Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 64

மதியம் நண்பனுடைய வீட்டில் சாப்பிட்டு விட்டு, வதனியை கொண்டு போய் வீட்டில் விட்டவன் வீட்டில் சற்று நேரம் அமுதாம்மா, கோமதி, இளங்கோ அனைவரிடமும் தன்னால் முடிந்த அளவிற்கு தொல்லையைக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

இரவு எட்டரை மணியளவில் நண்பனுடைய வீட்டுச்சாவி தன்னிடம் இருக்கும் நினைவு வரவும் நஸாருக்கு கூப்பிட்டு அவன் எங்கே இருக்கிறான் என்று கேட்க நஸார் கடையில் தான் இருப்பதாக சொல்லவும் ஜெயன் நேராக அங்கு சென்று விட்டான்.

"இன்னிக்கு எங்க எல்லாருக்கும் லீவுன்னு சொல்லிட்டு, நீயும் மொத ஆளா வீட்டுக்கு ஓடிட்டு இப்ப இங்க வந்து ஒக்காந்துக்கிட்டு என்னடா பண்ற?" என்று கேட்டு வீட்டுச்சாவியை நீட்டிய ஜெயனிடம் ஒன்றும் பேசாமல் சாவியை வாங்கிக் கொண்டு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான் நஸார்.

"நீ ஷட்டர சாத்திட்டு எங்கூட வெளிய வா சொல்றேன்!" என்று சொன்னபடி தன் நண்பனுடைய சட்டையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தவனிடம்,

"அட இருடா; வந்து தொலையுறேன்!" என்று சலித்துக் கொண்ட நஸார் தன்னுடைய பைக் சாவியை எடுத்துக் கொண்டு
கடையின் கதவை பூட்டுவதற்கு ஆயத்தமானான்.

கடையைச் சாற்றி விட்டு பைக்கை நிறுத்தும் இடத்திற்கு பக்கத்தில் இருந்த கல்பெஞ்சில் இருவரு‌ம் சென்று அமர்ந்து கொண்டனர்.

"அங்கங்க அப்டி அப்டியே எல்லாரையும் அத்து உட்டுட்டு ஓடிர்றது? மரியத்தையும் புள்ளைங்களையும் வீட்ல கொண்டு வந்து விட்டுட்டியா இல்ல எங்கள பாதியில அத்து உட்டுட்டு ஓடுனாப்ல அதுங்களயும் ரிஸாட்டுலயே உட்டுட்டு வந்துட்டியா?"

"உங்க அம்மா ஊருக்குப் போயிருக்குதேன்..... நீங்க ரெண்டு பேரும் இப்பத்தா கொஞ்சம் நிம்மதியா இருக்க முடியும்.... அதெல்லாம் சரித்தே; ஆனா எதுக்குடா எங்க ரெண்டு பேரையும் அநாவசியமா ஒங்க வீட்டுக்கு வர வச்சுட்டு உட்டுட்டுப் போன?" என்று கேட்ட ஜெயனிடம் பதிலளிக்காமல் வெறுமனே உச்சுக்கொட்டினான் நஸார்.

"உச்சுன்னா.... பயந்துருவமா? எதுக்குப் பாதியில ஓடுனன்னு சொல்லல....? தொறக்காம இறுக்கி மூடிட்டு இருக்குற அந்த வாயிலயே நாலு மிதி விழப்போவுது பாத்துக்க!" என்று மிரட்டியவனிடம்,

"சரிப்பா... நான் செஞ்சது தப்புத்தேன்; வீட்டுக்கு சாப்புட வந்த ஒன்னைய கவனிக்காம பாதியில ஓடுனது குத்தந்தேன்...... ஆனா நாங்க போனதும் நீயி ஒன்னோட மேனேசரம்மா கையக் கூடப் புடிக்காம உத்தமபத்துனனா இருந்தேன்னு எங்கிட்ட சத்தியம் பண்ணு..... வாயில என்ன வாயில? குறுக்குல வேணுன்னாலும் வாங்குறேன் நாலுமிதி..... சத்தியம் பண்றீங்களா தம்பி?" என்று கேட்டவனை குர்ரென்று முறைத்தவன்,

"போடா டேய்....!" என்று அசட்டையான குரலில் சொன்னான்.

"ஆ.....ங்! இப்பச் சொன்ன பாரு..... இதுதான் பேச்சு; இப்ப சொன்ன போடா டேய நீ அப்ப சொல்லியிருக்க மாட்டன்னு என்ன நிச்சயம்? அதுனால தான் சாப்பாட்ட முடிச்சவொடனே மரியாதயா நானே கெளம்பிட்டேன்!"

"ஒங்க ரெண்டு பேரையும் நாங்க வீட்டுக்கு சாப்புடக் கூப்ட்டுருக்கோம். நான் அசைவத்துல கைய வைக்க மாட்டேன்னு சொல்லி நீயி முறுக்கிக்கிட்டு நிக்குற.... அப்ப ஒன்னைய வழிக்கு கொண்டு வர்றதுக்கு அந்தப்புள்ள ஒனக்கு முத்தம் கித்தம் குடுத்து, எதாவது புது மாதிரியா ஊட்டி உட்டுச்சுன்னா அத பாத்து எங்களுக்கு கண்ணு நொள்ளையாகுறதுக்கா? காதலெல்லாம் ஒருத்தருக்கும் தெரியாம நாசூக்கா பண்ணனும்டா ஜெயனு!"

"ஏதோ நமக்குத்தா நிம்மதியா பீவிய லவ் பண்றதுக்கு எடமே கெடைக்க மாட்டேங்குது, நம்ம நண்பனுக்காவது ஃப்ரீயா பேசிக்க வீடு முழுசும் கெடைக்கட்டுமேன்னு நெனச்சேன்டா மாப்புள.... ஒரு உண்மையவும் சொல்லிர்றேன்; நானும் அங்க ரிஸாட்டுக்குப் போயிட்டு புத்தருக்கு சித்தப்பா பையன் மாதிரியெல்லாம் இருக்கலப்பா!" என்று சொன்னவனிடம்

"ஏன்டா டேய்..... எங்கிட்ட எதப் பேசுறதுன்னு பேசக்கூடாதுன்னு கொஞ்சம் யோசிச்சே பேச மாட்டியாடா நீயி?" என்று கேட்டு
ஜெயன் தன் தலையில் அடித்துக் கொண்டான்.

"ஒங்கிட்ட தானடா பேசுறேன்..... அதுவும் எவ்ளவு பேசணும்னு கரெக்டா நிறுத்துப் பாத்து தான் பேசுறேன்; பெறகென்ன?
இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டா ஜெயனு; இத்தன வருஷத்துல மரியத்த ஒங்கிட்ட எத்தன தடவ திட்டியிருக்கேன்? அதெல்லாம் ரொம்ப தப்பாகிடுச்சுடா மாப்ள.... அவ எனக்குத் தெரியாம நிறைய பணத்த பேங்க்ல போட்டு வச்சுருக்காடா!"

"இன்னிக்கு எங்க கிட்ட ஒங்க வருங்காலம் நெறய பேசுனாங்க. என்னைய சீண்டுன கோபத்துல நான் அவ கிட்ட திரும்ப கேள்வி கேட்டேன். அதுக்கு திருப்பிக் குடுத்தா பாரு..... அவ்ளோ பெரிய ஆச்சரியம்டா!" என்று கண்களை சுருக்கி பேசிக் கொண்டிருந்த நண்பனின் பேச்சை நிதானமாக கையைக் கட்டிக் கொண்டு கேட்டிருந்தான் ஜெயன்.

"டேய் ஜெயனு.... பதினாலு லச்சமாமுடா; மரியம் அவளோட பேர்ல பேங்க்ல போட்டு வச்சுருக்கான்னு சொல்றேன்! ஒனக்கு கேக்குதா இல்லையா?" என்று ஜெயனிடம் கேட்ட படி நண்பனுடைய முகத்தைப் பார்க்க அங்கு கொஞ்சங்கூட ஆச்சரியமா அதிர்ச்சியோ தென்படவில்லை.

"அதான் எனக்கு முதல்லயே தெரியுமே?" என்ற ஒரு சலனமில்லாத பார்வையைக் கண்டு கொலைவெறியான நஸார்,

"நாதாரிப்பயலே அப்ப ஒனக்கு எம்பீவியோட இந்தப் பதுக்கலும் முன்னாலயே தெரியும் அப்டித்தான? அவ லச்சக்கணக்குல காச சேத்து வச்சுட்டு இருந்தப்ப தான் நீயி எங்க அம்மி புள்ளைங்க டியூஷனுக்கு பணம் தர மாட்டேங்குதுன்னு எங்கிட்ட வந்து கொறபாடுனியாடா?" என்று கேட்டு தரையில் கிடந்த சிறு சிறு கற்களைப் பொறுக்கி அவன் மீது எறிந்து கொண்டிருந்தான்.

"அவளோட சம்பளத்த சேத்து வச்சிருக்குறதும் செலவு பண்றதும் மரியத்தோட இஷ்டம்.... ஆனா வீட்டுக்கு பணம் குடுக்குறதும், குடுக்குற பணத்த ஒழுங்கா செலவு பண்றாங்களான்னு பாக்குறதும் ஒன்னோட கடம! இதுல என்னைய தப்பு சொல்லாத..... டேய் கண்ட எடத்துல அடிக்காதடா; வலிக்குது!" என்று சொன்ன படி தன்னுடைய கை மற்றும் உடம்பை தடவிக் கொண்டிருந்தான் ஜெயன்.

"ம்ப்ச்! என்னவோடா? நம்ம ரெண்டு பேரோட ஆளுங்க சொல்ற அட்வைஸ கேட்டு இங்க நெறய மாத்தணும் போலருக்கு.... எல்லாம் சரியான பெறகு நான் அத்தாவையும் இங்கயே வரச்சொல்லிடலாம்னு நெனைக்குறேன்டா..... நீ என்ன சொல்ற?" என்று கேட்ட நண்பனிடம்,

"நான் என்ன சொல்றது? முடிவ நீயும் மரியமும் சேந்து தான் எடுக்கணும்!" என்று சொல்லி கைவிரித்தான் ஜெயன்.

பையன் கதை கேட்கும் நல்ல மூடில் இருக்கிறான் என்று தெரிந்து கொண்ட நஸார் வர்த்தினி அவர்களிடம் பேசிய அனைத்தையும் ரத்தினச்சுருக்கமாக அவனிடம் தெரிவி்த்தான்.

"எ.....தே? யூனிஃபார்மா...... நாங்க போடணுமா? டேய் வெண்ண ஒனக்கு அவ்ளோதா மரியாத பாத்துக்க!" என்று நாக்கை மடக்கிக் கொண்டு சீறியவனிடம்,

"சரி சரி..... பொங்காத! அடங்கு! ஸ்கூல்ல போடச் சொல்ற யூனிபார்மயே நாம வச்சுருக்கப் பிடிக்காம கடசி நாள் அன்னிக்கு எங்கயாவது எஸ்ஸாகி மரத்துல தொங்கி கொழவி கிட்ட கடி வாங்கி, இல்ல.... நாயத் தொரத்தி அது வெரட்டுற வெரட்டுல பயந்து ஒடியாந்து இப்டி பல வீர சாகசத்த பண்ணி போட்ட சட்டைய ஒருவழியா கிழிச்சுட்டு தான் வீட்டுக்கே வருவம்னு நமக்கு தெரியும்.... உங்க மேடம்க்கு அது தெரியுமா? பாவம் ஆபிஸரம்மா...... எல்லாம் கரெக்டா இருக்கணும்னு நெனக்குது!" என்று பேசியவனிடம் ஆச்சரியத்துடன்,

"ஏன்டா நஸாரு நெசமாவே நம்ம கூட இவ்ள யோசிக்கல பாரேன்!" என்று கூறினான் ஜெயன்.

"அதத்தான்டா நானும் சொல்றேன்! அவங்க ரெண்டு பேரையும் பத்தி நாம ரெண்டு பேரும் நெறய யோசிக்கணும். இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணும்!" என்று சொல்ல ஜெயன் புன்னகைத்துக் கொண்டான்.

"யப்பா டேய்.... பல்லக் காட்டுனதெல்லாம் போதும்; நாளைக்கு ஞாயித்துக்கிழம..... இன்னிக்கு லீவு முடுல நாளைக்கும் அப்டியே மல்லாந்துறாத; சவாரி இருக்குது, தெரியும்ல?" என்று முதலாளியாக நினைவு படுத்தியவனிடம் தலையாட்டி விட்டு "நான் அப்டியே கெளம்புறேன்டா மாப்புள!" என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான் ஜெயன்.

"வீட்ல சாப்புட என்ன செஞ்சு வச்சுருப்பா?" என்று யோசனையுடனே அவளுக்கு அழைப்பு விடுத்தான்.

"இப்ப என்ன வேணும் என்னோட Impatient கஸ்டமருக்கு?" என்று கிண்டலாக ஒலிக்கும் அவளது குரலில் Impatient கஸ்டமர் உலகத்தில் அவனுக்கான ஒரு தனிப்பட்ட அடையாளம்.

"உனக்கு எதுலயுமே பொறுமையே இல்லயா ஜெயன்?" என்று இரண்டு மூன்று தருணங்களில் அவனிடம் கேட்டவள் அவன் அவளை அழைக்கும் ஹெட்லைட்டு போல அவனை அவளுடைய ப்ரத்யேகமான பொறுமையில்லாத வாடிக்கையாளனாக மாற்றி விட்டாள்.

"என்னாச்சு? போன எடுக்க மாட்டேங்குறா? ஒருவேள அத மேல போட்டு வச்சுட்டு கீழ போய் அமுதாம்மாட்ட அரட்ட அடிச்சுட்டு ஒக்காந்துருக்காளோ?" என்று நினைத்தவன் அவளுக்காக பாம்பே சோன்பப்டி இனிப்பை ஒரு பொட்டலத்தில் வாங்கிக் கொண்டான்.

அமுதாம்மாவிற்கும் சில நொறுக்குத்தீனிகளை வாங்கிக் கொண்டவன் தன்னுடைய தெருவிற்குள் திரும்பி வீட்டின் பக்கவாட்டில் வண்டியை நிறுத்தினான்.

கோமதியையும், இளங்கோவையும் எட்டிப் பார்த்து அவர்களை வாஞ்சையாக தடவிக் குடுத்து விட்டு வந்தவன் வீட்டிற்குள் நுழைந்த போது முகிலமுதம் தன்னுடைய இரவு உணவான தோசையை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு எதுவும் பேசாமல் அவர்களுக்கென வாங்கி வந்த நொறுக்குத் தீனிகளை எல்லாம் அந்த அந்த காலி டப்பாவில் வைத்து விட்டு பொட்டலத்தை குப்பைத் தொட்டியில் போட்டான்.

"வெளியில சாப்டியா.... இல்ல இனிமே தான் சாப்டணுமா?" என்று கேட்ட தன்னுடைய அன்னையிடம்,

"நான் சாப்ட்டுக்குறேன் அமுதாம்மா; நீ சாப்ட்டு போய்ப் படு!" என்றான்.

"அப்ப..... ஒனக்கு காலையில, மதியம், நைட்டுன்னு சாப்பாடு
எல்லாமே அவ தான் பாக்கணுமில்ல? நான் ஒனக்கு வேண்டாதவளா ஆகிட்டேன் அப்டிதான? வந்த புதுசுல முகில்ம்மா முகில்ம்மான்னு என் பொடவதலப்ப புடிச்சுக்கிட்டு திரிஞ்சா... இப்ப ஒங்கூட சேந்து சுத்திக்கிட்டு என்னைய மதிக்க மாட்டேங்குறா; நான் சொல்ற ஒருபேச்சையும் கேக்க மாட்டேங்குறா! போங்க.....ரெண்டு பேரும் எப்டியோ போங்க!" என்று திட்டியவரிடம்,

"உங்க ரெண்டு பேருக்குள்ள வந்துருக்குற மொத சண்டயா அமுதாம்மா? சூப்பரு...... இன்னும் இதப்போல எத்தன வெரைட்டிய பாக்கணும்? நீ டென்ஷனாகாத. கொஞ்ச நேரம் டீவி பாத்துட்டு நிம்மதியா தூங்கு. நாங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரத்துல கீழ வந்து சாப்ட்டுட்டு படுத்துக்குறோம்!" என்று சொன்னவன் ஹாலில் இருந்து வெளியேறப் போக முகிலமுதம் அவனைத் தடுத்தார்.

"ஒங்க ரெண்டு பேருக்குள்ள கோபமுன்னா அத ஒங்க ரெண்டு பேருக்குள்ள வச்சுக்குங்க அமுதாம்மா. எனக்கு இன்னும் ஒங்க பிரச்சன என்னன்னு கூட தெரியாது. அதுனால அவளப் போயி பாக்காதன்னு எல்லாம் எங்கிட்ட சொல்லாத!" என்று சொல்லி விட்டு வழக்கம்போல மாடியேறினான்.

கதவருகில் நின்று "வர்த்தினி..... கதவத் தொற!" என்று அவளைக் கூப்பிட்டு கதவைத் தட்டிக் கொண்டிருந்தவனிடம்,

"நான் இங்க இருக்கேன் ஜெயன்!" என்று மொட்டை மாடியில் செடிகளின் பக்கத்திலிருந்து ஒரு கம்மலான குரல் வெளிப்பட்டது.

"லைட்டக் கூட போடாம முட்டிய கட்டிக்கிட்டு கவுந்துக்கிடுற அளவுக்கு இவியிங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சன வந்துருக்கும்? ஷப்பா... எதுக்கெடுத்தாலும் கண்ணக் கசக்கிக்கிட்டு... இவளுக்கு வேற வேலையில்ல!" என்று முணுமுணுத்தவன் தன்னவளை பார்க்க இன்னும் சில படிகள் ஏறினான்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro