🌻 அழகி 74
நேற்று நடந்த ஜெயன் வதனியின் திடீர் நிச்சயதார்த்த விழாவைப் போல் இன்று அவர்களுடைய திருமணமும் குன்னூரில் இருந்த ஒரு சமுதாய நலக்கூடத்தில் சிறப்பாக நடைபெற இருந்தது.
நஸார் கொடுத்த விருந்தை முடித்து இரவு பதினொன்றரை மணி அளவில் வீட்டிற்கு வந்தவன்,
தன் தாயிடம் "அமுதாம்மா.... நான் வர்த்தினி கிட்ட கொஞ்சம் பேசணும்!" என்று சொல்லி விட்டு அவளுடன் படிகளில் ஏறி விட்டான்.
"ம்ப்ச்! எனக்கு தூக்கம் வருது ஜெயன்!" என்று சிணுங்கியவளிடம்,
"ஏய்.... ஹெட்லைட்டு; இன்னிக்கு ஷெட்ல நடந்தது எல்லாத்தையும் ஒங்கிட்ட ஒண்ணு விடாம சொன்னதுக்கு பெறவு தான் ஒன்னைய நான் தூங்க உடுவேன்! ஒழுங்கா ஒக்காந்து கத கேளு!" என்று சொல்லி விட்டு நடந்தது அனைத்தையும் அவளிடம் சொல்லி விட்டு நான்கு தடவைகள் அவளை கீழே இறங்கி வருகிறாயா என்று கேட்டு விட்டு அவள் "ப்ளீஸ் ஜெயன் கொஞ்ச நேரமாவது நிம்மதியா தூங்க விடு!" என்று அவனிடம் கெஞ்சிக் கேட்ட பிறகு தான் அரைமனதுடன் கீழே இறங்கிச் சென்றான்.
"ஆளு தான் இவ்ளோ பெரிசா வளந்து வச்சுருக்கான்.... யாராச்சு இவன ஏதாச்சு சொல்லிட்டா இன்னும் சின்னக்கொழந்த மாதிரி கோவிச்சுக்கிட்டு ஒரு ஓரமாப் போயி தனியா ஒக்காந்துக்குறான்.... ஆனாலும் உன்னோட இந்த பிஹேவியர் ரொம்ப நல்லாயிருக்குடா கடங்காரா!" என்று முணுமுணுத்த படி உதட்டில் சிரிப்புடன் படுக்கையில் சாய்ந்தாள் வர்த்தினி.
இரவு முழுவதும் படுக்கையில் புரண்டு புரண்டு பார்த்து விட்டு காலை ஐந்து மணிக்கு எழுந்து ஐந்தரை மணியளவில் வெளியே கிளம்ப தயாராகி வந்தான் ஜெயன்.
"நம்ம வேலைய நம்ம தான் முன்னால போயி அங்க இருந்து பாத்துக்கணும்! அமுதாம்மா நீயும் வர்த்தினியும் கெளம்பி அப்புறமா நஸாரு கூட காருல வாங்க! நான் அங்க போயிட்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு எல்லாம் சரியா இருக்குதான்னு பாக்குறேன்!"
"என்னோட கல்யாண சட்ட, பேண்ட்டு ரெண்டையும் பையில வச்சு அங்க எடுத்துட்டுப் போறேன்; அப்பாவ கும்புட்டுட்டேன்;
எம்பொண்டாட்டி முழிச்சு கீழ எறங்கி வரும் போது அவ கிட்ட நான் அங்க கிளம்பிட்டதா சொல்லிடு!" என்று சொன்னவன் தன்னுடைய அன்னையின் கிண்டலான தலையாட்டுதலில் கடுப்படைந்து,
"கெளம்பும் போது போயிட்டு வாடா தங்கமுன்னு வாய் நெறய சொல்லி வழியனுப்பி வைக்குறியா? அதெல்லாம் செய்யாம
எப்பப் பாரு நக்கல் உட்டு சிரிச்சுக்கிட்டு..... கோமதி வரவா? டேய் எளங்கோ அண்ணே வீட்டுக்குள்ள திரும்ப வரும்போது கல்யாண மாப்புளயா வர்றேன்; போயிட்டு வாரேன்டா தம்பி!" என்று அன்னை, இரண்டு வளர்ப்பு பிராணிகள் இவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு பைக்கை கிளப்பினான்.
"வதனிப்புள்ள எழுந்திரிச்சு ஒக்காந்துடுச்சான்னு தெரியல.... அவ கிட்ட சொல்லிக்காம இவேன் கெளம்புறானே?" என்று நினைத்த முகில் அதற்கு மேல் அவரும் கிளம்பினார்.
காலை எழுந்ததும் வதனி ஜெயனைத் தான் தன்னுடைய கதவருகில் தேடினாள். அவன் கதவைத் தட்டி அவளை தொந்தரவு செய்ய வராததால் சோம்பல் முறித்துக் கொண்டு படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தாள்.
உலகத்திலேயே படபடப்பே இல்லாமல் இப்படி சாவகாசமாக எழுந்து உட்காரும் மணப்பெண் நானாகத் தான் இருப்பேன் என்று நினைத்தவள் லேசாக புன்னகைத்துக் கொண்டாள்.
தலைக்கு குளித்து, மாடியில் சற்று நேரம் விரிந்த கூந்தலுடன் உலாவி விட்டு, தலைதுவட்டி பின்னலிட்டு ஒரு ஷிஃபான் புடவையை அணிந்து தயாராகி கீழிறங்கிச் சென்றவள்,
"என்னடா வதனிக்கண்ணு.... ஒனக்கும் ராத்திரியெல்லாம் தூக்கமே வரலையாக்கும்?
எனக்குப் பொறந்தது ராத்திரியெல்லாம் உருண்டுட்டு வெடியால எழுந்திரிச்சு மண்டபத்துக்கு போறேன்னு சொல்லிட்டு கெளம்பிடுச்சு!"
இங்க பொண்ணும் படுக்கையில கெடக்கப் புடிக்காம வெள்ளன எழுந்திரிச்சு வந்தாச்சு?" என்று கேட்ட அமுதாம்மாவை கட்டி அணைத்துக் கொண்டு அவரது புதுப்புடவையின் வாசத்தை ஆழ்ந்து மூச்சிழுத்து ரசித்தாள் வதனி.
"வர வர நீயும் இந்த ஜெயனு, எளங்கோ கூடயெல்லாம் சேந்து ரொம்ப கெட்டுப் போயிட்ட புள்ள..... அய்யய்யோ கழுத்து கிட்ட மூச்சு விடாத கண்ணு; கூசுது!" என்று சொன்ன தன்னுடைய மாமியாரை இறுக்கிக் கொண்டு சிரித்தவள்,
"நானெல்லாம் நல்லா தூங்கிட்டு
எப்பவும் எழுந்திரிக்குற டைம் தான் எழுந்திரிச்சேன் முகில்ம்மா.....
இந்த ஸாண்டல் கலர் புடவை உங்களுக்கு ரொம்ப அழகாயிருக்குது.... உங்க பையன் தான் இந்த புடவையையும் செலக்ட் பண்ணுனாரா?" என்று கேட்டாள்.
"ஆமா.... தங்கம்! கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்கப் போன எடத்துல அந்தப் பயலுக்கு சந்தோஷம் தாங்க முடியல.... இது எங்கம்மாவுக்கு; இது எனக்கு; இது எம்பொண்டாட்டிக்குன்னு எடுத்து வச்ச துணிங்கள எல்லாம்
பாத்து பாத்து தவ்விக்கிட்டு கெடந்தான்!"
"எத எடுத்துக் குடுத்தாலும் கட்டுறேன்னு நீ அவனுக்கு ஏத்துக்கிட்டு வேற பேசிட்டியா.....? அதுல வேற அவன கையில புடிக்க முடியல! அவேவந்ததும் நீ எடுத்துக் குடுத்த சேல நல்லாயிருக்குதுடா ஜெயனுன்னு சேலையப் பத்தி
ரெண்டு வார்த்த பேசிருத்தா!"
"இல்லையின்னா..... நான் பாத்து பாத்து எடுத்தத நல்லாயிருக்குதுன்னு ஒரே வார்த்தையில சொல்லி முடிச்சுப்புட்டான்னு அதுக்கு வேற தனியா ஒருக்க பொலம்புவான் கிறுக்குப்பய....!"
"கெழக்க பாத்து நில்லு தங்கம்! முகில்ம்மா இந்தா வாரேன்!" என்று வதனியிடம் சொல்லி விட்டு
பூஜையறைக்குள் சென்ற முகிலமுதம் ஒரு தட்டில் மஞ்சள் குங்குமம் பூ இவற்றுடன் வைக்கப்பட்டிருந்த முகூர்த்த புடவையை கடவுளை வணங்கி விட்டு வதனியின் கைகளில்
எடுத்துக் கொடுத்தார்.
முகிலமுதத்தின் காலை தொட்டு வணங்கி விட்டு தன்னுடைய திருமணப் பட்டை அவரிடமிருந்து வாங்கிக் கொண்ட வதனி ஜெயனுடைய அறைக்குள் சென்று
அதை உடுத்தி விட்டு கண்ணாடியில் அப்படியும் இப்படியுமாக திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ஏய்.... என்னடீ அப்டியும் இப்டியுமா திரும்பி அழகு பாத்துக்கிட்டு இருக்க....? கடிச்சு தின்னு முடிச்சிடலாம்னு நெனைக்க வைக்கிற அளவுக்கு ரொம்ப அழகாத் தான் இருக்க.... அப்டியே கட்டில்ல கலைஞ்சு கெடக்குற மாமாவோட சட்ட, பனியனு, பேண்ட் எல்லாத்தையும் பீரோவுல
அடுக்கிக் குடுத்துட்டுப் போயிடு செல்லம்!" என்று அவன் காதருகில் சொல்வது போல பிரமை உண்டாக ஒரு பெருமூச்சுடன் கட்டிலில் அங்கங்கு கிடந்த இரண்டு மூன்று சட்டைகளை மடித்து அவனுடைய பீரோவிற்குள் அடுக்கி வைத்து விட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினாள் வதனி.
"ஒரு ட்ரெஸ்ஸ எடுக்க எத்தன ட்ரெஸ்ஸ கலைச்சு போட்டுட்டு போயிருக்கான் தெரியுமா ஒங்க புள்ள....? மண்டபத்துக்குப் போகும் போது ஏன் எங்கிட்ட சொல்லாம கெளம்புனான்?" என்று தன்னுடைய அத்தையிடம் கேட்டபடியே அவர்கள் முன்பாக போய் நின்று,
"முகில்ம்மா இந்தப் பொடவ எனக்கு அழகாயிருக்கான்னு சொல்லுங்க!" என்று கேட்டு தான் உடுத்தியிருந்த
திருமணச் சேலையை தன்னுடைய அத்தையிடம் காட்டினாள்.
அடர் சிவப்பில் அங்கங்கே பூக்களோடு இருந்த புடவையின் நிறம் சற்றே பயமுறுத்தினாலும், புடவையின் மென்மையும், கட்டியதே தெரியாத அளவுக்கு லேசான கனமும் வதனியை பெருமூச்சு விட வைத்தது.
"ஒனக்கென்னடா தங்கம்.....?
ராணி மாதிரியிருக்க! இன்னும் தாலியும், மெட்டியும், நெத்தி வகிட்டுல குங்குமமும் தான் பாக்கி.... மத்தபடி பூ ஆரம்! அத நம்ம
மரியம் பொண்ணு கொண்டு வர்றேன்னு சொல்லுச்சோ? எல்லாத்தையும் நியாபகமா எடுத்துக்கிட்டாச்சு; சரி தங்கம்.... போ..... மேல ரூமுக்குப் போயிட்டு
இந்த முகூர்த்த புடவையோட உங்க அம்மாவையும், வினோத்து தம்பியவும் ஒருக்கா கும்பிட்டுக்கடா!" என்று சொன்ன முகிலமுதத்திடம் தலையை ஆட்டியவள் புதுப்புடவை சரசரக்க மாடிக்கு ஏறினாள்.
கீழிருந்த இருவரின் புகைப்படங்களை அவள்
அத்தனை மறுப்பு சொல்லிய போதும் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் பிடிவாதமாக எடுத்து வந்து மேலே அவளுடைய இடத்தில் மாட்டியவன் ஜனமேஜயன் தான்.....!
மொட்டை மாடிக்கு மறுபடி ஒருமுறை ஏறி செடியில் அன்று பூத்து புதிதாக நின்ற மூன்று சிவப்பு பட்டன் ரோஜாக்களை பறித்துக் கொண்டு வந்தவள் கற்பகாம்பாள், வினோத் மற்றும் மனோன்மணியின் புகைப்படங்களுக்கு ஒவ்வொரு பூவை வைத்தாள்.
கண்மூடி கைகூப்பி நின்று கற்பகாம்பாளை சில நிமிடங்கள் வணங்கியவள் கண்களைத் திறந்து தன்னுடைய அன்னை மற்றும் காதலனின் புகைப்படங்களுக்கு முன்னால் வந்து கையைக் கட்டிக் கொண்டு நின்றாள்.
"வினு.... மனோம்மா; இன்னுங்கொஞ்ச நேரத்துல நான் ஜெயன கல்யாணம் பண்ணிக்கப் போறேன். நீங்க ரெண்டு பேரும் போனதுக்கப்புறம் எதுக்குடா வாழணும், இதுக்கு மேல வாழ்ந்து என்னத்தடா செய்யப் போறோம்ங்குற மாதிரி அன்னைக்கு எனக்குள்ள ஒரு எண்ணம் வந்துச்சு!"
"இன்னிக்கு அந்த மாதிரி ஒரு மனநிலை இல்லவே இல்ல!
நீங்க ரெண்டு பேரும் உயிரோட இருந்துருந்தா ஜெயனுங்குற ஒரு ஆள நான் சந்திச்சுருப்பனான்னு கூட எனக்குத் தெரியல.....! ஒரு இக்கட்டான நேரத்தில தான் சந்திச்சேன்னாலும், ஜெயன
மாதிரி ஒருத்தன பாத்தத, அவங்கூட பழகுனத, இப்ப அவன கல்யாணம் பண்ணிக்கப் போறத நெனச்சு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்.....!"
"வினு.... ஜெயன் சொன்ன மாதிரி ஒன்னைய எங்கொழந்தங்களுக்கு பெரியப்பாவா எல்லாம் என்னால யோசிக்க முடியல; அவன் எம்மேல உள்ள பொஸஸிவ்னெஸ்ல அப்டியெல்லாம் உளறுறான்..... பட் நான் தெளிவா தான் வினு இருக்கேன். நீ என்னிக்குமே எம்மனசுல ஒரு லவ்வரா தான் இருப்ப....!"
"நான் சாகுற வரைக்கும் உன்னைப் பத்தின ஏதாவது ஒரு நியாபகத்தோடயே தான் இருந்துட்டு இருப்பேன். என் மனசுல ஒனக்கான காதல் தனி; ஜெயனுக்கான காதல் தனி! ஐ ஸ்டில் லவ் யூ....... அண்ட் லவ் யூ பார்எவர்! எங்க ரெண்டு பேரையும் நீயும், அம்மாவும் ஆசிர்வாதம் பண்ணனும் வினு!" என்று சொல்லி முடித்தவளுக்கு ஏனோ அன்று அழுகை, கேவல், விம்மல் இவை எதுவுமே வரவில்லை.
காலையில் எவ்வாறு மகிழ்ச்சியாக எழுந்தாளோ அதே போல் தான் இப்போதும் மகிழ்ச்சியாக இருந்தாள்.
"நேத்து ராத்திரியே கீழ வந்து என் ரூமுக்குள்ள படுத்துக்கோன்னு உயிர வாங்கிட்டு இருந்தான்.... இனிமே மேல இருக்குற இந்த ரூம யூஸ் பண்ண விடுவானான்னு தெரியலயே?" என்று யோசித்தவள் மாறாத சிரிப்புடனே கீழிறங்கி சென்றாள்.
அவள் கீழே சென்ற போது மரியமும் நஸாரும் வீட்டிற்குள் அமர்ந்திருந்தனர்.
"ஏ.... வாங்க வாங்க! எப்ப வந்தீங்க? மரியம்.... ஒன்னைய தான் அப்போலேர்ந்து காணும்னு நெனச்சு நீ எப்ப வருவன்னு எதிர்பார்த்துட்டே இருந்தோம்!" என்று சொன்ன வதனியிடம் ஆச்சரியமான பாவத்துடன்,
"நெஜமாவா.... எங்களவா எதிர்பார்த்த நீயி? ஒன்னோட ஆளு ஒன்னைய தனியா உட்டுட்டு அவரு பாட்டுல கெளம்பிட்டாப்லயாம்; அவரு மேல கோவமா இல்லயா நீ? நியாயப்படி அவரு தான ஒன்னைய மண்டபத்துக்கு கூட்டிட்டுப் போயிருக்கணும்?" என்று கேட்டாள் மரியம்.
"ஏய்.... சும்மாயிருடீ பட்டனு! அந்தப்புள்ளய ஏன்டீ இப்ப வேணும்னுட்டு ஏத்தி உடுற?" என்று மனைவியின் காதைக் கடித்த நஸார் முகிலிடம்,
"ம்மா.... நாமளும் அங்க மண்டபத்துக்கு கெளம்புவோமா?" என்று கேட்ட படி அங்கு கொண்டு செல்ல வேண்டிய சில பைகளை காரில் ஏற்றிக் கொண்டிருந்தான்.
"எப்ப பாரு பிள்ளைங்க மூணு பேரையும் விட்டுட்டு விட்டுட்டு வந்துர்ற நீ.... இதுல ஜெயன் மேல வேற கம்ப்ளைண்ட் சொல்றியா? ஒன்னைய என்ன செய்யலாம்?" என்று மதியத்திற்கு தண்டனை யோசித்துக் கொண்டிருந்தவளிடம் சந்தோஷ சிரிப்புடன்,
"அட நான் என்னம்மா பண்றது? எங்க வூட்டு பெரிசுங்க ரெண்டுக்கும் திடீர்னு எங்க மேல என்ன கரிசனம் வந்துச்சோ தெரியல..... புள்ளைங்கள நாங்க பாத்துக்குறோம், நாங்க பாத்துக்குறோம்னு வரிஞ்சு கட்டிக்கிட்டு நிக்குதுங்க..... மரியம் சேத்து வச்சு குடுத்த பணத்தால
கடன பூரா அடைச்சுட்டேன்னு நஸார் சொன்னதுனாலயோ, இல்ல அவனோட அத்தாவ இந்தியாவுக்கு கூட்டிக்கிட்டு வந்ததுனாலயோ தெரியல.... இப்ப நம்ம காட்டுல நின்னு மழ பெய்யுது! அத கொஞ்சம் அனுபவிச்சுக்கிடுவோமே? என்ன சொல்ற?" என்று கேட்ட படி அவள் தலையில் பூச்சரத்தை வைத்து விட்டு கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாள் மரியம்.
"ஒரு கேள்விக்கு பதில் சொல்லிட்ட? என் வீட்டுக்காரர எதுக்கு கொற சொன்ன? அதுக்கு நீ இன்னும் ஜஸ்டிபிகேஷனே சொல்லலையே?"
என்று புருவம் தூக்கியவளிடம்,
"யம்மா கல்யாணப் பொண்ணு.... தெரியாம ஒங்காள பத்தி பேசிட்டேன். இனிமே பேசல. மன்னிச்சுக்க தாயி!" என்றாள் மரியம்.
"ஏ.... புள்ளைகளா? இன்னும் என்னத்த பேசிக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்கீங்க? வந்து வண்டியில ஏறுங்க. இருவது நிமிஷத்துல அவேன் முன்னால போயி நிக்கணும்; இல்லையின்னா அதுக்கு வேற தனியா குதிப்பான்!" என்று கூப்பிட்ட முகிலமுத்திடம்,
"இந்தா வந்துட்டோம்மா!" என்று சொன்ன மரியம் "வாடா வதனி கெளம்புவோம்!" என்று அவள் கைப்பற்றி அழைத்து செல்ல நஸார் வீட்டைப் பூட்டி விட்டு கார் ஸீட்டில் அமர்ந்து வண்டியை கிளப்பினான்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro