🌻 அழகி 3
தேநீர் விடுதிக்கு சென்று சாவகாசமாக தன்னுடைய மாலை வேளை பாலை அருந்தி விட்டு, நண்பனிடமும் சற்று வம்பளந்து விட்டு இருபத்தைந்து நிமிடங்களில் மறுபடியும் மருத்துவமனைக்குள் நுழைந்து கொண்டிருந்தவனை ஒரு குரல்,
"எக்ஸ்க்யூஸ் மீ ஸார்.....? நீங்க தான எங்க காருக்கு பின்னால வந்து, அந்த ஆக்ஸிடென்ட்ல அடிபட்ட க்ரே கலர் இன்னோவாவ ஓட்டிட்டு வந்தது? த தேர்டு ஒன்?" என்று கேட்டு நிறுத்தியது.
"அப்பாடா.... ஒருவழியா நம்மள கேட்டு ஆளுங்க வந்துட்டானுங்கடா.... நல்லவேள நம்ம மச்சானோட காசு தப்பிச்சுடும்!" என்று மனதிற்குள்ளாக நிம்மதி வயப்பட்டவன் அவனை அழைத்த குரலிடம் திரும்பினான்.
அவள் ஒரு அழகி! பொன்னிறம்! ஐந்தரை அடி இருப்பாள்! ஒல்லிக்கும் சற்றே பருத்த
நடுத்தரமான உடல்வாகு; கண்களில் கண்ணாடி அணிந்திருந்தாள். தலைமுடியை மழித்து ஒரு ஸ்கார்ஃபால் மூடியிருந்தாள். இடது நெற்றியில் இருந்து அவளது தலைப்பகுதி வரை பெரிய காயம்! இவளது நிலைமை நம்மை விட மோசம் போலும் என்று நினைத்தவன்,
"அந்த க்ரே கலர் இன்னோவாவ ஓட்டிட்டு வந்தது நான் தான்ங்க!
நீங்க யாருங்க? உங்களுக்கு எப்டி என்னைய தெரியும்?" என்று கேட்டவனிடம்,
"போலீஸ் உங்க வண்டி நம்பரையும் நோட் பண்ணியிருந்தாங்க ஸார்! அவங்க கிட்ட கேட்டு தான் உங்க வண்டியோட டிராவல்ஸ கண்டுபிடிச்சு உங்க கிட்ட வந்தேன். நிறைய வேல இருந்தது ஸார்; உடம்புக்கும் சுத்தமா முடியல. அதான் ஒருவாரமாகிடுச்சு! ஸாரி ஸார்!" என்றாள் அவள்.
"யம்மா புண்ணியவதி..... உன் லாரிய வச்சு நா என்ன செய்ய முடியும்? உன்னையால தான் நான் இன்னிக்கு கன்னத்துல மார்க்கு வாங்கிட்டு ஒக்காந்துருக்கேன். எங்கம்மா கால உடைச்சிக்கிட்டு உள்ள கெடக்குது! நீ எதுக்கும்மா இங்க வந்த? எங்களுக்கு ஏதாவது செய்வோம்னு வந்தியா? நல்லாயிருப்ப. ஒரு ஐயாயிரத்த குடு! எம் ப்ரெண்ட் காருல ஒரு சைடுல சொட்ட விழுந்துடுச்சு! நீ விசாரிச்ச ட்ராவல்ஸ் என் ப்ரெண்டோடது தான்மா! ஏன் என்னைய விசாரிச்சப்ப அவன் உங்கிட்ட என்னையப் பத்தி சொல்லலையா?"
"அவனுக்கு ஆன செலவுக்கு
அவன் எங்கிட்ட இருந்து ஒத்தப் பைசா கூட கேக்கல..... ஆனா அந்த காருக்கு எப்டியும் நாலாயிரம், ஐயாயிரம் செலவு பண்ணியிருப்பான். உனக்கு நம்பிக்கையில்லன்னா எங்கூட வந்து அவங்கிட்டயே க்ரே இன்னோவாவுக்கு எம்புட்டு செலவு செஞ்சன்னு கேட்டுக்க! பெறவு காசக் குடு!" என்று கேட்டவனிடம்,
"இல்ல ஸார்.... நான் உங்ககிட்ட ஸாரி மட்டுந்தான் கேட்க வந்தேன். ஆக்ஸிடென்ட் ஆன நாளை சொல்லி அந்த தேதியில அந்த காரை ஓட்டிட்டு வந்த ட்ரைவர் யாரு இப்ப அவர் எங்க இருப்பாருன்னு மட்டுந்தான் கேட்டேன். மத்தபடி அவர் காரை தட்டுனதெல்லாம் பத்தி அவர் கிட்ட நான் ஒண்ணுமே சொல்லல....!" என்று சொன்னவளிடம்,
"நாதாரிப்பய... யாரு வந்து எதக்கேட்டாலும் ஏன் எதுக்குன்னு ஒரு கேள்வி கேக்குறது கெடையாது! வாயத் தொறந்து அம்புட்டையும் அவுத்து கொட்டிப்புடுறது! இர்றா ஒன்னைய பாக்குறப்ப ஒனக்கிருக்கு!" என்று தன்னுடைய நண்பனை தன் மனக்குக்கரில் வைத்து அவித்துக் கொண்டிருந்தான் ஜெயன்.
"ம்ம்! அப்புறங்க..... வேற ஏதாவது சொல்லணுங்களா?" என்று பவ்யமாக அவளிடம் கேட்டவனிடம்,
"அதான் ஸார்! உங்களுக்கும், காருக்கும் செலவான அமௌண்ட்...... அதெல்லாம் என்னால இப்போதைக்கு அரேன்ஜ் பண்ண முடியாது ஸார்! பட் உங்களோட வலி, வேதனை மாதிரியான கஷ்டத்துக்காக நான் உங்க அம்மா கிட்டயும், உங்க கிட்டயும் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டுக்குறேன்! எங்கள மன்னிச்சுடுங்க ஸார்!" என்று சொன்னவளை ஏற இறங்கப் பார்த்து முறைத்தவன்,
"என்னையப் பார்த்தா கிறுக்குப்பய மாதிரி தெரியுதா உனக்கு? பாவம்.... அந்த எடத்துல ரெண்டு மூணு பேரு செத்துப் போயிட்டாங்கன்னு கேள்விப்பட்டு தான் நான் பாட்டுக்கு என் வலியையும் பெரிசா எடுத்துக்காம, பல்லைக் கடிச்சிக்கிட்டு அங்கிருந்து கெளம்பி வந்துட்டேன்!"
"நீ இங்க வந்ததெல்லாம் சரித்தான்.... மண்ட கிண்டையெல்லாம் ஒடஞ்சதுக்கப்புறமும் மூணாவது மனுஷன தேடி வந்து மன்னிப்பு கேட்டது உண்மையிலேயே ரொம்ப பெரிய விஷயந்தான்மா! உங்களால எங்களுக்கு ஏற்பட்ட உடம்போட வலியக்கூட விடு; பண நஷ்டத்துக்கு யாரும்மா பொறுப்பேத்துக்குறது?" என்று கேட்டவனிடம் கைகூப்பியவள்,
"ஸார்.... தயவுசெஞ்சு புரிஞ்சுக்கோங்க ஸார்; அந்த ஆக்ஸிடென்ட்ல மூணு பேரு இல்ல; அஞ்சு பேரு இறந்துட்டாங்க! அதுல ஒருத்தர் என்னைய கல்யாணம் பண்ணிக்க இருந்த என்னோட வினு; இன்னொருத்தங்க என் அம்மா! குன்னூர்ல இருக்குற ------ பேங்க்கோட ப்ராஞ்ச்க்கு எனக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சுருக்கு! பட் திடீர்னு என் ரெண்டு முக்கியமான மனுஷங்கள பறிகுடுத்துட்ட
எனக்கு இதுக்கப்பறம் என்ன பண்றதுன்னே புரியல....."
"போலீஸ் கேஸ், வினு, அம்மாவோட ப்யூனெரல் செலவு, எனக்கு ஹாஸ்பிட்டல் செலவுன்னு கையில இருந்த பணமெல்லாம் கிட்டத்தட்ட காலி ஸார்! இப்ப நான் முதல்ல ஒரு வீடு பாத்து செட்டில் ஆகணும்.... அடுத்தடுத்த வேலைங்க நிறைய இருக்கு ஸார்! உண்மைய சொல்லணும்னா என் இழப்ப நினைச்சு முழுசா அழக்கூட எனக்கு நேரமில்ல ஸார்!"
"அங்க ஓடி, இங்க ஓடின்னு மனசுக்குள்ள இருக்குற துக்கத்துக்கு மேல ஒண்ணு ஒண்ணா வேலைங்க தான் வந்து குவிஞ்சுக்கிட்டே இருக்கு! நான் இந்த ஊருல புது வேலைக்குப் போனதுக்கப்புறம் கூட இங்க யாருமேயில்லாம தனியா இருந்துட்டு என்ன செய்யப்போறேன்னு எனக்குத் தெரியவேயில்ல ஸார்!" என்று சொன்ன பெண்ணை அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான் ஜனமேஜயன்.
பாவம்.... மனதில் அழுத்திக் கொண்டிருக்கும் துக்கத்தை ஆற்ற மாட்டாமல் என்னிடம் கொட்டுகிறாள் போலும் என்று அவளுக்காக பரிதாபப்பட்டவன் அவளிடம்,
"மன்னிச்சுடும்மா! ரொம்ப ரொம்ப ஸாரிம்மா..... உன் பிரச்சன என்னன்னு தெரியாம பைத்தியக்காரன் மாதிரி காசு, பணம்னு ஒளறிட்டு இருந்துட்டேன்! ஒரே ஒரு நிமிஷம் இரும்மா! இதோ வந்துடுறேன்!" என்று சொல்லி விட்டு தன்னுடைய அலைபேசியுடன் எங்கோ சென்றான்.
இரண்டு நிமிடத்தில் அவளிடம் திரும்பி வந்து, "என் ப்ரெண்டோட பேமிலிட்டயும், அவங்கிட்டயும் உன்னையப் பத்தி சொல்லிட்டேன்மா! காசு குடுக்க முடிஞ்சா குடுத்து உடு; இல்லன்னாலும் பரவாயில்ல...... கிளம்பு!" என்று அவளை கைகூப்பி வணங்கி அவளுக்கு விடைகொடுத்தான்.
"கண்டிப்பா வேலையில ஜாய்ன் பண்ணினதும் அந்த அமௌண்ட்ட உங்களுக்கு செட்டில் பண்ணிடுறேன். இப்ப...... உங்க அம்மாவ ஒருதடவ வந்து பாத்துட்டு போறேனே ஸார்? முழு தப்பும் எங்க மேல இல்லாட்டி கூட உங்களோட வலி எனக்குப் புரியும்!" என்று கேட்டவளை தலைக்கு மேல் கை உயர்த்தியவன்,
"யாத்தே..... பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாத தாயி! ஒங்கிட்ட போயி காசு கேட்டேன்னு எங்க அம்மாவுக்கு தெரிஞ்சது, என் சங்க நெரிச்சு சோலிய முடிச்சிப்புடும்!" என்று சொன்னவனின் பதற்றத்தில் மெதுவாக தன் இதழ் விரித்தாள் அவள்.
"யம்மா! கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத! வாடகைக்கு ஒரு வீடு தான பாக்குற? எங்க வீட்டு மாடி போர்ஷனுக்கு வாரியா?" என்று கேட்டவனிடம் லேசான சிரிப்புடன்,
"இந்த ஊருல இப்போதைக்கு
எனக்கு தெரிஞ்ச ஒரே ஆளு நீங்க தான்.... உங்களோட அட்ரஸ் தாங்க ஸார்; நான் உங்க வீட்ட வந்து ஒருதடவ பாத்துட்டு அங்கயே வாடகைக்கு வந்துடுறேன்!" என்று சொன்னவளிடம் சின்ன தலையாட்டலுடன் தன்னுடைய வீட்டின் முகவரியை கடகடவென ஒப்பித்தான் ஜனமேஜயன்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro