🌻 அழகி 75
கரும்பச்சை நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட அந்த சமுதாய நலக்கூடத்தில் சுவரில் டெகரேஷனுக்காக மாட்டப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் பூக்களும், மணமேடையில் சுவர்களை மறைக்க போடப்பட்டிருந்த ஸாட்டின் திரைச்சீலைகளும் இன்னும் இரண்டு முறை கழுவி, துவைத்து எடுத்தால் தான் பளிச்சென்று இருக்கும் என்று நினைத்தபடியே அங்கு போடப்பட்டிருந்த ஒரு சேரில் அமர்ந்திருந்தான் ஜெயன்.
ஜனமேஜயன் வெட்ஸ் பர்வதவர்த்தினி என்ற
ஒவ்வொரு தெர்மாகோல்
ஆங்கில எழுத்துக்களும்
குண்டூசி போட்டு ஸாட்டின் திரைச்சீலையில் நிற்க வைக்கப்பட்டிருந்த மணமக்களின் பெயரைப் பார்த்து விட்டு ஒருமுறை திருப்தியாக சிரித்துக் கொண்டான்.
இவ்வளவு நேரம் வேலை பார்த்த உடம்பு எனக்குப் பசிக்கிறது என்று கேட்டு வயிற்றைப் பிசைய ஆரம்பித்திருக்க வாசல் புறமாக நின்று கொண்டிருந்தவரிடம்,
"யோவ் பெர்சு..... இன்னும் அங்க நின்னுக்கிட்டு என்ன பண்ணிட்டு இருக்க? எனக்கு வயிறு பசிக்குது! சாப்பாடு ரெடியா? இன்னும் ரெடி ஆகலையின்னா இப்ப வாசல்ல கட்டுனியே வாழமரம்.... அதுல இருந்து ரெண்டு வாழைப்பழத்த பிய்ச்சுக் குடுயா!" என்று கால் மேல் கால் போட்டுக் கேட்க அவனைப் பார்வையால் எரித்தார் திண்ணன்.
"எதுக்கு இந்த மொறப்பு? ஓ.... வாழமரத்துல வாழக்கா தான் இருக்கும்.... வாழப்பழம் இருக்காதோ? ஆறு மணிக்கு இங்கணக்குள்ள வந்து ஒன்றமன்னேரமா அம்புட்டு வேல பாத்துருக்கேன் நானு.... வயிறு பசிக்குது.... ஏதாவது சாப்புட குடுன்னு கேக்குறது தப்பா?" என்று கேட்டவனிடம்,
"நாந்தாமுடா ஒங்கல்யாணத்துக்கு விருந்தாடியா வந்துருக்கேன். காய் வந்து எறங்குனது, பால வாங்கிட்டு வந்தது, சமையக்காரங்களுக்கு ஒத்தாச செஞ்சது, சேர அடுக்கிப் போட்டது, வாழமரத்த எறக்குனது, கட்டுனது, சந்தனம் கரைச்சதுன்னு வந்ததுல இருந்து ரெண்டு பேருமா நின்னு எம்புட்டு வேல செஞ்சுருக்கம்? அப்ப ஒனக்குப் பசிக்குறத மாதிரி எனக்கும் பசிக்காதா?" என்று கேட்டார் திண்ணன்.
"அட.... ஒனக்கும் பசிக்குதா என்ன? இத நீ எங்கிட்ட மொதல்லயே சொல்ல வேண்டியதுதான? ஏதோ மொகத்துல மொளைக்காத
தாடியா வேற வந்துருக்கமுன்னு சொல்லிப்புட்ட.... சரி வா, மொதல்ல வயித்துப் பிரச்சனைய கவனிப்போம்!" என்று சொல்லி திண்ணனை தன்னுடன் அழைத்துக் கொண்டு அந்த ஹாலில் வலப்புறம் திரும்பி சமையல் செய்யும் இடத்திற்குள் நுழைந்தான்.
"ணோவ்.... வயிறு பசிக்குதுண்ணா! சாப்பாடு ரெடி ஆகிடுச்சுங்களா இல்லயா?" என்று கேட்டவனிடம் பத்து நிமிடங்களில் அனைத்தும் தயார் ஆகி விடும் என்று சொன்னார்கள் சமையல்கார்கள்.
"வா பெர்சு..... அப்டி ஒக்காருவோம்!" என்று சொன்ன ஜெயனுடன் நடந்து சென்று இருக்கையில் அமர்ந்தவர் அந்த இடத்தை கண்களால் அளந்தார்.
சமையல் செய்யும் அறைக்கு பக்கவாட்டில் சாப்பிடும் இடம் இருந்தது. இங்கு சேரை அடுக்கும் அவசியமில்லாமல் வரிசை வரிசையாக கல் மேடைகளும், உட்கார கல் திண்ணைகளும் போட்டிருந்தார்கள்.
"இங்க ஒரு பந்திக்கு அம்பது பேரு சாப்புட முடியுமுன்னு நெனக்குறனப்பு! நமக்கு மொத்தமா அஞ்சாறு பந்திக்கு ஆளுக வருவாகளா?" என்று கேட்டவரிடம்,
"மூணு நாலு பந்திக்கு தான் ஓடும்னு நெனக்குறேன் பெர்சு! சொந்தக்காரவுங்கள விட பழகுன பழக்கம் தான் நமக்கு நிறைய..... வர்த்தினி பேங்க்ல இருந்து ஒரு நாப்பது ஐம்பது பேர் வந்தாலும் எப்படியும் எரநூறு பேருக்குள்ள முடிஞ்சுடும்!" என்று சொன்னவனிடம்,
"இத்தன பேர தெரட்டி, ரெண்டு வேளைக்கு சோறுங்க ஆக்கிப் போட்டு, மண்பத்துக்கு காசு குடுத்து, எனக்கெல்லா வேற கோடித்துணி வாங்கிக் குடுத்துருக்க.... இத்தன செலவுக்குலா என்னடா செஞ்ச?" என்று கேட்ட பெரியவரிடம்,
"ஆ....ங்! என் ஆளு வேல பாக்குற பேங்க்க கொள்ளயடிச்சேன்! கேக்குது பாரு கேள்வின்னு.... நான் பணக்காரன் இல்ல தான் பெர்சு.... அதுக்காக பிச்சைக்காரனும் இல்ல! கேரட் கழுவுற வேல பாக்குற எடத்துல மொதலாளி கிட்ட பேசி மார்க்கெட்டுல மொத்த காய்கறிக்கும் சொல்லிக்கிட்டேன்!"
"இப்டி மண்டபம், சமையலுக்கு ஆளுங்க, மாலை, புதுத்துணி, நகையின்னு எல்லாத்தையும் ஏற்பாடு செய்யயில நா பழகுன ஒவ்வொரு விதமான ஆளுங்க கிட்ட இருந்தும் நமக்கு ஒவ்வொரு உதவி கெடச்சது.... செய்யுற உதவிய கொஞ்சம் சஹாயமாவும் பாத்து செஞ்சு குடுத்தாங்க.... பாரு! நீயும் நம்ம ஒத்தாசைக்கு கரெக்டா ஆறு மணிக்கு கன் மாதிரி வந்து நின்னுட்டியா இல்லயா...?"
"நமக்கு எல்லாம் நல்லதா கெடைக்கும்; நம்ம கையிலயே வந்தும் கெடைக்கும்..... நம்மளோட ராசி அப்புடிய்யா! ஆ....ஹா! சாப்பாடு ரெடி ஆகிடுச்சு போலிருக்கு! சாம்பார் வாசம் மூக்கத் துளைக்குது.... ணோவ்.... சாப்பாட்டுல எல்லாம் காரம் நல்லா தூக்கலா போட்ருக்கீங்கல்ல?" என்று கேட்ட படி முதல் ஆளாய் உணவு உண்ண தயாரானவனை பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார் திண்ணன்.
முன்னே பின்னே கல்யாணம் காட்சி என்று செய்திருந்தால் இந்த மாதிரியான விஷயத்திற்கு என்ன செலவாகும், எங்கெங்கு செலவாகும் என்று அவருக்கு தெரிந்திருக்கும். அவருக்கு தெரிந்ததெல்லாம் தேன் எடுக்கும் கலையும், மீன் பிடிக்கும் கலையும் மட்டுந்தான்.... இதை வைத்துக் கொண்டு ஜெயன் எவ்வளவு செலவு செய்திருப்பான் என்று அவரால் அனுமானிக்க முடியவில்லை.
மகன் வயதிற்கு சற்று குறைவான, பேரனுடைய வயதிற்கு சற்று அதிகமான வயதில் இருந்த இந்த பொறுப்பான இளைஞனை அவருக்கு எப்போதும் பிடிக்கும்.
"என்னய்யா...... பெர்சு! தேன தேடுறேன்னு எங்கிட்டாவது மல மேல ஏறிப்புட்டு அங்கயே நட்டுக்கிடாத!" என்ற அவனது வசை கூட அவருக்கான ப்ரத்யேக கவனிப்பாக தான் தெரியும். அப்படிப்பட்ட அன்பானவன் திருமணத்தால் கடனாளியாக ஆகி விடக் கூடாதென்ற அக்கறையில் தான் செலவீனங்களைப் பற்றி விசாரித்தார். அவன் சொன்ன பதிலில் அவருக்கு மிகவும் திருப்தி!
"கொண்டாடே சோற.... நொறுக்க துன்னுவோம்!" என்று கேட்டவரைப் பார்த்து சின்னதாக சிரித்த ஜெயன்,
"கஞ்சியவே ஊத்தி ஊத்தி குடிச்சுப்புட்டு, ஒனக்கு எங்கணயாவது வெளிய வந்தாலே சோறு தானா? இப்ப சோறு கெடையாது. கேசரி, தோச, பொங்கலு, சட்னி, சாம்பாரு அப்புறம் ஒரு காப்பி! மதியந்தா சோறு, சாம்பாரு, ரெண்டு பொரியலு, அப்பளம், வடை, பாயாசம்.... சரியா?" என்று சொன்னான்.
"என்னவே.... கோட்டிக்காரா! ஏமுலே காலையிலயும் அரிசிச் சோறு பொங்கிப் போடல?" என்று கோபமாக சண்டைக்கு வந்தவரிடம்,
"நீ ஒருத்தந்தா காலையில சோறு கேப்ப! நா ஒருத்தந்தா சாப்புட்டதுக்கு அப்புறம் பாலு கேப்பேன்.... நம்மள மாதிரியே எல்லாரும் இருப்பாய்ங்களா சொல்லு பாப்பம்; கவலப்படாத.... இனி அடிக்கடி அவளக் கூட்டிக்கிட்டு ஓஎடத்துக்கு வாரேன்..... ஒம்பொண்டாட்டி ஒனக்கும் சேத்து சமைச்சுக் குடுப்பா! நாங்க தான் இப்ப வெரதத்த முடிச்சுட்டோமுல....! அதுனால மூணு பேருமா சேந்து மீனு சுட்டு சாப்புடுவோம்!" என்று சொல்லிக் கொண்டே அவருடைய இலையில் சாம்பாரை ஊற்றினான்.
இப்படியாக ஒருவழியாக மாப்பிள்ளையும், அவனுடைய சிறப்பு விருந்தினர் ஒருவரும் திருமண விருந்தை முதல் ஆளாக சுவை பார்த்து விட்டு அமர்ந்திருக்க
ஜெயனுடைய உறவினர்கள் ஒவ்வொருவராக மண்டபத்திற்கு வருகை தர ஆரம்பித்தனர்.
"எனக்குத் திருமணம்.... அவசியம் வந்து விடுங்கள்!" என்று முகிலமுதத்தை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்குச் சென்று முறையாக பத்திரிக்கை வைத்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக முப்பது பேர் தான் இருந்திருப்பார்கள்;
வேலையிடத்தில், நடு ரோட்டில், பால் குடிக்கும் டீக்கடையில் என அங்கங்கு பார்த்து வெறும் வாய்வார்த்தையில் "கல்யாணத்துக்கு வந்துடுங்கண்ணா!" என்று அவன் சொல்லி வைத்தவர்கள் தான் நூறு பேருக்கு மேல் வந்திருந்தார்கள். ஜெயனுடன் பணிபுரியும் நண்பர்களும் தங்களுடைய குடும்பத்தினருடன் கூட்டமாக வந்ததில் இருந்து அந்த மண்டபத்தில் விழா களைகட்டியது.
"எனக்கு ஒருத்தரும் இல்லையின்னு நெனச்சு அப்பப்ப அழுவுறா.... நமக்கு எல்லாரும் இருந்தாலும், அவிய்ங்கள வீட்டுக்குப் போய் மரியாதயா அழைச்சாலும் சொன்னவிய்ங்கள்ல பாதி பேர் கூட இங்க வரல! இது தான் நம்மளோட வொறவுக்காரவுங்க லச்சணமுன்னு அவ கிட்ட சொல்லணும்!" என்று நினைத்தவன் அனைவரையும் வரவேற்கும் வேலையை ஜெயன் பார்த்துக் கொள்ள, வந்தவர்கள் அனைவருக்கும் உணவளிக்கும் வேலையை ஜெயனுடன் ஷெட்டில் பணிபுரியும் சகநண்பர்கள் பார்த்துக் கொண்டனர்.
அவர்களிடம் அந்தப் பணியைக் கொடுக்கும் முன்னரே ஜெயன் தெளிவாக அவர்களிடம் அனைத்தையும் பேசி விட்டான்.
"டேய்.... வேல செய்யுறதுக்கு இஷ்டம் இருந்தா மட்டும் செய்ங்க. முன்னால மண்டைய ஆட்டிட்டு பின்னால போயி ஜெயனு எங்கள வேல வாங்குறான்னு திட்டாதீங்க!" என்று தீர்க்கமாக சொன்னவனிடம் லேசான வருத்தத்துடன்,
"டேய்... என்னடா ஜெயனு இப்டியெல்லாம் பேசுற? நீ சைனப் டிராவல்ஸோட சொத்துடா மாப்புள.... எங்களுக்குல்லா நீ எவ்ள செஞ்சுருக்க? கல்யாண வேலைய பங்கு போட்டுக்க அப்பா இல்ல, சொந்தக்காரவுங்க இல்லன்னு எதுவும் யோசிக்காதடா....!"
"நாங்க இருக்கோம் ஒனக்கு! எல்லா வேலையவும் எங்க கிட்ட உட்டுட்டு நீ வர்றவிய்ங்கள மட்டும் வாங்கன்னு சொல்லு.... ஏன்னா அங்க நாங்க நின்னு கூப்ட்டா அதுக்கு ஒஞ்சொந்தக்காரய்ங்க என்ன நெனைக்குறானுவளோ?" என்று இருப்பதில் சுலபமான வேலையான வரவேற்கும் வேலையை ஜெயனிடம் கொடுத்த நண்பர்கள் அனைவரையும் சாப்பிட அழைத்துச் சென்று அவர்களுக்குப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
"எவன் வந்தா என்ன? எவம்போனா என்ன? இவனுங்கலா இன்னிக்கு ஒருநாத்தா நம்மள பாக்கப் போறானுவ! நம்மள வாழ்க்க பூரா பத்திரமா வச்சு பாத்துக்குறேன்னு சொன்ன ஒருத்திய இன்னும் காங்கலயேப்பா? எப்டி இருப்பா?"
"நேத்து மாதிரியே டாலடிச்சான்னா நாம என்ன பண்றது? ஏதாச்சு ஒரு மேக்கப்பு ஐயிட்டத்த மரியத்துட்ட வாங்கி சைலண்டா மூஞ்சியில போட்டுப் போயிடுவோம்னு பாத்தா அதையும் கண்டுபுடிச்சு கேக்க வேற செஞ்சுப்புடுறா..... அவ முன்னால வெக்க வெக்கமா வந்து தலைய வேற குனிய வேண்டியதாயிருக்கு!" என்று யோசித்துக் கொண்டிருந்தவன் அப்போது தான் நஸாருடைய கார் வருவதைப் பார்த்து விட்டு வரவேற்பு பகுதியில் இருந்து மண்டபத்துக்குள் வேகமாக ஓடினான்.
"யண்ணா.... பாட்டுப் போடுற அண்ணா! பொண்ணு வருதுண்ணா; எனக்கு இப்பத்த ட்ரெண்ட் ட்ரெண்ட்ங்குறாங்களே கருமம்.... அந்த மாதிரி ட்ரெண்ட்டா இல்லாம, கொஞ்சம் பழைய ட்ரெண்ட் பாட்டா இருந்தா பரவாயில்ல.... எதாவது ஒரு தரமான பாட்டா தட்டி உடுங்கண்ணா கேப்பம்!" என்று சொன்னவனை ஏற இறங்கப் பார்த்த அந்த நபர்,
"நீ 90'ஸ் கிட்டாடா தம்பி?" என்று கேட்டார்.
"ஆமாங்கண்ணா... அதெல்லாம் கேக்குறதுக்கு இதுவா நேரம்....? அவ வந்துட்டாளுங்கண்ணா! சீக்கிரமா ஒரு நல்ல பாட்ட தட்டி உடுங்கன்னு சொல்றேனுல்ல?" என்று கேட்டவனிடம்,
"சூப்பர் பாட்டு ஒண்ணு போடுறேன்டா தம்பி கேளு!" என்று சொல்லி விட்டு வேகமாக குனிந்து சிடிக்களை தேடி எடுத்து ஒரு பாடலை ஒலிக்க விட்டார் அந்த நபர்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro