Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 61

அன்றைய தினம் ஒரு சனிக்கிழமை. நஸார் தன்னுடைய அனைத்து பணியாளர்களுக்கும் ஒருநாள் விடுப்பு கொடுத்து விட்டு, அவனும் மரியத்துடன் வீட்டில் அமர்ந்திருந்தான்.

பாயம்மா தன்னுடைய தாய் வழி உறவுக்காரர் ஒருவரைப் பார்க்க சென்னை வரை கிளம்பிப் போயிருந்ததால் தான் நஸாருக்கு அவ்வளவு கொண்டாட்டம்.

"இங்கரு.... ரொம்ப ஆடாத!
ஒங்க அம்மி ஒரு வாரம் அங்க இருக்கப் போறேன்னு சொல்லிட்டு நாலு நாளுல திரும்பி வந்துரும் பாத்துக்க!" என்று கணவனின் சந்தோஷத்தில் மண் விழ வேண்டும் என்ற நோக்கத்திலேயே பேசிக் கொண்டிருந்தவளிடம்,

"போடீ பட்டனு.... எப்டியும் அம்மி குன்னூருக்கு திரும்பி வார வரைக்கும் நா சந்தோசமா தான்டீ இருக்கப்போறேன்!" என்று தன்னவளின் உதட்டை நசுக்கி அவள் பேச்சுக்கு தண்டனை வழங்கியபடி அவளுக்குப் பதில் சொன்னான் நஸார்.

"ஏய்..... வலிக்குது விடுடா!" என்று அவன் கையில் செல்லமாக ஒரு அடி அடித்தவள் அவனிடம்,

"நஸாரு..... ஜெயனு அண்ணாவையும், வதனியவும் இன்னைக்கு வீட்டுக்கு சாப்புட கூப்டுறியா? நம்ம புள்ளைங்க விசேசம் வச்ச அன்னைக்கு கூட அவுக ரெண்டு பேரும் இங்கண ஒத்த வாயி சாப்டல! ஒன்னோட அம்மி தான் ஊருக்குப் போயிருக்குல்ல? அவங்க ரெண்டு பேரையும் இங்க வரச் சொல்லுவேன்!" என்று ஆதங்கத்துடன் சொல்ல அவளை மென்மையான ஒரு பார்வை பார்த்தவன்,

"இதுக்குப் போயி எதுக்குடீ எங்கிட்ட பெர்மிஷனெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்குற? நீயே அவிய்ங்க ரெண்டு பேரையும் போன் பண்ணிக் கூப்டு! நம்ம ரெண்டு பேருல அவன யார் கூப்டா என்ன?" என்று கேட்டு அவளை தோளோடு அணைத்தான்.

துரியோதனனுடைய மனைவியின் இடையில் அறியாமல் கை வைத்து விட்டு வியர்த்துப் போய் நின்ற கர்ணனை விட தன்னுடைய நண்பன் ஜெயனுடைய பாடு பெரும்பாடு என்று நஸாருக்கு நன்றாகவே தெரியும்..... தப்பி தவறி எப்போதாவது அவன் இந்த வீட்டிற்கு வரும் வேளைகளில் மரியத்திடம் ஒரு பார்வையுடன் விடைபெற்று விட்டு வெளியேறி விடுவான்!

நண்பர்களாக, கல்லூரியில் ஒன்றாய் படித்த கூட்டாளிகளாக தன் அன்னையின் கண் முன்னால் அவளும், அவனுமாக பக்கத்தில் நின்று ஒருவார்த்தை பேசி விட்டாலும் தொலைந்தார்கள்!

நஸாருடைய அம்மா அவர்களிருவரையும் தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பது ஜெயனுக்கும் தெரியும்; மரியத்துக்கும் தெரியும்...... சந்தேகம் எனும் கரையான் அந்த வயதான பெண்மணியின் மூளையைத் தான் அரித்து தின்று கொண்டிருக்கிறதே தவிர நஸார் தனக்கு வாய்த்த அருமை மனைவியையும், நண்பனையும் பற்றி ஒரு ஷணம் கூட தவறாக நினைத்ததுமில்லை. நினைக்கப் போவதுமில்லை.

இவ்வளவு ஏன்...... வீட்டுக்குள் நடக்கும் தனக்குத் தெரியாத சில பல உட்கட்சி பூசல்களையும், தனது மனபாரத்தையும் அவ்வப்போது மரியம் இறக்கி வைப்பதும் கூட ஜெயனிடம் மட்டுந்தான்! அதைப் பற்றிக் கூட நஸார் தன் மனைவியிடம் நிறைய முறை விளையாட்டாகவே கேட்டு இருக்கிறான்.

"ஏன்டீ பட்டனு? அதென்னடீ எந்த பிரச்சனயா இருந்தாலும் அத நீ மொதல்ல ஜெயனு காதுல போட்டுட்டு, அவேன் மூலமா தான் எங்கிட்ட சொல்ல வைக்கிற? ஏன் நீயே ஓவாயால எங்கிட்ட சொன்னா கொறஞ்சு போயிடுவியா?" என்று கேட்பவனிடம் ஒரு புன்னகையை வழங்குபவள்,

"அதென்னமோ தெரியல நஸாரு...... ஏதாவது மூளைக்கொடச்சலு வந்தாலே அத ஜெயனு அண்ணா கிட்ட தான் அத மொதல்ல சொல்லணும்முன்னே பழகிடுச்சு!" என்று சொல்லி விட்டுப் போய் விடுவாள்.

இப்போதும் தன்னுடைய பீவிக்கு அதுமாதிரியான ஏதோ ஒரு மூளைக் குடைச்சல் தான் ஏற்பட்டதோ..... இல்லை நிஜமாகவே அன்று பிறந்த நாள் விழாவில் ஜெயனும் வதனியும் சாப்பிடாமல் சென்றதைப் பற்றிய வருத்தமோ..... ஆக மொத்தத்தில் நஸார் தன்னுடைய ட்ராவல்ஸின் ஷட்டரை சாற்றி விட்டு நண்பனையும் அவன் காதலியையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து விட்டு வீட்டில் மதியம் சாப்பிடப் போகும் புரோட்டாவிற்கு மாவு பிசைந்து கொண்டிருந்தான்.

ஜெயனும், வதனியும் ஏற்கனவே அன்று எங்காவது வெளியில் சுற்றக் கிளம்ப வேண்டும் என்று நினைத்து வைத்திருந்ததால் இருவருமாக வீட்டில் உள்ள சின்ன சின்ன வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வெளியே செல்ல தயாராக தான் அமர்ந்திருந்தனர்.

மரியமும் நஸாரும் அவர்களை வீட்டிற்கு வரச் சொன்னதும் அங்கேயே கிளம்பிச் செல்ல திட்டமிட்டனர்.

"பைக் போன போக்குல எங்கயாவது ரவுண்ட்ஸ் போயிக்கிட்டு, போற வழியில  இவ கிட்ட முதுகுல ஒரசிகிட்டே  கட்டிப்பிடிச்சுக்குறது, காதுல முத்தம் வாங்குறதுன்னு கொஞ்சம் டீசண்டான வேலையெல்லாம் செய்ய நெனச்சா அத ஒழுங்கா செய்ய உடுறானா அந்தக் கொங்காப்பய?" என்று முணுமுணுத்தபடி பைக்கை வெளியில் இறக்கியவனின் முதுகை லேசாக சுரண்டியவள்,

"மிஸ்டர் கடங்காரன்! நீங்க மைண்ட் வாய்ஸ்னு நெனச்சு ரொம்ப சத்தமா பேசிட்டு இருக்கீங்க.... அப்புறம் நீங்க பைக்ல போயிட்டு இருக்கும் போது ரோட்டுல செய்ய நினைக்குறதெல்லாம் டீசண்டானவங்க பப்ளிக் ப்ளேஸ்ல செய்ய மாட்டாங்க!" என்றாள்.

"இவ்ள சத்தமா சலிச்சுக்குறதே ஒங்களுக்கு கேக்கணும்னுங்கறதுக்காக தானுங்க மேடம்! நான் எப்டிப்பட்டவன்னு நாந்தான் சொல்லணும், என்னையப் பொறுத்தவரைக்கும் நான் ரொம்ப ரொம்ப டீசண்ட் பையன் தான்!" என்று சொல்லி லேசாக தலையைத் திருப்பி அவளிடம் கண்சிமிட்டியவன்,

"அமுதாம்மா.....!" என்று வீட்டிற்குள் எட்டிப் பார்த்தபடி கத்தினான்.

"ஏன்......டா! எப்பப்பாரு வாசப்படியில நின்னுட்டு இந்தக் கத்து கத்துறவன்? என்ன வேணும் ஒனக்கு?" என்று கேட்டபடி வந்த தன் தாயிடம்,

"ஒனக்கு மதியத்துக்கு வர்த்தினி சாப்பாடு செஞ்சு வச்சுடுச்சு; அத சாப்புட்டுரு! சாயந்தரம் ஆனவொடனே கோமதிக்கு ஒருக்க தண்ணி காட்டிட்டு
எளங்கோவ அவ கிட்ட அவுத்து உட்டுடு........ நான் வேற ஏதாச்சு சொல்ல மறந்துட்டேனா?" என்று கேட்டவனிடம் வதனியும் முகிலமுதமும் கோரஸாக,

"கோமதிய கறந்துட்டு ஒனக்காக மறக்காம பால நிப்பாட்டி வைக்கணும்; அதத்தான பால் கறக்க வர்ற அண்ணா கிட்ட சொல்லணும்?" என்று கேட்டனர்.

"இஹி....ஹி! ஆமா; அதத்தா சொல்ல மறந்துடுச்சு!" என்று நெளிந்தவன்,

"வர்றேன் அமுதாம்மா; கோமதி டாட்டா; எளங்கோ டாட்டா!" என்று கையசைக்க வதனி "பை முகில்ம்மா; போயிட்டு வர்றேன்!" என்று முகிலமுதத்திற்கு மட்டுமாக கையசைத்தாள்.

ஜெயனைப் போல "ஏய் வர்த்தினி.... கோமதி பேசுறதெல்லாம் எனக்குப் புரியுதும்மா; எளங்கோவப் பாரேன்.... எவ்ள அழகா எங்கிட்ட செல்லம் கொஞ்சுறான்?" என்றெல்லாம் அந்த இரண்டு மாடுகளிடமும் பைத்தியக்காரத்தனமாக அவளால் ஒன்ற முடியவில்லை.

"வதனிப்புள்ள.....கல்யாணம் ஆகுற வரைக்கும் ஒங்க ரெண்டு பேருக்கும் தனியா சுத்துறதுக்கு முழு சுதந்தரம் உண்டு! ஒங்க கல்யாணத்துக்கு அப்புறமேட்டு ஒரு வாரம் நீங்க ரெண்டு பேருமா, அடுத்த வாரம் நாம மூணு பேருமா வெளிய போயிட்டு வருவோம். என்ன சொல்ற? கறாரு மருமகளா இருந்து ஏன்டா ஒங்கூட எப்பப்பாரு ஒங்க ஆத்தா கெழவிய கூட்டிக்கிட்டே சுத்துறன்னு ஜெயனுட்ட கேப்பியா?" என்று கேட்டவரிடம் அழகிய சிரிப்புடன் இல்லையென தலையசைத்தவள்,

"ஜெயன விட நீங்க தான் முகில்ம்மா எங்கயாவது போகும் போது எனக்கு நல்லா கம்பெனி குடுப்பீங்க..... ஸோ கொஞ்ச நாளைக்கு அப்புறமா நம்ம மூணு பேரும் மறுபடியும் ரவுண்ட்ஸ ஸ்டார்ட் பண்றோம்!" என்று சொல்லி முகிலமுதத்தின் கன்னம் கிள்ளி முத்தமிடும் நெருக்கம் தான் வதனிக்குப் பிடித்தது.

இப்படியாக பலவற்றை யோசித்த படியே அவனுடைய தோளையும் இடையையும் இறுக்கிப் பற்றியிருந்தவளை நஸாருடைய வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தான் ஜெயன்.

வந்ததும் வராததுமாக நண்பன் செய்து கொண்டிருந்த வேலையைப் பார்த்து விட்டு அவனை சற்றே வாரினான்.

"ஏன்டா... நீ செய்யுற பொரட்டாவ சாப்புடுறதுக்கு தைரியமான ஆளில்லன்னு தான் எங்க ரெண்டு பேரையும் கூப்ட்டு அனுப்புச்சியா நீயி? நானும் இவளும் ஒனக்கு அப்டி சல்லிசா போயிட்டமோ?" என்று நஸாரிடம் கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் வந்தவன் மரியத்திடம், 

"மரியம்..... இந்த பொரட்டாவுக்கு வழக்கமா செய்யுற சைட் டிஷ்ஷோட சேத்து இன்னிக்கு
கொஞ்சம் சாம்பாரும் வச்சுடு என்ன?" என்று சொன்னான்.

ஜெயனையும், வதனியையும் நஸாரும் மரியமும் வரவேற்று இருக்கையில் அமர வைத்தனர்.

"என்னங்க வதனி? வீட்டுக்குள்ள வந்து ஒக்காந்தவுடனே ஜெயனு அண்ணா சாம்பார் செய்யின்னு கேக்குறாப்ல? நானே எம்மாமியாரு இல்லாத நேரமா பாத்து ஒங்க ரெண்டு பேருக்கும் வாய்க்கு ருசியா ஒருவேள சாப்பாடு போடுவோமுன்னு நெனச்சு இங்க வரச் சொன்னா என்னது இது இவரு பேசுற பேச்சு?" என்று சலித்துக் கொண்ட மரியத்திடம்,

"எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க மரியம்; நீங்க எதக் கேக்குறதா இருந்தாலும், ஜெயன் கிட்டயே கேட்டுக்குங்க!" என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டாள் வதனி.

"என்னடா எலேய்......? மொத்தமாவே சைவமாகிட்டியா நீயி? என்னங்க மேடம் அவனப் பத்தி ஒங்க கிட்ட கேட்டா நீங்க பாட்டுல மரியத்துட்ட
எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்? நீங்களாவது இந்தப் பையன் கிட்ட ஒருவார்த்த என்ன ஏதுன்னு கேக்குறது இல்லயா? கவுச்சிய விரும்பி முழுங்குற இவேன்
வர வர எப்ப கேட்டாலும் கவுச்சி வேண்டாம் வேண்டாமுன்னு ஒதுக்குறான், அது ஏன்னு தெரியல!" என்று வதனியிடம் சொல்லி குறைப்பட்டான் நஸார்.

"இவ கிட்ட சொன்னாப்ல நான் உன் வீட்டு மட்டன் சால்னாவ சாப்ட்ருவேனா? ம்ஹூம்! யாரு என்ன சொன்னாலும் இனிமே வாழ்க்க பூரா நான் கவிச்சிய தொடாம வெரதம் தான்டா இருக்கப்போறேன்!" என்று சொல்ல அவனைப் பக்கவாட்டில் பார்த்து முறைத்தாள் வர்த்தினி.

"ஜெயன் மாமா..... சாப்பாடு எல்லாம் அப்புறம் சாப்புடலாம்; இப்ப நீங்க எங்கூட ஒரு ரவுண்ட்ஸ் வாங்க; எனக்கு 5 பழ மரத்தோட இலை வேணும், அத பேப்பர்ல ஒட்டி எந்த எந்த பழமரத்தோட எலைன்னு எழுதி ப்ராஜெக்ட் செய்யணும்! பழ மரத்தோட எல எடுத்து தர நீங்க எனக்கு ஹெல்ப் பண்றீங்களா?" என்று அவனிடம் கேட்டாள் அனிஷா.

"ஏன்டீ..... அதத்தான் லாப்டாப்புல தேடி அபுட்ட குடுத்து ப்ரிண்ட் எடுக்கப்போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்த; வெளிய கூட்டிட்டுப் போக தோதா ஆள் கெடச்சவொடனே இப்ப மாத்திப் பேசுறியா நீயி?" என்று தன் மகளிடம் கேட்டாள் மரியம்.

"ஆமா..... எல்லாத்தையும் லேப்புடாப்புலயே பாத்தா கடைசில கொத்தவரங்கா பழம் எந்த மரத்துல முளைக்குமுன்னு புள்ள நம்ம கிட்ட கேக்கும் மரியம்; நாலு விஷயத்த கண்ணால பாக்க, கையால தொட்டு அனுபவிக்குறதுக்கு தான இந்த புள்ளைங்களுக்கு புராஜெக்டே செய்யக் குடுக்குறது? நீ சும்மாயிரு. நாங்க போயி பாப்பாவுக்கு வேணுங்குற எலயப் பறிச்சுட்டு வாரோம்!" என்று மரியத்திடம் சொன்ன ஜெயன் அனிஷாவிடம், 

நிஷா பாப்பாவுக்கு புராஜெக்ட்டு தானடா? அத சூப்பரா செஞ்சுட்டாப் போச்சு; மாமா வீட்டுப் பக்கத்துல மா மரம், பப்பாளி, வாழை, கொய்யா, முருங்க மரம் இதெல்லாம் இருக்கு..... ச்சை; இல்ல இல்ல..... முருங்க பழத்துல சேராதோ? சரி வா..... போற போக்குல இன்னொரு மரத்தோட எலைய தேடிக் கண்டுபிடிப்போம்!" என்று சொன்னவன் நஸாரை ஒரு மாதிரியாக பார்வை பார்த்துவிட்டு,

"டேய்...... இதுக்கு தான் வீட்டுக்கு சாப்புட கூப்டியா? வராக அவதாரங்க ரெண்டும் மரியத்தோட அம்மா வீட்ல இருக்குதுங்க; ஒம்பொண்ண கூட்டிக்கிட்டு நானும் வதனியும் எலைய பறிக்குறதுக்காக ஊர் சுத்திக்கிட்டு இருக்கணும்; அந்த நேரத்துல நீயும் மரியமும் ஜாலியா வீட்ல ஒக்காந்து கால ஆட்டிக்கிட்டு இருப்பீங்க.... அப்டித்தான?" என்று கேட்டவனிடம்,

"இல்ல...... வதனிப்புள்ள இங்க எங்க கூட இருக்கட்டும்; நீயும் பாப்பாவும் மட்டுமா வெளியில போயிட்டு வாங்க!" என்று பதில் சொன்னான் நஸார்.

"ஏன் உங்க ரெண்டு பேருக்கு நடுவுல ஒக்காந்துட்டு இவ என்ன செய்யப்போறா?" என்று புருவம் தூக்கியவனிடம்,

"என்னவோ செஞ்சுட்டு போறா; நீ கெளம்பு சாமி!" என்று சொல்லி ஜெயனையும் தன் மகளையும் அங்கிருந்து நகர்த்தி விட்டான் நஸார்.

"சரி நாங்க கெளம்புறோம்!" என்று சொல்லி விட்டு நடந்தவனின் பின்னாலேயே வந்தவன் ஜெயனிடம்,

"வர வர ஒம்போக்கே சரியில்லயே ராசா? ஊருக்குள்ள நடக்குற ஒண்ணையும் எங்கிட்ட சொல்ல மாட்டேங்குற? வீட்டுக்கு புதுசா பசுமாடு, கன்னுக்குட்டியெல்லாம் வந்துருக்குதாம்..... எங்கண்ணுமணி, செல்லமணின்னு பசுவோட தாவாங்கட்டைய புடிச்சு கொஞ்சிக்கிட்டு ஒம்மொகரய அதோட தலையோட ஒட்டி வச்சுக்கிட்டே திரியுறியாமே?" என்று வினவினான்.

"ஆமா... கோமதிய எனக்கு என் லவ்வர் வாங்கிக் குடுத்துருக்கா..... அவ நெதம் எளங்கோவுக்கும், எனக்கும் குடிக்க பாலெல்லாம் குடுக்குறா; அப்ப அவள எவ்ளவு அன்பா பாத்துக்கிடணும்டா நஸாரு?" என்று பதிலுக்கு கேட்டான் ஜெயன்.

"பாத்துக்குடுவப்பா; நல்லா பாத்துக்குடுவ! எங்கயாவது சுத்திட்டு முடிஞ்ச அளவுக்கு லேட்டாவே வா! ஒன்னையப் பத்தி நாங்க ஆபிஸர் அம்மாட்ட நெறய பேச வேண்டியதிருக்கு!" என்று சொன்ன நஸாரிடம்,

"என்னத்த வேணும்னாலும் பேசுங்க..... ஆனா ஒருதடவ அவள வெளிய வந்து எனக்கு டாட்டா மட்டும் காட்டிட்டுப் போகச்சொல்லு!" என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் எட்டி எட்டிப் பார்த்தான் ஜெயன்.

"ஏன்டா..... உனக்கு பொட்டு வச்சு போயிட்டு வாங்கன்னு வழியனுப்பி வைக்குறதுக்கு நீ என்ன போருக்கா போற? சும்மா போயிட்டு வாடா! மேடம் பிஸியா மரியம் கூட பேசிட்டு இருக்காங்க!" என்று சொன்னவனைப் பார்த்து லேசாக சிரித்த ஜெயன்,

"எங்க பேசிட்டு இருக்காங்க ஒங்க மேடம்? அங்க பாரு..... என் அழகி உன் வீட்டு க்ரில் கேட்ட புடிச்சுக்கிட்டு எனக்கு டாட்டா சொல்றதுக்கு ரெடியா வந்து நிக்குறா?" என்று சொன்னான்.

"இது வேறயா? உங்க வழியனுப்பல எல்லாம் பாக்குறதுக்கு நான் ஆளில்ல சாமி! நிஷா பத்திரம்டா தங்கம்; எங்க போனாலும் ஜெயன் மாமா பக்கத்துலயே நிக்கணும் என்ன?" என்று சொல்லி விட்டு இருவருக்கும் கையசைத்து விட்டு, வாசலில் நின்ற வதனியை தாண்டிக் கொண்டு உள்ளே சென்று விட்டான்.

"வா போலாம்!" என்று சொன்ன படி
விட்டால் அவளை தூக்கிச் செல்பவன் போல அவளை நோக்கி
இருகைகளையும் உயர்த்திய ஜெயனிடம் சிறு சிரிப்புடன் மறுத்து தலையசைத்தவள்,

"சீக்கிரமா வா! நிஷா பாப்பா பத்திரம்!" என்று சொல்லி இருவருக்கும் கையசைத்து அவர்களை வழியனுப்பி வைத்தாள்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro