🌻 அழகி 46
உன் மேல் கொஞ்சம் கோபம் தான்; ரொம்பவும் கோபமில்லை என்று சொன்னாலும் சொன்னாள்; ஜெயன் இப்போதெல்லாம் இரவு எட்டுமணிக்கு மாடியில் இருந்து இறங்கி வரும் போது அவளது நெற்றியில் ஒரு முத்தம் பதிக்காமல் இறங்கி வருவதேயில்லை!
நாள்தோறும் என்ன செய்தாலும், என்ன செய்ய மறந்தாலும் ஜனமேஜயனும், பர்வதவர்த்தினியும் நாளின் கடைசியில் கிடைக்கப்போகும், கொடுக்கப்போகும் நெற்றி ஒற்றுதலுக்காக காத்திருந்தனர் என்பதே நிதர்சனம்!
"நீ ரொம்ப மோசமானவ ஹெட்லைட்; எங்கிட்ட இருந்து எத்தன வாங்கிக்குற? போனா போவுதுன்னு ஒண்ணு ரெண்ட திருப்பிக் குடுத்தா பாத்ரூம் சோப்பு மாதிரி தேய்ஞ்சா போயிடுவ?" என்று ஆதங்கத்தில் என்றாவது ஒரு நாள் வாயை விட்டு விட்டான் என்றால் அடுத்த ஒரு வாரத்திற்கு அவனை அவளது கிட்டக்கூட சேர்க்க மாட்டாள் வதனி.
அவனது பிரியம் அவளுக்குப் புரிந்தது. அவளது பிரியம் அவனுக்கும் தெரிந்தது..... ஆனால் இந்த உறவில் அடுத்த படி எடுத்து வைப்பதில் அத்தனை தயக்கமும், தொட்டால் சுருங்கித்தனமும் இருக்க அடுத்து என்ன செய்வது என்று மண்டையை உடைத்துக் கொண்ட ஜனமேஜயனுக்கு இந்த முத்தம் பெரிதான ஒரு நிவாரணப் பொருள் போல் கிடைத்துக் கொண்டிருந்தது.
திண்ணனுடைய சமூகத்தினர்களில் இளையவர்கள் நாலைந்து பேரை பிடித்து, அவர்களுடைய பொறுப்பில் திண்ணனுடைய நடவடிக்கைகளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவர் மலையில் தேனெடுக்க ஏறுவதை ஒற்றையாளாய் செய்வதை தடைவிதித்தான் ஜெயன்.
நஸாரும், மரியமும் வாடிக்கையாக தங்களுடைய பிரச்சனைகளை தூக்கிக் கொண்டு இவனிடம் பஞ்சாயத்துக்கு வர இவனுக்கு இப்போதெல்லாம் அவர்களுடைய புலம்பலை கேட்டுக் கொண்டு நிற்பதற்கு நேரமில்லை.
தன் அழகி தன்னிடம் கதை பேச நினைத்து தனக்காக காத்துக் கொண்டு கிடப்பாளே என்று அவர்களை அப்படியே கழட்டி விட்டு மாலையில் முடிந்த அளவு விரைவாக வீட்டிற்கு ஓடி வந்து கொண்டிருந்தான்.
"ஏன்டாலேய்..... ஒம்போக்கே சரியில்லயே.... நீ பாட்டுல வார, போற, தனியா சிரிச்சுக்குடுற, நாலு தடவ கண்ணாடியில மொகரகட்டய பாத்துக்கிடுற, எம்பேச்சயும் முழுசா காதுல வாங்கிக்குற மாட்டேங்குற..... என்ன தான்டா நடக்குது?" என்று கேட்ட தன் நண்பனிடம் லேசாக புன்னகைத்து வைத்தான் ஜெயன்.
"ஆ....ங்! நாம்பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன்; பதில் சொல்லாம சிரிச்சு வச்சா என்ன அர்த்தம்?" என்று கேட்டவனிடம் உச்சுக்கொட்டியவன்,
"எலே....... உங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிக்கிட்டு இருக்கணுமா? அவ கொஞ்சமா எம்பக்கத்துல வந்துருக்கா; அவ்ளோதான் நடந்துச்சு! போதுமா.... இப்ப சந்தோஷமா? சும்மா இதென்ன, அதென்னன்னு கேட்டு இருக்குறவன் உசுர வாங்கிக்கிட்டு..... போடா; போயி புள்ளைகள நல்லா வளத்து உடுடா! இங்க ஒக்காந்து தொணதொணன்னு கேள்வி கேட்டுக்கிட்டு இருக்காத!" என்று எரிச்சலுடன் சொல்லி விட்டுப் போனான்.
"அவன் அவனுக்கு ஆளு உசாராகுற வரைக்கும் இங்கணக்குள்ள ஒக்காந்து நம்ப மண்டைய உருட்டுறீங்கடா; அதுக்கு மேல நாம பேசுறதே உங்களுக்கு தொண தொணங்குற மாதிரியிருக்கு.... நேரம்!" என்று சொல்லிக் கொண்டு ஷெட்டில் தன்னுடைய வேலைகளைப் பார்த்துக் கொண்டு போனான் நஸார்.
இப்படியாக ஒரு பதினைந்து தினங்கள் ஓடியிருக்க ஜெயன் அன்றைய வார இறுதியில் கோயமுத்தூர் வரை சென்று வரலாம் என்று திட்டம் போட்டிருந்தான்.
"இல்ல ஜெயன்.... ஒரே நாள்ல கோயமுத்தூர் வரைக்கும் போயிட்டு வர்றதுன்னா கஷ்டம்; நீயும் முகில்ம்மாவும் வேணும்னா போயிட்டு வாங்களேன்!" என்று சொன்னவளின் கையைப் பற்றி தன்னருகில் இழுத்தவன்,
"இப்ப ஒன்னைய நான் கட்டிப்புடிக்கலாமா? இல்ல கெளம்புற நேரம் மட்டுந்தான் அதுக்கு அனுமதியா?" என்று கேட்டு புருவம் தூக்கினான்.
"தீபத்துல எண்ணெய் இருக்கான்னு பாத்துட்டு வந்துடட்டுமா?" என்று கேட்டு வீட்டினுள்ளே பார்த்தவளை பார்த்து சிரித்தவன்,
"இன்னும் எத்தன நாளைக்கு எத்தன காரணத்த சொல்லி இப்டி ஓடிக்கிட்டே இருக்கப்போறடீ அழகி? ஒவ்வொரு தடவயும் எங்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடுறதுக்கு நீ சொல்ற காரணம் இருக்கு பாரேன்..... ரொம்ப சின்னப்புள்ளத் தனமா இருக்கு!" என்று சொல்லி அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.
"அமுதாம்மாவுக்கு நாம இப்டி இருக்குறத சொல்லல; எங்க ஊருக்குப் போற நேரம் அவங்களுக்கு நம்ப நெருக்கம் தெரிஞ்சுடப் போகுதோன்னு ஒனக்குப் பயம்..... அதுதான இப்ப பிரச்சன?" என்று கேட்டு அவளுடைய பின்கழுத்தில் தன் மூக்கின் நுனியால் உரசிக் கொண்டிருந்தான்.
"அதெல்லாம்... அப்டி எல்லாம் ஒண்ணுமில்ல! ஒரே நாள்லன்னா கஷ்டமா இருக்குமேன்னு தான் யோசிச்சேன்!" என்றவளின் மண்டையில் ஒரு தட்டு தட்டியவன்,
"ரொம்ப யோசிக்காத! நாம இந்த வாரம் வெளிய ரவுண்ட்ஸ் அடிக்கப் போறோம்; நைட்டு முடிஞ்ச அளவுக்கு சீக்கிரத்துல வீட்டுக்கு வந்துடலாம்; இப்பல்லாம் நம்ப மாமூல் இல்லாம ஒருநாகூட தாக்குப்பிடிக்க முடியல!" என்று சொன்னவன் அவளை தன்புறமாக திருப்பி அவளது நெற்றியில் இதழ் பதித்து விட்டே கிளம்பினான்.
அவர்கள் இருவருடைய வாழ்க்கையில் எந்தவிதமான முடிவெடுக்கும் அதிகாரமும் பர்வதவர்த்தினியிடம் தான் இருக்கிறது. அவள் இம்மென்று ஒரு வார்த்தை சொன்னால் போதும்; முடிந்த அளவு விரைவாக திருமணம்; முடிந்த அளவு எளிமையான திருமணம் என்று அவளுடைய எப்படிப்பட்ட ஆசையையும் நிறைவேற்றுவதற்கு தயாராகத் தான் இருந்தான் ஜெயன்.
அவளுடைய எந்த முடிவுக்கும் அவளுக்கு ஒரு நிதானமான கால இடைவெளியை கொடுப்போம் என்று தான் தன்னால் முடிந்த அளவு அவளை தொந்தரவு செய்யாமல், சலனம் அடைய வைக்காமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.
அவனது ஒரு அவசர செய்கைக்கே பத்துநாள் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி காட்டுகிறாள்! இதில் மொத்தமாக அவசரப்பட்டால்
உள்ளதும் போய்விடும் என்று தன்னுடைய ஆசையை எல்லாம் முடிந்த அளவு கட்டுப்படுத்திக் கொண்டு வர்த்தனியிடத்தில் மிக மெதுவான வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்தான் ஜெயன். நெற்றியில் வைக்கும் முத்தம் மட்டும் இதில் விதிவிலக்கு!
அவனுக்கும் அவளுக்கும் அந்த நேரத்து நெருக்கம் மிகவும் தேவையான ஒன்றாக இருந்தது. அவர்கள் இருவருக்கிடையில் ஆசுவாசம் தரும் மிகப்பெரிய சக்தியாகி நின்றது . கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும் என்ற பாடல் போல் அவளது ரகசியத்தை தோண்டி முடிந்த அளவிற்கு வெளியே எடுக்கும் ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது.
காதல் என்று பெயரிட முடியாத இந்த உணர்வு ஜெயன், வதனி இருவரையும் எங்கு கொண்டு சென்று நிறுத்தப் போகிறது, இவர்களுடைய வாழ்வில் இன்னும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப் போகிறது என்பது காலம் ஒன்றிற்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம்!
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro