🌻 அழகி 45
எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்ததென்றும் தெரியவில்லை..... அவளை இழுத்து அணைக்கையில் அடித்துப் புரண்டு கொண்டு வந்த தைரியம் இப்போது எங்கு போனதென்றும் தெரியவில்லை.
கலங்கிய விழிகளும், வீங்கிய உதடுமாக பர்வதவர்த்தினி அவனை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்த போது அவன் எலும்பெல்லாம் தூள் தூளாக உடைந்து விடும் அளவிற்கு அவளுடைய பார்வை தீவிரமாக இருந்தது.
"இப்டி பாக்காத வர்த்தினி; நான் செஞ்சது தப்பில்ல..... நானும் எத்தன மாசமா நீ எனக்குத்தான்னு மனசுக்குள்ளயே சொல்லிக்கிட்டு ஒங்கிட்ட இருந்து வெலகி நிக்குறது? ரிஸார்ட்டுல நாம ரெண்டு பேருமா சேந்து கைய கோத்துக்கிட்டு வெளையாண்டதுல புத்தி கொஞ்சம் தடுமாறிடுச்சுன்னு வையேன்.....!"
"இதுக்கு நான் உங்கிட்ட மன்னிப்பெல்லாம் கேக்க மாட்டேன்; நீயும் என்னைய திருப்பி ஏதாவது பண்றதுன்னா பண்ணிக்க! பூண்டு தட்டுற கல்லெடுத்து என் பல்ல வேணும்னாலும் ஒடச்சி விடு..... எனக்கு ஒரு பிரச்சனையுமில்ல!"
என்று சொல்லிக் கொண்டிருந்தவனின் பேச்சைக் காது கொண்டு கேட்பது தான் வதனிக்கு இப்போது கடினமான காரியமாக இருந்தது.
அவன் பேசும் வரையில் அவனை முறைத்துக் கொண்டு நின்றவள், "நான் செஞ்சது தப்பில்ல....!" என்ற அவனது பேச்சால் குழம்பியிருந்தாள்.
என் அனுமதியில்லாமல் அவன் எனக்கு கொடுத்த முத்தம் தவறு தானே என்று இவ்வளவு நேரமாக அவளது கோபம் அடங்காத மனம் அவளிடம் கேட்டிருக்க,
"நானும் உங்கிட்ட இருந்து எவ்வளவு நாளைக்கு இப்டி வெலகி நிக்குறது?" என்று கேட்டு தன் பேச்சால் அவளை தெளிவாக குழப்பியிருந்தான் ஜெயன்.
என்ன பேசுவதென்று தெரியாமல், அங்கு நிற்கவும் முடியாமல்
சில நிமிடங்களுக்குப் பிறகு அவனது முகத்தைப் பாராமல் மேலே அவளுடைய அறைக்கு ஓடி விடுவோம் என்று நினைத்து நடக்க ஆரம்பித்தவளை கைப்பற்றி நிறுத்தியவன்,
"எங்க ஓடுற? நா சாப்ட்டு முடிக்குற வரைக்கும் கூட இரு!" என்று ஒன்றுமே நடக்காதது போல் கூறினான்.
"அதான் எல்லாம் செஞ்சு வச்சுட்டேன்ல; இன்னும் என்ன வேணும் ஒனக்கு? கைய விடு ஜெயன்!" என்றவளிடம்,
"ப்ளீஸ் வர்த்தினி.... இப்டி ஒண்ணுமே சொல்லாம ஓடப் பாக்காத; நான் செஞ்சது தப்புன்னு நெனச்சயின்னா, செவுளு பேந்து போற மாதிரி ஒரு அறையாவது வச்சிட்டுப் போ!" என்று பேசியவனிடம் சலித்த குரலில்,
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்; நீ எங்கிட்ட என்ன சொன்னாலும், செஞ்சாலும் ஏன் எதுக்குன்னு கேக்குறதுக்கு எனக்கு யார் இருக்கா? அதுனால இப்டியெல்லாம் நடந்தா ஒண்ணு என் மனசோட பலத்தால உன்னை நான் சமாளிக்கணும்; இல்லைன்னா மேல போயிட்டு சத்தமில்லாம அழணும்.......! வேறென்ன செய்ய முடியும்?" என்று ஜெயனைப் பார்த்து கேட்டாள்.
உன்னுடைய செய்கை எவ்வளவு தவறாக இருந்தாலும் என்னால் என்ன செய்து விட முடியும் என்ற மாதிரியான பர்வதவர்த்தியின் பேச்சு ஜெயனுக்கு கட்டுக்கடங்காத கோபத்தை விளைவித்தது.
"ஐயோ..... ஏன்டீ எம்மனச கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம இப்டி கத்திய வச்சு குத்துற மாதிரி பேசி என்னைய சாவடிக்குற? நீ பேசுற இந்தப் பேச்சு உங்கிட்ட நான் செஞ்சது பச்சப் பொறுக்கித்தனங்குற மாதிரி இருக்கு..... இப்ப நான் ஒனக்கு குடுத்த முத்தத்த ஒம்மனசால உன்னால ஏத்துக்க முடியலயின்னா இருக்கவே இருக்கு கத்தி, நெருப்பு, பூரிக்கட்டை, ஜல்லிக்கரண்டி மாதிரியான ஆயிரத்தெட்டு சாமான்.... எத வேணா எடுத்து என்ன வேணும்னாலும் செய்யி!"
"மனசோட பலத்தால என்னைய நீ சமாளிக்கவும் வேணாம்; மேல போயிட்டு சத்தமில்லாம அழவும் வேணாம்....... எடு கத்திய; அறிவுகெட்டுப்போயி ஒன்னைய கட்டிப்புடிச்ச எங்கையில மறக்க முடியாத மாதிரி ஒரு மார்க்கப் போட்டு விடு!" என்று சொன்னவனின் கையில் கத்தி அகப்பட்டு விடக்கூடாது என்று நினைத்து அவனை விட வேகமாகச் சென்று கத்தியை அவள் கையில் பத்திரமாக பதுக்கிக் கொண்டாள் வதனி.
"ஏதோ கொழப்பத்துல கொஞ்சம் தப்பா பேசிட்டேன்னு நெனைக்குறேன் ஜெயன்; உனக்கு நான் எந்த தண்டனையும் தரப்போறதில்ல; கோடு போடுறேன், மார்க் போடுறேன்னு சொல்லிட்டு கிச்சனுக்குள்ள இருக்குற எந்தப் பொருளையும் தூக்கக் கூடாது. சாப்ட்டுட்டு போய் படு! நான் மேல போகவா?" என்று முற்றிலும் சமன்பட்ட குரலில் கேட்டவளிடம்,
"உண்மையாவே என்னை மன்னிச்சுட்டியா? எம்மேல ஒண்ணும் கோபமில்லையே?" என்று பதில் கேள்வி கேட்டான் ஜெயன்.
"கொஞ்சம் கோபம் தான்.... ஆனா கத்தி எடுத்து உடம்புல கிழிக்குற அளவுக்கு கோபமில்ல; ஒன்னைய மாதிரி நான் பைத்தியமும் இல்ல! குட் நைட்!" என்று சொன்னாள்.
"வழக்கம் போல நாளைக்கு காலையிலயும் மேல வருவேன்! கதவப் பூட்டிக்கிட்டு தகராறு பண்ணக்கூடாது ஏன்னா நீ நைட்டெல்லாம் நல்லாத்தான் பேசுவ; காலையில ஆச்சுன்னா முறுக்கிக்குவ!" என்று அவளிடம் புன்னகைத்த படி கூறினான்.
"இந்த மாதிரி எத்தன தடவ தான் ஜெயன் சொல்லுவ? சீக்கிரத்துல சாப்ட்டுட்டு படு.....!" என்று சொன்னவளிடம் கண்சிமிட்டி இதழ் குவித்து கையசைத்தான்.
"எல்லாத்தையும் செஞ்சுட்டு நான் செய்யுறது எதுவும் தப்பேயில்லன்னு வேற சொல்றான் கடங்காரன்!" என்று மனதிற்குள்ளாக நினைத்தாலும் அவனது செய்கை அவளது முகத்தில் சற்றே வெட்கத்தை வரவழைத்தது என்னவோ உண்மைதான்!
அன்றைய இரவில் தன்னுடைய படுக்கையில் உறக்கம் வராமல் உருண்டு கொண்டிருந்த மலைமாது அவளின் நினைவுகளில் வினோத் என்ற இளைஞனின் நினைவு ஒரு சதவீதம் கூட இடம் பிடித்திருக்கவில்லை. நூறு சதவீத இட ஒதுக்கீடு ஜெயன்.... ஜெயன்.... ஜனமேஜயன் ஒருவனுக்கு மட்டுமே!
வலுக்கட்டாயமாக அவள் மீது
திணிக்கப்பட்ட ஒற்றை முத்தம் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா? இத்தனைக்கும் அவன் அவளிடம் அவ்வளவு நெருங்கிய போது அவனது இதழ் தொடுகையில் பயமும், தவிப்பும், திகைப்பும் தான் ஏற்பட்டது வதனிக்கு!
இதுவே இருவருடைய சம்மதத்தின் பெயராலும் நடந்த ஒரு நிகழ்வாய் இருந்திருந்தால் இவ்வளவு பயமும், மெலிதான அருவருப்பும், வருத்தமும் ஏற்பட்டிருக்காதோ என்னவோ என்று நினைத்தாள்.
அவனோடு பேசிக் கொண்டிருந்த போது கூட இதைப்பற்றி இவ்வளவு பெரிதாக யோசித்துப் பார்க்கவில்லை. தனிமையிலும், செய்வதற்கு எதுவுமில்லாமல் சும்மா இருக்கும் நேரத்திலுமாக எதற்காக இவ்வளவு யோசிக்கிறோம் என்று நினைத்தவள் குளியலறைக்குச் சென்று முகம் கழுவி விட்டு வந்து கற்பகாம்பாளின் முன் கைகூப்பி நின்றாள்.
"அம்மா.... எனக்கு நிம்மதியான தூக்கத்த குடு; தேவையில்லாம ஒம்முன்னால வந்து நின்னு இந்த நேரத்துல உன்னைய நான் தொந்தரவு செஞ்சுட்டு இருக்க மாட்டேன்; நீ என்னை அமைதியா தூங்க விடலையின்னா, ஒம்முன்னால தான் வந்து நிப்பேன் பாத்துக்க!" என்று அன்னையிடம் சண்டையிட்டவள் அடுத்து வந்து படுத்ததற்குப் பிறகு பதினைந்து நிமிடங்களில் எப்படியோ தூங்கிப் போனாள்.
எதற்காக முதலில் கண்கலங்கினாள், முறைத்தாள், பேசாமல் ஓடி விட நினைத்தாள், பிறகு சமாதானம் ஆனாள் என்ற கேள்விகள் எதற்கும் பதில் தெரியாத ஒரு கத்துக்குட்டி காதலன் மேலே இருக்கும் அவள் உறங்கினாளா இல்லையா என்று தெரியாமல் தன்னுடைய கட்டிலில் தூக்கம் தொலைத்து கொட்ட கொட்ட விழித்திருந்தான்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro