Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 73

"மரியம்.... என்ன இதெல்லாம்? எதுக்கு இத்தன பேர கூப்ட்டு இவ்ளோ க்ராண்டா நிச்சயம்? எப்டி பாத்தாலும் அம்பது அறுபது பேர் வந்துடுவாங்க போலிருக்கே?" என்று அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகளின் எண்ணிக்கையை மனதிற்குள்ளாக கணக்கிட்டு மரியத்திடம் கேள்வி கேட்டாள் வர்த்தினி.

"இது கூட இல்லாம எப்டிங்க பேங்க் அம்மா? நீங்க எங்களுக்கு குடுத்த ஐடியாவுல தான் அந்த லூசுப்பய நஸாரு பழய வண்டிங்கள எல்லாம் கடாசிட்டு சைனப் டிராவல்ஸுல புது வண்டியெல்லாம் எறக்கி கடன் முழுசையும் கட்டி முடிச்சுருக்கான்! எத்தன வருசமா அவனோட வியாபாரத்துல மட்டுந்தான் நா சேத்து வச்ச பணத்த போடணும்னு நெனச்சு பூதம் மாதிரி பணத்த காத்து வச்சுக்கிட்டு இருந்தேன் தெரியுமா?"

"ஒங்கிட்ட பேசுன பெறவு தான் இந்த நஸாருப்பயலுக்கு தன்னோட தப்பு கொஞ்சம் ஒரைக்கவே செஞ்சுச்சு! எல்லாம் நல்லபடியா ஸெட் ஆகி இப்ப நாங்க எங்க வேலையப் பாத்துக்கிட்டு நிம்மதியா இருக்குறதுக்கு காரணமே நீயும் ஜெயனுந்தான்.....!" 

"ஒனக்காக எல்லாரையும் ஒண்ணா தெரட்டுறதுக்கு நாலு போனப் போடுறதுல என்ன கொறஞ்சு போயிடப் போவுது? பாரு புள்ள......
நஸாரோட அம்மியும் கொஞ்ச நேரத்துல இங்க வரும்; வந்து வழக்கம்போல எதுக்கு இப்டி கண்ணு மண்ணு தெரியாம காச அள்ளி கொட்டுற அது இதுன்னு நஸாருப்பய கிட்ட எதாவது பேசும்! நீ வழக்கம்போல அதோட பேச்ச காதுலயே வாங்காத மாதிரியே இருந்துக்க என்ன?"

"பேங்க்ல வேல பாக்குற ப்ரெண்ட்ஸ்ல அச்சதன் ஸாரும் நாலஞ்சு பேரும் வருவாங்க வதனி.... நீ செய்ய வேண்டியதெல்லாம் மொகத்த சிரிச்சாப்லயே வச்சுக்கிட்டு இன்னிக்கு பங்ஷன நல்லா என்ஜாய் பண்ண வேண்டியது தான்.... சரியா; ஏதோ
எனக்கு தெரிஞ்ச மேக்கப்ப செஞ்சு உட்டுட்டேன்! இதுலயே நீ அம்புட்டு அழகா இருக்க தெரியுமா?" என்று கூறி வதனியை கன்னம் வழித்து நெட்டி முறித்தாள் மரியம்.

"என்ன சொல்றதுன்னு தெரியல...... பட் நீயும் நஸார் ஸாரும் எங்களுக்கு செய்றதுக்கெல்லாம் ரொம்ப தேங்க்ஸ் மரியம்! பிள்ளைங்க மூணு பேரையும் எங்க? வீட்லயா இருக்காங்க?" என்று மரியத்திடம் கேட்டாள் வதனி.

"அதுங்க மூணும் ஏதோ ஸ்பெஷலா ரெடி ஆகுதுங்களாம்! நஸாரோட அத்தாவோட கொஞ்ச நேரத்துல இங்க வரும்ங்க; நீ போயி பொண்ணு ஒக்காருற சேர்ல ஒக்கார்றியா?" என்று கேட்ட மரியத்திடம் வேகமாக மறுப்பாக தலையசைத்தாள் வதனி.

"அட இவளே.... என்ன புள்ள டிங்கு டிங்குன்னு மண்டைய ஆட்டுறவ? ஜெயன கல்யாணம் பண்ணிக்கணும் தான?" என்று கேட்டவளிடம் வெட்க முறுவலுடன்,

"ஆமா.... ஆனா அவங்களும் வரும் போது தான்.... அவங்களோட சேந்து தான் சேர்ல ஒக்காருவேன்!" என்றாள்.

"பார்றா..... அவங்களும் வரும் போது தான்.... அவங்களோட சேந்து தானா? ரொம்ப நல்லாயிருக்குதுங்க மேடம்! ஜெயனு அண்ணாவ பத்தி நாம கணிக்கவே முடியாது..... வெறும் சேரெல்லாம் எனக்கு வேண்டாம்; நா காரு மேல தான் ஏறி மால மாத்துவேன்னு சொன்னாலும் சொல்லுவாப்டி..... ஒங்க அவங்களோடவே சேந்து நீயும் ஏறுவியா காரு மேல?" என்று புன்னகைத்த படி மரியத்திடம்,

"ம்..... ஏறுவேனே?" என்று ஆமோதிப்பாக தலையசைத்தாள் வதனி.

"நீயி ஒரு முடிவோட தான் புள்ள இருக்க.... அவ்ளோ லவ்வு அந்த ஜெயனு பய மேல!" என்று கேட்டவள்,

"ஒன்னோட அவங்கள எங்க இன்னும் காணும்? வாசல்லயே நின்னுக்கிட்டு உள்ள வந்து ஒக்கார மாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருக்குறாரா? நீ இரு. நான் போயிட்டு வர்ற ஆளுங்கள கவனிச்சிக்கிட்டு ஒங்க ஆள உள்ள தள்ளி உடுறேன்!" என்று வதனியிடம் சொல்லி விட்டு சென்றாள் மரியம்.

"ஹலோ மிஸ்டர் ஜனா..... என்ன ஸார் வாசல்ல வந்து இப்டி தனியா நிக்குறீங்க? நாளைக்கு மேரேஜ் பண்ணப் போறவர் இந்நேரம் ஒங்க பியான்ஸியோட இல்ல நிக்கணும்?
எங்க வதனிய காணும்?" என்று நஸாருடைய கடையின் வாசலில் வந்து நின்று அவன் கைகுலுக்கிய படி அவளைப் பற்றி விசாரித்த அச்சுதனிடம்,

"வாங்க அச்சுதன் ஸார்!  ஊர்ல அம்மா அப்பா உங்களோட மத்த சொந்தக்காரவுங்க எல்லாரும் நல்லாயிருக்காங்களா? நான் கேட்டவொடனே வர்த்தினிய நீங்க உங்க ஊருக்கு கூட்டிட்டுப் போயிட்டு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸூங்க ஸார்!"

"அவ வீட்டுக்கு வந்ததுல இருந்து நானும் அவளோட உங்க பேங்க்க்கு ஒருநாள் வரணும்னு நெனச்சுட்டே இருந்தேன். கல்யாண வேலையில அப்டியே பொழுது போயிடுச்சுங்க ஸார்.... உள்ள போயி ஒக்காருங்க ஸார்! நா இதோ வாரேன்!" என்று சொல்லி நஸார், மரியம், முகிலமுதம் ஆகியோரிடம் மரியாதைக்காக ஒரு வணக்கம் சொல்லி சந்தனம் எடுத்துக் கொண்ட அச்சுதனை உள்ளே அனுப்பி வைத்து விட்டு ஒருவிதமான பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தான்.

"எலேய்... என்ன டவுசருக்குள்ள பூச்சி கீச்சி போயிடுச்சா என்ன? ஒருமாதிரியா நெளிஞ்சுக்கிட்டே நிக்குற.....?" என்று தன் நண்பனிடம் கேட்டவன் மனைவியின் பக்கம் திரும்பி,

"ஏய் பட்டனு...... எல்லாரும் இப்டி வெளிய வந்து நின்னா வந்தவங்கள எவன்டீ கவனிக்குறது? எல்லாருக்கும் காஃபி ஸ்நாக்ஸ் எல்லாம் குடுக்குறாய்ங்களான்னு பாரு போ!" என்று சொல்லி அவளை உள்ளே விரட்டினான்.

அவள் திரும்பும் முன்பாக முகிலமுதம் அவனிடம் சென்று,

"நஸாரு... மரியமும் நீயும் புருஷன் பொண்டாட்டியா சேந்து இங்க நில்லுங்கய்யா! நா போயி உள்ள இருக்குறவங்கள கவனிக்குறேன்!" என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்.

"லேய் இன்னும் நீ ஒன்னோட ஆட்டத்த நிப்பாட்டலயா? என்ன தான்டா ஆச்சு ஒனக்கு?" என்று கேட்டு பரீட்சை ஹாலில் மடி நிறைய பிட்டுகளுடன் போய் திருதிருவென விழித்து வியர்த்து வழிபவன் போன்று நின்ற ஜெயனை ஒரு விநோத ஜந்துவைப் பார்ப்பது போல பார்த்தான் நஸார்.

"அது.... வந்.....து! அவ ரொம்ப அழகாயிருக்காடா மாப்ள!" என்று சொன்னவனிடம்,

"எவ ரொம்ப அழகாயிருக்கா?" என்று கேட்டவன் ஜெயனுடைய முறைப்பில்,

"ஓ.... ஒன்னோட வீட்டுக்காரம்மாவ பத்தி சொல்றியா? ஆமா.... தங்கச்சி அழகாத்தா இருக்குது; அதுக்கென்ன இப்ப?" என்று அவனிடம் கேட்டான்.

"இல்ல.... நான் அவ பக்கத்துல போயி நிக்கும் போது ரொம்ப கண்றாவியா தெரிஞ்சன்னா என்னடா செய்யுறது? மரியம்.... நீ ஒம்பையில க்ரீம், மாய்சரைசர், சீரம் இந்த மாதிரி ஏதாவது மேக்கப்பு சாமான் வச்சுருக்க? இருந்தா குடுவேன்! நான் அதப் போட்டு கொஞ்சமா அழகாகிக்குவேன்; அதெல்லாம் எப்டி யூஸ் பண்றதுன்னு வர்த்தினி எனக்கு ஏற்கனவே சொல்லிக் குடுத்துருக்கா!" என்று கேட்டவனைப் பார்த்து வாய்பிளந்த நஸார்,

"மாப்புள..... என்னடா கிரிமூ, மாய்ச்சரைசுர், சீரம்முன்னு என்னென்னத்தயோ இவ கிட்ட கேட்டுக்கிட்டு இருக்க..... நமக்கென்னடா நம்மல்லா கறுப்பு அழகனுங்கடான்னு சொல்லிக்கிட்டு கெத்தா சுத்திக்கிட்டு இருந்த நீயும்
கடைசில இப்டி ஆகிட்டியேடா? போடா.... போடா! என்னத்தயாவது மூஞ்சியில பூசிக்கிட்டு நல்லாயிருங்கடா!" என்று சொன்ன நண்பனிடம் மெலிதான வெட்கத்தில் சிரித்தவன்,

"டேய் மாப்புள.... இதெல்லாம்
எப்பவாச்சுடா தான்டா!" என்று சொல்ல நஸார் கடுப்பானான்.

"என்ன கருமத்தயாவது மூஞ்சியில அப்பி பூசு..... ஆனா இப்டி வெக்கம் மட்டும் படாத; தாங்க முடியல!" என்று சொன்னவன் மரியம் தன்னுடைய ஹேண்ட்பேகில் இருந்து உருட்டி எடுத்து வந்த சில பல அழகு சாதன பொருட்களை தன்னுடைய நண்பனிடம் கொடுத்து விட்டான்.

கால் மணி நேரத்தில் ஜெயன் வதனியுடன் சேர்ந்து அவனுக்கான மணமகன் சேரில் அமர்ந்திருந்தான். மோனோலிசாவில் அவளுடன் அமர்ந்து மாலை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஆசை தான்..... ஆனாலும் இன்றைய சூழ்நிலையை மனதில் கருதி அமைதியாக போடப்பட்ட சேரில் அமர்ந்திருந்தான்.

"என்ன குன்னூர் ராஜா ஸார்.... சைலண்டா போயிட்டு ஒரு கோட் மேக்கப் போட்டு வந்தீங்க போலிருக்கு? எங்க போச்சு ஒங்க கான்ஃபிடென்ஸ் எல்லாம்?" என்று புருவம் உயர்த்தி அவனைப் பார்த்து சிரித்தவளிடம்,

"ஏய் சும்மாயிருடி நீ வேற....!" என்று மறுபடி வெட்கப்பட்டான்.

"இப்ப மொகத்துல வந்த இந்த வெக்கத்தால நீ ரொம்ப அழகாயிருக்க ஜெயன்!" என்று சிலாகித்தவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டான்.

பாயம்மா அந்த விழாவிற்கு வருகையில் மணமக்களுக்கான மாலைகளை வாங்கி வந்தார். நஸாரின் தந்தை பேரன், பேத்திகளுடன் நன்றாக ஒட்டிக் கொண்டு அவர்கள் கேட்டதை எல்லாம் அவர்களுக்காக செய்து கொண்டிருந்தார். ஜெயன் வதனி இருவரிடமும் தனித்தனியாக நலம் விசாரித்து அவர்களை வாழ்த்தவும் மறக்கவில்லை அந்தப் பெரியவர்.

"ஏ.....லேய்! இங்க வாடா!" என்று அதிகாரமாக அவனை அழைத்த பாயம்மாவின் பக்கத்தில் ஜெயன்  சென்று நின்றதும்,

"நஸாரோட அத்தா இப்ப எங்கூடவே இருக்காவ! அதுக்கு நா ஒனக்குத்தா நன்றி சொல்லணும்.... அவுக கூட இருக்குறப்ப தானுல எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு! இத்தன வருசம் அர்த்தங்கெட்டு எம்மவன வேற வெளிநாட்டுக்குப் போடா போடான்னு வெரட்டி உடப் பாத்துக்கிட்டு இருந்தேன்..... நீயும், மரியமுந்தா ஒங்க முடிவுல ரொம்ப தெளிவா இருந்தீக! ஒன்னைய நா ஒம்மூஞ்சிக்கு நேராவே நெறய வஞ்சுருக்கேன்.... அதெல்லாம் மறந்துரு என்ன?" என்று கேட்டார்.

"பரவால்லமா.... இருக்கட்டும்!" என்று அவரிடம் சொன்ன ஜெயன் தன்னுடைய மனதிற்குள்ளாக ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சை விட்டான்.

அனைவரும் வந்த பிறகு மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர்.

"ஏ.... யப்பா! நீ கட்டியிருக்குற சேலைக்கு தக்கன மாலையும் அதே கலருல இருக்கேடீ..... பாயம்மா நெசமாவேத்தா நம்மள மன்னிச்சுடுச்சோ? நமக்கு
இவ்ள அழகா வேறொருத்தர் மால போடுறதுன்னா நாம மாசத்துக்கொருக்கா கல்யாணம் பண்ணிக்கலாம் போலிருக்கே?" என்று கேட்டவனை முதுகில் கிள்ளியவள்,

"பண்ணுவ... பண்ணுவ! ஏன் பண்ண மாட்ட?" என்று கேட்டு முறைத்தாள்.

வருங்கால தம்பதியர் கேக் வெட்டவில்லையா என்று கேட்ட சிலரிடம் ஹிஹிஹி என்று வழிந்து நஸார் தலையைச் சொறிய ஜெயன் கொஞ்சங்கூட கவலையே படாமல் நண்பனிடம்,

"நஸாரு.... கொஞ்சூண்டு பன் அல்வாவ இங்க எடுத்துட்டு வரச் சொல்லுடா!" என்று யோசனை அளித்தான்.

"இந்தோ ஒரே நிமிஷத்துல கொண்டாரேன்டா!" என்று சொன்ன நஸார் பிரியாணியுடன் பரிமாறப்படும் இனிப்பான அல்வாவை எடுத்து வர ஜெயனும் வதனியும் ஒருவருக்கொருவர் பன் அல்வாவை ஊட்டி விட்டுக் கொண்டனர்.

"ஸ்பூனால ஏன்டீ இனிப்ப ஊட்டுற? ஒன்னோட வெரலோட சேத்து அல்வா சாப்புடணுமுன்னு ஆசயா இருக்கு எனக்கு!" என்று மெதுவான குரலில் சொன்னவனை,

"ச்சூ.... சும்மாயிரு!" என்று சொல்லி அடக்கியவள் அவன் ஊட்டிய ஒரு வாய் அல்வாவை ரசித்து சுவைத்தாள்.

ஒவ்வொருவராக வந்து  மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து, பரிசளித்து விட்டு பின் நஸார் மரியம் இருவருமாக தயாரித்து வைத்திருந்த சிறப்பான அசைவ விருந்தை சாப்பிட்டு முடித்த போது ஜெயனுக்கு

"ஷப்பாடா.... இதென்ன நம்ம ஒருநாப்பூரா மாங்கு மாங்குன்னு
பாக்குற வேலைய விட ரொம்ப கஷ்டமான வேலையாயிருக்கு?" என்ற அயர்ச்சி தோன்றியது.

"லேய் ஜெயனு.... வந்த மொய்க்காசு எப்படியும் ஒரு இருபது இருபத்தஞ்சு ரூபா தேறும் போலிருக்குடா..... வந்த காசுல வதனிப்புள்ளைக்கு என்னத்தயாவது உருப்படியான ஒரு சாமான வாங்கிக் குடு!" என்று அதற்குள் அனைவரும் மொய்யாக கொடுத்த பணத்தை எண்ணி அவன் கையில் திணிக்க முற்பட்டான் நஸார்.

"அதுல ஒரு மூவாயிரத்த மட்டும் தனியா எடுறா நஸாரு!" என்று கேட்டான் ஜெயன்.

"எதுக்குடா இப்ப புடிச்சு காச கேக்குற? அந்த புள்ளய தள்ளிக்கிட்டு ஓட்டலுக்கு போய் சாப்புட கெளம்பிடாத. எல்லாருக்கும் பிரியாணி செஞ்சு எடுத்தாந்துருக்கு தெரியும்ல?" என்று கேட்டுக் கொண்டிருந்தவன் அருகில் வந்து நின்ற மரியம்,

"ஜெயனு எதுக்கோ காசு கேட்டா குடுவேன்..... ஏன் எதுக்குன்னு காரணம் கேட்டுக்கிட்டு இருக்க!" என்று கணவனிடம் கேட்டாள்.

"எங்க இருந்தாலும் எம்மேல ஒரு கண்ண வச்சுக்கிட்டே இருப்பியாடீ நீயி? அவங்காச அவங்கிட்ட தர்றதுக்கு எனக்கெங்க வலிக்குது? இந்தாடா ரூவா!" என்று மனைவியிடம் பேசிக் கொண்டே ஜெயன் கேட்ட பணத்தை அவனிடம் கொடுத்தான் நஸார்.

"டேய்... தம்பி ராக்லேண்டு இங்க வாம்மா!" என்று ஒருவனை ஜெயன் அழைக்க மரியம் சிரித்தபடி தலையாட்டிக் கொண்டாள்.

"என்னங்கண்ணா?" என்று கேட்டு வந்து நின்றவனிடம்,

"இதுல மூவாயிர ரூபா பணம் இருக்கு. சாப்ட்டு முடிச்சுட்டு எல்லாரும் ஜாலியா சினிமாவுக்கு போயிட்டு வாங்க. சினிமா வேண்டாம்னு நெனக்குறவங்க ஒங்க பங்கு காச வீட்ல போயி குடுத்துருங்க...... ஆனா அடுத்த தடவ நம்ம ஓனர் ஸார் இந்த மாதிரி ஏதாவது பங்ஷனுக்கு கூப்டாருன்னா நீங்க மட்டும் வராம ஒங்க குடும்பத்துல எல்லாரையும் கூட்டிட்டு வாங்க என்ன?" என்று சொல்ல அந்த இளைஞர்கள் ஜெயனின் பேச்சிலும் அவர்களுக்கு கிடைத்த பணத்திலுமாக மிகவும் மகிழ்ந்தனர்.

"தேங்க்ஸ்ணா! தேங்க்ஸூங்கக்கா!" என்று மரியம், நஸார், ஜெயன், வதனி அனைவரிடமும் குத்துமதிப்பாக தலையை ஆட்டியவர்கள் ஒரு கூட்டமாக சேர்ந்து சாப்பிடச் சென்றனர்.

"அடே.....ய்! அதுக்குள்ள எதுக்குடா இவனுங்க கையில காசக் குடுத்த? பரிமாறுறதுக்கு ஒருத்தன் நிக்க மாட்டான்டா; பிரியாணிய அண்டாவோட அடிச்சு காலி பண்ணிட்டு சிட்டா பறந்துடுவானுங்கடா மாப்புள!" என்று கூறி எரிச்சல்பட்டான்.

"டேய்.... வயசுப்பசங்க! மதியத்துல இருந்து அவனுங்கள இங்க கூப்ட்டு வச்சு எவ்ள வேல வாங்கியிருக்க நீயி? என்னடா இத்தன வேலய செஞ்சோமே.... ஓனர் நம்மள எதுவும் கவனிக்க மாட்டாரான்னு அவனுங்க நெனக்க கூடாது பாரு.... அதுக்குத்தான்டா பணம் குடுத்தேன்.... நம்ம பயலுகடா; நல்லா சாப்ட்டு சந்தோஷமா கெளம்பட்டும்; நமக்கென்ன அடுத்தவங்க பரிமாறுறது... டேக்ஸாவ ஒரு பெஞ்சுல தூக்கி வச்சுக்கிட்டா நமக்கு வேணுங்குறத நாமளே போட்டு சாப்புடப் போறோம்.... பசங்க சாப்டதும் அடுத்தவங்களுக்கு எடுத்து வைக்கலாம்! வா போவம்!" என்று சொன்னவனை நஸார், மரியம், வதனி மூவரும் ஆச்சரியமாகவும், பெருமிதத்துடனும், காதலுடனும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro