததுக்கான ஆதாரம் காட்டுனா இத்தனை வருசத்துக்கான பணத்தை வட்டியும் முதலுமா பணமாவோ, பொருளவோ இல்ல நிலமாவோ குடுக்கணும். அடுத்தது செல்வதோடு குடும்பத்துக்கு ஒரு நிலத்தை எழுதி வைக்கணும்" 

"அதெல்லாம் ஒன்னும் வேணாம்" குணா உடனே தடுத்தான், "ஊரையே அடிச்சு ஏமாத்துன காசு என் பொண்டாட்டி குடும்பத்துக்கு வேணாம்" ஒரே முடிவாக கூறினான். 

"எப்பா அத நீ சொல்ல கூடாதுல, அடுத்து பொம்பள புள்ளை இருக்கு, அதுக்கு நல்லது செய்ய வேணாம்?" 

குணா, "வேணாம்ங்றேன்..." என்றவன், "என் மாமனார் காசுல இருந்து ஒரு ரூவா எனக்கு வேணாம். அவரோட மத்த பிள்ளைக்கு மொத்தமா இருக்கட்டும், நானோ என் பொண்டாட்டியோ அதுல உரிமை கொண்டாட மாட்டோம்" நொடி யோசிக்காமல் அவன் கூறிட மலைத்து போனது கூட்டம். 

பணத்திற்காக தான் திருமணம் செய்கிறான் என கூறிய வாயையும் சேர்த்து அடைத்தான் குணா. 

"சரி தான், அடுத்தது பாப்போம். இனி அய்யனார் இந்த ஊருக்கு பிரசிடெண்ட் இல்ல, அவனே ஊருக்கு கட்டுப்பட்டு பதவியை ராஜினாமா செய்யணும்" 

உத்தரவு வர முடியாது என சண்டையிட தூண்டிய மனதை தூண்டிவிட அசிங்கப்பட்ட மூளை விடவில்லை. தலை தாழ்த்தி ஊராரின் பேச்சை எல்லாம் மௌனமாய் வாங்க வேண்டிய நிலை. நிலைகுலைந்து போனார் அவமானத்தில். 

"அடுத்த உத்தரவு, அய்யனாரையும் அய்யனாரோட குடும்பத்தையும் இந்த ஊற விட்டு ஒதுக்கி வைக்கிறோம். இது இந்த பஞ்சாயத்தோட ஒருமித்த கருத்து. இத மீறி யாரும் எதுவும் செஞ்சா அவங்களும் அவனோடேயே இந்த ஊற விட்டு தாராளமா போகலாம்" அவ்விடமே தெளிவாக கேட்கும் அளவு அமைதி வந்தது தீர்ப்பினால். 

"அதோட அய்யனார் கூட சுத்துன சோக்காலிக நல்லா கேட்டுக்கோங்க, ஊருக்குள்ள உங்களால இந்த மாதிரி கேடுகெட்ட தப்பெல்லாம் வந்தா ஒரு நிமிஷம் யோசிக்காம போலீஸ்க்கு தான் பஞ்சாயத்து போகும். எச்சரிக்கையா நினைச்சு ஒழுங்கா இருந்துக்கோங்க"

"ஊருக்கு செஞ்ச கொடுமைக்கு அவனை ஊரைவிட்டு தள்ளி வச்சாச்சு. அவன் பண்ண தப்புக்கு செல்வதோட குடும்பம் போலீஸ் போறதுனா இந்த ஊர் அதுக்கு என்னைக்கும் துணை நிக்கும்" 

பஞ்சாயத்தை முடித்திட நிச்சயம் காவல் நிலையம் செல்லும் முனைப்போடு நின்ற குணாவிற்கு தோளோடு அணைத்து தன்னுடைய ஆதரவையும் தெரிவிக்க நண்பன் தோள் தட்டி தானும் உடன் இருப்பதாக உறுதிக்கொடுத்தான் வெற்றியும்.



இனிமேல் ஒரே ரொமான்ஸ் தான்... ஆனா இன்னும் ஒரு சாப்டர் தான் கதை இருக்கும். 


தப்பிருந்தா மன்னிச்சிடுங்க

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro